சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil :

2-The origins of Australian exceptionalism

ஆஸ்திரேலிய தனிச்சிறப்பு வாதத்தின் மூலங்கள்

Use this version to print 

22 உலக சோசலிச புரட்சிக்கான வேலைத்திட்டத்திற்கு ஆஸ்திரேலிய தொழிலாளர்களின் ஆதரவை வெல்வதற்கான போராட்டத்திற்கு ஆஸ்திரேலிய தனிச்சிறப்பு வாதத்தின் தேசியவாத கோட்பாடுகளுக்கு எதிரான தளர்ச்சியற்றதொரு போராட்டம் அவசியமாய் இருக்கிறது, அவை வரலாற்றுரீதியாக சோசலிச நனவின் அபிவிருத்திக்கு முக்கிய கருத்தியல் முட்டுக்கட்டையை உருவாக்கியிருக்கின்றன.

23. ஆஸ்திரேலிய தனிச்சிறப்பு வாதம் எப்போதும் ஒரு புதிராய்த் தான் இருந்து வந்திருக்கிறது. ஆனால் சக்திவாய்ந்த சடப்பொருள் காரணிகளின் ஒரு சேர்க்கையின் காரணத்தால் அது பல தசாப்தங்கள் தாக்குப் பிடித்து வந்திருக்கிறது. புவியியல்ரீதியாக தனிமைப்பட்ட நிலை மற்றும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துடன் அதன் குடியேற்ற நாட்டுக்கு இடையிலான பொருளாதார உறவில் இருந்து பாயும் சடப்பொருள் அனுகூலங்கள் (இதில் கம்பளி மற்றும் பிற ஏற்றுமதிகள் ஒப்பீட்டளவில் உயர்ந்ததொரு வாழ்க்கைத் தரத்திற்கான அடிப்படையை உருவாக்கின) ஆகியவை ஒரு தனிமைப்பட்ட கண்ணோட்டத்தை ஊக்குவித்தன. பிரிட்டிஷ் குடியேற்ற காலத்தின் ஒரு நூற்றாண்டிற்கு பின்னர், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி உலகில் மிக உயர்ந்த இடங்களில் ஒன்றைப் பிடித்திருந்தது. பிரிட்டன் மற்றும் அமெரிக்காவை விட சுமார் 40 சதவீதம் அதிகமானதாகவும் மற்ற மேற்கத்திய நாடுகளை விட இருமடங்கானதாகவும் இருந்தது. சமூக நலன்கள் மற்றய முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் அபிவிருத்தியுறும் முன்னதாக ஆஸ்திரேலியாவில் வழங்கப்படுவதை இந்த செல்வம் சாத்தியமாக்கியது.

24. ஒப்பீட்டளவில் உயர்ந்த அளவிலான வாழ்க்கைத் தரங்கள் குறிப்பிடத்தக்க அரசியல் சலுகைகள் வழங்கப்படுவதற்கும் வழிவகை செய்தது. ஆர்குஸ் செய்தித்தாள் 1857ல் குறிப்பிட்டது போல, காலனி நாடுகளில் சமூக நிலைமைகள் ஐரோப்பாவினுடையதில் இருந்து வேறுபட்டதாய் இருந்தது. மொத்த மக்கள்தொகையில் பரம ஏழைகளின் எண்ணிக்கை மிகக் குறைவாய் இருந்தது, "அபாயமான வர்க்கம்" ஏதும் இருக்கவில்லை. இதனையடுத்து, "பணக்கார வர்க்கங்கள்" "வயதுவந்தவர்கள் அனைவரும் வாக்களிப்பதைக் கண்டு அஞ்சுவதற்கு எதுவுமின்றி" இருந்தது. அவர்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதை வேண்டுமானால் அது தடுக்கலாமே தவிர "அவர்களது உரிமைகளில் அது தலையிடும் அபாயம் எதுவும் இல்லை".[5] ஐரோப்பாவில் இருந்து மாறுபட்டு, இங்கு ஜனநாயக உரிமைகளுக்கான புரட்சிகர போராட்டம் எதுவும் இல்லை. 1855 ஆரம்ப காலத்தில், முந்தைய டிசம்பரில் யுரேகா கலகத்திற்கு இட்டுச் சென்றிருந்த பலாரட் தங்கவயல்களிலான மோதல்கள் குறித்து எழுதுகையில் மார்க்ஸ், அதனைப் பற்றவைத்த கிளர்ச்சியானது "நீண்டகால சலுகைகள்" மூலம் மட்டுமே அடக்கக்கூடியதாக இருக்கும் என்று குறிப்பிட்டார். மார்க்சின் கணிப்பு நிரூபணமானது. 1850களில் ஜனநாயக சலுகைகள் வழங்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து வாக்குரிமை விரிவாக்கமும் நிகழ்ந்தது. 1880களின் இறுதியில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியம் தொடக்கி வைக்கப்பட்டது, 1890வாக்கில், தொழிற்கட்சி ஸ்தாபிக்கப்பட்டபோது, ஆஸ்திரேலியாவுக்குள் பிரிட்டிஷ் குடியேற்றவாசிகளால் கொண்டு வரப்பட்ட சார்டிச இயக்கத்தின் கோரிக்கைகள் ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் போராட்டம் இல்லாமலேயே பெருமளவில் நனவாகின. ரஷ்ய தொழிலாள வர்க்கம் "துயர வலி" மூலமாகத் தான் மார்க்சிசத்திற்கு உள்ளே நுழைந்தது என்கிற உண்மையை லெனின் ஒருமுறை குறிப்பிட்டுக் காட்டினார். ரஷ்யாவிலும் ஜேர்மனியிலும், ஜனநாயகத்திற்கான போராட்டமானது ஒரு கோட்டைச்சுவர் சூழ்ந்த பிற்போக்குவாத அரசுக்கு எதிரான போராட்டத்தினால் பெற்றவை ஆகும். லியோன் ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டது போல, ரஷ்யாவில் ஜனநாயகத்தை சாதிக்க மாபெரும் புரட்சிகர தூக்கிவீசுதல்" அவசியமாயிருந்தது என்றால், ஆஸ்திரேலியாவிலோ நிலைமைகள் முற்றிலும் மாறுபட்டதாய் இருந்தன: "ஆஸ்திரேலிய ஜனநாயகம் ஒரு புதிய கண்டத்தின் கன்னிப் பூமியில் இருந்து உயிர்ப்புடன் வளர்ந்தது....அத்துடன் உடனடியாக ஒரு பழமைவாத தன்மையை பெற்றுக் கொண்ட அது தனக்குள் இளமையான ஆனால் சற்று சிறப்புரிமை பெற்ற பாட்டாளி வர்க்கத்தை அடிபணியச்செய்து கொண்டது."[6]

25. ஆஸ்திரேலிய தனிச்சிறப்பு வாதம் தனது உருவடிவத்தை தொழிற் கட்சியிலும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திலும் கண்டது. தனது வெகு ஆரம்ப மூலங்களில் இருந்தே முதலாளித்துவ அரசுடன் நெருக்கமாக தொடர்புபட்டு திட்டவட்டமான சடப்பொருள் சிறப்புரிமைகள் மீது தங்கியிருந்ததான தொழிற்கட்சி அதிகாரத்துவம், எல்லாவற்றிற்கும் மேலாய் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக் காலங்களில் மார்க்சிசம் மற்றும் சோசலிச சர்வதேசியம் ஆகிய "வெளிநாட்டு" தத்துவங்களை எதிர்கொள்வதற்கான கருத்தியல் மற்றும் சடப்பொருள் சக்திகளை திரட்டுவதில் முக்கியமான பாத்திரத்தை ஆற்றியிருக்கிறது.

