சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

China: Protracted strike at Honda parts supplier

சீனா: ஹொண்டா உதிரிப்பாக வினியோக நிறுவனத்தில் தொடரப்படும் வேலைநிறுத்தம்

By John Chan
22 July 2010

Use this version to print | Send feedback

தெற்கு சீனாவின் பூஷான் நகரில் உள்ள ஹொண்டா உதிரிப்பாக வினியோக நிறுவனத்தில் கடந்த ஜூலை 12-ம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் கசப்பான பூசல் சீனத்தொழில் துறையில் தொடர்ந்து நீடிக்கும் அமைதியின்மை நிலையை உரித்துக்காட்டும் மேலும் ஒரு அடையாளம் ஆகும். ஹொண்டாவிற்கும், பிற ஜப்பானிய நிறுவனங்களுக்கும் பல்சக்கர கியர் உதிரிப்பாகத்தை வினியோகம் செய்து வரும் பூஷான் நகரில் உள்ள அஸ்ட்யூமிடெக் ஆட்டோ பார்ட்ஸ் தொழிற்சாலையைச் சேர்ந்த சுமார் 100 தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தொழிலாளர்களின் வருவாயை குறைக்கும் வகையில் மேலதிக நேர மணித்தியாலயங்களை வழங்குவதை முற்றிலும் தவிர்த்துக்கொண்டும், வேலைப்பளுவை அதிகரித்துக்கொண்டும் பணிநேரத்தை நிர்வாகத்தினர் மாற்றி அமைத்ததனைத் தொடர்ந்து தான் அத்தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டது.

அஸ்ட்யூமிடெக் நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரர் ஹொண்டா. அஸ்ட்யூமிடெக்கின் நடவடிக்கைகள், குவாங்டோங் மாகாணத்திலும் சீனாவின் பிற பகுதிகளிலும் உள்ள தயாரிப்பு நிறுவனங்கள் உழைப்புச் செலவு அதிகரிப்பதை தடுக்கும் நோக்கத்துடன் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதன் ஒரு அம்சம் தான். மே மாதத்தில் பூஷானில் உள்ள ஹொண்டாவின் டிரான்ஸ்மிஷன் தொழிற்சாலை ஊழியர்களால் தொடங்கப்பட்ட வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து சீனாவில் எங்கும் வேலைநிறுத்தங்களின் தொடர் அலைகள் ஏற்பட்டுள்ளதானது ஊதிய உயர்வு தொடர்பான தொழிலாளர்களின் எதிர்பார்ப்பை அதகரிக்கச் செய்துள்ளது. ஜூலை மாதம் தொடக்கத்தில் பூஷானில் உள்ள ஹொண்டாவின் உதிரிப்பாகங்களை பொருத்தும் தொழிற்சாலையில் நடைபெற்ற மூன்று நாள் வேலைநிறுத்தம் ஹொண்டா யாஸின் ஐரோப்பாவிற்கான ஏற்றுமதியை பெருமளவில் பாதித்துள்ளது.

அஸ்ட்யூமிடெக் வேலைநிறுத்தம் தொடர்பான செய்திகளை சீனாவின் அரசு ஊடகங்கள் முதலில் வெளியிடவில்லை. இருப்பினும் தொழிலாளர்கள் அவர்களது எதிர்ப்புக்களை இணையதளங்கள் மூலம் வெளியிடத்தொடங்கியது அந்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் சீனாவின் க்ஸின்ஹுவா செய்தி ஏஜன்சி இந்த வேலைநிறுத்தம் பற்றிய செய்தியை காலதாமதமாக வெளியிட்டது என்றாலும் அச்செய்தியை சீன மொழியில் வெளியிடாமல் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிட்டுள்ளது.

