World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Top Sri Lankan general touted as presidential candidate

உயர்மட்ட இலங்கை ஜெனரல் ஜனாதிபதி வேட்பாளராகும் சாத்தியம்

By K. Ratnayake
19 November 2009

Use this version to print | Send feedback

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியுமான சரத் பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராவதற்கான சாத்தியம் தோன்றியிருப்பதானது கடந்த மே மாதம் நாட்டின் நீண்ட கால உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னர், அரசாங்க கட்சிகள் மற்றும் எதிர்க் கட்சிகளை சூழவுள்ள உக்கிரமான அரசியல் நெருக்கடியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, விலைவாசி மற்றும் வேலையின்மை மட்டத்தின் அதிகரிப்பு காரணமாக வளர்ச்சி கண்டுவரும் சமூக அமைதியின்மை மற்றும் பொருளாதார சீரழிவுக்கு மத்தியில், அரசாங்கத்துக்கு முண்டு கொடுக்கும் முயற்சியில் வெற்றிக் கொண்டாட்டங்களை காலவரையறையின்றி தொடர்வதற்கு முயற்சிக்கின்றார். இந்த வெற்றி ஆரவாரத்தின் மத்தியில், இராஜபக்ஷ மிகப்பெரும் இடைவெளியில் ஒரு தொகை மாகாண சபை தேர்தல்களில் வென்றதோடு ஏப்பிரலில் நடக்கவுள்ள பொதுத் தேர்தலில் அதிகூடிய பெரும்பான்மையை தனது கூட்டணி பெறும் என தற்பெருமை பேசிக்கொள்கின்றார்.

பொருளாதாரம் மேலும் சீரழிவதற்கு முன்னதாக, இராஜபக்ஷ 2011ல் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்தும் அறிவிப்பை கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) மாநாட்டில் அறிவிப்பார் என பரந்தளவில் நம்பப்பட்டது. ஆயினும், அது இடம்பெறவில்லை. தீர்மானிக்கும் முன்னர் ஜனாதிபதி தேர்தலா அல்லது பாராளுமன்ற தேர்தலா நடக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. மீண்டும் ஆட்சிக்கு வருவது பற்றி கணக்கிட்டுள்ள இராஜபக்ஷ, இப்போது சரத் பொன்சேகாவின் சவாலையும் எதிர்கொள்கின்றார். அரசாங்கம் தனது பிரச்சாரக் களத்தில் பயன்படுத்தவுள்ள பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான வெற்றி என்ற தூணும் பொன்சேகாவின் வருகையால் கீழறுக்கப்பட்டுள்ளது.

எதிர்க் கட்சிகளின் "பொது ஜனாதிபதி வேட்பாளராக" பொன்சேகா தேர்வு செய்யப்படுவதற்கான சாத்தியம், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி ஆகிய எதிர்க் கட்சிகளின் ஆழமான நெருக்கடியையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. மாகாண சபை தேர்தல்களில் இராஜபக்ஷ பெற்ற வெற்றிகள் எந்தவொரு உண்மையான எதிர்ப்பும் இல்லாமையின் விளைவை பெருமளவில் அளந்து காட்டியது. யூ.என்.பி. மற்றும் ஜே.வி.பி. யும், இராஜபக்ஷவின் இனவாத யுத்தம், இராணுவத்தின் யுத்தக் குற்றங்கள் மற்றும் அதைத் தொடர்ந்து 250,000 தமிழ் பொது மக்கள் அடைத்து வைக்கப்பட்டதையும் மற்றும் ஏனைய ஜனநாயக உரிமை மீறல்களையும் ஆதரித்தன. வீணடிப்புகளையும் மோசடிகளையும் செய்வதாக அரசாங்கத்தை கண்டனம் செய்யும் அதே வேளை, இரு கட்சிகளும் அதன் சந்தை சார்பு குறிக்கோள் மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளுடன் உடன்பாடு கொண்டிருந்தன.