26.தேசியவாத பிரமைக்கு மாறாய், ஆஸ்திரேலிய முதலாளித்துவம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் எழுச்சி என்பது சர்வதேச நிகழ்போக்கின் விளைவாகத் தான் இருந்தது, இருந்து வந்திருக்கிறது. 1788ல் ஆஸ்திரேலிய குடியேற்றமானது பிரிட்டிஷ் முதலாளித்துவத்தின் விரிவாக்க இயக்கத்தில் இருந்து விளைந்ததாகும்; அந்த சமயத்தில், கிழக்கில் வர்த்தகம் மற்றும் வணிக பரிவர்த்தனைகளுக்கான புதிய சாத்தியக் கூறுகளை திறந்து விடுவதற்கான உந்துதலும், அத்துடன் கடல் போக்குவரத்து முன்னேற்றங்களின் காரணமாக சாத்தியமாகியிருந்த பசிபிக் பகுதி வளங்களை சுரண்டும் சிந்தனையும் இதன் பாகமாய் இருந்தன. வரலாற்று நிகழ்போக்கு குறித்த மார்க்சிச அணுகுமுறைக்கான கட்டமைப்பை ஸ்தாபித்து ட்ரொட்ஸ்கி எழுதினார்: "ஆஸ்திரேலியாவெங்கிலும் அமைக்கப்பட்டிருக்கும் ரயில்பாதைகள் எல்லாம் ஆஸ்திரேலிய பூர்விகக் குடிகளது அல்லது பிரெஞ்சு புரட்சி சகாப்தத்துடன் தொடங்கி ஆங்கிலேயப் பெருநகரங்களால் ஆஸ்திரேலியாவுக்குக் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்ட குற்றவாளிகளின் முதல் தலைமுறையினது வாழ்க்கை நிலைமைகளில் நேர்ந்துள்ள இயல்பானபுறவளர்ச்சி அல்ல. உலக அளவில் நிகழ்ந்திருக்கும் வரலாற்று நிகழ்வுப்போக்கின் பார்வையில் இருந்து மட்டுமே ஆஸ்திரேலியாவின் முதலாளித்துவ அபிவிருத்தி இயல்பான ஒன்றாக இருக்கிறது. வேறுபட்டதொரு அளவில், ஒரு தேசிய அளவில், பிராந்திய அளவில் பார்க்கத் தலைப்பட்டால், பொதுவாக, நமது சகாப்தத்தின் முக்கிய சமூக வெளிப்பாடுகளில் ஒற்றை நிகழ்வை பகுப்பாய்வு செய்வதும் கூட சாத்தியமற்றது."[7] .

27. குடியேற்றமானது வர்த்தக விரிவாக்கத்துடன் பிணைந்திருந்த நிலையில், பிரிட்டனில் தொழில்துறை முதலாளித்துவத்தின் எழுச்சி புதிய ஆஸ்திரேலிய காலனிகளுக்கு நீண்டகால மாற்றங்களைக் கொண்டு வந்தது. 1820களில் பரந்த நிலப்பரப்புகள் ஆடுகள் மேய்வதற்கான மேய்ச்சல் நிலங்களாய் மாற்றம் கண்டன, பிரிட்டிஷ் ஆலைகளுக்கு கம்பளி உருவாக்கும் பொருட்டு. பூர்வீகக் குடியினருக்கு எதிரான ஒரு படுகொலைக்கு இது இட்டுச் சென்றதுடன், அந்த மக்கள் கூட்டம் நோயைப் பரப்புவது, விஷமளிப்பது மற்றும் சுட்டுக் கொல்வதன் மூலம் நாட்டிலிருந்து"காலி செய்யப்பட்டது", 20ம் நூற்றாண்டு வரையும் விரிவுபட்டு இந்த பிரச்சாரம் நிகழ்த்தப்பட்டிருந்தது.

28. பூர்வீகப் பழங்குடி மக்களின் மீது தொடுக்கப்பட்ட வன்முறை என்பது வெறுமனே ஒரு கோட்பாடு அல்ல. நிலத்தை தனியார் பறிமுதல் செய்வதில் தொடங்கி, ஸ்தாபிக்கப்பட்டுக் கொண்டிருந்த புதிய முதலாளித்துவ சொத்துடைமை உறவுகளின் வெகு இயல்பில் அது வேரூன்றி இருந்தது. தனியார் உடைமை மற்றும் விலக்கிவைத்தலை அடிப்படையாகக் கொண்ட இந்த புதிய சமூக ஒழுங்கு, பூர்வீகப் பழங்குடியினத்தின் வேட்டையாடி-சேகரித்து வாழும் சமூகத்தின் சமூக உறவுகளுடன் கொண்டிருந்த இயல்பான இணக்கமின்மையின் குருதிதோய்ந்த வெளிப்பாடாய் இது இருந்தது. மற்ற எல்லா இடங்களிலும் போலவே, ஆஸ்திரேலியாவிலும் தன்னுடைய ஒவ்வொரு ஊற்றிலும் இருந்து குருதி சொட்டிக் கொண்டிருந்த நிலையில் தான் மூலதனம் எழுச்சியுற்றது.

29. இங்கு நாடுகடத்தப்பட்ட குற்றவாளிகள் தான் புதிய காலனிகளுக்கான ஆரம்பகட்ட தொழிலாளர் படையாய் அமைந்தனர். ஆனால், 19ம் நூற்றாண்டின் மத்தியகாலகட்டத்தில், 1850களிலான தங்க வேட்டை பயணங்கள் பெருகியதால் மக்கள்தொகை குறிப்பிடத்தக்க மட்டத்திற்கு விரிவாக்கம் பெற்றிருந்தது. 19ம் நூற்றாண்டின் பிந்தைய தசாப்தங்களில் பெரிய அளவிலான முதலாளித்துவ உற்பத்தி அபிவிருத்தியுற்றதை அடுத்து சிறு விவசாயி மற்றும் சுரங்கதாரர்களுக்கான வாய்ப்புகள் மூடின, இது நகரங்களில் தொழிலாள வர்க்கத்தின் வளர்ச்சிக்கு இட்டுச் சென்றது. கம்பளி மற்றும் மற்ற ஆரம்பகால தொழில்துறைகளின் முக்கியத்துவம் இருந்தாலும் கூட, ஆஸ்திரேலியா உலகின் மிகவும் நகரமயப்பட்ட நாடுகளில் ஒன்றாய் இருந்தது.

தொழிற்கட்சியும் "வெள்ளை ஆஸ்திரேலியா"வும்

30. தொழிலாள வர்க்கத்தின் விரிவாக்கம் தொழிற்சங்க உறுப்பினர்களின் அளவை அதிகரிக்கவும் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கான கோரிக்கைகளுக்கும் இட்டுச் சென்றது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஊதியம் அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து NSW வர்த்தகங்கள் மற்றும் தொழிலாளர் கவுன்சில் ஜனவரி 1890 இல் அடுத்து வந்த பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வேட்பாளர்களை நிறுத்தவும் தொழிற்கட்சிக்கான ஒரு அரசியல் தளத்தை உருவாக்கவும் தீர்மானம் கொண்டது. அந்த வருடத்தின் பிந்தைய பகுதியில் உலகளாவிய மந்தநிலை தோன்றி, கம்பளியின் விலையிலும் அடிப்படை உணவுப் பொருட்களின் ஏற்றுமதியிலும் வீழ்ச்சி ஏற்பட்டதை அடுத்து, வர்க்க மோதலின் வெடிப்பு வெளிப்பட்டது, முதலாளிகள் "ஒப்பந்த சுதந்திரம்" என்கின்ற சுலோகத்தின் கீழ் புதிதாய் உருவாகியிருந்த சங்கங்களை நொருக்க தலைப்பட்டனர். கடல்சார் தொழிலாளர் வேலைநிறுத்தமாக 1890 ஆகஸ்டில் தொடங்கியது 50,000 தொழிலாளர்கள் இரண்டு மாதங்களுக்கும் அதிகமானதொரு காலத்திற்கு பங்கேற்ற தொழில்துறை மோதலாக விரிவுற்றது. செய்தி அறிக்கைகள் எல்லாம் அதனை 1871 பாரிஸ் கம்யூன் உடன் ஒப்பிட்டதோடு "ஒரு வர்க்கத்திற்கு எதிராய் இன்னொரு வர்க்கத்தின் ஆயுதமேந்திய கிளர்ச்சி" குறித்துப் பேசின.

31. ஆரம்ப வேலைநிறுத்த இயக்கம் தோற்கடிக்கப்பட்டு விட்டது, ஆனால் அடுத்த நான்கு வருடங்களுக்கு தொடர்ந்து வந்த கொந்தளிப்பான போராட்டங்கள் பின்தொடர்ந்தன. இந்த யுத்தங்கள் எல்லாம் தொழிலாள வர்க்கத்தின் போராடத்தயாராயிருக்கும் குணம் மற்றும் ஆளும் வர்க்கத்தின் பலவீனம் ஆகிய இரண்டையும் வெளிப்படுத்தின. பிரான்ஸ் அல்லது அமெரிக்காவில் இருந்த தங்களது சகாக்கள் போல் அல்லாமல், வளர்ந்து வந்த ஆஸ்திரேலிய முதலாளித்துவ வர்க்கம் தான் திரும்புவதற்கென புரட்சிகர அல்லது ஜனநாயக பாரம்பரியங்கள் எதையும் கொண்டிருக்கவில்லை - அதன் மூலங்கள் குற்றம்சுமத்தப்பட்ட தொழிலாளர்களை சுரண்டி மற்றும் பூர்வீக பழங்குடி மக்களை படுகொலை செய்த ரும் கலகத்தில் (Rum Rebellion) இருந்தன. அல்லது தான் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராய் திருப்புவதற்கு ஏதுவாக ஒரு பெரும் விவசாய வர்க்கமும் அதற்கு இல்லை. நூறாண்டு பழைமையான நிலம் மற்றும் சொத்துடைமை உரிமைத்துவத்தில் அது வேரூன்றி இருக்கவில்லை, அதன் ஆட்சியும் திருச்சபையால் ஆசிர்வதிக்கப்பட்டதாகவும் பாரம்பரியத்தால் புனிதப்படுத்தப்பட்டதாகவும் இல்லை, மாறாக அது தொழிலாள வர்க்கம் தோன்றிய அதே சமயத்தில் தான் தோன்றியிருந்தது, அதனுடன் தான் இப்போது நேரடியாக மோதலுக்குட்பட்டிருந்தது. இந்த நிலைமைகளின் கீழ், முதலாளித்துவம் தனது ஆட்சிக்கு தொழிலாள வர்க்கத்தை அடிபணியச் செய்வதற்கான முக்கிய சாதனங்களாக தொழிற்கட்சி மற்றும் தொழிற்கட்சியின் கோட்பாடுகளின் பக்கம் திரும்பியது.

