World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

New evidence of Sri Lankan army war crimes

இலங்கை இராணுவத்தின் யுத்தக் குற்றங்கள் பற்றிய புதிய சாட்சிகள்

By K. Ratnayake
26 May 2009

Use this version to print | Send feedback

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி-மூன் கடந்த வாரம் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம், இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த அண்மைய மோதல்களால் இடம்பெயர்ந்த தமிழ் பொது மக்கள் எதிர்கொள்ளும் பயங்கரமான நிலைமைகள் பற்றி ஒரு தெளிவற்ற காட்சியை வழங்குகிறது. ஒரு மதிப்பீட்டின்படி 260,000 யுத்த அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள மெனிக் ஃபார்ம் தடுப்பு முகாமுக்குச் சென்ற பான், கடந்த வாரம் கடைசி மோதல்கள் இடம்பெற்ற பிரதேசத்தின் மீது ஹெலிகொப்டரில் பறந்தார்.

ஹெலிகொப்டரில் பான் உடன் சேர்ந்து பயணித்த பத்திரிகையாளர்கள் வெளியிட்ட புகைப் படங்களும் ஒளிப்படங்களும் படு மோசமான அழிவுக் காட்சிகளை காட்டுகின்றன. புலிகளின் எஞ்சியிருந்த போராளிகளை அழிக்கும் முயற்சியில் இலங்கை இராணும் ஈடுபட்ட நிலையில், பல வாரங்களாக பத்தாயிரக்கணக்கான பொது மக்கள் அந்தப் பிரதேசத்தில் சிக்கியிருந்தனர். சுயாதீன செய்தியாளர்களால் முதலில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள், சிவிலியன்கள் வாழ்ந்த பிரதேசத்தின் மீது இராணுவம் கண்மூடித்தனமாக குண்டுத் தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரங்களாகும். இது சர்வதேச சட்டத்தின் கீழ் யுத்தக் குற்றமாகக் கருதப்படுகிறது.

தான் கண்டது என்னவென்பதை டைம்ஸ் செய்தியாளர் எழுதியுள்ளார்: "ஆகாயத்தில் இருந்து பார்க்கும் போது, பூமியில் எரிந்து போன அடையாளங்கள், சிதறிப் போன பனை மரங்கள், எரிந்துபோன குடிசை வீடுகள் போன்ற தடங்களை அந்த மோதல் வலயம் வெளிக்காட்டுகிறது. இலங்கையின் பாதுகாப்பு வலயமே இவ்வாறு அழிந்து போய் காட்சியளிக்கிறது. அது அதற்குரிய பெயரையே கேலிக்கூத்தாக்குகிறது. அது சுவர்க்கத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட நரகத்தின் மங்களான தோற்றமாகும்.

"ஷெல் வீச்சுக்களில் இருந்து சிவிலியன்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்காக தாங்களே தயாரித்த பங்கர்களால் நிறைந்து போன வெள்ளை கடற்கரை பளிச்சிடுகிறது. ஆயினும் கடைசி வாரங்களில் நடந்த தாக்குதல்களில் இந்தப் பகுதி மீது ஷெல் வீசப்படவில்லை என அரசாங்கம் மறுக்கின்றது. வெள்ளை மணலில் ஏற்பட்டுள்ள பெருங் குழிகள், கட்டைக் கரி நிறத்திலான தீய்ந்து போன அடையாளங்கள் மற்றும் குண்டுவீச்சுக்குள்ளான சொத்துக்கள், கைவிடப்பட்ட பஸ்கள், அவற்றில் இன்னமும் நம்பிக்கையின்றி பறந்துகொண்டிருக்கும் வெள்ளைக் கொடிகள், மற்றும் மனித சிதைவுகளும் மிகவும் வேறுபட்ட கதைகளை கூறுகின்றன."

சீ.என்.என். செய்திச் சேவைக்குப் பேசிய பான் தெரிவித்ததாவது: "நான் இங்கு முழுமையான அழிவைக் காண்பதோடு மோதல்களின் போது பெருமளவிலான பொது மக்கள் உயிரிழந்திருக்க வேண்டும்." "நான் உலகம் பூராவும் பயணித்து இது போன்ற பிரதேசங்களுக்கு சென்றுள்ள போதிலும், ஆகவும் பயங்கரமான காட்சிகளை இங்கு தான் கண்டேன். இடம்பெயர்ந்துள்ள அனைவருக்கும் எனது முழு அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்," என அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகளிடம் இருந்து சிவிலியன்களை "விடுவிக்கும்" "மனிதாபிமான நடவடிக்கையையே" இராணுவம் முன்னெடுக்கின்றது மற்றும் அது கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டது என்ற இலங்கை அரசாங்கத்தின் கூற்றுக்கள், கேலிக்கூத்தானவை என்பதற்கு யுத்த வலயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆதாரம் காட்டுகின்றன. கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் "வெற்றி உரை" ஆற்றிய ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, புலிகளுக்கு எதிரான அதனது யுத்தத்தில் இராணுவம் ஒரு பொதுமகனைக் கூட கொல்லவில்லை என பொய்யாக பிரகடனம் செய்தார்.

