World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The struggle against the EU's financial diktats is a class issue

ஐரோப்பிய ஒன்றிய நிதிய கட்டளைளுக்கு எதிரான போராட்டம் ஒரு வர்க்கப் பிரச்சினை ஆகும்

Ulrich Rippert
29 March 2010

Use this version to print | Send feedback

சமீபத்திய ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டின்போதும் அதற்கு முன்பும், ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு இடையேயான முரண்பாடு மிகத்தீவிர வடிவத்தை எடுத்தன. கடந்த வியாழனன்று ஐரோப்பிய தலைவர்கள் பிரஸ்ஸல்ஸில் பேச்சுக்களை தொடங்கும்போது, ஸ்ரெபான் கோர்னிலியுஸ் Süddeutsche Zeitung பத்திரிகையில், "பல தசாப்தங்களின் மிக மோசமான அதன் வெளிநாட்டுக் கொள்கை நெருக்கடியை ஜேர்மனி இப்பொழுது கொண்டுள்ளது." என எழுதினார்.

கிரேக்கத்திற்கு நிதி உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையை கொடுக்கலாமா அல்லது வேண்டாமா என்பது பற்றியே முரண்பாடு எழுந்தது. ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் ஜனாதிபதி ஜோஸே மானுவல் பரோசோ தெளிவாக ஒரு ஐரோப்பிய உதவித் திட்டம் வேண்டும் என்றார்: அதுதான் கணிக்க முடியாத விளைவுகளை தரக்கூடிய நிதியப் பேரழிவை தவிர்க்கும் என்றார். போர்த்துகல்லின் முன்னாள் ஜனாதிபதி என்ற முறையில் அவர் தெற்கு ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்கள் அனைத்தின் நலன்களைப் பற்றியும் பேசினார். கிரேக்கம் போல் இவையும் தேசிய திவால் நிலைமையால் அச்சுறுத்தப்படுகின்றன.

ஜேர்மனியின் அதிபர் அங்கேலா மேர்க்கெல் (கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம், CDU) இதற்கு எதிராகப் பேசி, மாஸ்ட்ரிட் மதிப்பீட்டுதரங்களை தாழ்த்துவதற்கு எதிராக எச்சரித்தார். அவற்றின்படி ஒரு நாட்டின் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதத்திற்கு அதிகமாகப் போகக்கூடாது. அதன் மொத்த தேசியக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவிகிதத்திற்கு அதிகமாகப் போகக்கூடாது. சர்வதேசப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் விதத்தில் அனைத்து நாடுகளும் கடுமையான நிதியக் கட்டுப்பாட்டை மேற்கோள்ள வேண்டும் என்று மேர்க்கெல் வலியுறுத்தினார். கிரேக்க அரசாங்கம் தான் ஏற்றுள்ள கடும் சிக்கன நடிவடிக்கைகளை நிபந்தனையின்றி செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரினார்.

இந்தக் கடின நிலைப்பாட்டை கொள்ளுகையில், மேர்க்கெல் மற்றும் ஜேர்மனிய அரசாங்கத்தினரும் ஒரு அடிப்படைப் பொருளாதார சங்கடத்தை எதிர்கொள்கின்றனர். கிரேக்கத்திற்கு எந்த ஐரோப்பிய ஒன்றிய உதவிப்பொதியும் ஐரோப்பிய ஒன்றிய உறுதி உடன்பாட்டை வினாவிற்கு உட்படுத்தி, யூரோ மீதான அழுத்தத்தை அதிகரிக்கும். யூரோவின் மதிப்பு 2008 வசந்த காலத்தில் இருந்த $1.60 என்பதில் இருந்து கிட்டத்தட்ட 20 சதவிகிதம் குறைந்துவிட்டது.

ஆனால், ஐரோப்பிய நிதியுதவி அளிக்க மறுத்தல் என்பதிலும் அதிக அளவு ஆபத்துக்கள்தான் உள்ளது. அது கிரேக்கம், போர்த்துகல், ஸ்பெயின் ஆகிய நாடுகளின் அரசாங்கக் கடன்களில் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்பதுடன் இன்னும் விரைவில் யூரோவின் சரிவைக் கொண்டுவரக்கூடும்.

