World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Further signs of Sri Lanka's shift into China's orbit

இலங்கை சீனாவின் கோளத்துக்குள் நகருவதைக் காட்டும் புதிய சமிக்ஞைகள்

By K. Ratnayake
18 June 2009

Use this version to print | Send feedback

இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இராணுவ வெற்றியின் பின்னர் முதல் முறையாக வெளிநாட்டுப் பயணம் ஒன்றை இந்த வாரம் மேற்கொண்டார். குறிப்பிடத்தக்க வகையில், அவர் அரச சமாதான மற்றும் அபிவிருத்திச் சபை (எஸ்.பி.டி.சி.) உடன் பேசுவதற்காக பர்மாவுக்கே (மியன்மருக்கு) விஜயம் செய்துள்ளார். நாட்டின் ஒடுக்குமுறையான இராணுவ அரசாங்கம் எஸ்.பி.டி.சி. என்றே அழைக்கப்படுகிறது.

இராஜபக்ஷவின் மூன்று நாள் விஜயத்தில், வெளியுறுவு அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, ஏனைய இரண்டு அமைச்சர்கள் மற்றும் தேசிய விடுதலை முன்னணின் தலைவர் விமல் வீரவன்சவும் இணைந்துகொண்டனர். தேசிய விடுதலை முன்னணி இன்னமும் ஆளும் கூட்டணியின் பங்காளியாக இல்லாத போதிலும், சிங்கள பேரினவாத வாய்வீச்சாளரான வீரவன்ச, அரசாங்கத்தையும் அதன் இனவாத யுத்தத்தையும் ஆதரித்ததோடு இலங்கை மற்றும் பர்மா போன்ற நாடுகளில் மனித உரிமைகள் தொடர்பாக அழுத்தம் கொடுப்பதற்காக மேற்குலக சக்திகளையும் கண்டனம் செய்துவருகின்றார்.

பர்மா ஒரு குறிப்பிடத்தக்க சக்தி அல்ல. ஆயினும், யுத்தக் குற்றங்கள் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகள் கொடுக்கும் அழுத்தத்தை எதிர்ப்பதற்காக ஏனைய நாடுகள் பக்கம், குறிப்பாக சீனாவின் பக்கம் திரும்புவதையே இராஜபக்ஷவின் விஜயம் சுட்டிக்காட்டுகிறது. இலங்கை யுத்தத்தின் போது ஆயுதங்களும் நிதியும் வழங்கி கொழும்புடன் நெருக்கமான உறவுகளை ஸ்தாபித்துக்கொண்ட பெய்ஜிங்குடன் பர்மா நீண்டகால பொருளாதார மற்றும் மூலோபாய உறவுகளை கொண்டுள்ளது.

பர்மிய இராணுவ ஆட்சியும் மேற்கத்தைய கோரிக்கைகளை எதிர்கொள்வதன் காரணமாக, அங்கு இராஜபக்ஷவுக்கு அனுதாபமான கவனிப்பை எதிர்பார்க்க முடியும். பர்மா மீது தடைகளை விதித்துள்ள அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் அரசியல் சீர்திருத்தத்துக்கு அழைப்பு விடுப்பதோடு தடுத்து வைக்கப்பட்டுள்ள எதிர்க் கட்சித் தலைவர் ஆன் சாங் சு கியை விடுதலை செய்யுமாறும் கோருகின்றன. இலங்கையின் விவகாரத்தைப் போலவே, அமெரிக்காவினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் பிரச்சாரம் ஜனநாயக உரிமை பற்றியது அல்ல. தமது எதிரிகளின் செலவில், குறிப்பாக சீனாவின் செலவில் பர்மாவில் தமது செல்வாக்கை பெருப்பித்துக்கொள்வதை இலக்காகக் கொண்டதாகும்.

இந்த பயணத்தின் போது, பர்மா மற்றும் தாய்லாந்துக்கு இடையிலான தீவுகள் ஊடக கப்பலில் கொண்டுவரப்பட்ட புலிகளின் ஆயுத விநியோகத்தை தடுப்பதன் மூலம் ஆதரவளித்தமைக்காக இராஜபக்ஷ பர்மாவுக்கு நன்றி தெரிவித்தார். உபசரித்தவர்களிடம் அவர் தெரிவித்ததாவது: "மூன்று தசாப்தங்களாக ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட எமது மக்களின் உயிர்களைப் பலியெடுத்த கொடூரமான பயங்கரவாதத்தின் முடிவானது, எமது தேசத்தை உட்கட்டமைப்புத் தேவைகளுடன் மீண்டும் கட்டியெழுப்பும் புதிய சவால்களைக் எம்முன் கொண்டுவந்துள்ளது..." "பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்" என்பதற்கு மாறாக, இந்த மோதல்களுக்கான முழுப் பொறுப்பு, தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்த தமிழர்-விரோத பேரினவாதத்தை சுரண்டிக்கொண்ட கொழும்பில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களையே சாரும்.

