World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Jaffna residents speak out over increasing military repression

இலங்கை: இராணுவ ஒடுக்குமுறை அதிகரிப்பது பற்றி யாழ்ப்பாண மக்கள் பேசுகின்றனர்

By our correspondents
15 June 2009

Use this version to print | Send feedback

வட இலங்கையில் யாழ்ப்பாணத்தில் குடியிருப்பவர்கள் தொடரும் இராணுவ ஒடுக்குமுறை மற்றும் வவுனியா தடுப்பு முகாம்களில் மூன்று இலட்சத்துக்கும் மேலான தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது பற்றி உலக சோசலிச வலைத் தளத்திடம் (WSWS) கடந்த வாரம் கருத்துத் தெரிவித்தனர். இவர்களில் பெரும்பாலானவர்களது உறவினர்கள் இலங்கை இராணுவத்துக்கும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களில் உயிரிழந்துள்ளனர், காயமடைந்துள்ளனர் அல்லது தடுப்பு முகாம்களில் இப்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சிக்கிக்கொண்ட பின்னர் சுமார் 7,000 அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களும் கொல்லப்பட்டதோடு ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்ததாக வெளியிடப்படாத ஐ.நா. அறிக்கையொன்று மதிப்பிட்டுள்ளது. மோதலின் கடைசி வாரத்தில் இலங்கை இராணுவம் "பாதுகாப்பு வலயம்" என சொல்லப்பட்டதன் மீது ஆட்டிலறி மற்றும் பீரங்கித் தாக்குதல்களை பொழிந்துள்ளது.

புலி சந்தேக நபர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டு பழிவாங்கல்களை எதிர்கொள்ள நேரும் என்ற பீதியின் காரணமாக தமது உயிரிழந்த உறவினர்களுக்காக மத கிரியைகளையோ அல்லது துக்கக் கொண்டாட்டத்தையோ பகிரங்கமாக நடத்த முடியாமல் உள்ளதாக யாழ்ப்பாண மக்கள் தெரிவிக்கின்றனர். மக்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக சகலரும் தமது சீற்றத்தை வெளிப்படுத்தினர்.

"தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவ வழியில்லையா? எவ்வாறு அவர்களுக்கு உதவுவது? என ஒருவர் WSWS இடம் கேட்டார். முகாமில் உள்ள எனது சகோதரரின் மனைவி அவரது மகளிடம் ஒரே ஒரு உடையே இருப்பதாகவும் அதுவும் பாடசாலை சீருடை என்றும் என்னிடம் கூறி அழுதாள்.

"ஈழ மக்கள் புரட்சிகர கட்சி [ஈ.பி.டி.பி.] பொருட்களை சேர்த்து இந்த அகதிகளுக்கு அனுப்பினாலும் அது அரசாங்கத்தின் ஒரு பங்காளியே. இந்த ஆடைகள் அகதிகளுக்கு சென்றடைகின்றதா என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது."

இந்த கவலைகள் நியாயமானவை. ஈ.பி.டி.பி. தலைவர் டக்லஸ் தேவானந்தா கொழும்பு அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சரும் தமிழர்களுக்கு எதிரான இனவாத யுத்தத்தை ஆதரித்தவருமாவார். இந்த அமைப்பு ஒரு துணைப்படைக் குழுவை வைத்திருப்பதோடு அது யாழ்ப்பாணத் தீவுகளிலும் குடாநாட்டிலும் உள்ள இராணுவம் மற்றும் கடற்படையுடன் நேரடியாக சேர்ந்து செயற்படுகின்றது.