இந்தச் சங்கடம் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஒற்றைச் சந்தை இருந்தும்கூட, சுங்கவரிகள், எல்லைக் கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டும் கூட, 27 ஐரோப்பிய உறுப்பு நாடுகளில் 16ல் பொது நாணயம் இருந்தும்கூட, பல ஐரோப்பிய தேசிய அரசுகள் இன்னும் இருப்பதாலும், அனைத்து முக்கிய முடிவுகளும் ஒரு தேசிய அளவிலேயே எடுக்கப்படுகின்றன என்பதுடன் நேரடியாக தொடர்பைக் கொண்டது.

பொருளாதார வளர்ச்சி, செழிப்பு உள்ள சூழலில், ஐரோப்பிய அரசாங்கங்களில் பெரும்பாலானவை ஐரோப்பிய ஒன்றியம், யூரோ, ஒற்றைச் சந்தை ஆகியவற்றில் இருந்து ஆதாயம் பெற்றன. ஆனால் பொருளாதார நெருக்கடி வந்தவுடன் நாடுகளுக்கு இடையே மோதல்கள் தீவிரமாகின்றன. அவற்றால் பொருளாதார அளவில் பல நலன்களைப் பெற்றதால் அதிக நிதிய நன்கொடைகள் கொடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தின் விரிவாக்கத்தை நீண்ட காலமாக ஆதரித்த ஜேர்மனி, இப்பொழுது தன்னுடைய பொருளாதார சக்தியை பிரயோகித்து கடுமையான சமூகநலக் குறைப்புக்கள், சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆணையிடுகிறது.

சமீபத்திய பிரஸ்ஸல்ஸ் உச்சிமாநாடு ஐரோப்பிய ஒன்றியம் கிரேக்கத்திற்கு நேரடி நிதி உதவி அளிக்காது என்ற முடிவை எடுத்தது. மிகமோசமான நிலையில்தான் சர்வதேச நாணய நிதியம் (IMF) ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து கொடுக்கும் உதவிக்கு ஆதரவைக் கொடுக்கும். இந்த முடிவு ஐரோப்பிய, சர்வதேச நிதிய மூலதனத்தின் நலன்களால் நேரடியாக முடிவெடுக்கப்பட்டது ஆகும். கிரேக்க அரசாங்கம் தன்னுடைய திட்டமிட்ட சிக்கன நடவடிக்கைகளை பெருகிய மக்கள் எதிர்ப்பிற்கு எதிராகவும் செயல்படுத்த வேண்டும் என்பது மிகவும் தெளிவாக்கப்பட்டது. இப்பொழுது அது பரோசோவிற்கும் தெளிவாக்கப்பட்டுள்ளதுடன், போர்த்துக்கல், ஸ்பெயின், இத்தாலி ஆகியவற்றிற்கும் பொருந்தும்.

ஒரு நாடு திவாலை எதிர்கொண்டால், மேர்க்கெல் கூறியபடி இறுதி தீர்வாக ஐரோப்பிய மற்றும் சர்வதேச வங்கிகளின் இலாபங்கள் ஆபத்திற்கு உட்படாது, சர்வதேச மீட்புத் திட்டத்தினால் காப்பாற்றப்படும் என்பது நிதியச் சந்தைகளுக்கு ஒரு சைகை கொடுக்கப்பட்டது. ஆனால் அத்தகைய மீட்புப் பொதியே அரசாங்கம் ஒரு கடுமையான நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தும் தேவையுடன் பிணைந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் இதற்கு முன்னால் இவ்வளவு அப்பட்டமாக ஐரோப்பிய வங்கிகளின் ஆணைகள் மற்றும் ஐரோப்பிய முதலாளித்தவத்தின் வலுவான பிரதிநிதியான ஜேர்மனியின் சர்வாதிகாரத்தின் கருவி என்ற தனது உண்மைத் தன்மையை வெளிப்படுத்தியதில்லை. இது விதிகளை ஆணையிட உரிய குரலையும், வரையறைகளையும் காட்டுகிறது.

