World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan election: the NSSP's electoral cretinism

இலங்கை தேர்தல்: நவசமசமாஜக் கட்சியின் தேர்தல் மதிகெட்டதனம்

By Wije Dias
26 January 2010

Use this version to print | Send feedback

இலங்கை ஜனாதிபதி தேர்தலானது சோசலிச சமத்துவக் கட்சிக்கும் (சோ.ச.க.) நவசமசமாஜக் கட்சி மற்றும் ஏனைய தீவிரவாத அமைப்புக்களுக்கும் இடையிலான இணைக்க முடியாத வர்க்கப் பிளவை கோடிட்டுக் காட்டியுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ அல்லது ஜெனரல் சரத் பொன்சேகா, இருவரில் யார் தேர்தலில் வெற்றி பெற்றாலும், அடுத்த அரசாங்கம் வாழ்க்கைத் தரத்தின் மீது கடுமையான தாக்குதல் தொடுக்கும் என எச்சரித்து, சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டவும் கல்வியூட்டவும் சோ.ச.க. பிரச்சாரம் செய்கின்றது.

1977ல் நவசமசமாஜக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்தே, அது முதலாளித்துவ கட்சிகளுடன் சூழ்ச்சித்திட்டங்களை தீட்டுவதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது. இத்தகைய சதி வேலைகள், ஆளும் கும்பல் நாடகபாணியில் வலது பக்கம் நகர்கின்ற நிலையில், குறிப்பாக இழிந்த முறையில் மேற்கொள்ளப்பட்டன. இப்போது அது, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தத்தை ஈவிரக்கமின்றி முன்னெடுத்தமைக்கு பொறுப்பாளிகளான இராஜபக்ஷ அல்லது பொன்சேகாவின் செல்வாக்கைப் பெறும் முயற்சிக்கு பிரேரிக்கின்றது.

ஜனவரி 17 அன்று, லக்பிம பத்தரிகைக்கு அவர் வழமையாக எழுதும் பத்தியில், நவசமசமாஜக் கட்சி தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான விக்கிரமபாகு கருணாரட்ன, கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தில் தெளிவாக தனக்கென ஒரு சொந்த இடத்தை எதிர்பார்க்கின்றார். "நாங்கள் குறைந்தபட்சம் 100,000 வாக்குகளைப் பெற்றால், என்னுடைய இருப்புக்கு மதிப்பு இல்லாமல் போகாது. ஆளும் வர்க்கம் ஒரு இலட்சம் பேரின் ஆதரவைக் கொண்ட ஒரு நபராக என்னை நடத்தும்... சலுகைகளை வெற்றிகொள்ள நாங்கள் அழுத்தத்தை தீவிரமாக்கவேண்டும். சிறந்த விடயம் என்னவெனில், அந்தப் பணிக்காக ஒருவரை தயார் செய்வதே," என அவர் பிரகடனம் செய்கின்றார்.

எல்லா சந்தர்ப்பவாதிகளைப் போலவே, கருணாரட்னவும் எண்ணிக்கை, அரசியல் சதியாலோசனைகள் மற்றும் போலி மாயைகளை முன்னிலைப்படுத்துவதில் முன்னீடுபாடு கொண்டுள்ளார். நவசமசமாஜக் கட்சி தலைவர், தொழிலாளர்களின் நலன்களை நெஞ்சில் கொண்டிருந்தாலும் கூட - அவர் அவ்வாறு இல்லை - 100,000 அல்லது 200,000 அல்லது அதற்காக இரண்டு மில்லியன் வாக்குகளை பெற்ற ஒருவருக்கு இராஜபக்ஷவும் பொன்சேகாவும் செவிமடுப்பார்களா?

