World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

US to launch Fallujah-style attack in Afghanistan

பல்லுஜா மாதிரி தாக்குதலை ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்த உள்ளது

Bill Van Auken
6 February 2010

Use this version to print | Send feedback

ஆப்கானிஸ்தானில் ஹெல்மாண்ட் மாநிலத்தில் மர்ஜா நகரை அமெரிக்க பிரிட்டிஷ் துருப்புக்கள் தாக்க தயாராகுகையில், இராணுவத் தளபதிகளும் செய்தி ஊடகத்தினரும் இத்தாக்குதலை ஈராக் போரில் நடைபெற்ற பெரும் இரத்தம் சிந்திய போர்க்குற்றங்களில் ஒன்றான நவம்பர் 2004 பல்லுஜா முற்றுகையுடன் ஒப்பிட்டுள்ளன.

அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பிற்கு நீண்டகாலமாக ஆழ்ந்த எதிர்ப்பைக் காட்டிவரும் மத்திய ஹெல்மாண்ட் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள நடவடிக்கை அக்டோபர் 2001ல் வாஷிங்டன் நாட்டை படையெடுக்க தொடங்குகையில் இருந்து பெரிய இராணுவத் தாக்குதலாக இருக்கும். குறைந்தது 15,000 துருப்புக்கள் ஹெல்மாண்ட் ஆற்றுப் பள்ளத்தாக்கு சிறுநகரத்தின் மீதான முற்றுகையில் ஈடுபடுத்தப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பகுதியில் 80,000 மக்கள் வசிப்பதுடன், தலிபானுடைய வலுவான கோட்டை இது என்று அமெரிக்க இராணுவம் கூறுகிறது.

மர்ஜாப் பகுதியை சுற்றி மொத்தம் 125,000 மக்கள் வசிக்கின்றனர். இது காபூலுக்கு மேற்கே 350 மைல்கள் தொலைவிலுள்ள ஒரு விவசாய மையம் ஆகும். கடந்த கோடையில் ஜனாதிபதி பாரக் ஒபாமா பதவியேற்ற சிறிது காலத்தில் ஆப்கானிஸ்தானிற்கு இன்னும் 21,000 துருப்புக்களை அனுப்ப இருப்பதாக அறிவித்தபின், ஆப்கானிய கிராமங்களில் இருந்து வெளியேறி இங்கு வந்துவிட்ட மக்களால் இங்கு மக்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.

தாக்குதலை நடத்திவிட்டு பின்னர் உள்ளூர் மக்களுடன் கலந்துவிடும் கண்ணுக்குப் புலப்படாத விரோதிகளின் கைகளில் இழப்புகளை சந்தித்து வெறுப்படைந்து சீற்றமுற்றிருக்கும் அமெரிக்க மரைன்கள் எதிர்பார்க்கும் விளைவுகளுடன் ஒரு வன்முறை இராணுவத்தாக்குதலை இந்தநகரத்திற்கு எதிராக நடத்துவர்.

தெற்கு ஆப்கானிஸ்தானில் அமெரிக்க மரைன்களின் தளபதியான பிரிகேடியர் ஜெனரல் லாரி நிக்கோல்சன் எதிர்வரவிருக்கும் தாக்குதலின் தன்மை பற்றி விவரித்தார். மார்ஜாவில் இருப்பவர்களுக்கு மூன்று விருப்புரிமைகள் உள்ளன; "ஒன்று அங்கேயே இருந்து போரிட்டு, ஒருவேளை மரணித்தல்; இரண்டாவது அரசாங்கத்துடன் சமாதானம் செய்து கொண்டு மீளஇணைந்து கொள்வது. மூன்றாவது தப்பியோட முயற்சித்தல். அத்தகைய முயற்சி நடந்தால் அதற்கும் அவர்கள்மீது தாக்குதல் நடத்த காத்திருக்கிறோம்." என்றார் அவர்.

"இதை நாங்கள் பெரிய அளவில் நடத்த இருக்கிறோம். ஒரு நியாயமான போரை ஒன்றும் நடத்த இல்லை." என்று இரண்டாம் மரைன் ஆக்கிரமிப்பு பிரிகேட்டின் தளபதி நிக்கோல்சன் கூறினார்.

ஒரு அசாதாரண நிகழ்வாக அமெரிக்க கட்டுப்பாடு தலைமையகம் தாக்குதல் பற்றிய திட்டங்களை பகிரங்கமாக அறிவித்துள்ளது. "ஒரு சற்று மரபு மீறும் வகையாகும், ஆனால் நடுஇரவில் ஒரு தாக்குதலுக்கு உட்பட்டால் என்ன செய்வது என்பது பற்றி ஒவ்வொருவரும் நினைப்பதற்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கும்." என்று ஆப்கானிஸ்தானின் மூத்த அமெரிக்க தளபதியான ஸ்டான்லி மக்கிரிஸ்டல் கூறினார்.

