சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

The second stage of the global capitalist crisis

உலக முதலாளித்துவ நெருக்கடியின் இரண்டாம் கட்டம்

By Nick Beams
12 April 2010

Use this version to print | Send feedback

பின்வரும் அறிக்கை சோசலிச சமத்துவ கட்சியின் (ஆஸ்திரேலிய பிரிவு) கூட்டத்தில் அதன் தேசிய செயலாளர் நிக் பீம்ஸினால் ஏப்ரல் 3, 2010ல் அளிக்கப்பட்டதாகும்.

இந்த கூட்டத்தின் ஆரம்பத்திலேயே நான் முதலாவதாக, 2008 செப்டம்பர் 15ல் லெஹ்மென் பிரதர்ஸின் பொறிவுடன் எழும்பிய பொருளாதார மற்றும் நிதியியல் நெருக்கடி குறித்து நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவால் செய்யப்பட்ட மதிப்பீட்டைக் குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன். இது ஒரு காலகட்டத்திற்குரிய நெருக்கடி அல்ல. மாறாக இது முதலாளித்துவ திரட்சியின் (capitalist accumulation) முந்தைய நிலையில் ஏற்பட்டிருக்கும் ஒரு உடைவு என்பதை நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே குறிப்பிட்டு வந்தோம்.

இது எதை அர்த்தப்படுத்துகிறது? முதலாளித்துவ பொருளாதாரம் ஓர் உடனடியான இயங்காநிலைக்கு வந்துவிடும் என்பதையோ, அல்லது ஓர் கசப்பான கீழ்நோக்கிய சுழற்சிக்குள் நுழைந்துவிடும் என்பதையோ, அல்லது தவிர்க்க முடியாமல் தொடர்ச்சியான மந்தநிலைக்குள் சென்றுவிடுமா என்பதையோ குறிப்பிடவில்லை. இந்த உடைவு எம்முன்னே ஒரு புதிய காலகட்டத்தை அதாவது, வர்க்க உறவுகளிலும் மற்றும் பல்வேறு முதலாளித்துவ சக்திகளுக்கு இடையிலான உறவுகளிலும் மறுகட்டமைப்பினை எடுத்துக்காட்டும் ஒரு காலகட்டத்தை திறந்துவிட்டிருக்கிறது என்ற உண்மையில் இதன் முக்கியத்துவம் தங்கி இருப்பதாக நாங்கள் புரிந்துகொண்டிருக்கிறோம்.

எமது பகுப்பாய்வு உள்ளடக்கத்தின் சாராம்சத்தைப் புரிந்து கொள்ள, முதலாளித்துவ அமைப்புமுறையின் அபிவிருத்தியை வரலாற்றுரீதியாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். முதலாளித்துவ நிகழ்வுப்போக்கின் மிக முக்கிய சகாப்தம் 1914 ஆகஸ்ட் 4ல் உடந்துகொட்டிய வகையில் முடிவுக்கு வந்தது. முதலாம் உலக யுத்தத்தின் தொடக்கம், பாரிய சக்திகளுக்கு இடையிலான ஒரு துரதிருஷ்டவசமான மோதலால் ஏற்பட்டதல்ல. ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டுக் காட்டுவது போல, "அது ஒரு பொருளாதார அமைப்புமுறை அதன் சொந்த உள்ளார்ந்த முரண்பாடுகளால் வரலாற்றில் அழித்துக் கொண்ட மிகப்பெரிய உடைவாக இருந்தது." 1915ல் செய்யப்பட்ட அந்த பகுப்பாய்வு, அதைத் தொடர்ந்து நடந்தவற்றால் உறுதி செய்யப்பட்டது. யுத்தத்தின் முடிவு மீண்டும் பழைய நிலையைக் கொண்டு வரவில்லை, மாறாக மூன்று தசாப்தங்களின் சமூக, பொருளாதார, மற்றும் அரசியல் சீரழிவுடன், இரண்டாம் உலக யுத்தத்தில் உச்சகட்டத்தை அடைந்தது. இது முதலாம் உலக யுத்தத்தையும் விட மிக பேரழிவுமிக்க முரண்பாடாக இருந்தது. தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டங்களை காட்டிக்கொடுத்ததின் அடிப்படையிலும், ட்ரொட்ஸ்கி எச்சரித்தது போல, பல மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் இரத்தத்திலும், எலும்புகளின் மீதும் தான் 1940களின் பின்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட புதியதொரு முதலாளித்துவ மேல்நோக்கிய வளர்ச்சி அமைந்திருந்தது. இது பொருளாதார ரீதியாக அமெரிக்க ஏகாதிபத்திய பலத்திலும் மற்றும் உலகின் மற்றைய பகுதிகளுக்கு மிக அதிகமான அமெரிக்க முதலாளித்துவ உற்பத்தி முறைகள் பரவியதின் அடித்தளத்திலும் அமைந்திருந்தது.

இந்த புதிய முதலாளித்துவ விரிவாக்கத்தின் மிக முக்கிய உள்ளடக்கங்களில் ஒன்றாக ஐரோப்பாவின் ஸ்திரப்பாடும், அதாவது "ஜேர்மன் பிரச்சனையை" தீர்ப்பது, அதாவது யுத்தத்தில் முடியாது பலம்வாய்ந்த ஜேர்மன் முதலாளித்துவத்துடன் இயைந்துபோவதற்கான ஓர் அரசியல் மற்றும் பொருளாதார கட்டமைப்பு வளர்த்தெடுப்பதும் மற்றும் "ஜப்பானிய பிரச்சனை" என்றழைக்கப்பட்ட கிழக்கின் பிரசசனையை தீர்ப்பதும் உள்ளடங்கியிருந்தது. நான் குறிப்பாக இந்த இரண்டு உடன்பாடுகளின் முக்கியத்துவத்தையும் இன்றைய நிலைமையின் வெளிச்சத்தில், அதாவது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் செலாவணியை மையமாகக் கொண்ட சீரழிவும் (யுத்தத்திற்குப் பிந்தைய தீர்மானங்களின் வழிதோன்றல்கள்), சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் வளர்ந்து வரும் முரண்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

உலக முதலாளித்துவ பொருளாதாரத்தின் உள்ளார்ந்த முரண்பாடுகள் மீள்-எழுச்சியுற்றபோது, 1970களின் ஆரம்பம்வரை முதலாளித்துவ அபிவிருத்தியின் வளைகோட்டில்(curve of capitalist development) யுத்தத்திற்குப் பிந்தைய எழுச்சி தொடர்ந்தது. இது புரட்சிகர எழுச்சியின் ஒரு காலகட்டமாக இருந்தது. இது ஸ்ராலினிசம் மற்றும் பப்லோவாதிகளின் உதவியுடன் கூடிய சமூக ஜனநாயகவாதிகளால் தொழிலாள வர்க்கத்தின் காட்டிக்கொடுப்புகளால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. தொழிலாள வர்க்கத்திற்குள் புரட்சிகர நிலைநோக்கின் அபிவிருத்தியை தடுப்பதில் பப்லோவாதிகளின் பாத்திரம், 1950களின் தொடக்கத்திலிருந்து நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டத்தின் அடித்தளங்களின் மீதான அவர்களின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க தாக்குதல்களால் எடுத்துக்காட்டியது. பப்லோவாதிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு தத்துவார்த்த மற்றும் திரிபுவாதங்கள் ட்ரொட்ஸ்கிசத்திற்கு எதிரான ஒரு மத்தியதர வர்க்க கிளர்ச்சி வடிவத்தை எடுத்தது. அவை 1917 அக்டோபர் புரட்சியின் அனுபவங்கள் மீண்டும் திரும்பி விடக்கூடாது என்ற முந்நிபந்தனையை அடிப்படையாக கொண்டிருந்தன.

1968-75 காலகட்டத்தின் புரட்சிகர போராட்டங்களின் காட்டிக்கொடுப்புகளின் அடித்தளத்தில், முதலாளித்துவம் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஒரு சமூக மற்றும் அரசியல் தாக்குதலை தொடங்கியது. இத்தாக்குதல் 1950கள் மற்றும் 1960களில் முன்னைய முறையிலான திரட்சி நலிவுற்றதால் உலக முதலாளித்துவத்தின் பொருளாதார மறுகட்டமைப்பின் அவசியத்துடன் ஒரு முக்கிய உள்ளடக்கமாக இணைந்திருந்தது. ஆனால், அதனாலும்-அதற்குள்ளாகவும் இருந்த, தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான இந்த ஒடுக்குமுறை, ஒரு புதிய முறையிலான திரட்சியை அடிப்படையாக கொண்ட புதியதொரு முதலாளித்துவ மேல்நோக்கிய வளர்ச்சிக்கு இட்டுச் செல்லவில்லை. அது புவி-அரசியல் நிலப்பரப்பில் ஒரு பரந்த மாற்றம் ஏற்பட்டபோது மட்டும் தான் சாத்தியப்பட்டது. அதாவது பொறிவின் போது அல்லது மிகத் துல்லியமாக கூறுவதானால், ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதாலும் மற்றும் உலக மூலதனத்தின் சுற்றுக்குள் உலகின் பரந்த பாகங்களின் மலிவுகூலி உழைப்பு சக்தி வளங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட போதும்தான்.

