World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Pakistani air strike kills more than 70 civilians

பாகிஸ்தான் விமானத் தாக்குதலில் எழுபதுக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்

By W.A. Sunil
22 April 2010

Use this version to print | Send feedback

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் ஒரு கிராமத்தின் மீது அண்மையில் நடத்திய விமானத் தாக்குதலில் 70க்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டது சம்பந்தமாக வெகுஜனங்கள் மத்தியில் நிலவும் சீற்றத்தை தணிக்கும் ஒரு முயற்சியாக, கடந்த சனிக்கிழமை பாகிஸ்தானின் இராணுவத் தளபதி ஜெனரல் அஷ்ஃபக் பெர்வஸ் கயானி பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்கத் தள்ளப்பட்டார். அயல் நாடான ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடும் இஸ்லாமிய போராளிகளை நசுக்குவதற்காக வாஷிங்டனின் சார்பில் பாகிஸ்தான் முன்னெடுத்துக்கொண்டிருக்கும் யுத்தத்தின் ஒரு பாகமே இந்த விமானத் தாக்குதலாகும்.

பாகிஸ்தானின் கூட்டாக நிர்வகிக்கப்படும் பழங்குடி பிரதேசத்தின் (FATA) பகுதியான கைபர் ஏஜன்சியின் தொலை தூர டைரா பள்ளத்தாக்கில் உள்ள பல கிராமங்கள் மீது ஏப்பிரல் 10 அன்று இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. பெண்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் உட்பட குகிகெல் பழங்குடியினரே இதில் உயிரிழந்தவர்களும் காயமடைந்தவர்களுமாவர். பாகிஸ்தான் இராணுவம் 2003ல் பரந்தகன்ற பிரதேசங்கள் மீது தனது தாக்குதல் நடவடிக்கைகளை தொடங்கியதில் இருந்து இடம்பெற்ற சம்பவங்களில் ஆகவும் மோசமானது இதுவே.

இராணுவம் ஆரம்பத்தில் 42 தலிபான் போராளிகள் இந்த விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக வலியுறுத்தியதோடு டைரா பள்ளத்தாக்கானது லக்ஷர்-ஈ-இஸ்லாம் என்ற இஸ்லாமிய குழுவின் "கோட்டை" என்றும் தலிபான் மற்றும் அல் கைடா போராளிகளின் "மையம்" என்றும் கூறிக்கொண்டது. ஆயினும், குண்டுத் தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அந்த கிராமம் தலிபான்களை ஆதரிக்கவில்லை என்றும் உள்ளூர்வாசிகள் வலியுறுத்தினர்.

"கொல்லப்பட்ட அனைவரும் பொது மக்களே, அவர்கள் நூறு வீதம் அப்பாவிகள்," என்று ஒரு உள்ளூர் பழங்குடித் தலைவரான இக்ரமுல்லா ஜான் குகிகெல் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். "குகிகெல் மக்கள் அரசாங்கத்துடன் உள்ளனர். நாங்கள் தலிபான்களுடன் அல்லது வேறு அடிப்படைவாத குழுக்களுடன் இணையவில்லை. நாங்கள் நாட்டில் சமாதானத்தை விரும்பும் சாதாரண மக்கள்," என அவர் கூறினார்.

நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகையின்படி, உள்ளூர் கைபர் நிர்வாகம் அனுதாபம் தெரிவித்ததோடு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நட்ட ஈடும் வழங்கியது. பேஷாவரில் ஹயாடாபாத் மருத்துவ கட்டிடத்தில் சிகிச்சை பெற்றுவருபவர்கள், ஒரு வீட்டின் மீது விமானமொன்று குண்டுகளை வீசியதாகவும், பின்னர் கிராமத்தவர்கள் உயிரிழந்தவர்களையும் காயமடைந்தவர்களையும் காப்பாற்றுவதற்குப் போராடியபோது ஒரு விமானம் இன்னுமொரு குண்டை வீசியதாகவும் தெரிவித்தனர். "இரண்டாவது குண்டிலேயே அதிகம் அழிவு ஏற்பட்டது" என கஷ்மலு கான் அஃப்ரிடி தெரிவித்தார். இந்தத் தாக்குதலில் அவர் 11 உறவினர்களை இழந்துள்ளார்.