"எவ்வளவு காலத்துக்கு அவர்கள் இலட்சக்கணக்கான மக்களை தடுத்து வைத்திருக்கப் போகிறார்கள்? தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் எதுவும் செய்யவில்லை. ஆனால் அரசாங்கமும் இராணுவமும் அவர்களை எதிரிகளாகவும் புலிகளின் பாகமாகவும் கருதுகின்றன. இது தற்போது அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதில் இருந்து ஒப்புவிக்கப்பட்டுள்ளது. வன்னியில் யுத்த வலயத்தில் இருந்து கண்ணி வெடிகளை அகற்ற வேண்டும் என அரசாங்கம் சொல்லிய போதிலும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் வீடுகள் உள்ளன. அவர்களை ஏன் அரசாங்கம் விடுவிக்கக் கூடாது? அது பொய் சொல்கிறது," என ஒருவர் கூறினார்.

தனது துயரத்தை கட்டுப்படுத்த முடியாத 48 வயது நபர் ஒருவர் நிருபரின் கரங்களைப் பற்றிக்கொண்டு அழுதுகொண்டே தெரிவித்ததாவது: "இந்த முகாம்களைப் பற்றியும் அங்கு நடப்பது பற்றியும் கேள்விப்படும் போது, அவை நாஸி முகாம்களுக்கு சமமானது என நான் நினைத்தேன்." அவருக்கு தெரிந்த ஒருவர் அவரது சகோதரி மற்றும் சிறு பிள்ளைகளுடன் யுத்த வலயத்தில் இருந்து வெளியேறி சென்றுகொண்டிருக்கும் போது இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அவர் இப்போது முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதிலும் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியாது.

தனது நண்பரின் மனைவி துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்து சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட பின்னர் காணாமல் போய்விட்டதாக இன்னுமொருவர் எங்களிடம் தெரிவித்தார். தனது மனைவி எங்கிருக்கின்றார் என்பது அவரது நண்பருக்கு தெரியாது.

இந்தக் கருத்துக்கள் மிகைப்படுத்தப்பட்டவை அல்ல. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் அரசாங்க ஊழியர்களும், 60 வயதுக்கு மேற்பட்ட 6,700 முதியவர்களும் பத்து வயதுக்கு குறைந்த 50,000 க்கும் அதிகமான சிறுவர்களும் அடங்குவர். ஒரு மதிப்பீட்டின்படி மோதல்களின் போது தாய் தந்தையை இழந்த சுமார் 850 சிறுவர்களும் இந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் நாங்கள் சந்தித்தவர்கள் மத்தியில் புலிகள் மீது கொஞ்சமும் அனுதாபம் கிடையாது. புலிகளின் ஜனநாயக விரோத வழிமுறைகளை நேரடியாக அனுபவித்த ஒரு சிலர், யுத்தத்தின் முடிவு ஜனநாயக உரிமையை மீண்டும் ஸ்தாபிதம் செய்யும் என்று நம்புகின்றனர்.

யாழ்ப்பாணத்தில், இராணுவ இருப்பில் அல்லது அதன் நடவடிக்கைகளில் எந்தவொரு தளர்வும் கிடையாது. நகரிலும் ஏனைய பிரதேசங்களிலும் படையினர் நடந்தும் வாகனத்திலும் அடிக்கடி ரோந்து செல்கின்றனர். உண்மையில், நிரந்தர இராணுவ ஆக்கிரமிப்புக்கான தயாரிப்புக்கள் இடம்பெறுகின்றன.

யாழ்ப்பாண நகரிலும் அதனைச் சூழவும், காவலரன்களின் இடைவெளி 150-200 மீட்டரில் இருந்து 50-100 வரை குறைக்கப்பட்டுள்ளன. நாவாந்துரை, குருநகர், பாசையூர் மற்றும் அரியாலை போன்ற யாழ்ப்பாணத்துக்கு அருகில் உள்ள கரையோரப் பிரதேசங்களிலும் காவலரன்கள் உள்ளன. முன்னர் தகரத்திலும் மணல் மூட்டைகளிலும் கட்டப்பட்டிருந்த சில சோதனைச் சாவடிகள் கல் மற்றும் சீமெந்தால் கட்டி புதுப்பிக்கப்பட்டு நிரந்தரமாக்கப்பட்டுள்ளன.