பல்வேறு மதிப்பீடுகள் உலகளாவிய உழைப்பு சக்தியின் அளவில் ஏற்பட்ட உயர்வைக் மதிப்பிட்டுக் காட்டியிருந்தன. சில ஆய்வுகள் அதன் இரட்டிப்பைக் குறிப்பிட்டுக் காட்டின. ஏனையவை 300ல் இருந்து 500 மில்லியன் வரையிலான அதிகரிப்பை எடுத்துக்காட்டின. உண்மையான எண்ணிக்கை எதுவாக இருந்த போதினும், உலகப் பொருளாதார வரலாற்றில் மிக முக்கிய மாற்றங்களில் இதுவும் ஒன்றாக இருந்தது. உலக முதலாளித்துவத்தின் கட்டமைப்பின் ஆழத்தில் ஏற்பட்ட இந்த மாற்றம் தான், 1990களின் ஆரம்பத்தில் தொடங்கிய முதலாளித்துவ மேல்நோக்கிய வளர்ச்சிக்கான அடித்தளங்களை வழங்கியது. சோவியத் ஒன்றியம் நிலைகுலைந்தாலும், சீனா ஏகாதிபத்திய சக்திகளின் ஆளுமையின் கீழ் வந்தாலும் புதியதொரு முதலாளித்துவ மேல்நோக்கிய வளர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது என்று 1920களில் ட்ரொட்ஸ்கி குறிப்பிட்ட போதே, இம்மாதிரியான ஓர் அபிவிருத்திக்கான சாத்தியக்கூறு எதிர்பார்க்கப்பட்டது. வரலாறு ஒரு வித்தியாசமான பாதைக்கு திரும்பியபோதும், ஆனால் ட்ரொட்ஸ்கியின் ஆய்வின் உள்ளடக்கம் அதன் மதிப்பை தக்கவைத்துக் கொண்டது.

மூலதனத்தின் உலகளாவிய சுற்றுக்குள் சீனா, இந்தியா மற்றும் பிற நாட்டு உழைப்புசக்தியின் ஒருங்கிணைப்பும், கணினி அடிப்படையிலான தொழில்நுட்பங்களின் புதிய அபிவிருத்திகளும், போக்குவரத்து, தொலைதொடர்பில் ஏற்பட்ட சிறந்த மாற்றங்களும் மற்றும் ஏனைய அனைத்தும் புதியதொரு முதலாளித்துவ மேல்நோக்கிய வளர்ச்சிக்கான நிலைமைகளை உருவாக்கின. பொருத்தும் பட்டடை (assembly-line) உற்பத்தியை அடிப்படையாக கொண்ட முந்தைய திரட்சிமுறையின் வீழ்ச்சியால் உருவாகிய இலாப விகிதங்களின் சரிவை மூலதனம் கடந்து வருவதற்கான போராட்டங்களின் விளைவாக இந்த நடவடிக்கைகளே இருந்தன.

எவ்வாறிருப்பினும் முதலாளித்துவ வளைகோட்டின் அபிவிருத்தி போக்கில் ஏற்பட்ட இந்த புதிய மேல்நோக்கிய வளர்ச்சி, ஓர் உயர்ந்தளவிலான ஸ்திரமற்ற தன்மையை கொண்டிருந்ததுடன், 1890களின் மத்தியில் தொடங்கியதைப் போன்ற மாதிரியான தன்மையை கொண்டு 1914ன் உடைவுக்கு இட்டுச் சென்றது. (சமீபத்தில் கூட நான் ஒரு கருத்தைப் படித்தேன், 2008 நெருக்கடியானது 1907இல் ஏற்பட்ட அமெரிக்க வங்கித்துறை நெருக்கடியைப் போன்றதே என்று அந்த எழுத்தாளர் உத்திரவாதம் அளித்திருந்தார். ஆனால் வெறும் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் என்ன நடந்தது என்பதை அவர் விரிவாக எடுத்துக்கூறவில்லை.)

கடந்த இரண்டு தசாப்தங்களின் மேல்நோக்கிய வளர்ச்சி, ஒருபுறம், மலிவுவிலை உழைப்புசக்தியின் சுரண்டலின் அடிப்படையிலும் மற்றொருபுறம், நிதியியல்துறையின் செயல்முறைகள் மற்றும் செயல்பாடுகளின் அபிவிருத்தியால், முக்கிய முதலாளித்துவ நாடுகள், உபரி மதிப்பின் இந்த உயர்ந்த அதிகரிப்பை தனதாக்கி கொண்டுள்ளன. சில முக்கிய முதலாளித்துவ நாடுகளின் பொருளாதார கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றத்தின் அளவுகள், பிரிட்டனில் பல்வேறு புள்ளிவிபரங்களால் குறிப்பிட்டுக் காட்டப்பட்டிருக்கின்றன. மார்ச் 25 பைனான்சியல் டைம்ஸில் பிரசுரிக்கப்பட்ட ஒரு தலையங்கத்தில், பொருளாதார விமர்சகர் மார்டின் வொல்ஃப் பின்வருமாறு குறிப்பிட்டார்: "தாட்சரிசத்தின் பொருளாதார மரபு ஆச்சரியப்படுத்தியது. 1997 மற்றும் 2006க்கு இடையிலான வரவுசெலவுத் திட்டத்தின்படி, வியாபார சேவைகள் பொருளாதார வளர்ச்சியில் 40 சதவீதத்தையும், நிதியியல் முறைகள் ஏறத்தாழ 13 சதவீதத்தையும் உருவாக்கியது. உற்பத்தியின் பங்களிப்பு பூஜ்ஜியத்திற்கு நெருக்கமாக இருக்கிறது. அதுவே சந்தையின் இறுதிவிளைவாக இருந்தது. இங்கிலாந்து பொருளாதாரம் ஏனைய பெரிய ஐரோப்பிய நாடுகளைவிட மிக விரைவாக விரிவடைந்த்து. இவ்வாறான வளர்ச்சி திருப்திகரமாகவும், நிலையாகவும் கருதப்பட்டது." திரட்சிக்கான புதிய முறை நகர்புற நிலப்பரப்பில் பரந்த மாற்றங்கள் ஏற்பட காரணமானது. தொழிற்சாலைகள் நிறைந்திருந்த நகரங்களில், நகர மையங்கள், விற்பனை வளாகங்கள், நிதியியல் மையங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அப்போது அங்கே மறுஅபிவிருத்தி நடந்தது. ஆனால் இவை அனைத்துமே, ஒருவழியில் அல்லது வேறுவழியில், வேறிடங்களில் இருந்து பெறப்பட்ட உபரிமதிப்பை தன்னகப்படுத்துவதுடன் தொடர்புபட்டிருந்தது.

நவீன முதலாளித்துவ பொருளாதாரங்களில் நிதித்துறை மிக விரைவாக அதிகரித்தன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வர்த்தகம் மற்றும் பொருட்களின் உற்பத்தியின் மூலம் அல்லாமல், நிதியியல் வழிமுறைகள் மூலமாக இலாபங்கள் அதிகளவில் பெறப்பட்டன. அமெரிக்காவில், 1980ல் 10 சதவீதமாக இருந்த மொத்த பெருநிறுவன இலாபங்களில் நிதித்துறையின் பங்களிப்பு, 2007ல் சுமார் 40 சதவீதத்தை எட்டியது.

மெக்கென்சே குளோபல் அமைப்பால் (McKinsey Global Institute) நடத்தப்பட்ட, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உட்பட, பத்து முக்கிய முதலாளித்துவ நாடுகளைப் பற்றிய ஓர் சமீபத்திய ஆய்வு, 2000ல் இருந்து இந்த நாடுகளின் மொத்த கடன் சுமார் 40 ட்ரில்லியன் டாலர், அதாவது 60 சதவீதம் உயர்ந்து இருப்பதாக கண்டறிந்தது. மொத்த கடன் விகிதங்கள்(தனியார் மற்றும் அரசு இரண்டையும் சேர்த்து) 1990ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 200 சதவீதமாக இருந்ததில் இருந்துடன், 2008ல் 330 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்தது. அதே காலகட்டத்தில் இங்கிலாந்தில், கடன்விகிதம் 200 சதவீதத்தில் இருந்து 450 சதவீதமாக உயர்ந்தது. கடன்களின் கூடுதலானவை நிதிய தொழில்துறை செயற்பாடுகளால் அல்லாமல், மாறாக நிதித்துறை செயல்பாட்டுக்கு நிதியளிப்பதனால் பெறப்பட்டிருந்தது.

கடன்களில் ஏற்பட்ட உயர்வு, நிதியியல் துறையின் வளர்ச்சிக்கு எண்ணெய் வார்த்ததுடன், அது புதிய பொற்காலம் என்றும் கூறப்பட்டது. எவ்வாறிருப்பினும், பணம், அதன் இயல்பாலேயே பணத்தை உருவாக்கும் என்பதை நம்பும் முதலாளித்துவத்தினதும் மற்றும் அதன் சித்தாந்திகளின் கற்பனையில் இருந்து விடுபட்டுக்கொள்வோமானால், நிதி மூலத்தனத்தால் பெறப்பட்ட இலாபங்கள், இறுதி பகுப்பாய்வில், தொழிலாள வர்க்கத்திடமிருந்து பெறப்பட்ட உபரிமதிப்பையே குறிப்பிட்டுக் காட்டுகிறது. முடிவாக, நிதித்துறை இலாபங்களானது, கையிருப்பிலிருக்கும் உபரி மதிப்பால் மட்டுப்படுத்தப்படுகிறது.

