World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Obama follows Bush's modus operandi on Iran

ஈரானில் புஷ் செயல்பட்ட வழிமுறையை ஒபாமா பின்பற்றுகிறார்

Peter Symonds
28 September 2009

Use this version to print | Send feedback

புஷ் நிர்வாகம் ஈராக்கிற்கு எதிரான போர்த் தயாரிப்பிற்கு செய்த முன்னோடி நிகழ்வுகளை உறையவைக்கும் முறையில் நினைவுபடுத்துவது போல், உயர்மட்ட வெள்ளை மாளிகை அதிகாரிகள் நேற்று ஈரானுக்கு எதிரான பிரச்சாரத் தாக்குதலை தீவிரப்படுத்தி, தெஹ்ரான் அதன் புதிதாக அறியப்பட்டுள்ள கோம் நகரத்திற்கு அருகேயுள்ள யுரேனிய செறிவூட்டல் ஆலை இன்னும் மற்ற அணுசக்தி நிலையங்கள், அவற்றிற்கு பொறுப்பானவர்களை தடையற்ற முறையில் அணுக அனுமதிக்காவிட்டால் கடுமையான பொருளாதார தடைகள் சுமத்தப்படும் என்று அச்சுறுத்தியுள்ளனர்.

தனித்தனி ஞாயிறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக பேட்டி காணப்பட்டபோது, பாதுகாப்பு மந்திரி ரொபேர்ட் கேட்ஸும், வெளிவிவகார அமைச்சர் ஹில்லாரி கிளின்டனும் கோம் வெளிப்பாடுகளை பற்றி மிக கொடூரமான வகையில் சித்தரித்தனர். இந்த "கள்ளத்தனமான அணுசக்தி நிலையம்" அமைதியான அணுசக்தி திட்டங்களுக்கு என்றால், "அவற்றை இவ்வளவு ஆழமாக நிலத்தடியில் அமைக்க வேண்டிய தேவையில்லை, அதைப்பற்றி ஏமாற்றுவதற்கு காரணம் இல்லை, நீண்ட காலமாக காக்கப்பட்டுவரும் இரகசியம் என்று அதை வைக்க வேண்டிய தேவை இல்லை." என்று கேட்ஸ் கூறினார்.

இதே பல்லவி கணக்கிலடங்கா முறையில் அமெரிக்கச் செய்தி ஊடகங்களினால் கடந்த சில நாட்களாக மீண்டும் மீண்டும் கூறப்படுகிறது; அதற்குக் காரணம் அச்சூழ்நிலையை ஏற்படுத்துவதும் ஈரானுக்கு எதிரான இன்னும் கூடுதலான தண்டனை நடவடிக்கைகளை நியாயப்படுத்துதலும் ஆகும். முற்றுப்பெறாத கோம் ஆலை ஒன்றும் "கள்ளத்தனமானது" அல்ல. ஆனால் அணுசக்தி பரவா உடன்பாட்டின்கீழ் நாடுகள் அவற்றைப் பற்றி அவை செயல்பாட்டிற்கு வரும்போதுதான் முழு விவரங்களையும் கொடுக்க வேண்டும். மேலும் பலமுறை அமெரிக்க, இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கை என்ற அச்சுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பெரிய நாடன்ஸ் ஆலையை போலவே இதுவும் நிலத்தடியில் கட்டப்படுவதில் வியப்பு ஏதும் இல்லை.

கோம் நிலையம் பற்றிச் சூழ்ந்துள்ள பெரும் அமளி வியாழனன்று P5+1 சக்திகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா மற்றும் சீனா ஆகியவற்றிற்கும் ஈரானுக்கும் இடையே நடக்க இருக்கும் கூட்டத்திற்கு முன்பு கவனமாக இயக்கப்படும் அமெரிக்கப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். கடந்த வாரம் ஐ.நா. கூட்டத்திற்கு முன்னதாக அமெரிக்கா ரஷ்யாவிடம் இருந்து பொருளாதாரத் தடைகளுக்கு ஆதரவை கிழக்கு ஐரோப்பாவில் ஏவுகணைக் கேடயத் திட்டத்தை அமெரிக்க நிறுத்திக் கொள்ளுவதற்கு ஈடு செய்யும் வகையில் பெற்றது. ஐ.நா. பாதுகாப்பு குழுக் கூட்டத்திற்கு ஒபாமா தலைமை தாங்கினார்; அதில் ஒரு அணுவாயுதப் பரவா தீர்மானம் பற்றியதில் ஈரான் போன்ற "மீறும்" நாடுகளுக்கு எதிரான தண்டனை நடவடிக்கைகளுக்கு அரங்கு அமைக்கப்பட்டது.