32. ஆஸ்திரேலிய தொழிற் கட்சி (ALP) , மார்க்சிசம் மற்றும் அதன் விஞ்ஞானரீதியாய்-வேரூன்றிய சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டத்திற்கு நேர் எதிரான வகையில் ஸ்தாபிக்கப்பட்டதாகும். 1848ல், மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் மூலம் தயாரிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அறிக்கையானது, உலகத் தொழிலாளர்கள் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் ஐக்கியப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தது. 19ம் நூற்றாண்டின் பிற்பாதியில், சோசலிச இயக்கத்தின் வளர்ச்சியும் ஐரோப்பாவில் வெகுஜன தொழிலாளர் கட்சிகளின் ஸ்தாபகமும் 1889ல் ஒரு மார்க்சிச முன்னோக்கில் இரண்டாம் அகிலம் ஸ்தாபிக்கப்பட இட்டுச் சென்றது. இதற்கு நேரெதிராய், அதற்கு ஒரு வருடம் கழித்து ஸ்தாபிக்கப்பட்ட தொழிற்கட்சியோ ஒரு தேசியவாத மற்றும் விலகிநிற்கும் வேலைத்திட்டத்தில் வேரூன்றியிருந்தது. அதன் நிறைவுற்ற வெளிப்பாடு வெள்ளை ஆஸ்திரேலிய தத்துவம் ஆகும். குறிப்பிடத்தக்க வகையில், தொழிற் கட்சியானது இரண்டாம் அகிலத்துடன் இணைந்து கொள்வதற்கு முயலவில்லை.

33. 1840களில், இந்தியாவில் இருந்து தொழிலாளர்களை இறக்குமதி செய்வது கால்நடை மேய்ப்பவர்களின் உடனடி நலன்களுக்கு உதவலாம் என்றாலும் கூட "பெருநகர அரசின் நன்மை கருதி" அது தடை செய்யப்பட வேண்டும் என்று கூறி அதனை எதிர்த்த பிரிட்டிஷ் காலனித்துவ அலுவலகத்தில் இருந்து வெள்ளை ஆஸ்திரேலிய கொள்கை உதயமானது. இந்தியாவில் இருந்து சுரண்டப்படும் செல்வத்தை நம்பியும் அபின் போர்கள் மூலமாக சீனாவுக்குள் பலாத்காரமாக நுழைய முயன்றும் கொண்டிருந்த பிரிட்டிஷ் முதலாளித்துவ வர்க்கம் காலனிகளில் ஆசிய மக்கள்தொகை வளர்ச்சியுறுவதைக் கண்டு பயந்தது. இத்தகையதொரு அபிவிருத்தி, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் தனது விரிவடையும் நலன்களின் பாதுகாப்பு அரணாக "வெள்ளை ஆஸ்திரேலியாவை" பயன்படுத்த விழையும் தனது முன்னோக்கிற்கு எதிராகப் போய் விடும் என்று அது கருதியது. அனைத்திற்கும் மேலாக, வளர்ந்து வந்து கொண்டிருந்த ஆஸ்திரேலிய முதலாளித்துவ வர்க்கமானது ஆசியாவில் இருந்து தொழிலாளர்களை அறிமுகம் செய்வது ஒரு "அபாயகரமான வர்க்கத்தை", அதாவது, பிராந்தியத்தின் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களோடு இணைப்பு கொண்ட ஒரு பாட்டாளி வர்க்கத்தை உருவாக்கும் என்று அஞ்சியது.

34. நூற்றாண்டின் இறுதிவாக்கில், தெற்கு பசிபிக் மற்றும் கண்டமெங்கிலும் ஆகிய இரண்டு பகுதிகளிலுமான பொருளாதார விரிவாக்கம், ஆறு காலனிகளில் இருந்தும் ஒரு ஐக்கியமான தேசிய-அரசை உருவாக்கும் பணியை முன்வைத்தது. எழுச்சியுற்றுக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய முதலாளித்துவம் புதிய தேசத்தை பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கட்டமைப்புக்குள்ளாக ஸ்தாபிக்க தலைப்பட்டது. பிரிட்டிஷ் முடியின் கீழ் ஸ்தாபிக்கப்படுகின்ற ஆட்சி இயங்குமுறைகள் தாயகத்தில் தொழிலாள வர்க்கத்தை அடக்கி வைப்பதற்கு முக்கியமானது, அதே சமயத்தில் காலனிகளின் செல்வத்திற்கு அடிப்படையை உருவாக்கிய அனைத்து முக்கிய ஏற்றுமதி சந்தைகளையும் சாம்ராஜ்யம் வழங்கியது. அதே சமயத்தில், புதிய ஆளும் உயர் அடுக்கானது தனது சொந்த நலன்களை, குறிப்பாக தெற்கு பசிபிக் பிராந்தியத்தில், அபிவிருத்தி செய்து கொண்டிருந்தது. ஆஸ்திரேலிய தேசிய-அரசு என்பது அதன் பிறப்பில் இருந்தே ஒரு ஏகாதிபத்திய சக்தியாக எழுந்ததாகும்.

35. ஏற்கனவே 1840வாக்கில், "தெற்கு பசிபிக்கில் இந்த நாட்டிற்கும் தென் அமெரிக்காவிற்கும் இடையிலமைந்த நாம் கண்டறிந்திருக்கும் அனைத்து உடைமைகள் மீதுமான பிளவுபடாத மேலாதிக்கம் மற்றும் செல்வாக்கிற்கான நமது நியாயமான உரிமைகளை உறுதி செய்ய வேண்டியதன்"[8] அவசியத்தை சிட்னி ஹெரால்ட் அறிவித்திருந்தது. 1883ல் குவீன்ஸ்லாந்து காலனி நியூ கினியாவின் ஒட்டுமொத்த கிழக்கு பிராந்தியத்தையும் (மேற்கு பகுதி டச்சின் வசம் இருந்தது) இணைத்துக் கொள்ள தலைப்பட்டது, ஆனால் அதற்கு பிரிட்டனின் ஆதரவை அதனால் பெறமுடியவில்லை, இதனையடுத்து தீவின் வடகிழக்கு பகுதியில் ஜேர்மன் காலனி ஸ்தாபிக்கப்படுவதற்கான பாதை திறக்கப்பட்டது. காலனித்துவ அரசாங்கங்கள், தங்களது ஏகாதிபத்திய நலன்களை ஒரே குரலில் உயர்த்திப் பிடிக்க வேண்டுமென்றால் அதற்கு தங்களுக்கு ஒரு சமஸ்ட்டி ஒன்றியம் (Federal Union) தேவை என்கிற முடிவுக்கு வந்தன. ஆஸ்திரேலியாவில் செய்தித்தாள்களில் மிகப் பெரும்பான்மையானோர் வாசிக்கப் பெற்ற மெல்போர்ன் ஏஜ் நாளிதழின் மே 29, 1883 ஆசிரியர் தலையங்கம் இவ்வாறு அறிவித்தது: "உலகின் பறிக்கப்படாத பகுதிகள் எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டுக் கொண்டிருப்பதால்" விரைவிலோ அல்லது பின்னரோ "ஆஸ்திரேலியாவுக்கான மோன்ரோ கோட்பாடு போன்ற ஒன்று வர வேண்டியது கட்டாயம், அத்துடன் தெற்குப் பகுதி நாடுகளில் எந்த அந்நிய இணைப்புகளும் அனுமதிக்கப்படாது என்பதை தவறில்லாமல் நாம் தெரிவித்தாக வேண்டும்." 1914 இல் போர் வெடித்தபோது, நியூ கினியாவில் ஜேர்மன் காலனியை பறிமுதல் செய்தது தான் ஆஸ்திரேலிய படைகளின் முதல் நடவடிக்கைகளில் ஒன்றாய் இருந்தது.

