சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

WSWS reporters visit the devastated Sri Lankan town of Kilinochchi

பேரழிவுக்குள்ளாக்கப்பட்ட இலங்கையின் கிளிநொச்சி நகருக்கு உலக சோசலிச வலைத்தள நிருபர்கள் சென்றார்கள்

By our correspondents
2 June 2010

Use this version to print | Send feedback

தமிழீழ விடுதலைப் புலிகள் தோல்வியடைந்து ஒரு வருடத்தின் பின்னர், யுத்தத்தினால் பாழடைந்த வன்னிப் பிராந்தியத்தில் மக்களின் வாழ்க்கை மீண்டும் சாதாரண நிலைக்குத் திரும்புகின்றது என்று இலங்கை அரசாங்கம் அறிவிக்கின்றது. ஆனால், நிலமை இதில் இருந்து வெகு தூரத்தில் இருப்பதாக அண்மையில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த எமது நிருபர்கள் குழு கண்டுபிடித்துள்ளது. மோதலின்போது சகலதையும் இழந்த பத்தாயிரக் கணக்கான மக்கள், அரசாங்கத்தின் அற்ப உதவியுடன் அங்கு "மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர்".

விடுதலைப் புலிகளின் துருப்புக்கள் வன்னியின் பெரும் பகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோது, அதன் நிர்வாக தலைமைச் செயலகமாக கிளிநொச்சி இருந்தது. மீண்டும் மீண்டும் இராணுவம் முன்னெடுத்த தாக்குதல்கள் மற்றும் இடைவிடாத விமான மற்றும் ஆட்டிலறி குண்டு மழைக்கு எதிராக புலிகள் கடும் எதிர் தாக்குதலை நடத்திய நிலையில், 2008 இறுதியில் பல மாதங்களாக தொடர்ந்து இடம்பெற்ற கசப்பான மோதல்களின் களமாக கிளிநொச்சி இருந்தது. 2009 ஜனவரி முற்பகுதியில் பேயறைந்தாற் போல் இருந்த இந்த நகருக்குள் இறுதியாக இலங்கை இராணுவம் நுழைவதற்கு முன்னரே முழு பொது மக்களும் அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.

கிளிநொச்சியின் வீழ்ச்சியின் பின்னர் புலிகளின் எதிர்த் தாக்குதல்கள் விரைவாக வீழ்சியடைந்தது. புலிகளைச் சூழ தனது வியூகத்தை இறுக்கிய இராணுவம் அவர்களை வடகிழக்கு கரையோரப் பகுதியில் ஒரு சிறிய நிலத்துண்டுக்குள் சிக்கவைத்தது. அந்தப் பிரதேசத்தின் மீது இடைவிடாமல் குண்டுமாரிப் பொழியப்பட்டதோடு ஆயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டனர். 2009 மே மாதத்தில் இராணுவம் இப்பிரதேசத்தை இறுதியாக கைப்பற்றியபோது, இரண்டரை இலட்சத்துக்கும் மேற்பட்ட பொது மக்களைச் சுற்றி வளைத்து தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்தது. அவர்களில் பலர் காயமுற்றும் நோய்வாய்பட்டும் இருந்ததோடு மற்றும் பட்டினியாகவும் இருந்தனர்.

தடுத்து வைக்கப்பட்ட ஒரு பகுதியினர், சர்வதேச மற்றும் உள்நாட்டு அழுத்தங்கள் காரணமாக கடந்த டிசம்பரிலேயே விடுதலை செய்யப்பட்டார்கள். அதேவேளை நிரந்தர ஆக்கிரமிப்புக்கான மற்றும் பெரிய நிரந்தர படைத் தளங்களை கட்டியெழுப்புவதற்கான திட்டங்களுடன் இராணுவம் கிளிநொச்சி நகரை நிரந்தர இராணுவ நகராக மாற்றியது. முன்னாள் குடியிருப்பாளர்கள், நகரம் அழிந்து போயிருப்பதைக் கண்டதோடு தங்களால் முடிந்தவரை சிரமத்துடன் வாழத் தள்ளப்பட்டுள்ளனர்.

