சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மெய்யியல

The Nation, Jonathan Israel and the Enlightenment

The Nation இதழும், ஜோனாதன் இஸ்ரேலும், அறிவொளியும்

By Ann Talbot and David North
9 June 2010

Use this version to print | Send feedback

இந்த ஆண்டு மே 12 இல், "Mind the Enlightment" என்ற தலைப்பில் The Nation இதழ் ஒரு கட்டுரையைப் பிரசுரித்தது. இது, பிரெஞ்ச் புரட்சியின் எழுச்சிக்கு இட்டுச்சென்ற, இந் நூற்றாண்டின் அறிவொளி மற்றும் அதன் சமூக, அரசியல் தீவிரமயப்படுதல் உறவுகளின் அபிவிருத்தி பற்றிய பேராசிரியர் ஜோனாதன் இஸ்ரேலின் பல-தொகுதிகளை கொண்ட வரலாற்று எழுத்துக்களின் மீதான ஒரு புத்திஜீவித ரீதியாக கொள்கையற்றதும் பழிவாங்கும் தாக்குதலாகவும் இருக்கிறது.

பிரின்ஸ்டனின், Institute for Advanced Studies-இல் தங்கி படித்த ஒரு கல்வியாளரான இஸ்ரேல், ஆரம்பகால நவீன ஐரோப்பிய வரலாற்றில் சர்வதேச அளவில் மதிக்கப்படும் ஒரு வல்லுனராவார். இப்போது அறுபதுகளின் தொடக்கத்தில் இருக்கும் அவரால் பிரசுரிக்கப்பட்ட வெளியீடு, இலத்தீன், ஜேர்மன், டச்சு, பிரெஞ்ச், ஸ்பானிஷ், இத்தாலி மற்றும் போலிஷ் போன்ற பல மொழிகளில் அவர் பெற்றிருக்கும் அசாதாரண புலமையை மட்டுமல்லாமல், அவருடைய அசாதாரணமான வரலாற்று ஆர்வங்களையும் எடுத்துக்காட்டுகிறது. European Jewry in the Age of Mercantilism 1550-1750 (1985), The Dutch Republic (1998), Radical Enlightenment (2001), Enlightenment Contested (2006) மற்றும் மிக சமீபத்தில் வெளியாகியுள்ள A Revolution of the Mind (2010) ஆகியவை அவருடைய அற்புதமான படைப்புகளாகும்.

அறிவொளியை அதன் பின்நவீனத்துவ பழிகாரர்களிடமிருந்து பாதுகாப்பதிலும், பதினெட்டாம் நூற்றாண்டின் ஜனநாயக மற்றும் தீவிரமயமான சிந்தனையின் அபிவிருத்தியில் பதினேழாம் நூற்றாண்டின் சடவாத மெய்யியலாளர் பரூச் ஸ்பினோசாவின் மைய பாத்திரத்தை வலியுறுத்துவதிலும், பேராசிரியர் இஸ்ரேல் பெரும்பங்களிப்பை அளித்துள்ளார். இஸ்ரேலின் அறிவொளியைப் பற்றிய புத்தகங்கள், தொழில்ரீதியான வரலாற்றாளர்களின் உலகின் வெகு தூரத்திற்கு அப்பால், ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மேதைமையின் பரப்பும், வீச்சும் நிஜமாகவே ஆச்சரியமூட்டுவதாக உள்ளன. அவருடைய எழுத்து தொகுதிகளில் பொதிந்திருக்கும் செறிவு மற்றும் ஆழத்திற்கு அப்பாற்பட்டு, மனிதயினத்தின் புத்திஜீவித அபிவிருத்தியில் ஒரு மிக நீண்டகால அத்தியாயத்தின் ஓர் அசாதாரண கதைக்குள் இஸ்ரேலினால் அவருடைய வாசகர்களை எடுத்துச் செல்ல முடிகிறது.

விஞ்ஞானபூர்வமான சிந்தனையில் புரட்சி என்பது, அது ஸ்பினோசாவின் சடவாத மெய்யியலிருந்து ஒரு சக்திவாய்ந்த வெடிப்பை பெற்றது; சமூகம் மற்றும் கலாச்சாரத்தின் முற்போக்கான முன்னேற்றத்திலும் அவை ஓர் ஆழமான, ஆற்றல்மிக்க தாக்கத்தை ஏற்படுத்தின என்ற ஆசிரியரின் கருத்தை அவருடைய புத்தகங்கள் வெளிப்படுத்துகின்றன. பகுத்தறிவு, விஞ்ஞானம் மற்றும் புறநிலை உண்மையின் தேடல் ஆகியவை மிக முக்கியமானவை என்ற கருத்தில், இஸ்ரேலின் நோக்கத்தை அடிக்கோடிடும் புத்திஜீவிதமான நன்னம்பிக்கை வாதம் வேரூன்றியுள்ளது. புத்திஜீவித்தனமான சார்புவாதம், தீவிர அகநிலைவாதம் மற்றும் ஐயுறவுவாத்தின் மேலோங்கிய சூழல்களுடன் அதிருப்தி அடைந்தவர்கள் மத்தியில் இது ஒரு பிரதிபலிப்பை கண்டது.