முந்தைய முடிவே இதற்கு பதிலாகும். ஒரு சில செல்வந்த கும்பலின் நலன்களுக்காகவே முதலாளித்துவ பிரதிநிதிகள் செயற்படுகின்றனர். தேர்தல் முடிந்த உடனேயே, அவர்கள் மில்லியன்கணக்கான வாக்காளர்களுக்கு அவர்கள் அளித்த பிரச்சார வாக்குறுதிகளை கிழித்தெறிந்துவிட்டு, பெரும் வர்த்தகர்களின் நிகழ்ச்சித் திட்டத்தை அமுல்படுத்த முன்செல்வர். ஆளும் வர்க்கத்தைப் பொறுத்தளவில், தனது கோரிக்கைகளை சிறப்பாக அமுல்படுத்தக்கூடியவர் யார் மற்றும் தொழிலாளர்களின் எந்தவொரு எதிர்ப்பையும் தணிக்கக் கூடியவர் யார் என்பதே பிரச்சினையாகும்.

கருணாரட்னவின் மாயாஜால எண்ணிக்கையில் மயங்கிப்போயுள்ளவர்கள் ஒருசில வரலாற்றுப் பாடங்களை மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். 1980களில் தனது திறந்த பொருளாதார வேலைத் திட்டத்தை முன்னெடுக்கத் தொடங்கிய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, பொது வேலை நிறுத்தம் ஒன்றை நசுக்குவதன் பேரில் 100,000 அரசாங்க ஊழியர்களை வேலைநீக்கம் செய்வதையிட்டு கவலைகொள்ளவில்லை. 1989-90களில், ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) அரசாங்கம், நாட்டின் தெற்கில் எதிர்ப்புக்களை நசுக்க பாதுகாப்புப் படைகளையும் கொலைப் படைகளையும் கட்டவிழ்த்து விட்டது. இதில் 60,000 இளைஞர்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டது. 2006ல், யுத்தத்தால் 60,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருந்த போதும் இராஜபக்ஷ நாட்டை மீண்டும் உள்நாட்டு யுத்தத்துக்குள் மூழ்கடித்தார். கடந்த மே மாதம் புலிகள் தோல்வியடைந்த பின்னர், இராஜபக்ஷவும் அவரது உயர்மட்ட ஜெனரலான பொன்சேகாவும் கிட்டத்தட்ட 300,000 பொது மக்களை சுற்றிவளைத்ததோடு அவர்களை சட்ட விரோதமாக தடுப்பு முகாங்களில் சிறை வைத்திருந்தனர்.

பத்தாயிரக்கணக்கானவர்களின் சாவுக்குப் பொறுப்பான ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகள், கருணாரட்ன போன்ற குட்டி முதலாளித்துவ புள்ளிகளை அலட்சியமாகக் கருதினர் --அவர்கள் நிலமை பொருந்தும் போது இந்த குட்டிமுதலாளித்துவ புள்ளிகளை பயன்படுத்திக்கொண்டதோடு அவர்களது சேவை தேவையற்ற போது அவர்களை புறக்கணித்தனர். கருணாரட்ன போன்ற அரசியல்வாதிகளுக்குத் தேவை என்னவெனில், முற்றிலும் கொள்கையின்மையும் அவர்களது புதிய அரசியல் பங்காளிகளின் தேவைகளுக்கு இடையில் சமநிலைப்படுத்தும் இயலுமையும் மற்றும் தொழிலாளர்களை தொடர்ந்தும் ஏமாற்றக்கூடியவாறு, அவர்களின் கண்களில் போதுமான நம்பகத்தன்மை உடையவர்களாக காட்டிக்கொள்ளும் இயலுமையுமே.