ஹாங்காங்கின் தா குங் பாவோ நாளிதழின் நிரூபர் ஒருவர் அஸ்ட்யூமிடெக் தொழிலாளர்களை ஜூலை 15-ஆம் தேதியன்று சந்தித்து பேசினார். தங்களது மாத சம்பளம் வெறும் 1070 யுவான் (158 அமெரிக்க டாலர்கள்) மட்டுமே என்று அத்தொழிலாளர்கள் தெரிவித்தனர். இந்த குறைந்த சம்பளத்திலிருந்து சமூக காப்பீட்டுத்திட்டத்திற்கான தொகை மற்றும் ஓய்வூதியத் தொகை என கழித்துக்கொண்ட பிறகு அவர்களுக்கு கையில் கிடைப்பது வெறும் 800 யுவான் தான். இந்த நிலையில் அவர்கள் 500 யுவான் ஊதிய உயர்வு கோரியுள்ளனர்.

இதற்கு முன்பு நடைபெற்ற வேலைநிறுத்தங்களின் போது சம்பளத்தை தடை செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த ஹொண்டா இந்த முறை மேலும் எதிர்த்து நிற்கும் கடுமையான அணுகுமுறையை கைக்கொண்டுள்ளது. நவீன உற்பத்தி முறைகளானது முற்றிலும் தானியங்கிமயமாக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்களின் செயற்திறன் அதிக அளவில் தேவையில்லை என்பதால் ‘அதிக அளவிலான ஊதிய உயர்வு’ தேவையற்றது என ஊதிய உயர்வு கோரிய தொழிலாளர்களிடம் அஸ்ட்யூமிடெக் நிறுவனம் பதில் கூறியுள்ளது. உற்பத்தியில் ஏற்பட்ட குறைபாட்டை சரிசமம் செய்ய தொழிலாளர்கள் கூடுதல் நேரம் வேலை செய்யக்கோரி ஜூலை 13-ஆம் தேதி தொழிற்சாலையின் நுழைவுவாயிலை இழுத்து மூடிக்கொண்ட அந்நிறுவனத்தார் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உணவையும் நிறுத்திக்கொண்டனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிலாளர்களையும் பணிநீக்கம் செய்து தொழிற்சாலை தங்குமிடங்களையும் அடுத்த நாளிலேயே இழுத்து மூடப்போவதாக ஜூலை 14-ஆம் தேதியன்று ஊழியர்களை மிரட்டும் வகையிலான அறிவிப்பு விடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளைக் கண்டு கோபம் அடைந்த 105 அலுவலக ஊழியர்கள் உற்பத்திப் பிரிவு தொழிலாளர்களுடன் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். ‘வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்கள் மீதான வேலை வழங்குநரின் அந்நியாயமான நடவடிக்கைகளை பார்த்துக்கொண்டு எங்களால் சும்மா இருக்க முடியாது, இது எல்லை மீறிய கொடுமை’ என்றார் நிர்வாக தொழிலாளி ஒருவர்.

சீனாவின் அரசு ஆதரவு தொழிற்சங்கமான ஏசிஎப்டியூ(All China Federation of Trade Unions) இந்த பூசலில் நடுநிலை தாங்க முன்வந்திருந்தாலும் அஸ்ட்யூமிடெக்கின் கடுமையான நிலைப்பாடுகளை கண்டவுடன் அந்த முயற்சியிலிருந்து பின்வாங்கியதாக ஹாங்காங்கின் தா குங் பாவோ செய்தி வெளியிட்டுள்ளது. நடைமுறையில், ஏசிஎப்டியூ வின் நடவடிக்கை அந்நிறுவனத்தின் ஆக்கிரமிப்பு தாக்குதல்களுக்கு வழிகோலும் வகையி்ல் அமைந்தது, மேலும் இச்சம்பவம் சீன ஆட்சிக்காகவும், வேலை வழங்குநர்களுக்காகவும் தொழிலாளர்களின் போராட்டத்தை அடக்குவதில் அத்தொழிற்சங்கம் வகிக்கும் பங்கையும் தெளிவாய்காட்டியுள்ளது.

