சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : வரலாறு

One hundred years since the death of Mark Twain

மார்க் ருவைன் மறைவுக்குப் பிந்தைய நூறு ஆண்டுகள்

By James Brookfield and David Walsh
22 April 2010

Use this version to print | Send feedback


Mark Twain

வரலாற்றில் மிகச்சிறந்த அமெரிக்க எழுத்தாளர்களில் ஒருவரான மார்க் ருவைன் இறந்து 100 ஆண்டுகள் முடிவுற்றதை ஏப்ரல் 21,குறிக்கிறது. ஒரு மிகச் சிறந்த நையாண்டி எழுத்தாளரும், கேலிச்சுவை மேதையுமான ருவைன் (1835-1910), 19ஆம் நூற்றாண்டின் அமெரிக்க பேச்சு வழக்கு மொழிகள் பலவற்றின் நடையையும், தொனியையும் கையாள்வதில் சிறந்து விளங்கினார்.

ருவைனுடைய வாழ்வையும், எழுத்துக்களையும் அவற்றின் சிறப்புக்கேற்ற வகையில், சுருக்கமாக ஒரே கட்டுரையில் கொண்டுவந்துவிட இயலாது. அது ஏராளமான சிக்கல்களும், முரண்பாடுகளும் நிறைந்த ஒரு மாபெரும் விஷயம். அவருடைய வாழ்நாளில் அந்த எழுத்தாளர் பெரும் பாராட்டுக்களையும், வெற்றிகளையும் பெற்றிருந்தார்; ஆனால் அதேநேரத்தில் நிதிநிலைமையில் மோசமாக இருந்ததுடன், தனிப்பட்ட பெரும் துன்பியல்களும் அவரைக் கவ்வியிருந்தன.

எல்லாக்காலத்திலும் போற்றப்பட்ட பெரும் கேலிச்சுவை எழுத்தாளர்களில் ஒருவராகவும், வாசகர்களை உரக்கச் சிரிக்க வைக்கத் தூண்டியவருள் ஒருவராகவும் விளங்கிய அவரின் எழுத்துக்களைப் பதிப்பித்த பேர்னார்ட் டி வோட்டோ குறிப்பிடுகையில், “கொடுமை, அநீதி மீதான வெறுப்புணர்வு அவருக்குள் கொழுந்துவிட்டு எரிந்தது”, அத்துடன் “மனித கொடுமை குறித்த ஆழமான உணர்வும், அதற்காக தன்னைத்தானே பலமுறை குறைகூறிக்கொள்ளும் இயல்பும் அவருக்குள் இருந்தன. ஸ்விஃப்ட்டைப் போலவே அவரும் ரொம், டிக் மற்றும் ஹாரியை உளமார நேசித்தாலும் கூட, அவர் தன்னைத்தானே வெறுத்தார். மனித உறவுகளில் இருக்கும் பெரும் வேதனைகளிலிருந்து விடுபடுவதற்கு முறையான பாதுகாப்பு அவருக்குக் கிட்டவில்லை” என்று கருத்துத் தெரிவித்தார்.

ருவைனின் வாழ்வில் ஒரு குறிப்பிடத்தக்க காலகட்டத்தின் பிரதிபலிப்பு படர்ந்திருந்தது. அமெரிக்க புரட்சிகர யுத்தம் முடிந்த 50 ஆண்டுகளிலேயே -அதில் ஈடுபட்டிருந்த சுதந்திர போராட்ட வீரர்கள் பலர் அப்போது உயிரோடு இருந்தனர்- அந்த காலப்பகுதியில் எல்லைப்பகுதியாக இருந்த மிசௌரியில் அவர் பிறந்திருந்தார். அமெரிக்கா அதன் தொழில்துறை வலிமையை வளர்க்க ஒரு கொடுமையான உள்நாட்டு யுத்தத்தை நடத்தியதையும், முதலாம் உலக யுத்த சகாப்தத்தில் ஓர் ஏகாதிபத்திய சக்தியாக அது முழுமையாக வெளிப்பட்டதையும் பார்க்கும் காலக்கட்டத்தில் ருவைன் வாழ்ந்தார்.

இயல்பாகவோ அல்லது தேவையினாலோ ஏற்பட்ட அலைச்சல்களால், ருவைன் நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் அறிந்திருந்ததுடன், சிறுவயதிலேயே ஒவ்வொரு சமூகப் பிரிவையும் எதிர்கொண்டார். டி வோடோ குறிப்பிடுகையில், அந்த எழுத்தாளர் அவருடைய தொடக்க காலத்திலேயே “வேறெந்த முக்கிய அமெரிக்க எழுத்தாளரையும் விட, அமெரிக்காவின் நிறைய பகுதிகளைப் பார்த்திருந்தார்; பல்வேறு வகையான அமெரிக்கர்களையும், அவர்களின் பல்வேறு ஜாதிகள் மற்றும் நிலைமைகளையும் கண்டார்; அமெரிக்காவைப் பல்வேறு தொழில்களினூடாகவும், பல்வேறு மனோநிலைகளிலும், கொந்தளிப்பான உணர்ச்சிகளிலும் ஆராய்ந்தார்-சுருக்கமாகக் கூறினால், தன்னுடைய நாட்டு மக்களின் பல்வேறு வகையான குண அனுபவங்களை மிக நெருக்கமாக அவர் பகிர்ந்து கொண்டிருந்தார்.”

சாமுவேல் லாங்ஹோன் கிளெமென்ஸ் (மார்க் ருவைனின் நிஜப் பெயர்) 1835இல் மிசௌரியில் பிறந்தார்; 1866இல் முதன்முதலாக ஹவாய்க்கும் (அப்பொழுது இதற்கு சாண்ட்விச் தீவுகள் என்று பெயர்), பின்னர் ஓர் ஆண்டுக்குப் பின்னர் ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு ஆகிய இடங்களுக்கும் சென்று பயணக்கட்டுரைகள் எழுதி, பயணக்கட்டுரை எழுதும் ஓர் எழுத்தாளராக பரந்த அங்கீகாரம் பெறுவதற்கு முன்னால், அவர் மிஸ்சிசிபியில் அச்சாளராகவும், இதழாளராகவும், நீராவிப்படகு ஓட்டுனராகவும் பணியாற்றினார்.

