World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan government threatens Tamil parliamentarians

இலங்கை அரசாங்கம் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்துகிறது

By K. Ratnayake
16 June 2009

Use this version to print | Send feedback

இலங்கை அரசாங்கம் கடந்த வாரம் நான்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுமுறை கோரி விடுத்த கோரிக்கையை நிராகரித்ததன் மூலம் அவர்களது ஆசனத்தை அகற்றுவதாக அச்சுறுத்தியது. பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவம் தோற்கடித்த பின்னர் விடுக்கப்பட்டுள்ள இந்த அச்சுறுத்தல், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ எந்தவொரு அரசியல் எதிர்ப்பையும் நசுக்குவதற்கு தீட்டும் திட்டத்தின் இன்னுமொரு அறிகுறியாகும்.

ஜூன் 10 அன்று செல்வம் அடைக்கலநாதன், செல்வராஜா கஜேந்திரன், எஸ். ஜெயானந்தமூர்த்தி, பி. சிதம்பரநாதன் ஆகிய தனது நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுமுறை கோரி தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்துக்கு விண்ணப்பித்த போதே இந்த பிரச்சினை எழுந்தது. இந்த நான்கு உறுப்பினர்களும் ஏற்கனவே மூன்று மாத விடுமுறையில் இருப்பதோடு அதை மேலும் மூன்று மாதத்துக்கு நீடிக்க விரும்பினர்.

"தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள்" என்ற புலிகளின் போலி உரிமைகோரலை ஏற்றுக்கொண்ட தமிழ் பாராளுமன்றக் கட்சிகளால், 2002ல் யுத்த நிறுத்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னதாக 2001ல் தான் தமிழ் கூட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது. இதன் விளைவாக தமிழ் கூட்டமைப்பானது புலிகளுக்கு சார்பாக செயற்பட்டது. புலிகளின் இராணுவத் தோல்வியின் பின்னர், தமிழ் கூட்டமைப்பு இலங்கையில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அபிவிருத்தி செய்வதை தொடரும் என மட்டுமே தெரிவித்தது.

பாராளுமன்ற விடுமுறை விண்ணப்பமானது வழமையாக ஒரு சிக்கலற்ற உத்தியோகபூர்வ நடைமுறையாகும். ஆயினும், இந்த விவகாரத்தில், இராஜபக்ஷ அரசாங்கம் இந்த நான்கு தமிழ் கூட்டமைப்பு பிரதிநிதிகளை அச்சுறுத்துவதற்கான சந்தர்ப்பமாகப் பற்றிக்கொண்டது. விடுமுறை அனுமதிக்கப்படாவிட்டால், இலங்கை அரசியலமைப்பு விதிகளின் படி, குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆசனங்களை இழந்துவிடுவர்.

விடுமுறைக்கான விண்ணப்பம் முன்வைக்கப்பட்ட போது, அரசாங்கத்தின் பிரதம கொறடாவான தினேஷ் குணவர்தன, அந்த விண்ணப்பத்தை அரசாங்கம் எதிர்க்கும் என பிரகடனம் செய்தார். விடுமுறை வழங்குவது ஒரு பாராளுமன்ற மரபு என்பதில் கேள்விக்கிடமில்லை என்பதை ஏற்றுக்கொண்ட அதே வேளை, "இலங்கை அரசியலமைப்புக்கு எதிராக செயற்படுவதாகவும்" அரச பிரதிநிதிகளுக்கான கடவுச் சீட்டில் வெளிநாட்டுக்குச் சென்று "வெளிநாட்டு ஊடகங்களுக்கு பொய் அறிக்கைகளை விடுப்பதாகவும்" அவர் இந்த நான்கு தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதும் குற்றஞ்சாட்டினார்.

ஹேமகுமார நாணயக்கார மற்றும் ஜகத் புஷ்பகுமார போன்ற இரு பாராளுமன்ற அமைச்சர்களும் தமிழ் கூட்டமைப்பை திட்டினர். மக்கள் விடுதலை முன்னணியில் (ஜே.வி.பி.) இருந்து பிரிந்து சென்ற சிங்களப் பேரினவாத தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் விமால் வீரவன்சவும் அவர்களோடு சேர்ந்துகொண்டார். "அரசாங்க கடவுச் சீட்டுக்களையும் பாராளுமன்ற சிறப்புரிமைகளையும் பயன்படுத்தி இந்த நபர்கள் சர்வதேச ரீதியில் பொய் பிரச்சாரம் செய்கின்றனர்" என வீரவன்ச தெரிவித்தார்.