எமது நிருபர்கள், கிளிநொச்சி நகரம் மற்றும் அங்கிருந்து 26 கிலோமீட்டர் தூரத்தில் மேற்குப் பக்கமாக இருக்கும் பூநகரி, மற்றும் கிழக்குப் பக்கமாக 15 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் வட்டக்கச்சி போன்ற கிராமங்களுக்கு பயணித்தார்கள். பொதுவாக ஊடகங்கள் சுதந்திரமாக இந்த நகரத்தில் இயங்க முடியாத நிலையில், அவர்கள் தங்கள் வேலைகளை மிகவும் சிரமமான சூழ்நிலைகளில் முன்னெடுத்தார்கள். போட்டோக்கள் பஸ்ஸில் இருந்து எடுக்கப்பட்ட போதிலும், அவை வன்னியில் தற்காலிக குடிசைகளில் மக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன.

உங்கள் மனதில் கிளிநொச்சியின் தற்போதைய சூழ்நிலையை வெளிக் கொணரும் முதல் விடயம், நகரில் மக்களைவிட இராணுவம் கூடுதலாக இருப்பதேயாகும். அவர்கள் சீருடையுடனும் மற்றும் சிவில் உடையிலும் ஆயுதங்களுடன் அங்கும் இங்கும் நடமாடுவதை காணக் கூடியதாய் இருக்கின்றது. மக்கள் வடக்கே உள்ள யாழ்ப்பாணத்திலும் மற்றும் தெற்கேயுள்ள வவுனியாவிலும் இருந்து மட்டுமே இராணுவ முகாம்கள், சோதனைச் சாவடிகள் மற்றும் ரோந்து நடவடிக்கைகளைத் தாண்டி கிளிநொச்சிக்கு பயணம் செய்ய முடியும்.

ஆறு மாதங்களுக்கு முன்னர் செய்தது போல் தற்போது சிப்பாய்கள் யாரையும் விசாரணை செயவதில்லை, ஆனாலும் ஒவ்வொருவரின் நடாமாட்டங்களையும் நெருக்கமாக கண்காணித்துக் கொண்டிருக்கின்றார்கள். கிராமத்தில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வீட்டுக்கு எமது நிருபர் சென்றுவுடனேயே, அங்கு சென்ற சிப்பாய்கள், ஏன் அவர் அங்கு வந்தார் என்று விசாரித்தார்கள். அவர் உறவினரை பார்க்க வந்ததாக கூறிய பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டனர். ஆனால் ஒரு வீட்டுக்கு ஒரு புதிய நபர் வந்தால் இதே கேள்வி எழும்.

Makeshift dwellings
தற்காலிக குடிசைகள்

கிளிநொச்சி நகரில் இருந்த கட்டிடங்கள் கடந்த வருடம் இடிக்கப்பட்டன. வீதியின் இருமருங்கிலும் இருந்த கட்டிடத் துகள்கள் வீதியில் இருந்து 50 மீட்டர் தூரத்துக்கு அகற்றப்பட்டுள்ளன. நகரத்துக்கு திரும்பிய வியாபாரிகள் யுத்தத்தின் போது இடிக்கப்பட்ட தமது கடைகளை, தமது சொந்த செலவில் புதுப்பித்துக்கொண்டிருக்கிறார்கள். இங்கு சிறிய கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அங்கு சிறு தொகை வாடிக்கையாளர்களே உள்ளனர். இங்கு கூடுதலான உணவகங்கள் இராணுவத்தால் நடத்தப்படுகின்றன. அவை நகரத்தின் ஊடாக செல்லும் பயணிகளுக்கு உணவு விற்கின்றன.

முன்னர் புலிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட மக்களின் நிலங்கள் மற்றும் கட்டிடங்களை தற்போது இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. நகரத்துக்கு தெற்குப் புறமாக உள்ள பெரும் நிலப்பரப்புக்களை சூழ முட்கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை இராணுவக் கட்டிடங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக மக்கள் நினைக்கின்றனர். அதே சமயம், கிளிநொச்சி பஸ் நிலையத்தில் எதுவிதமன கட்டிடங்களும் இல்லை. பயணிகள் மழையிலும் அல்லது வெய்யிலிலும், சில சமயம் பல மணிநேரம் மரங்களுக்கு கீழே பஸ்ஸூக்காக காத்திருக்கின்றனர். இன்னமும் சில இடங்களுக்கு பஸ்கள் ஓடவில்லை.

முன்னாள் கைதிகளான மக்கள் பெரும்பாலும் எதுவிதமான உதவிகளும் அற்ற நிலையில் இங்கு அனுப்பப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் இத்தகைய போக்கு அதன் இனவாத வேறுபாட்டின் வெளிப்பாடாகும். அரசாங்கத்தின் கொள்கை பற்றி இடம்பெயர்ந்ந்த மக்கள் கோபத்துடன் பேசினார்கள். "நாங்கள் எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையிலேயே இங்கு வாழ்கிறோம். எங்களுக்கு அரசாங்கம் வீடு, தொழில் மற்றும் இதர வசதிகள் வழங்குவதாக கூறியது. நிவாரண முகவர்கள் தரும் சில உதவிகளைத் தவிர, அரசாங்கத்தால் எமக்கு சுத்தமான தண்ணீரைக் கூட தரமுடியவில்லை. யாரும் எங்களின் துயர நிலையை வந்து பார்க்கவில்லை. நாங்கள் தங்கியிருந்த தடுப்பு முகாம்களுக்கும் இங்கு வாழ்வதற்கும் எதுவித வித்தியாசமும் கிடையாது. நிலைமைகள் இரண்டு இடங்களிலும் சமமானவை," என ஒருவர் தெரிவித்தார்.

மீளக் குடியமர்த்தப்பட்டவர்களில் பலர், அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட தகரங்களைக் கொண்டு 10க்கு 10 அடி கூடாரங்களை அமைத்து வாழ்கிறார்கள். வேறுபலர் இறப்பர் தரப்பாள்களைக் கொண்டு அதே அளவு கூடாரங்களை அமைத்து வாழ்கிறார்கள். தரைகள் கழி மண்ணினால் அமைக்கப்பட்டுள்ளதுடன், நிம்மதியாக தூங்குவதற்கோ அல்லது உடைகள் மாற்றுவதற்கோ தனியான இடங்கள் கிடையாது. அங்கே மலசல கூட வசதிகள் இல்லாத நிலையில் மக்கள் திறந்த வெளிகளையே உபயோகிக்கின்றனர். சில குடும்பங்கள் உடைந்த வீடுகளுக்கு தகரங்களை கூரையாக போட்டு வாழ்கின்றனர்.

உலக உணவுத் திட்டம் (உ.உ.தி.) வழங்கும் உணவினால் மட்டுமே மக்கள் பட்டினியின்றி இன்னும் உயிர் வாழக் கூடியதாய் இருக்கின்றது. மக்கள் தமது நிலங்களை துப்புரவு செய்வதற்கு கத்தி போன்ற உபகரணங்கள் கூட இல்லாமல் இருப்பதோடு அன்றாடத் தேவைக்கான விளக்கு கூட இல்லை. அவர்கள் குப்பி விளக்குகள் தயாரிப்பதற்கு பழைய போத்தல்களை தேடிக்கொண்டிருப்பதுடன், கிணறுகள் சுத்தப்படுத்தப்படாததால் சுத்தமான குடிதண்ணீருக்காக நீண்ட தூரம் அலைகின்றனர்.

Small tents house some resettled families
சில மீளக் குடியேறிய குடும்பங்களின் சிறிய கூடாரங்கள்

கிளிநொச்சி மாவட்டம் விவசாயத்துக்கும் மீன்பிடிக்கும் பிரபல்யமானது. அங்குள்ள இரணமடு குளமானது இங்குள்ள பல ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வழங்கிக் கொண்டிருந்தது. இது தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. இதிலிருந்து இன்னமும் விவசாயிகளுக்கு முழுமையாக தண்ணீர் விடுவிக்கப்படவில்லை. ஒரு சில விவசாயிகள் பயிரிட ஆரம்பித்துள்ளனர். ஆனால், அவர்களிடம் ட்ரக்டர் அல்லது அடிப்படை உபகரணங்கள் கிடையாது. பலரிடம் ஒரு மண்வெட்டி கூட இல்லை. இந்த குளத்தில் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பூநகரி பிரதேசமும் வன்னியில் ஏனைய பிரதேசங்களைப் போல் அழிவடைந்துள்ளது. உடைக்கப்பட்ட வீடுகளில் இருந்து எடுக்கப்பட்ட கற்கள் மற்றும் பலகைகள் போன்றவற்றைக் கொண்டு இராணுவம் கடற்கரையைக் கண்காணிப்பதற்கான காவல் அரண்களை அமைத்துள்ளது. ஒரு பிரதேசவாசி கூறுகையில், "இராணுவ காவலரண்கள் எமது வீடுகளில் கழற்றப்பட்ட மரங்கள் மற்றும் கூரைத் தகடுகளால் அமைக்கப்பட்டுள்ளன" என்றார்.

மாணவர்கள் பொதுவாக பாடசாலைக்கு போய் வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆசிரியர்கள் மற்றும் உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது. ஆசிரியர்கள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் இருந்து நீண்ட தூரம் பிரயாணம் செய்யவேண்டியுள்ளது. பூநகரியில் உள்ள விக்னேஸ்வரா வித்தியாலயம், முன்னர் உயர்தரம் வரை கற்பிக்கப்பட்ட பாடசாலையாக இருந்தது. தற்போது அப் பாடசாலை இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இருக்கின்றது. ஆகையால், மாணவர்கள் 5 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் இன்னொரு பாடசாலைக்கு நடந்து போய்வருகின்றனர்.

இராணுவம் பூநகரி அரசாங்க ஆஸ்பத்திரியையும் ஆக்கிரமித்துள்ளது. அங்கு அருகில் எங்கும் வேறு வைத்தியசாலைகளும் கிடையாது. அங்குள்ள மக்களுக்கு கடுமையான நோய் ஏற்பட்டால் அவர்களை சிகிச்சைக்காக கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்கு வாகனம் கேட்டு இராணுவத்திடம் கெஞ்ச வேண்டும். சாதாரணமாக நோய்வாய்பட்டவர்கள் துன்பப்படவேண்டும்.

வட்டக்கச்சி கிராமத்தில் ஆஸ்பத்திரி மற்றும் பாடசாலைகள் இல்லை. மக்கள் கூடாரத்தில் வாழ்கிறார்கள். வீடுகள் யாவும் யுத்தத்தின் போது இடிக்கப்பட்டுள்ளன. வட்டக்கச்சி மாகாவித்தியாலயம் மற்றும் இராமநாதபுரம் மகா வித்தியாலயம் என்பன இன்னமும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கின்றன.

பல பெண்கள் தமது கணவன்மார்களை இழந்துள்ளார்கள். தமது பிள்ளைகளுக்கான பொருத்தமான கல்வி மற்றும் உடைகள் இல்லாமல் எண்னிலடங்கா துன்பங்களுக்கு முகம் கொடுத்துக்கொண்டு அவர்கள் உயிர் பிழைக்கப் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஒரு பெண் விளக்கியதாவது: "அரசாங்கம் எதுவிதமான உதவிகளையும் வழங்கவில்லை. காணாமல் போன எனது கணவனைத் தேடுவதற்கு எம்மிடம் பணம் இல்லை. என்னைப் போல் ஏனையவர்களும் இதே போன்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.''

கிளிநொச்சி மாவட்டத்தில் பொருத்தமான மனித உறைவிடங்களை மீள அமைப்பதற்கு பில்லியன் ரூபாய்கள் உடனடியாகத் தேவைப் படுகின்றது. ஆனால் கொழும்பு அரசாங்கம் சாதாரண மக்களின் வாழ்க்கை நிலமைகளைக் மீளக் கட்டியெழுப்புவதில் அக்கறை காட்டவில்லை. யுத்தத்தால் அழிவுகளை எதிர்கொண்ட மக்களை அது நடத்தும் விதம், தமிழர்களுக்கு எதிரான தசாப்த கால வேறுபாடுகளின் தொடர்ச்சியாகும்.