பின்நவீனத்துவம் மீதான அவருடைய வெறுப்பை இஸ்ரேல் மறைத்து வைக்கவில்லை. அதை அவர், பதினெட்டாம் நூற்றாண்டு காலத்திற்குத் திரும்ப இழுத்துச் செல்லும் பிற்போக்குத்தனமான, அறிவொளிக்கு எதிரான சிந்தனையாக அடையாளம் கண்டுள்ளார். " 'அறிவொளி திட்டம்' என்று அவர்கள் ஏளனம் செய்யும் விஷயத்தின் நியாயமான அடித்தளங்களைப் புதைக்கவும், இழிவுபடுத்தவும் செய்யும்" பின்நவீனத்துவவாதிகளின் பிரச்சாரத்தை அவர் விமர்சித்துள்ளார். (இஸ்ரேல் 2006, 807)

அறிவொளியை ஏளனம்செய்யும் பின்நவீனத்துவவாத முயற்சிகளைக் கடுமையாக தாக்கும்போது, இஸ்ரேல் பின்வருமாறு எழுதுகிறார்: "அதன் விமர்சனம் மிகவும் துல்லியமில்லாமல் இருக்கிறது. மேலும் வரலாற்றுரீதியாகவும், மெய்யியல்ரீதியாகவும் இரண்டு வகையிலும் அது பொருந்தாமல் உள்ளது. மெய்யியல்ரீதியாகவும், வரலாற்றுரீதியாகவும் 'நவீனத்துவத்தை' பாராட்டுவதை அது தீவிரமாக கையிலெடுத்துள்ளது." புறநிலை உண்மைகளின் அனைத்து முறையீடுகளையும் நிராகரிக்கும் பின்நவீனத்துவ சார்புவாதத்தில், அவர் "ஜனநாயகத்தின் மீதான, சமூக சமத்துவ மதிப்புகள் மீதான மற்றும் தனிநபர் சுதந்திரத்தின் மீதான ஒரு பெரும் அச்சுறுத்தலைக் காண்கிறார். இந்நிலையில் அது, புத்திஜீவித்தனமான அரசியல் மற்றும் நியாயத்தை முற்றிலும் கைவிட்ட நிலையை, அதுவாகவே வெளிப்படுத்திக் காட்டுகிறது." (869)

இஸ்ரேலுக்கு எதிராக பின்நவீனத்துவ ஆதரவாளர்கள் அவர்களின் தாக்குதலை தொடங்குவதற்கு முன்னதாகவே அவருடைய நிலைப்பாடு இவ்வாறு தான் இருந்தது. இஸ்ரேல் எழுத்துக்களின் மீதான விமர்சனங்கள் கல்வியிதழ்களிலும் கூட வரத் தொடங்கின. அங்கே அவை கணிசமான பாதிப்பை ஏற்படுத்த முயற்சி செய்தன. The Nation இதழில் வெளியான கட்டுரையுடன், இஸ்ரேல் எழுத்துக்களின் மீதான தாக்குதல் மேலும் அதிகப்படியான பொதுப் பேரவைகளில் எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன.

கொலாம்பியாவில் நவீன வரலாற்றைப் போதித்து வரும் பேராசிரியர் சாமுவேல் மோய்ன் தான், The Nation இதழில் கட்டுரை எழுதி இருந்தார். ஐரோப்பிய புத்திஜீவித வரலாறு மற்றும் யூத ஆய்வுகளில் இவர் சிறப்பு புலமை பெற்றவர். Origins of the Other: Emmanuel Levinas between Revelation and Ethics (2005) என்பது இவர் எழுதிய புத்தகங்களில் ஒன்று. இந்த புத்தகம், ஹெய்டெக்கர் மற்றும் கெய்ர்கிகார்டு ஆகியோரின் தாக்கத்தைக் கொண்ட, பிரெஞ்சு-யூத மெய்யியலாளரான இமானுவேல் லெவினாஸின் படைப்புகளை விவாதிக்கிறது. இவர் இருத்தலிய கொள்கையின் (Existentialism) உயர் சூத்திர வடிவத்தை அபிவிருத்தி செய்தவர். அது, ஜாக்யூஸ் டெர்ரிடாவின் சிதைப்புவாதத்தை (deconstructionism) பாதித்தது. பின்நவீனத்துவ சிந்தனையின் அபிவிருத்திக்கு கணிசமாக பங்களிப்பளித்த, அறிந்துகொள்ளமுடியாத "பிற" கொள்கை (the concept of the unknowable " other ") என்பதே லெவினாஸ் சிந்தனையின் மையமாக இருந்தது. சாமுவேல் மொய்னே கூட லெவினாஸின் சிந்தனையை "அரூப-தத்துவம்" என்று விவரிக்கிறார்.

இவ்வாறான எதிரெதிர் மூலைகளில் இருந்து நவீன ஐரோப்பிய சிந்தனையை அணுகும் இரண்டு மேதைகளும் ஒருபுள்ளியில் மோதி கொள்ளக்கூடும் என்பது தவிர்க்க முடியாததாக இருந்தது. கல்வித்துறை விமர்சனமும், மோதலும் தவிர்க்க முடியாதவை, ஆனால் மொய்னின் கட்டுரை அதன் கருத்தோட்டத்திலும், தொனியிலும் ஒரு வித்தியாசமான பாணியில் இருந்தது. எல்லாவற்றிற்கும் முதலாக, அவரின் சொந்த கட்டுரைக்கு ஊக்கத்தை அளித்திருந்த, முந்தைய புத்திஜீவித்தனமான மோதலைப் பற்றிய ஒரு வெளிப்படையான ஒப்புதலை மொய்ன் அவருடைய வாசகர்களுக்கு அளிக்கவில்லை. அனைத்திற்கும் மேலாக, ஒரு சிறந்த காரணத்தைக் கொண்ட விமர்சனமாக அது இல்லை என்பது மட்டுமில்லாமல், இஸ்ரேலின் கண்ணோட்டத்தை நேர்மையாக அளிக்கவும் கூட அவர் முயற்சிக்கவில்லை. இஸ்ரேலின் எழுத்துக்கள் இகழப்பட்டும், மறுக்கப்பட்டும் உள்ளன என்ற உணர்வை அளிக்கவே அவருடைய கட்டுரை முயற்சிக்கிறது. "இஸ்ரேல் எழுத்துக்களின் இறைச்சியை பிணந்தின்னும் கழுகுகள் கொத்தி குதறிக்கொண்டிருக்கின்றன" என்று மொய்ன் அறிவிக்கிறார்.

