சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil :

8-A global counter-offensive against the working class

தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஓர் உலகளாவிய எதிர்-தாக்குதல்

Use this version to print 

207. 1968 மற்றும் 1975க்கு இடையில் புரட்சிகர எழுச்சியின் சர்வதேச வாய்ப்பும், போராட்டதன்மையும் இருந்த போதினும், தொழிலாள வர்க்கத்தால் அதன் பழைய அமைப்புகளின் இடுக்கிப்பிடிகளை உடைத்து, நெருக்கடிக்கு ஒரு சோசலிச தீர்வை முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை. பப்லோவாத போக்குகளின் உதவியைப் பெற்றிருந்த சமூக ஜனநாயகவாதிகளும், ஸ்ராலினிசவாதிகளும் முதலாளித்துவ ஆட்சியை அச்சுறுத்திய வெகுஜனப் போராட்டங்களை நோக்குநிலை தவறச் செய்து ஒடுக்கினார்கள். புரட்சிகர தலைமையின் நெருக்கடி முக்கிய பிரச்சினையாக நின்றது. ஒரு சுயாதீனமான அரசியல் முன்னோக்கின்மையானது, முதலாளித்துவம் தனது சொந்த முன்னெடுப்புகள் மூலம், உலகளாவிய ஒழுங்குமுறையை மறுஒருங்கிணைப்பு செய்யவும் அனுமதித்தது. கன்பெர்ரா ஆட்சி கவிழ்ப்பில் விட்டலேமின் பயம்மிக்க சரணடைவு தொடர்ச்சியான பல்வேறு காட்டிக்கொடுப்புகளில் ஒன்று மட்டும் தான். சிலியில், ஜனாதிபதி அல்லென்ட், கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மத்தியவாத MIR (புரட்சிகர இடது இயக்கம்- இதற்குள் தான் சிலியின் ட்ரொட்ஸ்கிச இயக்கம் பப்லோவாதத்தால் கலைக்கப்பட்டது) ஆகியவற்றுடன் இணைந்து, தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதைத் தடுக்க சாத்தியப்பட்ட எல்லாவற்றையும் செய்தது. இது தான் செப்டம்பர் 11, 1973 இன் ஜெனரல் பினோசேயின் இராணுவ கவிழ்ப்பிற்கு வழியைத் திறந்துவிட்டது. சோசலிச சமத்துவ கட்சியின் (அமெரிக்கா) வரலாற்று & சர்வதேச அடித்தளங்கள் விளக்கியபடி: "தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் இதுபோன்ற அரசியல் கோழைத்தனமான செயல்கள், சர்வதேச முதலாளித்துவம் தான் பாதிப்பு எதுவுமற்று தொழிலாள வர்க்கத்தை தாக்கலாம் என நம்பவைத்து அதனை ஊக்குவிக்க மட்டுமே உதவியது. ஆர்ஜென்டினாவில், இராணுவம் பெரோனிஸ்டு ஆட்சியை தூக்கி எறிந்துவிட்டு---இது பப்லோவாதிகளால் ஆதரிக்கப்பட்டிருந்தது---இடதிற்கு எதிராக ஒரு பயங்கரவாத ஆட்சியைத் தொடங்கியது. இலங்கையிலும், இஸ்ரேலிலும் மில்டன் ஃப்ரெட்மானால் முன்னெடுக்கப்பட்ட கீன்சியன் எதிர்ப்பு நிதிக்கொள்கைகளுக்கு ஆதரவளித்து, வலது-சாரி அரசாங்கங்கள் அதிகாரத்திற்கு வந்தன. ஃப்ரெட்மேனின் பொருளாதார தத்துவங்கள் ஏற்கனவே சிலியின் சர்வாதிகாரத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தன."[81]

