World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

For workers' power and a socialist Iran

தொழிலாளர்கள் அதிகாரத்திற்கும் ஒரு சோசலிச ஈரானுக்காகவும்

By Peter Symonds
17 June 2009

Use this version to print | Send feedback

ஈரானில் மடிப்பவிழ்ந்து வரும் அரசியல் நெருக்கடி தொழிலாள வர்க்கத்திற்கு சில அடிப்படை பிரச்சினைகளை எழுப்பியுள்ளது. கடந்த வெள்ளி நடந்த ஜனாதிபதி தேர்தல் நாட்டின் மதகுருமார்கள் ஆட்சிக்குள் ஜனாதிபதி மஹ்முத் அஹ்மதிநெஜாட்டின் ஆதரவாளர்களுக்கும் அவருடைய முக்கிய போட்டியாளர் மீர்ஹோசைன் மெளசவியின் ஆதரவாளர்களுக்கும் இடையே உள்ள தீவிர வேறுபாட்டை அம்பலப்படுத்தியுள்ளது.

மெளசவி முகாம் தேர்தல் முடிவை மாற்றி புதிய வாக்கெடுப்பு நடத்தக் கோரி கவனமாக நடத்தும் "வண்ணப் புரட்சி" பற்றி எவரும் ஏமாந்துவிடத் தேவையில்லை. அஹ்மதிநெஜாட்டிற்கும் மெளசவிக்கும் இடையே தந்திரோபாய வேறுபாடுகள் இருந்தாலும், இருவருமே இருக்கும் ஆட்சிக்கும் ஈரானிய முதலாளித்துவ நலன்களுக்கு உகந்த புடம்போட்ட பாதுகாவலர்கள் ஆவர்.

முன்னாள் ஜனாதிபதிகள் அலி அக்பர் ஹஷேமி ரப்சஞ்சானி மற்றும் மொகம்மத் கடாமி போன்ற, மதகுருமார் மற்றும் அரசியல் நடைமுறையில் உள்ள சில அடுக்குகளால் மெளசவி ஆதரிக்கப்படுகிறார்; அவர்கள் அஹ்மதிநெஜாட் காட்டும் அமெரிக்க-எதிர்ப்பு நிலைப்பாடு பற்றி கடுமையான எதிர்ப்பை கொண்டுள்ளனர்; ஏனெனில் இதனால் இன்னும் கடுமையான பொருளாதார தடைகள்தான் வரும்; இதைத்தவிர அவர் ஏழைகளுக்கு செய்யும் நலன்கள் "வீணடித்தல்" பற்றியும் எதிர்க்கின்றனர். தெஹ்ரான் மற்றும் பிற நகரங்களின் தெருக்களில் நடக்கும் பெரிய எதிர்ப்புக்கள் மெளசவி தேர்தல் பிரச்சாரம் இலக்கு வைத்திருக்கும் நகர மத்தியதர வர்க்கத்தில் வசதி படைத்த தட்டுக்களால் மேலாதிக்கம் செய்யப்படுகின்றன.

ஓரளவிற்கு மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் ஆட்சிக்கு எதிரான தொழிலாளர்கள் எதிர்ப்பு இயக்கத்தில் உள்ளனர் என்றால், அது அரண்மனை ஆட்சிமாற்ற முயற்சி என்று மட்டுமே விளக்கப்படக்கூடியதில் பகடைக் காய்கள் போல் அவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர் என்பதாகும். தேர்தலில் தில்லுமுல்லுகள் நடந்திருக்கக்கூடும் என்றாலும், கூடுதல் நிதானம் படைத்த வர்ணனையாளர்கள் அஹ்மதிநெஜாட் நகர்ப்புற, கிராமப்புற வறியவர்களின் வலுவான ஆதரவை தக்க வைத்துக் கொண்டுள்ளார் என்பதைத்தான் சுட்டிக் காட்டியுள்ளனர்--அதாவது பெரும்பாலான மக்களுடைய ஆதரவை. 2005 தேர்தல் முடிவிற்கு கிட்டத்தட்ட இணையான வகையில்தான் அஹ்மதிநெஜாட் பெற்றுள்ள 63 சதவிகித வாக்குகள் உள்ளன; அப்பொழுது அவர் அவருடைய போட்டியாளர் ரப்சஞ்சானிக்கு எதிராக இருந்த பரந்த விரோதத்தைப் பயன்படுத்தி எதிர்பாரா வெற்றியை அடைந்தார். பிந்தையவர் நாட்டின் பெரும் செல்வந்தர்களுள் ஒருவரும், ஊழலுக்கு பேர்பெற்றவருமாவார்.