36. எழுச்சியடைந்துகொண்டிருக்கும் முதலாளித்துவ வர்க்கத்தின் நிலை பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை சார்ந்திருந்தது ஆனால் அதன் சொந்த அதிகரிக்கும் வேட்கைகளும் இருந்தது. கூட்டமைப்பின் "ஸ்தாபக தந்தைகளில்" ஒருவரான ஆல்ஃபிரட் டீகின் அபிவிருத்தி செய்த "சுயாதீனமான ஆஸ்திரேலிய பிரிட்டன்" என்ற கருத்தாக்கத்தில் சுருக்கமாய் கூறப்பட்டிருந்தது. ஆனால், வெகுஜன மக்களின் அரசியலின் சகாப்தம் விடிந்திருந்ததால், முதலாளித்துவ வர்க்கத்திற்கு ஒரு தேசிய-அரசை ஸ்தாபிப்பதற்கு அடித்தளமாய் ஒரு அரசியல் தத்துவம் இல்லாதிருந்தது. 18ம் நூற்றாண்டின் அமெரிக்க முதலாளித்துவத்தைப் போல, தான் சார்ந்திருந்த சாம்ராஜ்யத்துடன் உறவுகளை துண்டித்துக் கொள்ளும் விருப்பம் அதற்கு இல்லாதிருந்தது. வர்க்க பிளவுகள் துரிதமாய் ஆழமுற்றுக் கொண்டிருந்ததான நிலைமைகளின் கீழ் (1890களின் மோதல்கள் இதனை தெளிவுபட வெளிப்படுத்தியிருந்தன) ஜனநாயக விழைவுகளுக்கு அழைப்பு விடுவதன் மூலம் ஒரு புதிய தேசத்தை ஸ்தாபிக்கவும் அதனால் இயலாதிருந்தது. அதற்கு ஒரு புதிய வேலைத்திட்டம் அவசியப்பட்டது. தொழிற் கட்சி வாதத்தின் கோட்பாடுகளில் பல்வேறு குட்டி முதலாளித்துவ சித்தாந்தவாதிகள் மூலம் இது சூத்திரப்படுத்தப்பட்டது. அவர்களின் சித்தாந்தப்படி, ஆஸ்திரேலியா ஒரு புதிய தனிச்சிறப்பு வாய்ந்த தேசம், இங்கு ஐரோப்பாவில் எழுந்த வர்க்க மோதல்கள் எழ வேண்டிய அவசியமில்லை. விலகிநிற்கும் கோட்பாடுகளின் மூலம் இனரீதியாக அது ஐக்கியப்பட்டு இருக்கும் வரையில், புதிய தேசம் ஒரு உழைக்கும் மனிதனின் சொர்க்கமாகஆக முடியும்".

37. தமது தொழிலாள வர்க்கத்தை அதன் "சொந்த" முதலாளித்துவ வர்க்கத்துடன் ஐக்கியப்படுத்தி கொள்ளச் செய்து, அதே சமயத்தில் அதனை ஆசியாவின் தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களில் இருந்து பிரித்துக் காப்பதில் வெள்ளை ஆஸ்திரேலியாவின் அதிஅவசிய முக்கியத்துவத்தை 1901 இல் காமன்வெல்த் நாடாளுமன்றத்தில் நடந்த முதல் முக்கிய விவாதத்தில், டீகின் தெளிவுபட எடுத்துரைத்தார்: "இனங்களின் ஐக்கியம் தான் ஆஸ்திரேலிய ஐக்கியத்துக்கு முற்றுமுதலானதாகும். உண்மையில் அது வேறு எந்த ஐக்கியத்தை விடவும் கடைசி இடத்தில் இருக்கிறது. எப்படிப் பார்த்தாலும், குழப்பமான உள்நாட்டு அரசியல் மற்றும் தற்காலிக அரசியல் பிளவுகளின் காலகட்டம் தூக்கியெறியப்பட்ட சமயத்தில், இந்த உண்மையான ஐக்கியம் தான் பொதுக்கூட்டமைப்பை (காமன்வெல்த்தை) சாத்தியமாக்கியது."[9] உள்நாட்டு அரசியலின் மோதல்கள் - வசதிபடைத்த நில உடைமையாளர்களுக்கும் உற்பத்தியாளர்களுக்கும் இடையிலான, சுதந்திர வர்த்தகத்துக்கும் பாதுகாப்புவாதத்திற்கும் இடையிலான - அதாவது, முதலாளித்துவத்தின் வேறுபட்ட பிரிவுகளுக்கு இடையிலான பிளவுகள் எல்லாம் வெள்ளை ஆஸ்திரேலிய பதாகைக்குக் கீழே வகைப்படுத்தப்பட்டு விட்டன. அதே விவாதத்தில் பேசுகையில், கம்பளி வெட்டுவோர் சங்கத் தலைவரும் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான W.G ஸ்பென்ஸ் வெள்ளை ஆஸ்திரேலியாவுக்கும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கும் இடையிலான உறவு குறித்து வார்த்தைஜாலம் செய்தார்: "...இனத்தை தூய்மையாய் வைத்திருந்து, தேசிய தன்மையை கட்டியெழுப்பினால், நாம் மிகவும் முற்போக்கானதொரு மக்களாய் ஆகியிருப்போம், அப்போது நாம் நெடுங்காலம் வாழும் அளவுக்கு வலிமையாய் வளரும் அளவுக்கு எம்மை பற்றி பிரிட்டிஷ் அரசாங்கம் அதே அளவு பெருமிதம் கொள்ளும். நமது தேசிய தன்மையை சிதைக்கக் கூடியவர்களுக்கு, நமது சக்தியின் தரத்தையும் நமது மக்களின் திறனையும் குறைக்கக் கூடியவர்களுக்கு, அதன்மூலம் சாம்ராஜ்யத்தினையும் கூட பலவீனப்படுத்தக் கூடியவர்களுக்கு கதவை மூடுவதற்கான ஒரு திட்டத்திற்கு தங்களது சம்மதத்தை அளிப்பதில் பேரரசின் அதிகாரிகள் தயங்குவார்கள் என்று நான் நினைக்கவில்லை." [10]

38. வெள்ளை "உழைப்பாளியின் சொர்க்கமான" இங்கு "வேறுநிற"த் தொழிலாளர்களின் குடியேற்றத்திற்கு தடை விதிப்பதன் மூலம் வாழ்க்கைத் தரங்கள் பாதுகாக்கப்படும் என்கின்ற பிற்போக்குவாத கற்பனாவாதம், தேசிய சீர்திருத்தவாத வேலைத்திட்டத்தின் அடித்தளமாக இருந்தது. உள்நாட்டு தொழில்துறை, மற்றும் அதனால் ஊதியங்களை பாதுகாப்பதற்கான சம்பள உடன்பாடுகள் மூலம் வெள்ளை ஆஸ்திரேலியாவுக்கு உதவிசெய்யப்பட்டது. ஊதியங்களும் நிலைமைகளும் அரசால் கட்டுப்படுத்தப்பட்டன, சமஸ்ட்டி மத்தியஸ்துவ அமைப்பின் மூலம் அரசின் சட்டபூர்வ கட்டமைப்பில் தொழிற்சங்கங்களுக்கு அதிகாரபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டது. வெள்ளை ஆஸ்திரேலியா, கட்டண பாதுகாப்பு மற்றும் மத்தியஸ்துவ அமைப்பு இவை எல்லாம் சேர்ந்து தான் பின்னாளில் "ஆஸ்திரேலிய உடன்பாடு" ("Australian Settlement") என்று அறியப்பட்ட ஒன்றின் அடிப்படையை உருவாக்கின.

39. இந்த சித்தாந்தத்தின் மோசமான தன்மையும், அதனைப் பாதுகாத்த சக்திவாய்ந்த வர்க்க அழுத்தங்களும், வெள்ளை ஆஸ்திரேலியா குறித்த ஆரம்ப கால சோசலிச குழுக்களின் மனோநிலையில் வெளிப்பட்டன. அவர்கள் தொழிற்கட்சியின் மற்ற கொள்கைகளை எதிர்த்தனர் அதன் தலைமைக்கு பிரச்சினையை எடுத்துச் சென்றனர் என்ற போதிலும். 1896 ஆம் ஆண்டில், கார்ல் மார்க்சின் மருமகனான எட்வார்ட் அவெலிங், இரண்டாம் அகிலத்தின் லண்டன் காங்கிரசில் ஆஸ்திரேலிய சோசலிஸ்ட் கழகத்திற்கான (ASL) ஐரோப்பிய பிரதிநிதியாக பங்கேற்ற சமயத்தில், குடியேற்ற கட்டுப்பாடுகளைக் கோருவதில் இருந்து தொழிலாளர் அமைப்புகள் விலகி நிற்க அழைப்பு விடுக்கும் ஒரு தீர்மானத்தை முன்வைத்தார். அவரது செயல்பாடுகளை (ASL) எதிர்த்தது, அத்துடன் தனது 1898 மாநாட்டில், தனது வேலைத்திட்டத்திற்குள் "ஆஸ்திரேலிய தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை குறைக்கக் கூடிய எந்த இனங்களையும் தள்ளி வைத்திருப்பதற்கான" கோரிக்கையை சேர்த்துக் கொண்டது.[11]