இராணுவம், தமிழர்களுக்கு எதிரான அதன் அட்டூழியங்கள் அல்லது சுமார் 300,000 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்கள் பற்றிய எந்தவொரு விமர்சனத்தையும் அடக்குவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. இத்தகைய யுத்தக் குற்றங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீறல்கள் தொடர்பான எந்தவொரு எதிர்ப்பையும் தேசத்துரோகத்துக்கு சமமானதாகவும் மற்றும் "பயங்கரவாதத்துக்கான" ஆதரவாகவும் இராஜபக்ஷ அரசாங்கம் கருதுகிறது.

ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோடாபய இராஜபக்ஷ, புலிகளின் தோல்வியை அடுத்து தமிழ் கூட்டமைப்புக்கு எதிரான நகர்வுகளை முன்னறிவித்தார். மே 21 அரச கட்டுப்பாட்டிலான சுயாதீன தொலைக்காட்சியில் பேசும் போது அவர் பிரகடனம் செய்ததாவது: "[தமிழ் கூட்டமைப்பு பராளுமன்ற உறுப்பினர்கள்] அவர்கள் அதிககாலம் வெளிநாட்டிலேயே செலவிடுவதோடு தமிழர் இனப்படுகொலை நடக்கின்றது என பிரச்சாரம் செய்தனர். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் உரிமை அவர்களுக்கு இல்லை."

கோடாபய இராஜபக்ஷவின் கீழ், அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் தொடுப்பதில் பாதுகாப்பு அமைச்சு முன்னணியில் உள்ளது. பாதுகாப்பு படைகளின் இரகசிய ஒத்துழைப்புடன் இயங்கும் அரசாங்க-சார்பு கொலைப்படைகள், அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் உட்பட கடந்த மூன்று ஆண்டுகளாக நூற்றுக்கணக்கானவர்களை படுகொலை செய்துள்ளன அல்லது கடத்திச்சென்றுள்ளன. யுத்தம் முடிவடைந்ததில் இருந்து, அரசாங்கமும் இராணுவமும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஏனைய "துரோகிகளுக்கும்" எதிராக "புலிகளின் சம்பளத்தில் இயங்கியதாக" குற்றஞ்சாட்டி மேலும் அச்சுறுத்தல் விடுக்கின்றன.

குறிப்பிடத்தக்க வகையில், பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி), தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான அரசாங்கத்தின் நகர்வுகள் தொடர்பாக மெளனமாக இருப்பது, யுத்தத்துக்கும் மற்றும் அதன் பின்னரான அரசாங்கத்தின் பேரினவாத வெற்றி ஆரவார பிரச்சாரத்துக்கும் அதன் ஆதரவை சுட்டிக்காட்டுகிறது. முன்னர் தமிழ் கூட்டமைப்பை "புலி பயங்கரவாதிகளின்" ஆதரவாளர்கள் என குற்றஞ்சாட்டிய ஜே.வி.பி. யும் அரசாங்கத்தை இரகசியமாக ஆதரிக்கின்றது.

பாராளுமன்ற சபாநாயகர் டபிள்யு.ஜே.எம். லொக்குபண்டா, விடுமுறை விண்ணப்பத்தை தள்ளி வைத்தார். கடந்த வெள்ளிக்கிழமை, பாராளுமன்ற உறுப்பினர்கள் மருத்துவ சான்றிதழ்களை வழங்குவார்கள் என பாராளுமன்றத்துக்கு அறிவித்த அவர், உத்தியோகபூர்வமாக விடுமுறை வழங்கினர். தனது அச்சுறுத்தலை நடைமுறைப்படுத்தாத அதே வேளை, அரசாங்கம் தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்றத்தில் இருந்து அகற்றுவதற்கு பலவித சாக்குப் போக்குகளைப் பயன்படுத்த முடியும் என்பதை அதற்கு சுட்டிக் காட்டியது.

