சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

"Anti-speculation" measures sharpen euro crisis

"ஊகவணிக-எதிர்ப்பு" நடவடிக்கைகள் யூரோ நெருக்கடியை தீவிரப்படுத்துகின்றன

By Stefan Steinberg
21 May 2010

Use this version to print | Send feedback

மே 18ம் திகதி அன்று ஆசியாவில் யூரோ ஒரு நான்கு ஆண்டுகளில் குறைவான 1.21 அமெரிக்க டாலர் என்ற மதிப்பிற்கு வந்தது. இதற்குக் காரணம் ஐரோப்பிய ஒன்றியமும் ஜேர்மனியும் சில குறிப்பிட்ட நிதிய ஊக வகைகளைக் கட்டுப்படுத்துவதை இலக்காகக் கொண்டு எடுத்த நடவடிக்கைகளுக்கு சந்தையின் எதிர்மறை முடிவாகும். அதே தினத்தில் ஐரோப்பிய ஒன்றிய நிதி மந்திரிகள் ஐரோப்பாவில் செயல்படும் தனியார் முதலீட்டு நிதிகள் மற்றும் தனியார் பங்கு நிதிகளைக் கட்டுப்படுத்தும் வரைமுறைகளுக்கு உடன்பட்டனர். இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் எதிர்ப்பிற்கு இடையே இந்த ஐரோப்பிய ஒன்றிய அறிக்கை ஏற்கப்பட்டது.

அமெரிக்க நிதி மந்திரி டிம் கீத்னர் முன்னதாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கு இந்த புதிய சட்டவரைவு விதிகள் காப்புவரிகளின் தன்மையைக் கொண்டுள்ளன என்று புகார் செய்தார். பிரிட்டனின் நிதி மந்திரி ஜோர்ஜ் ஓஸ்போர்ன் அவருடைய சமீபத்திய நியமனத்திற்கு பின்னர் முதல் தடவையாக ஒரு ஐரோப்பிய ஒன்றியக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோது ஐரோப்பிய ஒன்றிய சட்டவிதியை தான் எதிர்ப்பதை தெளிவுபடுத்தினார். தற்பொழுது ஐரோப்பாவின் தனியார் முதலீட்டு நிதித்துறையின் 80 சதவிகிதம் லண்டனில் இருந்து செயல்படுகிறது.

மற்றொரு நிகழ்வுப்போக்கில், பேர்லினில் உள்ள ஜேர்மனியக் கட்டுப்பாட்டு அமைப்பான Bafin செவ்வாயன்று "அப்பட்டமான குறைந்த விற்பனை" (naked short selling) என்பதின் மீது ஒரு தடையை அறிமுகப்படுத்தியது: இதன்படி ஒரு பத்திரம் அல்லது பங்கு, பத்திரக் கடன் காப்புறுதி வாங்கப்படாமல் அல்லது காப்புறுதி வாங்கலாம் என்பதை உறுதிப்படுத்தாமலே குறைந்த விலைக்கு விற்கப்பட்டு வந்தது. யூரோவின் மதிப்பின் சரிவிற்கு இணையாக, குறிப்பாக ஜேர்மனிய தடைக்கு விடையிறுக்கும் வகையில் புதனன்று ஐரோப்பியச் சந்தைகள் பெரும் சரிவைக் கண்டன. செவ்வாயன்று ஐரோப்பிய நிதி மந்திரிகள் ஏற்றுக் கொண்ட பரிந்துரைகள், ஒருதலைப்பட்சமாக ஜேர்மனி "அப்பட்டமான குறைந்த விற்பனையை" தடை செய்தது, மற்றும் ஜேர்மனியில் அனைத்துக் கட்சிகளும் நிதிய நடவடிக்கைகளில் செயற்பாட்டு வரிக்கு ஒருமித்த ஒப்புதல் கொண்டுள்ளது அனைத்திற்கும் முன்னதாக முக்கிய ஐரோப்பிய அரசியல்வாதிகள் தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டிருந்தனர். அதில் கிரேக்கப் பொருளாதார நெருக்கடியை ஒட்டி தனியார் முதலீட்டு நிதிகள் மற்றும் பிற ஊக வணிகச் செயல்கள் பங்கு பற்றி குறைகூறப்பட்டிருந்தது. கிரேக்க நெருக்கடியோ ஒரு சில வாரங்களில் முழு ஐரோப்பிய ஒன்றியத்தையும் பாதிக்கும் நெருக்கடியாக வளர்ந்து விட்டிருந்தது.