208. 1970களின் இறுதி வாக்கில், அதன் ஆட்சியை ஸ்திரப்படுத்தி இருந்த முதலாளித்துவம், தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஓர் உலகளாவிய போராட்ட எதிர்ப்பைத் தொடங்க முன்வந்தது, இது அரசியல் ரீதியாக றேகன் மற்றும் தாட்சர் அரசாங்கங்கள் அதிகாரத்திற்கு வந்ததில் அடையாளப்பட்டது. 1980கள் முழுவதிலும், இந்த அரசாங்கங்கள் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க பொருளாதாரங்களின் பரந்த மறுகட்டமைப்பைக் கையாண்டன, அத்துடன் பத்து மில்லியன் கணக்கான வேலைகளை அழித்து, தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமையின் மீது முடிவிலா தாக்குதலைத் தொடுத்தன. 1982 வாக்கில், அமெரிக்காவின் தொழில்துறை உற்பத்தி, 1979ல் அதன் உச்சியில் இருந்ததிலிருந்து 12 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. அமெரிக்க தொழிலாளர்களின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் போராடும் பிரிவுகளைக் கொண்டிருந்த தொழில்துறை, அப்போது யுத்தத்திற்குப் பின்னர் உயர்ந்திருந்த வேலைவாய்ப்பின்மையின் உயர்கட்டத்தை அடைந்திருந்தது. வாகனத்துறையில், வேலைவாய்ப்பின்மை 23 சதவீதத்தை எட்டியது, எஃகு மற்றும் பிற உலோகங்கள் துறையில் 29 சதவீதமும், கட்டுமானத்துறையில் 22 சதவீதமும் மற்றும் வீட்டுபொருட்கள் மற்றும் வடிவமைக்கப்பட்ட உலோக பொருட்கள் துறையில் 19 சதவீதமும் வேலைவாய்ப்பின்மை எட்டி இருந்தது. பிரிட்டனில் உற்பத்தி தொழில்துறையில் சுமார் 25 சதவீதம், 1980-84 காலங்களில் அழிக்கப்பட்டது.

209. ஆஸ்திரேலியாவில், ஃபிரேசர் அரசாங்கம் டிசம்பர் 1975 தேர்தல்களில் பாராளுமன்றத்தில் மிகப் பெரும் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்திருந்தது, இது 1977 தேர்தல்களுக்கு பின்னரும் அது தக்கவைத்து கொண்டிருந்த ஒரு நிலையாகும். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் இருப்பதுபோன்ற அதே "சுதந்திர சந்தை" முறைமைகளை முதலாளித்துவம் கோரி வந்தது, ஆனால் தாராளவாதிகளால் அவற்றை செயல்படுத்த முடியவில்லை. தொழிலாள வர்க்கத்தின் மற்றொரு எழுச்சியின் மீதான அச்சத்திலிருந்த ஃப்ரேசரும், அவருடைய மந்திரிகளும், தொழில்துறை மோதல்களைத் தணிக்க ACTU தலைமையையும் மற்றும் அதன் தலைவர் ஹாவ்கேயையும் (இவர் பரவலாக "தொழில்துறை தீயணைப்புமனிதர்" என்று அறியப்பட்டிருந்தார்) நேரடியாக சார்ந்திருந்தார்கள். ஃப்ரேசரின் கருவூல செயலாளர் ஜோன் ஹோவர்டு பின்னர் குறிப்பிட்டது போல, 1975 நிகழ்வுகளால் சமூகத்தின் நுண்மையான "இழை" ஆழமாக இழுக்கப்பட்டிருந்தது.

210. கன்பெர்ரா சதிக்கு எதிரான போராட்டங்களின் காட்டிக்கொடுப்பும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட தாராளவாதிகளின் தேர்தல் வெற்றியும், முன்னர் தீவிரமாக இருந்த இளைஞர்கள் மற்றும் மத்தியதர வர்க்க அடுக்குகளின் மத்தியில் ஒரு வலதுசாரி நகர்வை ஏற்படுத்தியது. தோல்விக்கான கண்டனத்தை தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்கங்களின் தலைமையின் மீது சுமத்தாமல், மாறாக தொழிலாள வர்க்கத்தின் மீதே சுமத்திய அவர்கள் அரசியலை விட்டு விட்டு தங்களின் சொந்த பிழைப்புகளைத் தொடரத் தொடங்கினார்கள். இந்த நகர்வால் சோசலிச தொழிலாளர் கழகத்தின் மீது உருவான அழுத்தங்கள், WRP இல் நிகழ்ந்து கொண்டிருந்த சீரழிவால் மேலும் சிக்கலாகியிருந்தன. WRP 1975 நிகழ்வுகள் குறித்த எவ்வித விவாதங்களையும் தடுப்பதைத் தொடர்ந்து கொண்டிருந்தது.

