World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The European strikes and the trade unions

ஐரோப்பிய வேலைநிறுத்தங்களும் தொழிற்சங்கங்களும்

Ulrich Rippert
5 March 2010

Use this version to print | Send feedback

கடந்த வாரம் இரு முக்கிய நிகழ்வுகள் இருந்தன. ஐரோப்பிய ஒன்றியமும் வங்கிகளும் கோரும் கடும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பைக் காட்டும் வகையில் பல நாடுகளில் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக நடத்திய வேலைநிறுத்த அலை ஐரோப்பாவை தாக்கியது.

எல்லா நாடுகளிலும் தொழிற்சங்கங்களின் பிரதிபலிப்பு தொழிலாளர்களின் நடவடிக்கைகளை தனிமைப்படுத்தி அடக்கியவிதத்தில் அந்தந்த நாட்டு அரசாங்கங்கள், ஐரோப்பிய நிதிய உயரடுக்குடன் தம்மை நெருக்கமாக்கிக்கொண்டதாக இருந்தது. தொழிற்சங்கங்களின் முக்கிய கவலை ஐரோப்பிய தொழிலாளர்கள் அவர்களுடைய பொது விரோதியான ஐரோப்பிய முதலாளித்துவம் மற்றும் அதன் ஐரோப்பிய ஒன்றியம், தேசிய அரசாங்கங்களில் உள்ள முகவர்களுக்கு எதிராக ஒரு பொதுப் போராட்டத்தில் ஒன்றுபட்டுவிடாமல் தடுப்பது என்று இருந்தது.

கடந்த வாரம் திங்களன்று ஜேர்மனியின் மிகப் பெரிய விமானப்போக்குவரத்து நிறுவனமான லுப்ட்தான்சாவின் 4,500 விமானிகள் வேலைநிறுத்தம் செய்தனர். அதே தினத்தில் பிரான்சில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் வேலைநிறுத்தம் செய்தனர்; டோட்டல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் தொழிலாளர்களும் தேசிய வேலை நிறுத்தத்தை தொடர்ந்தனர். இங்கிலாந்தில் பிரிட்டிஷ் ஏயர்வேஸின் விமானப் பயண உதவி ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக 80 சதவிகித வாக்கை அளித்தனர்.

செவ்வாயன்று மாட்ரிட், பார்சிலோனா மற்றும் வாலென்சியாவில் பிரதம மந்திரி ஜோஸே லூயிஸ் ரோட்ரிக்ஸ் ஜாபடேரோவின் PSOE சோசலிஸ்ட் அரசாங்கம் அறிமுகப்படுத்திய செலவினக் குறைவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

புதனன்று கிட்டத்தட்ட 2 மில்லியன் தொழிலாளர்கள் கிரேக்கத்தில ஒரு பொது வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்றனர்; இது நாட்டையே 24 மணி நேரத்திற்கு அசைவற்றுச் செய்து விட்டது. விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் சேர்ந்த அளவில், கிரேக்கத்தில் இருந்தும் கிரேக்கத்திற்குமான அனைத்து விமானப் போக்குவரத்தும் இரத்து செய்யப்பட்டன.

செக் குடியரசில் தொழிற்சங்கங்கள் பொதுப் போக்குவரத்து மார்ச் 1 அன்று நிறுத்தப்படும் என்று அறிவித்தன. போர்த்துகீசிய தொழிற்சங்கங்கள் மார்ச் 4ம் தேதி ஊதியத் தேக்கத்தை எதிர்த்து ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்திற்குத் தயாரிப்பு நடத்தின.

இங்கிலாந்தின் Independent செய்தித்தாள் வேலைநிறுத்தம், எதிர்ப்புக்கள் வெடிப்பதின் மூலம் "1968 புரட்சிகர எழுச்சிகளுக்கு பின்னர் கண்டம் பெரும் எழுச்சி அலைகளின்" வரவைக் காட்டக்கூடும் என்று எச்சரித்தது.