மெளசவியை நல்ல முறையில், ஜனநாயக வண்ணத்தில் சித்தரிக்க முற்படுபவர்கள் சமய சார்பு உடைய ஆட்சியின் கடும் பாதுகாவலராக இருந்த அவரது வரலாற்றை வசதியாக மறந்துவிடுகின்றனர். 1981ல் இருந்து 1989 வரை பிரதம மந்திரியாக இருந்தபோது, அவர்தான் அரசியல் எதிர்ப்பை நசுக்குவதில் தீவிரமாக இருந்தார்; இதில் ஆயிரக்கணக்கான இடதுசாரிகள் சிறையில் அடைக்கப்பட்டது, கொல்லப்பட்டது என்பவையும் அடங்கும். ஈரான்-ஈராக் போரின் நடுவில், மெளசவி சமூகத்தின் வறிய தட்டில் இருந்து பெரும்பாலான இளைஞர்களை குருதிப் பாதையில் இழுப்பதில் மையப் பங்கை கொண்டார்; மேலும் தொழிலாள வர்க்கத்தின்மீது கடுமையான சிக்கன நடவடிக்கைகளையும் சுமத்தினார்.

ரப்சஞ்சானி மற்றும் கடாமி போன்ற "சீர்திருத்தக்காரர்கள்" ஆகிய இப் பழமைவாதிகளால் மெளசவிக்கு ஒரு தாராளவாத ஜனநாயகவாதி என்ற புது முத்திரை இடப்பட்டுள்ளது அமெரிக்காவுடன் பதட்டங்களை தணியச்செய்ய வேண்டும் என்ற செயற்பட்டியலை முன்னெடுக்க வும், தொழிலாள வர்க்கத்தின்மீது கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தடையற்ற சந்தை முறை செயற்பட்டியலை சுமத்த விரும்புவதாலும்தான். முதல் சுற்று வெற்றியை அடைவதில் தோற்று இரண்டாம் சுற்றில் பங்கு பெறும் கட்டாயத்தில், மெளசவியும் அவருடைய நண்பர்களும் தங்கள் மத்தியதர வர்க்க ஆதரவாளர்களின் ஏமாற்றத்தை நெம்புகோலாகப் பயன்படுத்தி, அரசாங்க அதிகாரத்தில் ஒரு பங்கை, ஏன் முழுப் பங்கைக் கூட பெற முயன்றுள்ளனர்.

இந்த முயற்சிகள் அமெரிக்காவில் அப்பட்டமான ஒருதலைப்பட்ச பிரச்சாரத்தாலும் மற்றும் சர்வதேச ஊடகத்தாலும் ஆதரிக்கப்பட்டு வருகிறது, ஒபாமா நிர்வாகம் மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளாலும் மறைமுக ஆதரவு கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த முயற்சி சமயகுருமார் ஆட்சியை அகற்றும் நோக்கத்தை உடையது அல்லது ஈரானில் மக்களுடைய ஜனநாயக உரிமைகளைக் காக்கும் நோக்கத்தை உடையது என்று எவரும் பிரமை கொள்ள வேண்டாம்.

கடந்த காலத்தில் இருந்ததைப்போலவே, அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈரானில் உள்ள அரசியல் கொந்தளிப்பை பயன்படுத்திக் கொண்டு, தன்னுடைய பொருளாதார, மூலோபாய நலன்களுக்கு ஏற்ப இருக்கும் விதத்தில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர விரும்புகிறது. முதலில் தன்னுடைய ஆப்கானிய, ஈராக்கிய புதுவகை குடியேற்ற ஆக்கிரமிப்பிற்கு கூடுதலான ஈரானிய ஆதரவைப் பெற விரும்புகிறது.