211. 1976 வாக்கில், பிரிட்டனில், தொழிலாள வர்க்கத்தின் அபிவிருத்தியில் WRP எதிர்கொண்டு வந்த பிரச்சினைகளை, அது இங்கிலாந்திலிருந்த தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்குள் இருந்த "இடது" போக்குகள் மற்றும் மத்தியதர வர்க்கத்தின் பிரிவுகள் மற்றும் மத்திய கிழக்கில் இருந்த முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகளின் மத்தியிலிருந்த சில பிரிவுகள் உட்பட, ஏனைய சமூக அடுக்குகளின் ஆதரவைப் பெறுவதன் மூலமாக கடந்து வர விரும்பியது. தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான முன்னோக்கை அபிவிருத்தி செய்வதன் அடிப்படையில், நிரந்தரப் புரட்சி வேலைத்திட்டத்திற்கான போராட்டம், அதிகமாக பப்லோவாத நிலைப்பாடுகளை நோக்கி மாற்றம் பெறத் தொடங்கியது, இந்த நிலைப்பாடுகளைத் தான் பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் 1950 கள் மற்றும் 60 களில் எதிர்த்தார்கள். 1977 வாக்கில் ஹீலி-பாண்டா-சுலோட்டர் தலைமை நனவுபூர்வமாக சோசலிச தொழிலாளர் கழகத்தை அதே திசையில் தான் தள்ளிக் கொண்டிருந்தது. 1977ல், சோசலிச தொழிலாளர் கழகத்திற்கும், கட்சியை விட்டுவெளியேறி, ஆனால் இன்னும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கு ஆதரவை வலியுறுத்தி வந்த ஒரு குழுவிற்கும் இடையிலான ஒரு கூட்டிணைவை ஏற்படுத்த அது முயன்றது. WRP இன் முயற்சிகள் இருந்தாலும் கூட, முயற்சிக்கப்பட்ட அந்த கூட்டிணைவு தோல்வி அடைந்தது. அந்த இரண்டு போக்குகளும் அடிப்படையில் சமரசப்படுத்தி கொள்ள முடியாத வர்க்க நிலைநோக்கை கொண்டிருந்தன. முன்னாள்-சோசலிச தொழிலாளர் கழக குழு, தேசியவாதம், சந்தர்ப்பவாதம் மற்றும் தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கான ஆதரவு ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தியது. சர்வதேசியவாதத்தின் அடிப்படையிலும், தொழிற் கட்சிவாதம், ஸ்ராலினிசம் மற்றும் சீர்திருத்தவாதம் ஆகியவற்றிற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுதந்திரத்தின் தேவையின் அடிப்படையிலும், சோசலிச தொழிலாளர் கழகம் ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. பிரச்சினைகள் என்னவாக இருந்தாலும், இந்த வேலைத்திட்டத்திற்கான போராட்டம் தான் கட்சியின் வாழ்க்கை மற்றும் வேலை ஆகியவற்றின் மிக மையமாக இருந்தது.