கோமைப் பற்றி தகவல் வெளிவந்துள்ள நேரம் அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் உள்ளது; குறிப்பாக ரஷ்யா, சீனா மீது ஈரானுக்கு எதிராக புதிய கடுமையான தண்டனைகளுக்கு ஆதரவு கொடுப்பதற்காக. அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி கேட்ஸ் நேற்று விளக்கியபடி, புதிய யுரேனிய செறிவூட்டல் நிலையம் ஈரானை "ஒரு மோசமான விதத்தில் காட்டுகிறது", "இன்னும் கடுமையான பொருளாதாரத் தடைகள் சுமத்துவதற்கு" ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முந்தைய ஐ.நா. நடவடிக்கைகளை போல் இல்லாமல், அமெரிக்கா முடக்க வைக்கும் பொருளாதார நடவடிக்கைகளை முன்வைத்துள்ளது; அதில் ஈரானுக்கு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்ப் பொருட்களை விற்பது தடைசெய்யப்படுகிறது என்பதும் அடங்கும்.

அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் இந்த வாரக் கூட்டத்தை ஈரான் மிக சுத்தப்படுத்தும் சோதனை ஆட்சியை ஏற்க வைக்கும் கூட்டமாக மாற்ற முயல விரும்புகின்றன. அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கிளின்டன் நேற்று, ஈரான் இப்பொழுது கூடுதலான நிரூபணச் சுமையை எதிர்கொள்ளுகிறது என்றும், "அவர்களுடைய முழு அமைப்பு முறையையும் உண்மைகள் வேண்டுகின்ற விதத்தில் பரந்த ஆய்விற்கு உட்படுத்த வேண்டியிருக்கும்" என்றார். நியூ யோர்க் டைம்ஸின் கருத்துப்படி, அமெரிக்க, ஐரோப்பிய அதிகாரிகள் அனைத்து அணுசக்தி தொடர்புடைய நிலையங்கள், உயர்மட்ட விஞ்ஞானிகளை தடையற்ற முறையில் ஆய்வு விசாரணை செய்வதுடன், கணினிகள், தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் அனைத்தையும் ஆய்வதற்கும் வலியுறுத்தல் இருக்கும்.

ஒபாமாவின் இந்த வழிவகை ஈராக் போருக்கு முன்னதாக பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக புஷ் கூறிய வழிவகையை சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஒத்திருக்கிறது. ஈராக்கிய ஆட்சியைப் போலவே, தெஹ்ரானும் ஒரு இயலாத செயலை எதிர்கொள்ளுகிறது--ஒரு எதிர்மறையை நிரூபிக்க வேண்டும், அதாவது அணுவாயுதத் திட்டம் ஏதும் தன்னிடம் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். ஒரு இடத்தில் சான்றுகள் கிடைக்காவிட்டால், அவை புதிய குற்றச்சாட்டுக்களுக்கும் மேற்கத்தைய மற்றும் இஸ்ரேலிய உளவுத்துறை அமைப்புக்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்ட இன்னும் பரந்த முறையில் சர்வதேச ஆய்வாளர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய ஆய்வுகளையும் கோருகின்ற நிலையைக் கொடுக்கும். அத்தகைய கோரிக்கைகளின் நோக்கம் ஈரானின் கூற்றுக்களின் உண்மையை ஆய்வு நடத்துவது அல்ல, பெருகும் மோதல் சூழ்நிலையை நியாயப்படுத்துவதற்குத்தான்.

ஈராக் படையெடுப்பிற்கு முன்பு நடந்ததைப் போலவே, அமெரிக்கச் செய்தி ஊடகமும் அரசாங்கக் கருவியின் பிரச்சாரக் கரமாக செயல்படுகிறது; அவை ஒபாமா நிர்வாகத்தின் போலிக்கூற்றுக்கள், அரைகுறை உண்மைகள், அப்பட்டமான பொய்கள் ஆகியவற்றை திறனாய்வின்றி அப்படியே கூறுகின்றன. உதாரணமாக நியூ யோர்க் டைம்ஸ் ஏற்கனவே பெயரிடப்படாத உளவுத்துறை அதிகாரிகளை மேற்கோளிட்டு ஆதாரமற்ற கூற்றுக்களை வெளியிட்டுள்ளது; 2007 அமெரிக்கத் தேசிய உளவுத்துறை மதிப்பின்படி (NIE) ஈரானில் "ஒரு டஜனுக்கும் மேற்பட்ட சந்தேகத்திற்குரிய நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன" என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதே NIE தான் 2003ல் ஈரான் அதன் அணுவாயுத ஆராய்ச்சியை முடித்துவிட்டது என்ற முடிவிற்கு வந்திருந்தது.

ஈரானுக்கு எதிரான தற்போதையை பிரச்சாரம் சமீபத்திய கொள்கை மாற்றத்தின் விளைவு அல்ல; நீண்டகாலத் திட்டங்களின் விளைவுதான். ஒபாமா நிர்வாகத்தின் உத்திகள், Bipartisan Policy Centre, Centre for a New American Security, வலது சாரி Washington Institute for Near East Policy ஆகியவை கடந்த ஆண்டில் நடத்திய சிந்தனைக் குழுக்களின் தொடர்ச்சியான ஆய்வுகளில் காணப்படலாம். விவரங்களில் சற்று வேறுபாடு இருந்தாலும், இவை அனைத்தும் ராஜீய அழுத்தங்களை முறையாகப் பெருக்குதல், அதன் பின் தண்டனை போன்ற பொருளாதாரத் தடைகளைக் கொடுத்தல், பின்னர் இராணுவத் தாக்குதல்களுக்கான தயாரிப்புக்களை நடத்துதல் என்று ஆலோசனை கொடுத்திருந்தன.