இது ஒவ்வொரு கட்டத்திலும், நிதி மூலதனத்தின் நடவடிக்கைகள், இந்த விதியால் நெறிப்படுத்தப்படுகிறது என்றாகாது. மாறாக, அவை அதை பாதுகாத்தன. ஆனால் "ஒரு வீடு விழுவதை நம்முடைய காதுகள் கேட்கும் போது... ஈர்ப்பு விதி தன்னைத்தானே உறுதிப்படுத்திக் காட்டுகிறது; அதே முறையில் மதிப்பு விதியானது(law of value) தவிர்க்கமுடியாமல் "ஒரு பலமான இயற்கை விதியைப் போல" தன்னைத்தானே உறுதிப்படுத்தி காட்டுகிறது என்று மூலதனத்தின் முதல் அத்தியாயத்தில் மார்க்ஸ் குறிப்பிட்டது போல, அவற்றால் அதிலிருந்து உடைத்துக் கொண்டு வர முடிவதில்லை.

ஊக மூலதனம், அதாவது உபரி மதிப்பிலிருந்து நேரடியாக பெறாத மூலதனமாகும். ஆனால் வேறுஎங்கோ பெறப்பட்ட உபரி மதிப்பிலிருந்து அல்லது மேலும் ஒரு சந்தேகத்திற்கிடமான நிதியியல் நடவடிக்கைகள் ஊடாக பெறப்பட்ட இந்த மூலதனம், உயர்ந்த இலாபத்தைப் பிதுக்கி எடுக்கிறது. இது தொழிலாள வர்க்கத்திடமிருந்து எடுக்கப்பட்ட உபரி மதிப்பின் உயர்வு விகிதத்தைவிட மிக அதிகளவிலான விகிதத்தை கொண்டிருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, அபாயங்கள் உணரப்பட்ட இடங்களிலும் கூட, சந்தையின் அழுத்தத்தால் இதே வழியில் செயல்படவே இது பலவந்தப்படுத்தும். Citigroup இன் தலைவர் சக் பிரின்ஸ், ஜூலை 2007ல் இதை வெளிப்படையாக குறிப்பிட்டது போல, இசை இன்னும் இசைக்கப்பட்டு கொண்டிருந்தால், ஒவ்வொருவரும் எழுந்து நின்று ஆடித்தான் ஆக வேண்டும். ஆனால் இலாப திரட்சிக்கான இயங்குமுறைகளில் ஒன்றான வளமையற்ற வீட்டு அடமானங்களின் (sub-prime mortgages) பாதுகாப்புத்தன்மை ஒன்று உடைந்தாலும், சீட்டுகட்டு வீடுகள் கலைந்து விழுவதைப் போல விழுந்துவிடும் என்பதை முதலாளித்துவ அமைப்புமுறையின் விதிகள் தவிர்க்கமுடியாமல் தாமே உறுதிப்படுத்திக் காட்டின. வீட்டின் ஒரு பாகம் பொறிந்ததால், ஒட்டுமொத்த கட்டமைப்பும் தரைமட்டத்திற்கு வந்தது.

முதலாளித்துவ அரசு பின்னர் வங்கிகளையும், நிதி நிறுவனங்களையும் மீட்டெடுக்க இறங்கியது. இதன் விளைவாக, வங்கிகளின் கடன்களை அது அதனுடைய கணக்கு புத்தகத்தில் எடுத்துக் கொண்டது. அல்லது, வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அது வங்கிகளின் மற்றும் நிதி நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்தது. எவ்வாறிருப்பினும், அத்தோடு பிரச்சினை முடிந்துவிடவில்லை.

நிதி சந்தைகளின் செயல்பாடுகளாலும், உண்மையில் அவர்களுக்கு தேவையான உபரிமதிப்பின் அளவினை நிதி மூலதன தேவைகள் பெருமளவிற்கு உயர்த்தியதன் காரணமாகவே இந்த நெருக்கடி எழுந்தது. இது தான் "நச்சு" சொத்துக்கள் அல்லது மதிப்பிழந்த சொத்துக்கள் என்றழைக்கப்பட்டதன் சமூக அர்த்தமாகும். எவ்வாறிருப்பினும், அரசு உள்ளே நுழைந்து, இந்த அழைப்புகளுக்கு மதிப்பளித்தது. ஆனால் இந்த பிரச்சினையான பெரும் ஊக மூலதனம் அதற்கு தேவையான உபரிமதிப்பை கூடியளவில் உயர்த்திக் காட்டுவது தொடர்ந்தும் இருக்கிறது. உபரி மதிப்பின் ஒரு புதிய பெருந்திரட்சி அதிசயமானமுறையில் உருவாக்கப்பட்டுவிடவில்லை. என்ன நடந்ததென்றால், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் தேவைகளை அரசு ஏற்றுக் கொண்டு, அவை முன்னர் இருந்ததைப் போலவே இருக்க அவற்றிற்கு பண உதவி அளித்தது; அத்துடன் அவை தொழிலாள வர்க்கத்திடமிருந்து அவற்றிற்கு தேவையான கூடுதல் உபரிமதிப்பை உறிஞ்சி எடுக்கும் பணியில் அவற்றை அனுமதித்தது.

என்ன நடந்திருக்கிறது என்பதன் பரப்பை கவனித்துப் பாருங்கள். ஜூலை 2007 மற்றும் மார்ச் 2009க்கு இடையில், உலகளாவிய வங்கிகளின் பங்குவிலைகள் 75 சதவீதம் சரிந்தன. இது சந்தை மூலதனமயமாக்கலில் 5 ட்ரில்லியன் டாலர் இழப்பாகும். இங்கிலாந்தில், வங்கி பங்குகள்(equity) 80 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன. ஏனைய சொத்து விலைகளின் வீழ்ச்சியோடு சேர்த்து, உலக செல்வவளத்தின் இழப்பு 25 ட்ரில்லியன் டாலருக்கும் மேலாகும் அல்லது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(GDP)ஏறத்தாழ 45 சதவீதமாகும். பெரும் மந்தநிலையின் போது ஏற்பட்டதைப் போல அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் அந்தளவிற்கு சொத்து விலைகள் வீழ்ந்திருக்கின்றன. நிதியியல் அமைப்புமுறைக்காக முதலாளித்துவ அமைப்புமுறையால் அளிக்கப்பட்ட நேரடி ஆதரவானது, ஏறத்தாழ உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கால்பகுதிக்குச் சமமாகும். அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் அந்த நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முக்கால் பங்கிற்கு நெருக்கமாக இருக்கிறது.

அரசின் இந்த நடவடிக்கைகள் வங்கிகளின் நிலைமையை மீட்டெடுத்திருக்கின்றன. ஆனால் அவை பொருளாதாரத்தை ஊக்குவிக்கவில்லை. வங்கிகள் அவற்றின் இலாபங்களை அதிகரிக்க முடிந்திருக்கிறது, ஏனென்றால் மலிவு மூலதனம் அவற்றிற்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இது பொருளாதார வளர்ச்சியாக மாற்றப்படவில்லை.

அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் கடன்களின் உயர்வைப் பற்றிய புள்ளிவிபரங்கள், இந்த பிணையெடுப்பு நடவடிக்கைக்கு அளிப்பதற்காக உலகளாவிய தொழிலாள வர்க்கத்திடமிருந்து எந்தளவிற்கு உறிஞ்ச வேண்டும் என்பதற்கு ஓர் அறிகுறியை அளிக்கிறது. அறுபத்தி ஏழு நாடுகளில், 2007ல் 80 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதங்களுக்கு எதிரான பொதுக்கடன், 2014ல் 125 சதவீதமாக உயரும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்திருக்கிறது. அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் இது இரட்டிப்பாகும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. பொருளாதார அபிவிருத்திக்கும் ஒத்துழைப்புக்குமான அமைப்பின்(OECD)நாடுகளில், நிதிநிலை பற்றாக்குறைகள் கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளியில் 20-30 சதவீதமாக மாறி இருக்கின்றன. Bank for International Settlements ஆல் செய்யப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வின்படி, இதேநிலை நீடித்தால், அடுத்த தசாப்தத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு எதிரான கடன், ஜப்பானில் 300 சதவீதமாகவும், இங்கிலாந்தில் 200 சதவீதமாகவும், பிரான்ஸ், அயர்லாந்து, இத்தாலி மற்றும் அமெரிக்காவில் 150 சதவீதமாகவும் உயரும். திருப்பி அளிக்க வேண்டிய வட்டி அரசின் இன்றைய செலவுகளில் 5 சதவீதத்திலிருந்து எல்லா விஷயங்களிலும் 10 சதவீதத்திற்கும் மேலாக உயரும். இதுவே இங்கிலாந்தில் 27 சதவீதத்திற்கு நெருக்கமாக இருக்கும்.

அடுத்த காலகட்டத்திற்கான அரசியல் பொருளாதாரத்தின் இந்த புள்ளிவிபரங்களின் முக்கியத்திற்கு இப்போது நாம் வந்திருக்கிறோம். அரசின் நிதி நெருக்கடியின் அர்த்தத்தை நீங்கள் இன்னும் தெளிவாக காணலாம். சமூக சேவைகள், சுகாதாரங்கள், கல்வி, இதர பிறவற்றிற்கான அனைத்து அரசு செலவுகளும், இறுதிப் பகுப்பாய்வில், மூலதனத்திற்கு கிடைக்கும் உபரி மதிப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகள் மீதான தாக்குதலுடன், உலகமெங்கிலும் உள்ள முதலாளித்துவ அரசுகளால் தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் சமூக செலவுகளின் மீதான வெட்டுக்கள் தான் ஆதாரமாக இருக்கின்றன. இதன் மூலமாக தான், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பிணையெடுப்பிற்கு தேவையான உபரிமதிப்பை அரசு தனதாக்கிக்கொள்ளும்.

இந்த நிகழ்ச்சிப்போக்கு புரட்சிகர போராட்டங்களுக்கான ஒரு புதிய காலக்கட்டத்திற்கான புறநிலை அடித்தளங்களை உருவாக்கி வருகிறது. இந்த நேருக்குநேரான மோதலைத் தவிர்க்க முடியாது. வங்கிகளுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட செல்வத்தை ஈடுகட்ட முதலாளித்துவ பொருளாதாரத்திற்குள் தேவையான பரந்தளவு உபரிமதிப்புக்களை உள்ளே செலுத்தும் ஏதோவொரு புதிய தொழில்நுட்பமோ, அல்லது மலிவு உற்பத்தி சக்திக்கான புதிய ஆதாரமோ இங்கே இல்லை. முன்னர் சமூகச் செலவினங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த பரந்த உபரிமதிப்பு தொகைகளைத் தான் முதலாளித்துவ அரசு திரும்பப்பெறவேண்டும். சுருக்கமாக கூறுவதானால், சமூகப் புரட்சிக்கான புறநிலை உருவாகும் நிலைமைகள் நாம் கொண்டிருக்கிறோம். முதலாளித்துவ அரசு தொடர்ந்து பழைய முறையிலேயே ஆட்சி செய்ய முடியாது, அதேபோல தொழிலாள வர்க்கமும் இந்த புதிய ஆட்சியின்கீழ் வாழ முடியாது.

உடைவின் பொருளாதார அடித்தளங்கள் பற்றிய எங்களின் பகுப்பாய்வு மிக முக்கியமான அரசியல் தாக்கங்களை கொண்டிருக்கிறது. முதலாளித்துவத்தின்கீழ் வர்க்க போராட்டத்தின் புறநிலை அடித்தளமானது, முதலாளித்துவ உற்பத்தியின் நிகழ்ச்சிப்போக்கில் தொழிலாள வர்க்கத்திடமிருந்து உறிஞ்சி எடுக்கப்பட்ட உபரிமதிப்பின் மீது முதலாளிகளுக்கும், தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான மோதலாக இருக்கிறது. இன்று, தொழிலாளர்களின் வெவ்வேறு பிரிவுகள் முதலாளித்துவ வர்க்கத்தின் வெவ்வேறு பிரிவுகளுடன்(இதில் தான் சில இடங்களில் முதலாளித்துவ அரசு தலையீட்டை அளிக்கும்)மோதவில்லை. முதலாளித்துவ அரசே குறிப்பாக, அதன் சக்திவாய்ந்த பிரிவான நிதி மூலதனத்தின் முதலாளிகளின் செயற்குழுவாக முன்வந்துள்ளது. இது உபரி மதிப்பை உறிஞ்சுவதிலும், அல்லது அதை மிக துல்லியமாக கூறினால், சமூக செலவினங்களுக்கு ஒதுக்கப்பட்ட உபரி மதிப்பை மீண்டும்-தனதாக்கிக்கொள்வதிலும் முதன்மை முகாமையாக வந்துள்ளது. நேரடியாக அரசியல் அதிகாரத்தை பற்றிய கேள்வியை நிகழ்ச்சிநிரலில் கொண்டு தவிர்க்க முடியாமல் அரசியல் போராட்டங்கள் வெடிக்கும் என்பதையே இது குறிக்கிறது. மிக அடிப்படையான சமூக நிலைமைகளைப் பாதுகாப்பதற்கான தொழிலாளர்களின் போராட்டம் கூட, ஆரம்பத்திலேயே வங்கிகளின் பிணையெடுப்பிற்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படும் இந்த வளங்களைக் கோரும் முதலாளித்துவ அரசிற்கு எதிரான ஒரு போராட்டமாக இருக்கும்.

இந்த ஒட்டுமொத்த கட்டமைப்பிற்குள் தான் நாம் கிரேக்கத்தின் நிலைமையை நிறுத்திப் பார்க்க வேண்டும். 2007-2008ல் தொடங்கிய சர்வதேச நெருக்கடியில் கிரீஸ் நெருக்கடி ஒரு புதிய கட்டத்தைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது என்று மார்ச் 17ல் வெளியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கை விளக்கியது. பாப்பான்ட்ரூ அரசாங்கத்தின் கடுமையான முறைமைகள், அதாவது தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமையைத் தக்க வைக்க ஒதுக்கப்பட்டிருந்த உபரி மதிப்பை சுரண்டியெடுக்கும் முறைமைகள், ஆஸ்திரேலியாவும் விதிவிலக்காக அல்லாமல், அனைத்து முக்கிய முதலாளித்துவ நாடுகளிலும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஆழந்த மற்றும் தொடர்ந்த தாக்குதல்களுக்கான முதல் அடியாகும்.

பாப்பான்ட்ரூ அரசாங்கத்திற்கு பல்வேறு தொழிற்சங்க அமைப்புகளின் ஆதரவு நீடிக்கவில்லை என்றால் பாப்பான்ட்ரூ அரசாங்கமும், யாரைச் சார்ந்து அது செயல்படுகிறதோ அந்த நிதியியல் நலன்களும் சக்தியிழந்துவிடும். மிக முக்கியமாக, கிரீஸில் நடக்கும் நிகழ்வுகள் முன்னாள் தீவிர மற்றும் போலி-இடது அமைப்புகளின் பாத்திரத்தைப் பற்றிய எமது பகுப்பாய்வின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டிருக்கிறது. அவை வெட்டுக்களின் எதிர்ப்பாளர்களாக காட்டிக் கொள்கின்றன. ஆனால் அதேநேரத்தில் "இடதி்ன் ஐக்கியத்தையும்" தொழிலாள வர்க்கத்தையும் தம்முள் தக்கவைப்பதற்காக அவை, இந்த வெட்டுகளுக்கு எதிரான போராட்டம் தொழிற்சங்கங்களுக்கு அடிபணிந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. இவ்வகையில், தொழிற்சங்கங்கள் அரசிற்கு தொழிலாள வர்க்கத்தை அடிபணிய வைக்க பொறுப்பேற்றுள்ளன.

வெட்டுக்களுக்கு எதிரான ஒரு போராட்டமானது, தொழிற்சங்க எந்திரத்துக்கு எதிரான ஓர் அரசியல் கிளர்ச்சியின் அடித்தளத்தில்தான் நடத்டத்தப்பட முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக, பாப்பான்ட்ரூ அரசாங்கத்திடம் சட்டமாக்க வேண்டும் என்று கோரும் நிதி மூலதனத்தின் கோரிக்கைகளை ஒரு சோசலிச அடித்தளத்தில் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் மறுகட்டமைக்கும் மற்றும் நேரடியாகவும், நனவுபூர்வமாகவும் அரசியல் அதிகாரத்தைப் பற்றிய கேள்விக்கு பதிலளிக்கும் ஒரு முன்னோக்கின் அடித்தளத்தில் தான் எதிர்க்கவும், போராடவும் முடியும். மேலும் இந்த முன்னோக்கின் மீது கிரீஸில் இருக்கும் தொழிலாள வர்க்கத்தை மட்டுமல்லாமல், மாறாக ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் இருக்கும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட இது கோருகிறது.

ஐரோப்பிய ஒன்றியம் நெருக்கடியில்

கிரேக்கத்தின் நிலைமையில் இருக்கும் மற்றொரு விடயமும் மிக முக்கியமானதாகும். திரட்சியின் முந்தைய நிலையின் உடைவு முதலாளித்துவ அமைப்புமுறையின் செங்குத்து உறவுகள் என்றழைக்கப்படுகின்ற வர்க்க உறவுகளை மட்டுமல்லாது கிடைமட்டமான உறவுகள் என்றழைக்கப்படுகின்ற முக்கிய முதலாளித்துவ சக்திகளுக்கு இடையிலான உறவுகளையும் மறுகட்டமைக்கவேண்டி நிற்கின்றது. கிரீஸ் பிணையெடுப்பு மீது ஐரோப்பாவிற்குள் இருக்கும் முரண்பாடு, அல்லது, மிக துல்லியமாக கூறுவதானால், கடனால் உந்தப்பட்டு விரிவடையும் கிரேக்கப் பொருளாதாரம், அத்துடன் அயர்லாந்து, ஸ்பெயின், இத்தாலி மற்றும் போர்த்துக்கல் ஆகியவற்றின் பொருளாதாரத்தால் ஜேர்மன் முதலாளித்துவம் கணிசமாக ஆதாரயமடையக்கூடும் என்ற போதினும் ஒரு பிணையெடுப்பிற்கு ஜேர்மன் முதலாளித்துவத்தின் மறுப்பானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் வரலாறில் மிக ஆழமான நெருக்கடியை எழுப்பியுள்ளது.

இந்த நெருக்கடியை அதன் வரலாற்று உள்ளடக்கத்தில் வைத்து பார்க்கவேண்டும். முதலாளித்துவத்தின் கீழ் ஐரோப்பிய ஒருங்கிணைப்பு திட்டம் அதன் எல்லையை எட்டியிருக்கிறது. ஆனால் அது முன்னோக்கி நகர தவறுமேயானால், வெறுமனே அது ஓரிடத்தில் மட்டும் நின்றுவிடாது. அது ஆழமான பேரழிவுமிக்க விளைவுகளுடன், கட்டவிழ்க்கப்படத்தொடங்கிவிடும்.

ஜேர்மன் பொருளாதார விரிவாக்கம் ஐரோப்பிய பொருளாதாரத்தின் ஒரு பொதுவான முன்நகர்வின் தறுவாயுடன் ஒட்டுமொத்தமாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் முயற்சிக்காகவும், மற்றும் முந்தைய ஏழு தசாப்தங்களில் மூன்று முறை எழுந்திருந்த பிரான்ஸ் மற்றும் ஜேர்மனுக்கு இடையிலான முரண்பாடுகள் மீண்டும் எழக்கூடாது என்பதற்காகவும் இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் தாக்கத்தை ஏற்படுத்திய பல உடன்பாடுகளின் அடித்தளத்தில் தான் ஐரோப்பிய ஒன்றியம் எழுந்தது. ஜேர்மன், பிரான்ஸ், இத்தாலி மற்றும் 1951ன் பாரீஸ் உடன்படிக்கையின் மூலம் உருவான மூன்று Benelux நாடுகள் ஆகியவற்றிற்கு இடையில் உருவான ஐரோப்பிய நிலக்கரி மற்றும் எஃகுத்துறையை பொருளாதார ஒருங்கிணைவு அடித்தளமாக கொண்டிருந்தது. இது 1957 ரோம் உடன்படிக்கையின்கீழ் பொதுச்சந்தை உருவாக்கத்தால் பின்தொடரப்பட்டது.

1970களின் ஆரம்பத்தில் பிரெட்டன் வூட்ஸ் ஒப்பந்த உடைவின் பிரதிபலிப்பாக, ஓர் ஐரோப்பிய நாணய உடன்படிக்கையை உருவாக்குவதற்கான பல்வேறு முயற்சிகள் அங்கே நிலவின. ஆனால் அவற்றில் எதுவுமே குறிப்பிடத்தக்களவில் வெற்றி பெறவில்லை.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னரும், பனிப்போர் முடிந்த பின்னரும் இந்த நிலைமை தலை தூக்கியது. பனிப்போரும், அதன் தொடர்ச்சியான ஐரோப்பாவின் பிரிவும் முதலாளிகளுக்காக ஒரு முக்கிய பாத்திரம் வகித்தன. ஏனென்றால், ஜேர்மனின் சிக்கலான பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வை அளிப்பதில் அது உதவியது. பிரிந்திருந்த ஜேர்மனி கிழக்கில் விரிவடைவதில் தடுக்கப்பட்டிருந்தது. பேர்லின் சுவர் வீழ்ச்சியடைந்த உடனேயே, ஜேர்மன் மறுஐக்கியத்தின் சாத்தியம் ஐரோப்பா முழுவதும் ஓர் அதிர்வை அனுப்பியது. ஐக்கியப்பட்ட ஜேர்மனியின் பொருளாதார மற்றும் அரசியல் சக்தியின் விளைவுகளுக்கு அஞ்சி, தாட்சரும், மித்திரோனும் அதை எதிர்த்தார்கள். "யுத்தத்தில் நாங்கள் அவர்களை இரண்டு முறை தோற்கடித்துள்ளோம். தற்போது அவர்கள் மீண்டும் தலை தூக்குகிறார்கள்" என்று தாட்சர் கூறியதாக தகவல் வெளியானது. இந்த கேள்வியின் மீது அவரின் எவ்வித உத்தியோகபூர்வமற்ற கூற்றுகளையும் கவனத்தில் எடுக்க வேண்டாம் என்றும், ஆனால் ஜேர்மன் தொடர்ந்து பிரிந்தே இருப்பதை உறுதிப்படுத்துமாறும் கோர்பசேவிற்கு அவர் வெளிப்படையாகவே வேண்டுகோள் விடுத்தார்.

இங்கிலாந்து மற்றும் பிரான்சினால் மறுஐக்கியத்தை தடுக்க முடியவில்லை, ஆனால் ஜேர்மனியை கட்டுப்படுத்தாத, குறைந்தபட்சம் ஒரு விரிவடைந்து கொண்டிருந்த ஐரோப்பாவில் அது கட்டுண்டிருப்பதை உறுதிப்படுத்த விரும்பும் ஓர் ஏற்பாட்டைச் செய்ய அவற்றால் முடிந்தது. இது தான் மாஸ்ட்ரிச்ட் உடன்படிக்கையின் அடித்தளம். இதைத் தொடர்ந்து தான் ஐரோப்பாவின் பொது நாணயமாக யூரோவை உருவாக்கும் முடிவு எடுக்கப்பட்டது. அமெரிக்க டாலருக்கு மாற்றாக ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சியின் தேவை உட்பட பல காரணிகள் இதில் இணைந்திருந்தது. ஐரோப்பிய சக்திகளின் நிதியங்கள் வரையறுக்கப்பட்ட அளவிற்குள் வைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் மீது, ஜேர்மன் அதன் நாணயத்தை ஒப்படைக்க ஒத்துக்கொள்வதுடன், அந்த திட்டத்தைத் தாங்கிப்பிடிக்க வேண்டும் என்பதே யூரோவின் அடித்தளமாகும். இது மட்டுமே யூரோவை வலிமையாக வைத்திருக்கும். ஆனால் ஒரு தசாப்தத்திற்கு சற்று பின்னர் இந்த ஏற்பாடு உடையத் தொடங்கியிருக்கிறது. 2008ல் நிதி நெருக்கடி தொடங்கியபோது, இந்த பிளவுகள் வெளிப்படையாக தெரிந்தன. இது ஒவ்வொருவரும் தமக்காக, மிக துல்லியமாக கூறுவதானால், ஒவ்வொரு அரசும் அதன் சொந்த வங்கி அமைப்புமுறைக்கு உதவியது.

பல விமர்சகர்கள் குறிப்பாக பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டது போல, ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஜேர்மன் மாதிரி சாதாரணமாக நிலைக்கக்கூடிய ஒன்றாக இல்லை. அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் அவற்றின் பற்றாக்குறைகளை வெட்டி, அவற்றின் உற்பத்தியை மேம்படுத்தி, அவற்றின் சர்வதேச போட்டித்தன்மையை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. மார்ச் 30ல் மார்ட்டின் வொல்ஃபால் எழுதப்பட்ட அவருடைய தலையங்கம் பின்வருமாறு குறிப்பிட்டது:

"ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் ஹெர்மன் வேன் ரோம்பே, கூட்டத்திற்குப் பின்னர், கிரேக்க பங்குகளை வைத்திருக்கும் அனைவரும், யூரோ பிராந்தியம் ஒருபோதும் கிரேக்கத்தைத் தோற்றுப்போகவிடாது என்பதற்கு இது மறுஉத்திரவாதம் அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்' என்று குறிப்பிட்டார். இதை நிறைவேற்ற இரண்டு வழிகள் மட்டுமே இருக்கின்றன. அவை: ஒன்று, அங்கத்துவ நாடுகள் ஒருவர் மற்றவருக்கு உதவியாக தொகை குறிப்பிடாத காசோலைகளை எழுத வேண்டும் அல்லது தவறாக நடக்கின்ற உறுப்பினர்களின் பொது நிதிகளை----இதன் மூலமாக அரசினுடையதையும்----அவர்கள் கைப்பற்ற வேண்டும். முந்தையதை ஜேர்மன் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை; ஆனால் அரசியல் குறிப்பாக பெரிய நாடுகளில் இரண்டாவதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. இதனால் வேன் ரோம்பேயின் கருத்து பொருளற்றதாக தெரிகிறது.

"இப்போது முக்கிய புள்ளிக்குத் திரும்புவோம். 'யூரோ பிராந்தியத்தில் நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த தற்போதிருக்கும் கட்டமைப்பை உறுதிப்படுத்துவதற்கும், மற்றும் ஊக்கமளிப்பதற்கும் மற்றும் நெருக்கடி காலங்களில் செயல்படுவதற்கான அதன் திறனை உயர்த்துவதற்குமான அதன் தேவையை தற்போதைய சூழ்நிலை எடுத்துக்காட்டுகிறது. எதிர்காலத்திற்காக, அதீத பற்றாக்குறை செயல்முறை உட்பட பொருளாதார மற்றும் நிதிநிலை அபாயங்களை கண்காணித்தல், மற்றும் அவற்றை தடுப்பதற்கான அமைப்புகள் பலப்படுத்தப்பட வேண்டும்' என்று கடந்த வார அறிக்கையும் வாதிட்டது.

"விளிம்பிலுள்ள நாடுகளில் மோசமடைந்து வரும் நிதிநிலை நிலைமைகள் நிதிநிலை ஒழுங்குமுறையில் இல்லை என்பதையே பிரதிபலிக்கிறது என்பதே இங்கே ஆட்சி செய்யும் கருத்தாக இருக்கிறது. கிரேக்கத்தைப் பொறுத்த வரையில் இது உண்மையாக இருக்கிறது; போர்த்துக்கல்லை பொறுத்தவரைக்கும் ஓரளவிற்கு பொருந்தி நிற்கிறது. ஆனால் அயர்லாந்தும், ஸ்பெயினும் மிக திடமான நிதிநிலை நிலைமைகளில் இருப்பதாக தெரிகிறது. இவற்றின் பலவீனம் தனியார்துறை நிதியியல் பற்றாக்குறையில் தங்கி இருக்கிறது. நெருக்கடிக்குப் பின்னர் தனியார்துறை சரிசெய்யப்பட்ட பின்னர் தான் நிதிப்பற்றாக்குறை வெடித்தது. பொதுத்துறையில் அல்லாமல் பிரச்சினை தனியார்துறையில் இருப்பதால், பொதுத்துறையை மட்டும் கண்காணிக்காமல் தனியார்துறை மீதும் கவனம் செலுத்தப்பட வேண்டியதாக இருக்கிறது.

"சொத்து குமிழிகளும், தனியார்துறை கடன் வெளிப்புறப்பரப்பில் விரிவடைவதும், மத்தியிலிருக்கும் நிஜமான தேவையின் அதிகரிப்பு இல்லாமையின் நகலுருவாக இருந்தது. இவ்வாறு தான் ஐரோப்பிய மத்திய வங்கியின் கண்காணிப்பு கொள்கை, போதியளவிற்கும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ஒட்டுமொத்த யூரோ பிராந்திய தேவையின் விரிவாக்க விகிதத்தை உருவாக்கியது. ஆகவே, இன்றைய நிதி பேரழிவுகளை அடிக்கோடிடும் காரணங்கள் என்ன என்று நாம் கேட்டால், யூரோ பிராந்தியத்தின் மையத்தில், எல்லாவற்றிற்கும் மேலாக ஜேர்மனியில், தேவையின் நலிந்த வளர்ச்சியை நிரப்ப செயல்படுத்தப்படும் ஓர் உள்ளார்ந்த நாணய கொள்கையின் பொறுப்புறுதியின் விளைவுதான் இவை எல்லாம் என்பதை நாம் உணர வேண்டும்.

"யூரோபிராந்தியத்திற்குள் இருக்கும் இதுபோன்ற ஒரு விவாதத்தின் தேவை மற்றும் சமநிலையின்மையை ஜேர்மனின் கொள்கை உருவாக்குபவர்கள் விரும்பவில்லை. இந்த நிலை நீடிக்கும் வரை, ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட 'மேம்பட்ட பொருளாதார ஒருங்கமைப்பிற்கான சாத்தியம் ஒன்றுமே இல்லாமல் தான் இருக்கும். இன்னும் மோசமடையும் நிலையில், சிறிய நிதி பற்றாக்குறைக்காக கூட அதன் கூட்டாளிகளால் எடுக்கப்படும் ஒரு கடுமையான நகர்வையே ஜேர்மன் விரும்பும். உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமான யூரோ பிராந்தியம், சீர்கெட்ட நலிந்த உட்தேவையுடன் அதன் பின்னர் தான் ஒரு பெரிய ஜேர்மனிக்கான அதன் பாதையில் திரும்பும். ஜேர்மனும், இதைப்போன்ற ஏனைய நாடுகளும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஏற்றுமதியை உயர்த்துவதன் மூலம் அவற்றிற்கான ஒரு வழியைக் காணும். அதன் கட்டமைப்புரீதியான பலவீனமான கூட்டாளிகளுக்கு----குறிப்பாக போட்டியற்ற செலவுகளால் பாரத்தைச் சுமந்து கொண்டிருந்தவர்கள்----அதிகபட்சம், பல ஆண்டு மந்தத்தன்மையே பலனாக விளையக்கூடும். இதுதானா புகழப்படும் ''ஸ்திரத்தன்மை''?

"ஐக்கிய நாணய திட்டம் ஒரு பெரும் சவாலை எதிர்கொள்கிறது. கிரேக்க நெருக்கடியைத் தீர்ப்பதற்கான எளிமையான எந்த வழியும் அதனிடம் இல்லை. ஆனால் பெரிய பிரச்சினை என்னவென்றால், யூரோ பிராந்தியம் ஜேர்மன் விரும்புவதைப் போல செயல்படாது... பெருமளவிலான அதிகப்படி வினியோகத்தை ஏற்றுமதி செய்வது அல்லது யூரோபிராந்திய பொருளாதாரத்தின் பெரும் பகுதிகளை நீண்டகால மந்தநிலைக்குள் தள்ளுவது, அல்லது, மிக சாத்தியப்பட்ட வகையில் இரண்டையும் செய்வதன் மூலமாக மட்டுமே யூரோ பிராந்தியம் ஜேர்மனியமாக வரமுடியும். ஏனையவர்கள் ஜேர்மனியாக இருக்கவில்லை என்பதால் ஜேர்மனி ஜேர்மனியாக இருக்க முடிகிறது. யூரோ பிராந்தியமே ஜேர்மனியாக மாறிவிட்டால், அது எவ்வாறு இருக்கும் என்று என்னால் கணிக்க முடியவில்லை.

"தவிர்க்கமுடியாமல், குறுகிய ஓட்டத்தில் ஜேர்மன் அதன் வழியைப் பெற முடியும். ஆனால் யூரோ பிராந்தியம் அது விரும்பும் வழியில் வெற்றியடைய ஜேர்மனி விடாது. பெரும் நிதி பற்றாக்குறைகளே நெருக்கடியின் ஓர் அறிகுறியாக இருக்கிறது. அதுவொரு செயல் இல்லை. இந்த தடுமாற்றத்தில் இருந்து வெளியேறுவதற்கு ஏதேனும் திருப்திகரமான வழி இருக்கிறதா? என்னுடைய பார்வையில் இதுவரை இல்லை. இது உண்மையிலேயே மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறது."

ஜேர்மனி என்ன கோருகிறது? பொருளாதாரரீதியாக வலுவான ஓர் ஐரோப்பாவை. ஆனால் ஒரு கூட்டமைப்பின் அடிப்படையில் அது சாத்தியமே கிடையாது என்பது நிரூபணமாகி உள்ளது. ஹிட்லரின் பிரசுரிக்கப்படாத இரண்டாவது புத்தகம் என்றழைக்கப்பட்டதில் அவரால் முன்னெடுக்கப்பட்ட நிலைப்பாடுகளை ஒருவர் நினைவுகூர வேண்டும். ரோம் அதன் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய வழியில் அதை ஒருங்கிணைக்க வேண்டும், அல்லது பிரஷ்யா ஓர் ஐக்கிய ஜேர்மனியை உருவாக்கிய வழியில், அதாவது ஓர் ஏகாதிபத்திய திட்டமாக உருவாக்கப்பட வேண்டும்.

கிரேக்க நெருக்கடி மற்றும் ஐரோப்பா இரண்டையும் கடந்து பார்த்தால், ஒருவரால் பின்வரும் கேள்வியை நிலைநிறுத்த முடியும்: நெருக்கடி எழுந்ததிலிருந்தே முக்கிய முதலாளித்துவ சக்திகளுக்கு இடையிலான உறவு எவ்வாறு இருக்கிறது? பொதுவான பிரச்சினைகளைத் தீர்க்க ஏதேனும் ஒரு திட்டம் வகுக்கப்பட்டதா, அல்லது தீவிரமடைந்து வரும் முரண்பாடுகள் மற்றும் பகைமையை நாம் பார்க்கிறோமா? ஐரோப்பாவில் இதற்கான விடை தெளிவாக உள்ளது.

சர்வதேசரீதியாக, அண்மை வரை இது குறித்து அதிகமாக ஒன்றும் கேள்விப்படாத G20 உருவாக்கத்தில் நிலைக்காமல், அங்கே கசப்புணர்வு வளர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டின் இறுதியில் கோபன்ஹேகனில் இதைத் தெளிவாக காணமுடிந்தது. மேலும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் தீவிரமடைந்து வரும் முரண்பாடுகளிலும் இது இருக்கிறது. சீனா ஒரு நாணய மோசடியாளர் என்பதன் மீதான இறுதிவிளைவு முடிவு என்னவாக இருந்தாலும், பிளவுகள் ஆழப்படும். மேலும் சீனாவுடனான ஒரு முரண்பாட்டில், ஒபாமா நிர்வாகம் அதனுடன் சேர்ந்து நிற்க அதன் கூட்டாளிகளுக்கும் அழைப்பு விடுக்கும். இது ஆஸ்திரேலியாவுடன் முக்கிய தொடர்புகளைக் கொண்டிருக்கிறது. இந்த பிராந்தியத்தின் பிற நாடுகளில், சீனாவிற்கு ஆதரவான பிரிவுகள் மற்றும் அதற்கு எதிரான பிரிவுகள் என்று முதலாளித்துவம் பிரிந்திருப்பதைப் போன்ற அதேநிலைமையை நாம் இங்கேயும் பார்க்கலாம்.

ஆஸ்திரேலியாவின் நிலைகளுக்குள் திரும்பி பார்ப்போமேயானால், கடந்த மாதங்கள் பல தொடர்ச்சியான ஆச்சரியமான அரசியல் திருப்பங்களால் பாத்திரப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. 2009ல் ரூட் தொழிற் கட்சி அரசாங்கத்தின் மத்திய கொள்கைகள், அதனுடைய உதவியளிப்பு திட்டங்களை தொடர்ந்து, கரியமல வாயுவை கட்டுப்படுத்தும் திட்டத்தின் (Emissions Trading System -ETS உருவாக்கத்தால் வந்தது. நிதி மூலதனத்தின் பல்வேறு பிரிவுகள், இதை ஆசிய பகுதிக்கான இலாபகரமான கார்பன் வர்த்தகத்திற்கான சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருப்பதாக பார்த்தன, இதன் அடிப்படையில், தாராளவாத தலைவர் Malcolm Turnbull இதற்கு ஆதரவளித்தார். சட்ட அமைப்பிற்கு எதிராக இருந்த வெவ்வேறு வியாபார அமைப்புகளை வாங்கவும், எவ்வித பொது பரிசோதனையும் இல்லாமல் அதைப் பெறுவதையுமே ரூட் மற்றும் டர்ன்புல்லுக்கு இடையிலான ETS பேச்சுவார்த்தைகளின் சாரமாக இருந்தது. இந்த நடவடிக்கையில் தாராளவாத கட்சி உடைந்து, டர்ன்புல் வெளியேற்றப்பட்டார். பின்னர் கோபன்ஹேகன் மாநாட்டின் உடைவு சர்வதேச சூழ்நிலையை பரந்தளவில் மாற்றியது. டர்ன்புல்லை நீக்கிவிட்டு, ரொனி அப்பாட்டை(Tony Abbott) தாராளவாத கட்சி தலைவராக நிறுவியது, ரூட் அரசாங்கத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டது. இந்த மாற்றம் செலவின-வெட்டு முறைமைகளை செயலாக்கும் பணியிலும், உற்பத்தியை ஊக்குவிப்பதிலும் மற்றும் சர்வதேச போட்டியை சமாளிப்பதற்கான மறு-பொறுப்பேற்பிலும் எவ்வித பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

பெருநிறுவன ஊடகம் வழியாக, குறிப்பாக முர்டோக் இதழ் வாயிலாக அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்ட செய்தியானது, பெறப்பட்டு, புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. "எமது காலத்தில் மிகச்சிறந்த நீதிநெறியாக" எடுத்துக்காட்டப்பட்ட, ரூட்டால் நம்மிடையே தொடர்ச்சியாக கூறப்பட்ட, அரசாங்க திட்டத்தின் மையக்கருவாக இருந்த ETS, உடனடியாக மறைந்துவிட்டிருக்கிறது. இது பாராளுமன்ற மாற்றத்தின் வடிவத்திற்குள், சுகாதார திட்டத்தின் மறுகட்டமைப்பால் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் சாரம் செலவின வெட்டுக்கள். இதை மார்ச் 29ல் அரசாங்கத்தின் நிலைநோக்கை கோடிட்டுக்காட்டி ரூட்டால் அளிக்கப்பட்ட ஓர் உரையில் அடிக்கோடிடப்பட்டது. செப்டம்பர் 2008ல் லெஹ்மென் பிரதர்ஸின் பொறிவைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நியாயப்படுத்தி அவர் தொடங்கி இருந்தார். மேலும் அதற்கு பின்னர் அவர் அவருடைய திட்டத்திற்கு திரும்பினார்:

"2007ல் நான் எதிர்கட்சி தலைவராக ஆன பின்னர், ஆஸ்திரேலிய வியாபார ஆணையத்தில் என்னுடைய முதல் உரையின் போது நான் தெரிவித்தபடி, 'ஒரு மாறிவரும் போட்டி நிறைந்த உலகில் தொடர்ந்து நிற்க வேண்டுமானால், பின்னோக்கி தான் போக வேண்டும். அதனால் தான் நான் சீர்திருத்த நிகழ்வுப்போக்கின் தொடர்ச்சிக்கு பொறுப்பேற்கிறேன்.'

"அந்த சீர்திருத்த நிகழ்வுப்போக்கு உற்பத்தி வளர்ச்சியிலும், தொழிற்சாலைக்குழு பங்களிப்பிலும் மற்றும் ஓர் இடைவெளியில்லா தேசிய பொருளாதார அபிவிருத்தியிலும் வேரூன்றப்பட்டிருக்க வேண்டும்."

உற்பத்தியை பற்றிய கேள்வியைக் குறிப்பிட்டு, அவர் தொடர்ந்து கூறுகையில், "1990களுக்குப் பின்னரில் இருந்து உற்பத்தியில் ஏற்பட்டிருக்கும் நீண்டகால வீழ்ச்சி, ஆஸ்திரேலியாவின் பொருளாதார செயல்திறனில் இருக்கும் மிக அலைக்கழிக்கும் போக்குகளில் ஒன்றாக இருக்கிறது. 1994 மற்றும் 1999க்கு இடையில், ஆஸ்திரேலியாவின் உற்பத்தி வளர்ச்சி பொருளாதார ஒத்துழைப்பிற்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு நாடுகளின் மத்தியில் இரண்டாவதாக இருந்தது. எவ்வாறிருப்பினும், இந்த, உயர்விற்கு பிற்பாடு, ஆஸ்திரேலியாவின் உற்பத்தி வளர்ச்சி குறைந்திருக்கிறது. 1999 மற்றும் 2007க்கு இடையில், பொருளாதார ஒத்துழைப்பிற்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு நாடுகளின் மத்தியில் நாம் 14வது இடத்தில் இருக்கிறோம்."

எதிர்கால உற்பத்தி வளர்ச்சிக்கான முக்கிய உட்பொருளாக உள்கட்டமைப்பை ரூட் கண்டறிந்திருக்கிறார். இந்த கட்டத்தில் தான் சுகாதார பராமரிப்பு சீர்திருத்தம் என்றழைக்கப்பட்டதை கொண்டு வந்தார்:

"ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் சுகாதார சீர்திருத்த திட்டமானது, உள்கட்டமைப்பில் முக்கிய மாநில முதலீட்டிற்கான அவற்றின் முயற்சிகளில் மறு-கவனம் செலுத்த, மாகாண அரசாங்க நிதியறிக்கையை சுதந்திரப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னோக்கிய படியைக் குறிக்கிறது என்ற புள்ளியை நான் குறிப்பிட்டிருந்தேன். சுகாதார சீர்திருத்தத்தைக் குறிப்பிட்டுக்காட்டி, ஆகவே கூட்டமைப்பின் நிதிகளுக்கு அரசாங்கமும் சீர்திருத்தத்தை கையில் எடுக்கிறது.

"கருவூலம் எவ்வித செயல்பாட்டு செலவினங்களோ, சுகாதார செலவினங்களோ, மருத்துவமனை செலவினங்களோ இல்லையென்றால் மாகாணங்களாலும், ஆஸ்திரேலியாவின் பிராந்திய அரசாங்கத்தாலும் அடுத்த 20தில் இருந்து 30 ஆண்டுகளில் சேகரிக்கப்படும் மொத்த வருவாயையும்---ஒட்டுமொத்த வருவாயையும் கருவூலம் கொண்டிருக்கும் என்று கணிக்கிறது.

"அரசாங்கத்தின் சீர்திருத்தங்கள் அடுத்துவரும் தசாப்தத்தில் மாகாண நிதிநிலையில் சுகாதார செலவினங்களுக்கான சுமார் 15 பில்லியன் டாலரை விடுவிக்கும் என்று கணிக்கப்படுகிறது. இது சாலைகள், பொதுப்போக்குவரத்து, எதிர்காலத்தில் நம்முடைய பிராந்தியங்கள் மற்றும் நம்முடைய நகரங்களுக்கு உதவியாக தேவையான நகர்புற உள்கட்டமைப்பு தேவைகளில் முதலீடு செய்ய மாகாணங்களுக்கு கூடுதல் சக்தியை அளிக்கும்."

இங்கே தான் அரசாங்கத்தால் சுகாதார பாதுகாப்பு சீர்திருத்தம் என்றழைக்கப்படுவதன் உண்மையான நோக்கம் வெளிப்படுகிறது. மாகாண அளவில் சுகாதார செலவுகளைக் குறைப்பதன் மூலம், உற்பத்தையை பெருக்கவும், ஆஸ்திரேலியாவின் சர்வதேச போட்டியை மேம்படுத்தவும் முக்கிய உள்கட்டமைப்பின் முன்னேற்பாட்டிற்காக பணம் தயாராக வைத்திருக்கப்படும் என்று ரூட் வாதிடுகிறார்.

ஆனால் மாகாணங்களால் செலவிடப்படும் பணம் பாராளுமன்ற அரசாங்கத்தால் செலவிடப்படும் பணமே ஆகும். அப்படி இருக்கையில் எதுவுமே தீர்க்கப்படமுடியாது. நிதி பொறுப்பை உணர்ந்த வகையில், பாராளுமன்ற அரசாங்கம் செலவின வெட்டுக்களை ஏற்படுத்தாவிட்டால், அது வெறுமனே ஒருவரிடம் (பீட்டரிடம் இருந்து) கொள்ளையடித்து இன்னொருவருக்கு (போலிற்கு) கொடுப்பது போன்று தான் இருக்கும்.

இது தான் ரூட்டின் சுகாதார "சீர்திருத்தத்தின்" முக்கிய நோக்கம். செலவினங்களைக் குறைக்க தேசிய ரீதியாக திசைதிருப்பப்பட்ட, மேலெழுந்து நிற்கும் ஓர் ஆட்சியை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. உண்மையில், இதைத்தான் அவர் முற்போக்கான முனைவு என்று அலங்கரித்து காட்டுகிறார். எதிர்வரும் காலக்கட்டத்தில் இதே முறையுடன் ---அதாவது செலவின வெட்டுக்களை முன்வைக்கும் ஓர் ஆட்சியே அபிவிருத்தியாக எடுத்துக்காட்டும்--- விபரங்களை நம்மால் பார்க்க முடியும். இது இந்த வாரத்திற்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட நீரழிவுநோய் திட்டத்துடன் ஏற்கனவே தொடங்கப்பட்டிருக்கிறது. நீரழிவுநோய்க்கான சிகிச்சை மற்றும் பிற நாட்பட்ட நோய்கள் மற்றும் நிலைமைகள் இப்போது இருப்பதைவிட மிகச் சிறப்பாக கையாள முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் நோயாளிக்கு குடும்ப வைத்தியர் சேவைகளை அளிப்பார், மருத்துவ சிகிச்சைகளைக் குறைக்கும் ஒரு மைய அமைப்புமுறை தற்போது இருப்பதைவிட மிக ஏற்புடையதாக இருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால் எதிர்காலத்தில் அறிவிக்கப்பட இருக்கும் இந்த திட்டத்தின் நோக்கம் அதுவோ அல்லது---முதியோர் கவனிப்பு உட்பட---வேறு விஷயங்களோ இல்லை. அலங்கார வார்த்தைகளுடன் சிறந்த சிகிச்சைக்கான தேவையை வலியுறுத்தும் அவர்களின் நோக்கம், அரசாங்க செலவினங்களை வெட்டுவதே ஆகும்.

அவருடைய திட்டத்தைப் பற்றிய ரூட்டின் மறுஉத்திரவாதத்தின் அடிப்படையில், ஊடகம் அவருக்குப் பின்னால் ஊஞ்சலாடி கொண்டிருக்கிறது. ஏப்ரல் 2ல் "Abbott's thin tissue of lies" என்று தலைப்பிடப்பட்டு ஜெஸ்சிகா இர்வேனினால் Sydney Morning இல் எழுதப்பட்டதை ஓர் எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்ளலாம். குவின்ஸ்லாந்தின் தேசியக் கட்சி செனட்டர் பார்னபி ஜோய்சியின் கருத்துக்களைத் தொடர்ந்து, உற்பத்தி ஆணைக்குழுவின் அறிக்கையிலிருந்து கிழிக்கப்பட்ட காகிதங்கள் வெறுமனே கழிவறைகளுக்கு மட்டுமே பயன்படும் என்பதாக அவர் கருதினார். எதிர்கட்சி தலைவரின் உரையின் அச்சு பிரதியும் இதற்கு தான் பயன்படும் என்று அவர் எழுதினார்.

ஒரு தேசிய அரசியல்வாதிக்கு எதிராக பெரும் ஊடகத்தால் நிலைநிறுத்தப்பட்ட குற்றச்சாட்டு "பொய்யை" நாம் காண்பது மிகவும் அரிதாக இருக்கிறது. தாராளவாத கட்சியின் தலைவரால் அளிக்கப்பட்ட பொருளாதாரத்தைப் பற்றிய ஒரு முக்கிய உரைக்கு பிரதிபலிப்பாக அது இருப்பது மேலும் அரிதாக இருக்கும். அவருடைய தாக்குதலின் வலிமையானது, அது தெளிவாக திரு. இர்வேனினால் தீர்மானிக்கப்படவில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது. இந்த நிலையில், செலவின வெட்டுக்களின் மூலம் அரசாங்கத்தின் கடனைக் குறைக்கும் அவர்களின் திட்டத்தை செயல்படுத்தவும், சுகாதார பராமரிப்பு போன்ற பெரிய செலவு விஷயங்களைக் கையாளவும் தொழிற்கட்சி அரசாங்கமே சிறந்த கருவியாக இருக்கிறது என்ற ஆளும் மேற்தட்டின் சக்திவாய்ந்த பிரிவுகளின் கண்ணோட்டத்தை பிரதிபலித்துக் கொண்டிருக்கும், முதன்மை கோட்பாடாக இது இருந்தது.

ஆஸ்திரேலியாவின் நிலைமை ஏனைய பிற நாடுகளில் இருந்ததைப் போன்று இருக்கவில்லை. எவ்வாறிருப்பினும், உலக அபிவிருத்தியின் அடிப்படை நிகழ்ச்சிப்போக்கின் ஒரு நிஜமான ஒருங்கிணைப்பாக இது இருப்பதுடன், அதுவே ஒட்டுமொத்தமாக இருக்கிறது. ஒவ்வொரு முக்கிய முதலாளித்துவ நாடுகளிலும் இருப்பது போல, அரசாங்க திட்டத்தின் மையக்கரு சமூக செலவினங்களை வெட்டுவதே ஆகும். சீனாவிற்கான ஏற்றுமதி வளர்ச்சியின் முன்னேற்றங்கள் ஆஸ்திரேலிய முதலாளித்துவத்திற்கு குறிப்பிட்ட அளவிற்கு "வளைவு நெளிவு இடங்களை" அனுமதித்திருக்கின்ற நிலையில், ஒரு தொடர்ச்சியான கதவடைப்புகள் மற்றும் உற்பத்தி தொழிற்துறை முழுவதுமான கொள்ளையடிப்பு ஆகியவற்றுடன் "இரட்டை-தட" பொருளாதாரம் உருவாகி இருக்கிறது என்பதற்கான தெளிவான அறிகுறிகள் இருக்கின்றன. இதற்கிடையில் பணிக்குழுகளின் பாதிப்புகளும், அதாவது இளம் தலைமுறை மீது ஒரு முக்கிய பாதிப்புகளைக் கொண்டிருக்கும் ஒரு நிலைமையும் தொடர்கின்றன.

சீனாவுடனான ஆஸ்திரேலிய பொருளாதாரத்தின் உறவு மிகவும் தீவிரமாக மாறக்கூடும். அமெரிக்கா பதிலடி நடவடிக்கையெடுக்க முடிவெடுத்தால், அமெரிக்க சந்தைக்கு வெளியே விரிவடைய சீனா விரும்பும். இதுபோன்றவொரு நகர்விற்கான ஆதாரங்கள் ஏற்கனவே இருக்கின்றன. ஆஸ்திரேலிய முதலாளித்துவம் தன்னை எந்த சக்தியுடன் இணைக்கும்? "இருதலைக்கொல்லி நிலை" என்று சொல்லப்படுவதைப் போல, அது அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்படுவது தான் வெளிப்படையாக நிகழக்கூடியதாக இருக்கிறது. இந்த திருப்பங்களுக்கு அப்பாற்பட்டு, சீனாவின் முதலீட்டு வளர்ச்சியில் ஏற்படும் எவ்வித கூர்மையான வீழ்ச்சியும்(சீன பொருளாதார குமிழின் பொறிவு மட்டுமே கூட) ஆஸ்திரேலிய முதலாளித்துவத்தில் மிகக் கூர்மையான தாக்கங்களை கொண்டிருக்கும்.

நம்முன்னால் இருக்கும் காலகட்டம் மிகக் கூர்மையான திருப்பங்களையும் மாற்றங்களையும் கொண்டிருக்கும். இதற்கு நாம் நடத்தியிருக்கும் சோசலிச சமத்துவக் கட்சியின் ஸ்தாபக காங்கிரஸின் வெற்றிகளின் அடித்தளத்தில் எம்மை கட்டியமைக்க வேண்டும். இது ஆஸ்திரேலிய தொழிலாள வர்க்கத்திற்குள் மார்க்சிச தலைமையை உருவாக்குவதற்கான போராட்டத்தில் புரட்சிகர இயக்கம் எதிர்நோக்கும் சில மிக அடிப்படையான அரசியல் பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களை தீர்ப்பதன் மீது அந்த வெற்றிகள் தங்கி இருக்கின்றன.

அடுத்த காலக்கட்டத்தின் மிகமுக்கிய அரசியல் பணியானது, இந்த ஆண்டின் பிற்பகுதியில் வரும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் கட்சியின் தலையீட்டில் மையப்பட்டிருக்கும். உலக முதலாளித்துவத்தின் நிலைமுறிவால் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய நிலைமைகளில் தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு சோசலிச மூலோபாயத்தை சோசலிச சமத்துவக் கட்சி முன்வைக்கும். ஒரு உலக வரலாற்று முன்னோக்கின் மீது நம்மை நாமே நிறுத்துகிறோம். உலக முதலாளித்துவத்தின் கட்டமைப்புகளில் வேரூன்றி இருக்கும் புறநிலை போக்குகளின் விளைவாக, தொழிலாள வர்க்கத்தின் பரந்துபட்ட போராட்டங்களின் எழுச்சியை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அதற்கு தேவையான புரட்சிகர முன்னோக்கு மற்றும் தலைமையை வளங்குவதற்கான இந்த போராட்டங்களில் எங்களின் தலையீடு, தற்போதைய பொருளாதார மற்றும் சமூக ஒழுங்கமைப்பிற்கு ஓர் உண்மையான மாற்றத்தைத் தேடிக் கொண்டிருக்கும் ஒரு புதிய தட்டு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை அரசியல்ரீதியாக பயிற்றுவிப்பதிலேயும் மற்றும் அபிவிருத்தி செய்வதிலுமே தங்கியிருக்கின்றது.