ஜனவரி 20 முதல் மே 7 வரையான காலத்தில் 7,000 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் கிட்டத்தட்ட 17,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா. அறிக்கையொன்று கசிந்துள்ளது. பொது மக்களின் உயிர்களை குற்றவியல் முறையில் அலட்சியம் செய்து, இராணுவம் எஞ்சியுள்ள புலி போராளிகளை படுகொல செய்து முடித்த கடைசி நாட்களில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் "பாதுகாப்பு வலயத்தில்" இருந்த ஒரு இடைத்தங்கல் ஆஸ்பத்திரி மீது கடைசி வாரத்தில் இரு முறை ஷெல் வீசப்பட்டுள்ளது.

பிரான்சை தளமாக் கொண்ட உதவிக் குழுவான சர்வதேச ஊனமுற்றோர் அமைப்பு (எச்.ஐ.), இராணுவத்தின் அட்டூழியங்களின் அளவுக்கு மேலும் ஆதாரம் வழங்குகிறது. கடுமையான ஷெல் மற்றும் குண்டுத் தாக்குதல் காரணமாக, யுத்த வலயத்தில் சிக்கியிருந்த 30,000 வரையான மக்கள் உடலுறுப்புக்களை இழந்து அல்லது உணர்ச்சியிழந்து முடமாகியுள்ளனர் என அது நேற்று ஆஸ்திரேலியன் ஊடகத்திற்குத் தெரிவித்தது. எச்.ஐ. உயிர் தப்பியவர்களுக்கு செயற்கை உறுப்புக்களை தயார் செய்துவருகின்றது.

எச்.ஐ. லங்காவின் தலைவர் சதிஷ் மிஷ்ரா தெரிவித்ததாவது: "பெருமளவு தேவை இருக்கிறது. மொத்தத்தில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் முகாம்களில் உள்ளவர்களில் கிட்டத்தட்ட 9 வீதமானவர்களுக்கு களிப்பர் போன்ற உதவிப் பாகங்கள் அல்லது செயற்கை உறுப்புக்கள் தேவைப்படுகின்றன. [மோதல் வலயத்தில்] 250,000 முதல் 300,000 வரையான மக்கள் இருந்திருப்பரேயானால், 25,000 முதல் 30,000 வரையானவர்களுக்கு இத்தகைய வசதிகள் தேவை என்பதைப் பற்றியே நாம் பேசுகிறோம்."

இன்னுமொரு பேட்டியில், முகாம்களை விட்டு வெளியேறி மட்டக்களப்பில் உள்ள எச்.ஐ. தொழிற்சாலைக்கு பயணிக்க அகதிகளுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளதால், அதன் வேலைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக மிஷ்ரா டெலிகிராப்புக்குத் தெரிவித்தார். இதன் விளைவாக, உதவி ஊழியர்களால் செயற்கை உறுப்புக்களை சரியாக பொருத்தி அவற்றைப் பயன்படுத்த மக்களை பயிற்றுவிக்க முடியாமல் உள்ளது.

இராஜபக்ஷ உடனான கலந்துரையாடலின் போது, சர்வதேச உதவி முகவரமைப்புக்களுக்கு "முகாம்களுக்குள் தடையின்றி செல்லவும் சுதந்திரமாக நடமாடவும் வசதி ஏற்படுத்த வேண்டும்" என பான் வேண்டுகோள் விடுத்தார். ஆயினும், ஞாயிற்றுக் கிழமை விடுத்த அறிக்கையொன்றில், இந்த வேண்டுகோளை நிராகரித்த இலங்கை ஜனாதிபதி, அகதிகள் மத்தியில் இன்னமும் "புலி ஊடுருவல்காரர்கள்" உள்ளனர் எனக் கூறினார். "நிலைமைகள் முன்னேற்றமடையும் போது, குறிப்பாக பாதுகாப்பு விடயத்தில், அத்தகைய உதவிகளுக்கு எதிர்ப்பு இருக்காது" என அவர் தொடர்ந்தும் கூறினார்.