இரண்டாவதாக குறிப்பிடப்பட்ட நாடுகளின் பயணத்தில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் 1869இல் The Innocents Abroad எனும் நூலாக மாற்றப்பட்டது. இந்த நூல் மார்க் ருவைனை-1863இல் நெவடா (Nevada) செய்தித்தாளில் பணியாற்றும் போதே, அவர் இந்த புகழ்பெற்ற புனைபெயரை ஏற்றிருந்தார்- சீரிய முறையிலும், பொருளாதார வகையிலும் வெற்றிகரமாக்கியது. முதல் 16 மாதங்களிலேயே இந்த நூலின் 85,000 பிரதிகள் விற்கப்பட்டன.

நூலின் முடிவிலுள்ள அரிய கருத்துரை, ருவைன் ஏற்கனவே அவருடைய சமயோசிதமான சமூக நகைச்சுவை உணர்வை வளர்த்திருந்தார் என்பதைக் காட்டுகிறது. “தீய எண்ணங்களையும், சகிப்பின்மையையும், குறுகிய மனப்பான்மையையும் பயணம் அழித்துவிடும். நம்முடைய மக்களில் பலர் இவற்றிற்காகவே பயணம் மேற்கொள்ள வேண்டும்.”

“அவருடைய ஆரம்பகால எழுத்துக்களில் அந்த தசாப்தங்களின் (அந்த தசாப்தங்களுக்கு தங்கமுலாம் பூசிய காலம் என்று பெயரிட்டார்) சமூகரீதியிலான, புத்திஜீவித்தனமான, வணிக மற்றும் தொழில்துறை உணர்வை உள்நாட்டு-வண்ணத்தையும், மேற்கத்திய மரபையும் கலந்து எழுதத் தொடங்கியதால், 1866இல் கிழக்கிலிருந்து நியூயோர்க்கிற்கு ருவைன் நகர்ந்து வந்ததானது, அமெரிக்க உள்நாட்டு யுத்தத்திற்குப் பிந்தைய எழுத்துக்களின் கூறுபாடுகள் அவருடைய தனித்துவ வெளிப்பாட்டின் தொடக்கத்தை அடையாளப்படுத்தின” என்று இரண்டு திறனாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். (From Puritanism to Postmodernism: A History of American Literature, Richard Buland and Malcolm Bradbury)

The Gilded Age (1873) (தங்கமுலாம் பூசிய காலம்) என்ற தலைப்புக் கொண்டிருந்த அவருடைய முதல் நாவலில், ருவைனும் (அதன் இணை-ஆசிரியர் சார்லஸ் டட்லி வார்னரும்) 1860-1868 காலத்தைப் பின்வருமாறு எடுத்துக்காட்டினார்கள். அவர்களின் சொந்த வார்த்தைகளில்: “பல நூற்றாண்டுகளாக இருந்த பழமையான அமைப்புகள் தகர்க்கப்பட்டன. மக்களின் அரசியல் மாறியது. நாட்டில் பாதி மக்களுடைய சமூக வாழ்க்கை மாறியது. அது பாதிப்பை இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளுக்குக் கணிக்க முடியாத அளவிற்கு முழு தேசியத்தன்மையிலும் மிக ஆழமான செல்வாக்கைக் கொண்டிருந்தது.” சுருங்கக் கூறின் ஒரு புரட்சி நடந்தேறி இருந்தது. அது கலையிலும், அறிவார்ந்த வாழ்க்கையிலும் மகத்தான செல்வாக்கைக் கொண்டிருந்தது.

1870களின் தொடக்க ஆண்டுகளுக்கும், 1890க்கும் இடையே ருவைன் அவருடைய மிகச்சிறந்த படைப்புக்களை செய்திருந்தார். The Adventures of Tom Sawyer (1876) மற்றும் Adventures of Huckleberry Finn (1884) ஆகிய இரண்டும் நிச்சயம் அந்த பட்டியலில் உள்ளன. இவ்விரு படைப்புக்களையும் எளிதாக வகைப்படுத்திவிட முடியாது: கண்களில் நீர்வரக்கூடிய அளவிற்கு அவற்றில் நிறைய கேலியான காட்சிகள் நிறைந்துள்ளன; உதாரணமாக கிளெமென்ஸின் குழந்தைப் பருவத்தில் தெற்கே உள்நாட்டு யுத்தத்திற்கு முந்தைய காலப்பகுதியிலிருந்த அடிமைமுறையின் காட்டுமிராண்டித்தனத்தை (அத்துடன் அக்காலத்திய அமெரிக்க வாழ்வின் ஏனைய உளைச்சல் அளிக்கும் கூறுபாடுகளையும்) சித்தரிக்கிறது.

சுருங்கக் கூறின், உள்நாட்டு யுத்தத்தில் கூட்டாட்சி அதிகாரிகளிடையே, ருவைன் சந்தேகத்திற்கிடமின்றி அடிமைமுறைக்கு எதிராக ஆழ்ந்த எதிர்ப்புணர்வைக் குவித்திருந்தார். 1874இல் வெளிவந்த ஒரு குறிப்பிடத்தக்க சிறுகதையான “A True Story” என்பது, ஒரு முன்னாள் அடிமையான ஒரு கறுப்புப் பெண்மணியின் கண்ணோட்டத்திலிருந்து கூறப்படுகிறது. அறுபது ஆண்டுகள் “ஒருபோதும் எந்தவித தொந்தரவும் இல்லாமல்” வாழ்ந்திருக்கிறாய் என்று, தற்போது ஒரு வேலையாளாக இருக்கும், “ரேஷெல் அத்தையிடம்” (Aunt Rachel) அவருடைய முதலாளி தெரிவிக்கிறார். அவரைப் பார்த்து திரும்பும் ரேஷெல் அத்தை, உண்மையில் அவர் எவ்வாறு அவருடைய கணவரிடமிருந்தும், குழந்தைகளிடமிருந்தும் அடிமைமுறை நடவடிக்கையால் பிரிக்கப்பட்டார் என்பதையும், பின்னர் 22 ஆண்டுகள் கழித்து அவருடைய ஒரு மகனுடன் மட்டும் எவ்வாறு சேர முடிந்தது என்பதையும் நினைவு கூர்கிறார். அக்கதையை Atlanticஇல் பிரசுரித்த நாவலாசிரியரும், இதழாசிரியருமான வில்லியம் டீன் ஹோவெல்ஸ் கூறுகையில், அந்த கதை “மிக நன்றாகவும், உள்ளத்தைத் தொடும் விதத்திலும் இருப்பதாகவும், அது கறுப்பின மக்களின் மிகச் சிறந்த, நிஜமான உரையாடல்களைக் கொண்டிருப்பதாகவும் தாம் கருதியதாக ருவைனிடம் தெரிவித்தார்.” (Mr. Clemens and Mark Twain, Justin Kaplan)