40. தேசிய-அரசு ஸ்தாபகத்தில் அடித்தளமாய் அமைந்த இனரீதியான ஜனநாயக-விரோத கருத்தியல் 1901 ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் புனிதப்படுத்தப்பட்டது, "ஆதிவாசி பூர்விகப் பழங்குடியினர் மக்கள் தொகையில் கணக்கில் கொள்ளப்பட மாட்டார்கள்" என்று அந்நாடாளுமன்றம் அறிவித்தது. மக்கள் ஓட்டு எதுவுமின்றி, பிரிட்டிஷ் நாடாளுமன்ற சட்டமாக ஏற்றுக் கொள்ளப்படுவதெற்கென காலனித்துவ அரசியல்வாதிகளால் வரைவு செய்யப்பட்ட இந்த ஆவணம் உரிமைகளுக்கான எந்த மசோதாவையும் கொண்டிருக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், ஜனநாயகம் என்கிற வார்த்தையையே அது எங்கும் குறிப்பிடவில்லை, அத்துடன் வாக்களிப்பதற்கான உரிமைக்கு கூட உத்தரவாதம் வழங்கப்படவில்லை. அதற்குப் பதிலாக, வாக்காளர்களின் தகுதியைத் தீர்மானிப்பது நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களின் கைகளில் விடப்படும், குறிப்பாக பூர்வீக ஆதிவாசிப் பழங்குடி மக்களை மாநிலங்கள் இன அடிப்படையில் தகுதிநீக்கி வைத்திருப்பதைத் தொடரலாம். அமைப்பு விவாதங்களுக்கு பின்னர் - இங்கு "புரட்சி"யின் பயங்கர அபாயம் குறித்து ஏராளமான முறைகள் குறிப்பிடப்பட்டன - நாடாளுமன்றங்களை கலைப்பதற்கு, அரசாங்கங்களை நியமிப்பதற்கு மற்றும் இராணுவப் படைகளுக்கு உத்தரவிடுவதற்கு பிரிட்டிஷ் முடியாட்சிக்கு உள்ள "பிரத்யேக அதிகாரங்கள்" அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டு, இராணியின் உதவிப் பிரதிநிதியான (வைஸ்ராய்) மத்திய ஆளுனரிடம் அவை அளிக்கப்பட்டன.

41. ஆறு காலனிகள் கூட்டமைப்பு உருவாகியதைத் தொடர்ந்து, தேசிய அரசின் அஸ்திவாரங்களை அமைப்பதில் மையப் பாத்திரத்தை தொழிற் கட்சி ஆற்றியது. தொழிற் கட்சி மட்டுமே ஒரே தேசியக் கட்சியாய் இருந்தது - முதலாளித்துவ வர்க்கத்தின் கட்சிகள் பாதுகாப்புவாத பிரச்சினை (விக்டோரியா) மற்றும் சுதந்திர வர்த்தக (NSW) பிரச்சினையில் பிளவுபட்டிருந்தன. 1905ம் ஆண்டில் மத்திய தொழிற்கட்சி தனது இலட்சியத்தை பின்வருமாறு வரையறை செய்தது: "இனத் தூய்மை பராமரிப்பு அடிப்படையிலமைந்த ஆஸ்திரேலிய உணர்வுகளை வளர்ப்பது மற்றும் ஆஸ்திரேலியாவில் அறிவொளி படைத்த சுய-சார்புடனான சமுதாயத்தை அபிவிருத்தி செய்வது."[12] என்பன அடுத்த ஆறு தசாப்தங்களுக்கு இந்த "இலட்சியம்" தான் கட்சித் தளத்தின் மையமாய் திகழவேண்டும். 1909ம் ஆண்டில், தொழிற் கட்சிக்கு எதிராய் முதலாளித்துவ கட்சிகள் இரண்டும் ஒன்றுசேர்ந்தன. ஆனால் அவர்களின் வேலைத்திட்டம் பாதுகாப்புவாதம், மத்தியஸ்த அமைப்பு மற்றும் வெள்ளை ஆஸ்திரேலியா ஆகியவற்றுக்கான ஆதரவை அடிப்படையாகக் கொண்டிருந்தது. தொழிற் கட்சி வாத வேலைத்திட்டம் தேசிய சித்தாந்தமாய் ஆகிவிட்டிருந்தது.

42. 1910ம் ஆண்டில், தொழிற்கட்சி தனது முதல் தனிக் கட்சி தேசிய அரசாங்கத்தை அமைத்தது - முந்தைய அரசாங்கங்கள் எல்லாம் கூட்டணி மூலம் அமைக்கப்பட்டவை. உலகின் முதல் "சோசலிச" அரசாங்கம் எனக்கூறப்பட்ட ஒன்று குறிப்பாக புரட்சிகர நோக்குநிலையைக் காட்டிலும் நாடாளுமன்ற நோக்குநிலையை முன்னெடுக்க விரும்பியவர்களிடம் இருந்து சர்வதேச கவனத்தை ஈர்த்தது. தொழிற் கட்சியின் உண்மையான பாத்திரத்தை 1913ல் சுருக்கமாக லெனின் இவ்வாறு எழுதினார்: "ஆஸ்திரேலியாவில் தொழிற் கட்சியானது சோசலிசம்-சாரா தொழிலாளர் சங்கங்களின் கலப்படமற்ற பிரதிநிதியாக இருக்கிறது. ஆஸ்திரேலிய தொழிற் கட்சியின் தலைவர்கள் தொழிற்சங்க நிர்வாகிகளாய் இருப்பவர்கள், எல்லா இடங்களிலும் மிகவும் மிதவாதிகளாக மூலதன-சேவையாற்றும்கூறுகளாக இருக்கும் இவர்கள் ஆஸ்திரேலியாவில் ஒட்டுமொத்தமாய் சமரசப்படுத்தத்தக்கவர்களாய், தூய தாராளவாதிகளாய் இருக்கின்றனர். தனித்தனி மாநிலங்களை ஐக்கிய ஆஸ்திரேலியாவாக பிணைக்கும் பிணைப்புகள் இன்னும் மிகப் பலவீனமாகவே உள்ளன. தொழிற் கட்சி இந்த பிணைப்புகளை அபிவிருத்தி செய்கின்ற வலிமைப்படுத்துகிற கவலைகளையும், அத்துடன் மத்திய அரசை ஸ்தாபிக்கும் கவலையையும் தனக்கு அமர்த்திக் கொண்டிருக்கிறது. மற்ற நாடுகளில் தாராளவாதிகள் செய்திருக்கும் ஒன்றைத்தான் ஆஸ்திரேலியாவில் தொழிற் கட்சி செய்திருக்கிறது...."[13] ஏழு வருடங்கள் கழித்து, பிரிட்டிஷ் தொழிற்கட்சியை லெனின் குணாதிசயப்படுத்தியது ALP சற்றும் குறைச்சலில்லாததொரு பொருந்தும் தன்மையை கொண்டிருந்தது. அதில் லெனின் வர்க்க இயல்பு என்பது அது பாரிய உழைக்கும் வர்க்க உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கொண்டிருக்கிறது என்பதில் அல்ல, மாறாக அதன் வேலைத்திட்டம் மற்றும் தலைமையின் இயல்பினால் தான் தீர்மானிக்கப்படுகிறது என்று வலியுறுத்தினார்: "உண்மை தான், தொழிற்கட்சியின் உறுப்பினர்களில் அநேகமானோர் உழைக்கும் மக்களே. ஆயினும், ஒரு கட்சி உண்மையிலேயே தொழிலாளர்களின் ஒரு அரசியல் கட்சியா என்பது தொழிலாளர்களின் உறுப்பினர் எண்ணிக்கையில் மட்டுமே முழுமையாய் தங்கியிருப்பதில்லை, அதற்கு தலைமையேற்கும் மனிதர்களின் மீதும், அக்கட்சியின் செயல்பாடுகள் மற்றும் அரசியல் தந்திரோபாயத்தின் உள்ளடக்கத்திலும் சேர்த்துத் தான் தங்கியிருக்கிறது. பிந்தையது மட்டும் தான் நாம் உண்மையிலேயே நமக்கு முன்னிருப்பது பாட்டாளி வர்க்கத்திற்கான ஒரு அரசியல் கட்சியா என்பதைத் தீர்மானிக்கிறது. ஒரே சரியான கண்ணோட்டமான இதில் இருந்து கருதிப் பார்த்தால், தொழிற் கட்சி முழுமையாய் ஒரு பிற்போக்குவாத கட்சியாக இருக்கிறது, ஏனென்றால், இது தொழிலாளர்களால் ஆனதாய் இருந்தாலும் பிற்போக்குவாதிகளால் தலைமை வகிக்கப்படுகிறது, அதுவும் முதலாளித்துவ வர்க்கத்தின் பாதையில் செயல்படுகின்ற மோசமான வகை பிற்போக்குவாதிகளால். இது ஒரு முதலாளித்துவ வர்க்க அமைப்பு, திட்டமிட்டபடி தொழிலாளர்களை மோசடி செய்வதற்காக இருக்கிறது...."[14]

