World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Political implications of the Sri Lankan war

இலங்கை யுத்தத்தின் அரசியல் உட்பொருள்

By Wije Dias
18 May 2009

Use this version to print | Send feedback

இலங்கையின் நீண்ட கால யுத்தம் ஒரு இரத்தக்களரி முடிவுக்கு வந்துள்ளது. பல வாரங்களாக இடைவிடாமல் இராணுவத்தின் குண்டு வீச்சுக்கு இலக்கான, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிறிய நிலத்துண்டில் இருந்து பத்தாயிரக்கணக்கான பொதுமக்கள் கடந்த வாரக் கடைசியில் வெளியேறினார்கள். எஞ்சியுள்ள புலி போராளிகள் தோல்வியை எற்றுக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இராணுவத்தின் முழு அளவிலான குற்றங்கள் தணிக்கை என்ற மேலங்கியின் பின்னால் மறைக்கப்பட்டு வந்துள்ளன. ஜனவரி 20 மற்றும் மே 7ம் திகதிகளுக்கு இடையில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 7,000 என ஐ.நா. புள்ளி விபரங்கள் கூறுகின்றன -இந்த எண்ணிக்கை ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் காஸாவிலும் மோதல்களில் இந்த ஆண்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை விட மிகவும் அதிகமாகும். இலங்கையில் கடந்த 10 நாட்களாக மேலும் பெருந்தொகையானவர்கள் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கான சிறுவர்கள் கொல்லப்பட்ட யுத்த வலயத்தை "வரையறுக்கமுடியாத நரகம்" என யுனிசெப் பேச்சாளர் ஜேம்ஸ் எல்டர் விவரித்தார். "கடந்த வாரங்களில் அந்த மிகச் சிறிய கரையோர நிலத்துண்டை விட புவியில் வேறு மோசமான இடம் இருக்கவே முடியாது," என அவர் தெரிவித்தார்.

கொழும்பில், அரசாங்கமும் ஊடகங்களும் இராணுவத்தின் வெற்றி தொடர்பாக ஆர்வத்தை தூண்டிவிட முயற்சித்தன. சனிக்கிழமை ஜோர்தானில் இருந்து பேசிய ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, தான் "பயங்கரவாதத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட" ஒரு நாட்டுக்குத் திரும்பிச் செல்லப்போவதாக தெரிவித்தார். சிறு குழுவினர் கொடிகளை அசைக்க, அரசாங்க ஆதரவாளர்கள் தொலைக்காட்சி கமராக்களுக்கு முன்னால் நின்ற அதே வேளை, வெகுஜன மனநிலை இருளார்ந்ததாக இருந்தது. யுத்தம் பற்றிய ஊடக இருட்டடிப்புகள் இருந்த போதிலும், தமது பெயரால் முன்னெடுக்கப்பட்டுவரும் குற்றங்கள், அல்லது இழிநிலையிலான, இராணுவத்தால் கொண்டு நடத்தப்படும் தடுப்பு முகாம்களுக்குள் அடைத்துவைக்கப்பட்டுள்ள இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் அவல நிலை பற்றி அவர்கள் குறுட்டுத்தனமாக இல்லை.

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் அவசரமான அரசியல் சவால்கள், அரசாங்கத்தின் இராணுவ வெற்றியின் அரசியல் உட்பொருளுடன் வெளித்தோன்றப் போகின்றன. ஆரம்பத்தில் இருந்தே, தொழிலாளர்களை இனவாத வழியில் பிளவுபடுத்தவும் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தினதும் அதன் உள்ளூர் பங்காளிகளதும் நலன்களுக்காக வாழ்க்கைத் தரத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களை நியாயப்படுத்தவும் ஒரு வழிமுறையாகவே இலங்கை உள்நாட்டு யுத்தம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. சகல இலங்கையர்களதும் நலன்களுக்காகவே இது முன்னெடுக்கப்படுகிறது என்ற கூற்றை சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) அதன் முன்நோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் நிராகரித்து வந்துள்ளன. அது உழைக்கும் மக்களின் யுத்தம் அல்ல, மாறாக அது அவர்களுக்கு எதிரான யுத்தமேயாகும்.