19ம் நூற்றாண்டு அமெரிக்க இலக்கியத்தின் மிகச் சிறந்த சாதனைகளில் ஒன்றான Huckleberry Finn இல், கதையின் முக்கிய இளம் கதாபாத்திரம் (கதையைக் கூறுபவரும் இவரே), தம்முடைய குடும்பத்திற்கு விடுதலையைப் பெற முடியும் என்பதற்காக, ஒரு கட்டுப்பாடற்ற நாட்டிற்குள் நுழைய தப்பியோடிவரும் ஓர் அடிமையான ஜிம்மியின் துணையுடன், மிசிசிபி ஆற்றில் நடந்த அவருடைய தீரச்செயல்களை நினைவுகூர்கிறார்.

ஜிம் தப்பியோட உதவுவதன் மூலமாக யாரோ ஒருவருடைய சொத்தை “திருடுகிறோம்” என்ற உண்மையால் கதை முழுவதும் ஹக்கின் மனசாட்சி உறுத்துகிறது. ஒரு கட்டத்தில் அடிமையைக் காட்டிக் கொடுக்க முடிவெடுத்து, அவனுடைய பழைய உரிமையாளருக்கு ஒரு கடிதமும் எழுத அவன் முடிவெடுக்கிறான். நாவல் தொடர்கிறது:

“முதல் தடவையாக நல்லுணர்வையும், பாவங்கள் அனைத்தையும் அகற்றிவிட்டதைப் போன்ற உணர்வையும் நான் பெற்றேன். இதுபோல என்னுடைய வாழ்க்கையில் இதற்கு முன்னர் ஒருபோதும் உணர்ந்ததில்லை; இப்போது என்னால் பிரார்த்தனை செய்ய முடியும் என்று தோன்றுகிறது. ஆனால் அதை நான் உடனடியாகச் செய்துவிடவில்லை; காகிதத்தைக் கீழே வைத்துவிட்டு, சிந்தித்தேன்-இதுவரை நடந்த இவையெல்லாம் எந்தளவிற்கு நல்லது என்றும், என்னை இழந்து நரகத்திற்குத் தள்ளப்படுவதற்கு எவ்வளவு நெருக்கமாக நான் இருந்தேன் என்றும் யோசித்தேன். தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். எங்களின் ஆற்றுப்பயணத்தைக் குறித்த சிந்தனையில் மூழ்கினேன்; ஜிம்மை எப்போதும் என்னைவிட ஒருபடி மேலாக பார்க்கிறேன்: பகலிலும் இரவிலும், சில நேரம் நிலவொளியிலும், சில நேரம் புயல்களின் போதும், பேசிக்கொண்டும், பாடிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் நாங்கள் ஒன்றாக பயணித்தோம். ஆனால் அவனுக்கு எதிராக என்னால் எந்தவிடத்திலும் கடினமான உளப்பாங்கைக் கொள்ள முடியவில்லை; மாறாக, அதற்கு எதிரிடையான உணர்வைத் தான் கொண்டிருந்தேன்.” நான் காவல் காக்க வேண்டிய நேரத்திலும் கூட, நான் தூங்க வேண்டும் என்பதற்காக, என்னை அழைக்காமல் அவனே காவல் காப்பான். பனிமூட்டத்திலிருந்து நான் வெளியே வந்த போது, அவன் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தான் என்பதை என்னால் பார்க்க முடிந்தது; மீண்டும் பெரும் சகதியில் இருந்து நான் அவனிடம் திரும்பி வந்த போதும், அதேபோல அதுவும் பிரச்சினை நிறைந்திருந்த இடத்திலிருந்து வந்தபோதும் கூட இதே உணர்வை அவனிடம் பார்க்க முடிந்தது. இதுபோல் பலமுறை; என்னை எப்போதும், “ஹனி” என்று தான் அழைப்பான்; எனக்காக எவ்வளவு சிந்தித்துச் செயல்பட முடியுமோ, அதைச் செய்வான். எப்போதும் நன்மையையே செய்தான்; இறுதியில், சோதனைக்கு வந்தவர்களிடம் படகில் எங்களுக்கு அம்மை போட்டுள்ளது என்று கூறி திருப்பி அனுப்பி, அவனைக் காப்பாற்றினேன்; அவன் மிகவும் நன்றியுணர்ச்சியைக் காட்டினான்; உலகிலேயே தனக்கு கிடைத்த மிகச் சிறந்த நண்பர் நான் தான் என்றும், இப்போது அவனுக்கிருக்கும் ஒரே நண்பனும் நான் தான் என்றும் கூறினான். இதன் பின் மீண்டும் சுற்றுமுற்றும் பார்த்து, நான் அந்த கடிதத்தை எடுத்தேன்.”

“அதுவொரு குறுகலான இடம். நான் அதை என் கைகளில் எடுத்தேன். இரண்டில் ஒரு முடிவை நான் எடுத்தே ஆகவேண்டும் என்று எனக்குத் தெரியும் என்பதால், எனக்கு நடுக்கமாக இருந்தது. ஒரு நிமிடம் ஆழ்ந்து சிந்தித்தேன். என்னுடைய மூச்சை அடக்கிக் கொண்டு கவனமாகச் சிந்தித்தேன், அதன் பிறகு எனக்கு நானே கூறிக் கொண்டேன்:

“‘சரி, நான் நரகத்திற்கு போகத் தயார்’-பின்னர் அந்தக் காகிதத்தைக் கிழித்து எறிந்தேன்.”

இந்தப் பத்தியிலுள்ள ஆழ்ந்த மனிதநேயத்தையும், பரிவுணர்வையும் வலியுறுத்த வேண்டிய அவசியமே இல்லை.

“அனைத்து நவீன அமெரிக்க இலக்கியமும், Adventures of Huckleberry Finn என்ற மார்க் ருவைனின் புத்தகத்திலிருந்து வருகிறது” என்று சிறப்பான விதத்தில் எர்னெஸ்ட் ஹெமிங்வே புகழ்படக் கூறினார். திறனாய்வாளரும், கட்டுரையாளருமான H.L. மென்க்கென், இந்த நாவல் “உலகின் தலைசிறந்த இலக்கியங்களில் ஒன்று” என்றும், “ஓர் உள்ளார்ந்த கடமையாக அல்லாமல், புத்தகத்தின் மீதான பேரார்வத்தை ஒட்டி, இது எல்லா காலத்து மக்களாலும் மீண்டும் மீண்டும் படிக்கப்படும்” என்றும் குறிப்பிட்டார். மனிதயினத்தைக் குறித்து பலநேரம் அதிக பெருமை கொள்ளாத மென்க்கெனேவே கூட, ருவைன் அவருடைய எழுத்துக்கள் மூலம் மக்களைப் பார்த்து “வஞ்சமில்லாமல்” நகைக்கிறார். அவருடைய நேர்மையான கொதிப்பு வாழ்வு பற்றியதேயொழிய, அதன் பாதிப்பாளர்களைக் குறித்ததல்ல” என்று குறிப்பிட்டார்.

இதே காலக்கட்டத்தில், பெருமளவிற்கு கற்பனை-கலவாத (non-fiction) ஒன்றாக கருதப்பட்ட, அவரின் மற்றொரு பெரும் சுவாரசியமான புத்தகம் Life on the Mississipi (1883) என்பதாகும். Huckleberry Finn நூலை எழுதுகையிலேயே Life on the Mississipiயையும் ருவைன் எழுதினார்; இதற்காக அவர் பெரும் முயற்சி எடுத்தார். 1882இல் Howellsக்கு இது குறித்து அவர் எழுதுகையில், “இதற்கு முன்னர் ஒரு நூலை எழுவதற்கு நான் இந்தளவிற்கு பாடுபட வேண்டியதிருந்ததில்லை” என்று ருவைன் எழுதினார். ஆனால் இம்முயற்சியினால் ஓர் அருமையான புத்தகம் உருவானது; இது உள்நாட்டு யுத்தத்திற்கு சற்று முந்தைய ஆண்டுகளில் மிசிசிபி ஆற்றில் நீராவிப்படகை ஓட்டி வந்த ஒரு படகோட்டியின் வாழ்வைப் பற்றிய விரிவான, உணர்வுபூர்வமான, ஓர் ஆழ்ந்த படைப்பாகும்.

புத்தகத்தில் இத்தகைய ஆழ்ந்த உணர்வை ஏன் ருவைன் குவித்தார் என்பதை விளக்குவதற்கு கீழ்க்கண்ட பத்தி உதவும்: “படகு இயக்கும் விஞ்ஞானம் எதைக் கொண்டுள்ளது என்பதை அறிந்து கொள்வதில் ஒரு வாசகரைப் படிப்படியாக எடுத்துச்செல்ல, முந்தைய அத்தியாயங்களில், அந்த விஞ்ஞானத்தின் நுட்பங்களை அதிகமாகக் கொடுக்க முற்பட்டுள்ளேன்; அதேநேரம், இதுவொரு விந்தையான, வியப்புத் தரும் விஞ்ஞானம் என்பதையும், வாசகருக்கு இது மிகவும் மதிப்புடையது என்பதையும் காட்ட முற்பட்டுள்ளேன். இதன்மூலம் என்னுடைய துறையை நான் நேசிப்பதாக தெரிந்தால், அதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை, நான் செய்த வேறெந்த வேலையையும் விட அதை அதிகமாக நேசித்ததுதான் அதற்கு காரணம்; அதில் நான் அளவிடமுடியாத பெருமிதம் அடைந்தேன். காரணம் மிக தெளிவானது. அக்காலத்தில் படகு ஓட்டுனர் மட்டும் தான், தளைகள் எதுவுமில்லாமல், பூமியில் வாழ்ந்த ஏனைய மனிதர்களிடமிருந்து முற்றிலும் சுதந்திரமாக இருந்தார்கள். அரசர்கள், பாராளுமன்றம் மற்றும் மக்கள் விதிக்கும் தடைகளுக்கு உட்பட்டவர்கள்; பாராளுமன்றங்கள் அவற்றின் அரசியலமைப்பால் பிணைக்கப்பட்ட சங்கிலிகளால் கட்டுண்டிருந்தன; ஒரு செய்தித்தாளின் ஆசிரியர் சுயாதீனமாக இருக்க முடியாது, அவருடைய ஒரு கை கட்சியாலும், ஆதரவாளர்களாலும் பின்னே கட்டப்பட்டிருக்கும்; அவருடைய மனத்திலிருப்பதில் பாதியையோ அல்லது அதிகபட்சம் மூன்றில் இரண்டு பங்கையோ தான் கூறமுடியும்; எந்த பாதிரியாரும் சுதந்திரமானவர் அல்ல, அவருடைய மதக்கருத்துக்களைப் பொறுத்த வரையில், அவரால் முழு உண்மையையும் பேசிவிட முடியாது; அனைத்துவித எழுத்தாளர்களும் பொது மக்களினால் விலங்கிடப்பட்ட ஊழியர்கள் தான். நாம் வெளிப்படையாகவும், தைரியமாகவும் எழுதுகிறோம், ஆனால் அச்சுக்குக் கொடுப்பதற்கு முன் பல “மாற்றங்களைச்” செய்கிறோம். உண்மையில் ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும், குழந்தைக்கும் ஓர் எஜமானன் உண்டு; செய்யும் வேலையில் கவலைகளும், முனகல்களும் உண்டு; ஆனால் நான் எழுதும் நாட்களில், மிசிசிபி படகோட்டிக்கு எந்த தளையும் கிடையாது.”