தொழிற்சாலையில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வந்த அதே சமயத்தில், வேலை வழங்குநருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தொழிலாளர்கள் அவர்களது பிரதிநிதிகளை தெரிவு செய்திருந்தனர். இருப்பினும் அஸ்ட்யூமெக்குடன் கடந்த வியாழக்கிழமையன்று நடைபெற்ற பேச்சுவார்ததைகள், தொழிலாளர்களின் கோரிக்கைகளை அந்நிறுவனம் திட்டவட்டமாக நிராகரித்த காரணத்தால் தொடங்கிய சிறிது நேரத்திலேயே தோல்வியடைந்தது. ‘நிறுவனம் எங்களில் யாரேனும் ஒருவரை பணிநீக்கம் செய்ய முயன்றால் நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து வெளிநடப்பு செய்வோம் என எங்களுக்குள்ளே முடிவெடுக்கப்பட்டிருந்தது, மேலும் எங்களது உரிமைகளை பாதுகாக்க சட்டரீதியாக முயற்சிகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது’ என்றார் இது குறித்து சவுத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தியாளரிடம் பேசிய போராட்டக்காரர் ஒருவர்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் அந்நிறுவனம், தடைபட்டுள்ள உற்பத்தியை குறைந்த அளவில் சீர்படுத்தும் நோக்கத்துடன் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு மாற்றாக 100 தற்காலிக தொழ்லாளர்களை சென்றவார இறுதியில் வேலைக்கு அமர்த்தியது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த சில தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமையன்று தங்களது பணியிடத்துக்கு திரம்பிச்சென்றனர், இருப்பினும் வேலையை தொடர மறுப்பு தெரிவித்தனர். நிர்வாகத்தினர் அவர்களை உற்பத்திப் பகுதியிலிருந்து பலப்பிரயோகத்தின் மூலம் வெளியேற்றினர்.

வேறு 20 - 30 தொழிலாளர்கள், பெரும்பாலானோரும் ழோங்ஷான் நகரைச் சேர்ந்த அப்பகுதியில் வாழ்பவர்கள் பணியிடம் திரும்ப மறுத்தனர். அவர்களில் ஒருவர் ராயிட்டேர்ஸ் நிருபரிடம் "விலைவாசி இவ்வளவு உயர்ந்துள்ள சூழலில் நாங்கள் எப்படித்தான் வெறும் 1000 யுவானைக் கொண்டு வாழ முடியும்? அரசாங்கம் எங்களுக்கு உதவி செய்வதில்லை மேலும் நிர்வாகத்தினரும் எங்களது கோரிக்கைகளை நிராகரித்து விட்டு தற்போது எங்களிடம் அது பற்றி பேச்சுவார்த்தை நடத்தவும் கூட தயாராக இல்லை" என்றார்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை கண்காணிக்க உள்ளூர் போலீஸார் வருவிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் எதிலும் தலையிடவில்லை. செவ்வாய்க்கிழமையன்று உள்ளூர் அரசாங்க அதிகாரி ழோங் வெய்வான் என்பவர் க்ஸின்ஹுவா செய்தியாளர்களிடம் கூறுகையில்: "எந்த அவசர சூழலையும் சந்திக்க போலீஸார் தொழிற்சாலைக்கு அருகில் தயார் நிலையில் உள்ளனர், இருப்பினும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பது எப்படி என்பது தான் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது" என்றார்.