தன்னுடைய "வண்ணப் புரட்சியை" மெளசவி வெற்றியுடன் நடத்திமுடித்தால், முதல் பாதிப்பை தொழிலாள வர்க்கமும், ஏழைகளும் பெறுவர்; ஏனெனில் புதிய ஆட்சி பொதுச் செலவை கட்டுப்படுத்தி, அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்கி, உள்ளூர் வணிகர்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இலாபங்களை உத்தரவாதம் செய்யும். மெளசவியும் அவருடைய வசதியான ஆதரவாளர்களும் தொழிலாள வர்க்கத்திடம் வெளிப்படையாக கொண்டுள்ள விரோதப் போக்கு அஹ்மதிநெஜட் வறியவர்களுக்குக் கொடுக்கும் அற்ப உதவிகள் பற்றிக் காட்டும் வெளிப்படையான அவமதிப்பில் சுருக்கமாகத் தெரியும்.

ஜனநாயக உரிமைகளை நசுக்குவதிலும் தன்னுடைய திட்டத்திற்கு வரும் எதிர்ப்பை அடக்குவதிலும், அஹ்மதிநெஜாட் போலவேதான் மெளசவியும் இருப்பார். சர்வதேச செய்தி ஊடகம் மற்றும் மேலை தலைநகரங்களில் இப்பொழுது ஈரானில் ஜனநாயகம் இல்லை என்று புலம்புபவர்கள் அனைவரும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக எடுக்கப்படும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு ஆதரவைத்தான் கொடுப்பர்.

மெளசவியின் இழிவான பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு என்பது எந்தவிதத்திலும் வலதுசாரி ஜனரஞ்சக அரசியல்வாதி அஹ்மதிநெஜாட்டிற்கு அரசியல் ஆதரவு என்று குறிக்காது. பிந்தையவர் உயர் தலைவர் அயதுல்லா அலி காமனி உள்ளடங்கலான ஈரானிய அரசியல் நடைமுறையின் ஆதிக்கம் மிக்க பிரிவுகளின் ஆதரவைக் கொண்டுள்ளார்.

அஹ்மதிநெஜாட் அமெரிக்க எதிர்ப்பு என்று காட்டிக் கொள்வது உண்மையான ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்துடன் எவ்வித தொடர்பையும் கொள்ளவில்லை; இது ஈரானிய முதலாளித்துவத்திற்கு இன்னும் ஆதாய நிலைப்பாடுகளை கொடுக்கும் வகையில் வாஷிங்டனுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது. "மக்களின் உற்ற நண்பன்" என்று அவர்களிடம் பரிவுணர்வு உடையவராக காட்டும் பாசாங்கும் ஊழலை கண்டிப்பதுமான அவருடைய நிலைப்பாடு, அவருடைய நிர்வாகத்தில் சமூகப் பிளவுகள் அதிகரித்துள்ளன என்ற உண்மையை மறைக்க முடியாது.

வேலையின்மை, பணவீக்கம், வீடுகள் பற்றாக்குறை, மற்றும் பெரும்பாலான மக்களின் பொது வாழ்க்கைத்தரங்கள் ஆகியவை மோசமாகத்தான் போயுள்ளன. தொழிலாள வர்க்கத்திற்கு உண்மையான சோசலிச மாற்றீடு இல்லாத நிலையில்தான் அஹ்மதிநெஜாட் தன்னை ஏழைகளைக் காப்பவர் என்று காட்டிக் கொள்ள முடிகிறது.

தற்போதைய நெருக்கடியில், அரசியலில் குற்றம் என்ற பங்கு ஸ்ராலினிச டுடேக் கட்சியினால், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் அணிதிரளலை எதிர்க்கும் பல மாணவர்கள் குழுக்களுடன் சேர்ந்து செய்யப்படுகிறது; அவர்கள் ஆட்சிக்கு எதிரான விரோதப் போக்கை மெளசவிக்கு ஆதரவாகத் திருப்ப முற்படுகின்றனர். மெளசவியின் தொழிலாள வர்க்க விரோத வரலாற்றை நன்கு அறிந்தும்கூட அவர்கள் அஹ்மதிநெஜாட்டிற்கு வேறு எவரும் சிறந்தவர்தான் என்று வாதிடுகின்றனர். பல முறையும் ஈரானிலும் உலகெங்கிலும், வரலாறு நிரூபித்துள்ளது போல், இது பேரழிவைக் கொடுக்கக்கூடிய பாதையாகும்.

இத்தகைய வாதங்களால் ஈர்க்கப்படுபவர்கள் 1979 புரட்சியின் விளைவை நினைவுகூர வேண்டும். ஷா மொஹ்மத் ரேஸா பஹ்லவியை இறுதியில் அகற்றிய மகத்தான இயக்கத்தின் சமூக இயந்திர சக்தி தொழிலாள வர்க்கம் ஆகும்.