இப்போது யூ.என்.பி. மற்றும் ஜே.வி.பி. யும் பொன்சேகாவை ஒரு பொது ஜனாதிபதி வேட்பாளராக பகிரங்கமாக ஆதரிக்கின்றன. இந்தக் கட்சிகளிலும் தமது சொந்த தலைவர்கள் இராஜபக்ஷவை தோற்கடிப்பார்கள் என்ற நம்பிக்கை குறைவாக இருப்பதையே அவர்களது முடிவு கோடிட்டுக் காட்டுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, நீண்டகால வலதுசாரி எதிர்க் கட்சியான யூ.என்.பி. க்கும் மற்றும் சிங்கள மக்கள் வாதத்தையும் அதி தீவிரவாதத்தையும் அடிப்படையாகக் கொண்டு 1960களில் அதிருப்தியடைந்த சிங்கள கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் ஒரு கொரில்லா இயக்கமாக ஸ்தாபிக்கப்பட்ட ஜே.வி.பி. க்கும் இடையில் கூர்மான வேறுபாடுகள் தொடர்ந்தும் காணப்படும். 2002ல் புலிகளுடன் யுத்த நிறுத்தத்தை கைச்சாத்திட்டு சமாதானப் பேச்சுவார்த்தையில் நுழைந்ததன் மூலம் நாட்டைக் காட்டிக்கொடுத்து விட்டதாக யூ.என்.பி. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக குற்றஞ்சாட்டிய ஜே.வி.பி., 2005ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் இராஜபக்ஷவை ஆதரித்தது.

எதிர்க் கட்சிகள் பொன்சேகாவை ஆதரிக்கவுள்ளன என்ற வதந்திகள் பல வாரங்களாகவே ஊடகங்களில் உலாவவிடப்படுகின்றன. 2002 யுத்த நிறுத்தத்தை பகிரங்கமாக மீறி, 2006 நடுப்பகுதியில் மீண்டும் தீவை யுத்தத்துக்குள் தள்ளிய இராஜபக்ஷவை சூழ இருந்த அரசியல்-இராணுவ கும்பலில் பொன்சேகாவும் ஒருவராவார். பொன்சேகா ஒரு உயர்மட்ட இராணுவ ஜெனரல் என்ற வகையில், புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிராந்தியத்தின் மீது குண்டு கண்மூடித்தனமாக குண்டு பொழிவதற்காக இராணுவத்தின் அதீத விமான மற்றும் ஆட்டிலறி திறனை பயன்படுத்தி முற்றுகை யுத்தத்தை இரக்கமின்றி முன்னெடுத்தார். ஜனவரி முதல் மே மாதம் வரை யுத்தத்தின் கடைசி மாதங்களில் குறைந்தபட்சம் 7,000 தமிழ் பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐ.நா. மதிப்பிட்டுள்ளது.

பொன்சேகாவுக்கும் இராபக்ஷவுக்கும் இடையிலான பகைமை, புலிகளின் தோல்வியின் பின்னரே தலைநீட்டத் தொடங்கியது. இராணுவம் பெற்ற வெற்றிக்கு ஜனாதிபதி இராஜபக்ஷவும் மற்றும் அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோடாபய இராஜபக்ஷவும் புகழ் உரிமை கோருவதையிட்டு இராணுவ அதிகாரிகள் மத்தியில் ஆழமடைந்துவரும் சீற்றமும் இந்தப் பகைமைக்கு ஒரு பகுதி எண்ணெய் வார்த்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. பொன்சேகா நவம்பர் 13 தனது இராஜினாமா கடிதத்தை கையளித்ததோடு ஏறத்தாழ அது உடனடியாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர் தனது திட்டங்களை இன்னமும் அறிவிக்காத போதிலும், திங்களன்று நிருபர்கள் மாநாடொன்றில் பேசுகையில், "தன்னால் முடிந்தவரை உயர்ந்த மட்டத்தில்" நாட்டுக்கு தொடர்ந்தும் சேவை செய்வதாக அவர் கூறினார்.