ஜனவரியில் இருந்து இலங்கை இராணுவத்தின் கண்மூடித்தனமான ஷெல் வீச்சால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் பற்றியோ அல்லது 300,000 மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான தடுப்பு முகாங்களைப் பற்றியோ பர்மியத் தலைவர்களுக்கு சொல்வதற்கு எதுவும் கிடையாது. ஜுன்டாவின் தலைவர் ஜெனரல் தான் ஷ்வே, "சமூக பொருளாதர மற்றும் கலாச்சார துறையில் 1948ல் சுதந்திரம் அடைந்ததில் இருந்து தனது சொந்த நாட்டின் சாதனைகளைப் பற்றி" பெருமைபட்டுக்கொள்ள எண்ணினார். அதற்கு ஏற்றவாறு, பர்மிய இராணுவம் இழைத்த அட்டூழியங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அதன் கொடூரமான ஒடுக்குமுறைகளைப் பற்றி இராஜபக்ஷ இராஜதந்திர மெளனம் காத்தார்.

கடந்த மாதம் சிங்கப்பூரில் நடந்த பாதுகாப்பு சம்பந்தமான கூட்டமொன்றில், பர்மிய துணை பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அயே மைன்ட், இலங்கை யுத்தத்தை அங்கீகரித்தவாறு பேசினார். "இலங்கையில் நீண்ட கால கிளர்ச்சிக்கு அது வெற்றிகரமாக முடிவுகட்டியதை அண்மையில் உலகம் கண்டது. ஆனால், மக்கள் மியன்மரில் கிளர்ச்சியை மறந்துவிட்டனர். ஏன்? ஏனெனில் அண்மைய நாட்களில் மியன்மரில் பெரும் மோதல்கள் எதுவும் வெடிக்கவில்லை," என அவர் தெரிவித்தார். இலங்கையைப் போல், கிளர்ச்சியை அடக்குவதற்காக "கனமான சக்தியை" அரசாங்கம் பயன்படுத்துகின்றது, என அவர் மேலும் தெரிவித்தார்.

பர்மிய ஜெனரல்களுடன் இராஜபக்ஷ கூடிக்குலாவிய நிலையில், இலங்கையின் இராஜதந்திர தகவமைவு மாற்றத்தின் இன்னுமொரு அறிகுறி ரஷ்யாவில் யெகடரின்பர்க்கில் தெரிந்தது. சீனா, ரஷ்யா மற்றும் பல மத்திய ஆசிய குடியரசுகளை உள்ளடக்கிய சங்ஹாய் கோப்பரேஷன் அமைப்பின் (எஸ்.சி.ஓ) மாநாடு, அந்தக் குழுவின் கலந்துரையாடலில் பங்குபற்றும் தரப்பாக ஆவதற்கு கொழும்பு விடுத்த விண்ணப்பத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டது. குறிப்பாக வளங்கள் நிறைந்த மத்திய ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்க செல்வாக்கு வளர்ச்சி கண்டுவருவதை எதிர்க்கும் வழி முறையாக, 2001ல் பெய்ஜிங்கும் மொஸ்கோவும் இந்த குழுவை ஸ்தாபித்துக்கொண்டன.

அந்தத் தீர்மானம் பிரகடனம் செய்ததாவது: "எஸ்.சி.ஓ. உறுப்பு நாடுகள், இலங்கையில் உள்நாட்டு இராணுவ மோதல்களின் முடிவை வரவேற்பதோடு உறுதியான சமாதானத்தை ஸ்தாபிப்பது, பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மற்றும் அதன் இறைமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதி செய்வதன் அடிப்படையில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரப்பாட்டை பலப்படுத்துவது, சகல இன மற்றும் மத குழுக்களதும் உரிமைகளை உத்தரவாதம் செய்வது போன்ற விடயங்களில் எதிர்பார்ப்பை வெளிப்படுத்துகிறது."

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் மேலாக சீனாவும் ரஷ்யாவும் இலங்கையில் ஜனநாயக உரிமைகள் பற்றி அக்கறை காட்டவில்லை. பெய்ஜிங் அதற்கு இன்றியமையாத எரிசக்தி மற்றும் மூலப் பொருட்களை மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் இருந்து வழங்குவதற்கான கடல் போக்குவரத்துப் பாதையை பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான இடமாக இலங்கையை கருதுகிறது. சீனக் கூட்டுத்தாபனங்கள் தென் இலங்கையில் ஹம்பந்தொட்டையில் ஒரு பிரதான புதிய துறைமுகத்தை கட்டியெழுப்புவதில் ஈடுபடுகின்றனது.