43. தொழிற்சங்கங்கள் ALP ஐ ஸ்தாபித்தது முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்கு அல்ல, மாறாக உத்தியோகபூர்வ நாடாளுமன்ற கட்டமைப்புக்குள்ளாக அதன் அத்துமீறல்களை முயற்சி செய்து குறைப்பதற்குத் தான். தொழிற்சங்க நனவு என்பது முதலாளித்துவ நனவு என்று 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் லெனினால் செய்யப்பட்ட மதிப்பீட்டின் மிகச் சக்திவாய்ந்த சரிபார்ப்பை இக்கட்சியின் 120 ஆண்டு கால வரலாறு அடக்கியுள்ளது. "தன்னிச்சையான எழுச்சி பற்றி நிறைய பேசப்படுகிறது" அவர் எழுதினார், "ஆனால் தொழிலாள வர்க்கத்தின் தன்னிச்சையான அபிவிருத்தி என்பது முதலாளித்துவ சித்தாந்தத்திற்கு அது அடிபணிவதற்குத் தான் இட்டுச் செல்கிறது .... ஏனெனில் தன்னிச்சையான தொழிலாள வர்க்க இயக்கம் என்பது தொழிற்சங்கவாதம் .... தொழிற்சங்கவாதம் என்றால் முதலாளித்துவத்திற்கு தொழிலாளர்கள் சித்தாந்தரீதியாக அடிமைப்பட்டுக் கிடப்பது என்று அர்த்தம்." அவர் தொடர்ந்து, சோசலிச நனவின் மூலங்களையும் தொழிலாள வர்க்கத்தின் போராட்ட அபிவிருத்தியில் அதன் பாத்திரம் குறித்தும் விளக்கிச் செல்கிறார். "ஒரு தத்துவமாக, சோசலிசம்", லெனின் கார்ல் கவுட்ஸ்கியை மேற்கோள் காட்டி எழுதினார், "தனது வேர்களை பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தைப் போலவே நவீன பொருளாதார உறவுகளில் கொண்டிருக்கிறது.... ஆனால் சோசலிசமும் வர்க்க போராட்டமும் ஒன்றோடுஒன்றாக தோன்றுகின்றனவே அன்றி ஒன்றிலிருந்து இன்னொன்று தோன்றுவதில்லை; இரண்டும் தத்தமது வேறுபட்ட நிலைமைகளின் கீழ் எழுகின்றன. நவீன சோசலிச நனவு ஆழமான விஞ்ஞான அறிவின் அடிப்படையின் மீது தான் தோன்ற முடியும். உண்மையில் நவீன பொருளாதார விஞ்ஞானம் என்பது சோசலிச உற்பத்திக்கு, நவீன தொழில்நுட்பத்தின் (உதாரணத்திற்கு) அதே அளவிற்கு அவசியமாயிருக்கும் ஒரு நிபந்தனை ஆகும், பாட்டாளி வர்க்கம் என்ன விரும்பினாலும் இவற்றில் எந்த ஒன்றையும் அதனால் உருவாக்க முடியாது; இரண்டுமே நவீன சமூக நிகழ்வுபோக்கில் இருந்து தோன்றுகின்றன. விஞ்ஞானத்தின் வாகனம் பாட்டாளி வர்க்கம் அல்ல, மாறாக முதலாளித்துவ புத்திஜீவித் தட்டு தான்: இந்த தட்டின் தனித்தனி உறுப்பினர்களின் மூளையில் தான் நவீன சோசலிசம் உதயமானது, அவர்கள் தான் இதனை புத்திஜீவித்தனரீதியாக முன்னேறிய பாட்டாளி வர்க்கத்திற்குள் எடுத்துச் சென்றனர், அவர்கள் அதனை நிலைமைகள் அனுமதிக்கும் இடத்தில் பாட்டாளி வர்க்க போராட்டத்தில் அறிமுகப்படுத்துகின்றனர். எனவே, சோசலிச நனவு என்பது பாட்டாளி வர்க்கத்திற்குள் வெளியிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றே அல்லாமல் அதற்குள் தன்னிச்சையாக எழுந்த ஒன்றல்ல. ஆக.....சமூக ஜனநாயகத்தின் [மார்க்சிசத்தின்] கடமை என்னவென்றால் பாட்டாளி வர்க்கத்திற்கு அதன் நிலை பற்றிய நனவு மற்றும் அதன் கடமை பற்றிய நனவைப் புகட்டுவதாகும் [வேறு வகையாய் சொல்வதானால், பாட்டாளி வர்க்கத்தினுள் உட்புகுத்துவது]. வர்க்க போராட்டத்தில் இருந்து தானாகவே நனவு தோன்றியிருந்தால் இதற்கான அவசியம் இருந்திருக்காது."[15]

44. லெனின், ஐரோப்பிய சோசலிச இயக்கத்தின் அனுபவங்களின் மீது தன்னை நிறுத்திக் கொண்டிருந்தார். ஆனால், ஆஸ்திரேலிய தொழிலாளர் இயக்கத்தில் மார்க்சிசத்திற்கும் பல்வேறு குட்டி-முதலாளித்துவ சித்தாந்தவாதிகளுக்கும் இடையிலான வரலாற்று வகை மோதல்களுக்கு இதனை விட தெளிவான சுருக்கவுரை இருக்க முடியாது. பிந்தையவர்கள், தொழிலாளர் வாதம் மற்றும் ALP இன் தேசியவாத சித்தாந்தத்தை பாதுகாக்க அணிவகுத்த சமயத்தில், தொழிலாள வர்க்கம் தன்னிச்சையாய் முதலாளித்துவ நனவை பெறுவதற்கு எதிராய் ஒரு போராட்டத்திற்கான அவசியத்தை அவர்கள் எப்போதும் எதிர்த்து வந்துள்ளனர்.

45. தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ அரசுக்கு அடிபணியச் செய்வதில் தொழிற் கட்சி தான் தலைமை சாதனமாக செயல்பட்டது என்றாலும், அதற்கு சவால்கள் எழாமல் இல்லை. உலக தொழிற்துறை தொழிலாளர்கள் அமைப்பு (IWW) சிகாகோவில் ஸ்தாபகமான இரண்டு ஆண்டுகளின் பின் 1907ல் சிட்னியில் ஒரு கிளையை தொடக்கிய கையோடு, ஆஸ்திரேலிய தொழிற்கட்சியின் இனவாதம் மற்றும் நாடாளுமன்றவாதத்திற்கு தனது எதிர்ப்பை அறிவித்தது. ஆஸ்திரேலிய தொழிலாளர் சங்கம் "அனைத்து ஆசிய தொழிலாளர்கள் மற்றும் தெற்கு பசிபிக் தீவுகளின் பிரதிநிதிகளையும்" சேர்த்துக் கொள்ள மறுத்ததற்கு IWW கண்டனம் தெரிவித்ததோடு, வளர்ந்து வந்த தொழிற்சங்க அதிகாரத்துவம் மத்தியஸ்த அமைப்பில் பங்குபெறுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்தது. 1910ல், மாநில மற்றும் மத்திய தொழிற்கட்சி அரசுகளின் அனுபவத்தை தொடர்ந்து, அரசியல்ரீதியாய் மிகவும் நனவுற்ற தொழிலாளர்களிடையே ஆஸ்திரேலிய தொழிற்கட்சியை நோக்கிய விரோதம் வளர்ந்து வருவதை ஆஸ்திரேலிய சோசலிஸ்ட் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியது: "தொழிற்கட்சி சோசலிசத்தை தெளிவாகவும் குழப்பமின்றியும் ஒப்புக்கொண்டதாய் இல்லை, அல்லது அதனைக் கற்பிக்கவும் இல்லை; உலகின் வேறு எந்த தொழிலாள-வர்க்க உருவாக்கம் போலவும் இது இல்லை, ஏனெனில் அது சோசலிச இயக்கத்தையும் கட்டியமைக்கவில்லை, எந்த சோசலிச புத்தகங்களையும் வெளியிடவில்லை, எந்த சோசலிச பிரச்சினைகளையும் விவாதிக்கவில்லை. இது சர்வதேசியப்பட்டதில்லை; இராணுவ-எதிர்ப்பு வகையானதாகவும் இல்லை; மார்க்சிச வகைப்பட்டதாயும் இல்லை. கொள்கையிலும் நடைமுறையிலும் இது ஒரு புதிய பெயரின் கீழிருக்கும் தாராளவாதம் ஆகும்; பேச்சிலும் கருத்திலும் இது முதலாளித்துவ வகையாய் இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் வரவிருக்கும் மோதல் தொழிற்கட்சி வாதத்திற்கும் சோசலிசத்திற்கும் இடைப்பட்டதாகத் தான் இருக்கும்." அந்த மோதல், ஆகஸ்ட் 1914ல் முதலாம் உலகப் போர் வெடிப்பு கொண்டு வெகு விரைவில் வெளிவர இருந்தது.