கீழிருந்து பெரும் அழுத்தத்தின்பேரில் நடவடிக்கைகளுக்கு அழைப்புக் கொடுத்த தொழிற்சங்கங்கள் இதையொட்டி தொழிலாளர்கள் தங்கள் சீற்றத்தை வெளிப்படுத்திவிடுவர் என்று நம்பின. இது தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை அடக்குவதற்கும் அந்தந்த அரசாங்கங்கள் கால அவகாசம் பெறுவதற்கும் உதவும் என்றும் நம்பின.

ஜேர்மனிய விமானிகள் சங்கம் Cockpit ஒரு மகத்தான ஐரோப்பா-தழுவிய இயக்கத்தின் முன்னணியில் தான் இருக்கக்கூடும் என்பதை உணர்ந்தவுடன், அது தான் திட்டமிட்டிருந்த நான்கு நாள் வேலைநிறுத்தத்தை ஒரே நாளில் முடித்துக் கொண்டது.

அதே நேரத்தில் ஜேர்மனியில் இரு பெரிய தொழிற்சங்கங்கள், பொறியியல், தொழில்துறை சங்கம் IG Metall, பொதுப் பணித்துறை தொழிற்சங்கமான Verdi இரண்டும் தங்கள் ஐந்து மில்லியன் உறுப்பினர்களுடைய உண்மை ஊதியங்களில் வெட்டு இருக்கும் ஒப்பந்தங்களை தொழில்வழங்குனர்களுடன் நீட்டிக்க ஒப்புக் கொண்டன.

பிரான்சில் ஸ்ராலினிச ஆதிக்கத்திற்குட்டபட்ட தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு CGT, Total க்கு எதிரான தேசிய வேலைநிறுத்தத்தை கைவிட்டு, டன்கிர்க் ஆலையை நிர்வாகம் மூட இருக்கும் திட்டத்திற்கு நிபந்தனையற்ற சரணை அடைந்தது.

பிரிட்டனில் Unite தொழிற்சங்கம் அது ஈஸ்டர் விடுமுறைக்காலத்தில் வேலைநிறுத்தம் செய்யாது என்பதையும், எந்த தொழில்துறை நடவடிக்கையும் தனிமைப்படுத்தப்பட்ட வேலைநிறுத்தங்களாக இருக்கும் என்பதையும் பிரிட்டிஷ் ஏயர்வேஸுக்கு உத்தரவாதம் செய்தது.

கிரேக்கத்தின் இரு முக்கிய தொழிற்சங்க கூட்டமைப்புக்களான தனியார்துறை GSSE, பொதுத்துறை ADEDY இரண்டும் பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவின் சமூக ஜனநாயக PASOK அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுப்பதுடன், தங்கள் உறுப்பினர்கள் அரசாங்கத்தின் கடன் நெருக்கடியை சமாளிக்க தியாகங்கள் செய்யத் தயார் என்றும் அறிவித்தன.

கிரேக்கத்தில் பொது வேலைநிறுத்தம் நடந்து மூன்று நாட்களுக்கு பின்னர் செக் தொழிற்சங்கங்கள் பொதுப் போக்குவரத்து தொழிலாளர்கள் திட்டமிட்டிருந்த வேலைநிறுத்தத்தை கைவிட்டன.

ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் ஒரு புதிய இயக்கத்தின் தொடக்கத்தில் தொழிற்சங்கங்களின் துரோகத்தன பாத்திரத்தில் இருந்து உறுதியான அரசியல் முடிவுகள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

முதலாளித்துவ உற்பத்தி பூகோளமயமாக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு தேசிய முன்னோக்குடன் பிணைந்துவிட்ட தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் மிக அடிப்படை நலன்களைக் கூட காக்கும் திறனற்றவையாக உள்ளன. அவை பெருநிறுவன-நிதிய உயரடுக்கு மற்றும் அரசாங்கத்தின் நேரடிக் கருவிகளாக மாற்றப்பட்டு விட்டன.