கைபர் ஏஜன்சி பகுதி, அரை மில்லியனுக்கும் மேற்பட்ட ஜனத்தொகையை கொண்டுள்ளது. ஏனைய FATA பிரதேசங்களைப் போல், இந்தப் பகுதியும் ஆட்சியில் இருந்த பாகிஸ்தான் அரசாங்கங்களால் அலட்சியம் செய்யப்பட்டுள்ளது. அங்கு வீதிகள், சுகாதார பராமரிப்பு மற்றும் கல்வி உட்பட அடிப்படையான சரீர மற்றும் சமூக உட்கட்டமைப்பு பற்றாக்குறை நிலவுகிறது. ஆண்கள் மத்தியில் 6.7 வீத படிப்பறிவு வீதமும் பெண்கள் மத்தியில் படிப்பறிவு மட்டம் 1 வீதத்துக்கும் குறைவாகவும் உள்ளது.

பழங்குடி தலைவர்களிடம் இருந்து விமர்சனங்கள் அதிகரித்ததோடு, FATA பிராந்தியத்தில் பழங்குடி மக்கள் மத்தியில் இராணுவம் மேலும் ஆதரவை இழக்க நேரும் என பாகிஸ்தான் ஊடகத்தின் சில பகுதியினர் எச்சரித்த நிலையிலுமே, முதல்தடவையாக நடத்தப்பட்ட இந்த மோசமான விமானத் தாக்குதலுக்கு ஜெனரல் கயானி மன்னிப்புக் கேட்டார். இராணுவத் தளபதி, இந்த "துரதிஷ்ட சம்பவம் பெறுமதியான மற்றும் அப்பாவி பொதுமக்களின் உயிர்களை பலியெடுத்துவிட்டது" எனத் தெரிவித்ததோடு "எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தவிர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக" வாக்குறுதியளித்தார்.

எவ்வாறெனினும், தொடக்கத்திலேயே ஒரு தொகை அழிவை ஏற்படுத்தியுள்ள தாக்குதல்களை பாகிஸ்தான் இராணுவம் தொடர்கின்ற நிலையில், மேலும் பொதுமக்கள் உயிரிழப்பது தவிர்க்க முடியாததாகும். ஒபாமா நிர்வாகத்தின் அழுத்தத்தின் கீழ், கடந்த ஏப்பிரலில் ஸ்வாட் பள்ளத்தாக்கின் மீது இராணுவம் ஒரு பெரும் தாக்குதலை முன்னெடுத்ததில், இரண்டு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

"மறுகட்டமைப்பு" என்பது "ஒரு கடினமான பணி" என ஸ்வாட் பிராந்தியத்தின் சிரேஷ்ட சிவில் நிர்வாகி நஸீம் அக்தர் இந்த வாரம் ஏஜன்ஸி பிரான்ஸ் பிரஸ் ஊடகத்துக்குத் தெரிவித்தார். ஐ.நா. வின் படி, பள்ளத்தாக்கில் உள்ள 1,576 பாடசாலைகளில் 175 தாக்குதலின் போது அழிக்கப்பட்டுள்ளதோடு மேலும் 226 பாடசாலைகள் சேதமடைந்துள்ளன. தலிபான்களால் சுரண்டிக்கொள்ளப்படும், வறிய விவசாயிகளுக்கும் செல்வந்த நில உரிமையாளர்களுக்கும் இடையிலான பிரமாண்டமான இடைவெளி பற்றிய பிரச்சினையை அணுகாவிட்டால், ஒரு புதிய "வர்க்க யுத்தம்" தோன்றும் என அக்தார் எச்சரித்தார்.

