World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Former detainee describes conditions in Sri Lankan internment camps

தடுப்புக்காவலில் இருந்த முன்னாள் கைதி இலங்கையின் தடுப்பு முகாம்களின் நிலமை பற்றி விவரிக்கின்றார்

By Subash Somachandran
2 October 2009

Use this version to print | Send feedback

வட இலங்கையில் தமிழீழ விடுதைலைப் புலிகளின் இராணுவத் தோல்வியினைத் தொடர்ந்து சுமார் 280,000 தமிழ் மக்கள் இராஜபக்ஸ அரசாங்கத்தினால் தடுப்பு முகாம்களில் மே மாதத்தில் இருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இலங்கை இராணுவத்தின் கண்மூடித்தனமான குண்டு மற்றும் செல் தாக்குதல்களில் இருந்து தப்பிவந்த பின்னர், அவர்களது அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீறப்பட்டு, இழிந்த நிலையில் உள்ள தடுப்பு முகாம்களில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

கீழே வரும் நேர்காணல், வவுனியாவில் உள்ள மெனிக்பார்ம் முகாமில் சுமார் 160,000 மக்களுடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு இளம் பெண்ணிடமிருந்து பெறப்பட்டதாகும். வடக்கின் மீது இலங்கை இராணுவம் தாக்குதலை ஆரம்பித்த போது, இந்தப்பெண் கிளிநொச்சியில் உள்ள ஒரு கிராமத்தில் அவரது பெற்றாருடன் இருந்தார். இந்த வருட முற்பகுதியில் இந்தக் குடும்பம் இறுதியாக புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முல்லைத்தீவு பிரதேசத்துக்கு தப்பியோடியது. நாம் தெளிவான பாதுகாப்புக் காரணங்களுக்காக அவரது பெயரை வெளியிடவில்லை.

* * *

"நாங்கள் புதுமாத்தளனுக்கு வந்தடைய முன்னர், எமது கிராமத்தில் இருந்து பல இடங்களுக்கு இடம்பெயர்ந்தோம். கிளிநொச்சியில் எமது நண்பர்களுடன் தங்கினோம். ஒவ்வொரு சமயத்திலும் நாங்கள் கூடாரம் ஒன்றை அமைத்தும் பதுங்கு குழி தோண்டியும் அதற்குள் தங்கியிருந்தோம். எனக்கு இரண்டு சகோதரிகள் இருக்கிறார்கள். ஒருவருக்கு 7 வயது மற்றவருக்கு ஐந்து வயது. இந்த வேளையில் எனது பெற்றார் எங்களுக்காக தமது உயிரைப் பணயம் வைத்து செயற்பட்டார்கள். நாங்கள் பதுங்கு குழிக்குள் இருந்தோம், அவர்கள் எங்களுக்காக மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் பதுங்கு குழிக்கு வெளியில் இருந்து உணவு சமைத்துக் கொண்டு வந்தார்கள்.

"நாங்கள் கிளிநொச்சிக்கு அருகில் தர்மபுரத்தில் இருக்கும்போது நான் சில நாட்கள் பாடசாலை சென்றுவந்தேன். ஆனால் பாடசாலை ஷெல் தாக்குதலுக்கு உள்ளானது. பாடசாலைக்கு அருகில் இருந்த ஆஸ்பத்திரியும் செல்தாக்குதலால் பாதிக்கப்பட்டது. நோயாளர்கள் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்தனர். இந்தப் பிரதேசங்கள் எந்த நேரமும் சன நெரிசலுடன் இருக்கும். எப்போது அங்கு செல் தாக்குதல்கள் நடைபெற்றாலும் பெருந்தொகையான மக்கள் தாக்கப்படுவார்கள். செல் மற்றும் குண்டுத் தாக்குதல்களின் பின்னர் காயப்பட்டவர்களை சயிக்கிள் மற்றும் வேறு வாகனங்களில் கொண்டு சென்றதை நான் கண்டேன்.

"இராணுவம் 'பாதுகாப்பு வலயமொன்றை' அறிவித்ததோடு பெருந் தொகையான மக்கள் கூட்டம் இந்த பிரதேசங்களில் நிறைந்திருந்தது. புதுக்குடியிருப்பில் தேவிபுரம் அவ்வாறானதொரு பிரதேசம்தான். ஆனால், இராணுவம் இந்தப் பிரதேசத்துக்குள்ளும் செல் தாக்குதல் நடத்தியது. இராணுவம் ஏன் இந்தப் "பாதுகாப்புப் பிரதேசங்களுக்குள்" செல்தாக்குதல் நடத்துகின்றது என்று அறிவதற்கு மக்கள் முயற்சித்தார்கள்.