பொது மக்கள் மத்தியிலான பிரச்சினைகளைத் தீர்க்க தலையிடுவதற்கு எனக் கூறிக்கொண்டு சில கிராமங்களிலும் பொலிசும் இராணுவமும் "சமாதானக் கமிட்டிகள்" என சொல்லப்படுவதை ஸ்தாபித்துள்ளன. இவற்றின் உண்மையான நோக்கம் புலனாய்வு தகவல்களை திரட்டும் பிரிவுகளாக இயங்குவதும் இராணுவ ஆக்கிரமிப்புக்கும் அரசாங்கத்துக்கும் எதிரான சகலவிதமான எதிர்ப்புக்களையும் கண்காணிப்பதுமாகும்.

இராணுவ மற்றும் பொலிஸ் தேடுதல் வேட்டைகள் முன்னர் பிரதானமாக பகல் நேரங்களிலேயே இடம்பெற்றன. யுத்தத்தின் முடிவின் பின்னர், இந்த தேடுதல் நடவடிக்கைகள் சுமார் 15 சிப்பாய்களை உள்ளடக்கியவாறு இரவிலும் பகலிலும் நடக்கின்றன.

கடந்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு அருகில் வட்டுக்கோட்டையில் வீடுகளில் நடந்த தேடுதல் வேட்டையை இந்த நிருபர் நேரடியாக பார்த்துள்ளார். ஆயுதம் தரித்த சிப்பாய்கள் சுமார் இரவு எட்டு மணிக்கு தேடுதல் லைட்டுகளுடன் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் வீட்டைச் சூழவுள்ள தோட்டத்திலும் தேடுதல் நடத்தியதோடு குடும்பத்தினரின் அங்கத்துவ அட்டைகளை கேட்டதோடு அதை கவனமாக பரிசோதித்த பின்னர் அடுத்த வீடுகளுக்கு சென்றனர்.

யாழ்ப்பாணத்துக்குள் புலி உறுப்பினர்கள் நுழைவதை தடுக்கவே இத்தகைய தேடுதல்கள் என இராணுவம் கூறிக்கொண்டாலும், அவற்றின் உண்மையான நோக்கம் தமிழ் மக்களை அச்சுறுத்துவதே. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மற்றும் கொழும்பிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் உள்ள சகல தமிழர்களும் பொலிசில் பதிவு செய்து ஒரு பதிவு அட்டை ஒன்றை பெற்றுக்கொள்ள வேண்டும். பதிவு செய்யப்படாதவர்கள் கைது செய்யப்படலாம். இத்தகைய நடவடிக்கைகள் இனவாத பாகுபாட்டையும் ஒடுக்குமுறையையும் உக்கிரமாக்குவதை இலக்காகக் கொண்டிருப்பது தெளிவு.

சகல மீன்பிடித் தடைகளும் இன்னமும் உள்ளன. உத்தியோகபூர்வ அனுமதி அட்டைகளை பெற்றுக்கொள்ளுமாறும் குறிப்பிட்ட பிரதேசத்துக்குள்ளேயும் ஆழமற்ற கடலிலும் மீன்பிடிக்குமாறும் மீனவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மாலை 5 மணி முதல் காலை 7 மணிவரை மீன் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளதோடு காரை நகர் போன்ற யாழ்ப்பாணத்தை அண்டிய சில தீவுகளில் மீன்படி ஐந்து நாட்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான பிரதான நிலத் தொடர்பான ஏ9 பாதையை மீண்டும் திறப்பதாக அரசாங்கம் கூறிக்கொண்டாலும், நிலக் கண்ணிகளை அகற்றுவதற்கு இன்னும் ஒரு வருடம் ஆகும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் கடந்த வியாழக் கிழமை தெரிவித்தார். மக்கள் வவுனியா தடுப்பு முகாங்களுக்கு செல்வதை அல்லது வன்னியில் ஏற்படுத்தப்பட்டுள்ள அழிவையும் அங்கு மக்கள் வாழாததையும் மக்கள் நேரடியாகக் காண்பதை தடுப்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதால், பொருட்களை கொண்டு செல்ல மட்டும் ஏ9 பாதை திறக்கப்படும்.

