World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

2009 German parliamentary election: a conspiracy of silence on the implications of the economic crisis

2009 ஜேர்மனிய பாராளுமன்றத் தேர்தல்: பொருளாதார நெருக்கடியின் உட்குறிப்புக்கள் பற்றி ஒரு சதிமுறையிலான மெளனம்

By Peter Schwarz
29 August 2009

Use this version to print | Send feedback

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கூட்டாட்சி பாராளுமன்றத் தேர்தல் ஜேர்மனியில் மிக முக்கியமான வாக்குப் பதிவாக கருதப்படுகிறது. ஜேர்மனிய பாராளுமன்றத்தில் (Bundestag-TM) இடங்கள் ஒதுக்குவதை அது நிர்ணயம் செய்வது மட்டுமில்லாமல், வருங்கால அரசாங்கத்தின் அமைப்பையும் உறுதி செய்வது ஆகும்.

ஆனால், செப்டம்பர் 27ம் தேதி தேர்தலுக்கு இன்னும் ஐந்து வாரங்களுக்கும் குறைவான அவகாசம்தான் இருக்கையில், தற்போதைய பிரச்சாரத்தில் உண்மையான அரசியல் விவாதம் ஏதும் இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கதாக இருப்பது அரசியல் வர்ணனையாளர்களின் பெரும் கவனிப்பிற்கு உட்பட்டுள்ளது. அலுப்புத் தட்டும் தேர்தல் பிரச்சாரம் பற்றி செய்தி ஊடகம் குறைகூறுகிறது; அதற்கு தற்பொழுது அதிபராக இருப்பவர் அவருடைய போட்டியாளர்களை சவால் விட விரும்பவில்லை அல்லது வாக்காளர்களின் அக்கறையின்மைதான் காரணம் என்றும் புகார் கூறுகிறது.

உண்மையான காரணம் வேறு எங்கோ உள்ளது. ஜேர்மனிய பாராளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வரவிருக்கும் அரசாங்கம் சர்வதேச பொருளாதார நெருக்கடியை மக்கள் மீது திருப்ப வேண்டும் என்ற முடிவில் தங்களுக்குள்ளே ஒற்றுமையுடன் உள்ளன. ஆனால் இப்பிரச்சினை பற்றி எவரும் பேசத்தயாராக இல்லை, வெளிப்படையாக தேர்தலுக்கு பின்னர் மக்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்றும் கூறவில்லை. மாறாக சிறு பூசல்களும் வெற்று வேறுபாடுகளும்தான் (சுகாதார மந்திரி அரசாங்கக் காரை தனிப்பட்ட உபயோகத்திற்கு பயன்படுத்திய ஊழல் போன்றவை) பிரச்சாரத்தில் ஆதிக்கம் கொண்டுள்ளன.

நெருக்கடியின் உண்மையான பரப்பை மறைத்தல், அதன் மோசமான விளைவுகளை தேர்தலுக்கு பின் வரை தாமதப்படுத்துதல் என்பவற்றில் அப்பட்டமான சதிதான் உள்ளது.

Financial Times Deutschland ஆகஸ்ட் 25 அன்று சில உயர்மட்ட பெருநிறுவன நிர்வாகிகளை பற்றிக் குறிப்பிட்டதுபோல், தேர்தல் தினம் முடியும் வரை பெரும் வேலைக் குறைப்பை ஒத்திவைப்பதற்கு "தொழில்துறைக்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஒருவித இடைக்காலத் தடுப்பு", எனப்படுவது உள்ளது. தேர்தல் முடிந்தவுடனேயே, "ஜேர்மனிய தொழில்துறை மகத்தான வேலைக் குறைப்புக்களை செயல்படுத்த உள்ளது." செய்தித்தாள் முடிவுரையாக கூறுவது: "நிர்வாகிகள் கொடுக்கும் ஒப்புதல்கள் ஜேர்மனிய தொழிலாளர்களுக்கு கடுமையான குறைப்புக்கள் இனித்தான் வரவுள்ளன என்ற அச்சத்தை உறுதிப்படுத்துகின்றன."