மே 6ம் திகதி ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெல் ஒதுக்கு நிதியங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படவில்லை என்பது ஒரு "பெரும் ஊழல்" என்று அறிவித்திருந்தார். "சில விதங்களில் இது சந்தைகளுக்கு எதிரான அரசியல் வாதிகளின் மோதல், இதில் நான் வெற்றிகாண உறுதி கொண்டுள்ளேன்." ஒரு சில நாட்களுக்கு பின்னர், ஸ்வீடனின் நிதி மந்திரி கிரேக்க நெருக்கடியின் தொடர்பிலான யூரோ மதிப்புச் சரிவு பற்றி ஊக வணிகம் நடத்தும் முதலீட்டு நிறுவனங்கள் "ஓநாய் கூட்டங்கள்" போல் என்று ஒப்பிட்டார். அதே நேரத்தில் Bafin உடைய தலைவர் Jochen Sanio, ஜேர்மனிய பாராளுமன்றத்தின் வரவு-செலவுத் திட்டக் குழுவில் ஐரோப்பா "ஊக வணிகர்கள் யூரோப் பகுதிக்கு எதிராக ஆக்கிரமிப்புப் போரில் ஈடுபட்டுள்ளதை" ஐரோப்பா எதிர்கொண்டிருக்கிறது என்றார்.

இவ்வார ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை நிதிய சந்தைகளை கட்டுப்படுத்தும் முக்கிய முன்னோக்கிய அடி என எடுத்துக்காட்ட முனைந்தன. இதிலிருந்து ஒன்றும் நடைபெறப்போவதில்லை. இவ்வாறான நடவடிக்கைகள் முக்கியமான அரசியல் நோக்கமுடையவையும் மற்றும் முற்றிலும் போலியானவையாகும். தற்போதைய நெருக்கடிக்காலம் முழுவதும் ஜேர்மனியும் ஏனைய ஐரோப்பிய அரசுகளும் நிதிய சந்தைகளின் கட்டளைகளை எவ்வித தடையற்று தொடர்ந்ததுடன் தமது செந்த வங்கிப்பிரிவுகளின் நலன்களை பாதுகாப்பதில் தீர்மானகரமாக இருந்தன.

இவ்விதத்தில்தான் சமீபத்திய ஐரோப்பிய ஒன்றிய, ஜேர்மனிய பிரேரணைகளுக்கு பின்னர் நிலைமை உள்ளது. இக்கருத்தை தெளிவாக்கும் விதத்தில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர் Jean-Paul Gauzes செவ்வாயன்று ஐரோப்பிய நிதி மந்திகள் திட்டம் பற்றி கூறியதாவது: "இந்த நிலைப்பாடு சிறந்த வெளிப்படைத் தன்மையையும் சிறந்த முதலீட்டாளர் பாதுகாப்பையும் உறுதியாக்கும். அதே நேரத்தில் உண்மையான பொருளாதார ஏற்றத்திற்கு நிதியத்துறை உழைக்கும்போது அதற்கு ஆதரவாக அதன் பக்கம் இருக்கும்."

யூரோ மற்றும் ஐரோப்பிய பங்குகளின் மதிப்பில் இந்த வாரம் ஏற்பட்ட சரிவு, சமீபத்திய ஜேர்மனிய மற்றும் ஐரோப்பிய பிரேரணைகள் ஊகவகை முதலீட்டு வகைகளில் உண்மையான விளைவைக் கொடுக்கும் என்ற சந்தைக் கவலைகளுடன் எந்த தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. எந்தப் புதிய ஐரோப்பிய சட்டம் வந்தாலும், ஒருவேளை புதிய இடங்களில் இருந்து நிதியப்பிரிவுகள் தங்கள் செயல்களைத் தொடர்ந்து செய்ய முடியும் என்பதை பல சந்தை உள்வட்டத்தினர் ஒப்புக்கொண்டுள்ளனர். நிதியப் பகுப்பாய்வாளர்கள் அதேபோல் ஜேர்மனிய "அப்பட்ட குறைந்த விற்பனை மீதான" தடையை சிறிதும் பொருட்படுத்தவில்லை. பெரும்பாலான அத்தகைய வணிகம் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் நடக்கின்றன; ஜேர்மனியில் அத்தகைய ஒப்பந்தங்கள் மீது அதிக வணிகம் கிடையாது. உலகமயாமாக்கப்பட்டுள்ள நிதிய சூழ்நிலையில், ஜேர்மனிய தடை என்பது அதிக விளைவுகளைக் கொடுக்காது. நாட்டின் மிகப் பெரிய வங்கியான Deutsche Bank அதன் "அப்பட்டமான குறை விற்பனையை" அதன் லண்டன் கிளையில் இருந்து செய்கிறது; தடையினால் சிறிதும் பாதிப்பைப் பெறுவதில்லை.

