World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Supreme Court refuses to release Fonseka

இலங்கை: உயர் நீதிமன்றம் பொன்சேகாவை விடுதலை செய்ய மறுத்துள்ளது

By K. Ratnayake
24 February 2010

Use this version to print | Send feedback

இலங்கை உயர் நீதிமன்றம், பெப்பிரவரி 8ல் இராணுவ பொலிசாரால் கைது செய்யப்பட்ட, தோல்விகண்ட எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு விடுத்த வேண்டுகோளை நேற்று நிராகரித்தது. இந்தக் கைதின் சட்டபூர்வ நிலையை சவால் செய்து பொன்சேகாவின் மனைவி அனோமா தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மனு சம்பந்தமாகவே இந்த விசாரணை நடந்தது.

இந்த நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடத்தக்க அரசியல் அழுத்தம் உள்ளது. ஜனவரி 26 நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவிடம் தோல்வியடைந்த பொன்சேகா, ஏப்பிரல் 8 நடக்கவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடத் தயாராகின்றார். இந்த மனு மீதான அடுத்த விசாரணை ஏப்பிரல் 26ம் திகதிக்கு குறிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பிரச்சார காலத்தில் விளைபயனுள்ள வகையில் அவரது வாய் அடைக்கப்பட்டுள்ளது.

பெப்பிரவரி 12 நடந்த ஆரம்ப விசாரணையில், மனு விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டது. இலங்கையின் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா தலைமையிலான மூன்று பேர் அடங்கிய நீதிபதிகள் குழு, சட்ட மா அதிபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை நிராகரித்தார். நேற்றைய விசாரணை, ஞாயிற்றுக் கிழமையே பதில் பிரதம நீதியரசராக பதவியேற்ற ஷிரானி பண்டாரநாயக்க தலைமையிலான வேறு மூன்று நீதிபதிகள் குழுவினால் முன்னெடுக்கப்பட்டது. அரசுக்குச் சொந்தமான டெயிலி நியூஸ் பத்திரிகையின் படி, டி சில்வா வெளிநாட்டுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

நேற்றைய நீதிமன்ற நடவடிக்கையில் பதட்ட நிலைமை இருந்தது தெளிவு. சட்ட மா அதிபரிடம் இருந்து எதிர் மனுவின் பிரதி, வழக்குக்கு முதல் நாள்தான் தனக்கு கிடைத்ததாகவும் பதில் மனுவை தயார் செய்ய தனக்கு காலம் தேவை என்றும் பொன்சேகாவின் சட்டத் தரணி ஷிப்லி அஸீஸ் முறைப்பாடு செய்தார். சத்தியக் கடதாசிகளை வாசிக்க அவருக்கு 10 நிமிடங்கள் வழங்கப்பட்ட போதிலும், விசாரணைகள் இடைக்கால நிவாரணத்தை வழங்குவதற்காக வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் பதில் மனுக்களை பெற்றுக்கொள்ள என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

முதலாவது விசாரணையில், ஒப்பீட்டளவில் ஒரு கனிஷ்ட சட்டத்தரணியே சட்டமா அதிபருக்காக சமூகமளித்தார். ஆயினும், நேற்றைய விசாரணையின் போது, சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் முதலாவது பிரதிவாதியான இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவின் சார்பில் சமூகமளித்திருந்தார். ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோடாபய இராஜபக்ஷவும் பல உயர் மட்ட இராணுவத் தளபதிகளும் ஏனைய பிரதிவாதிகளாவர்.

ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியை இராணுவச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியாது என தெரிவித்து பொன்சேகா சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக அஸீஸ் வாதிட்டார். பொன்சேகா கைது செய்யப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னரும் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படவில்லை என அவர் சுட்டிக் காட்டினார். பொன்சேகா நிபந்தனைகளுடன் அல்லது நிபந்தனைகள் இன்றி விடுவிக்கப்பட வேண்டும், அவரது பாதுகாப்பும் நலனும் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும், மற்றும் அவரது சட்டத்தரணிகளுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் அவரை சந்திப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அஸீஸ் இடைக்கால நிவாரணத்துக்கான அவரது வேண்டுகோளை வலியுறுத்தினார்.