212. 1981-82 வாக்கில், ஆஸ்திரேலியாவில் பல தொழிற்சாலை மூடல்களுக்கு இடையில், வேலைவாய்ப்பின்மை வேகமாக அதிகரித்துக்கொண்டிருந்தது. ஆனால் ஃபிரேசர் அரசாங்கம் போர்க்குணமிக்க பதிலிறுப்புக்கு தயாரில்லாது இருந்தது. ஆகஸ்ட் 1981ல் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களை பணிநீக்கம் செய்ததன் மூலமாக அமெரிக்க தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக றேகன் ஒரு யுத்தத்தைத் தொடுத்த அதேசமயம், முதலாளித்துவத்தின் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகும் வண்ணம், இதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் போக்குவரத்து தொழிலாளர்களின் ஒரு சம்பள போராட்டத்தின் முன்னால் ஃபிரேசர் அரசாங்கம் பின்வாங்கியது. 1982ன் நடுப்பகுதியில், சுமார் 1,500 தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் பணியிலிருந்து தூக்கி எறியப்பட்டு கொண்டிருந்தார்கள். ஆயிரக்கணக்கான எஃகு மற்றும் சுரங்க வேலைகள் அழிக்கப்பட்டு கொண்டிருந்தன, செப்டம்பரில் வொல்லொன்கோங்கில் நடந்த எஃகு தொழிலாளர்களின் ஒரு பெருந்திரளான கூட்டத்தில், BHP ஐ தேசியமயமாக்க பதவிக்கு வரவிருக்கும் தொழிற் கட்சி அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அக்டோபரின் தொடக்கத்தில், NSW தெற்கு கடற்கரையில் இருந்த சுரங்கத் தொழிலாளர்கள் அதன் மூடுதலுக்கு எதிரான போராட்டத்தில் கீமிரா சுரங்கத்தை ஆக்கிரமித்தார்கள். இது தொடர்ச்சியான போராட்டங்களையும் வெளிநடப்புகளையும் தூண்டியது. போராட்டத்தின் உச்சமாக சுரங்கத் தொழிலாளர்களும், எஃகுத்துறை தொழிலாளர்களும் மற்றும் வொல்லொன்கோங்கின் தொழில்துறை பகுதியிலிருந்த ஏனையவர்களும் அக்டோபர் 26ம் தேதி பாராளுமன்றத்தையே முற்றுகையிட்டு உள்நுழைய முயன்றனர். குவின்ஸ்லாந்திலும் ஒரு பொது வேலைநிறுத்தம் வெடித்தது, NSW இல், பத்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், வொல்லொன்கோங்கிலிருந்து தொடங்கிய வேலைக்கான உரிமை என்ற பேரணியின் முடிவில் சிட்னி மத்திய வியாபார நிலையத்தினுள் (CBD) கூடினர்.

உடன்படிக்கையும், ஹாவ்க்-கீட்டிங் தொழிற் கட்சி அரசாங்கமும்

213. ஃப்ரேசர் அரசாங்கத்தின் வெளிப்படையான விரிசல்களுடன், தொழிலாள வர்க்கத்தின் இந்த சக்திவாய்ந்த போராட்டம், தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க தலைமைகளுக்கு இடையிலான விலைகள் மற்றும் வருவாய்களின் உடன்படிக்கை (Accord) என்றழைக்கப்பட்டதற்கான திரை-மறைவு தயாரிப்புகளுக்குத் தூண்டுதலை அளித்தது. உடன்படிக்கை என்பது, நடுவர்மன்ற அமைப்புமுறையால் தீர்மானிக்கப்படும் நிலையான ஊதிய உயர்வு குறித்து தொழிற்சங்க மற்றும் தொழிற் கட்சி தலைமைகளுக்கு இடையில் நடந்த ஓர் உடன்படிக்கையாகும். அதன்படி அந்த கட்டமைப்பிற்கு வெளியில் கோரப்படும் அனைத்து கூடுதல் ஊதியத்தையும் ஒடுக்க தொழிற்சங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ராலினிஸ்டுக்களால் மிக உற்சாகமாக ஊக்குவிக்கப்பட்ட ஊதிய வெட்டிற்கான இந்த திட்டம், "சமூக ஊதியத்தை", அதாவது, தொழிற் கட்சி அரசாங்கம் வழங்கக்கூடிய கூடுதல் சமூக நலன் மற்றும் பிற சலுகைகளை அதிகரிப்பதன் மூலமாக வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்படும் என்ற கூற்றை அழைத்துக் கொண்டு வந்தது.