யூ.என்.பி., ஜே.வி.பி. மட்டுமல்ல பொன்சேகாவின் உடனடி கணிப்பிற்கும் அப்பால், இலங்கை ஆளும் வர்க்கத்தின் பகுதிகள், குவிந்துவரும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் மத்தியில் அரச இயந்திரத்தின் சக்திகளை இயக்குவதற்காக ஒரு இராணுவ அதிகாரியின் பக்கம் திரும்பியிருப்பதையே நாட்டின் உயர்மட்ட ஜெனரலின் அரசியல் கள பிரவேசம் தெளிவுபடுத்துகிறது.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான யுத்தம், பொருளாதார பின்னடைவு மற்றும் ஆழமடைந்துவரும் சமூக சமத்துவமின்மையும் சகல பிரதான கட்சிகள் சம்பந்தமாக பரந்தளவிலான வெகுஜன அதிருப்தியையும் வெறுப்பையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இராஜபக்ஷ ஏறத்தாழ ஒவ்வொரு அரசாங்க பாராளுமன்ற உறுப்பினருக்கும் ஒரு அமைச்சர் பதவியை அல்லது ஆலோசகர் பதவியையாவது கொடுத்து ஒன்றுபடுத்தி வைத்திருக்கும் ஒரு ஸ்திரமற்ற ஒட்டுக் கூட்டணியில் தங்கியிருக்கின்றார். எதிர்க் கட்சிகளிலும் பிளவுகளுக்கும் பதட்ட நிலைமைகளுக்கும் குறைவில்லை. 1990களில் ஒரு பயனுள்ள அரசியல் பாதுகாப்பு வால்வு போல் செயற்பட்ட ஜே.வி.பி., 2004ல் ஸ்ரீ.ல.சு.க. கூட்டணியில் இணைந்த பின்னர் உடனடியாக அதிருப்திக்குள்ளானது. இந்த ஆண்டு முற்பகுதியில், ஜே.வி.பி. யின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைந்துகொண்ட நிலையில் அது பிளவுண்டது.

நாடு அடுத்தடுத்து அரசியல் நெருக்கடியில் தள்ளாடிய நிலையில், எரிச்சலடைந்த ஊடக கருத்தாளர்கள், பாராளுமன்ற சண்டைகளுக்கு முடிவு கட்டவும் மற்றும் தேவையான கடும் நடவடிக்கைகளை அமுல்படுத்தி, எந்தவொரு எதிர்ப்பையும் இரும்புச் சப்பாத்துக்களால் நசுக்கி நட்டைப் பாதுகாக்கவும் ஒரு பலம்வாய்ந்த நபர் வரவேண்டும் என பல தடவை அழைப்பு விடுத்துள்ளனர். 1930களின் பின்னர் ஏற்பட்டுள் மிக மிக ஆழமான பூகோள பொருளாதார நெருக்கடியின் மத்தியில், பொனபாட்டிச நபர் ஒருவருக்கு விடுத்த அழைப்புக்கு இப்போது பதில் கிடைத்திருப்பது தற்செயலானது அல்ல.

இராஜபக்ஷவுடன் இருந்தபோது, யுத்தக் குற்றங்களுக்கும் கொலைப் படைகளின் செயற்பாடுகளுக்கும் மற்றும் ஏனைய துஷ்பிரயோகங்களுக்கும் பொறுப்பாளியான பொன்சேகாவை எதிர்க் கட்சிகள் புதிய "ஜனநாயக" ஆடைகளை உடுத்தி சோடிக்க முயற்சிக்கின்றன. கடந்த வாரக் கடைசியில் வெளியான சண்டே டைம்ஸ் பத்திரிகை பொன்சேகாவின் இராஜினாமா கடிதத்தைப் பற்றி நீண்ட கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்தக் கடிதம் நவம்பர் 6 அன்று யூ.என்.பி. தலைவர் விக்கிரமசிங்க மற்றும் ஏனைய எதிர்க் கட்சித் தலைவர்களுடனான இரகசிய கலந்துரையாடலின் பின்னர், பொன்சேகாவே சில மீளாய்வுகளை செய்து வரைந்தததாக கூறப்படுகிறது.