யாழ்ப்பாணத்துக்கான ஒரே போக்குவரத்து சேவை விமானம் அல்லது கப்பல் ஆகும். தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டின் தலைநகர் சென்னைக்கான சர்வதேச விமானத்துக்கு செலவாகும் 11,000 ரூபாயுடன் ஒப்பிடும் போது யாழ்ப்பாணத்துக்கான விமானக் கட்டணம் கிட்டத்தட்ட 18,000 ரூபாவாகும்.

கிழக்கில் திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறைக்கான கடல் மார்க்க கட்டணம் 3,080 ரூபாவாக இருப்பதோடு சுமார் 15 மணித்தியாலங்கள் பயணிக்க வேண்டும். கொழும்பில் இருந்து திருகோணமலை செல்லும் பயணிகள், திருகோணமலை பிரதேச செயலாளரிடம் பதிவு செய்துகொள்வதோடு கடற்படை பாதுகாப்பு அனுமதியை கொடுத்தால் மட்டுமே கப்பலில் ஏற முடியும். கப்பலில் ஏறும்போது, செல்லிடப் பேசிகளை கடற் படையிடம் கொடுக்க வேண்டும்.

காங்கேசன்துறையை அடைந்தவுடன் பயணிகள் அங்கிருந்து யாழ்ப்பாணத்துக்கான பாதையில் உள்ள தெல்லிப்பளை சந்திவரை கடற்படையின் பஸ்ஸில் கொண்டு செல்லப்படுவர். அங்கு அவர்கள் மேலும் சோதனையிடப்படுவார்கள். அனைவரும் குடும்ப அட்டைகளையும் தேசிய அடையாள அட்டைகளையும் காட்ட வேண்டும். படையினர் அவர்களை புகைப்படும் எடுப்பர். அங்கு பொதிகளும் தொலைபேசிகளும் திருப்பிக் கொடுக்கப்படும். பின்னர் பயணிகள் மேலும் பல சோதனைச் சாவடிகளைக் கடந்து யாழ்ப்பாணத்துக்கு செல்ல வேண்டும். விமானத்தில் யாழ்ப்பாணத்துக்கு பயணிப்பவர்களும் இதே போன்ற சோதனைகளை எதிர்கொள்ள வேண்டும்.

அடிப்படைப் பொருட்களின் விலைகள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உயர்ந்து காணப்படுவதோடு அவை போதாக்குறையாகவே விநியோகிக்கப்படுகின்றன. உதாரணமாக அரிசி 90 முதல் 110 ரூபா வரை, கொழும்பு விலையை விட 20 முதல் 40 ரூபா வரை உயர்வாக விற்கப்படுகிறது. சீனி, பருப்பு மற்றும் மாவு விலையும் கூட கொழும்பை விட மிகவும் அதிகமாகவே விற்பணையாகிறது.

''வடக்கின் வசந்தம்'' என சொல்லப்படும் வேலைத்திட்டத்தின் கீழ் வடக்கு அபிவிருத்தி செய்யப்படும் என ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ கூறிக்கொள்கின்றார். ஆயினும், இந்தக் கொள்கை, இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் உள்ளூர் மக்கள் மீது தற்போது முன்னெடுக்கப்படும் ஒடுக்குமுறையால் திணிக்கப்பட்டுள்ள மலிவு உழைப்பு நிலைமையில் இலாபம் பெற முயற்சிக்கும் பெரும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதையே இலக்காகக் கொண்டுள்ளது.