தமிழ் பொது மக்களுக்கான அடிப்படை தேவைகளை வழங்குவதற்கான ஏற்பாடு ஒரு பாதுகாப்பு பிரச்சினையாக இருப்பது ஏன் என்பதை இராஜபக்ஷ விளக்கவில்லை. யதார்த்தத்தில், தனது யுத்தக் குற்றங்களை மூடி மறைக்க யுத்த வலயத்துக்கு நிருபர்களும் பெரும்பாலான தொண்டு ஊழியர்களும் செல்வதற்கு தடை விதித்திருந்ததைப் போலவே, முகாம்களுக்குள் உள்ள நிலைமைகளை மூடி மறைக்கவும் அகதிகள் தமது கதைகளை சொல்வதை தடுக்கவும் தடுப்பு நிலையங்களுக்கு நுழைவதை அரசாங்கம் தடுக்கின்றது.

இத்தகைய "நலன்புரி கிராமங்கள்" ஆண், பெண் மற்றும் பிள்ளைகள் உட்பட கால் மில்லியனுக்கும் அதிகமான தமிழ் சிவிலியன்களுக்குகான தடுப்பு முகாம்களாகும். உள்ளே இருப்பவர்கள் அகதிகளாக நடத்தப்படுவதற்கு மாறாக கைதிகளாக நடத்தப்படுகின்றனர். மெனிக் ஃபார்மில் உள்ள முகாம்கள் இரண்டு மீட்டர் உயரமான முற்கம்பி வேலிகளால் சூழப்பட்டுள்ளது. கனமாக ஆயுதம் தரித்த சிப்பாய்களின் காவலின் கீழுள்ள இந்த முகாம்களைச் சூழ ஆழமான பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன.

74,000 பேர் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு முகாமில், அதில் அரைவாசிப்பேருக்கு மட்டுமே இடம் உள்ளது என ஐ.நா. மனிதாபிமான விவகாரங்கள் சம்பந்தமான கிரேசன் பிரன்டோ பி.பி.சி. க்குத் தெரிவித்தார். மெனிக் ஃபார்ம் முகாம், உலகின் பிரமாண்டமான இடம்பெயர்ந்தவர்கள் முகாமாகும் என அவர் தெரிவித்தார்.

கறையற்ற வெள்ளை சீருடைகள் அணிந்திருந்த பாடசாலை மாணவிகளின் குழு வரவேற்பு பாடலைப் பாடுவதுடன் பானின் வழிகாட்டப்பட்ட பயணம் முடிவடைந்தது. எவ்வாறெனினும், உண்மை முற்றிலும் மாறானதாகும். பழிவாங்கல்களுக்குப் பயந்து தமது முழு பெயர்களை கொடுக்கத் தயங்கிய சில அகதிகளுடன் பேச பானுடன் சென்ற நிருபர்கள் முயற்சித்துள்ளனர்.

டைம்ஸ் ஊடகத்துக்கு குமார் தெரிவித்ததாவது: "நாங்கள் திறந்தவெளிச் சிறைச்சாலையில் இருக்கிறோம். நாங்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும், எங்களுக்கு உதவுங்கள்... போதுமான உணவு இல்லை. தேவையான ஆஸ்பத்திரி இங்கு இல்லை." எவ்வளவு காலம் தான் முகாமில் இருக்க நேரும் என அவர் நினைப்பதாக கேட்ட போது, "எனக்குத் தெரியாது. சிலவேலைகளில் நிரந்தரமாக இருக்கலாம். நாங்கள் கொல்லப்படுவோம் என்ற பீதி உள்ளது. நான் உண்மையைச் சொன்னால் நான் கொல்லப்படுவேன்," என அவர் பதிலளித்தார்.

கடந்த வாரம் முகாமுக்கு வந்த போது தான் கண்டதைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாக அந்தப் பத்திரிகைக்கு அவரது தந்தை அமல்ராஜ் தெரிவித்தார். "இரண்டாம் உலக யுத்தத்தில் ஒருமுகப்படுத்தப்பட்ட முகாம்களைப் பற்றி ஒரு நூலில் நான் வாசித்துள்ளேன். இப்போது நாம் அதை அனுபவிப்பதாக உணர்கிறேன். இரண்டாம் உலக யுத்தத்தில் இருந்த கூட்டம் நிறைந்த சித்திரவதை முகாம் இப்போது இலங்கையில் உள்ளது."

கடந்த வாரம் இந்திய அதிகாரிகள் கொழும்புக்கு விஜயம் செய்ததை அடுத்து, அகதிகளை 180 நாட்களில் மீளக் குடியேற்றுவதாக அரசாங்கம் வாக்குறுதியளித்தது. தீவின் கிழக்கை புலிகளிடம் இருந்து இராணுவம் "விடுவித்த" போதும் இதே மாதிரியான வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னரும், மீளக் குடியேறும் வாய்ப்புகளே இன்றி பத்தாயிரக்கணக்கான மக்கள் இன்னமும் முகாம்களில் அவதிப்படுகின்றனர்.