சண்டே டைம்ஸின்படி, இராஜினாமா கடிதத்துடன் இருந்த ஒரு இணைப்பில், பொன்சேகா இராஜபக்ஷவை அரசியல் ரீதியில் எதிர்ப்பதற்கான 16 காரணங்கள் கூறப்பட்டிருந்தன. எதிர்க் கட்சிகளால் தயாரிக்கப்பட்ட 13வது காரணத்தில், இராணுவத்தால் நடத்தப்படும் தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் பொது மக்களின் நிலைமை "எனக்கு மிகவும் கவலை தருகிறது" என பொன்சேகா பிரகடனம் செய்துள்ளார். அரசாங்கத்திடம் தக்க திட்டம் இல்லை என விமர்சிக்கும் அந்த இணைப்பு, உறவினர்களுடனும் நண்பர்களுடனும் மற்றும் வேறெங்கிலும் இருக்கும் அகதிகளை அவர்களுடன் வசிக்க அனுமதிக்க வேண்டும் என பரிந்துரைக்கின்றது.

15வது காரணம், அரசாங்கத்திடம் "தமிழ் மக்களின் இதயங்களையும் மனங்களையும் வெற்றிகொள்வதற்கான கொள்கை இல்லாமை, முயன்று பெற்ற வெற்றியை நிச்சயமாக சேதமாக்கி எதிர்காலத்தில் இன்னுமொரு எழுச்சிக்கு வழிவகுக்கும்" என விமர்சிக்கின்றது. 16வது காரணம், "யுத்தத்தின் முடிவில் எதிர்பார்த்திருந்த சமாதானத்தின் பிரதிபலன்கள் இன்னமும் அடையப்படவில்லை. மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சிரமங்கள் அதிகரித்துள்ள அதே வேளை, வீணடிப்புகளும் மோசடிகளும் அளவுகடந்துள்ளன; ஊடக சுதந்திரமும் ஏனைய ஜனநாயக உரிமைகளும் தொடர்ந்தும் நசுக்கப்படுகின்றன," என்ற உண்மையை உளருகிறது.

வெகுஜன அதிருப்திக்கு அழைப்பு விடுக்க வரையப்பட்ட இத்தகைய மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனங்கள், நாட்டின் அரசியலமைப்பையும் சட்ட அமைப்பையும் பகிரங்கமாக மீறி இரண்டரை இலட்சம் பிரஜைகளை எதேச்சதிகாரமாக தடுத்து வைத்திருப்பதையும், ஜனாதிபதிக்கு பரந்த ஜனநாயக விரோத அதிகாரங்களை வழங்கும் அவசரகால நிலை நீடிப்பையும் எதிர்க் கட்சிகள் தொடர்ந்தும் ஆதரிக்கின்றன என்ற உண்மையை மறைத்து, உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை மேலும் மோசமாக்குவதை மட்டுமே செய்யும் பொருளாதார கொள்கைகளுக்கு வக்காலத்து வாங்க முயற்சிக்கின்றன.

எவ்வாறெனினும், பொன்சேகா கையளித்த கடிதத்தில் இவை எதுவும் இருக்கவில்லை. அவர் கடைசியாக கையளித்த இராஜினாமாக கடிதத்தில் 16வது காரணம் அழிக்கப்பட்டிருந்தமை, அவர் ஜனநாயக உரிமைகளை அலட்சியம் செய்வதை கோடிட்டுக் காட்டுகிறது. இராணுவத்தைப் பற்றிய மெல்லிய விமர்சனத்தைக் கூட "தேச விரோதமானது" என கண்டனம் செய்வதில் பொன்சேகா பகிரங்கமாக பேர் போனவர். யுத்தத்தின் போது, பாதுகாப்பு படைகளுடன் இணைந்து செயற்பட்ட அரசாங்க சார்பு கொலைப் படைகளால் பல பத்திரிகையாளர்கள் கடத்தப்பட்டனர் அல்லது படுகொலை செய்யப்பட்டனர்.