கடந்த காலத்தில் ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பா அமைதியான, இணக்கமான முறையில் ஒன்றுபட வேண்டும் என்று வாதிட்டது. ஆனால் பொருளாதார நெருக்கடி இந்தப் பிரச்சாரத்தின் அடித்தளத்தை அகற்றிவிட்டது. போன நூற்றாண்டின் தொடக்கத்தில், இன்று இருந்ததைப் போலவே, ஐரோப்பா முதலாளித்துவத்தின் கீழ் ஒன்றுபடுவது என்பது ஒரு பிற்போக்குத்தன கற்பனைக் கருத்துத்தான். 1914, 1939 ஆகிய காலகட்டத்தில் இருந்தது போல், இதன் பொருள் மிக வலுவான ஐரோப்பிய சக்தி கண்டத்தில் இருக்கும் மற்ற நாடுகள்மீது ஆதிக்கம் செலுத்தும் என்பதுதான்.

1932 இலையுதிர்காலத்தில் பேர்லினில் நாஜிக்கள் பதவிக்கு வருவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பு, லியோன் ட்ரொட்ஸ்கி ஐரோப்பாவின் வரலாற்றுத் தன்மையான நெருக்கடி மற்றும் ஜேர்மனிய முதலாளித்துவத்தின் சிறப்புப் பங்கு பற்றியும், கீழ்க்கண்ட சொற்களில் சுருக்கமாகக் கூறினார்: "இறுதிப்பகுப்பாய்வில், நம்முடைய சகாப்தத்தின் பொருளாதாரத் தீமைகள் மனிதகுலத்தின் உற்பத்திச்சக்திகள் உற்பத்திசாதனங்கள் தனிச்சொத்துடைமையாக இருப்பதுடனும் தேசிய எல்லைகளுடனும் பொருந்தாதுள்ளது என்ற உண்மையில் இருந்து விளைகின்றன. ஜேர்மனிய முதலாளித்துவம் கடுமையான அதிர்வுகளை கொண்டுள்ளதற்கு காரணம் அது மிக நவீன, மிக முன்னேற்றகரமான, மிக இயக்கத்தன்மையுடைய முதலாளித்துவமாக ஐரோப்பா கண்டம் முழுவதிலும் உள்ளது."

ஐரோப்பிய தேசிய-அரசமைப்பு முறை என்பதில் குறுகிய வரம்பிற்குள் திணிக்கப்பட்டுள்ள ஜேர்மனிய பெருவணிகம் மீண்டும் ஐரோப்பியப் பொருளாதாரத்தை ஆதிக்கம் செலுத்த முற்பட்டுள்ளது.

இத்தாக்குதல் எதிர்ப்பை சந்திக்கிறது. கடந்த வாரம் சிறு நாடுகளின் தலைவர்கள் ஜேர்மனி மீது தீவிர தாக்குதல்கள் நடத்தியதைப் பார்த்தது, அவர்கள் பேர்லின் இரக்கமுற்ற முறையில் அதன் பொருளாதார நலன்களைத் தளமாகக் கொண்டு சுரண்டுகிறது, மற்ற ஐரோப்பிய நாடுகளை கடன் வாங்க வற்புறுத்துகிறது, இதில் ஜேர்மனிய வங்கிகள் பெரும் இலாபங்களை அடையும் என்று குற்றம் சாட்டினார்கள்.

அதே நேரத்தில் கிரேக்கத்தில் SYRIZA போல் தொழிற்சங்கங்களும், அவற்றுடன் தொடர்புடைய அமைப்புக்களும் தேசியவாதப் பிரச்சாரத்தை பரப்புவதில் முக்கிய பங்கைக் கொண்டிருக்கின்றன. ஆர்ப்பாட்டங்களின் கடைசி நாளன்று அவர்கள் ஜேர்மனியப் பொருட்கள் புறக்கணிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தனர். இத்தகைய முறையீடுகள் தங்கள் அரசாங்கத்துடன் அவை நெருக்கமாக நிற்கவும், ஐரோப்பிய தொழிலாளர்களின் ஐக்கியப்ட்ட போராட்டத்தை அடக்கவும்தான் உதவும்.