214. (Accord) உடன்படிக்கையானது, 1983 மார்ச்சில் அதிகாரத்திற்கு வந்த ஹாவ்க் தொழிற் கட்சி அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் மையப்புள்ளியாக இருந்தது. 1975 கன்பெர்ரா சதியிலிருந்து தொழிற் கட்சியின் மற்றும் தொழிற்சங்கத்தின் தலைவர்கள் பெற்றுக்கொண்ட முக்கிய பாடமாக தொழிற் கட்சி அடுத்து ஆட்சிக்கு வரும்போது தொழிலாள வர்க்கத்தை ஒடுக்கி வைப்பதற்கான ஓர் இயக்கமுறை அமைக்கப்பட வேண்டிய தேவை இருக்கின்றது என்பதை பெற்றுக்கொண்டனர். ACTU செயலாளர் பில் கெல்டி, "விட்டலம் தொழிற் கட்சி அரசாங்கத்துடன் கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தை நாம் உண்மையிலேயே வீணடித்துவிட்டோம் என்பதை தொழிற்சங்கங்களும், தொழிற் கட்சியின் சில பிரிவுகளும் தெளிவாக புரிந்துகொண்டிருக்கின்றன" என்று குறிப்பிட்டார். சர்வதேச நெருக்கடிகள் இருந்தன என்ற உண்மை இருந்த போதினும், உண்மையில் நம்மை விட்டு அதை நாம் நழுவ விட்டுவிட்டோம். இதன் விளைவாகவே பொருளாதார மேலாண்மையில் தொழிற் கட்சி அரசாங்கம் ஒரு நல்ல சாதனையைப் படைக்க முடியவில்லை என்பதுடன், சங்கங்களும் ஒத்துழைக்காமல் போயின. சந்தர்ப்பத்தை மீண்டும் வீணடித்துவிடக்கூடாது என்பதில் பல சங்கங்கள் தீர்மானமுற்றிருந்தன."[82] தொழிற் கட்சியால் மட்டும் இந்த தயாரிப்புகளைச் செய்ய முடியாது---உடன்படிக்கையை சேர்ந்து உருவாக்கவும், அதை செயல்முறைப்படுத்தவும் அதற்கு பல்வேறு ஸ்ராலினிச கட்சிகளின் உதவியும் தேவைப்பட்டது. உண்மையில், ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி உறுப்பினர்களால் இறுதி ஆவணம் வரையப்பட்டு, ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரிகளால், மாவோயிஸ்டுகள் மற்றும் மாஸ்கோ கட்சியின் ஆதரவுகளுடன் (இவற்றின் மூத்த உறுப்பினர்கள் சில மிகப்பெரிய மற்றும் மிகவும் போராடும் சங்கங்களில் முக்கிய பொறுப்புகளில் இருந்தார்கள்) தொழிற்சங்க போராட்டங்களுக்குள் கொண்டு செல்லப்பட்டன.

215. விட்டலமின் கீழ் அபிவிருத்தி அடைந்திருந்த ஊதியங்களுக்கான போராட்ட வகையினை ஒடுக்குவதை மட்டும் இந்த Accord உடன்படிக்கை நோக்கமாக கொண்டிருக்கவில்லை. தீவிர சுரண்டலுக்கான கட்டமைப்பை உருவாக்குவதற்காகவும், சமூக நிலைமைகளை கீழிறக்குவதற்காகவும் சுயாதீனமான தொழிலாள வர்க்க அமைப்பின் ஒவ்வொரு வடிவத்தையும் உடைக்க அது நோக்கம் கொண்டிருந்தது. பெப்ரவரி 3, 1983ல், பிரதம மந்திரி ஃப்ரேசர் ஒரு முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்புவிடுத்த அதே தினத்தன்று, ஒரு நிர்வாக மட்டத்திலான ஆட்சிக்கவிழ்ப்பின் மூலமாக பில் ஹேடன் நீக்கப்பட்ட பின்னர், 1980ல் பாராளுமன்றத்திற்குள் ஏற்கனவே நுழைந்திருந்த ஹாவ்க் தொழிற் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார். ஒருபுறம் பெருவர்த்தகங்களுடனான அவரின் நெருங்கிய தொடர்புகள், மற்றும் மறுபுறம் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடனான அவரின் உறவு காரணமாக ஹாவ்க் அந்த பதவிக்குக் கொண்டு வரப்பட்டார். Accord உடன்படிக்கையை நிறுவுவதற்கே அவர் பிரத்தியேகமாக அவ்விடத்தில் அமர்த்தப்பட்டார் என்பதையே இது குறிக்கிறது. ஒன்பது நாட்களுக்குப் பின்னர், தொழிற்சங்கங்கள் ஒரு சிறப்பு மாநாட்டில் Accord உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டன.