FATA ஏஜன்சியின் தெற்கு வஸிரிஸ்தானின் மீது அக்டோபரில் நடத்திய தாக்குதலுடன் ஸ்வாட் பள்ளத்தாக்கின் மீதான தாக்குதல் தொடர்ந்தது. வஸிரிஸ்தான் தாக்குதலில் பெருந்தொகையான கிராமங்களும் நகரங்களும் அழிக்கப்பட்டதுடன் குறைந்தபட்சம் 400,000 பேர் வீடுகளை இழந்தனர். ஏஜன்சி பகுதியில் இராணுவம் அதன் பிரதான இலக்குகளை சாதித்து விட்டதாக கடந்த மாதம் ஜெனரல் கயானி கூறிய போதிலும், அங்கு வசித்தவர்கள் மீண்டும் திரும்பத் தயங்குகின்றனர். பிரதான நகரங்களை இராணுவம் கைப்பற்றியிருந்தாலும், கிளர்ச்சிக்காரர்கள் இன்னமும் பெரும் மலைப் பகுதிகளை கட்டுப்பாட்டில் கொண்டிருப்பதோடு தொடர்ந்தும் இராணுவத்தை அச்சுறுத்திவருகின்றனர்.

சமாதான கற்கைகளுக்கான பாக் நிலையத்தின் அறிக்கையின்படி, 2009ல் இராணுவத்தின் "தாக்குதல் நடவடிக்கையின்" போது 6,329 பேர் கொல்லப்பட்டதோடு 3,181 பேர் காயமடைந்தனர். இஸ்லாமிய போராளிகளின் பழிவாங்கும் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் மற்றும் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளின் எல்லைப் பகுதி தாக்குதல்கள் உட்பட ஒட்டு மொத்த தரவுகளைத் தரும் அந்த அறிக்கை, 12,632 பேர் கொல்லப்பட்டதாகவும் 12,815 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை, 2006ம் ஆண்டில் உயிரிழந்த 907 பேர் மற்றும் காயமடைந்த 1,543 பேரில் இருந்து அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் அநேகமானவர்கள் பொது மக்களே என்பதில் சந்தேகம் கிடையாது.

இராணுவத்தின் நடவடிக்கைகளால் இன்னமும் இடம்பெயர்ந்துள்ள, ஒரு மதிப்பீட்டின்படி 1.3 மில்லியன் மக்களுக்கு உதவ உதவி முகவரமைப்புக்கள் நிதியின்றி சிரமப்படுவதாக கடந்த வாரம் ஐ.நா. எச்சரித்திருந்தது. கடந்தமாதம் ஓரக்ஸாய் ஏஜன்சி பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் தாக்குதலொன்றை முன்னெடுத்த பின்னர் மேலும் 200,000 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வடக்கின் வசந்தகால மற்றும் கோடை காலத்தில் வடக்கு வஸிரிஸ்தான் மீது புதிய தாக்குதல்களை முன்னெக்குமாறு வாஷிங்டனின் அழுத்தத்துக்கு பாகிஸ்தான் அரசாங்கமும் இராணுவமும் உள்ளாகியுள்ளன. கடந்த ஆண்டு தாக்குதல்களில் பிராந்தியத்தை கைப்பற்றி வைத்திருப்பது ஏற்கனவே அதிகம் இழுபட்டுபோய் இருப்பதாக சுட்டிக்காட்டி, அமெரிக்காவின் கோரிக்கையை இதுவரை இராணுவம் மறுத்து வருகின்றது. ஏற்கனவே அரை மில்லியன் பலமான இராணுவப் படை இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுடனான மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் அதன் பிராந்திய எதிரியான இந்தியாவின் எல்லையில் இருந்து மேலும் துருப்புக்களை அப்புறப்படுத்த விரும்பவில்லை.

எவ்வாறெனினும், ஒபாமா நிர்வாகம் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க துருப்புக்களின் எண்ணிக்கையை பெருகச் செய்துள்ளதோடு அமெரிக்க இராணுவம் தெற்கு ஆப்கான் நகரான கந்தகாரில் கட்டுப்பட்டை உறுதியாக ஸ்தாபிக்க ஒரு பெரும் தாக்குதலுக்கு தயாராகி வருகின்றது. இந்த அமெரிக்க நடவடிக்கைகள் தொடங்கும் போது, பாகிஸ்தான் இராணுவம் FATA பிரதேசங்களில் தனது கட்டுப்பாட்டை விரிவாக்குவதற்கான புதுப்பிக்கப்பட்ட அழுத்தத்துக்கு உள்ளாகும்.