சமீபத்திய ஐரோப்பிய மற்றும் ஜேர்மனிய நடவடிக்கைகளுக்கு எதிர்மறையான சந்தை பிரதிபலிப்பிற்கு உண்மைக் காரணம், ஜேர்மனி மற்றும் பிற ஐரோப்பிய அரசாங்கங்கள் வங்கிகளுக்கு எதிராக பெருகியுள்ள பொதுமக்கள் விரோதப் போக்கினை அமைதிப்படுத்த முனைவதுடன், அதே நேரத்தில் நிதிய மூலதனம் கோரும் "வரவு-செலவுத் திட்டத்தை உறுதிப்படுத்தும்" கொள்கைகளை செயல்படுத்துவதற்கு போதுமான உறுதியை கொண்டிருக்கவில்லை, அதாவது கடுமையான சிக்கன நடவடிக்கைகளை ஐரோப்பா முழுவதும் ஏற்கனவே கிரேக்கம், ஹங்கேரி, ருமேனியா, லாட்வியா ஆகியவற்றில் சுமத்தப்பட்டுள்ளதை போல் சுமத்தவில்லை¨ என்ற சர்வதேச முதலீட்டாளர்களின் அச்சங்கள்தான். அதே நேரத்தில் முதலீட்டாளர்கள் ஐரோப்பிய அரசாங்கங்கள் ஒரு பொது நிதிய வரவு-செலவுத் திட்ட மூலோபாயத்தை வளர்க்கும் முயற்சிகளில் பெருகிய சிதைந்த தன்மை பற்றியும் பெரும் கவலை கொண்டுள்ளனர். "அப்பட்டமான குறைந்த விற்பனை மீது" அதன் ஐரோப்பிய பங்காளிகளை கலந்தாலோசிக்காது ஒருதலைப்பட்சமாக ஜேர்மனியால் செயல்படுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் தடை அதன் நெருக்கமான அண்டை நாடுகளான பிரான்ஸ், ஆஸ்திரியா ஆகியவற்றிடம் இருந்துகூட உடனடியாக குறைகூறலை பெற்றது.

ஜேர்மனிய மற்றும் பிற ஐரோப்பிய அரசாங்கங்களின் சங்கடம் அவை 2008 நிதியச் சரிவின் விளைவுகளை தொடர்ந்து மகத்தான முறையில் வங்கிகளுக்கு பிணை எடுத்ததை ஈடுசெய்ய தங்கள் வரவு-செலவுத் திட்டங்களில் மிக அதிக குறைப்புக்கள் இப்பொழுது கட்டாயமாக செயல்படுத்த வேண்டிய நிலையில் இருப்பதுதான். ஊக வணிகக்காரர்களுக்கு எதிரான தண்டனை நடவடிக்கைகளை தாங்கள் எடுப்பது போன்ற உணர்வைக் காட்ட முற்பட்டுள்ளனர்; ஆனால் அவர்களுடைய நிகழ்ச்சி நிரல் வங்கிகளுடைய ஆணைகளை செயல்படுத்துவது என்றுதான் உள்ளது.

புதனன்று ஜேர்மனிய பாராளுமன்றத்தில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய-சர்வதேச நாணய நிதிய ஒரு ட்ரில்லியன் மீட்புப் பொதியில் இருந்து கிரேக்கத்திற்கு கடன் கொடுப்பது பற்றிய விவாதத்தில் இது தெளிவாயிற்று. வெள்ளியன்று ஜேர்மனியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்க 123 பில்லியன் பங்கை ஐரோப்பிய மீட்புப் பொதிக்கு கொடுக்க வாக்களிக்க உள்ளனர். விவாதத்தின்போது, ஜேர்மனிய அதிபர் நெருக்கடியின் அவசரத் தன்மையை அடிக்கோடிட்டு, ஐரோப்பாவின் வருங்காலமே ஆபத்திற்கு உட்பட்டுள்ளது என்று வாதிட்டதுடன், "யூரோவை இப்பொழுது எதிர்கொண்டுள்ள நெருக்கடி கடந்த பல தசாப்தங்களில் ஐரோப்பா எதிர்கொண்டுள்ள சோதனைகளில் மிகப் பெரியதாகும். இது வாழ்வா, சாவா பிரச்சினை ஆகும்... இது கடக்கப்பட வேண்டும்... யூரோ தோல்வியுற்றது என்றால், பின் ஐரோப்பா தோல்வியுறும்" என்று அவர் கூறினார்.