மிகவும் பரந்தளவில், தமிழ் முதலாளித்துவ தட்டுக்களை அச்சுறுத்துவதையும் கட்டுப்படுத்துவதையும் இலக்காகக் கொண்டதே இந்த பாராளுமன்ற சூழ்ச்சியாகும். தமிழ் கூட்டமைப்பின் பிரதான அங்கம் முதலாளித்துவ தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியே ஆகும். ஆரம்பத்தில் சமஷ்டிக் கட்சி என அழைக்கப்பட்ட இது 1948ல் சுதந்திரத்தின் பின்னர் ஸ்தாபிக்கப்பட்டது. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முன்நோக்கு தோல்வியடைந்து விட்டது என்ற முடிவுக்கு வந்த இளைஞர்கள் தட்டின் மத்தியிலேயே 1970களில் விடுதலைப்புலிகள் இயக்கம் மற்றும் ஏனைய ஆயுத பிரிவினைவாத குழுக்களும் ஆதரவு தேடிக்கொண்டன.

தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை வெளியேற்றவும் தமிழ் சிறுபான்மையினரில் கணிசமானளவு தட்டினரின் வாக்குரிமையை பறிக்கவும் அரசாங்கம் விடுத்துள்ள அச்சுறுத்தலானது புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் இனவாதப் பண்பை கோடிட்டுக் காட்டுகிறது. "பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்" என்பதற்கு மாறாக, 1983ல் வெடித்த மோதல்கள், ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் காட்டிய தசாப்தகால தமிழர் விரோத பாரபட்சங்களின் விளைவேயாகும்.

1983 ஜூலையில், யூ.என்.பி. அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் செயற்பட்ட சிங்கள இனவாத குண்டர்கள், தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட படுகொலைகளை அரங்கேற்றினர். இதன்போது ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதோடு பெருந்தொகையான வீடுகளும் கடைகளும் எரிக்கப்பட்டன. சில நாட்களுக்குள், ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன பாராளுமன்றத்தின் ஊடாக அரசியலமைப்புக்குள் ஆறாவது திருத்தச் சட்டத்தை திணித்தார்.

இந்த ஆறாவது திருத்தச் சட்டம், ஒரு தனியான தமிழ் அரசுக்கான எந்தவொரு அரசியல் பிரச்சாரத்தையும் தடை செய்ததோடு அதை அமுல்படுத்துவதற்காக சட்டங்களையும் வகுத்தது. சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்க ஊழியர்களும் அரசியலமைப்புக்குக் கட்டுப்படுவதாக சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டும். தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி இதை நிராகரித்ததை அடுத்து, அதன் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ஏறத்தாழ யுத்தப் பிரகடனத்துக்கு சமமான இந்த திருத்தம், தமிழ் முதலாளித்துவ தட்டுக்களுடன் சமரசம் செய்யும் எண்ணம் அரசாங்கத்துக்கு கிடையாது என்பதை தெளிவுபடுத்தியது.

பாராளுமன்றத்தில் இருந்து தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்களை அப்புறப்படுத்தும் அர்சாங்கத்தின் அச்சுறுத்தல், நாட்டின் தமிழ் சிறுபான்மையினரை மட்டுமன்றி, மிகவும் பரந்தளவில் உழைக்கும் மக்களிடமிருந்து எழும் எந்தவொரு அரசியல் எதிர்ப்பையும் இலக்காகக் கொண்டதாகும். ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஜனாதிபதி இராஜபக்ஷ, "தேசத்தைக் கட்டியெழுப்ப" தொழிலாளர்களும் இளைஞர்களும் அர்ப்பணிக்க வேண்டும் என ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளார். புலிகளின் தோல்வியைக் கொண்டாடுவதற்காக கிளறிவிடப்படும் இனவாத பிரச்சாரத்தின் பின்னணியில், அரசாங்கம் தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான பெரும் தாக்குதல்களுக்கு தயாராகின்றது. இந்தத் தாக்குதல்கள் ஜனநாயக உரிமைகளை மேலும் நசுக்குவதன் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும்.