பொன்சேகாவின் தலைமைத்துவத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட தடுப்பு முகாங்களை பொறுத்தளவில், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை வெளியேற அனுமதிப்பது பற்றி குறிப்பிட்டிருந்ததை கடிதத்தில் இருந்து அகற்றிய பொன்சேகா, மாறாக "தக்க உட்கட்டமைப்பு வசதிகள் இன்றி நேரத்தை சமாளிக்கும் முறையில்" அகதிகளை மீண்டும் குடியேற்றியமைக்காக அரசாங்கத்தை விமர்சித்திருந்தார். தடுத்து வைக்கும் கொள்கையை கண்டனம் செய்வதற்கு மாறாக, அவர் உத்தியோகபூர்வ போலி சாக்குப் போக்குகளை மீண்டும் கூறினார்: "ஊடுருவியுள்ள [புலி] பயங்கரவாதிகளை" அடையாளம் காண்பதோடு கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கையை பூர்த்தி செய்ய அனுமதிக்க வேண்டியுள்ளது.

தீவின் தமிழ் சிறுபான்மையினரின் "மனதையும் இதயத்தையும் வெல்லும்" கொள்கைக்கு மாறாக, "பாதுகாப்பு வழங்குதல்" என்ற போர்வையில் முன்னர் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்கள் மீது நிரந்தர ஆக்கிரமிப்பை பலப்படுத்துவதற்கு பொன்சேகா அழைப்பு விடுக்கின்றார். அவரது கடிதம் கூறுவதாவது: "தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தெளிவான கொள்கை இல்லாததால், முயன்று பெற்ற வெற்றி சேதமாவதற்கான வழியமைவதோடு மீள குடியேற்றப்பட்ட பிரதேசங்களில் பாதுகாப்பு பற்றாக்குறையாக இருப்பதால் எதிர்காலத்தில் இன்னுமொரு எழுச்சிக்கு வழிவகுக்கப்படுகிறது.

இராணுவத்தின் அரசியல் பாதுகாப்பும் மற்றும் புலிகளை தோற்கடிப்பதில் தனது சொந்த வகிபாகமுமே பொன்சேகாவின் கடிதத்தின் மையமாக உள்ளன. "என்னுடைய நோக்கு, கட்டளை மற்றும் தலைமைத்துவத்திலேயே இந்த உயர்ந்த பணி [யுத்தத்தில் வெற்றி] நிறைவேற்றப்பட்டது," என அவர் எழுதியுள்ளார். நாடு இன்னுமொரு மியன்மரைப் போன்ற தேசமாவற்கு வழிவகுக்கக் கூடியளவு "அளவுக்கு மிஞ்சிய சக்தி படைத்த இராணுவம் ஒன்று நாட்டில் இருப்பதாக மக்கள் கருத்து ஒன்று வளச்சியடைகிறது" என இராஜபக்ஷ சொன்னதாகக் கூறப்படும் கருத்தை பொன்சேகா விமர்சித்துள்ளார்.

அக்டோபர் 15 அன்று இராணுவ சதியொன்று உடனடியாக நிகழக் கூடிய அபாயம் பற்றி இந்தியாவை விழிப்புடன் வைத்தமைக்காக அந்தக் கடிதம் இராஜபக்ஷவை விமர்சிக்கின்றது. பொன்சேகாவின் கூற்றை புது டில்லி மறுத்துள்ளது. அரசாங்கத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட பிராமண்டமான இராணுவத்திடம் இருந்து சவால்கள் வரக்கூடிய சாத்தியம் பற்றி இராஜபக்ஷ விழிப்புடன் இருக்கின்றார் என்பதில் சந்தேகம் இல்லை.