எண்ணெய் தொழிலாளர்களால் குறிப்பாக நடத்தப்பட்ட உறுதியான வேலைநிறுத்தங்கள் பொருளாதாரத்தை முடுக்கி அமெரிக்க ஆதரவு பெற்ற அடக்குமுறை ஆட்சியை மண்டியிட வைத்தன. டுடே கட்சி ஷாவிற்கு இருந்த பரந்த எதிர்ப்பிற்கு விலங்கிட்டு, அயதுல்லா கோமேய்னி ஒரு முன்னேற்ற மாற்றீடு என்ற பிரமையை வளர்த்து, மதகுருமார் நடைமுறையின் ஒரு பிரிவுக்கு அதைத் திருப்பியதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது.

ஈரானிய தொழிலாள வர்க்கம் புரட்சிகர போராட்டத்தில் நீண்ட வரலாற்றை கொண்டுள்ளது. ஆனால் வரலாற்றின் கசப்பான படிப்பினைகள் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படை கொள்கையை உறுதி செய்கின்றன: காலம் கடந்த முதலாளித்துவ வளர்ச்சி பெற்ற நாடுகளில் முதலாளித்துவத்தின் எந்தப் பிரிவும் தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை ஜனநாயக உரிமைகள், கெளரவமான வாழ்க்கைத் தரங்கள் ஆகியவற்றை அளிப்பதற்கு திராணியற்ற நிலையில்தான் இயல்பாகவே இருக்கும்.

ட்ரொட்ஸ்கி விளக்கியுள்ளபடி, ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமையை எடுத்துக் கொண்டு போராட்டத்தின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு தொழிலாள வர்க்கத்தினால்தான் முடியும்; அதனால்தான் ஜனநாயக உரிமைகளுக்காக தொடர்ச்சியான போராட்டத்தை நடத்த முடியும். ஒரு தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கம் மதகுருமார்களின் பிடியையும் அவை காக்கும் முதலாளித்துவத்தின் நலன்களையும் முறித்து, ஒரு சில செல்வந்தர்களின் இலாபத்திற்காக அல்லாமல் பெரும்பான்மையினரின் நலன்களுக்காக சமூகத்தை சோசலிச வகையில் மாற்றியமைத்தலை தொடங்கும்.

ஈரானில் உள்ள தற்போதைய அரசியில் கொந்தளிப்பு அரசியல் நடைமுறையில் ஆழ்ந்த பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் என்று சந்தேகத்திற்கு இடமின்றி பலர் தீவிரமாக அடக்குமுறை ஆட்சிக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது என்று விவாதிக்கின்றனர். ஆனால் ஆளும் உயரடுக்கின் பிரிவுகளுள் ஏதாவது ஒன்றுக்கு பின் அவை பொறியில் அகப்பட்டது போல் இருக்கும் வரை, முதலாளித்துவ ஆட்சி வலுப்பெறுவதும் இன்னொரு சுற்று அரசியல் ஒடுக்குமுறை நிகழ்வதும் தவிர்க்க முடியாத விளைவாக இருக்கும். இந்த அரசியல் பொறியில் இருந்து வெளியே வரும் ஒரே பாதை, அதிகாரத்தைக் கைப்பற்றி ஒரு சோசலிச ஈரானை நிறுவுவதற்கான ஒரு போராட்டத்தில் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை சுயாதீனமாக அரசியல் ரீதியாக அணிதிரட்டுவதற்கு திரும்புவதாகும்.

இத்தகைய முன்னோக்கு, மத்திய கிழக்கிலும் சர்வதேச அளவிலும் ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக தொழிலாள வர்க்கம் நடத்தும் பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் கருக்கொள்ளும். தொழிலாளர்களையும் இளைஞர்களையும் எதிர்கொண்டுள்ள அவசர நடவடிக்கை ஈரானிலும் அப்பகுதி முழுவதிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதிகளை கட்டியமைப்பதுதான். அதற்கு இருபதாம் நூற்றாண்டின் போக்கில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் அனைத்து மூலோபாய அனுபவங்களையும் கவனமாக படித்தறிவது தேவைப்படுகிறது. அந்தப் போராட்டங்களின் படிப்பினைகள் அரசியல் நடவடிக்கைக்கு உற்ற வழிகாட்டு நெறிகளை வளங்கும்.