Huckleberry Finnஇல் கையாளப்பட்டிருந்த அமெரிக்க வாழ்வின் இருண்ட கூறுபாடுகள், அவ்வளவாக புகழ் பெற்றிராத, ஆனால் குறிப்பிடத்தக்க புத்தகங்களான, A Connectivut Yankee in King Aruthur’s Court (1889), மற்றும் Pudd’nhead Wilson (1894) ஆகியவற்றில் மிக அதிகமாகவே எடுத்துக்காட்டப்பட்டிருந்தன. பிந்தைய நூல், ருவைன் படைப்பில் முழுமையாக வந்துள்ள பெண் பாத்திரங்களில் ஒருத்தியை, வெளிர் நிறமுடைய அடிமை ரோக்சனாவைக் கொண்டுள்ளது; தன்னுடைய குழந்தையை விற்காமல் தடுப்பதற்காக போராடும் இவர், தன்னுடைய எஜமானருடைய குழந்தையின் தொட்டிலில் தன்னுடைய குழந்தையை மாற்றிவிடுகிறார்.

ஆர்தர் அரசர் மற்றும் அவருடைய குதிரைப்படையினர் காலத்தில், மத்தியகால இங்கிலாந்திற்கு சரியான நேரத்தில் திரும்பிவந்த, ஹார்ட்போர்டிலுள்ள கனக்டிக்கட்டில் (இங்கு தான் ருவைன் வசித்து வந்தார்) வசித்து வந்த, 19ஆம் நூற்றாண்டு அமெரிக்கரான ஹாங்க் மோர்கன் பற்றிய முந்தைய மிதமான நாவல், ஒப்பீட்டளவில், தொடக்கத்தில் 1884ஆம் ஆண்டில் கருக்கொண்டிருந்தது.

ஆனால் ஜஸ்டின் காப்ளான், ருவைனின் வாழ்க்கை சரிதத்தில் குறிப்பிடுகையில், “ஆண்டுவாக்கில் இந்த கேலிச்சுவைக் கருத்தானது அதன் போக்கில் மாறி, நையாண்டி என்பதிலிருந்து இழிவுபடுத்தும் சித்தரிப்பு என்பதை நோக்கி திரும்பியது. இதில் மத்தியகால இங்கிலாந்து நெறிமுறைகளும், ஹாங்க் மோர்கனின் அமெரிக்க தொழில்நுட்பமும்-எழுத்தாளர் இரண்டையுமே பார்த்திருக்கும் நிலையில், இரண்டுமே தோல்வியடைகின்றன-ஒன்றோடொன்று மோதி அழித்து கொள்கின்றன” என்று வாதிட்டுள்ளார்.

1901ம் ஆண்டு மிசௌரியில் மூன்று கறுப்பர்கள் தூக்கிலிட்டு கொலை செய்யப்பட்டதால் எழுந்த சீற்றத்தையொட்டி ருவைன் The United States Of Lyncherdom என்னும் குறிப்பிடத்தக்க கட்டுரையை எழுதினார்; இது அவர் மறைந்த பின்னர் (1923இல்) வெளியிடப்பட்டது. இக்கட்டுரையில், தூக்கிலிட்டு கொலை செய்யும் வெறிக்கூட்டம் சித்திரவதை செய்து கொல்லுதலை மகிழ்ச்சியுடன் செய்கிறார்கள் என்ற கூற்றை ஆசிரியர் எதிர்க்கிறார். மாறாக வெறிக்கூட்டம் தங்கள் உடன்வாழ் மக்கள் ஏளனமாக நினைப்பார்களோ என்பதற்காக இதற்கு உடன்படுவதாகக் கூறுகிறார். இத்தகைய கொலைகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற உருக்கமான கருத்தில்-அப்பொழுது அமெரிக்காவில் ஆண்டு ஒன்றிற்கு 100க்கும் மேற்பட்ட அத்தகைய படுகொலைகள் நிகழ்ந்தன-ருவைன் எழுதினார்: “இத்தகைய கொலைகளுக்கு நிவாரணம் இப்படி இருக்கலாம்: அடித்துக் கொலை செய்வதற்கு சமூகத்தின் அடிமனத்திலுள்ள கேள்விக்கு அப்பாற்பட்ட இரகசிய இடங்களில் மறைந்துள்ள ஆழ்ந்த ஒப்புதல் கொடுக்க முடியாத நிலைமையை ஊக்குவிக்க, ஆதரவு கொடுக்க, வெளியே கொண்டுவர பாதிக்கப்பட்ட ஒவ்வொரு சமூகத்திலும் ஒரு தைரியமான நபரை நிலைநிறுத்துங்கள்.”

தம்முடைய இளமைகாலம் முழுவதும், ருவைன் அமெரிக்க அரசியல் வாழ்வையும், அதை நடத்துபவர்களையும் கடுமையாகச் சாடி வந்தார். ருவைனின் நகைச்சுவை ததும்பும் கருத்துக்களைப் படித்த பின்னர், தம்மையே முக்கியமாக கருதிக் கொள்ளும், திருட்டுப் பெருநிறுவனங்களின் கைக்கூலிகள் போலுள்ள, ஒட்டுமொத்தமாக அமெரிக்க காங்கிரஸ் என அறியப்பட்டிருக்கும் அமைப்பின் மீது யார் மதிப்பைக் கொள்வார்கள்? உதாரணமாக, அவர் ஒருமுறை குறிப்பிட்டார்: “நீங்கள் ஒரு முட்டாள் என்று வைத்துக் கொள்ளுவோம். நீங்கள் ஒரு காங்கிரஸ் உறுப்பினராக இருக்கிறீர்கள் என்றால், இந்நிலையில் நான் முதல்வரியில் கூறியதையே தான் மீண்டும் கூறுவேன்.” What is Man என்பதில் நாவலாசிரியர், “ஒரு காங்கிரஸ் உறுப்பினருக்கு எவற்றைக் கற்பிக்க முடியுமோ, அவை அனைத்தும் ஒரு தெள்ளுப் பூச்சிக்கும் கற்பிக்கப்பட முடியும்” என்று குறிப்பிட்டார். தனிப்பட்ட முறையில் அவருக்குக் கூறப்பிடித்தது: “காங்கிரஸ் உறுப்பினரைத் தவிர, அமெரிக்காவில் இயல்பான குற்றஞ்சார்ந்த வகுப்பினர் என்று வேறு ஒருவரும் இல்லை என்பதை உண்மைகளையும், புள்ளிவிவரங்களையும் கொண்டு எளிதில் நிரூபிக்கலாம்.”