வரவிருக்கும் தாக்குதல் பற்றி வெளிப்படுத்தியுள்ளதின் கூறப்படும் நோக்கம் சாதாரணக் குடிமக்கள் மரைன்கள் வருமுன் அங்கிருந்து நகர்ந்துவிடலாம் என்பதாகும். மேலும் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் அங்கேயே இருப்பவர்கள் உறுதியான தலிபன்கள், கொல்லப்பட வேண்டியவர்கள் என்று கூறுவதற்கு அமெரிக்க தாக்குதலுக்கு ஒரு தவிர்க்க இயலாத போலிக்காரணத்தையும் முன்வைக்கின்றது.

அமெரிக்க அரசாங்கக் அமைப்புகளுடன் நெருக்கமான தொடர்புடைய ஒரு இராணுவ-உளவுத்துறை வலைத்தளமான Stratfor, வியாழனன்று "இத்தாக்குதல் அப்பகுதியை மூடிவிடும் நோக்கத்தையும் கொண்டது, அதன் பாதுகாப்பிற்கு அர்ப்பணித்துள்ள பெரும்பலானவர்கள் இறப்பு அல்லது சரணடைதலை கட்டாயமாக எதிர்கொள்ள வேண்டும்." என்று அறிவித்துள்ளது.

"ஈராக்கில் பல்லுஜா மற்றும் ரமாடியின்மீது இத்தகைய தாக்குதல்களை நடத்திய விதத்தில், மரைன்கள் இவ்வித நகரத் தாக்குதலில் அனுபவம் படைத்தவர்கள்." என்று கட்டுரை தொடர்ந்து எழுதியுள்ளது.

"இத்தகைய" நகரத் தாக்குதல்கள் என்பதின் வரலாறு என்ன?

நவம்பர் 2004ல் பல்லுஜா மீது நடத்தப்பட்ட மரைன் தாக்குதல் போர் விமானங்கள் ஆயிரக்கணக்கான தொன் வெடிமருந்துகளை ஹெலிகாப்டர் மூலம் வான்வழியில் இருந்து கொட்டியதின் மூலமும், போர் டாங்கிகள் அப்பகுதியின் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி கட்டிடங்களை தகர்த்ததின் மூலமும் நகரத்தின் 300,000 மக்களை இடிபாடுகளுக்கு இடையே தள்ளியது.

2,000 "எழுச்சியாளர்களை" கொன்றதாக அமெரிக்க இராணுவம் கூறியது. ஆனால் உண்மை இறப்பு எண்ணிக்கை அறியப்படாமலேயே போயிற்று. நகரத்தில் இருந்து குடிமக்கள்மீதும் இதேவித குண்டுத் தாக்குதல்கள் நடந்தன. இதைத்தொடர்ந்து வீடு வீடாக நடத்தப்பட்ட சோதனைகளில் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மற்றும் பலர் தப்பியோடும்போது கொல்லப்பட்டனர். காயமுற்ற போராளிகள் விசாரணையின்றி கொல்லப்பட்டதுடன், இராணுவத் தாக்குதல்களுக்கு மருத்துவமனைகளும் உள்ளாயின. நகரத்தில் இருந்தவர்களுக்கு உணவு, நீர், மின்விசை ஆகியவை பத்து நாட்களுக்கும் மேலாக மறுக்கப்பட்டன.

நான்கு பிளாக்வாட்டர் கூலிப்படையினர் கொல்லப்பட்டது மற்றும் நகரம் நீடித்த முறையில் வெளிநாட்டு ஆக்கிரமிப்பை எதிர்த்தது ஆகியவற்றிற்காக பல்லுஜா மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தீமைநிறைந்த ஒரு கூட்டுத் தண்டனைதான் அந்த நடவடிக்கை. முழுப் போரின் குற்றத்தன்மையையும் அது உருவகப்படுத்தியிருந்துடன், போர் சட்டங்கள் பலமுறையும் அப்பட்டமாக மீறப்பட்டதையும் காட்டியது.

அமெரிக்க இராணுவத் தலைவர்களை நம்பினால், இதேபோன்ற தாக்குதல்தான் ஆப்கானிஸ்தானிலும் தயாரிக்கப்படுகிறது. இதே போன்ற காரணங்களுக்குத்தான், மர்ஜா நகரம் ஒரு கொலைக்களமாக மாற்றப்பட உள்ளது.