முதலாம் உலகப் போரும் ரஷ்யப் புரட்சியும்

46. முதலாம் உலகப் போர் உலக முதலாளித்துவத்தின் அடிக்கட்டமைப்பில் வேரூன்றியதாய் இருந்தது. ட்ரொட்ஸ்கி 1915ல் எழுதியதைப் போல, "அடிமட்டத்தில் இந்தப் போர் தேசம் மற்றும் அரசின் அரசியல் வடிவத்திற்கு எதிராக உற்பத்தி சக்திகள் செய்யும் ஒரு கிளர்ச்சியாகும். இதன் அர்த்தம் ஒரு சுயாதீனப்பட்ட பொருளாதார அலகாக தேசிய அரசு இருக்க முடியாது உடைந்து போனது என்பதாகும். ...ஒரு பொருளாதார அமைப்பின் வரலாற்றில் அது தனது உள்ளமைந்த முரண்பாடுகளினால் கண்ட பிரம்மாண்டமான நிலைக்குலைவு தான் 1914ம் ஆண்டின் போர் ஆகும்." இது ஏகாதிபத்திய சகாப்தம், போர் மற்றும் புரட்சிகளுக்கான சகாப்தத்திற்கு கதவு திறந்ததை அடையாளம் காட்டியது.

47. உலக பதட்டகள் மற்றும் மோதல்களில் இருந்து ஆஸ்திரேலியா ஏதோ ஒரு வகையில் தனிமைப்படுத்திக் கொள்ள முடியும் என்பதான மாயையை போர் வெடித்தது சிதறடித்தது. போர் தொடங்கிய சமயத்தில் நடந்து கொண்டிருந்த 1914ம் ஆண்டின் மத்தியதேர்தல் பிரச்சாரத்தில், இரண்டு பெரிய கட்சிகளுமே பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை பாதுகாக்க தங்களது உறுதிப்பாட்டை வெளியிட்டனர், தொழிற் கட்சித் தலைவரான ஆண்ட்ரூ ஃபிஷர் "கடைசி மனிதனையும் கடைசி ஷில்லிங்கையும்" அதற்கு தர உறுதியளித்தார்.

48. ஆஸ்திரேலிய தொழிலாளர்களும், தங்களது ஐரோப்பிய சகாக்களைப் போலவே, ஆரம்பத்தில் தேசப்பற்று அலையில் சிக்கியிருந்தனர். ஆனால், அந்தப் பரவசம் எல்லாம் கொஞ்ச காலம் தான். 1916 வாக்கில், காலிபோலி மற்றும் மேற்கு முனையில் நடந்த படுகொலையின் யதார்த்தம், அத்துடன் தாயகத்தில் சமூக நிலைமைகளின் மீது ஆழமுறும் தாக்குதல்கள் ஆகியவை தங்களது பாதிப்பைக் கொண்டிருந்தன. 5 மில்லியனுக்கும் குறைவான ஆஸ்திரேலிய மக்கள்தொகையில், போர் சுமார் 62,000 பேரின் உயிரை வாங்கியது, 156,000 பேர் காயமுற்றனர், போர் இழிவுபடுத்தலைச் சந்தித்தனர் அல்லது கைதிகளாக்கப்பட்டனர். போருக்கும், அப்போது பில்லி ஹியூக்ஸ் வழிநடத்திக் கொண்டிருந்த தொழிற்கட்சி அரசாங்கத்திற்கும் எதிர்ப்பு வளர ஆரம்பித்தது. ஆள்ச்சேர்ப்பு வீழ்ச்சி நிலைகளால் கவலையுற்ற ஹியூக்ஸ் வெளிநாட்டு சேவைகளுக்கு கட்டாய இராணுவ சேவையை ஏற்படுத்த கோரிக்கை விடுத்தார், ஆனால் தொழிலாளர் இயக்கத்தில் மிகப் பெரும் எதிர்ப்பு தோன்றியதால் அந்த கொள்கைக்கு அவரால் தொழிற் கட்சியின் ஆதரவைப் பெற முடியாமல் போனது. ஹியூக்ஸ் மற்றும் அவரது தலைமை ஆதரவாளரான NSW தலைவர் ஹோல்மேன் இருவருமே கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர், ஹியூக்ஸ் ஒரு தேசியக் கட்சி அரசாங்கத்தை உருவாக்கினார். அக்டோபர் 1916 மற்றும் டிசம்பர் 1917ல் கட்டாய இராணுவ சேவைக்கென எடுக்கப்பட்ட இரண்டு வாக்கெடுப்புகள் தோற்கடிக்கப்பட்டன - இரண்டாவது முதலாவதைக் காட்டிலும் பெரிய பெரும்பான்மை வித்தியாசத்தில்.

49. போர் மற்றும் சமூக நிலைமைகளுக்கு எதிரான தாக்குதலுக்கான எதிர்ப்பு தொடர்ச்சியான போர்க்குணம்மிக்க தொழிற்சங்க போராட்டங்களில் வெளிப்பாடு கண்டது. இதில் மிக முக்கியமானது NSW ரயில் மற்றும் டிராம்வே பட்டறைகளில் ஒரு வேகத்தைத் திணிக்க அரசாங்கம் செய்த முயற்சிகளின் காரணமாய் எழுந்தது. ஜாரைப் பதவியிறக்கிய ரஷ்யாவின் பிப்ரவரி புரட்சி உடனடியான அரசியல் பாதிப்பை ஏற்படுத்தியது, NSW மற்றும் விக்டோரியா தொழிற்கட்சி இரண்டிலும் நிகழ்த்தப்பட்ட தீர்மானங்கள் எதேச்சாதிகாரத்தை தூக்கியெறிந்ததற்காக ரஷ்ய தொழிலாளர்களை பாராட்டியதோடு அமைதிக்கான பேச்சுவார்த்தைக்கு உடனடியான சர்வதேச மாநாடு ஒன்றுக்கும் அழைப்பு விடுத்தது. "சுரண்டுவதற்கான புதிய சந்தைகளை தேடுவதற்கு ஒவ்வொரு நாட்டையும் துரத்தும் இலாபத்தையே குறியாய் கொண்ட நடப்பு முதலாளித்துவ உற்பத்தி அமைப்புத் தான் போருக்குக் காரணம், அதுவே எல்லா இடங்களிலும் போட்டி நலன்களுக்கு இடையில் அவ்வப்போதான மோதல்களுக்கு இட்டுச் செல்கிறது" என்று கூறிய NSW தீர்மானம், "சம்பந்தப்பட்ட அனைத்து நாடுகளின் தொழிலாளர்களது ஐக்கியப்பட்ட முயற்சிகள் மூலம் மட்டுமே" அமைதி எட்டப்பட முடியும் என்று வலியுறுத்தியது.[19]

50. தொழிற் கட்சித் தலைமை மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தை நோக்கிய குரோதம் IWW க்கான வளர்ச்சியுற்ற ஆதரவில் வெளிப்பட்டது, போருக்கு எதிரான இதன் உரத்த எதிர்ப்பின் காரணத்தால் ஹியூக்ஸ் மற்றும் ஹோல்மன் அரசாங்கங்களால் இது கடுமையான அடக்குமுறைக்கு ஆளாகியிருந்தது. மிகவும் போர்க்குணமுடைய மற்றும் வர்க்க-நனவுள்ள தொழிலாளர்கள் இடையே IWW ஆதரவைப் பெற்றது என்றாலும், அவர்களுக்கு இந்த அமைப்பால் தொழிலாளர் வாதத்தை எதிர்த்து போராடுவதற்கான ஒரு முன்னோக்கினை வழங்க முடியவில்லை. தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான புரட்சிகர கட்சி ஒன்று கட்டப்பட வேண்டும் என்பதை எதிர்த்த IWW, "ஒரு பெரிய சங்கம்" மற்றும் ஒரு பொது வேலைநிறுத்தத்தின் மூலம் மட்டுமே முதலாளித்துவம் தோற்கடிக்கப்பட முடியும் என்று தொடர்ந்து கூறியது. IWW கொஞ்சக் காலமே உயிர்வாழ்ந்ததானது என்றாலும், தொழிற் கட்சியின் காட்டிக் கொடுப்புகள் போர்க்குணம் மிக்க தொழிற்சங்கவாதத்தின் வழியாக மட்டும் தான் எதிர்கொள்ளப்பட முடியும் என்கிற கருத்தாக்கமானது 20ம் நூற்றாண்டின் போக்கில் மீண்டும் தோன்றியது.

51. லெனின், ட்ரொட்ஸ்கி மற்றும் போல்ஷிவிக் கட்சியால் தலைமை நடத்தப்பட்ட 1917 அக்டோபரின் ரஷ்ய புரட்சி சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களில் ஒரு புதிய அத்தியாயத்தை திறந்து வைத்தது. ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் அத்தனை அடிப்படைகளையும் இந்த புரட்சி நிரூபணம் செய்தது, இத் தத்துவத்தை அவர் 1905ல் முன்னெடுத்திருந்தார், அது நிகழ்வுகளின் பாதையை எதிர்பார்த்துக் கணித்திருந்தது. கெரென்ஸ்கியால் தலைமை நடத்தப்பட்டு மென்ஷிவிக்குளால் ஆதரவளிக்கப்பட்ட முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் அதிகாரத்துக்கான போராட்டத்தை நோக்கி ஏப்ரல் 1917ல் போல்ஷிவிக் கட்சியின் நோக்குநிலையை மாற்றியமைப்பதற்கு லெனினுக்கு இந்த தத்துவம் தான் வழிவகை செய்தது. சந்தர்ப்பவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிராக லெனின் நிகழ்த்தி வந்திருந்த நெடிய போராட்டத்தின் - இந்த போராட்டம் போல்ஷிவிக்குகள் 1903ல் மென்ஷிவிக்குகளிடம் இருந்து உடைத்துக் கொள்ள இட்டுச் சென்றிருந்தது - வரலாற்று முக்கியத்துவத்தை இந்த புரட்சி அடிக்கோடிட்டுக் காட்டியது. கட்சியின் தன்மை குறித்த கேள்வி மீதான மோதலாகத் தொடங்கியது மிகவும் வெகு-காலத்திற்கான பாதிப்புகளை கொண்டிருந்த ஒன்றாக மாறியிருந்தது. 1917ல், போர் தொடர்வதை ஆதரித்து விவசாயிகளுக்கு நிலம் வழங்கப்படுவதை எதிர்த்த இடைக்கால அரசாங்கத்திற்கு ஆதரவாய் நின்ற மென்ஷிவிக்குகள் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதை எதிர்த்தனர்.

52. பாட்டாளி வர்க்க சர்வதேசியவாத வேலைத்திட்டத்தினைக் கொண்டுதான் ரஷ்ய புரட்சி நிகழ்த்தப்பட்டது. உலக சோசலிசப் புரட்சியின் ஆரம்ப தாக்குதலாக சிந்திக்கப்பட்ட இது, ஐரோப்பாவில் அலைஅலையான புரட்சிகரப் போராட்டங்களை தூண்டியதோடு போர் முடிவுக்கு வந்ததும் உலகெங்கும் தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களின் தீவிரமயமாக்கலையும் தூண்டியது. ஆனால் வேறெங்கிலுமே போல்ஷிவிக் வகையிலான கட்சிகள் முன்கூட்டிக் கட்டப்பட்டிருக்கவில்லை. ட்ரொட்ஸ்கி பின்னர் இவ்வாறு எழுதினார்: "போருக்குப் பின்னர் பாட்டாளி வர்க்கம் இருந்த மனோநிலையில், ஒருவர் அதனை ஒரு தீர்மானமான போராட்டத்திற்கு இட்டுச்சென்றிருக்க முடியும். ஆனால் தலைமையை எடுக்க, போராட்டத்தை ஒழுங்கமைக்கத்தான் ஒருவரும் இல்லை---எந்த கட்சியும் இல்லை. ...கட்சி இல்லாத வரை, வெற்றியும் சாத்தியமில்லாதது. அத்துடன், மறுபக்கத்தில், ஒரு கட்சி உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர உணர்வை ஒருவரால் பராமரிக்க முடியாது. கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்படத் தொடங்கிவிட்டது. அதேவே¬ளை, தொழிலாள வர்க்கம், உரிய நேரத்தில் ஒரு போர்க்குணம் மிக்க தலைமையை காணாத நிலையில், போருக்குப் பிந்தைய நிலைமைக்குள் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தள்ளப்பட்டது. இதனால் பழைய சந்தர்ப்பவாத கட்சிகள் மீண்டுமொருமுறை, அதிகமான மட்டத்திற்கோ அல்லது குறைவான மட்டத்திற்கோ, தங்களை வலிமைப்படுத்திக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பைப் பெற்றன. [20]

தொடரும்...

அடிக்குறிப்புகள்

5. தி ஆர்கஸ், மெல்போர்ன், ஜனவரி 6, 1857.

6. லியோன் ட்ரொட்ஸ்கி, ‘ரஷ்யப் புரட்சியின் மூன்று கருத்துருக்கள்’, லியோன் ட்ரொட்ஸ்கியின் படைப்புகள், பாத்ஃபைண்டர், நியூயார்க், 1977, ப.69

7. லியோன் ட்ரொட்ஸ்கி, ’பாதை வழியில்: பாட்டாளி வர்க்க புரட்சியின் முன்னேற்றம் மீதான சிந்தனைகள்’, கம்யூனிச அகிலத்தின் முதலாம் ஐந்து ஆண்டுகள், தொகுதி 1, நியூபார்க், லண்டன், 1973, ப.80.

8. ’எந்த தலைவனுக்கும், எந்த பிரிவுக்கும் பிரமாணம் எடுத்துக் கொண்டவனல்ல நான்’, சிட்னி ஹெரால்ட், ஆகஸ்டு 21, 1840.

9. பால் கெல்லி, நிச்சயநிலையின் முடிவு, ஆலன் & அன்வின், சிட்னி, 1992, ப.3

10. ஆஸ்திரேலிய காமன்வெல்த் பாராளுமன்ற விவாதங்கள், பிரதிநிதிகள் அவை, செப்டம்பர் 25, 1901.

11. வெரிட்டி பர்க்மேன், எங்களது காலத்தில்: சோசலிசமும் தொழிலாளர் எழுச்சியும், 1885-1905, ஆலன் & அன்வின், சிட்னி, 1985, ப. 101.

12. மூன்றாவது காமன்வெல்த் அரசியல் தொழிலாளர் மாநாட்டின் அரசியல் அறிக்கை, மெல்போர்ன், 1905, ப.10

13.வி.இ.லெனின், ‘ஆஸ்திரேலியாவில்’, லெனின் படைப்புகள் தொகுப்பு, தொகுதி. 19, பிராக்ரஸ் பப்ளிஷர்ஸ், மாஸ்கோ, 1980, ப.217.

14. வி.இ.லெனின், ’பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியுடனான இணைப்பு மீதான உரை’, லெனின் படைப்புகள் தொகுப்பு, தொகுதி.31, மாஸ்கோ, 1980, பக். 257-258.

15. வி.இ.லெனின், ‘என்ன செய்ய வேண்டும்?’ லெனின் படைப்புகள் தொகுப்பு, தொகுதி 5, பிராக்ரஸ் பப்ளிஷர்ஸ், மாஸ்கோ, 1980, பக். 383-384.

16. ‘விக்டோரிய தொழிலாளர் இயக்கத்தில் சோசலிசப் போக்குகளின் வழிவந்ததாய் கட்சி’, ஈ.எஃப்.ஹில், கம்யூனிஸ்ட் திறனாய்வு, ஆகஸ்டு 1945, பக்.580-582.

17. லியோன் ட்ரொட்ஸ்கி, போரும் அகிலமும், யங் சோசலிஸ்ட் பப்ளிகேஷன், கொழும்பு, 1971, ð‚.vii-viii

18. ஆஸ்திரேலியாவுக்காக பேசுதல்: நமது தேசத்தை வடிவமைத்த பாராளுமன்ற உரைகள், ராட் கெம்ப் மற்றும் மரியோன் ஸ்டாண்டன் (eds), ஆலன் & அன்வின், ஏப்ரல் 2005, ப. 48.

19. கிரஹாம் ஃபிரடென்பர்க், அதிகார காரணம்: ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சியின் நியூ சவுத் வேல்ஸ் கிளையின் அதிகாரபூர்வ வரலாறு, ப்ளூட்டோ பிரஸ், லெய்சார்ட், 1991, ப.117.

20. லியோன் ட்ரொட்ஸ்கி, ‘உலக பொருளாதாரம் ஸ்திரப்படும்கேள்வி குறித்து’, லியோன் ட்ரொட்ஸ்கி, ஹிலெல் டிக்டின் மற்றும் மைக்கேல் காக்ஸ் (eds) ஆகியோரின் சிந்தனைகள், போர்குபைன் பிரஸ், லண்டன், 1995, ப. 349