பொன்சேகா அரசியல் வாழ்க்கையில் இராணுவம் ஆற்றிய மேலும் மேலும் நேரடியான வகிபாகத்துக்கு உருவம் கொடுக்கின்றார். இராஜபக்ஷவின் ஜனாதிபதி குழுவின் பங்காளியாக இருந்த அவர், அரசாங்கத்தின் கொள்கைகளை தீர்மானிக்க உதவியதோடு அரசியல் பிரகடனங்களையும் தானே செய்தார். பொன்சேகா திடீரென இராஜினாமா செய்து ஜனாதிபதி பதவியை எதிர்பார்ப்பது, யுத்தத்தின் முடிவின் பின்னர் சக்திவாய்ந்த இராணுவ இயந்திரங்கள் தமது அதிகாரத்தையும் செல்வாக்கையும் பராமரித்துக்கொள்ள எத்தனிப்பதற்கான அறிகுறியாகும்.

பொன்சேகாவின் எண்ணத்தில் என்ன இருந்தாலும், ஆளும் கும்பலின் பகுதிகள் தமது சொந்த தேவைகளுக்காக நாட்டின் சக்திவாய்ந்த நிரைவேற்று அதிகார ஜனாதிபதி பதவிக்கு வர பொதுமக்கள் ஆடையில் இருக்கும் இந்த ஜெனரலுக்கு ஆதரவளிக்கின்றன. 26 ஆண்டுகளாக, கொழும்பு அரசியல் ஸ்தாபனமானது உழைக்கும் மக்கள் மத்தியில் இனவாத பிளவுகளை விதைப்பதற்காகவும் தனது ஒடுக்குமுறை பொருளாதார கொள்கைகள் மீதான எதிர்ப்பை நசுக்கவும் யுத்த்ததை சுரண்டிக்கொண்டன. இப்போது அது ஆழமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதோடு அது மிகவும் மோசமடைந்து பரந்த சமூக அமைதியின்மைககு மட்டுமே வழிவகுக்கும். தொழிற்சங்கங்கள் தனிக்கவும் அடிபணியச் செய்யவும் முயற்சித்தாலும், சம்பள உயர்வு கோரி குறிப்பிடத்தக்க தொழிலாளர் பகுதியினர் மத்தியில் வேலை நிறுத்த இயக்கங்கள் ஏற்கனவே வளர்ச்சி கண்டுள்ளன.

இலங்கைக்கு வழங்கிய பொருளாதார உதவிகளை நியாயப்படுத்தி நவம்பர் 5 அன்று சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் ஸ்டரவுஸ் கான் எழுதிய கடிதத்தில் இந்த நெருக்கடியின் ஆழம் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. "அந்த நாட்டின் மனித உரிமைகள் நிலைமைகள் பற்றிய ஒருவரின் நிலைப்பாடு என்னவாக இருந்தாலும், பொருளாதார வீழ்ச்சியை சாதாரணமாக கருத முடியாது," என அவர் எழுதியுள்ளார். "மக்களுக்கு, குறிப்பாக ஜனத்தொகையில் அதி வறுமையில் வாடும் பகுதியினருக்கு அழிவுகரமானதாக இருக்கக் கூடிய ஒரு பொருளாதார பொறிவை தடுப்பதற்கு சாத்தியமான அனைத்தையும் செய்வதே எமது கடமை...."

நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த சமூக வெடிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில், எல்லாவற்றுக்கும் மேலாக தொழிலாள வர்க்கத்துடனான மோதலுக்கு தேவையான இரக்கமற்ற நடவடிக்கைகளை அமுல்படுத்த இராஜபக்ஷ அரசாங்கம் இலாயக்கானது அல்ல என்ற ஆளும் வர்க்கத்தின் பீதியையே பொன்சேகாவின் வருகை பிரதிபலிக்கின்றது.