நவசமசமாஜக் கட்சி ஒரு மார்க்சியக் கட்சியோ அல்லது ட்ரொட்ஸ்கிசக் கட்சியோ கிடையாது. லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க.), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் (ஸ்ரீ.ல.சு.க.) முதலாளித்துவ கூட்டரசாங்கத்தினுள் நுழைந்துகொண்டு, சோசலிச அனைத்துலகவாதக் கொள்கைகளை காட்டிக்கொடுத்து ஒரு தசாப்தத்தின் பின்னரே, அதில் இருந்து பிரிந்து 1977ல் நவசமசமாஜக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது. ல.ச.ச.க. யை உள்ளடக்கிய இரண்டாவது கூட்டரசாங்கம், 1971ல் சிங்கள கிராமப்புற இளைஞர்களின் எழுச்சியை நசுக்கி, பெளத்த மதத்தை அரச மதமாக்கியதோடு தமிழர்களுக்கு எதிரான ஒரு தொகை பாகுபாட்டு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்திய இனவாத அரசியலமைப்பை அமுல்படுத்திய போதும், கருணாரட்ன அதில் இருந்தார். இரண்டாவது கூட்டணி அரசாங்கத்தின் போது தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் கட்சி பரந்தளவில் அதிருப்திக்குள்ளான பின்னரே கருணாரட்ன ல.ச.ச.க. யில் இருந்து பிரிந்தார். எவ்வாறெனினும், வர்க்க ஒத்துழைப்பு மற்றும் பாராளுமன்ற மத்தியவாதம் என்ற கூட்டரசாங்கவாத அரசியலில் இருந்து நவசமசமாஜக் கட்சி பிரியவில்லை.

தமிழ் சிறுபான்மையினரையும் மற்றும் புலிகள் போன்ற ஆயுதக் குழுக்களையும் அடக்குவதற்கு வடக்கு மற்றும் கிழக்குக்கு இந்திய "அமைதிப் படை" துருப்புக்கள் நுழைவதற்கு வழிவகுத்த 1987 இந்திய-இலங்கை உடன்படிக்கையையும் நவசமசமாஜக் கட்சி ஆதரித்தது. 1990களின் நடுப்பகுதியில், மக்கள் விடுதலை முன்னணியுடன் (ஜே.வி.பி.) கூட்டணியை ஸ்தாபித்துக்கொண்ட கருணாரட்ன, இந்த சிங்கள அதிதீவிரவாத கட்சி உழைக்கும் மக்களின் நலன்களை காக்கும் ஒரு முற்போக்கான சக்தி என்ற ஆபத்தான பொய்யை பரப்பினார். 2001ல் இருந்து, யூ.என்.பி. யை "குறைந்த தீங்காக" ஆதரித்த நவசமசமாஜக் கட்சி, யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வழிமுறையாக ஏகாதிபத்திய அனுசரணையிலான "சமாதான முன்னெடுப்பில்" புலிகளுடனான யூ.என்.பி.யின் பேச்சுவார்த்தைகளை ஆதரித்தது. இத்தகைய அனைத்து சதி வேலைகளும் உழைக்கும் மக்களுக்கு அழிவைத் தருவதிலேயே முடிவடைந்தன.

2009 முற்பகுதியில், இராஜபக்ஷ அரசாங்கம் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை உக்கிரமாக்கிய நிலையிலும் அரசியல் எதிரிகளுக்கு எதிரான அதன் அடக்குமுறையின் மத்தியிலும், யூ.என்.பி.யின் "சுதந்திரத்துக்கான மேடையில்" இணைந்துகொண்ட நவசமசமாஜக் கட்சி, அரசாங்கத்தில் இருக்கும் போது ஒடுக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் நீண்ட வரலாற்றைக் கொண்ட வலதுசாரி யூ.என்.பி. யை, ஜனநாயகத்தின் பாதுகாவலனாக முன்னிலைப்படுத்த உதவியது. "இன ஒருமைப்பாடு மற்றும் ஜனநாயகத்துக்காக அர்ப்பணித்துக்கொண்டதற்காக யூ.என்.பி. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு" தனது "மதிப்பை" பிரகடனம் செய்வதற்காக கருணாரட்ன கடந்த பெப்பிரவரியில் யூ.என்.பி. யின் கூட்டங்களில் தோன்றினார்.

கருணாரட்னவும் அவரது சக சந்தர்ப்பவாத கட்சியான ஐக்கிய சோசலிச கட்சியும் (ஐ.சோ.க.), விக்கிரமசிங்கவை "ஜனநாயகவாதியாக" சோடிப்பதன் மூலம், தமிழ் மக்களின் படுகொலைக்கும் அவர்கள் சிறைவைக்கப்பட்டதற்கும் பொறுப்பாளியான பொன்சேகாவை ஒரு ஜனநாயக சாதனையாளராக முன்னிலைப்படுத்துவதில் யூ.என்.பி. க்கு பெரும் உதவிகளை வழங்கியுள்ளனர். "சுதந்திரத்துக்கான மேடையுடன்" தனது தொடர்ச்சியான ஒத்துழைப்பைப் பற்றி ஐ.சோ.க. பெருமைபட்டுக்கொள்ளும் அதே வேளை, நிறைவேற்றும் அரசியல் சூழ்ச்சியாளரான கருணாரட்ன, ஏற்கனவே கிழிந்துபோயுள்ள தனது நற்பெயரை இந்த கூட்டணி மேலும் கிழித்துவிடுமோ என தன்னுணர்வுகொள்கின்றார். தன்னை தூரவிலக்கிக் கொள்வதன் பேரில், அந்த கூட்டணியில் சேர்ந்தது "ஒரு தவறாக" இருந்திருக்கலாம் எனவும் கூட அவர் பகிரங்கமாக பிரகடனம் செய்கின்றார்.

இந்தப் பிரகடனத்தை எவரும் குறிப்பிடத்தக்க அடிப்படை மாற்றமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. மாறாக, இது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிய எம்.கே. சிவாஜிலிங்கத்துடன் நவசமசமாஜக் கட்சியின் புதிய சந்தர்ப்பவாத கூட்டணிக்கு வழிவகுத்துள்ளது. தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் ஒரு கூட்டமைப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பானது கடந்த மே மாதம் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்படும் வரை அவர்களின் ஊதுகுழலாக செயற்பட்டது. அதிலிருந்து தமிழ் கூட்டமைப்பு தன்னை கொழும்பு அரசியல் ஸ்தாபனத்துடன் ஒருங்கிணைத்துக்கொள்ள ஏக்கத்துடன் முயற்சிக்கின்றது. ஜனாதிபதி தேர்தலில், புலிகளை அழிக்க இராணுவத்தை வழிநடத்திய ஜெனரல் பொன்சேகாவை ஆதரிப்பதில் தமிழ் கூட்டமைப்புக்கு மனசாட்சி உறுத்தவில்லை.

இராஜபக்ஷ, பொன்சேகா ஆகிய இரு யுத்த முழக்கக்காரர்கள் மீதான, குறிப்பாக தமிழ் வாக்காளர்கள் மத்தியிலான பரந்த அதிருப்தியையும் பகைமையையும் சுரண்டிக்கொள்ளவே ஜனாதிபதி வேட்பாளர்களான சிவாஜிலிங்கமும் கருணாரட்னவும் தெளிவாக எதிர்பார்ப்புக் கொண்டிருந்தனர். சிவாஜிலிங்கமும் கருணாரட்னவும், தமிழர்களுக்கு ஒரு அழிவுகரமான பொறி என நிரூபிக்கப்பட்ட "சுயநிர்ணய உரிமை" வேலைத்திட்டத்துக்கு புத்துயிரூட்ட முயற்சிக்கின்றனர். சிங்கள ஜனாதிபதியின் கீழ், ஒரு சிங்கள மற்றும் ஒரு தமிழ் என்ற அடிப்படையில் இரு பிரதமர்களை எதிர்நோக்கும் ஒரு சமஷ்டி வடிவத்தை முன்னிலைப்படுத்துவதன் மூலம் அரசியலமைப்புக்குள்ளேயே இனவாதப் பிளவுகளை மேலும் ஆழப்படுத்த சிவாஜிலிங்கம் விரும்புகிறார்.

சிவாஜிலிங்கத்தின் இனவாத நோக்கானது கடந்த ஆண்டு இந்தியப் பொதுத் தேர்தலில் இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனதா கட்சிக்கு (பா.ஜ.க.) தனது ஆதரவை வழங்கியதன் மூலம் மேலும் கோடிட்டுக் காட்டப்பட்டது. காங்கிரஸ் கட்சி உத்தியோகபூர்வ முறைப்பாடொன்றை பதிவு செய்த போது, தமிழ் நாடு மாநிலத்தில் தனது பிரச்சார முகாமையாளராக சிவாஜிலங்கம் செயற்படவில்லை என பா.ஜ.க. மறுத்த போதிலும், "அவர் எங்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தியதோடு இலங்கையிலான நிலைமையை சுட்டிக்காட்டினார்" என உறுதிப்படுத்தியது. முஸ்லிம் விரோத படுகொலைகளுக்கு பொறுப்பாளியான பா.ஜ.க. யை சிவாஜிலிங்கம் ஆதரிப்பதானது ஒரு தெளிவான எச்சரிக்கையை விடுக்கின்றது: அவரது முன்நோக்கு, கூட்டாட்சி இலங்கைக்குள் தமிழ், இந்து ஆட்சி பகுதியாகும். இது கொழும்பு அரசாங்கம் மூர்க்கத்தனமாக செய்தது போல், தனது சிறுபான்மையினரை அடக்கும்.

கருணாரட்ன, தமிழர்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதன் பேரில், இந்த வலதுசாரி இனவாத அரசியல்வாதிக்கு வெட்கமின்றி ஆதரவு வழங்குகிறார். எவ்வாறெனினும், "ஜனநாயகத்துக்கான" அவரது ஆதரவு, முதலாளித்துவ மற்றும் முதலாளித்துவ அரசியல் வரம்புக்குள்ளேயே முற்றிலும் தங்கியிருக்கின்றது. பிரான்சில் N.P.A (புதிய முலாளித்துவ எதிர்ப்புக் கட்சி) போன்ற, நவசமசமாஜக் கட்சியின் சர்வதேச பங்காளிகளும், சோசலிச ஜனநாயகவாதிகள் மற்றும் ஸ்ராலினிஸ்டுகளுடன் சூழ்ச்சிகளில் ஈடுபடுவதற்காக தமது ட்ரொட்ஸ்கிச பாசாங்குகளை உத்தியோபூர்வமாக கைவிட்டுள்ளனர். எனவே கருணாரட்னவும் முதலாளித்துவ கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் தன்னை இணைத்துக்கொள்வதற்ககாக தனது சோசலிச வாய்வீச்சுக்களை தூரத்தில் தூக்கிப்போடுகின்றார்.

ஜனவரி 3ம் திகதி வெளியான லக்பிம பத்திரிகையில் தனது பத்தியில் கருணாரட்ன பிரகடனம் செய்வதாவது: "இந்த முதலாளித்துவ ஆட்சியின் கீழ், விடுதலை ஒரு புறம் இருக்க, சிவில் சமுதாயத்தின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் கூட உழைக்கும் மக்களால் பெற்றுக்கொள்ள முடியாது. ஆகையால் நாம் சோசலிசத்துக்குப் பதிலாக, சுதந்திரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் போராடத் தள்ளப்படுகின்றோம்."

கருணாரட்ன, வெளிப்படையான முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கு தான் ஆதரவு வழங்குவதை நியாயப்படுத்துவதற்காக, சோசலிசத்துக்கான போராட்டத்துக்கும் ஜனநாயகத்துக்கான போராட்டத்துக்கும் இடையில் ஒரு சீனப் பெருஞ்சுவரை கட்டுகிறார். ஆயினும், சோசலிச அடிப்படையில் மட்டுமே ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தை முன்னெடுக்க முடியும் என்பதை கடந்த 60 ஆண்டுகால இலங்கையின் முழு வரலாறும் வெளிப்படுத்தியுள்ளது. ஆளும் வர்க்கத்தின் கட்சிகளான, குறிப்பாக யூ.என்.பி. மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் (ஸ்ரீ.ல.சு.க.), தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் ஆட்சியைப் பற்றி நிற்கவும் இனவாத அரசியலை வேண்டுமென்றே பரப்பி வந்துள்ளன. இதன் விளைவு, அடக்குமுறை, படுகொலைகள் மற்றும் அடிநிலையில் உள்ள எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்காத 26 ஆண்டுகால அழிவுகரமான யுத்தம் ஆகும்.