இலங்கையில் யுத்தம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் கலந்துரையாடல் நடத்துவதை தடுத்ததன் மூலம் சீனாவும் ரஷ்யாவும் இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு முக்கியமான இராஜதந்திர ஆதரவை வழங்கின. இலங்கையில் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக சுயாதான விசாரணை ஒன்றை முன்னெடுக்க ஐரோப்பா முன்வைத்த தீர்மானத்தை தோற்கடித்ததன் மூலம், கடந்த மாதம் ஐ.நா. மனித உரிமைகள் சபையிலும் அவை பிரதான வகிபாகத்தை இட்டு நிரப்பின.

"இலங்கை கிழக்குக்கு நெருக்கமாக நகர்கிறது" என்ற தலைப்பில் ஏசியா டைம்ஸ் இணையத்தில் நேற்று வெளியான கட்டுரையொன்று, இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திர நகர்வுகளுக்குப் பின்னால் உள்ள பொருளாதார அவசரங்களை சுட்டிக்காட்டியது. "இராஜபக்ஷ மேற்குலகை விழிப்புடன் நோக்காவிட்டால், சில வேளைகளில் இலங்கை பயங்கரவாதத்துக்கு எதிரான அதன் யுத்தத்தில் வென்றிருக்காது. மேற்கத்தைய உதவிகள் நிபந்தனையுடனேயே இலங்கைக்கு கிடைத்தன. ஆனால் கிழக்கில் இருந்து கிடைத்த உதவிகளுக்கு நிபந்தனைகள் இருக்கவில்லை. பேச்சுவார்த்தை பங்காளியாக எஸ்.சி.ஓ. அமைப்பில் இணைந்துகொள்ள இலங்கை தயங்காதது ஏன் என்பதை இது விளக்குகிறது."

மோதல்கள் முடிவடைந்தாலும் இலங்கை அரசாங்கம் ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றது. தனது இராணுவச் செலவாலும் எழுந்த பிரமாண்டமான கடன் சுமை தாங்கிக்கொண்டு, பூகோள பொருளாதார பின்னடைவின் தாக்கத்துக்கும் உள்ளான கொழும்பு, சர்வதேச நாணய நிதியத்திடன் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெற முயற்சித்த போதிலும், அது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய எதிர்ப்பினால் இடை நிறுத்தப்பட்டிருந்தது. இதன் விளைவாக, இலங்கை கடன் மற்றும் நன்கொடைகளை பெற சீனா, ஜப்பான், இந்தியா, லிபியா, ஈரான் மற்றும் வளைகுடா அரசுகளில் தங்கியிருக்கின்றது.

எஸ்.சி.ஓ. அமைப்பில் இணையும் முடிவை விளக்கிய இலங்கை வெளியுறவுச் செயலாளர் பாலித கோஹன தெரிவித்ததாவது: "பொருளாதாரக் காரணங்கள் நிரம்பி வழிகின்றன. பிரதான எஸ்.சி.ஓ. உறுப்பினரான சீனா, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக எழுச்சி பெறுகின்றது. ரஷ்யா மற்றும் கஸகஸ்தான் போன்ற ஏனைய எஸ்.சி.ஓ. நாடுகள் எண்ணெய் மற்றும் கனிய வளங்களைக் கொண்டுள்ளன. இலங்கையைப் பொறுத்தளவில் இத்தகைய நாடுகளை முன்கூட்டியே அணுகி, உறவுகளின் மூலம் நன்மை அடைவது இயற்கையாகும்."

எஸ்.சி.ஓ. அமைப்பில் தலையிடுவது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிடமிருந்து தூர விலகுவதை அர்த்தப்படுத்தவில்லை என கோஹன மறுக்கும் அதே வேளை, வாஷிங்டன் அதை அந்த முறையில் நோக்கும் என கருதமுடியாது. அது இராஜபக்ஷ அரசாங்கத்தை நெருக்குவதற்கு "மனித உரிமைகள்" விவகாரத்தை தொடர்ந்தும் சுரண்டிக்கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை. மிகவும் பரந்தளவில், இலங்கை தொடர்பான இராஜதந்திர சண்டைகள், தொடரும் பூகோள பொருளாதார நெருக்கடியினால் எரிச்சலடைந்துள்ள பெரும் வல்லரசுகளுக்கு இடையில் பகைமை கூர்மையடைந்து வருவதற்கான இன்னுமொரு அறிகுறியாகும்.