அந்தக் கூற்று முற்றிலும் ஒப்புவிக்கப்பட்டுள்ளது. 26 ஆண்டுகால இனவாத மோதல்களில் சிரமங்கள் மற்றும் துன்பத்தைத் தவிர தொழிலாள வர்க்கத்துக்கு கிடைத்தது ஒன்றும் இல்லை. மாறாக, பல தசாப்தங்களாக சிரமப்பட்டு வெற்றிகொண்ட சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை கீழறுக்கவும் பறிக்கவும் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் இந்த யுத்தத்தை சுரண்டிக்கொண்டன.

அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபனங்களால் வெளியிடப்படும் நாற்றம்கண்ட குறுகிய தேசபக்தியை சகல தொழிலாளர்களும் நிராகரிக்க வேண்டும். இந்த வெற்றி அணிவகுப்பின் பின்னால் தொழிலாள வர்க்கத்தின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகள் மீதான மூர்க்கத்தனமான புதிய தாக்குதல்கள் தயார்படுத்தப்படுகின்றன என நாம் எச்சரிக்கின்றோம்.

கடந்த மூன்று ஆண்டுகளாக, இந்த அரசாங்கம் தனது வெற்றியை அடைவதற்காக வர்ணிக்க முடியாத வளங்களை வீண் செலவு செய்துள்ளது. இராணுவச் செலவை இரட்டிப்பாக்கி நாட்டை சர்வதேச வங்கிகளுக்கு அடகு வைத்துள்ளது. அதன் வெளிநாட்டு நாணய இருப்பு வற்றிப் போயுள்ள நிலையில், அரசாங்கம் பற்றாக்குறையினதும் வங்குரோத்தினதும் விளிம்பில் உள்ளது.

ஜனநாயகம் மற்றும் சுபீட்சத்தின் புதிய யுகம் ஒன்றை பிரகடனம் செய்யும் அதே வேளை, இராஜபக்ஷ ஏற்கனவே ஒரு "பொருளாதார யுத்தத்தை" முன்னறிவித்துள்ளார். "தேசத்தை மீண்டும் கட்டியெழுப்பும்" போர்வையின் கீழ், 1930களின் பின்னர் ஏற்பட்ட மோசமான பூகோள பொருளாதாரப் பின்னடைவால் மேலும் குவிக்கப்பட்ட, கடந்த மூன்றாண்டு கால பொருளாதரச் சுமைகளை அரசாங்கம் சாதாரண உழைக்கும் மக்களின் முதுகின் மீது இறக்கி வைக்கும். தமது தொழில் மற்றும் வாழ்க்கைத் தரத்தை பாதுகாக்க போராடும் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களும், அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிப்பவர்கள் அல்லது எதிர்ப்பவர்களும் புதிய "எதிரிகளாக" இருப்பர்.

தனது வயிற்றலடிக்கும் வேலைத்திட்டத்தை திணிப்பதற்காக, அரசாங்கம் புலிகளுக்கு எதிரான தனது யுத்தத்தை முன்னெடுக்க திரட்டிக்கொண்ட அதே பொலிஸ் அரசு நடவடிக்கைகளை பயன்படுத்தத் தயங்கப் போவதில்லை. கடந்த இரண்டரை தசாப்தங்களாக, இராணுவம் அளவிலும் மற்றும் அரசியல் செல்வாக்கிலும் பரந்தளவு விரிவாக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற ஜனநாயகம் என்ற வெற்றுக்கூடு அப்படியே இருக்க, உண்மையான அதிகாரங்கள், இராணுவத் தளபதிகள் தீர்க்கமான பாத்திரம் வகிக்கும், ஜனாதிபதி முறையை சூழ்ந்துகொண்டுள்ள சதிக்குழுவிடம் இருக்கும்.

கொழும்பின் இராணுவ வெற்றி, ஆளும் தட்டின் மிகவும் பிற்போக்கு தட்டை மட்டுமே பலப்படுத்தும். சிங்கள மேலாதிக்கவாத மக்கள் விடுதலை முன்னணி, ஜாதிக ஹெல உறுமய மற்றும் தேசிய சுதந்திர முன்னணியுமே இன்று மகிழ்ச்சிக் குரல் எழுப்பிக்கொண்டிருக்கின்றன. அடுத்துவரும் காலத்தில், தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புக்களுக்கு எதிராக அதிரடித் துருப்புக்களாக அவை பயன்படுத்தப்படும்.

