World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

A socialist program for Sri Lankan plantation workers

இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு சோசலிச வேலைத் திட்டம் 

By the Socialist Equality Party (Sri Lanka)
9 September 2009 

Use this version to print | Send feedback

சோசலிச சமத்துவக் கட்சி, தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துடனும் முதலாளிமாருடனும் சேர்ந்து ஒரு வறிய மட்டத்திலான சம்பள உடன்படிக்கையொன்றை திணிக்கத் தயாராகின்றன என பெருந்தோட்டத் தொழிலாளர்களை எச்சரிக்கின்றது. தொழிற்சங்கங்களின் சதியை தொழிலாளர்கள் நிராகரிப்பதோடு சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் தமது சம்பளம் மற்றும் நிலைமைகளை பாதுகாக்க சுயாதீனமாக அணிதிரள வேண்டும் என நாம் தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம். 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், லங்கா தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி ஆகிய பேச்சுவார்த்தையில் ஈடுபடும் சங்கங்கள் தமது மட்டுப்படுத்தப்பட்ட ஆரம்ப கோரிக்கையில் இருந்து ஏற்கனவே இறங்கிவந்துள்ளன. இந்த பேச்சுவார்த்தைகள் தாக்கத்தை ஏற்படுத்தும். 2007 முற்பகுதியில் கடைசியாக அவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்ட பின்னர் வாழ்க்கைச் செலவு 55 வீதத்தால் உயர்ந்ததால் தேயிலை, இறப்பர் மற்றும் தென்னை பெருந்தோட்டங்களில் வேலை செய்யும்  500,000 தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் சீரழிந்து போயுள்ளது. 

மார்ச் மாதம் முன்னைய கூட்டு ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னர், ஆரம்பத்தில் தொழிற் சங்கங்கள் 750 ரூபா (6.54 அமெரிக்க டொலர்) நாள் சம்பளத்தை கோரிய போதிலும், உடனடியாக 500 ரூபாவுக்கு இறங்கி வந்தன. செப்டெம்பர் 7 அன்று நடந்த ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தை, இலங்கை முதலாளிமார் சம்மேளனம் தொழிற்சங்கங்களின் கோரிக்கையை முற்றாக நிராகரித்ததை அடுத்து தகர்ந்து போனது. முதலாளிமார் இந்த ஆண்டு ஒரு ரொட்டியை கூட வாங்க முடியாத வெறும் 30 ரூபாவும் அடுத்த ஆண்டு 40 ரூபாவும் வழங்க உடன்பட்டுள்ளனர். 

செப்டெம்பர் 8 அன்று நடந்த நிருபர்கள் மாநாட்டில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) தலைவர் ஆறுமுகம் தொண்டமான், 400 ரூபா வரை மேலும் இறங்கிவருவதை சுட்டிக் காட்டினார். மாத சம்பளமாக [25 வேலை நாட்கள்] தொழிலாளர்களுக்கு 12,500 ரூபா வழங்கப்பட வேண்டுமென்றாலும், குறைந்தபட்சம் அவர்களுக்கு 10,000 ரூபாயாவது கிடைக்க வேண்டும்," என அவர் தெரிவித்தார். இப்போது வெறும் 200 ரூபா அடிப்படை சம்பளத்துடன் சேர்த்து 70 ரூபா வருகைக்கான கொடுப்பனவு மற்றும் மேலும் 20 ரூபா கொடுப்பனவும் கிடைக்கின்றன. 

தொழிற்சங்கங்கள் தமது நடவடிக்கையை "ஒத்துழையாமை பிரச்சாரத்துக்கு" மட்டுப்படுத்தியுள்ளன. இது செப்டெம்பர் 2 அன்று தொடங்கியது. உற்பத்தி செய்த தேயிலையை கொழும்புக்கு ஏற்றுமதி செய்வதற்கும் தோட்ட முகமையாளர்களின் வீடுகளில் வேலை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இ.தொ.கா., இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் பொருந்தோட்ட தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியும், எந்தவொரு வேலை நிறுத்தமும் கம்பனிகளோடு மட்டுமன்றி அரசாங்கத்துடனும் மோதிக்கொள்வதாக அமையும் என்பதை அறிந்துகொண்டு வேலை நிறுத்தம் செய்வதை ஒதுக்கித் தள்ளியுள்ளன. ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் ஜனாதிபதி இராஜபக்ஷ "தேசத்தை கட்டியெழுப்பும்" "பொருளாதார யுத்தம்" ஒன்றை பிரகடனம் செய்துள்ளதோடு இராணுவத்தினர் போல் தொழிலாளர்களும் அர்ப்பணிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

அரசாங்கத்துடன் போராடுவதற்கு தொழிற்சங்கங்கள் மறுப்பதற்கான காரணம் அவற்றின் அரசியல் பிணைப்பில் இருந்து தோன்றுகிறது. ஒரு அரசியல் கட்சியாகவும் செயற்படும் இ.தொ.கா., இராஜபக்ஷவின் ஆளும் கூட்டணியின் பங்காளியாகும். தொண்டமான், அமைச்சரவை அமைச்சராக இருக்கும் அதே வேளை, ஏனைய இ.தொ.கா. அதிகாரத்துவவாதிகள் பிரதி அமைச்சர்களாகவும் மாகாண சபை அமைச்சர்களாகவும் பதவி வகிக்கின்றனர். 

பெருந்தோட்ட தொழிற்சங் கூட்டுக் கமிட்டியின் இரு சங்கங்கள், அரசாங்கத்தின் பங்காளிகளாக உள்ள லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளன. லங்கா தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தின் மீது தாக்குதல் தொடுப்பதில் நீண்ட சாதனை படைத்த வலது சாரி ஐக்கிய தேசியக் கட்சியின் சங்கமாகும். 

சம்பளப் பேச்சுவார்த்தையில் ஈடுபடாத சங்கங்கள் வேறுபட்டவை அல்ல. மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) செப்டெம்பர் 6 நடத்திய கூட்டமொன்றில் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையையும் தடுக்குமாறு அதனது உள்ளூர் தலைவர்களிடம் கேட்டுக்கொண்டது. ம.ம.மு. தலைவரும் அமைச்சரவை அமைச்சருமான பெ. சந்திரசேகரன், "நியாயமான" சம்பள உயர்வை உறுதிப்படுத்தவும் மற்றும் தொழிலாளர்களின் எந்தவொரு நடவடிக்கையையும் "தவிர்க்கவும்" தலையீடு செய்யுமாறு கோரி திங்கட் கிழமை ஜனாதிபதி இராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். 

இராஜபக்ஷவின் தலையீட்டுக்கு அழைப்பு விடுப்பதானது, தோட்டத் தொழிலாளர்களின் எந்தவொரு போராட்டத்தையும் தனிமைப்படுத்தவும் தகர்க்கவும் தொழிற்சங்கங்கள் தமது பலத்தைக் கொண்டு சகலதையும் செய்யவுள்ளன என்ற தெளிவான எச்சரிக்கையை விடுக்கின்றது. கடந்த நான்கு ஆண்டுகளாக தொழிலாளர்களுக்கு ஆதரவாக அன்றி, அவர்களது கோரிக்கைகளை நசுக்குவதற்கே ஜனாதிபதி இராஜப்கஷ மீண்டும் மீண்டும் தலையிட்டுள்ளார். 2006 பிற்பகுதியில், அவர் வேலை நிறுத்தம் செய்த தோட்டத் தொழிலாளர்களை, தனது அராசங்கத்தின் இனவாத யுத்தத்தை கீழறுப்பதாகவும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவுவதாகவும் குற்றஞ்சாட்டினார். சகல தொழிற்சங்கங்களது ஆதரவுடன் அவர் ஒரு பெயரளவிலான சம்பள உயர்வின் அடிப்படையில் வேலை நிறுத்தத்துக்கு முடிவு கட்டினார். 

செப்டெம்பர் 8 அன்று நடத்திய நிருபர்கள் மாநாட்டில், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) சார்ந்த அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமும் (அ.இ.தோ.தொ.ச.) இராஜபக்ஷவை தலையீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தது. தொழிற்சங்கத்தின் தலைவர் கே.டி. லால் காந்த, ஜனாதிபதி தலையீடு செய்யத் தவறினால் தொழிலாளர்களின் போராட்டம் "அரசாங்கத்துக்கு அரசியல் நெருக்கடியை" ஏற்படுத்திவிடும் என எச்சரித்தார். 

அ.இ.தோ.தொ.ச. ஏனைய தொழிற்சங்கங்களை விட போராளிக் குணம் மிக்கதாக காட்டிக்கொள்கிறது. எவ்வாறெனினும், ஜே.வி.பி. இராஜபக்ஷவின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தின் கடும் ஆதரவாளராக இருந்ததோடு அரசாங்கத்தின் பிரமாண்டமான யுத்த வரவு செலவுத் திட்டத்துக்கும் வாக்களித்தது. அதன் தொழிற்சங்கங்கள் பின்வாங்கியதோடு அரசாங்கத்துடன் மோதுவதற்கு மாறாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தமது பிரச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவந்தன. யுத்தத்தின் முடிவு ஜே.வி.பி. யின் நிலைப்பாட்டை மாற்றப் போவதில்லை. ஜே.வி.பி. பொருளாதாரத்துக்கு புத்துயிரளிக்க தேசத்தை கட்டியெழுப்பும் தனது சொந்த திட்டத்தை பிரேரித்துள்ளதோடு அது தவிர்க்க முடியாமல் உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமையை அர்ப்பணிப்பதையே அர்த்தப்படுத்தும். 

போட்டி தேயிலை உற்பத்தி நாடுகளில் உள்ள தொழிலாளர்களின் குறைந்த சம்பளத்தை மேற்கோள் காட்டியுள்ள கொழும்பு தேயிலை வர்த்தகர்கள் சங்கம் எந்தவொரு பெரும் சம்பள அதிகரிப்பையும் நிராகரித்துள்ளன. தோட்ட கம்பனிகளும் தேயிலை மற்றும் இறப்பர் விலை வீழ்ச்சியையும் ஏற்றுமதி சுருங்கி வருவதையும் சுட்டிக் காட்டியுள்ளன. எந்தவொரு சம்பள அதிகரிப்பும் உற்பத்தியை அதிகரிப்பதுடன் இணைக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றன. 

கடந்த ஆண்டு வெளியான ஒரு அறிக்கையில், "தொழிற்சங்க நடவடிக்கையால் தோட்டங்களில் ஏற்படுத்தப்படும் எந்தவொரு தொந்தரவும், நாட்டின் பொருளாதாரத்துக்கும் பாதுகாப்புக்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்" என முதலாளிமார் சம்மேளனம் எச்சரித்துள்ளது. இந்த கருத்துக்கள் அரசாங்கத்தின் ஆதரவுக்கும் மற்றும் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையையும் நசுக்குவதற்காக பாதுகாப்பு இயந்திரத்தை பயன்படுத்துவதற்கும் விடுக்கும் தெளிவான வேண்டுகோளாகும். தோட்டப்புறங்களில் உள்ள "நிலைமைகள்" தொடர்பாக ஏற்கனவே முதலாளிமார் சம்மேளனம் பாதுகாப்புச் செயலாளருக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் அறிவித்துள்ளன. 

தொழிற்சங்கங்கள் மீதான ஆழமான அதிருப்தியின் காரணமாக, தொழிலாளர்கள் பிரச்சினையை தமது கையில் எடுத்துக்கொண்டதோடு "ஒத்துழையாமை" பிரச்சாரத்துக்கும் அப்பால் செல்லத் தொடங்கியுள்ளனர். பல தோட்டங்களில் மெதுவாக வேலைசெய்யும் நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டு, கொழுந்து பறிக்கும் அளவு குறைக்கப்பட்டுள்ளதோடு தொழிற்சாலையில் தேயிலை உற்பத்தியும் குறைக்கப்பட்டுள்ளது. சில தோட்டங்களில் தொழிலாளர்கள் கருப்புக் கொடிகளை ஏற்றியுள்ளதோடு மறியல் போராட்டங்களையும் நடத்தியுள்ளனர். 

எவ்வாறெனினும், தாம் மேலும் முன் செல்ல வேண்டும் என்பதை தொழிலாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சிறந்த சம்பளம் மற்றும் நிலைமைகளுக்கான எந்தவொரு போராட்டமும் துரிமாக முதலாளிமாருக்கும் இராஜபக்ஷ அரசாங்கத்துக்கும் எதிரான அரசியல் போராட்டமாக உருவெடுக்கும். இராஜபக்ஷ அரசாங்கம் ஏற்கனவே தொழிலாளர்களை அச்சுறுத்தவும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு முடிவுகட்டவும் பொலிஸையும் இராணுவத்தையும் பயன்படுத்திவந்துள்ளது. முன்னர் செய்தது போலவே, தொழிற்சங்கங்கள் தோட்டத் தொழிலாளர்களின் எந்தவொரு போராட்டத்தையும் கவிழ்க்க அரசாங்கத்துடனும் பெரும் வர்த்தகர்களுடனும் தவிர்க்க முடியாமல் அணிதிரண்டுகொள்ளும்.

தொழிலாளர்கள் சங்கங்களில் இருந்து பிரிந்து சுயாதீனமாக அணிதிரள்வதோடு தமது சொந்த நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்பிக்கொள்ள வேண்டும் என சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது. ஒழுங்கான சம்பளம் மற்றும் நிலைமைகளை உறுதிப்படுத்திக்கொள்ள ஒரு தொகை கோரிக்கைகளை தீர்மானிக்கவும் மற்றும் அதற்காக போராட ஒரு பரந்த பிரச்சாரத்தை முன்னெடுக்கவும் நடவடிக்கை குழுக்களின் பிரதிநிதிகளின் கூட்டமொன்று கூட்டப்பட வேண்டும். 

ஆயினும், போராளிக்குணம் மிக்க நடவடிக்கை மட்டும் போதாது. முதலாளிமார், அரசாங்கம் மற்றும் அரச இயந்திரத்துக்கும் எதிராக போராடுவதில் தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு அரசியல் வேலைத் திட்டமும் முன்நோக்கும் தேவை. சம்பள உயர்வு கொடுக்க பணம் இல்லை என முதலாளிமார் சொன்னால், கம்பனியின் புத்தகங்களை திறக்குமாறு நாம் கூறுகிறோம். முதலாளிமார் எவ்வாறு தொழிலாளர்களிடம் இருந்து இலாபங்களை கறந்துள்ளார்கள் என நாம் பார்ப்போம். 

பூகோள முதலாளித்துவத்தின் தற்போதைய நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கம் பொறுப்பல்ல. தற்போதைய பொருளாதார முறையால் உழைக்கும் மக்களுக்கு ஒழுக்கமான வாழ்க்கைத் தரத்தை வழங்க முடியாதெனில், சமுதாயத்தை ஒரு சில செல்வந்தர்களுக்காக அல்லாமல் உழைக்கும் மக்களின் நலன்களுக்காக முழுமையாக மறு சீரமைக்கப்படல் வேண்டும். அதற்காக, முதலாளித்துவத்தின் சகல கன்னைகளில் இருந்தும் தொழிலாள வர்க்கம் அரசியல் ரீதியில் சுயாதீனமடைந்து சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்காக போராடுவது அவசியமாகும். 

தொழிலாளர்களால் தனிமையில் முன்செல்ல முடியாது. அவர்கள் இதே போன்று தொழில், சம்பளம் மற்றும் நிலைமகள் மீதான தாக்குதல்களை எதிர்கொள்ளும் இலங்கையிலும் மற்றும் அனைத்துலகிலும் உள்ள ஏனைய தொழிலாள பகுதியினரின் பக்கம் திரும்ப வேண்டும். இலங்கையில் உள்ள அனைத்துப் பகுதி தொழிலாளர்களும் அண்மைய ஆண்டுகளில் உயர்ந்து செல்லும் பண வீக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மின்சாரம் மற்றும் எண்ணெய் துறை சார்ந்த தொழிலாளர்கள் ஏற்கனவே சம்பள உயர்வுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள். 

சகல வடிவிலுமான தேசியவாதம் மற்றும் இனவாதத்தை நிராகரிப்பது எந்தவொரு ஐக்கியப்பட்ட போராட்டத்துக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக, கொழும்பில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள், தொழிலாள வர்க்கத்தை இனவாத வழியில் பிளவுபடுத்த தமிழர் விரோத பேரினவாதத்தை பயன்படுத்தி வந்துள்ளன. தசாப்த கால தமிழர்-விரோத பாகுபாடுகள் நீண்டகால உள்நாட்டு யுத்தத்துக்கு வழிவகுத்ததோடு அது தீவு பூராவும் உள்ள உழைக்கும் மக்கள் மீது அழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த இனவாத பிளவுகளில் இருந்து வெளியேறுவதற்கு, தொழிலாள வர்க்கம் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு உடனடியாக முடிவுகட்ட கோருவதோடு தமிழ் கைதிகளை விடுதலை செய்யவும் கோர வேண்டும். இத்தகைய கோரிக்கைகள் தெற்காசியாவிலும் மற்றும் அனைத்துலகிலும் சோசலிசத்துக்கான பரந்த போராட்டத்தின் ஒரு பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்கான போராட்டத்தில் இருந்து பிரிக்க முடியாதவையாகும். தோட்டத் தொழிலாளர்கள் இதே போன்ற தாங்கமுடியாத நிலைமைகளின் கீழ் உழைத்துக்கொண்டிருக்கும் பங்களாதேஷ், வியட்னாம், கென்யா மற்றும் இந்தியா போன்ற உலகம் பூராவும் உள்ள பெருந்தோட்டங்களில் உழைக்கும் தமது வர்க்க சகோதர சகோதரிகளின் பக்கம் திரும்ப வேண்டும். 

உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் எமது சகோதரக் கட்சிகளுடன் சேர்ந்து சோசலிச சமத்துவக் கட்சி அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டம் இதுவே. நாம் எமது முன்நோக்கை படிக்குமாறும் மற்றும் இந்த அரசியல் போராட்டத்துக்கு தலைமை வகிக்கும் வெகுஜனக் கட்சியாக சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்ப அதில் இணைந்துகொள்ளுமாறும் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.&ஸீதீsஜீ;