ருவைனின் வாழ்க்கையில் பல குறிப்பிடத்தக்க பாகங்கள் இந்த வாரப் பாராட்டுக்களில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளன. உலிசஸ் எஸ். கிரான்டின் (Ulysses S. Grant) நினைவுக்குறிப்புக்கள் வெளியிடப்பட்டதில் ருவைனின் முக்கியமாக பங்களிப்பும் அவற்றுள் ஒன்றாகும். தெற்கே அடிமைமுறைக்கு எதிராக இராணுவத் தோல்வியைக் கொடுத்ததில் மிகவும் பொறுப்பான அமெரிக்க உள்நாட்டு யுத்த தளபதிகளில் ஒருவராக கிரான்ட் விளங்கினார்; இதன் பின்னர் இவர் அமெரிக்க ஜனாதிபதியானார். பிரத்யேகமான அரசியல் மற்றும் இலக்கிய மதிப்புடன் கூடிய இந்த நினைவுக் குறிப்புக்களை ருவைன் பதிப்பித்திருக்காவிட்டால் அவை வெளிச்சத்திற்கு வராமலேயே போயிருக்கும். கிராண்ட் மீது வைத்திருந்த பெரும் மதிப்புடன் ருவைன் இதை செய்திருந்தார். 1885இல், தான் இறப்பதற்கு ஐந்து நாட்கள் முன்புதான் நினைவுக்குறிப்புக்களை கிரான்ட் எழுதி முடித்திருந்தார். கிராண்டின் செல்வத்தைப் பிறர் சூறையாடியதால், கடைசி காலத்தில் வறுமையில் தள்ளப்பட்டிருந்த அவருடைய மனைவியை வறுமையிலிருந்து காப்பாற்ற, ருவைன் அந்நூலின் வருமானத்தில் 75 சதவீதத்தை கிராண்டின் குடும்பத்திற்கு அளித்தார்.

செப்டம்பர் 1897லிருந்து மே 1899 வரை வியன்னாவில் இருந்தது ருவைனின் வாழ்க்கையில் மற்றொரு சுவாரசியமான காலப்பகுதியாகும். அந்த எழுத்தாளரின் வாழ்க்கையில் இடம்பெற்ற இக்காலப்பகுதியைக் குறித்து இக்கட்டுரையில் போதியளவு எழுத இயலாது (Our Famous Guest: Mark Twain in Vienna எனும் அருமையான புத்தகத்தில் Carl Dolmetsch இதை எழுதியுள்ளார்). ஆனால் ஆளும் கட்சியின் யூத எதிர்ப்புணர்வைக் (anti-semitism) கண்டித்தும், எங்கும் துன்புறுத்தலுக்கு உட்பட்டிருந்த யூதர்களுக்கு உளமார்ந்த பரிவுணர்வையும், பாராட்டுதலையும் வெளிப்படுத்தியும் அமெரிக்க பத்திரிகைகளுக்கு ருவைன் வியன்னாவில் இருந்த போது தான் எழுதி வந்தார் என்பதைச் சுருக்கமாக குறிப்பிட்டே ஆக வேண்டும்.

ருவைனின் வாழ்க்கையிலும் தனிப்பட்ட பெருஞ்சோகங்களுக்கு குறைவில்லை; இவருடைய இலக்கிய மற்றும் தனிப்பட்ட பரிவுணர்வுகளுக்கு இவையும் காரணமோ என்று கூட ஒருவர் சந்தேகிக்கலாம். ருவைனுடன் உடன்பிறந்த ஆறு குழந்தைகளில் மூன்று சிறுவயதிலேயே இறந்துவிட்டன. இவர்களுள் தப்பிப்பிழைத்த ஒருவர் தான், இவருடைய சகோதரர் ஹென்ரி; இவர் 1858இல் 19 வயதிலேயே ஆற்றுப் படகு விபத்து ஒன்றில் இறந்து போனார். பின் 1872இல் ருவைன் தன்னுடைய ஒருவயது மகன் லாங்டனை தொண்டை அடைப்பான் நோயில் இழக்க நேரிட்டது; இதற்கு ருவைன் தன்னையே பெரிதும் குறைகூறிக் கொண்டார். அவருடைய மூன்று மகள்களில் ஒருவரான சூசி க்ளெமென்ஸ் 1896இல் மூளை தோல் அழற்சியினால் மரணமடைந்தாள். ருவைனை விட பத்து வயது இளையவரான அவருடைய மனைவி ஒலிவியா (ருவைன் இவரை பெரிதும் நேசித்தார்), 1904இல் இறந்து போனார். இவருடைய கடைசிப் பெண் ஜீன் 1909இல் கிறிஸ்துமஸுக்கு முன் இறந்து போனார். ஜீனின் இறப்பு நேர்ந்த ஏழு மாதங்களில் ருவைனின் நெருங்கிய நண்பர் எண்ணெய் தொழிலதிபர் ஹென்ரி ரோஜர்ஸ் காலமானார்.

1893இல் பெரும் நிதியப் பேரழிவிலிருந்து மீள்வதற்கு ருவைனுக்கு ரோஜர்ஸ் பெரிதும் உதவினார். தம்முடைய திவால் நிலையை அறிவித்த பின்னர், கடன்காரர்களுக்குரிய கடனை அடைப்பதற்காக ருவைன் சொற்பொழிவாற்றும் உலகளாவிய பயணத்தை மேற்கொண்டார். எழுபது வயதை நெருங்கிக் கொண்டு, சட்டப்படி அவ்வாறு செய்ய வேண்டிய தேவை இல்லை என்றாலும், ருவைன் பெரும் முயற்சிகள் எடுத்து தன் கடன்காரர்களுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டியதனைத்தையும் திருப்பிக் கொடுத்தார்.

ருவைனின் நகைச்சுவையில், குறிப்பாக அவருடைய பிற்காலத்திய நகைச்சுவையில், மனிதர்களை அவமதிக்கும் உணர்வுள்ளதென்றால், அதை அவருடைய இந்த சொந்த துன்பங்கள் மற்றும் பெரும் சோகங்கள் இவற்றின் பின்னணியிலும், அமெரிக்காவின் அரசியல், சமூகப்போக்கின்மீது அவருக்குள் வளர்ந்து வந்த ஏமாற்றத்தின் பின்னணியிலும் தான் பார்க்க வேண்டும்.