அவருடைய இஸ்ரேல் சார்பு கருத்துக்கள் மற்றும் புஷ்ஷின் இழிந்த புதிய கன்சர்வேடிவ்களுடனான தொடர்பிற்கும் நன்கு அறியப்பட்டுள்ள டெனிஸ் ரோஸ், இந்த ஆய்வுகள் அனைத்திலும் மையமாக பங்கு கொண்டிருந்தார். அவர் தற்பொழுது ஒபாமாவின் உயர்மட்ட ஈரான் பற்றிய ஆலோசகர் ஆவார்.

ஆட்சி மாற்றத்திற்கு வெளிப்படையாக வாதிடவில்லை என்றாலும், அதுதான் ஒபமா நிர்வாகத்தின் விருப்பம் என்பது தெளிவு. கடந்த ஜூன் மாதம் ஈரானிய ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து வந்த எதிர்ப்புக்களை ஊக்கம் கொடுத்து முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட பின்னர், அணுசக்திப் பிரச்சினையில் இன்னும் அதிக அழுத்தம் கொடுத்தல், தோல்வியுற்ற வேட்பாளர் மீர் ஹோசைன் மெளசவிக்கும் அவருடைய ஆதரவாளர்களுக்கும் உதவியளிப்பது போல் ஆகும் என்று வாஷிங்டன் கணக்குப் போடுகிறது. பாதுகாப்பு மந்திரி என்னும் முறையில் நேற்று கேட்ஸ், "ஈரானிய சமூகத்திலும் அரசியலிலும் பெரும் பிளவுகள் உள்ளன. இன்னும் கூடுதலான, குறிப்பாக கடுமையான பொருளாதாரத் தடைகள்தான் உண்மையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்" என்றார்.

ஒபாமா நிர்வாகம் ஐ.நா. பாதுகாப்புக் குழுவிற்கு அழுத்தம் கொடுத்துத் தன் திட்டங்களுக்கு ஆதரவு பெற நோக்கம் கொண்டுள்ளது; ஆனால் அதில் தோல்வியுற்றால், ஒருதலைப்பட்சமாக செயல்படும். வாஷிங்டன் போஸ்ட்டின் தலையங்கம் சனிக்கிழமை அன்று அறிவித்தது போல், "சர்வதேச உடன்படிக்கைகளையும் ஐ.நா.பாதுகாப்புக் குழுத் தீர்மானங்களையும் திமிர்த்தனமாக மீறும் ஒரு ஆட்சிக்கு எதிராக அமெரிக்கா செயலற்று இருந்துவிடாது என்பதை அமெரிக்கா மற்ற அரசாங்கங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்." இராணுவத் திட்டங்களை பற்றி தற்போதைக்கேனும் அதிகம் பேசாமல், அந்த "விருப்பு உரிமையும்" உள்ளது என்பதை நிரந்தர அச்சுறுத்தலாகவும் கூறுகின்றது. தன்னுடைய நேற்றைய கருத்துக்களில் கேட்ஸ், புஷ் நிர்வாகம் பல முறையும் கூறிய, "மேசையில் இருந்து அனைத்து விருப்புரிமைகளும் அகற்றப்படவில்லை" என்பதை மீண்டும் கூறினார்.

ஈரானுடன் விரைவில் பெருகும் மோதல் ஒபாமா "மாறுதலுக்கான" வேட்பாளர் என்ற முழு மோசடித் தன்மையையும் நிரூபிக்கிறது. அடிப்படைகள் அனைத்திலும், ஒபாமா நிர்வாகம் அதன் முன்னோடி நிர்வாகம் கொண்டிருந்த அதே கொள்ளை இலக்குகள், அதற்கான குற்றம் சார்ந்த நடவடிக்கைகள் ஆகியவற்றைத்தான் தொடர்ந்து வருகிறது. அமெரிக்க அரசியல் நடைமுறையில் பிரிவுகள் ஒபாமா தேர்தலுக்கு ஆதரவு கொடுத்தது வெளியுறவுக் கொள்கையை ஈராக்கிலிருந்து விலக்கி ஆப்கானிஸ்தானை நோக்கி மறுகுவிப்பு காட்டுவதற்கு ஆகும்; ஆனால் ஈரானோ அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விழைவுகளான மத்திய கிழக்கு, மத்திய ஆசியாவின் விசை வளம் மிக்க பகுதிகளின்மீது மேலாதிக்கம் செலுத்தலாக உள்ளது. மற்றொரு பொறுப்பற்ற தீரச்செயலுக்கான தயாரிப்புக்கள், அப்பகுதிகளில் கூடுதலான மோதல்களில் மூழ்கடிக்கக்கூடிய மற்றும் மேலும் ஸ்திரத்ன்மையை குலைக்கும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளன.