சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Euro aid package inaugurates offensive against working class

யூரோ உதவி நிதிப் பொதி தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தாக்குதலை தொடக்கி வைக்கிறது.

PETER SCHWARZ
13 MAY 2010

Use this version to print | Send feedback

கடந்த வார இறுதியில் ஐரோப்பிய தலைவர்களும் நிதி மந்திரிகளும் யூரோவிற்காக ஒரு மீட்புப் பொதிக்கு உடன்பட்டனர்; இது இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் தொழிலாள வர்க்கத்தின் மீது மிகப் பரந்த அளவிலான தாக்குதலை ஆரம்பிக்கிறது. இத்தாக்குதல் ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் ஒருங்கிணைந்து எதிர்க்கும் விதத்தில் நிராகரிக்கப்படவேண்டும்.

வெள்ளி மாலை, யூரோப் பகுதி நாடுகளின் தலைவர்கள் பிரஸ்ஸல்ஸில் சந்தித்து அவ்வாரம் கிரேக்கத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள 110 பில்லியன் யூரோப் பொதியை முறையாக நடைமுறைக்கு கொண்டுவந்தனர். ஆனால் 2மணி நேர இரவு உணவிற்கு பின்னர் அது ஒரு ஆறு மணி நேர நெருக்கடிக் கூட்டமாயிற்று.

இரு நாட்களுக்கு முன்னதாக கிரேக்கத்தில் நடந்த ஒரு பொது வேலைநிறுத்தம் கிரேக்க அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள சிக்கன நடவடிக்கைகளுக்கு எந்த அளவு எதிர்ப்பு உள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டியது. கிரேக்க அரசாங்க நெருக்கடியைப் பயன்படுத்தி மகத்தான இலாபங்களைக் கண்ட நிதிச் சந்தைகள் பீதியில் ஆழ்ந்தன. வியாழனன்று அமெரிக்காவின் Dow Jones பங்குச் சந்தைக் குறியீடு ஒரு கட்டத்தில் 9 சதவிகிதம் சரிந்தது.

இது கடன் உத்தரவாதங்களை கிரேக்கத்திற்கு மட்டுமல்லாது மற்றைய பற்றாக்குறை மிகுந்த யூரோ நாடுகளுக்கும் கொடுக்க வேண்டுமென்ற அழுத்தத்தை ஐரோப்பிய அரசாங்கங்கள் மீது கொடுத்தது. தன்னுடைய எதிர்ப்பை கைவிடுமாறு ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெலை நம்ப வைப்பதற்காக ஜனாதிபதி ஒபாமா நேரடியாக தொலைபேசித் தொடர்பு கொண்டார்.

இரவுக் கூட்டத் தொடரில் அரசுகள் மற்றும் அரசாங்கத்தின் தலைவர்கள் இதற்குப் பின்னர் ஒரு விரிவான நிதிய உதவிப்பொதிக்கு அஸ்திவாரங்களை இட்டனர். அது பின்னர் ஞாயிறன்று நடைபெற்ற மற்றொரு உச்சிமாநாட்டில் அதிகமாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இது பின்னர் திங்கள் அதிகாலையில் ஜப்பானியச் சந்தைகள் திறக்கப்பட்ட முன்னரும் மற்றும் யூரோவிற்கு எதிரான ஊக அலைகள் தொடங்கு முன்னரும் இறுதி வடிவம் பெற்றது.

யூரோப்பகுதி அங்கத்துவ நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நிதிய நாணயம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் 750 பில்லியன் யூரோக்கள் கொண்ட நிதியை நிறுவினர். கடன் திருப்பிக் கொடுத்தலில் இடர்பாடுகளை எதிர்கொள்ளும் யூரோப் பகுதி நாடுகளுக்கு கடன்களைப் புதுப்பிப்பதற்குத் தேவையானால் இப்பணம் பயன்படுத்தப்படலாம். இதைத் தவிர, ஐரோப்பிய மத்திய வங்கி (ECB), வட்டிவிகிதம் விரைவில் அதிகமாவதைத் தடுப்பதற்காக மிக அதிக கடன்பட்டுள்ள நாடுகளில் இருந்து அரசாங்க பங்குப்பத்திரங்களையும் வாங்கியது.

இப்பெரிய நிதியப் பொதியை, நாணய ஒன்றியத்தை மீட்கும் தவிர்க்க முடியாத நடவடிக்கையாக தலைவர்களும், நிதி மந்திரிகளும் முன்வைத்துள்ளனர். அதே போல் மிக அதிகமாக கடன்பட்டுள்ள யூரோப் பகுதி நாடுகளுக்கு ஒரு உதவி என்றும் கூறியுள்ளனர். உத்தியோகபூர்வ அரசியல் சொல்லாட்சியில் இதன் பொருள் “சந்தைகளை அமைதிப்படுத்துதல்”, அவற்றின் “நம்பிக்கையை” மீண்டும் பெறுதல் என்பதாகும். கிரேக்க அரசாங்கத்தின் கடன் மற்றும் யூரோக்கு எதிராக ஏராளமான பணத்தை பந்தயம் கட்டியுள்ள ஊக வணிகர்கள் தங்கள் இழப்புக்களை பொதுமக்களின் செலவில் மீட்டுவிடுவர்.

இக்காரணத்தினால் பங்குச்சந்தைகள் திங்களன்று புதிய மீட்பு நிதியை பாரியளவு விலைகளை ஏற்றியதின் மூலம் கொண்டாடின. கடந்த வியாழன் ஏற்பட்ட பீதிக்குப் பின்னர், அவற்றிற்கு இப்பொழுது தம்பக்கமுள்ள ஐரோப்பிய அரசாங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் மீது போர் தொடுத்து விட்டன என்ற உத்தரவாதம் கிடைத்துவிட்டது.

சக்தி வாய்ந்த யூரோவிற்கு எதிரான ஊக அலை ஜேர்மனிய நிதிய மேற்பார்வைக் குழு Bafin உடைய தலைவர் Jochen Sanioவால் தெளிவாக்கப்பட்டது. பாராளுமன்ற வரவு செலவுத்திட்டகுழுவிடம் கடந்த வாரம் பேசுகையில் Jochen Sanio “ஊகக்காரர்கள் யூரோப் பகுதிக்கு எதிராக ஆக்கிரோஷப்போர் நடத்துவது பற்றி” பேசினார். இதில் பல பத்துமில்லியன்கள் உடைய “கிறுக்குத்தனமான தொகை நிதி” தொடர்புடையது என்று குறிப்பிட்டார். கிரேக்கத்தை பொறுத்த வரை, ஊகக்காரர்கள் கடன் காப்பீடுகளை (CREDIT INSURANCE) பயன்படுத்தினர், மூன்று அல்லது நான்கு மாதங்களில் 500 சதவிகிதம் இலாபத்தை ஈட்ட முடிந்தது என்றும் குறிப்பிட்டார்.

இத்தகைய பெரும் இலாபங்கள் முக்கிய முதலீட்டு வங்கிகளின் இருப்பு நிலைக் குறிப்புக்களிலும் பிரதிபலிக்கின்றன. Deutsche Bank வரிக்கு முந்தைய இலாபமான 2.8 பில்லியன் யூரோவை 2010 முதல் காலாண்டிற்கு பதிவு செய்துள்ளது; இது முதலீட்டின் மீது கிடைத்துள்ள 30 சதவிகித இலாபம் ஆகும். அதே காலாண்டில் தன்னுடைய வரலாற்றில் முதல் தடவையாக கோல்ட்மன் சாஷ்ஸ் ஒவ்வொரு வணிக நாளிலும் இலாபத்தை அறிவித்துள்ளது; பெரும்பாலான தினங்களில் 100 மில்லியன் டாலர் கிடைத்தது.

தொழிலாள வர்க்கம் இப்பொழுது இந்த மாபெரும் தொகை பணத்திற்கு பொதுநலச் செலவு வெட்டுக்கள், ஊதியக் குறைப்புக்கள், வேலையின்மை என்ற முறையில் விலை கொடுக்கவேண்டியுள்ளது. புதிய யூரோ மீட்புப் பொதியை ஒட்டி, ஐரோப்பிய அரசாங்கங்கள் தங்களை முற்றிலும் சர்வதேச நிதிய மூலதனத்தின் தயவில் இருத்திக் கொண்டுள்ளன. தங்கள் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறைகளை அவை பெரிதும் குறைக்காவிட்டால், அடுத்த ஊக அலை தவிர்க்க முடியாமல் தொடரும். அப்பொழுது நிதிய உத்தரவாதங்கள் கோரப்பட்டால், அரசாங்கங்களின் வரவு செலவுத் திட்டங்களில் இருக்கும் பற்றாக்குறை அதிகமாவதுடன், இன்னும் அதிகமான சிக்கன நடவடிக்கைகள் தேவைப்படும்.

எனவே வல்லுனர்கள், யூரோ மீட்புப் பொதி ஐரோப்பிய அளவிலான பரந்த சிக்கன நடவடிக்கையின் ஆரம்பம் என்று ஒப்புக் கொள்கின்றனர். இது ஐரோப்பிய பொதுநல அரசு என்னும் கருத்தை முற்றிலும் சிதைத்துவிடும். இது ஐரோப்பிய ஒன்றியம் வங்கிகள் மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் சக்தி வாய்ந்த பிரிவுகளின் கருவி என்ற தன்மையைத்தான் காட்டும்.

இப்பொதி பற்றி பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டது: “ஐரோப்பிய ஒன்றியத்தில் பெரும்பாலான நாடுகள் வரவிற்குமீறி வாழ்கின்றன. பல ஐரோப்பியர்களும் முன்கூட்டிய ஒய்வு, இலவச பொதுச் சுகாதாரப் பாதுகாப்பு, மற்றும் வேலையின்மை நலனகளை அடிப்படை உரிமைகள் என்று கருதுகின்றனர்….. ஆனால் இப்பொழுது ஐரோப்பியர்கள் சிக்கன நடவடிக்கைகளை ஏற்கவில்லை என்றால், பின்னர் அரசாங்கம் வாங்கிய கடன்களை கொடுக்க முடியாமல் போதல், வங்கிகள் சரிதல் என இதைவிட அதிர்ச்சி தரும் சம்பவங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.”

ஜேர்மனியிலும் பல பொருளாதார வல்லுனர்கள் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை கோரியுள்ளனர். “பொருளாதார அறிவாளிகள்” என்று அழைக்கப்படுபவர்களின் தலைவரான Wolfgang Franz, மீட்புப் பொதி ”யூரோ இல்லத்தில் ஏற்பட்டிருந்த தீயைத்தான் அணைத்துள்ளது”, இனி அனைத்தையும் சீராக்கும் நேரம் வந்துள்ளது என்றார். பொருளாதார வல்லுனர் Kai Carstensen யூரோ நாடுகளில் தீவிர சிக்கன நடவடிக்கைகளின் தேவை உள்ளது என்றார்.“அவை கடன்கள் அனைத்தையும் குறைக்கவில்லை என்றால், மூன்று ஆண்டுகளில் இன்னும் அதிகமாகும்” என்று அவர் கூறினார்.

கிரேக்கத்தில் தொடங்கியது -ஊதியங்களை 30 சதவிகிதம் குறைத்தல், ஓய்வூதியங்கள், நலன்கள் குறைப்பு, பொதுத் துறையில் ஏராளமான வேலைக் குறைப்புக்கள் என- இப்பொழுது ஐரோப்பா முழுவதற்கும் முன்மாதிரியாகிவிட்டது. இந்த நடவடிக்கைகளுக்கான எதிர்ப்புக்கள் ஐரோப்பா முழுவதும் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். ஐரோப்பிய நாடுகளில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் கிரேக்க தொழிலாளர்களுக்கு கட்டாயம் ஆதரவு கொடுக்க வேண்டும் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியப்பட வேண்டும்.

இதற்கு, வரவு செலவுத் திட்ட பற்றாக்குறைகளுக்கு மாற்றீடு ஏதும் இல்லை என்று அறிவித்து, வெட்டுக்களை செயல்படுத்துவதற்கு நிதிய மூலதனத்திற்கு தங்கள் பணிகளை அளிக்கும் தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக ஜனநாயக் கட்சிகள் அனைத்துடனும் முழு முறிவு தேவைப்படும். கிரேக்கத்தில் சமூக ஜனநாயக PASOK கடுமையான சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தும் செயலை எடுத்துக் கொண்டுள்ளது. ஸ்பெயினில் சோசலிச அரசாங்கத்தின் தலைவரான சபாதேரோ, யூரோ மீட்புப் பொதி பற்றிய அறிவிப்பு வந்தவுடன், பொதுப் பணித்துறையில் ஊதிய வெட்டுக்களை அறிவித்தார்: போர்த்துக்கலில் அவருடைய சோசலிச கூட்டாளி சோக்ரட் இதே போன்ற கொள்கையைத்தான் தொடர்கிறார்.

பிரிட்டனில் தொழிற் கட்சியின் ஆதரவுடன் டோரிக்களும் லிபரல் ஜனநாயகவாதிகளும் அரசாங்கத்தின் பொறுப்பை இப்பொழுது எடுத்துக் கொண்டு கடுமையான சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்த உள்ளனர். ஜேர்மனியில், வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா மாநிலத் தேர்தல்களுக்கு பின்னர் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) மீண்டும் அரசாங்கத்தில் பங்கு பெறுவது குறித்து பரிசீலனைகள் நடைபெறுகின்றன. இது புதிய சுற்று சிக்கன நடவடிக்கைகளை சுமத்துவதற்குத்தான். வருங்காலத்தில் நிதியமைச்சராக வரக்கூடும் என்று விவாதிக்கப்படும் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தின்(CDU) வலதுசாரி ரோலண்ட் கொக் ஏற்கனவே கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கு குரல் கொடுத்துள்ளதுடன், அதே போல் சமீபத்திய காலத்தில் கல்வி முறையில் கொண்டுவந்துள்ள அனைத்துச் சீர்திருத்தங்களும் கைவிடப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