சோசலிச சமத்துவக் கட்சி, அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தைப் போலவே, அது ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்தே நிரந்தரப் புரட்சிக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது --இலங்கை தெற்காசிய மற்றும் சர்வதேச ரீதியிலும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் பிரிக்கமுடியாத பாகமாக அடிப்படை ஜனநாயக உரிமைகளை காக்கும் இயலுமை கொண்ட ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கமாகும். லங்கா சமசமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்புக்கு நேரடி எதிராகவே 1968ல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஸ்தாபிக்கப்பட்டது. ல.ச.ச.க. யின் காட்டிக்கொடுப்புக்கு அனுகூலமாய் இருந்து அதை ஊக்குவித்த சந்தர்ப்பவாத "அகிலத்திலேயே" இன்னமும் நவசமசமாஜக் கட்சியும் இருக்கின்றது. புலிகளின் பிரிவினைவாத முன்நோக்கு உட்பட சகல வடிவிலுமான இனவாதத்தையும் வகுப்புவாதத்தையும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் எதிர்த்தது.

கடந்த 40 ஆண்டுகளாக, உடனடியாக பிரசித்தி பெறுகின்றதா இல்லையா என்பதை கருத்தில் கொள்ளாமல் தொழிலாளர்களுக்கு உண்மையை சொன்ன புரட்சிக் கம்யூனிஸ்ட கழகம்/சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த பிரச்சாரம் செய்ததோடு, ஆட்சியைக் கைப்பற்றும் மற்றும் செல்வந்த தட்டின் தேவைக்காக அன்றி, உழைக்கும் மக்களின் தேவைகளை இட்டுநிரப்புவதற்காக சோசலிச முறையில் சமுதாயத்தை அடிமுதல் உச்சிவரை மறுசீரமைக்கும் வரலாற்றுப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது. தேர்தலின் பின்னர், அடுத்த அரசாங்கம் வாழ்க்கைத் தரத்தின் மீது நேரடியாகத் தாக்குதல் தொடுக்கும் நிலையில், தொழிலாள வர்க்கத்துக்கு போராட்டங்களில் அதனை வழிநடத்துவதற்கு இத்தகைய கட்சி நிச்சயமாகத் தேவைப்படும்.

சோசலிச சமத்துவக் கட்சியானது, நவசமசமாஜக் கட்சியைப் போல் வர்க்க சமரசம், பாராளுமன்ற சூழ்ச்சிகள் மற்றும் இடதுசாரி வாய்வீச்சுக்களை செய்யும் கட்சியல்ல. சோ.ச.க. விஞ்ஞானப்பூர்வமான வேலைத்திட்டத்தை கொண்டுள்ளதோடு முதலாளித்துவத்தின் மற்றும் அதற்கு வக்காலத்து வாங்குபவர்களின் சகல பகுதியினருக்கும் எதிராக சமரசம் செய்ய முடியாத அரசியல் எதிர்ப்பைக் கொண்டுள்ளது. அடுத்துவரும் வர்க்க யுத்தத்திற்கு தயாராவதற்காக, சோ.ச.க. வேட்பாளர் விஜே டயசுக்கு வாக்களிக்குமாறும் எமது வேலைத்திட்டத்தையும் முன்னோக்கையும் கவனமாக வாசித்து எமது உறுப்பினர்களோடு இணைந்துகொள்ளுமாறும் நாம் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.