பல்லுஜாவை போன்றே, பழிவாங்குதலும் இங்கு ஒரு பங்கைக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டில் அமெரிக்க இராணுவப் படைகள் சீராக இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பை பார்த்துள்ள நிலையில், CIA டிசம்பர்மாதம் ஒரு பாதிப்பிற்குள்ளான தாக்குதலில் அகப்பட்டுக்கொண்டு ஆப்கானிய எல்லையில் அதன் முகவர்கள் ஏழு பேரை இழந்தது.

ஈராக்கை போலவே ஆப்கானிஸ்தானத்திலும் அமெரிக்க இராணுவக் கட்டுப்பாடு ஆக்கிரமிப்பிற்கு எழுச்சி மையம் என்று அறியப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியை உதாரணமாக்க விரும்புகின்றது. அது எதிர்ப்பு பயனற்றது, அதனால் படுகொலை, அழிவு ஆகியவற்றை எதிர்கொள்ள நேரிடும் என்ற செய்தியை நாடு முழுவதற்கும் அனுப்புகின்றது.

இத்தகைய குருதி கொட்டுதல், உத்தியோகபூர்வமாக பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரால் நியாயப்படுத்தப்படுகிறது. பிரச்சாரத்திற்கு பின்னணியில், ஆப்கானிய போருக்கான இயக்கும் உந்ததுல், ஈராக்கில் இருந்ததை போலவே, அமெரிக்க ஆளும் உயரடுக்கு அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடியை தீர்க்க தனது வலிமையை பயன்படுத்தி பாரசீக வளைகுடா மற்றும் மத்திய ஆசியாவில் மூலோபாயப் பகுதிகளை கைப்பற்றுவதுதான். இரு இடங்களிலும் பரந்த எரிசக்தி மூலவளங்கள் உள்ளன.

ஓராண்டிற்கு முன் வெள்ளை மாளிகையில் ஒபாமா நுழைந்தபோது, அமெரிக்க மக்களின் பரந்த பிரிவுகளிடையே அவர் பதவியேற்பது பல்லுஜா, அபுகிரைப், குவான்னடநாமோ வளைகுடா, பிளாக்வாட்டர், சித்திரவதை, கடத்தல் ஆகிய சொற்கள் இருண்ட, அவமதிப்பான அமெரிக்க வரலாற்றில் மூடப்பட்டதும் மற்றும் அகராதியில் இடம்பெறுவதற்குரியதாகிவிடும் என்று நினைத்தனர்.

மர்ஜா தாக்குதலுக்கான தயாரிப்பு முடிவு என்பதற்கு முற்றிலும் மாறாக புஷ் நிர்வாகத்தின் குற்றங்கள் தொடர்கின்றன, ஜனநாயகக் கட்சி ஜனாதிபதியின் கீழ் விரிவாக்கின்றன என்பதைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இன்று புஷ்ஷின் காலத்தில் இருந்ததை விட காலனித்துவ வகைப் போர்களில் அமெரிக்க துருப்புக்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்படுகின்றன. கொலைகளோ ஈராக், ஆப்கானிஸ்தானத்தில் இருந்து பாக்கிஸ்தான், யேமனுக்கும் பரவிவிட்டன. ஒபாமா நிர்வாகம் இரு போர்கள், ஆக்கிரமிப்புக்களுக்காக 322 பில்லியன் டாலரை நாடுகிறது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிக "மேலதிகநிதிகளை" கோரும்போது அதிகரிக்கும்.

"நம்பிக்கை" மற்றும் "மாறுதல்" என்பவற்றை கொடுக்கப் போகிறார் என்று கருதப்பட்ட வேட்பாளர், அரசியல் நடைமுறை மற்றும் இராணுவ உளவுத்துறை வட்டாரங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட முகவர் போல் வெளிப்பட்டுவிட்டார். அப்பிரிவுகள் கொள்கையில் தந்திரோபாய மாற்றங்கள் சிலதை விரும்பின, அதே நேரத்தில் இராணுவவாதத்தை வெளிநாட்டில் பயன்படுத்துவதும், உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின்மீது இடைவிடாத் தாக்குதலையும் தொடர விரும்பின.

அமெரிக்க தொழிலாள வர்க்கம் தங்கள் பெயரில் மற்றொரு புதிய சுற்றுப் போர்க் குற்றங்கள் நடத்தப்படுவதை ஏற்க முடியாது. அனைத்து அமெரிக்க, பிற வெளிநாட்டுத் துருப்புக்களும் உடனடியாக, நிபந்தனையற்ற முறையில் திரும்பப் பெற வேண்டும் என்னும் கோரிகையுடன் ஒபாமா நிர்வாகம், அது பாதுகாக்கும் நிதியத் தன்னலக்குழுவிற்கு எதிரான ஒரு அரசியல் போராட்டமும் இணைய வேண்டும்.