தொழிற்சங்கங்கள், இந்த நாடுகள் அனைத்திலும் வெட்டுக்களுக்கு எதிராக வரும் எதிர்ப்புக்களை அடக்குவதில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளன. அதற்காக தொழிலாளர்களை பிளவுபடுத்தி எதிர்ப்பு வலுவற்றதாகச் செய்யப்படுகிறது. அவை முன்பு “இடது” என்று தங்களை அழைத்துக் கொண்ட ஏராளமான குட்டி முதலாளித்துவ அமைப்புக்களின் ஆதரவைக் கொண்டுள்ளன. அவை இன்று ஒரு புரட்சிகர முன்னோக்கை முற்றிலும் நிராகரிக்கின்றன.

வார இறுதியில் ஏற்கப்பட்ட உதவி நிதிப் பொதியுடன் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல் ஒரு ஐரோப்பிய படர்ந்த தன்மையைப் பெறுகிறது. ஒன்றுக்கொன்று நிதி உதவி அளித்தல் தடை செய்யப்பட்டுள்ளது மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியின் சுயாதீனச் செயல்பாடு ஆகிய நிதிய ஒன்றியத்தைக் கட்டுப்படுத்தும் பலவிதிகள் கைவிடப்பட்டன. அரசாங்கம் அதன் சேமிப்புக்கள் பற்றிய இலக்குகளை பூர்த்தி செய்யவில்லை என்றால், மற்றவை அனைத்தும் நேரடியாகப் பாதிக்கப்படும். இது கணிசமாக அழுத்தங்களை ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் அதிகரிக்கும்.

எதிர்வரவிருக்கும் வர்க்கப் போராட்டங்களுக்கு தொழிலாள வர்க்கம் அரசியல் ரீதியாக தயாரிப்பை மேற்கொள்ள வேண்டும். அது வங்கிகளுக்கான மீட்புப் பொதிகளுக்கும், தொடர்பு கொண்ட சிக்கன நடவடிக்கைகளுக்கும் ஆதரவு கொடுக்கும் கட்சிகள் மற்றும் அமைப்புக்களுடனும் முறித்துக் கொள்ள வேண்டும். மற்றும் வர்க்கப் பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும் பிற குட்டி முதலாளித்துவ அமைப்புக்களுடனும் முறித்துக் கொள்ள வேண்டும். இம்மோதல் ஜேர்மனியர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் இடையேயானது அல்ல; அல்லது ஐரோப்பியர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் இடையேயானதும் அல்ல. ஒரு புறம் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கும் மறுபுறம் மூலதனம் மற்றும் அதன் அரசியல் ஆதரவாளர்களுக்கும் இடையே நடப்பது ஆகும்.

இத்தாக்குதல்களுக்கு எதிரான எதிர்ப்பு அனைத்து மட்டங்களிலும் அமைக்கப்பட வேண்டும். எதிர்கால வறுமை, அடக்குமுறை, வேலையின்மை, பெருகிய தேசிய அழுத்தங்கள் ஆகிவற்றிற்கு ஒரே மாற்றீடு ஒரு புரட்சிகர சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் அனைத்து ஐரோப்பிய தொழிலாளர்களையும் ஒன்றுபடுத்துவதுதான். அதாவது அனைத்துக் கடன்களும் நிராகரிக்கப்பட வேண்டும், வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் சமூக உடமைகளாக்கப்பட்டு தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்படுதல், ஊக வணிக இலாபங்களை பறிமுதல் செய்தல் மற்றும் பெரும் வருமானம், சொத்ததுகள் ஆகியவற்றின் மீது அதிகபட்ச வரிவிதிப்பு ஆகியவை தேவையாகும்.

ஐரோப்பாவை முற்போக்கான முறையில் ஐக்கியப்படுத்துதல் என்பது புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், ஒரு ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகள் என்ற வடிவத்தின் மூலம்தான் அடையப்பட முடியும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஒன்றுதான் அத்தகைய முன்னோக்கை, உலகம் முழுவதும் முன்வைக்கும் அரசியல் போக்காகும். தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் விமர்சனரீதியான புத்திஜீவிகள் அனைவரையும் எங்கள் வேலைத்திட்டத்தை படிக்குமாறும், உலக சோசலிச வலைத் தளத்தை வாசிக்குமாறும், அனைத்துலகக் குழுவில் இணையுமாறும் அழைப்பு விடுகிறோம்.