216. மார்ச் 5, 1983ல் ஓர் எதிர்பாரா தேர்தலில் ஆஸ்திரேலிய தொழிற் கட்சி வெற்றி பெற்றது. ஐந்து வாரங்களுக்கு பின்னர், பாராளுமன்றம் கூட்டப்படுவதற்கு முன்னால், முதல் வேலையாக பிரமத மந்திரி ஹாவ்க், பிரதிநிதிகள் சபையில் தொழில் வழங்குனர்களின், சங்கங்களின் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளின் ஒரு நான்கு-நாள் கூட்டத்தைக் கூட்டி தலைமையேற்று நடத்தினார். மாநாட்டை தொடங்கி வைத்து ACTU செயலாளர் கேல்டி அறிவித்ததாவது: "தொழிற்சங்க இயக்கத்தின் கருத்துக்களை சிலநேரங்களில் தவறாக புரிந்து கொள்ளும் தொழில்வழங்குனர்களுக்கு நான் வெளிப்படையாக கூறுவது என்னவென்றால், பெருநிறுவனங்கள் இலாபங்கள் ஈட்ட வேண்டிய தேவை இருப்பதை நாங்கள் ஏற்று கொள்கிறோம், மேலும் தற்போதைய சூழ்நிலையில், வேலைவாய்ப்புகளை உயர்த்த அவற்றிற்கு மேலும் அதிகமாக இலாபங்கள் தேவைப்படக்கூடும்." ஊதிய கட்டுப்பாடுகளை தொழிற்சங்க தலைவர்கள் வலியுறுத்துவதை விடுங்கள், அதனை ஏற்றுக் கொள்கிற ஒரு நிலையைக் கூட அதிகம் பார்த்ததில்லை என்பதால் "தொழில் வழங்குநர்களுக்கு இந்த மாநாடு ஒருவகை ஆச்சரியமாய் அமைந்தது" என்று என்று பின்னர் ஹாவ்க் குறிப்பிட்டார். தொழிற்சங்கங்களின் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது. Accord உடன்படிக்கையின் முதல் நான்கு ஆண்டுகளில் சராசரி மொத்த வருமானம் 4.2 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. ஹாவ்க்-கீட்டிங் அரசாங்கத்தின் மொத்த காலத்தில், ஒரு தொழிலாளருக்கான ஆண்டு மொத்த சதவீத அதிகரிப்பு பூஜ்ஜியத்தைவிட சற்றே குறைவாக இருந்தது, ஒப்பிடுகையில், இது விட்டலம் அரசாங்கத்தின்கீழ் 4 சதவீதத்திற்கும் மேலாக இருந்தது, ஃப்ரேசர் அரசாங்கத்தின்கீழ் 2 சதவீதத்திற்கும் சற்றே குறைவாக இருந்தது.