இதேபோன்ற கருத்துக்கள்தான் BDI முன்னாள் ஊழியர் கூட்டமைப்பு தலைவர் Olaf Henkel ஆல் Handelsblatt ல் வந்த கட்டுரை ஒன்றில் கூறப்பட்டிருந்தன. பல பெரிய நிறுவனங்களின் மேற்பார்வை குழுவில் உள்ள ஹெங்கல் எழுதுகிறார்: "தேர்தல்களை தொடர்ந்து, பொருளாதார நெருக்கடியின் விளைவுகள் மட்டும் இல்லாமல், சொந்தமாக இயற்றப்பட்ட கொள்கை (அரசாங்கத்தின்) ஜேர்மனியில் வேலை இல்லாதவர்கள் எண்ணிக்கையை மிகப் பெரிய அளவில் உயர்த்தும். அரசாங்க கட்சிகள் "இதுபற்றிய உண்மையை வாக்காளர்களுக்கு கூறத் தயாராக இல்லை; அதேபோல் அடுத்து சட்டமன்றக் காலத்தில் எத்தகைய முடிவுகள் எடுக்கப்படும் என்பது பற்றியும் கூறத்தயாராக இல்லை."

தேர்தல் பிரச்சாரத்தில் சமூகப் பாதுகாப்பு செலவினக் குறைப்புக்கள் பற்றியும் பெரும் மெளனம் உள்ளது. சமீபத்தில்தான் பெரும் கூட்டணி ஜேர்மனிய அரசியலமைப்பில் கடன் பற்றி வரம்பை ஏற்படுத்தியது; அதையொட்டி வருங்கால அரசாங்கம் ஒவ்வொன்றும் நாட்டின் விரைவாக அதிகரிக்கும் வரவு-செலவு திட்ட பற்றாக்குறையை, இரக்கமற்ற முறையில் வரவு-செலவு திட்ட செலவினக் குறைப்பை மேற்கொண்டு, குறைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு அளிக்கப்பட்ட பில்லியன்கள், வரிமூலம் கிடைக்கும் வருமானங்களுக்கும் சமூக, பொதுநல காப்பீட்டுத் திட்ட செலவுகளுக்கும் இடையே உள்ள பெரும் இடைவெளி அனைத்தும் சமுதாயத்தின் நலிவுற்ற அடுக்குகளின் இழப்பில் சரிசெய்யப்பட முயற்சிகள் உள்ளன. ஆனால் இதுபற்றி தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு வார்த்தை கூட கூறப்படவில்லை. மாறாக, கல்வி, சமூக முன்னேற்றங்கள், வரிக் குறைப்புக்கள் ஆகியவை பற்றி அதிகம் செலவழிக்கப்படும் என்ற வெற்று உறுதிகள் கூறப்படுகின்றன; இந்த உறுதிமொழிகள் தேர்தல் முடிந்தவுடன் குப்பையில் தூக்கி எறியப்படும்.

ஆப்கானிஸ்தானில் நடக்கும் போர், தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து பெரிதும் மறைந்துவிட்டது. அரசாங்கம் பெருகிய முறையில் ஜேர்மனிய இராணுவத்தை, ஒரு வட்டார பெருந்தீ போன்ற ஒரு மிருகத்தனப்போரில் பிணைத்து விட்டாலும், அதைப்பற்றி பொது விவாதம் ஏதும் இல்லை. பாதுகாப்பு மந்திரி Franz Josef Jung பூசலை "போர்" என்றுகூட விவரிக்க மறுக்கிறார். போரின் உண்மை இலக்குகள் --மூலோபாய வகையில் முக்கியமான பகுதியை ஏகாதிபத்திய ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவருதல்-- மறைக்கப்பட்டு மறுக்கவும் படுகின்றன.

எதிர்க்கட்சிகள் என்று அழைத்துக் கொள்ளுபவை இப்பிரச்சினைகள் அனைத்திலும் பெரும் கூட்டணி --Christian Democratic Union (CDU), Christian Social Union (CSU), Social Democratic Party (SPD)-- அரசாங்கக் கொள்கைகளுக்கு இசைவு கொடுத்துள்ளன. பசுமைவாதிகள் ஆப்கானிஸ்தானிற்கு படைகள் அனுப்புதல், பொதுநல எதிர்ப்பு 2010 செயற்பட்டியல் இரண்டிற்கும் SPD உடன் அரசாங்கத்தில் இருக்கும்போது ஆதரவு கொடுத்தனர்; இரு கொள்கைகளுக்கும் இப்பொழுதும் ஆர்வத்துடன் வாதிடுபவர்களாக உள்ளனர். FDP எனப்படும் சுதந்திர ஜனநாயகக் கட்சி பெரும் கூட்டணி செயல்படுத்தும் சமூகத் தாக்குதல்களைவிட இன்னும் கூடுதலான தாக்குதல்கள் வேண்டும் என்று கூறுகிறது.

இடது கட்சி ஒன்றும் விதிவிலக்கு அல்ல. உத்தியோபூர்வமாக இது ஜேர்மனிய படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பப்பெற வேண்டும் என்றும் Hartz IV சட்டங்கள் அகற்றப்பட வேண்டும் என்றும் கூறுகிறது; ஆனால் இக்கோரிக்கைகளுக்கு மக்கள் ஆதரவைத் திரட்ட முற்படவில்லை. அதிபர் மேர்க்கெலை போல், இடது கட்சியின் தலைவர் ஓஸ்கார் லாபோன்டைன் லுட்விக் எர்ஹார்ட் பற்றி சாதகமாகக் குறிப்பிடுவதுடன் அவரை "சமூக, சுதந்திர சந்தைப் பொருளாதாரத்தின்" தந்தை என்று பாராட்டுகிறார். உண்மையில் எர்ஹார்ட் ஒரு வலதுசாரி CDU அரசியல்வாதி, முதலாளித்துவ முறையின் அசைவற்ற காப்பாளர். 1966ல் சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்கள் அலையென வந்ததை அடுத்து அதிபர் பதவியில் இருந்து இராஜிநாமா செய்யும் கட்டாயத்திற்கு உட்பட்டார். அக்காலத்தில் அடையப்பட்ட சமூக நலன்கள் எர்ஹார்ட்டிற்கு எதிராக தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்களின் பலாபலன்கள் ஆகும். அத்தகைய நலன்கள் போருக்குப் பிந்தைய பொருளாதார உயர் ஏற்ற காலத்தில் அடையப்பட்டவை; 1930க்குப் பின்னர் உலகப் பொருளாதாரம் ஆழ்ந்த நெருக்கடியின் மத்தியிலே அதே போன்ற நலன்களை இப்பொழுது பெற வேண்டும் என்பது இயலாததாகும்.

இப்பொழுது பாராளுமன்றத்தில் ஐந்து கட்சிகள் இருந்தாலும், அவற்றிற்கு இடையே செயற்பாட்டு வேறுபாடுகள் மிகச் சிறியவை என்பதால் ஒரு கட்சி மற்ற அனைத்துக் கட்சிகளுடன் ஒத்துழைக்க முடியும். இந்தக் கட்சியும் வங்கிகள், பெருநிறுவனங்களின் சக்தியை சவால்விடத் தயாராக இல்லை; அவைதான் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்பதுடன், இப்பொழுது ஏற்கனவே புதிய இலாபங்களையும், செல்வத்தையும் பெற்று வருகின்றன. கட்சிகள் அனைத்துமே ஒரு குறுகிய வாக்காளர் அடுக்கின் ஆதரவிற்குத்தான் போட்டியிடுகின்றன --மத்தியதர வர்க்கத்தின் செல்வம் கொழிக்கும் பிரிவுகள்-- அவற்றை இவர்கள் "முக்கியமான பிரிவுகள்" என்று கூறுகின்றனர். தேர்தலில் தொழிலாள வர்க்கம் பங்கு பெறுவதில் இருந்து பெரிதும் ஒதுக்கித்தான் வைக்கப்பட்டுள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு CDU தலைவர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் FDP தலைவர் Guido Westerwelle ஆகியோர் கறுப்பு-மஞ்சள் கூட்டணி என்று தங்கள் கட்சிகள் கூட்டணியை தேர்தலுக்கு முன் வாதிட்டனர். இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை கொடுக்காத தேர்தல் முடிவினால் இந்த ஏமாற்றத் திகைப்பிற்கு உட்பட்டது. இம்முறை மேர்க்கெல் மிகவும் அதிகமான முறையில் நிதானமாக இருந்து FDP உடன் கூட்டணி பற்றி உறுதியான நிலைப்பாடு எதையும் கொள்ளவில்லை.

இவ்வம்மையாரின் நிலைப்பாடு ஒன்றும் தேர்தல் முடிவு உறுதியற்றது என்ற உண்மையினால் அல்ல. தற்போதைய கருத்துக் கணிப்புக்களின்படி CDU-FDP ஒரு குறுகிய பெரும்பான்மையை பெறக்கூடும்; ஆனால் இத்தகைய கருத்துக் கணிப்புக்கள் பல நேரமும் நம்ப முடியாதவை (2005ல் அவற்றின் கணிப்பில் 7 சதவிகிதம் வரை தவறுகள் இருந்தன); அளவைக்கு உட்பட்ட 40 சதவிகிதத்தினர் இன்னும் உறுதியான முடிவெடுக்கவில்லை. இன்னும் முக்கியமாக கன்சர்வேட்டிவ் முகாமில் CDU-FDP கூட்டணி பெருகியுள்ள மக்கள் எதிர்ப்பு, கோபத்தை அடக்க முடியுமா என்பது பற்றி சந்தேகத்தைத்தான் கொண்டுள்ளது. அநேகமாக முற்றிலும் வெளிப்படையான வணிகச் சார்பு உடைய அரசியல்வாதிகளை கொண்டிருக்கும் அரசாங்கத்தில், தொழிலாள வர்க்கத்தை கட்டுப்படுத்துவது தொழிற்சங்கங்களுக்கு இன்னும் கடினமாக இருக்கும். கடந்த 11 ஆண்டுகளில் தொழிற்சங்கங்கள் பொதுநல செலவுக் குறைப்புக்கள் செயல்படுத்தப்படுவதில் முக்கிய பங்கை கொண்டு பரந்த எதிர்ப்பை அடக்கியுள்ளன --முதலில் சமூக ஜனநாயக ஷ்ரோடர் அரசாங்கத்தின் கீழும் சமீபத்தில் மேர்க்கெல் அரசாங்கத்தின் கீழும்.

எனவே, பல முக்கியமான கன்சர்வேடிவ் அரசியல்வாதிகள் FDP அதன் புதிய தாராளவாத அலங்காரச் சொற்களைக் குறைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தள்ளனர். மூனிச்சில் FDP உடன் கூட்டாட்சி மூலம் அரசாங்கம் நடத்தும் பவேரிய பிரதம மந்திரி Horst Seehofer (CSU), FDP தலைவர் Guido Westerwelle யிடம், "ஒரு புதிய தாராளவாத தாக்குதல் தேர்தலுக்கு பின்னர் வந்தால்", "CSU விடம் இருந்து எதிர்ப்பை" தான் எதிர்கொள்ள நேரிடும் என்று அச்சுறுத்தியுள்ளார். இதே போன்ற கருத்துக்கள்தான் சார்லாந்தின் பிரதம மந்திரி Peter Müller (CDU), இவ்வார இறுதியில் மறு தேர்தலுக்கு நிற்கும் மற்றும் அவருடைய கட்சி சக ஊழியர் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் இருந்து வரும் Jürgen Rüttgers (CDU) ஆகியோரிடம் இருந்தும் வந்துள்ளன. தன்னுடைய மாநிலத்தில் FDP கூட்டுடன் ஆளும் Rüttgers, Der Spiegel கருத்தின்படி, கூட்டாட்சி மட்டத்தில் "ஒரு CDU-FDP கூட்டணிக்கு எதிராக எதிர்ப்புப் புயல்" ஏற்படக்கூடும் என்றும் அது மே 2010 ல் வடக்கு ரைன்/வெஸ்ட்பாலியா மாநிலத் தேர்தல்களில் அவருக்கு இழப்பை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சுவதாக தெரிகிறது.

CDU ஆதாரங்களை சுட்டிக்காட்டி Der Spiegel அதிபர் மேர்க்கெல் "பெரும் கூட்டணி புதுப்பிக்கப்படுவதை அதிகம் விரும்புவார்... SPD யுடன் இன்னும் ஒத்துழைப்பு என்பது பல நலன்களை அதிபரின் கண்ணோட்டத்தில் அளிக்கும்" என்று கூறியுள்ளது. ஒரு பெரும் கூட்டணி ஜேர்மனிய பாராளுமன்றத்தின் இரு மன்றங்களிலும் உறுதியாகத் தெளிவான பெரும்பான்மையை பெறும்--Bundestag, Bundesrat இரண்டிலும். CDU-FDP கூட்டணி வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களில் மோசமான விடைகளை கண்டால் பெரும்பான்மையை பெறாது. அதைத்தவிர, SPD உடன் கூட்டணி என்பது அரசாங்கத்திற்கு தடையற்ற முறையில் தொழிற்சங்கங்களின் ஆதரவைக் கொடுத்துள்ளது--அதுவும் குறைவூதிய உடன்பாடுகளை அது செயல்படுத்தியிருக்கும்போது; மற்றும் ரயில் சாரதிகள் சங்கமான Transnet கடந்த ரயில் வேலைநிறுத்தத்தின்போது உதவியது போல், அவை வெளிப்படையாக வேலைநிறுத்தத்தை முறிக்கும் வகையில் செயல்பட்டன.

SPD உம் பெரும் கூட்டணியில் தொடர்வதை விரும்புகிறது. கருத்துக் கணிப்பில் 22 சதவிகிதம்தான் ஆதரவு என்று சரிந்தபின், கூட்டாட்சி மட்டத்தில் இடது கட்சியுடன் கூட்டணி தற்பொழுது இல்லை என்ற நிலையில், பெரும் கூட்டணி ஒன்றுதான் SPD க்கு அரசாங்கத்தில் நீடிக்க ஒரே வாய்ப்பு ஆகும்.

அதே நேரத்தில் பெரும் கூட்டணி தொடர்வது தவிர்க்க முடியாமல் CDU, SPD க்கான ஆதரவில் சரிவிற்கு வழிவகுக்கும்--ஜேர்மனிய அரசியலில் மரபார்ந்த இரு மக்கள் கட்சிகள் என அழைக்கப்படுபவற்றிற்கு. 11 ஆண்டுகள் அரசியலில் இருந்த பின் SPD உறுப்பினர் எண்ணிக்கையில் தொடர்ந்து சரிவைக் கொண்டுள்ளதுடன், போருக்குப் பிந்தைய காலத்தில் மோசமான கருத்துக் கணிப்பையும் பதிவு செய்துள்ளது. அதிபர் மேர்க்கெலுக்கு தனிப்பட்ட முறையில் உயர்ந்த ஆதரவு இருந்தபோதிலும்கூட, CDU 2005ல் அது கொண்ட மட்டமான முடிவில் முன்னேற்றம் காணமுடியவில்லை. கட்சி இப்பொழுது கிட்டத்தட்ட 36 சதவிகித ஆதரவைத்தான் கொண்டுள்ளது.

எனவே பெரும் கூட்டணிக்கு மாற்றீடுகள் என்பது பற்றி தீவிர விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. செப்டம்பர் 27 அன்று CDU-FDP க்கு தெளிவான பெரும்பான்மை கிடைக்கும் என்றால், கட்சிகளின் கூட்டணி --CSU உட்பட-- ஏற்படும் வாய்ப்பு உண்டு. ஆனால் முதல்தடவையாக ஹாம்பேர்க்கில் CDU வுடன் மாநில அளவில் கூட்டு கொண்டுள்ள பசுமை வாதிகள் CDU, CSU உடன் ஒத்துழைக்கும் தங்கள் விருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். திட்டப் பிரச்சினைகள் முன்னாள் சுற்றுச் சூழல் கட்சிக்கு பெரும் தடையாக இருக்காது என்று நிரூபணம் ஆகலாம். பசுமைவாதிகள் வணிக நலன்களுடன் தங்களுக்கு இருக்கும் நெருக்கமான உறவு பற்றி இரகசியம் ஒன்றும் கொண்டிருக்கவில்லை; ஆப்கானிஸ்தானில் ஜேர்மனிய இராணுவக் குறுக்கீட்டிற்கும் வலுவான ஆதரவைக் கொடுத்துள்ளனர்.

வருங்கால கூட்டணிகளில் இடது கட்சிக்கு முக்கிய பங்கு என்பது கவனத்தில்தான் உள்ளது. சமூக பூசல்கள் தொடர்ந்து பெருகினால், பின்னர் கட்சி தேவைப்படும். (பேர்லின் போன்ற) சில மாநிலங்கள் மற்றும் கிழக்கு ஜேர்மனியில் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளும் நகராட்சிகளிலும், அது நம்பகமான முண்டுகோலாகத்தான் முதலாளித்துவ ஒழுங்கிற்கு இருந்துள்ளது. இப்பொழுது முதல் தடவையாக, அது மேற்கு ஜேர்மனிய மாநிலத்தில் அரசாங்கம் ஒன்றில் நுழையக்கூடும்.

அத்தகைய முதல் முயற்சி கடந்த ஆண்டு கட்சிக்கு Hesse மாநிலத்தில் தோல்வியில் முடிவடைந்தது. SPD க்குள் இருக்கும் விரோதிகள் கட்சித் தலைவர் Andrea Ypsilanti இடது கட்சி மற்றும் பசுமைவாதிகளுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியை நாசப்படுத்தினார். தேர்தலுக்கு முன்பு Ypsilanti உறுதியாக இடது கட்சியுடன் ஒத்துழைப்பு இல்லை என்று கூறிய நிலைப்பாட்டை பயன்படுத்திக் கொண்டனர். ஆனால் வரும் ஞாயிறு தேர்தல்கள் நடக்க இருக்கும் சிறிய மேற்கு ஜேர்மனிய மாநிலமான சார்லாந்தில், SPD, இடது கட்சி மற்றும் பசுமைவாதிகள் ஒரு கூட்டு மாநில நிர்வாம் அமைக்கும் வாய்ப்பு, பாராளுமன்ற தேர்தல்களுக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்னரே உள்ளது.

இடது கட்சி சார் பகுதியில் குறிப்பிடத்தக்க வகையில் வலுவாக இருப்பதற்கு காரணம் அதன் முக்கிய வேட்பாளர் ஓஸ்கார் லாபோன்டைனின் பங்கு ஆகும். 19 ஆண்டுகள் SPD ஐ லாபோன்டைன் வழிநடத்தி, கூட்டாட்சி SPD யின் தலைமையை எடுத்துக் கொள்ளுவதற்கு முன் 14 ஆண்டுகள் சார் மாநிலத்தில் பிரதம மந்திரியாக இருந்தார். பின்னர் அவர் SPD யை விட்டு விலகி இடது கட்சி நிறுவ உதவினார். கருத்துக்கணிப்புக்களின்படி, CDU, FDP இணைப்பு SPD, இடது கட்சி மற்றும் பசுமைவாதிகள் கூட்டணியுடனான போட்டி கடுமையாக உள்ளது. மாநிலத்தின் SPD ஏற்கனவே தான் இடது கட்சி மற்றும் பசுமைவாதிகளுடன் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளை தொடங்க உள்ளது என்றும், இந்த மூன்று கட்சிகளும் CDU, FDP ஐ எளிதில் விஞ்சும் என்பதை தெளிவாக்கியுள்ளது. கூட்டாட்சி SPD தலைமையும் இத்தகைய கூட்டணிக்கு பச்சை விளக்கு காட்டியுள்ளது.

இடது கட்சி, SPD, பசுமைவாதிகள் ஆகியவற்றின் கூட்டணி கிழக்கு ஜேர்மனிய மாநிலமான துரின்ஜியாவில் இருக்கும் CDU விற்கு பதிலாக வரும் நல்ல வாய்ப்பு உள்ளது. அங்கு தேர்தல்கள் இந்த ஞாயிறன்று நடைபெற உள்ளன. மாநில தேர்தல்கள் மராபார்ந்த வகையில் கூட்டாட்சி தேர்தலுக்கு லிட்மஸ் பரிசோதனை போன்றவை ஆகும்; இந்த ஞாயிறு தேர்தல் செப்டம்பர் 27 தேர்தலின் முடிவை பாதிக்கக் கூடும். SPD, இடது கட்சியுடன் வரவிருக்கும் சட்டமன்ற காலத்தில் கூட்டணி என்பதை உறுதியாக ஒதுக்கியுள்ளது; ஆனால் அதற்குப் பின்னர் விருப்பங்கள் மாறக்கூடும். அடுத்த பாராளுமன்றத் தேர்தல் பொருளாதார, சமூக நிலைமை தொடர்ந்து சரிந்தால், நான்கு ஆண்டுகால இடைவெளிக்கு முன்னரே நடக்கக்கூடும்

தன்னுடைய பங்கிற்கு இடது கட்சி SPD யால் அரசாங்கப் பங்காளி என்ற அங்கீகாரத்தை பெறுவதற்கு எதையும் செய்யத் தயாராக உள்ளது. சார்லாந்தில் ஏற்கனவே லாபோன்டைன் SPD மற்றும் பசுமைக் கட்சிக்கு ஏற்கும் விததிதல் ஒரு அரசாங்க குழுப் பட்டியலை தயாரித்துவிட்டார். விவாதங்களில் பொருளாதார மந்திரி என ஆதரவளிப்பவர் பல்கலைக்கழக பேராசிரியர் Heinz Bierbaum, முன்னாள் பசுமைக் கட்சி Barbara Spaniol கல்வி மந்திரி, நீண்டகாலம் SPD பாராளுமன்ற பிரிவில் உழைத்துள்ள Volker Schneider தொழிற்துறை மந்திரி என பெயர்கள் குறிக்கப்படுகின்றன.

துரிஞ்சியாவில், SPD இடது கட்சியை விடக் கணிசமாக வலுவற்ற நிலையில் இருக்கும் இடத்தில், இடது கட்சியின் முக்கிய வேட்பாளர் Bodo Ramdelow தான் SPD ஐ பிரதம மந்திரி பதவியில் ஒருவரை நியமிக்க அனுமதிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இத்தகைய நடவடிக்கை முன்னோடித்தன்மை அற்றது. பொதுவாக அதிக தேர்தல் ஆதரவு உடைய கட்சிதான் கூட்டணி கட்சிகளின் அரசாங்கத்தில் தலைவர் பதவியை எடுத்துக் கொள்ளும்.

அரசாங்கத்திற்குள் வந்தபின், இடது கட்சி சார், துரிஞ்சியா அல்லது கூட்டாட்சி மட்டத்தில் பேர்லினில் அவர்கள் செய்தது போல்தான் செயல்படும். ஜேர்மனிய தலைநகரத்தில் இடது கட்சி சிறிதும் தயக்கமின்றி SPD அறிமுகப்படுத்திய அனைத்து செலவினக் குறைப்புக்களுக்கும் ஆதரவு கொடுத்த இரக்கமற்ற முறையில் கடுமையான பொதுநல விரோத Hartz சட்டங்களையும் செயல்படுத்தியது. கட்சியின் மிக முக்கியமான பணி இப்பொழுது SPD ஐ வலுப்படுத்துவதாகும்; அதுவோ அதன் வலதுசாரிக் கொள்கைகளினால் மக்களிடைய விரைவாக ஆதரவை இழந்து கொண்டிருக்கிறது.

செப்டம்பர் 27 தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும், ஒன்று மட்டும் உறுதி. வரவிருக்கும் அரசாங்கம் --அதன் வடிவமைப்பு எப்படி இருந்தாலும்-- நெருக்கடியின் சுமையை மக்கள் மீது சுமத்திவிடும். தன்னைக் காத்துக் கொள்ளவும், அத்தகைய பேரழிவைத் தடுக்கவும் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புதிய கட்சி தேவைப்படுகிறது. அத்தகைய கட்சியை கட்டியமைப்பதுதான் சோசலிச சமத்துவக் கட்சி (Partei fur Soziale Gleichheit, PSG) இன் நோக்கமாகும்; அதையொட்டித்தான் அது தன்னுடைய வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தி வைத்துள்ளது.