இந்த நெருக்கடியை சமாளிப்பதற்கு ஐரோப்பாவிற்கு "உறுதித்தன்மை, வளர்ச்சி உடன்பாடு பற்றிய விரிவான சீர்திருத்தம் தேவை. அத்துடன் ஒரு குறிப்பிட்ட முக்கியமான இலக்கை அடைவதின் நோக்கத்தை கொண்டு விதிகள் கடுமையாக்கப்பட வேண்டும். அதாவது அங்கத்துவ நாடுகள் முறையான வரவு-செலவுத் திட்ட நிர்வாகத்திற்கு பொறுப்பை ஏற்க வேண்டும்." இந்த நிகழ்ச்சி நிரலைத்தான் வங்கிகளும் சர்வதேச நிதிய அமைப்புக்களும் கோருகின்றன. ஜேர்மனிய அரசாங்கம், ஒரு ஐரோப்பிய ஒன்றிய சிறப்புக் கூட்டத்தில் வெள்ளியன்று, ஐரோப்பிய நாடுகளுக்கு "கடன் தடை" ஒன்றிற்கான நடவடிக்கைகளை முன்வைக்கும் என்று மேர்க்கெல் தொடர்ந்து அறிவித்தார். இதே போன்ற "கடன் தடை", எந்த அளவிற்கு ஒரு நாடு கடன் வரம்புகளை கொள்ளலாம் என்பதை உறுதியாக நிர்ணயிப்பது, அதையொட்டி அரசாங்கங்கள் கடுமையான செலவுக்குறைப்புகளை சுமத்துவது என்பது கடந்த ஆண்டு முந்தைய பெரும் கூட்டணி அரசாங்கத்தால் ஜேர்மனியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஜேர்மனிய அரசாங்கத்தின் திட்டங்கள் பற்றிய விவரங்கள் ஜேர்மனியின் வணிக ஏடான Handelsblatt க்கு இந்த வாரம் முன்னதாகக் கசியவிடப்பட்டிருந்தது. நிதிய அமைச்சகத்தின் ஒரு இரகசிய ஆவணத்தின்படி, பேர்லின் ஐரோப்பிய மத்திய வங்கி அல்லது "ஆய்வுப் பயிலகங்களின் சிறப்புக் குழு" ஒன்றினால் யூரோப்பகுதி நாடுகளின் உறுதிப்பாட்டு திட்டங்கள் "கடுமையான, சுதந்திரமான ஆய்விற்கு உட்படுத்தப்பட வேண்டும்" என்று கோர இருப்பதாகக் கூறியுள்ளது. இதன்பின், இந்த ஆவணம் அத்தகைய சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தாமல் இருக்கும் நாடுகளுக்கு எதிராக கடுமையான அபராத நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோருகிறது; அவற்றுள் யூரோப் பகுதி நாடுகளுக்கு கட்டமைப்பு நிதியளித்தலை தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும்/அல்லது ஐரோப்பிய குழுவில் வாக்கு அளிக்கும் உரிமையை 12 மாத காலத்திற்கு நிறுத்தி வைத்தல் ஆகியவை அடங்கும். கடைசிப் பட்சமாக, ஆவணம் அங்கத்துவ நாடு திவால் அடைவது பற்றியும் குறிப்பிட்டுள்ளது; அது தவறிழைக்கும் நாடு "ஐரோப்பிய ஆணைக் குழுவின் பாதுகாப்பிற்கு உட்பட்ட நாடாக" மாற்றப்படும் என்று கூறியுள்ளது.

இந்த முற்றிலும் ஜனநாயக விரோத முன்மொழிவுகள் அனைத்தும் ஜேர்மனியின் முக்கிய வணிக நாளேட்டால், "மிகவும் தேவையான பொருளாதார முன்மாதிரி" என்று பாராட்டப்பட்டன. மேலும் நாளேடு "இவ்விதத்தில் ஐரோப்பா தொடர்ந்தால் அது அனைத்து நலன்களையும் பெறும். ஜேர்மனி தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளது. "ஊக வணிகக்காரர்களுக்கு எதிரான போர்" என்ற கபட நாடகத்தின் பின்னணியில், பேர்லின் அரசாங்கம் ஓரளவு சர்வாதிகார அதிகாரங்களை அறிமுகப்படுத்தி, 1930களின் புரூனிங் அரசாங்க காலத்திற்குப்பின் காணப்படாத அளவிற்கு ஜேர்மனியிலும் ஐரோப்பா முழுவதும் வங்கிகளின் சார்பில் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்த முனைப்புடன் உள்ளது.