217. Accord உடன்படிக்கையை இறுதிப்படுத்துவதற்கான அவசரம் சர்வதேச அபிவிருத்திகளால் உந்தப்பட்டிருந்தது. டிசம்பர் 1983ல், தொழிற் கட்சி அரசாங்கம் ஆஸ்திரேலிய டாலரை புழக்கத்தில் விட்டது. பிரெட்டன் வூட்ஸ் அமைப்புமுறையின் கீழ், ஆஸ்திரேலிய செலாவணியின் மதிப்பானது, அமெரிக்க டாலர் மற்றும் பிரிட்டனின் பவுண்டுக்கு நிகராக, இதனால் அனைத்து முக்கிய செலாவணிகளுக்கும் நிகராக நிலையான மதிப்புடன் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 1971ல் அந்த அமைப்புமுறையின் பொறிவுக்குப் பின்னர், ஆஸ்திரேலிய டாலரின் மதிப்பு குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வதேச செலாவணி சந்தைகளுக்குள் மத்திய வங்கியின் தலையீடுகள் மூலம் தொடர்ந்து சீர்செய்து கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் 1980களின் தொடக்கத்தில், அதிகளவில் சர்வதேச நிதி பாய்ந்து வந்ததால், இது சாத்தியப்படாமல் போனது. இதுபோன்ற செயல்பாடுகளை எந்தவொரு வங்கியினாலோ அல்லது நெறிமுறை ஆணையத்தினாலோ எதிர்கொள்ள முடியாது. ஆஸ்திரேலிய டாலரின் புழக்கம் பெரும் விளைவுகளைக் கொண்டிருந்தது. கூட்டமைப்பு உருவாகியதிலிருந்து பதவிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கத்தின் பொருளாதார திட்டத்திற்கும் அச்சாணியாக இருந்த தேசிய பொருளாதார ஒழுங்கமைப்பின் மைய அடித்தளங்களில் ஒன்றை நீக்கிவிட்டது. இப்போது ஒவ்வொரு நாளும் உலகளவிலிருந்து பெருமளவிற்கு பாய்ந்து வந்த நிதி மற்றும் மூலதனமானது, ஒவ்வொரு நாட்டின் அரசாங்கங்களின் மீது அவற்றின் சொந்த கோரிக்கைகளைத் திணித்தது, இந்நாடுகள் ஒவ்வொன்றும் தமது சொந்த தேசிய பொருளாதாரம் "சர்வதேசரீதியாக போட்டித்தன்மையுடன்" திகழும் நோக்கத்தால் உந்தப்பட்டிருந்தன. உலக பொருளாதாரத்தின் உருமாற்றத்திற்கு பதிலிறுப்பாக, தொழிற்கட்சி அரசாங்கமும், தொழிற்சங்கங்களும் Accord உடன்படிக்கையை மேலும் அபிவிருத்தி செய்ய தொடங்கின. சம்பளங்களை மட்டும் சுருக்குவது போதுமானதாக இருக்கவில்லை. தேசிய நெறிமுறையின் அமைப்புமுறையின் கீழ் உருவாக்கப்பட்ட பணி நிலைமைகளும், உறவுகளும் உடைக்கப்பட்டு, சர்வதேச மூலதனத்தின் புதிய தேவைகளுக்கு ஏற்ற வகையில் தொடர்ந்து உற்பத்தியை அதிகரிக்க வேண்டியதாக இருந்தது. தொழிற்சங்கங்கள் அந்த வேலையை ஆர்வத்தோடு எடுத்துக்கொண்டன. இப்போது தமது உறுப்பினர்களின் சமூக நிலைமைகளை முன்னேற்றுவதற்கான குறைந்தபட்ச சலுகைகளை கோரிப் பெறுவது மட்டும் அவர்களின் பாத்திரமாக இல்லை. உலகளாவிய போட்டியின் அழுத்தத்தால் நிர்பந்திக்கப்பட்டு இப்போது உற்பத்தித்திறன் அதிகரிப்பை திணிக்க வேண்டியதிருந்தது. 1987 ACTU காங்கிரஸில் கொண்டு வரப்பட்ட மறுகட்டுமானம் செய்யப்பட்ட ஆஸ்திரேலியா (Australia Reconstructed) ஆவணத்தில் புதிய முன்னோக்கை வெளிப்படுத்தி கெல்டி எழுதியதாவது: "நம்முடைய சர்வதேச போட்டித்திறனை மேம்படுத்த வடிவமைப்பு மாற்றமும், ஓர் உற்பத்தி கலாச்சார ஊக்குவிப்பும் அவசியப்படுகிறது. ஏறக்குறைய ஆஸ்திரேலியாவின் மறுகட்டமைப்பிற்கு குறைவில்லாமல் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம். இவை வரலாற்று முக்கியத்துவமுள்ள காலகட்டமாகும். நம்முடைய எதிர்காலம் ஆழமாக உலகின் மற்ற பாகங்களோடு பிணைக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்ற சவால்களை முகங்கொடுத்த ஏனைய பல நாடுகள் விரைவாக "சர்வதேசமயமாகி" வருகின்றன. சர்வதேச அழுத்தங்களைப் புரிந்து கொள்வதும், பதிலிறுப்பதும் ஒரு தேசிய தேவையாக இருக்கிறது---இந்த தேவையில் தொழிற்சங்கங்களும் பங்களிக்க வேண்டும்." [83] வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இலாபங்களை அதிகரிப்பதில் மத்திய இயங்குமுறையாக தொழிற்சங்கங்கள் மாற வேண்டும்.