ஜனாதிபதி அஸிஃப் அலி ஸர்தாரியின் அரசாங்கம், அமெரிக்காவின் அரசியல், நிதி மற்றும் இராணுவ ஆதரவில் கனமாகத் தங்கியிருக்கின்றது. கடந்த ஆண்டு ஒரு கடுமையான அந்நிய செலாவனி நெருக்கடியை எதிர்கொண்ட அது, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 11.3 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாகப் பெறத் தள்ளப்பட்டது. அமெரிக்காவும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 7.5 பில்லியன் பொருளாதார உதவி வழங்க உடன்பட்டுள்ள போதிலும், இந்தப் பணம் ஆப்-பாக் யுத்தம் என சொல்லப்படுவதற்கு பாகிஸ்தான் ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டதாகும்.

கடந்த மாதம், அமெரிக்காவுடனான பாகிஸ்தானின் உறவை "ஒரு புதிய பாதையில் இருத்த" ஒரு "மூலோபாய பேச்சுவார்த்தையை" இஸ்லாமாபாத்தும் வாஷிங்டனும் நடத்தின. பேச்சுக்களின் பின்னர் வெளியிட்ட அறிக்கையில், "பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் தமது முயற்சியை இரட்டிப்பாக்கவுள்ளதாகவும்" மற்றும் "ஆப்கானிஸ்தானில் சமாதானத்தையும் ஸ்திரப்பாட்டையும் உருவாக்க" ஒன்றாக செயற்படுவதாக இரு நாடுகளும் பிரகடனம் செய்தன. வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூட் கியுரேஷி பாகிஸ்தான் பிரதிநிதிகளுக்கு தலைமை வகித்த போதிலும், பேச்சுவார்த்தையில் ஜெனரல் கயானி ஒரு பிரதான பாத்திரம் வகித்தார்.

சனிக்கிழமை கயானி வருத்தம் தெரிவித்தமை, அமெரிக்காவின் "பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்துக்கு" பாகிஸ்தானின் ஆதரவால் திறந்துவிடப்பட்டுள்ள ஆழமான அரசியல் மற்றும் சமூக பிளவுகளின் ஒரு அறிகுறி மட்டுமே. ஸர்தாரியும் அவரது அரசாங்கமும் அமெரிக்காவின் பொம்மைகளாகவே மக்களின் பரந்த தட்டினரால் கருதப்படுகின்றன. இந்த சீற்றத்துக்கு, பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கைகள் மூலமும், அதே போல் FATA பிரதேசங்கள் மீது ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி அமெரிக்கா நடத்தும் தாக்குதல்களாலும் மேலும் எண்ணெய் வார்க்கப்படுகின்றன.

சமாதான கற்கைகளுக்கான பாக் நிலையத்தின் அறிக்கையின்படி, 2009ல் ஆளில்லா விமானங்கள் உட்பட அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் சம்பந்தப்பட்ட 78 "எல்லைப் பகுதி மோதல்களில்" 700 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு மேலும் 363 பேர் காயமடைந்துள்ளனர். "பயங்கரவாதத்தின் மீதான போரை" சமாதான கற்கைகளுக்கான பாக் நிலையம் ஆதரிப்பதால், அது பக்கச் சார்பாக உள்ள நிலையில், அதிகளவானவர்கள் பொது மக்களாக இருக்கும் பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான புள்ளிவிபரம் குறைத்து மதிப்பிடப்பட்டதாக இருக்கக் கூடும். டைரா பள்ளத்தாக்கின் மீதான விமானத் தாக்குதல் நடந்து சில நாட்களின் பின்னர், வடக்கு வஸிரிஸ்தான் மீது அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் "நான்கு போராளிகள்" கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.