"புதுமாத்தளனில் (இறுதியாக இராணுவம் அறிவித்த பாதுகாப்பு வலயம்) எங்களது பங்கர்களில் இருந்து எங்களால் வெளியேற முடியாமல் இருந்ததோடு இராணுவத்தால் அடிக்கடி நடத்தப்பட்ட ஆட்லறி செல் தாக்குதலுக்கு முகம் கொடுக்க நேர்ந்தது. இது ஒரு குண்டு மழையாகவே இருந்தது, பதுங்கு குழியில் இருந்து ஒருவர் வெளியில் வந்தால் கட்டாயம் கொல்லப்படுவார். அந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களின் கதைகள் எப்பொழுதும் எமது காதுகளில் விழுந்து கொண்டிருந்தன."

மார்ச் 20ம் திகதி இந்தப் பெண்ணை புலிகள் அவருடைய குடும்பத்தில் இருந்து பிரித்து பிடித்துச் சென்று விட்டனர். அவரது தாய் புலிகளுடன் மன்றாடியும் எந்தப் பயனும் இல்லை. இராணுவத்தின் குண்டுத் தாக்குதலில் அவரது தாய் கொல்லப்பட்டுப் பத்து நாட்களாகிவிட்டது என்பது பின்னரே அவருக்கு தெரியவந்தது. இந்தப் பெண்ணின் தந்தை நம்பிக்கையிழந்த நிலையில் மகளைத் தேடிக் கொண்டிருக்கும் போது இராணுவத்தின் செல் தாக்குதலினால் மே 10ம் திகதி கொல்லப்பட்டார்.

''நான் புலிகளினால் கட்டாயமாகப் பிடித்துச் செல்லப்பட்டபோது தான் எனது பெற்றோரை இறுதியாகப் பார்த்தேன். நான் புலிகளின் காவலில் இருந்தபோது எனது பெற்றாரை ஒரு தடவையாவது பார்க்க விடுமாறு புலிகளிடம் மன்றாடினேன். ஆனால், அவர்கள் இரக்கமற்று நிராகரித்து விட்டனர். எவ்வாறாயினும் நான் எனது உறவினர் ஒருவரின் உதவியுடன் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து தப்பி ஓடினேன்.

"புலிகளின் பிடியில் இருந்து விடுபட்ட பின்னர் ஒரு நாள் அவர்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து வெளியேறுவதற்கு மூன்று தடவைகள் முயற்சி செய்தேன். இறுதியாக ஒருவாறு சமாளித்துக் கொண்டு சில பேருடன் சேர்ந்து நந்திக் கடல் ஊடாக தப்பியோடினேன். நாங்கள் சென்ற பாதையில் புலிகள் தப்பியோடும் மக்களை தடுத்து துரத்தியடித்தார்கள். அவர்கள் எங்களைச் சுட்டார்கள். அந்தத் தாக்குதல்களில் காயமடைந்தவர்கள் தங்களைக் காப்பாற்றுமாறு எங்களை கேட்டார்கள். ஆனால் யாராலும் அவர்களுக்கு உதவ முடியவில்லை. நாங்கள் இரவு கடற்கரையில் தங்கினோம். விடிந்த பின்னர் எனக்கருகில் இறந்த உடல்கள் இருப்பதைக் கண்டேன். இவ்வாறுதான் பலபேர் உயிரிழந்திருப்பார்கள் என்று நான் நினைத்தேன்.''

இந்த இளம் பெண் இறுதியாக பல ஆயிரக்கணக்கான மக்களுடன் மே 20ம் திகதி இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் நுழைந்தாள். அவள் இராணுவத்தால் விசாரிக்கப்பட்டாள். ஆனாலும் அவளின் உருவத்தைக் கொண்டு அவள் ஏனைய சிறுவர்களுடன் இணைக்கப்பட்டாள்.

இந்நபெண் முதலில் மெனிக்பாம் இராமநாதன் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டாள். புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு நிகரான அதிர்ச்சிகள் அங்கிருந்ததை தனது அனுபவத்தின் மூலம் தெளிவுபடுத்தினாள். "நானும் எனது சகோதரிகளும் இராமநாதன் முகாமில் உள்ள உறவினர்களுடன் இருந்தோம். ஆனால் பின்னர் எனது சகோதரிகளை வேறொரு முகாமுக்கு மாற்றிவிட்டார்கள். நான் விடுதலை செய்யப்படும் வரை அவர்களைக் காணவில்லை."

"முட்கம்பி வேலிகளால் சூழப்பட்டுள்ள இந்தப் பிரதேசம் பாதுகாப்புப் படைகளின் காவலின் கீழ் உள்ளது. ஒரு கூடாரம் 20 சதுர அடி அளவானது. அது இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இரு பகுதியிலும் எட்டு பேர் தங்க வைக்கப்பட்டார்கள். நாங்கள் எமது தேவைகளை பூரணமாக நிறைவேற்ற வெளியே செல்ல முடியாதவர்களாகவே இருந்தோம். எந்தளவு கடுமையான நோயாக இருந்தாலும் நோயாளர்கள் சிகிச்சை பெறுவதற்காக வெளியில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்குப் போக அனுமதி கிடைக்காது.

"முகாம் மருத்துவ நிலையத்தில் சிகிச்சை பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும். வைத்தியரைப் பார்ப்பதற்கு முதல் நாளே இலக்கம் எடுத்துக் காத்திருக்க வேண்டும். இந்தக் காலப் பகுதியில் நோயாளர்கள் முகம் கொடுத்துக் கொண்டிருந்த சூழ்நிலை மோசமடைந்து வந்தது.

"நாங்கள் வவுனியா மற்றும் மன்னார் வைத்தியசாலைகளில் நோயாளர்களை அனுமதிப்பதற்கான அனுமதியைப் பெறுவதற்கு கடுமையான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். முதலில் நாங்கள் நோயாளர்களை முகாம் வைத்திய நிலையத்துக்கு கொண்டு சென்று அங்குள்ள வைத்தியரிடம் சிபார்சு பெற்று பின்னர் பொலிசிடம் அனுமதி பெற வேண்டும். ஆகவே நோயாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட முன்னர் இறந்துவிடலாம்.

"7 வயதான எனது மைத்துனி செப்ரிசீமியா காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தார். வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்கான அனுமதியை பொலிஸ் தாமதித்ததால் அவர் மரணமடைந்தார். அவரது உடலை முகாமில் தகனம் செய்யக் கூட அனுமதி நிராகரிக்கப்பட்டது. முகாமில் இதேமாதிரி மரணங்கள் பல இடம்பெற்றதை நான் கேள்விப்பட்டுள்ளேன்."

முகாமில் தண்ணீர் மற்றும் மல கூட வசதிகளுக்கு மிகவும் மோசமான பற்றாக்குறை நிலவுவதாக அந்தப் பெண் தெரிவித்தார். ''நாங்கள் குழாய்க் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கும் மற்றும் அதேமாதிரி மலசலகூடம் செல்வதற்கும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்கு ஐந்து லீட்டர் தண்ணீர் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. இதில் குழிப்பது மற்றும் சமையல், துவைத்தல் போன்ற அத்தியாவசிய தேவைகளும் நிறைவு செய்யப்பட வேண்டும். நான் அங்கு இருந்த போது, வலயம் ஐந்தில் 10,000 பேர் இருந்தனர் (இராநாதன் முகாமின் ஒரு பிரிவு) ஆனால், அங்கு இரண்டு குழாய் கிணறுகளே இருந்தன.

"மக்களுக்கான உணவு பற்றாக்குறையாக இருந்துடன் வழங்கப்படும் உணவும் கூடுதலாக அரை அவியலாகவும் உண்ணமுடியாததாகவும் இருந்தது. ஆனால், மாற்றீடு இல்லாத காரணத்தால் தங்கியிருந்தவர்கள் தமக்கு கிடைத்த எதையும் சாப்பிடத் தள்ளப்பட்டனர். தரம் குறைந்த உணவின் காரணமாக முகாமில் பல பேர் சுகயீனமுற்றனர்."

இலங்கைப் படைகள் இளைஞர்களுக்கு அடிக்கடி தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார்கள் என்று இந்தப் பெண் கூறினார்.

"இளைஞர்கள் பொலிஸ் மற்றும் இராணுவம் உட்பட பாதுகாப்பு புலனாய்வுப் படைகளால் அடிக்கடி விசாரணை செய்யப்பட்டு வந்தனர். பெண்கள் மீதான இராணுவத்தின் தவறான அணுகுமுறைகளைப் பற்றி பெண்கள் முறைப்பாடு செய்தால் அவர்கள் வெளியில் கொண்டு செல்லப்பட்டு, கொல்லப்பட்டிருப்பதை அல்லது காணாமல் போயிருப்பதை நீங்கள் அறிய முடியும். வலயம் ஐந்தில் நான் இருந்தபோது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரனதும், சகோதரியினதும் உடல்களைக் கண்டேன். இவர்களுடைய மரணத்துக்கு இராணுவம் தான் காரணம் என்று மக்கள் கூறினார்கள்."