கடந்த நூற்றாண்டின் பொருளாதார உயர்ச்சிக்காலத்தில் முதலாளித்துவம் மற்றும் தேசிய திட்டங்களுக்கு பாதுகாப்பு கொடுத்திருந்தபோதிலும் குறைந்த அளவு ஊதியச் சலுகைகள் மற்றும் சமூக சீர்திருத்தங்களை தொழிற்சங்கங்கள் பெற முடிந்தது; ஆனால் இத்தகைய காலகட்டம் நீண்ட நாள் முன்னரே முடிவடைந்துவிட்டது. தொழிற்சங்கங்கள் மூலம் தொழிலாளர்களுக்கு கிடைத்த ஆதாயங்கள் தற்காலிகமானவை என்று நிரூபணம் ஆகிவிட்டன. இந்த பழைய அமைப்புக்களில், தொழிலாளர்கள் இப்பொழுது முதலாளிகள், அரசாங்கத்திற்கு சற்றும் குறைந்திரா விதத்தில் உள்ள விரோதிகளைத்தான் எதிர்கொள்கின்றனர்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி வெடிப்பதற்கு முன்பே, தொழிற்சங்கங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தையும் யூரோ அறிமுகப்படுத்தப்படுவதையும் ஆதரித்தது. கிழக்கு ஐரோப்பாவில் 20 ஆண்டுகளுக்கு முன்பு முதலாளித்துவம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதையும் அவர்கள் பாராட்டி, கிழக்கிற்கு தங்கள் அலுவலர்களை அனுப்பி அங்கும் ஊதியங்கள் குறைவாக வைத்திருக்க உதவின. இதையொட்டி மேற்கிலும் ஐரோப்பிய ஆளும் உயரடுக்கிற்கு ஊதியங்களை குறைக்க உதவின.

நெருக்கடியை கட்டவிழ்த்த சர்வதேச வங்கிகள் இப்பொழுது இதற்கான செலவுகளை, தங்கள் ஊக இழப்புக்களுகான தொகையை, தொழிலாள வர்க்கம் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன. தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு பெருகுகையில், தொழிற்சங்கங்கள் எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலாளர்கள் சர்வதேசரீதியாக ஐக்கியப்படுவதையும் மற்றும் ஒரு சோசலிச திசையில் செல்லும் அபிவிருத்தியையும் தடுக்க தீவிரமாக உள்ளன.

தொழிற்சங்கங்களின் தற்போதைய பாத்திரம் ஒரூ நீண்ட வரலாற்றின் உச்சக் கட்டமாகும். ஏற்கனவே 100 ஆண்டுகளுக்கு முன்பு அவை தொழிலாளர் இயக்கத்தின் வலதுசாரியில் நின்று, வெளிப்படையாக புரட்சிகர வர்க்கப் போராட்ட காலங்களில் பிற்போக்குத்தனங்களுடன் சேர்ந்தன.

பல ஆண்டுகளாக ஜேர்மனிய சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) மார்க்சிச பிரிவின் தலைவர் ரோசா லுக்சம்பேர்க் தொழிற்சங்க மாநாடுகளில் பேச தடை விதிக்கப்பட்டு இருந்தார். 20ம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வெகுஜன வேலைநிறுத்தம் பற்றிய விவாதத்தின்போது, சமூக ஜனநாயகக் கட்சியின் புரட்சிகர பிரிவிடம் தொழிற்சங்கத்தின் தலைமை கொண்ட வெறுப்பு உணர்வு வெறிபிடித்த வகைகளைக் கொண்டிருந்தது.

இந்தப்போக்கு பேரழிவுகரமான விளைவுகளை கொடுத்தது. 1914ம் ஆண்டில் போருக்கான கடன்கள் பற்றிய உடன்பாட்டிற்கு, பின்னர் முதலாம் உலகப் போரின் போது வேலை நிறுத்தம் இல்லை என்ற உடன்பாடு, இறுதியில் 1933 ஏப்ரல் மாதம் ADGB எனப்பட்ட ஜேர்மனிய தொழிற்சங்க கூட்டமைப்பு ஹிட்லர் ஆட்சியுடன் ஒத்துழைப்பு வழங்கியது என்பன வரிசையாக வந்தன.

இந்த வகை அமைப்புக்களின் அடிப்படைக் கூறுபாடுகளில் இருந்துதான் தொழிற்சங்கங்களின் வலதுசாரிப் போக்கு வளர்ச்சி தோன்றியது. "மார்க்சிசமும் தொழிற்சங்கங்களும்" என்ற உரையில் உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் கூறினார்: "முதலாளித்துவ உற்பத்தி உறவுகளின் அடிப்படையில் நின்று, தொழிற்சங்கங்கள் அவற்றின் இயல்பிலேயே, அடிப்படையில் வர்க்கப் போராட்டத்திற்கு விரோதப் போக்கை ஏற்கும் கட்டாயத்தில் உள்ளன. தங்கள் முயற்சிகளை முதலாளிகளுடன் உடன்பாடுகள் காண்பதில், உற்பத்தி சக்தியின் விலையையும் உபரிமதிப்பு தொழிலாளர்களிடம் இருந்து எடுக்கப்பட வேண்டிய பொதுநிலைமைகளை நிர்ணயிப்பதிலும், தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தைகளுக்கு உட்பட்ட ஒப்பந்தங்களின் விதிகள் படி உறுப்பினர்கள் உழைப்பு சக்தியை தருவர் என்ற உறுதிமொழியை கட்டாயமாகக் கொடுக்கின்றனர். கிரான்ஸி குறிப்பிட்டுள்ளபடி, 'தொழிற்சங்கம் சட்டபூர்வ தன்மையை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, அதன் உறுப்பினர்கள் சட்டபூர்வத்தை மதிக்குமாறு செய்யும் இலக்கை கொள்ள வேண்டும்.''

"சட்டபூர்வ நெறியை பாதுகாத்தல் என்பது வர்க்கப் போராட்டத்தை அடக்குதல் என்று ஆகும். அதன் இயல்பில் இதன் பொருள் தொழிற்சங்கங்கள் இறுதியில் உத்தியோகபூர்வமாக பணிபுரியவேண்டிய குறைந்தபட்ச இலக்குகளை கூட அடையமுடியாத குறைமதிப்பிற்கு சென்றுவிடுகின்றன. இதில்தான் தொழிற்சங்கம் தடுமாறுவதற்கான முரண்பாடுகள் உள்ளன."

தொழிலாளர்கள் இந்த காலம் கடந்துவிட்ட, பிற்போக்குத்தன அமைப்புக்களில் இருந்து முறித்துக் கொண்டு புதிய, உண்மையான மக்களுக்கு உதவும் ஜனநாயகப் போராட்ட அமைப்புக்களை கட்டமைக்க வேண்டும். அதே நேரத்தில் தொழிற்சங்கங்களின் அடித்தளத்தில் இருக்கும் தேசிய, வர்க்க ஒத்துழைப்பு கருத்தாய்வுகளுடன் முறித்துக் கொள்ள வேண்டும்.

கிரேக்கத்தில் வந்துள்ள கடுமையான சிக்கன நடவடிக்கைகள் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் மீது நடத்தப்பட இருக்கும் வரலாற்றுத் தன்மை நிறைந்த தாக்குதல்களுக்கு முன்னோடி ஆகும். ஒரு புதிய புரட்சிகர போராட்டக் காலம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு தொழிலாளர்களின் அதிகாரத்திற்கு போராடவும், பொருளாதார வாழ்வை ஜனநாயக, சமத்துவ வழிகளில் மறு சீரமைக்கவும், ஒரு சர்வதேச சோசலிச இயக்கம் தொழிலாள வர்க்கத்திற்காக கட்டமைக்கப்பட, முழு நனவுடன் தயாரிக்கப்பட வேண்டும்.