கடைசி தீர்ப்புக்கு முன்னதாக விடுதலை செய்வதை சட்ட மா அதிபர் எதிர்த்தார். குற்றச் சாட்டுக்கள் தொடர்பான பிரச்சினையை தட்டிக் கழித்த அவர், "ஆதாரங்களின் தொகுப்பு" பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் மூன்று வாரங்களுக்குள் அது முழுமைபடுத்தப்படும் என தெரிவித்தார். அதன் பின்னரே அந்தக் குற்றச்சாட்டுக்கள் மீதான விசாரணையை முன்னெடுப்பதா அல்லது இராணுவ நீதிமன்றத்தில் தண்டனை கொடுப்பதா என இராணுவத் தளபதி தீர்மானிப்பார்.

கைது செய்யப்பட்டு குறைந்த பட்சம் ஒரு மாதமாகியும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாத போதிலும், சட்ட மா அதிபரின் வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதே சமயம், அரசாங்கத்தை தூக்கி வீசவும் இராஜபக்ஷ சகோதரர்களை படுகொலை செய்யவும் சதி செய்ததாக பொன்சேகா மீது குற்றஞ்சட்டி அவரது பெயருக்கு கரி பூசுவதில் அரசாங்கம் பேச்சாளரும் அரசுக்குச் சொந்தமான ஊடகங்களும் தொடர்ந்தும் ஈடுபடுகின்றன. தன் கட்சிக்காரர் இராணுவ சட்ட நடவடிக்கைகளில் ஒத்துழைக்க மறுத்துள்ளதாகவும் அதை ஒரு கேலிக் கூத்தான விசாரணை என கருதுவதாகவும் அஸீஸ் சுட்டிக் காட்டினார்.

சட்ட மா அதிபர் பீரிஸ் சில சிறு சலுகைகளை வழங்கினார். பொன்சேகாவின் வைத்தியர், அவரது சட்டத் தரணிகள் மற்றும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் அவரை சந்திக்க முடியும் என நீதிமன்றில் உறுதிமொழி அளித்தார். சட்டத்தரணிகளைப் பொறுத்தளவில், அவர்கள் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட வேண்டும். ஏப்பிரல் 8 பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பாளர் பட்டியலில் பொன்சேகாவிடம் கைச்சாத்துப் பெற அவரது சட்டத்தரணிகளை பீரிஸ் அனுமதித்தார். பொன்சேகா ஜனநாயக தேசிய கூட்டணி என அழைக்கப்டும் புதிதாக அமைக்கப்பட்ட கூட்டணியில் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

இந்த வழக்கின் அரசியல் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டும் வகையில், ஜூரிகளின் சர்வதேச ஆணைக்குழுவில் (ஐ.சி.ஜே.) இருந்து ஒரு பிரதிநிதியான, ஆஸ்திரேலிய வழக்குரைஞர் பில்லி புர்வெஸ், நேற்றைய நீதிமன்ற நடவடிக்கைகளை கண்காணிக்க வந்திருந்தார். "இந்த விவகாரத்தில் ஐ.சி.ஜே. அக்கறை காட்டுவதோடு நீதிமன்ற நடவடிக்கைகள் நீதியானதும் நேர்மையானதுமாக நடக்கின்றனவா என்பதை கண்காணிக்க விரும்புகிறது," என அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

பொன்சேகாவின் கைதை இராஜபக்ஷ அரசாங்கம் கையாளும் முறை தொடர்பாக வாஷிங்டன் திருப்தியடையவில்லை என, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரொபட் பிளேக் பி.பி.சி. க்கு இந்த வாரம் தெரிவித்தார். "நாங்கள் எதிர்பார்த்திருக்கக் கூடியதை விட குறைவானதாகவே இருப்பதாக நான் நினைக்கின்றேன். ஆனால், அவர் மீது உரிய காலத்தில் குற்றஞ் சுமத்தப்படுவதை உறுதிசெய்யுமாறு நாம் இலங்கை அரசாங்கத்திடம் நிச்சயமாக வேண்டுகோள் விடுக்கின்றோம்."