துரதிருஷ்டவசமாக, மொய்ன் தான் அந்த பிணந்தின்னும் கழுகுகளுக்கெல்லாம் தலைவராக இருக்கிறார். இஸ்ரேலின் படைப்பு கல்வியியல் சமூகத்தில் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படவில்லை என்ற உணர்வை உருவாக்க, அறிவொளியின் பின்நவீனத்துவ கணக்குகளில் இருந்தும், இஸ்ரேலின் கண்ணோட்டத்திலிருந்து மாறுபட்ட கண்ணோட்டத்தைக் கொண்ட கல்வியாளர்களிடமிருந்தும் அவர் ஓர் கலவையை உருவாக்குகிறார்.

ஒரு வரலாற்று விவரணம், பகுத்தறிவில் நம்பிக்கையை வளர்ப்பதாலும், விஞ்ஞானம் ஒரு புத்திஜீவித்தனமாக நம்பிக்கைக்குரியத்தல்ல என்று காண்பதாலும், "இஸ்ரேலின் எழுத்துக்கள், வறட்டுத்தனமாக நம்பிக்கையை வட்டமிட்டு கொண்டிருக்கின்றன" என்று மொய்ன் குறை கூறுகிறார். மொய்னின் ஒட்டுமொத்த தொனியும், அறிவொளியிலிருந்து எழுந்த இஸ்ரேலின் மேதைமை மற்றும் கோட்பாடுகள் இரண்டையும் நோக்கி ஒரு வெறுப்பு மனோபாவத்தையே பேசுகிறது. அவர் ஸ்பினோசாவின் வாழ்க்கை, படைப்பு மற்றும் தாக்கம் பற்றிய இஸ்ரேலின் எழுத்துக்களை, ஓர் ஆழமான வரலாற்று விசாரணையாகவும், விளக்கமாகவும் காட்டாமல், மாறாக அதையொரு மத எழுத்துக்களாகவும், ஒரு மத போதனையாகவும் வரைந்து காட்டுகிறார். "ஒரு காட்டிக்கொடுப்பு யூதரின்—அதாவது, மெய்யியலாளர் பெனிடெக்ட் ஸ்பினோசாவின்—கதையை இஸ்ரேல் போதிக்கிறார்."

ஸ்பினோசா குறித்து மொய்ன் வித்தியாசமாக குறிப்பிடுகிறார், "தாராளவாத மதச்சார்பற்றவர்கள் (அவர்களில் குறிப்பாக யூதர்கள்) அவருக்கு மரியாதை அளிப்பதில் ஒரு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறார்கள்." ஸ்பினோசாவின் யூத ஆர்வலர்களுக்கு இந்த மேற்கோள் எப்படி பொருந்தும் என்பது ஒருவருக்கு புரியாது. மொய்ன் என்ன சொல்ல முயற்சிக்கிறார்? ஸ்பினோசா சிந்தனைகளுக்குப் பல யூதர்களல்லாத ஆர்வலர்களும் இருக்கிறார்கள், அவர்களில் ஒருவராக ஹெகலையும் கூட நாம் சேர்க்கலாம்.

அவர் அறிவொளியின் மீது அதிருப்தியைக் காட்டுவதிலும் குறைந்துவிடவில்லை. மொய்ன் வசைமொழிகளோடு எழுதுகிறார்: "ஆம். அது உண்மை தான். பல நூற்றாண்டுகளாக, நைந்துபோன திருமறைக் கோட்பாட்டின் கட்டுக்களை உடைத்துக் கொண்டு அல்லது உலகளவில் இருக்கும் அவதூறான ஒடுக்குமுறையின் அடிமைத்தனத்தைத் தூக்கி எறிந்துவிட்டு அறிவொளி இன்னும் வெற்றி பெற்றுவிடவில்லை. ஆனால் சரணடைந்துவிடுவதற்கு இதையொரு காரணமாக கூறமுடியாது. அறிவொளி பற்றிய திருமறை கோட்பாடுகளை நிறைய போதிப்பதே தேவைப்படுகிறது."

பேராசிரியர் இஸ்ரேல் அறிவொளி மீதான ஒரு தனிமாதிரியான ஆய்வை முன்னெடுக்கிறார். இதை ஒருவர் ஏற்று கொள்ளலாம் அல்லது ஏற்றுக் கொள்ளளாமலும் இருக்கலாம். ஆனால் ஒரு கணிசமான ஆதாரங்களுடன் அதை இஸ்ரேல் தாங்கிப்பிடிக்கிறார் என்ற உண்மையை கேள்வி கேட்பதற்கு ஒன்றுமே இல்லை. பின்நவீனத்துவ பேரகராதியிலிருந்து எடுக்கப்பட்ட சிறிய இலக்கிய வார்த்தைஜாலங்களுடன் அதை மறுத்துவிட முடியாது.

அறிவொளி இரண்டு எதிரெதிர் பிரிவுகளைக் கொண்டிருந்தது என்று இஸ்ரேல் குறிப்பிடுகிறார். "பழைய மற்றும் புதியதின் ஒரு செழிப்பான கூட்டிணைப்பை" உருவாக்கும், தற்போதிருக்கும் சமூக பயிலங்களுடன் சமரசப்படவும், உருவாக்கப்பட்டிருக்கும் மத நம்பிக்கைகளைக் காப்பாற்றவும் நோக்கம் கொண்டிருந்த, ஒரு மிதமான அறிவொளியை அவர் அடையாளம் காண்கிறார். இதை அவர் நியூட்டன் மற்றும் லோக்கே உடன் தொடர்புபடுத்துகிறார். அந்த மிதமான அறிவொளியின் மிக பழமைவாத நிலைப்பாடு, தேவாலாயத்திடமும், அரசிடமும் ஆதரவை வென்றது.

இஸ்ரேல் எழுதுகிறார்: "முரண்பட்ட வகையில், ஒரு நாத்திக அல்லது இயற்கை மத அடிப்படையிலான தீவிரமயமான அறிவொளியானது, ஜூதோ-கிறிஸ்துவ நாகரீகத்தில் வழிவழியாக புரிந்துகொண்டு வரப்பட்ட படைப்பையும், மனிதயின நடவடிக்கைகளில் நற்பேறான கடவுளின் தலையீட்டையும் நிராகரித்ததன் மூலமாகவும், அற்புதங்களின் சாத்தியக்கூறை மற்றும் இறப்புக்குப் பிந்தைய பாவ-புண்ணியங்களை மறுத்தும், வழிபாட்டு அதிகாரத்தின் அனைத்து வடிவங்களையும் ஏளனம் செய்தும், கடவுள் விதித்த சமூக படிநிலைகள் என்ற எதையும் ஏற்க மறுத்தும், தனிசலுகைகளை அல்லது நில உரிமைகளை பிரபுக்களின் கைகளில் குவிப்பதை அல்லது முடியாட்சியின் மத தடைகளை ஏற்க மறுத்ததன் மூலமாகவும், கடந்த காலத்துடனான அனைத்து சமரசங்களையும் நிராகரித்து, தற்போதிருக்கும் கட்டமைப்புகளை முற்றிலுமாக தூக்கி எறிய விரும்பியது. குடியரசுவாத போக்குகளிலிருந்து, ஏன் ஜனநாயகவாத போக்குகளிலிருந்தும் கூட, சடவாதமும், நாத்திகமும் தூக்கியெறியப்பட்டிராமல் இருந்திருந்தால், 1650கள் மற்றும் 1660களில் தொடங்கியதிலிருந்து, ஐரோப்பிய ஆரம்பகால அறிவொளியின் மெய்யியல் தீவிரமயப்படுதல், விஞ்ஞானம், கணித தர்க்கம் ஆகிய இரண்டுடனும் நற்பேறு என்பதெல்லாம் எதுவுமில்லாத இயற்கை மதவாதத்தின் ஏதோவொரு வடிவத்துடன் ஒருங்கிணைந்திருக்கும். (இஸ்ரேல், 2001, 11-12)

முற்போக்கு அரசியலுக்கும், புத்திஜீவித்தனமான போக்குகளுக்கும் மற்றும் அறிவொளிக்கும் இடையிலான இந்த தொடர்பைத் தான் மொய்ன் பிரச்சினையாக எடுத்து, மிக எளிய வடிவத்தில், இஸ்ரேலின் வாதங்கள் செயலுக்குப் பொருந்தாத கொள்கைகளை வலியுறுத்துகின்றன என்று எடுத்துக்காட்டுகிறார்.

இஸ்ரேலின் மேதைமை அல்லது அறிவொளியின் முற்போக்கான பாத்திரம் மீதான ஆழமான, தீவிர கேள்விகளுக்குள் அழைத்துச் செல்லாமலும் கூட, அறிவொளியைப் பற்றிய இஸ்ரேலின் கருத்து குறித்து விமர்சனங்களை எழுப்ப முடியும். அறிவொளி மீதான ஆய்வும், பொருள் விளக்கங்களும் அளவிடமுடியா சிக்கலையும், சிக்கலான கேள்விகளையும் எழுப்பும். மேலும் மெய்யியலில் சிறப்புப்புலமை பெற்றவர்களும் கூட வரலாற்று சொல்லாடலில் ஓர் உறுதியான பிடிப்பு இல்லாமல் இருந்தால், சிறிது தடுமாறக்கூடும் என்ற நிலையில், ஒரு வரலாற்றாளர் மெய்யியலுக்குள் ஆழமாக செல்வதற்குக் கட்டாயப்படுத்தப்படுகிறார். தீவிரமயப்படுதலுக்கும், மிதமான அறிவொளிகளுக்கும் இடையிலான முரண்பாட்டின் அவருடைய ஆராய்ச்சியினூடாக, இந்த பெரிய சகாப்தத்தைப் புரிந்து கொள்வதற்கான நீடித்த மற்றும் நிலைத்த கட்டமைப்பை அளிக்க பேராசிரியர் இஸ்ரேல் முயற்சித்துள்ளார்.

அவருடைய வாதத்திலும் பிரச்சினைகள் இருக்கின்றன. தீவிரமயப்படுதலும், மிதமான அறிவொளியையும் பிரித்துக்காட்டும்முறை, விளக்கமாகவும், துடிப்புடனும் இருந்தாலும் கூட, மெய்யியல் சிந்தனையின் அபிவிருத்தியில் இருக்கும் சிக்கலையும், முரண்பாட்டு நிகழ்முறைகளையும் ஒட்டுமொத்தமாக எளிமைப்படுத்த காலத்தைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. மெய்யியல் சிந்தனையில் மிக முக்கியமான முன்னேற்றங்கள், அரசியல்ரீதியாக மிகவும் தீவிர கண்ணோட்டங்களைக் கொண்டிருந்த தனிநபர்களாலேயே செய்யப்பட்டது என்று பேராசிரியர் இஸ்ரேல் கூற விரும்புவது போல தெரிகிறது. இது எல்லா காலத்திற்கும் பொருந்துவதாக அமையாது. ஜோன் லோக், அவருடைய அரசியல் மற்றும் மத கண்ணோட்டங்களில் பழமைவாதியாக இருந்தார். எவ்வகையிலும் எட்டமுடியாத புரட்சிகர செயல்பாடுகளைக் கொண்டிருந்த பிரெஞ்சு சடவாதத்தின் மெய்யியல் அடித்தளங்களைக் கீழே சாய்ப்பதில் அவர் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தார். அந்த விஷயத்தில் ஜோன் லோக் ஆகட்டும் அல்லது பரூச் ஸ்பினோசா ஆகட்டும், அவர்களின் சொந்த சிந்தனையின் அனைத்து அரசியல் விளைவுகளையும் தேவையான மட்டத்திற்குக் கணிக்கவில்லை.

எமது பார்வையில், சடவாத மற்றும் அறிவொளி சிந்தனையின் மார்க்சிச மதிப்பீட்டுடன், ஏறத்தாழ அவரின் முற்றிலும் பரிச்சயமில்லாத தன்மையிலிருந்து, அதன் விளைவாக, ஓர் அதீத கடினமான சூத்திரம் எழுகிறது. அவருடைய மேதைமையின் அசாதாரணமான பரப்பை அளித்தால் உண்மையிலேயே ஒருவர் ஆச்சர்யப்படுவார். அதாவது, Radical Enlightenment and Enlightenment-இன் புத்தக விபரக்கோவையில், மார்க்சிச பாரம்பரியத்தில் எழுதும் மேதைகளிடமிருந்தோ அல்லது எந்த ரஷ்ய-சோவியத் மெய்யியலாளரின் எழுத்துக்களில் இருந்தோ ஒரேயொரு ஆதாரமும் கூட எடுத்துக்காட்டப்படவில்லை.

"ரஷ்ய மார்க்சிசத்தின் தந்தை" என்றழைக்கப்படும் G.V. பிளக்னொவ்வின் எழுத்துக்களில் இடம்பெற்றிருந்த மிகச் சிறந்த பிரெஞ்ச் அறிவொளி சடவாதிகளான டி'ஹோல்பேஹ் மற்றும் ஹெல்விடஸின் சிந்தனைகளுக்குள், சிறந்த உட்பார்வைகளின் ஒரு புதையலை அவர் கண்டுபிடித்திருக்க வேண்டும். பேராசிரியர் இஸ்ரேலும் மார்க்சிச பாரம்பரியத்துடன், பரிச்சயமாகவில்லை என்பதாகவே தெரிகிறது. ஸ்பினோசாவைப் பொறுத்த வரையிலும் கூட இவ்வாறு தான் உள்ளது. மேற்கத்திய ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் மெய்யியல் எழுத்தாளர்கள் ஸ்பினோசாவைப் பெருமளவில் (சமீபகாலம் வரையில்) நிராகரித்தார்கள் என்று இஸ்ரேல் சரியாக கூறும் நிலையில், மார்க்சிச பாரம்பரிய எழுத்துலகைச் சார்ந்தவர்களைப் பொறுத்த வரையில் குறிப்பாக சோவியத் ஒன்றியத்தில் இது நிச்சயமாக உண்மை இல்லை. ஓர் அமெரிக்க மேதையான ஜோர்ஜ் எல். க்லீனினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஸ்பினோசாவின் சோவியத் வரவேற்பு மீதான ஒரு முக்கியமான நூற்கோவையிலும் கூட, ஆஸெல்ராட் மற்றும் டெபோரினின் எழுத்துக்கள் சேர்க்கப்படவில்லை என்ற போதினும், பேராசிரியர் இஸ்ரேல் அவர்களின் எழுத்துக்களை ஆய்வு செய்தார் என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை.[1]

அறிவொளியைப் பற்றிய மார்க்சிச மதிப்பீட்டில் இஸ்ரேல் பரிச்சயமில்லாமல் இருப்பதானது, மிக பொதுவாக, சமூக-பொருளாதார நிகழ்முறைகளுக்கும், அவற்றின் புத்திஜீவித்தனமான வெளிப்பாடுகளுக்கும் இடையிலான இயங்கியல் தொடர்பில் ஒரு கணிசமான பலவீனத்தை எடுத்துக்காட்டுகிறது. "அடிப்படை சமூக கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்களால் மட்டுமே சிந்தனைகளில் பெரும் மாற்றங்களை உருவாக்க முடியும் (49) என்பது மிக தவறான முடிவு; அது இஸ்ரேல் போன்ற ஒரு மனிதரின் அறிவாழத்திற்கு மதிப்பளிக்காது" என்று வலியுறுத்திய மார்க்சிசத்தைப் பற்றிய வறட்டுவாதங்களுக்கு அவர் தம்முடைய சமீபத்திய A Revolution of the Mind-இல் ஆதாரங்களைக் காட்டியிருந்தார். இது போதியளவிற்கு இல்லாததால், தவறுகளுக்கு மார்க்சிச வழியைக் கைவிடுவதாக இருந்தது; இதை அவர் தவிர்த்திருக்கலாம். பேராசிரியர் இஸ்ரேல் அவருடைய மூன்றாம் தொகுதியில், அறிவொளி சிந்தனைக்கும், பிரெஞ்சு புரட்சிக்கும் இடையிலான தொடர்பைப் பற்றிய மதிப்பார்ந்த சிக்கல்களை எதிர்கொள்கிறார் என்றும், அவர் மார்க்சிச இலக்கியத்திற்குள் இன்னும் ஆழமாக செல்ல வேண்டும் என்றும் ஒருவர் நினைக்கலாம். இத்தகைய விமர்சனங்களுக்கு இடையிலும், அறிவொளி பற்றிய இஸ்ரேலின் ஆய்வானது, இந்த வளரும் வரலாற்று மற்றும் புத்திஜீவித்தனமான நிகழ்முறையைப் புரிந்து கொள்வதில் முக்கிய பங்காற்றி உள்ளது.

மொய்ன் தாக்குதலின் உண்மையான இலக்கு, எல்லா வகையிலும், இஸ்ரேலின் ஆய்வில் இருக்கும் எவ்வித உண்மையான பலவீனத்தையும் பற்றியதல்ல. மாறாக, அறிவொளிக்கு அவர் அளிக்கும் ஆதரவின் மீதும், அதன் முற்போக்கான செயல்முறைகளின் மீதும் இருக்கிறது. "அறிவொளி பயணத்தின் போது, பிரசுரிக்கப்படும், படிக்கப்படும் பல்வேறு வகையான புத்தகங்களில் ஒன்றாக மெய்யியல் புத்தகங்களும்" இருப்பதால், அறிவொளி, சடவாதம் மற்றும் ஸ்பினோசாவின் மெய்யியல் ஆகியவற்றிற்கு இடையிலான தொடர்பை மொய்ன் குறைக்கிறார். காதல் கதைகளையும், கற்பனை கதைகளையும், தொல்சீர் இலக்கியத்தையும், பயண புத்தகங்களையும், விஞ்ஞான புத்தகங்ளையும் மற்றும் நடைமுறை கையேடுகளையும், தடை செய்யப்பட்ட புத்தகங்களையும் மற்றும் சட்ட புத்தகங்களையும் மனிதர்கள் படிக்கிறார்கள் என்பது உண்மை தான். அவற்றின் மூலமாக அவர்கள் புதிய சிந்தனைகளைப் பெறுகிறார்கள்; அவை அடுத்து வரும் நூற்றாண்டுகளில் வடிவம் எடுக்கின்றன. இந்நிலையை அடைவதற்கு வெறுமனே மெய்யியல் புத்தகங்கள் மட்டுமே படிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. படிப்பதும், பெருந்திரளான மக்களால் படிக்கப்படுவதும் கூட, மனதின் அறிவொளி புரட்சியின் ஒரு பாகமாக தான் இருக்கிறது. கான்டின் வார்த்தைகளில் கூறுவதானால், படிப்பதென்பது "தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான்."

அறிவொளிக்கும், பிரெஞ்சு புரட்சிக்கும் இடையில் கணிசமான தொடர்பை உருவாக்க முடியாது என்று மொய்ன் வலியுறுத்துகிறார். ஒரு புரட்சியை உருவாக்க, சமூக சக்திகளுடன் கருத்துக்கள் ஒருமுகப்பட முடியும் (மார்க்ஸால் எதிரொலிக்கப்பட்ட ஒரு கருத்து) என்ற இஸ்ரேலின் உட்பார்வை, மொய்னைப் பொறுத்த வரையில், ஸ்பினோசாவின் புதிய சிந்தனைகளால் ஐக்கியப்படுத்தப்பட்ட, பழைய அமைப்பு முறையின் கீழ், கொதிக்கும் மனக்குறைகளைக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்தின் ஒரு தெளிவில்லாத கருத்தாக இருக்கிறது. மொய்னிடம் இது எதுவுமே இருக்காது: "வரலாற்று நிகழ்வுகளுக்கான ஒரு விளக்கமோ, கொதிக்கும் மனக்குறைகள் மீதான முறையீடுகளோ குறிப்பிடத்தக்க அளவில் வலிமையாக இல்லை." ஆனால், "புழுக்கத்தால் ஏற்படும் அதிருப்தி பொதுவாக மேலும் மேலும் புழுக்கத்தைத் தான் உண்டாக்கும்" என்று கூறி, அவர் ஏளனம் செய்கிறார்.

ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டின் போது இருந்த மனக்குறைகள் தொடர்ந்து புழுக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே செல்லவில்லை என்பதை தான் வரலாறு காட்டுகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், ஹெய்ட்டியில் "கொதிக்கும் மனக்குறைகள்" புரட்சிகளாக வெடித்தன. அந்த முட்டுகொடுத்த கருத்துக்கள் தான்—எல்லாவற்றிற்கும் மேலாக, சமூக சமத்துவத்திற்கான தேவை தான், அறிவொளியின் மெய்யியலாளர்களால் நெறிப்படுத்தப்பட்டது. மொய்ன் அந்த புரட்சிகர போராட்டங்களின் சாதனைகளை மறுக்கிறார்.

உலகின் வலுவற்ற சொற்புரட்டு கருத்துடன் அவர் எழுதுகிறார், "மதச்சார்பற்ற வரலாறு, மிக பெரும்பான்மையாக தவறான சிந்தனைகளின் வெற்றி மற்றும் நல்ல சிந்தனைகளின் தோல்வியைப் பற்றிய ஒரு கதையாக இருக்கிறது." அமெரிக்க புரட்சி வெறுமனே "இனம் மற்றும் செல்வவளத்தின் புதிய நிலைமுறைகளைத் தான் உருவாக்கியது. சுதந்திரமான மற்றும் சமத்துவமான சமூகத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதை விளக்குவதிலிருந்து அறிவொளி வெகு தூரத்திற்குச் சென்றுவிடவில்லை என்று இடதில் இருப்பவர்கள் மறுக்கக்கூடும்." வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமானால், பதினெட்டாம் நூற்றாண்டு புரட்சிகள் மொய்னின் இருப்பத்தியொன்றாம் நூற்றாண்டு எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை. ஓர் ஏமாற்றமளிக்கும் தோல்வியாக தான் அறிவொளியைப் பார்க்க வேண்டும் என்று முறையிடுகிறார்.

மொய்னின் வாதங்களில் புத்திஜீவித்தனமான நிலைப்பாட்டை எதிர்பார்ப்பது அதிகம் தான். அறிவொளிக்கும், புரட்சிக்கும் இடையே முக்கிய தொடர்பு ஒன்றும் இருக்கவில்லை என்று முறையிடப்பட்டிருப்பதோடு, அறிவொளியைப் பற்றிய சிந்தனைகள் வன்முறையோடும், ஒடுக்குமுறையோடும் தொடர்புபட்டிருக்கின்றன என்று எச்சரிக்க அவர் தமது அடித்தளத்தை மாற்றுகிறார். தீவிரமயப்படுத்தலில் "நிறைய தெளிவின்மை இருக்கின்றன" என்று அவர் எழுதுகிறார். அறிவொளி பற்றிய சிந்தனைகள் "பயங்கர தவறுகளுக்கான துண்டறிக்கையாக திரும்பிவிட்டன" என்பதால் தான், "அறிவொளிக்கான இஸ்ரேலின் சுடர்விடும் பொறுப்பு" தனக்கு கவலை அளிப்பதாக உள்ளது என்றும், ஜாகோபின்கள் "பயங்கரவாத ஆட்சிக்கு ஒத்து ஓதுவதில் சென்று முடிந்தார்கள்" என்றும் அவர் எழுதுகிறார்.

வரலாற்றின் முக்கிய பாகங்களை மொய்ன் விட்டுவிட்டிருக்கிறார். அறிவொளி கருத்துக்கள் இரக்கமற்ற பயங்கரவாதத்திற்கும், அதன் பரிதாபகரமான அட்டூழியங்களுக்கும் இட்டு சென்றன என்ற முறையீடு, அறிவொளி அதன் பகுத்தறிவின் மேம்பாடு, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் உயர்வுடன் பாசிசத்திற்கும், அவுஸ்ச்சுவிட்சிற்கும் (Auschwitz) இட்டு சென்றுள்ளது என்ற அடிப்படை பின்நவீனத்துவ குற்றச்சாட்டின் (ஹார்கீமெர் மற்றும் அடோர்னோவிடமிருந்து பெறப்பட்டது) மாற்றுவடிவமாக உள்ளது. பிரிட்டனின் நிதியுதவி பெற்ற பழைய ஆட்சி அதிகாரங்களின், தாக்குதலுக்கான அச்சுறுத்தல்; அரசரிடமிருந்து கையூட்டு பெற்ற மிராபூ போன்ற தலைவர்களின் காட்டிக்கொடுப்பு அபாயம்; மற்றும் வளைந்துகொடுக்காத மதகுருமார்களின் மற்றும் பிரபுக்களின் உடன்பாடுகளிலிருந்து எழுந்த மிக யதார்த்தமான அச்சுறுத்தல்? போன்றவைத் தவிர, பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிடுவதில் பங்களிப்பளித்த வேறு காரணிகள் எதுவும் அங்கே இருக்கவில்லை. இந்த அரசியல் மற்றும் வரலாற்று ரீதியான பிரச்சினைகள் ஒரு வீச்சில் வீசியடிக்கப்பட்டிருக்கின்றன. "சூழ்நிலைகளைக் குற்றஞ் சொன்னால் மட்டும் போதாது" என்று மொய்ன் வலியுறுத்துகிறார். மொய்னைப் பொறுத்தவரையில், பயங்கரவாதம் என்பது அறிவொளியின் தவிர்க்க முடியாத வார்ப்பெடுப்பாக உள்ளது.

இந்த வாதத்தை அவர், ஸ்டேன்போர்டில் பிரெஞ்சு துணை பேராசிரியராக இருக்கும் டானியல் எடெல்ஸ்டீனின் எழுத்துக்களில் இருந்து பெறுகிறார். The Terror of Natural Right (2009) என்பதில், "இயற்கையான உரிமை என்பது ஒரு முற்போக்கான, சமத்துவமிக்க சட்டபூர்வ வரைவாக மட்டும் இருப்பதில்லை. மாறாக ஒரு பரந்த நிலையில் ஒரு நாட்டின் வன்முறையை நியாயப்படுத்தவும் பயன்படக்கூடும்" என்று டானியல் எடெல்ஸ்டீன் குறிப்பிடுகிறார். "ஜாகோபின்களுக்காக இயற்கை கொண்டிருந்த அதே அதிகார செயல்முறையை மார்க்சிசத்திற்கு உதவவும் வரலாறு முன்வந்தது" என்பதால், சோவியத் ஒன்றியத்திலும் இதே கருத்து தான் செயல்வடிவம் பெற்றது என்று எடெல்ஸ்டீன் வலியுறுத்துகிறார். அவர் தொடர்ந்து நிறுத்தாமல், லெனினிலிருந்து ஸ்ராலினிச துடைப்பு வரையிலும் எடுத்துச் செல்கிறார். அதேபோல, சோவியத் ஒன்றியத்திலிருந்து நாஜி ஜேர்மனி வரைக்கும் எடுத்துச் செல்கிறார். புஷ் நிர்வாகத்தால் "மனிதகுல எதிரிகள்" என்ற பெயரில் அமர்த்தப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதிகளின் சமீபத்திய வெளிப்பாடுகளில் காணப்படும், ஒரு "சர்வாதிகார நீதியின்" கொள்கை செயல்படுவதையே அவர் எல்லாவகையிலும் காண்கிறார்.

மொய்ன் "பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்" என்பதற்கு உடன்பட்டு, அதையும் கலந்து விடுகிறார். அதுவும் கூட ஜாகோபினிசத்தின் மரபு என்று நம்புமாறு நாம் கேட்டுக் கொள்ளப்படுகிறோம். முட்டாள்தனமாக இராணுவ இரட்டைச் சகோதரர்கள் போன்று ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் மற்றும் மக்ஸ்மிலீயன் ரோபேஸ்பியர் ஆகியோர் வரலாற்றுக்கு புறம்பான மற்றும் தவறான பாத்திரத்தைச் சித்தரித்துக் காட்டுகின்றனர்.

மொய்னின் விமர்சனங்களுக்கு இஸ்ரேலின் எழுத்துக்கள் எதிர்திசையில் நிற்கின்றன. இஸ்ரேலின் உறுதி, இன்று மிக முக்கியத்துவம் பெறும் பிரச்சினைகளில் அவருடைய வாசகர்களை ஈர்த்து நிறுத்துகிறது. சமூக சமத்துவம், மெய்யியல் சடவாதம் மற்றும் நியதிவாதம் (determinism) ஆகியவை ஸ்பினோசாவின் சிந்தனையின் இதயமாக இருந்தன. ஸ்பினோசாவின் காலத்தில் அவை எல்லாம் பயங்கரமான கருத்துக்களாக இருந்தன. இவை இருப்பதொன்றாம் நூற்றாண்டிலும் நிதி உயர்தட்டிற்கு குறைந்த அபாயத்தைக் கொண்டிருப்பதாக இல்லை. அவற்றை பொது விவாதத்திற்கு கொண்டு வந்ததில் இஸ்ரேல் அதற்கான பெருமையைத் தக்க வைத்து கொள்கிறார்.

[1] எல்.ஐ. ஆக்சில்ரோடின் கட்டுரையும் குறிப்பாக முக்கியத்துவம் பெறுகிறது. ஃபயர்பாஹ் மற்றும் பிளெக்னோவின் எழுத்துக்களின் அடித்தளத்தில், அப்பெண்மணி ஸ்பினோசாவின் சடவாதத்தின் இயல்பை ஆய்வு செய்கிறார். சடவாதத்தை அங்கீகரித்து கொண்டு, அதன் வரலாற்று அபிவிருத்தியின் நிலைப்புள்ளியிலிருந்து, பிளெக்கானோவ் "ஸ்பினோசிசத்தின் ஒரு பிரிவாக" இருப்பதாகவும், மேலும் ஸ்பினோசாவின் மெய்யியலை "ஒரு கொள்கைமாறாத மற்றும் அழிவில்லா சடவாதமாக, அது அனைத்துவிதமான முரண்பாடுகளையும் கடந்த ஒன்றாக மதிக்கப்பட வேண்டும்" என்று அவர் நிலைநிறுத்தியதாகவும் ஆக்சில்ரோடின் வலியுறுத்துகிறார். [சோவியத் மெய்யியலில் ஸ்பினோசா என்பதில் "ஸ்பினொசாவும், சடவாதமும்" என்பதிலிருந்து, ஜோர்ஜ் எல். கிளினினால் தொகுக்கப்பட்டும், அவருடைய முன்னுரையுடன் (இலண்டன், 1952), பக்கம் 61] சோவியத் மெய்யியலாளர் டி. ராக்மேனின் மற்றொரு முக்கிய கட்டுரையில் (1923இல் இருந்து), பன்னிரெண்டு முதல் பதினாறாவது நூற்றாண்டுகளுக்கு இடையில் யூத மற்றும் அராபிய மெய்யியலாளர்களிடையே ஸ்பினொசாவின் செல்வாக்கு குறித்து ஆராயப்பட்டிருந்தது. இது குறித்து இஸ்ரேல் போதுமான அளவிற்கு எடுத்துக்காட்டவில்லை. இந்த பிரச்சினையின் மிக திட்டவட்டமான சமகாலத்திய ஆய்வை, பேராசிரியர் ஸ்டீவன் நாட்லெரின் சமீபத்திய எழுத்துக்களில் காண முடிகிறது.

Also recommended:

Spinoza revisited: a review of Radical Enlightenment

Spinoza Reconsidered