யுத்தத்துக்கு வழிவகுத்த எந்தவொரு அரசியல் பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை. இது "பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்" அல்ல, மாறாக தொழிலாள வர்க்கத்தின் செலவில் சிங்கள முதலாளித்துவ தட்டின் அதிகாரத்தையும் சொத்துக்களையும் தக்கவைத்துக்கொள்ளும் யுத்தமாகும். அரசாங்கத்தால் கிளறிவிடப்பட்ட தமிழர் விரோத பாரபட்சங்களை அணுகுவதற்குப் பதிலாக, முழு அரசியல் ஸ்தாபனமும் இனவாத பதட்ட நிலைமைகளுக்கு எண்ணெய் வார்த்து, அவை அழுகி ஒரு புதிய வடிவில் வெடிக்கும் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

இந்தப் பேரழிவுக்கு பிரதான பொறுப்பு புலிகளைச் சாரும். ஒரு தனியான முதலாளித்துவ அரசுக்கான புலிகளின் மூலோபாயம், தமிழ் வெகுஜனங்களின் நலன்களை அன்றி, தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களையே பிரதிநிதித்துவம் செய்கின்றது. அது ஏதாவதொரு பெரும் வல்லரசின் ஆதரவை வெற்றிகொள்வதன் பேரில் பயங்கரவாதத்தையும் இராஜதந்திர சூழ்ச்சிகளையும் ஒன்றிணைப்பதிலேயே தங்கியிருக்கின்றது. அரசியல் எதிர்ப்பை இரக்கமின்றி நசுக்கும் புலிகளின் நடவடிக்கை மிகப் பெரும்பகுதி தமிழ் சமுதாயத்தை அந்நியப்படுத்தியதோடு சாதாரண சிங்களவர்கள் மீதான புலிகளின் பயங்கரவாத தாக்குதல்கள் நேரடியாக கொழும்பு அரசாங்கத்தின் கைகளில் பயன்பட்டது. இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தியை படுகொலை செய்தமை, இலங்கை தமிழர்களின் தலைவிதி சம்பந்தமாக இந்திய அரசாங்கத்தை கைகழுவிக்கொள்ள அனுமதித்தது.

இலங்கையிலும் துணைக்கண்டம் பூராவும் உள்ள தொழிலாள வர்க்கம் யுத்தத்தின் விளைவுகளில் இருந்து அவசியமான அரசியல் படிப்பிணைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். சகல வடிவிலான தேசியவாதத்தைப் போலவே, தமிழ் பிரிவினைவாதமும் வெகுஜனங்களுக்கு ஒரு பிற்போக்கான இரத்தக்களரி நிறைந்த மரணப் பொறி என்பதை நிரூபித்துள்ளது. அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும் மனித குலத்தை முன்கொண்டு செல்லவும் திறமையுடைய ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கமேயாகும். தொழிலாள வர்க்கம் சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இன, மொழி அல்லது தேசிய வேறுபாடுகளுக்கு அப்பால் தனது போராட்டத்தை ஐக்கியப்படுத்த வேண்டும்.

இலங்கையில் இழைக்கப்பட்டுள்ள குற்றங்கள், பூகோள முதலாளித்துவத்தின் ஆழமான சீரழிவின் ஒரு அறிகுறி மட்டுமே. பிராந்தியத்திலும் சர்வதேச ரீதியிலும், ஒரு புதிய ஏகாதிபத்திய சதி, பகைமை மற்றும் யுத்த காலகட்டம் விரிவடைந்து கொண்டிருக்கின்றது. ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்கத் தலைமையிலான நவ-காலனித்துவ யுத்தம் பாகிஸ்தான் வரை விரிவாக்கப்பட்டு வருகின்றது. அங்கு அண்மைய காலங்களில் இலட்சக்கணக்கான அகதிகள் மோதல்களின் காரணமாக இடம்பெயர்ந்து வருகின்றனர்.

இந்த காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு போராட்டத்துக்குமான அடிக்கல், அனைத்துலகவாத முன்நோக்கை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். இது சகலவிதமான தேசியவாதத்தையும் இனவாதத்தையும் நனவுடன் நிராகரிப்பதை உள்ளடக்கியதாகும். இலங்கை யுத்தத்தில் இருந்து சரியான அரசியல் படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும், சோசலிச சமத்துவக் கட்சியையும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவையும் அடுத்து வரவுள்ள போராட்டங்களுக்கான புரட்சிகர தலைமைத்துவமாக கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறும், எமது முன்நோக்கையும் வேலைத்திட்டத்தையும் கற்றுக்கொள்ளுமாறும் இலங்கையிலும் பிராந்தியம் பூராவும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது.