World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan unions collaborate in police witch-hunt of plantation workers

இலங்கை தொழிற்சங்கங்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மீதான பொலிஸ் வேட்டைக்கு ஒத்துழைக்கின்றன

By M. Vasanthan
24 September 2009

Use this version to print | Send feedback

செவ்வாய் கிழமை பொகவந்தலாவையை சேர்ந்த 18 தோட்டத் தொழிலாளர்களை ஹட்டன் நீதிமன்றத்தின் முன் கொண்டுவருவதற்காக தொழிற்சங்கத் தலைவர்கள் பொலிசாருக்கு ஒத்துழைத்தனர். கடந்த வாரம் கைச்சாத்திடப்பட்ட சம்பள உடன்படிக்கைக்கு எதிராக தொழிலாளர் ஆர்ப்பாட்டம் நடத்திய போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) அலுவலகத்தின் மீதும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக இந்த தொழிலாளர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பொலிசார் இன்னமும் தொழிலாளர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை வகுத்திராத போதிலும், இந்தக் குற்றச்சாட்டுக்களின் தன்மையை பொறுத்தளவில், தண்டனைகள் கடுமையாக இருக்கும். 18 தொழிலாளர்களில் 9 பேர் 1,500 ரூபா (13 அமெரிக்க டொலர்) ரொக்கப் பிணையிலும் ஏனைய 9 பேரும் 4,000 ரொக்கப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் 100,000 சரீர பிணை வைக்குமாறும் மற்றும் அக்டோபர் 27 நீதிமன்றத்திற்கு சமூகமளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இதே குற்றச்சாட்டுக்களுக்காக இந்த வார முடிவில் இதே நீதிமன்றுக்கு மேலும் 16 தொழிலாளர்களை கொண்டுவர தொழிற்சங்க அலுவலர்கள் உடன்பட்டனர். இது, மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு வறிய மட்டத்திலான சம்பளத்தை திணிப்பதற்காக தொழிற்சங்கங்களுக்கும் கம்பனிகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை எதிர்த்த தொழிலாளர்களை அடக்கவும் மெளனமாக்கவும் தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன் பொலிசாரால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்குமுறையாகும்.


பொகவந்தலாவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் தோட்டத் தொழிலாளர்கள்

உலக சோசலிச வலைத் தள (WSWS) நிருபர்களுடன் பேசிய தொழிலாளர்கள், அரசாங்க அமைச்சரான ஆறுமுகம் தொண்டமானின் தலைமையிலான இ.தொ.கா., தொழிலாளர்களின் பெயர் பட்டியலை தயாரித்து அதை பொலிசுக்கு அனுப்பியதாக குற்றஞ்சாட்டினர். நாள் சம்பளம் 405 ரூபாவை (3.50 அமெரிக்க டொலர்) ஏற்றுக்கொண்டு இ.தொ.கா., இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU) மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியும் முதலாளிமாருடன் கைச்சாத்திட்டுக்கொண்ட கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்களில் இவர்களும் அடங்குவர்.

நீதிமன்றத்துக்கு சமூகமளிக்கும் தொழிலாளர்களில், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் (ஜ.தொ.கா.), இலங்கை தொழிலாளர் முன்னணி (இ.தொ.மு.) மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் (தொ.தே.ச.) உறுப்பினர்களும் அடங்குவர். அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் (அ.இ.தோ.தொ.ச.) உட்பட இத்தகைய தொழிற்சங்கங்கள், சம்பள உடன்படிக்கையை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டாலும், அவை தொழிலாளர் மத்தியிலான பரந்த சீற்றத்தை தணிக்கவும் மற்றும் உடன்படிக்கையை அமுல்படுத்த வழிவகுக்கவுமே செயற்படுகின்றன.

செப்டெம்பர் 15, தொழிற்சங்கங்களின் வியாபாரத்துக்கு எதிராக தோட்டத் தொழிலாளர்கள் பொகவந்தலாவையில் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை இ.தொ.கா. ஏற்பாடு செய்த குண்டர்கள் தாக்கினர். இந்த ஆத்திரமூட்டலை சுரண்டிக்கொண்ட பொலிசார், கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகையை வீசினர். இந்த சம்பவத்தின் பின்னர், இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்த ஜ.தொ.கா., தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் இலங்கை தொழிலாளர் முன்னணியும், முன்னரே ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தை இரத்துச் செய்ததோடு, இ.தொ.கா. குண்டர்கள் மீண்டும் தாக்குதல் தொடுக்கலாம் என பொலிசார் எச்சரிக்கை விடுத்ததாக காரணம் கூறினர்.

அடுத்த நாள் பொலிசாரின் நடவடிக்கையை எதிர்த்து கொட்டியாகலை, பிரெட்வெல், பொகவான, டில்லரி, திரேசியா, லின்ஸ்டட் மற்றும் பொகவந்தலாவை தோட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கினர். இ.தொ.கா. தலைவர் தொண்டமான் பிரதேசத்துக்கு விஜயம் செய்வதை கேள்விப்பட்டு சுமார் 5,000 தொழிலாளர்கள் எதிர்ப்பை காட்டுவதற்காக பொகவந்தலாவை நகருக்கு ஊர்வலமாக சென்றனர். அவர்களை தடுத்த பொலிசார் தொண்டமானை அங்கிருந்து வெளியேற அனுமதித்தனர். தொழிலாளர்களை கலைப்பதற்காக பொலிசார் கண்ணீர் புகை வீசியதோடு எச்சரிக்கை வேட்டுக்களையும் தீர்த்தனர்.

கடந்த வாரக் கடைசியில், செப்டெம்பர் 16 ஆர்ப்பாட்டத்தின் போது இ.தொ.கா. அலுவலகத்தின் மீதும் பொலிசார் மீதும் தாக்குதல் நடத்திய 34 தொழிலாளர்களின் பட்டியலை தொலை நகல் மூலம் அனுப்பியிருப்பதாக ஜ.தொ.கா., இ.தொ.மு. மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர்களுக்கு பொலிசார் அறிவித்தனர். இந்த பட்டியலில் உள்ள தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் இந்த சங்களில் ஒன்றில் உறுப்பினர்களாவர். இவர்களில் மூவர் இ.தொ.கா. உறுப்பினர்கள். பொலிசாருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், தொழிலாளர்களை நீதிமன்றத்துக்கு அழைத்து வர தொழிற்சங்கத் தலைவர்கள் உடன்பட்டனர்.

தமது நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்காக, விசாரணை செய்யாமல் காலவரையறையின்றி தடுத்து வைக்க அனுமதிக்கும் கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவர்களை கைதுசெய்ய இ.தொ.கா. விரும்புகிறது என சங்க அலுவலர்கள் தொழிலாளர்களுக்குத் தெரிவித்தனர். பொலிசாரின் வேண்டுகோளுக்கு இணங்க, இ.தொ.கா. வின் நடவடிக்கையை முந்திக்கொண்டதாக அவர்கள் கூறிக்கொண்டனர்.

இது வெறுமனே ஒரு மூடிமறைப்பாகும். தோட்டப் புறங்களில் தொழிலாளர்களை கைது செய்வது ஆத்திரம் நிறைந்த எதிர்ப்பை கிளறிவிடும் என்பது பொலிசாருக்குத் தெரியும், எனவே அவர்கள் இந்த இழிந்த வேலையை செய்யுமாறு தொழிற்சங்கங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். குற்றஞ்சாட்டப் பட்ட தொழிலாளர்களை நீதிமன்றத்துக்கு அழைத்து வருவதன் மூலம், தாம் தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான தொழிற்துறை பொலிஸ்காரன் என்ற வகையில் தமது பாத்திரத்தை இந்தத் தொழிற்சங்கங்கள் மிகவும் துல்லியமான முறையில் அம்பலப்படுத்தியுள்ளன.

செவ்வாய் கிழமை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட தொழிலாளர்களில் கொட்டியாகலை தோட்ட ஜ.தொ.கா. பிராந்தியத் தலைவர் அன்டனி கிரிஸ்டென்டரும் அடங்குவார். செப்டெம்பர் 16 பொலிசாரின் நடவடிக்கைகள் மற்றும் சம்பள ஒப்பந்தம் பற்றி பேசிய அவர், WSWS நிருபரிடம் தெரிவித்ததாவது:

"இ.தொ.கா. தலைவர்கள் எங்களைத் தாக்குதவற்காக பொலிசை அனுப்பினார்கள். அரசாங்கமும் எங்களுக்கு எதிராக தலையிட்டுள்ளது. தொழிற்சங்கங்கள் பிரயோசனம் இல்லாதவை என தொழிலாளர்கள் கலந்துரையாடிக்கொண்டிருக்கிறார்கள். 500 ரூபா கோரிக்கை இரண்டு ஆண்டுகளை விட பழையது. இந்தக் கோரிக்கை 2006ல் முன்வைக்கப்பட்டதோடு, அவர்கள் அந்தக் கோரிக்கையையும் கைவிட்டு 405 ரூபா நாள் சம்பளத்துக்கு உடன்பட்டுள்ளனர்.

"இந்த அற்ப சம்பள உயர்வு அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை சமாளிக்க போதுமானதல்ல. தொழிலாளர்கள் இந்த இந்த உடன்படிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த போது, அரசாங்கம் எங்களைத் தாக்கவும் தொழிலாளர்களுக்கு தண்டனை வழங்கவும் பொலிஸை அனுப்புவதன் மூலம் எங்களுக்கு எதிரான பயங்கர நடவடிக்கையை கட்டவிழ்த்து விட்டுள்ளது."

சம்பள உடன்படிக்கையை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்பவை உட்பட சகல தொழிற்சங்கங்களும், அரசாங்கத்தினதும் பெரும் வர்த்தகர்களதும் உபகரணங்களாக செயற்படுகின்றன. ஜ.தொ.கா. மற்றும் இன்னுமொரு அமைச்சரவை அமைச்சரான பெ. சந்திரசேகரனின் தலைமையிலான மலையக மக்கள் முன்னணியும் (ம.ம.மு.) 2006ல் செய்தது போல் இம்முறையும் ஜனாதிபதியை தலையிடுமாறு கோருகின்றனர். 2006ல் இந்தத் தொழிற்சங்கங்கள், கடைசி சம்பள வியாபார உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டு வேலை நிறுத்தத்துக்கு முடிவுகட்டுமாறு ஜனாதிபதி கோரிய போது அதை ஏற்றுக்கொண்டு செயற்பட்டன.

சிங்கள அதி தீவிரவாத மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) கட்டுப்பாட்டிலான அ.இ.தோ.தொ.ச. அதனது எதிரிகளைவிட மிகவும் போராளிக் குணம் கொண்டதாக காட்டிக்கொள்கிறது. ஆயினும், கடந்த வாரம், அ.இ.தோ.தொ.ச. தலைவர் ராமலிங்கம் சந்திரசேகர், சம்பள ஒப்பந்தத்தை நிராகரித்துள்ள ஏனைய தொழிற்சங்கங்களுடன் சேர்ந்தே எந்தவொரு எதிர்கால நடவடிக்கை பற்றியும் தனது சங்கம் முடிவெடுக்கும் என பிரகடனம் செய்தார்.

பொகவந்தலாவை அடக்குமுறை, தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டுமன்றி முழு தொழிலாள வர்க்கத்துக்கும் ஒரு எச்சரிக்கையாகும். ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்துவதன் பேரில், இராஜபக்ஷ அரசாங்கம் "பொருளாதார யுத்தம்" ஒன்றை அறிவித்துள்ளது. தமது வாழ்க்கை நிலைமைகள், தொழில் மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க தொழிலாளர்கள் முன்வருகின்ற நிலையில், இந்த அரசாங்கம், வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்தின் போது கட்டியெழுப்பிய ஒடுக்குமுறை அரச இயந்திரத்தை உழைக்கும் மக்களுக்கு எதிராக பயன்படுத்தும்.

தொழிற்சங்கங்களில் இருந்து பிரிந்து, சோசலிச முன்நோக்கின் அடிப்படையில் தமது உரிமைகளை காப்பதற்காக பெருந்தோட்டங்களிலும் மற்றும் சகல வேலைத் தளங்களிலும் தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை ஸ்தாபிப்பது அவசியம் என தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் முழுவதிலும் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) விளக்கி வந்துள்ளது. இந்த விதத்தில் நடவடிக்கை குழுவொன்றை ஸ்தாபிக்க கடந்த ஞாயிற்றுக் கிழமை அக்கரபத்தனையில் பெல்மோரல் தோட்டத் தொழிலாளர்கள் எடுத்துள்ள ஆரம்பிப்பு ஒரு குறிப்பிடத்தக்க முன்நகர்வாகும்.