மெனிக் ஃபார்ம் முகாமில் நிலைமை கூட்டம் அளவுக்கு மிஞ்சியதாக இருக்கின்றது. உணவு, மருத்துவ பராமரிப்பு மற்றும் சுகாதார வசதிகள் பற்றாக்குறை பற்றி மக்கள் ஊடகங்களிடம் முறைப்பாடு செய்துள்ளனர். ஒரு ஆஸ்பத்திரியில், "போசாக்கற்ற நோயாளர்கள் வெட்ட வெளியில் குடிசைக் கட்டிலில் கிடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் நனைந்து போயிருந்ததோடு அவர்களது தலையைச் சூழ ஈக்கல் பறந்துகொண்டிருந்தன. சிலர் சாவை நெருங்கிக்கொண்டிருந்தனர்," என பி.பி.சி. செய்தி வெளியிட்டது.

"புலி சந்தேக நபர்கள்" என்ற பெயரில் நூற்றுக்கணக்கான இளைஞர்களும் யுவதிகளும் பாதுகாப்புப் படைகளாலும் அவர்களோடு சேர்ந்து இயங்கும் துணைப்படைகளாலும் இழுத்துச் செல்லப்பட்டு தெரியாத இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். உண்மையைச் சொன்னால் அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என இராணுவத்தினர் இளைஞர்களிடம் கூறியதாக ஒரு தாய் டைம்ஸ் பத்திரிகைக்குத் தெரிவித்தார். ஏழு நாட்களாக அவரது 17 வயது மகளைக் காணவில்லை.

9,100 புலி உறுப்பினர்கள் இராணுவத்திடம் "சரணடைந்துள்ளதாக" ஞாயிற்றுக் கிழமை இந்து பத்திரிகைக்கு இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இப்போது 7,237 பேர் "புணர்வாழ்வு நிலையங்களில்" தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார் --அதாவது குற்றச்சாட்டுக்கள் இன்றி அல்லது அடிப்படை ஜனநாயக உரிமைகள் இன்றி காலவரையறை இன்றி தடுத்து வைப்பதாகும். அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என உறவினர்களுக்கோ நண்பர்களுக்கோ அறிவிக்கப்படவில்லை.

புதிதாய "விடுவிக்கப்பட்ட" வடக்கில், வட மேற்கு மன்னார் மாவட்டத்தில் இருந்து வட கிழக்கு முல்லைத்தீவு மாவட்டம் வரை பெரு நிலப்பரப்பில், அரசாங்கம் இராணுவ ஆக்கிரமிப்புக்கு சமமான ஒன்றுக்கு ஏற்கனவே தயார்செய்துகொண்டிருக்கின்றது.

இராணுவம் அதன் பலத்தை அதிகரிப்பதோடு புலிகளின் இரு முன்னாள் பிரதான மையங்களான கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிலும் பிரதான தளங்களை அமைக்கும் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா கொழும்பைத் தளமாகக் கொண்ட நேஷன் பத்திரிகைக்குத் தெரிவித்தார். இரு கட்டளை மையங்கள், இரு விமானப் படை தளங்கள் மற்றும் புதிய பொலிஸ் நிலையங்களுக்கான திட்டங்கள் பற்றி மேலும் விபரங்களை ஒரு இராணுவப் பேச்சாளர் வழங்கினார். வட மேற்கு மற்றும் வட கிழக்கு கரையோரப் பிரதேசத்தில் மேலும் காவல் அரன்களை கடற்படை அமைக்கும்.

இராஜபக்ஷ "பயங்கரவாத்தின் மீதான யுத்தத்தை" முன்னெடுக்கவில்லை, மாறாக, வடக்கு மற்றும் கிழக்கில் அதன் மேலாதிக்கத்தை ஸ்தாபிப்பதற்கும் மற்றும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள் இன ரீதியில் பிளவுபடுத்துவதன் பேரில் இனவாத பதட்டங்களை கிளறிவிடவும் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தமே முன்னெடுக்கப்பட்டது என்பதை இத்தகைய தயாரிப்புகள் கோடிட்டுக் காட்டுகின்றன. இலட்சக்கணக்கான தமிழ் சிவிலியன்கள் நடத்தப்படும் விதம், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் சமூக நிலைமைகள் மீதான அரசாங்கத்தின் புதிய "பொருளாதார யுத்தத்தை" எதிர்க்கும் எவருக்கும் எதிராக அரசாங்கம் இரக்கமின்றி நடவடிக்கை எடுக்கும் என்ற எச்சரிக்கையை தீவு பூராவும் உள்ள உழைக்கும் மக்களுக்கு விடுக்கின்றது.