அமெரிக்க அரசாங்கத்தின் “ஜனநாயகத்தைப் பரப்புதல்” என்ற திட்டத்தை ஆரம்பத்தில் நம்பிய ருவைன், ஸ்பெயின்-அமெரிக்க யுத்தத்தின் போது பிலிப்பைன்ஸில் அமெரிக்க இராணுவத் தலையீட்டிற்கு ஆதரவளித்தார். ஆனால் தான் தன்னுடைய பார்வையை முற்றிலும் எதிரிடையாக மாற்றிக் கொண்டதாகவும், முழு தலையீடும் “மீட்பதற்கல்ல, வெற்றி கொள்வதற்குத் தான்” என்ற முடிவுக்கு வந்துவிட்டதாகவும் 1901வாக்கில் அவர் எழுதினார். பின்னர், அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புக் கழகத்தின் துணைத் தலைவராக ஆகுமளவிற்கு சென்றார்.

ருவைனின் வாழ்வையும், தொழிலையும் குறித்து எழுதும் பல செய்தி ஊடகங்கள், இறுதிக்காலத்தில், அமெரிக்க சமூக மற்றும் அரசியல் வாழ்க்கைக் குறித்த அவரின் அதிகளவில் ஆழமான, தீவிரத்தன்மை கொண்ட சிந்தனைகளை மூடி மறைத்துவிடுகின்றன. இளம் அமெரிக்க பூர்ஷ்வா ஜனநாயகம் ஒரு புது சக்தியாக மாற்றமடைவதை ருவைன் கண்டு வந்தார். துளிரிலேயே அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வெறுத்த ருவைன், அதை அப்பட்டமாக விமர்சிக்கும் ஒரு விமர்சகரானார். ருவைனின் வாழ்விலிருந்த இந்த ஆழமான போக்கை, இன்றைய முதலாளித்துவ செய்தி ஊடகங்கள் நினைவுகூரவும் விரும்புவதில்லை; யாருக்கும் நினைவுபடுத்தவும் விரும்புவதில்லை.

ஆரம்பகால தொழிற்சங்க இயக்கமான Knights of Labourக்கு நீண்டகாலம் ஆதரவளித்து, இதனால் சீன குடியேற்றத்திற்கு எதிரான ஒரு விரோதியாகிப் போன ருவைன், 1880களின் இறுதியில் முற்றிலும் தீவிரமான முடிவுகளுக்கு வந்தார். “அந்த நூற்றாண்டில் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த நம்பிக்கையின் ஏதேவொருவகை நெருக்கடிகளை கடந்து வந்து கொண்டிருந்தார்... “மாற்றம்…எனக்குள் இருக்கிறது” என்று காப்ளான் எழுதுகிறார். ஹோவெல்ஸுக்கு அவர் எழுதுகையில், “1887 ஆகஸ்டில் இதை அவர் கூறியபோது, கார்லைலின் பிரெஞ்சுப் புரட்சியை மறுமுறை படித்துக் கொண்டிருந்தார்; “முடியாட்சி, பிரபுத்துவம், கத்தோலிக்கத் திருச்சபை என்று பழங்கால அதிகாரத்துவ வடிவங்கள் அனைத்திற்கும் முடிவுகட்ட அழைப்பு கொடுக்கும் அளவிற்கு, வாழ்வும் சூழலும்” அவரை ‘ஒரு Sansculotte! ஆக’ [1789 பிரெஞ்சு புரட்சிக்காலத்திய தொழிலாள வர்க்க தீவிரவாதிகள்]-வெளிறிய, குணநலனற்ற Sansculotte ஐ போலல்லாமல், ஒரு மாரட்டைப் (பிரெஞ்சு புரட்சியின் தலைவர்) போல செய்திருந்திருந்தது என்பதை அவர் உணர்ந்தார்.”

இன்றைய செய்தி ஊடகமும் அதேபோல ருவைனின் மத-எதிர்ப்பு எழுத்துக்களைக் குறித்து தயக்கத்துடன் ஏதும் கூறுவதில்லை. ஆரம்பத்தில் ஒருவித கடவுள் வழிபாட்டிற்கு ஆதரவு கொண்டிருந்த ருவைன், இறுதியில் அமைக்கப்பட்டிருந்த மத பிரிவுகள் அனைத்தையும் நிராகரித்து, மதக் கருத்துக்களை, குறிப்பாக அவருடைய பிற்கால படைப்புகளில், கடும் திறனாய்வுகளுக்கு உட்படுத்தினார். Innocents Abroad, Tom Sawyer போன்ற ஆரம்பகால எழுத்துக்களில் கூட ருவைன் இறையியல் விஷயங்களில் நியாயமான நிராகரிப்பையும், நகைச்சுவைப் பார்வையையும் தான் கையாண்டார். ஆனால் அவருடைய பிந்தைய படைப்புக்களில், குறிப்பாக Letters from Earh இல் (1909ல் எழுதப்பட்டது, ஆனால் அப்போது உயிருடன் இருந்த அவருடைய மகளின் பயத்தால் அது 1962 வரையில் வெளியிடப்படவில்லை), அவர் ஒரு தைரியமான, போர்க்குணப் போக்கிற்குத் திரும்பி இருந்தார். “மனிதன் அவனுடைய மிக மிக சிறந்ததன்மையில் இருக்கும் போது கூட, மட்டமான நிக்கல்-முலாம் பூசப்பட்ட ஒருவகை தேவதையைப் போன்றே இருக்கிறான்; அவன் மோசமான நிலையில் இருக்கும்போது , பேச முடியாத, கற்பனை செய்யமுடியாத நிலைமையில் இருக்கிறான்...” என்பது யதார்த்தமாக இருந்த போதினும், “தானே படைத்தவனின் செல்லப்பிள்ளை என்று நினைக்கும்” மனிதகுலத்தின் சுயதிருப்தியை சாத்தானாக உருவகப்படுத்தி ருவைன் Letters இல் வேடிக்கையாக விளக்கியிருந்தார்.