500 யுவான் ஊதிய உயர்வு என்ற கோரிக்கையை அங்கீகரிக்க புதன்கிழமையன்று அஸ்ட்யூமிடெக் தயாராகி வந்த அதே நேரத்தில் குவாங்ஷூவில் உள்ள ஓமரோன் என்னும் ஜப்பானிய மின்பொறியியல் தொழிற்சாலையைச் சேர்ந்த சுமார் 400-500 தொழிலாளர்கள் அல்லது உழைப்புதொகுப்பில் அரைவாசியினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அத்தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் மொத்த தொழிலாளர்களில் பாதி பேர் பங்கேற்ற வேலைநிறுத்தம் அது. ஹொண்டா, போர்டு மற்றும் பி.எம்.டபிள்யூ போன்ற நிறுவனங்களுக்காக சுவிட்சுகளையும், இக்னீஷ்யன் சாவிகளையும் தயாரிக்கும் தொழிற்சாலை அது. தற்போது வெறும் 1,270 யுவான் மாத சம்பளம் பெற்றுக்கொண்டிருக்கும் தொழிலாளர்கள் 40 சதவீத ஊதிய உயர்வு கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொழிலாளர் போராட்டங்களை ஒரேயடியாக அடக்க முயன்றால் அதன் பின்விளைவுகள் தங்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்பது மட்டும் அல்லாமல் அத்தகைய நடவடிக்கைகள் தொழிலாளர் எழுச்சியை மேலும் பரவச் செய்யும் என்று நன்கு அறிந்துகொண்டுள்ள சீன ஆட்சி இது வரையிலும் தனிமைப்பட்ட போராட்டங்களை முன்னெச்சரிக்கையுடன் மென்மையாகத் தான் கையாண்டு வந்துள்ளது. இருப்பினும் ஊதிய உயர்வானது சர்வதேச மற்றும் சீன பெருநிறுவன உயர்தட்டுக்களின் குறை ஊதியச் சுரண்டும் நலனுடன் இறுதியில் பொருத்தமற்றதாக இருக்கிறது.

தொழிலாளர்கள் மீது அனுதாபம் கொண்டுள்ளதாக காட்டுவதற்காக, தொழிங்சங்கங்களுடன் அவ்வப்போது குறைந்தபட்ச ஊதிய உயர்வு வழங்கும் ஒப்பந்தங்கள் செய்ய அரசு ஆதரவு தொழிற்சங்கங்களை பயன்படுத்தி வருவதே தவிர தொழிலாள வர்க்கத்திற்கான சலுகைகளுக்கு அறவே இடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹாங்காங்கின் சைனா லேபர் புல்லட்டின் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த ஜியோப்ரீ குரோத்தால் இது குறித்து ராயிட்டேர்ஸ் நிருபரிடம் கூறுகையில் "இவ்வகை ஒப்பந்தங்கள் இந்த ஆண்டு இறுதி வரையிலும் தொடர்ந்த பிறகும் தொழிலாளர்கள் மேலும் கோரிக்கைகளை முன்வைக்கும் பட்சத்தில் வேலைநிறுத்தங்கள் மீதான அரசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேலும் கடுமையானதாக இருக்கும். தற்போது வாதங்களாக இருந்து கொண்டிருப்பது "இதோ பாருங்கள், நாங்கள் செய்ய முடிந்ததையும் முடியாதையும் கூட உங்களுக்காக செய்து விட்டுள்ளோம்... கிடைத்ததை ஒப்புக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்கப் பாருங்கள் தொடர்ந்து இந்த கதையைச் சொல்லி படகை அசைக்க வேண்டாம்" என்பதே ஆகும் என்றார்.

ஒட்டுமொத்தமாக பணிநீக்கம் செய்தல், பதிலாட்களால் நிரப்புதல் என அட்ஸூமிடெக் தொழிலாளர்கள் மீது விடுக்கப்பட்ட மிரட்டல்கள் அனைத்தும், அரசு ஆதரவுடன் செயல்பட்டு வரும் வேலை வழங்குநர் எடுக்கக்கூடிய கடுமையான எதிர் நடவடிக்கைக்கான ஒரு எச்சரிக்கையாக இருக்கிறது.