அரசாங்கத்துக்கும் எதிர்க் கட்சிக்கும் இடையிலான உக்கிரமான உள் மோதல்கள், பெரும் வல்லரசுகளுக்கு இடையிலான பகைமை பிணைந்திருக்கும் முறையை பிளேக்கின் கருத்துக்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இராஜபக்ஷ, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தனது புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தில், சீனாவை நோக்கி அதிகம் நகர்ந்துள்ளதாக ஒபாமா நிர்வாகம் கருதுகிறது. இலங்கைக்கு ஆயுதங்களை விற்று நிதி மற்றும் அரசியல் உதவியையும் செய்த பெய்ஜிங், பிரதியுபகாரமாக பொருளாதார மற்றும் மூலோபாய சலுகைகளையும் பெற்றுக்கொண்டது.

அமெரிக்கா, இந்த கைது தொடர்பான தனது அதிருப்தியை எச்சரிக்கையுடன் வெளிப்படுத்துவது, ஜனநாயக உரிமைகள் பற்றிய அக்கறையினால் அல்ல. மாறாக, இந்த விவகாரத்தை இராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்கவும் சீனாவின் செல்வாக்கை கீழறுக்கவும் ஒரு வழிமுறையாக வாஷிங்டன் நோக்குகிறது. பொன்சேகா அமெரிக்க நலன்களுக்கு மிகவும் இணங்குபவராகவும் கூட அது நோக்கலாம். தேர்தல் பிரச்சாரத்தின் போது, இலங்கையில் "சர்வதேச சமூகத்தின்" நம்பிக்கையை இராஜபக்ஷ கீழறுத்து விட்டதாக ஜெனரல் விமர்சித்தார்.

கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தில் இடம்பெறும் உக்கிரமான குழு மோதல்கள், நீதித்துறை, இராணுவம் மற்றும் பொலிஸ் உட்பட அரச இயந்திரத்தை அரசியல்மயப்படுத்துகிறது. ஜனாதிபதி தேர்தலின் பின்னர், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் உட்பட பல பொன்சேகா ஆதரவாளர்களை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அரசாங்கமும், இராணுவம் மற்றும் பொலிசில் உயர் மட்டத்தினரில் சிலரை களையெடுப்பதில் ஈடுபட்டது. ஜெனரலுக்கு விசுவாசமானவர்கள் என கருதப்பட்டவர்கள் ஒன்று இடம்மாற்றப்பட்டார்கள் அல்லது கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டார்கள்.

ஏப்பிரல் 8 பாராளுமன்ற தேர்தலின் பின்னர் வரையும் பொன்சேகாவை அடைத்து வைக்க இராஜபக்ஷ எடுத்துள்ள உறுதிப்பாடு, அதிகாரத்தின் மீதான அவரது பிடி எந்தளவு ஆட்டங்கண்டுள்ளது என்பதற்கான அறிகுறியாகும். அரசியலமைப்பை மாற்றக்கூடியவாறு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எதிர்பார்ப்பதாக ஆளும் கூட்டணி தெரிவித்துள்ளது. இராஜபக்ஷ ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற வகையில் அவருக்கு பரந்த அதிகாரங்கள் உள்ளன என்ற உண்மை ஒருபுறம் இருக்க, அவர் ஏற்கனவே எதேச்சதிகாரமான தனது ஆட்சியை பலப்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றார்.

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத வழிமுறைகளின் பிரதான இலக்கு, தொழிலாள வர்க்கமே அன்றி, அரசாங்கத்துடன் அடிப்படை வேறுபாடுகளைக் கொண்டிராத எதிர்க் கட்சிகள் அல்ல. கடந்த மே மாதம் புலிகளின் தோல்வியுடன் முடிவுக்கு வந்த யுத்தம், நாட்டை பெரும் கடனுக்குள் தள்ளியுள்ளது. நிதி நெருக்கடியை தவிர்த்துக்கொள்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்திடம் இருதந்து 2.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெற இராஜபக்ஷ நெருக்கப்பட்டார்.

தேர்தலை அடுத்து, அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் வயிற்றிலடிக்கும் நடவடிக்கைகளை அமுல்படுத்தவும் மற்றும் பொதுச் செலவையும் மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மோசமாக வெட்டித்தள்ளவும் நெருக்கப்படும். இராஜபக்ஷ, தவிர்க்க முடியாமல் வெடிக்கவுள்ள வெகுஜன எதிர்ப்பின் மீது பாய்வதற்குத் தயாராகுவதன் பேரில், எதிர்க் கட்சியை பலவீனப்படுத்தவும் மற்றும் தனது சொந்த நிலைமையை பலப்படுத்திக்கொள்ளவும் ஆவலாக உள்ளார்.