இதில் அவர் கடவுளையும் விமர்சிக்காமல் விடவில்லை. “கடவுளின் அறநெறிகளையும், தோற்றத்தையும், நடத்தையையும் இன்னும் சிறிது கூடுதலாக ஆராய்வீர்களா? ஞாயிற்றுக்கிழமை பள்ளியில், கடவுளை தங்களின் முன்மாதிரியாக கொண்டு, அவர்களால் எந்தளவிற்கு முடியுமோ, அந்தளவிற்கு அவரைப் போன்றிருக்க... குழந்தைகள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்பதை நீங்கள் நினைத்து பார்ப்பீர்களா?” இதன்பின் ருவைன், ''உறுதியளிக்கப்பட்ட நாட்டில்'' வசிக்கும் மக்களைத் துடைத்தழிக்க பண்டைய இஸ்ரேலியர்களுக்கு அளிக்கப்பட்ட விவிலிய ஆணைகளையும் பட்டியலிடுகிறார். இத்தகைய முன்மாதிரியுடன் அறநெறி போதிக்கப்பட்டால், சமுதாயம் கொடூரமான மனிதயின மோதலை நிரந்தரமாக்குவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று ருவைன் கூறுகிறார். குறிப்பாக காட்டுமிராண்டித்தனமான காலனித்துவ வடிவங்களிலிருந்த இத்தகைய மோதல்களை ஆதரித்த அல்லது வக்காலத்து வாங்கிய மதக் கருத்துருக்களை தாக்கும் நிலைக்கு அவரை கொண்டு வந்த அவை தான் ருவைனின் திடீர்மாற்றத்திற்குக் காரணங்களாக இருந்தன.

My Mark Twain இன் முடிவுரையில், அவருடைய நெருக்கமான நண்பரும், ஒரு திறனாய்வாளரும், அவருடைய சமகாலத்திய எழுத்தாளருமான வில்லியம் டீன் ஹோவெல்ஸ் குறிப்பிட்ட பிரபலமான வாசகத்தில்: “எமர்சன், லாங்கபெல்லோ, லோவெல், ஹோம்ஸ்-இவர்கள் அனைவரையும் நான் நன்கு அறிவேன்; அதேபோல் எஞ்சிய நம் ஞானிகள், கவிகள், தீர்க்கதரிசிகள், திறனாய்வாளர்கள், நகைச்சுவையாளர்களையும் அறிவேன்; அவர்கள் அனைவரும் ஒருவரைப்போல் ஒருவர் இருப்பார்கள் அல்லது வேறேதேனும் ஓர் இலக்கியவாதியைப் போலிருப்பார்கள். ஆனால் கிளெமென்ஸ் முற்றிலும் தனிப்பட்டவர்; ஒப்பிட இயலாதவர்; எமது இலக்கியத்தின் லிங்கன்.” என்றார், இந்த அறிக்கையுடன் நாம் முழுமையாக உடன்படுகிறோம்.

அதற்கு முந்தைய வாக்கியத்தில் ருவைனின் இறுதி ஊர்வலத்தில் அவருடைய தோற்றத்தைப் பற்றிய ஹோவெலின் வர்ணனை அதிகம் மேற்கோளிடப்படவில்லை என்றாலும், சற்றும் குறைவில்லாத உண்மையாக இருக்கிறது: “நான் நன்கு அறிந்திருந்த முகத்தை ஒரு கணம் பார்த்தேன்; அதில் நான் பலமுறை கண்டிருந்த பொறுமைதான், பொறுமை குடிகொண்டிருந்தது; ஒரு புதிர் போல, ஒரு மகத்தான, மௌனம் நிறைந்த கௌரவம்; இயற்கையின் ஆழத்திலிருந்து வெளிப்பட்ட ஓர் இணைவு; இயற்கையின் சோகம் ததும்பிய தீவிரத்தன்மை அவருடைய நகைச்சுவையாக வெளிப்பட்டது; அறிவற்றவர்கள் அதுதான் அவருடைய முழுமை என்று கருதினார்கள்.” அந்த சிறந்த படைப்பாளியின் சிக்கலான தன்மையைச் சுட்டிக்காட்டும் இந்த வார்த்தைகள் எவ்வளவு சரியாக பொருந்துகின்றன.

அந்த நிகழ்விற்கு ஒரு நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் மார்க் ருவைனை ஆராயும் போது, 2010இல் உள்ள அமெரிக்காவைக் குறித்து அவர் என்ன சொல்லக்கூடும் என்பது குறித்து ஒருவர் வியப்படையாமல் இருக்க முடியாது. மோசமான சமூக, அரசியல் போக்குகளை அவற்றின் ஆரம்பகாலம் முதல் முதிர்ச்சியடைந்த வரையில் கண்டுற்றவர் என்ற வகையில், அவரின் அதிர்ச்சியையும், பெரும் ஏமாற்றத்தையும் ஒருவரால் கற்பனை செய்து பார்க்க முடியும்.

எத்தனைவிதமான இலக்குகள் தம்மைத்தாமே முன்னிறுத்துகின்றன! வெள்ளை மாளிகையிலும், காங்கிரசிலும் உள்ள பெரும் வசதியுடன் வாழும் கபட வேடதாரிகள், பொய்யர்கள்; இடைவிடாத பேராசை கொண்டிருக்கும் பெருநிறுவன பிரபுக்கள், காலனியாதிக்கம் மீண்டும் வெளிப்பட்டுள்ளதை நியாப்படுத்தும் தேசியவாத பத்திரிகை ஆசிரியர்கள், தாங்களே உருவாக்கிய கடவுள் வடிவத்துடன் கோடீஸ்வரர்களாக விளங்கும் மத போதகர்கள்; போலிகள், தொலைக்காட்சி வர்ணனையாளர்களின் சிரிக்கும் முகங்கள், “சுய-உதவி” வல்லுனர்களின் ஏமாற்றுத்தனங்கள்; மக்களின் செல்வத்தைச் சுரண்டும் ஏனைய கயவர்கள் அனைவரையும் ருவைனின் சொற்களில் கூறுவதானால், “நரகத்தில் சூடேறிய சிறைகளுக்கு தயாராக கனிந்து நிற்கின்றன!” அவருடைய வாரிசுகள் இன்று எங்கே இருக்கிறார்கள்?