தொழிலாள வர்க்கம் இத்தகைய முயற்சிகளையும் தேசியவாத தாக்குதல்களையும் நிராகரிக்க வேண்டும். ஜேர்மனிய தேசியவாத-எதிர்ப்பு என்பது ஜேர்மனிய தேசிய வெறியை விட சிறந்தது அல்ல. இவை ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்தாம். இக்கொள்கை ஏற்படுத்திய குருதி கொட்டிய, பெரும் துன்ப விளைவுகள் ஐரோப்பாவில் நன்கு அறியப்பட்டதுதான்.

ஐரோப்பிய ஒன்றிய நிதிய கட்டளைகளுக்கு எதிரான போராட்டம் ஒரு தேசியப் பிரச்சினை அல்ல, மாறாக ஒரு வர்க்கப் பிரச்சினை ஆகும்.

ஐரோப்பிய வங்கிகளின் சார்பில் பாப்பாண்ட்ரூ அரசாங்கம் செசயல்படுத்த விரும்பும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்துப் போரிட, கிரேக்கத் தொழிலாளர்கள் தங்கள் ஜேர்மனிய சக தொழிலாளர்களுடனும் மற்ற ஐரோப்பியத் தொழிலாளர்களுடனும் ஒன்றுசேர வேண்டும். 1960, 1970 களில் இராணுவ அதிகாரிகளின் சர்வாதிகார காலத்தில், ஏதென்ஸ், தெஸாலோனிகி மற்றும் கிரேக்கத்தின் பிற பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் ஜேர்மனிக்கும் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் வேலை நாடி வந்தனர். அவர்கள் பலருக்கும் இன்னமும் நண்பர்களும் தெரிந்தவர்களும் பல நாடுகளில் உள்ளனர்.

இந்த சர்வதேச உறவுகள் இப்பொழுது ஆழமாக்கப்பட்டு ஒரு சர்வதேச சோசலிச வேலைத் திட்டடத்தின் கீழ் அபிவிருத்திசெய்யப்பட வேண்டும். இத்தகையை திட்டம் பொருளாதார நெருக்கடி, அதன் பாதிப்பிற்கு எந்த நாட்டில் இருந்தும் தொழிலாளர்கள் பொறுப்ப அல்ல என்ற அடிப்படைக் கோட்பாட்டில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். பணம் இல்லை என்று கூறப்படுவது ஒரு பொய் ஆகும். பல ஆண்டுகளாள ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் உயரடுக்கு தொழிலாள வர்க்கம் தோற்றுவித்த செல்வத்தை கொள்ளை அடித்து, சமூக நிலையின் வீழ்ச்சிகளால் தன்னை கூடுதல் செல்வக் கொழிப்பு உடையதாக ஆக்கிக் கொண்டுள்ளது.

இந்த நெருக்கடியை தீர்ப்பதற்கு, நிதியப் பிரபுத்துவத்தின் சக்தியை முறிக்க வேண்டியது அவசியம் ஆகும். இதற்கு வங்கிகளின் சொத்துக்களை எடுத்துக் கொள்வது முக்கியமாகும். உற்பத்தி, வணிகம் ஆகியவற்றிற்கு நிதி கொடுக்க இந்தப் பரந்த நிதிய இருப்புக்கள் தனியார் உடைமையில் இருப்பது அகற்றப்பட வேண்டும், அவை தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும். தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் குட்டி முதலாளித்துவ எடுபிடிகளின் பிற்போக்குத்தன, கோழைத்தன அரசியலுக்கு எதிரான போராட்டம் இதற்குத் தேவை ஆகும். அவைதான் சர்வதேச வங்கிகளுக்கு எதிரான தீவிரப் போராட்டத்தை அழிக்கின்றன.

ஐரோப்பா பல பிளவுகளாக சிதறுண்டு போவதை தொழிலாள வர்க்கம் அனுமதிக்கக் கூடாது. தொழிலாளர் அரசாங்கங்கள் மற்றும் ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகள் நிறுவப்படுவதற்கான சர்வதேசப் போராட்டத்தை அது மேற்கொள்ள வேண்டும்.