இடம்பெயர்ந்த இளம் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பொறுக்கமுடியாத சூழல்கள் தொடர்பாக மேலும் ஆதாரங்கள் இந்த மாதம் தெரியவந்துள்ளது. குவாங்டோங்கின் உற்பத்தி ஏற்றுமதித் துறையில் நிலவி வரும் அதிக வேலைப்பளு மற்றும் குறைந்த ஊதியம் வழங்குதல் பற்றிய அறிக்கை ஒன்றை ஷென்கென் பல்கலைக்கழகம் மற்றும் ஏசிஎப்டியூ வின் ஷென்கென் கிளை இணைந்து வெளியிட்டுள்ளது. ஷென்செனில் உள்ள போக்ஸ்கோன் என்னும் மிகப் பெரிய மின்பொறியியல் நிறுவனத்தின் தொழிற்சாலையைச் சேர்ந்த 13 தொழிலாளர்கள் இந்த ஆண்டு இதுவரையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்த சூழலில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஷென்கெனில் உள்ள மொத்த தொழிலாளர்கள் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு நாட்டுப்புறங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்களே ஆவர்.

இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்தவர்களிடையே பலர் "குட்டி பேரரசர்கள்" ஆவர் என்ற பிரபலமான கட்டுக்கதைக்கு முரணாக, ஊதிய நிலையில் குறைந்த பட்ச உயர்வு மட்டுமே கிடைத்து வருவதால், அவர்களும் பெற்றோர்களைப் போன்றே கடுமையாக உழைத்தால் தான் வாழ முடியும் என்ற நிலையை இந்த ஆய்வின் முடிவு காட்டுகிறது. தொடர்ந்து பலமணி நேரம் கூடுதலாக வேலை செய்ய வேண்டியிருப்பதாக 20 வயதுக்கு உட்பட்ட தொழிலாளர்களில் 90 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். அடிப்படை ஊதியம் குறைவாக உள்ளதால், சட்டப்படி அனுமதிக்கப்பட்டுள்ளதை விட கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக பாதிக்கு மேற்பட்டோர் கூறியுள்ளனர்.

மேலதிக நேரம் உட்பட ஷென்கெனில் உள்ள இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கிடைக்கும் சராசரி மாத சம்பளம் வெறும் 1800 யுவான் மட்டுமே. இது நகரத்தில் கிடைக்கும் சராசரி ஊதியத்தின் 47 சதவீதம் மட்டுமே ஆகும். ‘மேலதிக நேரம் வேலை செய்து அதிக சம்பளம் வாங்கியும் கூட பெரும்பாலான இளம் தொழிலாளர்களும் வாழ்க்கை நடத்த திண்டாடி வருகிறார்கள்’ என்று அந்த ஆய்வு முடிவு ஒப்புக்கொண்டுள்ளது.

இடம்பெயர்ந்த இளம் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் சம்பளத்தின் ஐந்தில் நான்கு பங்கும் போக்குவரத்து, தங்கும் வசதி மற்றும் உணவு போன்ற அடிப்படை தேவைகளுக்காகவே செலவு செய்ய வேண்டியுள்ளது. நிலைமை இப்படி இருந்தும் கூட, 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் தங்களது வருமானத்தின் பெரியதோர் பங்கு கிராமப்புறங்களில் வசிக்கும் அவர்களுடைய ஏழை குடும்பத்தாருக்கு அனு்பபுகின்றனர்.

இந்த இளம் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தொழிற்சாலையின் அருகிலேயே உள்ள குடுசு அறைகளில் கூட்டநெரிசலை சகித்துக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். ஒரு சிறிய அறையில் ஆறு பேர் அல்லது அதைவிட அதிகமானோரும் தங்குவதுண்டு. 70 சதவீதம் வரும் பெற்றோர்களும் தங்களது குழந்தைகளைப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பெற்றோர்களைப் போன்றே இச்சிறுவர்களும் hukou எனப்படும் நகர்ப்புற இல்லப் பதிவு முறையினால், கல்வி, சுகாதார வசதிகளேதும் இன்றி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு தவிக்கின்றனர்.

பூஷான் நகரவாசிகளும். இதே போன்ற அடிமை மிருக வாழ்க்கை சூழ்நிலைகளையே சந்திக்கின்றனர். தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் கணினிகளுக்கான தட்டையான திரை அமைப்பை தயாரிக்கும் சிமேய் இனோலக்ஸ் என்னும் போக்ஸ்கோன் நிறுவனத்தின் கிளை நிறுவனத்தில் சுமார் 25,000 பேர் பணி புரிகின்றனர். அந்நிறுவனத்தில் பணியாற்றி வந்த 18 வயது இளைஞர் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமையன்று கட்டிடத்தின் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்தார். தற்கொலை செய்துகொண்ட அவ்விளைஞர் வடசீனாவில் கல்லூரி மாணவனாக படித்துவந்த அதே சமயத்தில் ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் வேலையும் பார்த்து வந்தார்.

அட்ஸூமிடெக் நிறுவனம் தொழிலாளர்களுக்கு எவ்வித சலுகைகளையும் வழங்க மறுப்பது, பெருநிறுவன உயர்தட்டினர் அதிகரித்து வரும் உலக பொருளாதார நெருக்கடியின் சூழலினால் பீதியடைந்து வருவதன் பிரதிபலிப்பே ஆகும். சீன அரசாங்கம் அதிக பணவீக்கம் செய்துள்ள சொத்துக் குமிழி பிரச்சனையை கட்டுப்படுத்த நிதியுதவி திட்டங்களை அமூல்படுத்திய நடவடிக்கைகளும் முந்தைய ஊக்கப் பொதிகளின் மூலம் மோசமடைந்துள்ள சீனாவின் வருடாந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2010-ம் ஆண்டின் இரண்டாம் கால் இறுதியில் 10.3 சதவீதமாகி விட்டுள்ளது, முதல் கால் இறுதியில் இது 11.9 சதவீதம் ஆக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

"வளர்ச்சியை அதிகப்படுத்துவதில் சீனா பல்வேறு சவால்களையும் அல்லல்களையும் சந்தித்து வருகிறது" என சீனாவின் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக செய்தித் தொடர்பாளர் ழூ ஹோங்ரென் கடந்த செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்தார். ஐரோப்பாவின் கடன் பிரச்சனைகள் சீனாவின் உற்பத்தி ஏற்றுமதித்துறையை அச்சுறுத்துவதாலும், சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நிச்சயமின்மையும் காரணமாக உற்பத்தியாளர்கள் மிகுந்த கவலையில் உள்ளதாக ழூ மேலும் கூறினார். சென்ற ஆண்டு ஏற்பட்ட குறைபாடுகளிலிருந்து மீட்சி பெற்ற சீனாவின் ஏற்றுமதிகள் கடந்த ஜூன் மாதத்தில் 35.2 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ள போதிலும், இந்த வளர்ச்சியானது 2010-ஆம் ஆண்டின் இரண்டாம் அரை இறுதியில் வீழ்ச்சியை சந்திக்கவிருப்பதாக வர்த்தகத் துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ‘நம் ஏற்றுமதித்துறை வளர்வதற்கென்று மிகக் குறைவான இடம் மட்டுமே உள்ளது’ என செய்தித் தொடர்பாளர் அறிவி்த்தார்.

உலகப் பொருளாதார நெருக்கடியினால் உந்தப்பட்ட நிலையில், ஏற்கெனவே சகித்துக்கொள்ள முடியாத சூழல்களில் வாழ்ந்து வரும் சீன தொழிலாளர்கள் மீதான தொழில் வழங்குநரின் தாக்குதல்கள் அதிகரித்து வருவது அந்நாட்டில் பரவலாக சமூக அமைதியின்மையை ஏற்படுத்தவிருக்கிறது.