218. மீண்டும் மீண்டும், 1980கள் முழுவதிலும் தொழிலாளர்கள் தங்கள் ஊதியங்களையும், நிலைமைகளையும் பாதுகாத்து கொள்வதற்காக போராட்டங்களில் இறங்கினார்கள், தொழிற்சங்க தலைவர்களால் தனிமைப்படுத்தப்பட்டதும் காட்டிக் கொடுக்கப்பட்டதும் தான் நிகழ்ந்தது. 1984-85ல் கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் உடைப்பு, மற்றும் SEQEB தொழிலாளர்களை வேலை நீக்கம் தொடங்கி, 1986இல் ரோப் ரிவர் சுரங்க பிரச்சினை வரை, கிடைத்த ஒவ்வொரு தோல்வியும் ஒரு புதிய தாக்குதலுக்கான தொடக்க புள்ளியை அடையாளப்படுத்தின. அதன் உச்சமாய் 1989இல் விமான ஓட்டிகளின் வேலைநிறுத்தத்தை உடைக்க ACTU மற்றும் மொத்த தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் உற்சாகமான ஆதரவுடன் ஆயுதமேந்திய படைகள் பயன்படுத்தப்பட்டன. அதேசமயத்தில், போராளித்துவ போராட்ட வரலாறு கொண்ட தொழிலாளர்களை அதிக எண்ணிக்கையில் பணியமர்த்தியிருந்த தொழிலகங்களை பிரிப்பதற்கும் தொழிற்சாலைகளை மூடுவதற்கும் திட்டமிட்டதொரு கொள்கை ஸ்தாபிக்கப்பட்டது. இயங்கிக்கொண்டிருந்த தொழிற்சாலைகளில், உற்பத்தித் தள தொழிலாளர் குழுக்களும், அமைப்புகளின் ஏனைய வடிவங்களும் ஒன்று அழிக்கப்பட்டன அல்லது நிர்வாகத்தின் கைக்கூலி கருவிகளாக மாற்றப்பட்டன. தொழிற்சங்கங்களுக்குள் ஜனநாயகத்தின் எந்த சாயலும் கூட தடை செய்யப்பட்டது, போர்க்குணம்மிக்க தொழிலாளர்கள் பலியாக்கப்பட்டனர். தொழிற் கட்சி அரசாங்கத்தின் தனியார்மயமாக்கும் திட்டம், அரசசொத்துக்களைப் பெருநிறுவன உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டிய விளைவை ஏற்படுத்தியது. இது இந்த ஒப்பந்தங்களுக்கு ஏற்பாடு செய்த வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் பெரிதும் ஆதாயமளித்தன. சமூக உள்கட்டமைப்பு அதிகளவில் தனியார்மயமாக்கப்பட்டன, மேலும் பயன்படுத்துவோர் கட்டணத்தை செலுத்தட்டும் (User pays) என்கிற நடைமுறை விரிவாக்கப்பட்டது. சுருங்கக் கூறினால், றேகனால் அமெரிக்காவிலும், தட்சரால் பிரிட்டனிலும் முன்முயற்சிக்கப்பட்ட வேலைத்திட்டம், ஆஸ்திரேலியாவில் ஹாவ்க்-கீட்டிங் தொழிற்கட்சி அரசாங்கத்தால், தொழிற்சங்கங்களின் முழு ஒத்துழைப்புடன் கொண்டு செலுத்தப்பட்டது.

219. தொழிற் கட்சி அரசாங்கத்தால் வாசிக்கப்பட்ட "பொருளாதார மறுகட்டமைப்பு" பரவலான சமூக சமத்துவமின்மைக்கு இட்டுச் சென்றது. 1986-96 தசாப்தத்தில், அடிமட்டத்திலிருந்த 40 சதவீதத்தினரின் உண்மையான சராசரி வருமானம் வாரத்திற்கு சுமார் 98 டாலராக குறைந்தது. இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து 30 ஆண்டுகளில், உண்மையான ஊதியங்கள், சராசரியாக, ஆண்டுக்கு 2-3 சதவீதம் உயர்ந்திருந்தது. 1975க்கு பின்னர் இந்த வளர்ச்சி நின்று போனது. இதனால் 1995 வாக்கில், ஊதியங்கள் முன்னர் தொடர்ந்து கொண்டிருந்த விகிதத்தில் உயர்ந்திருந்தால் இருந்திருக்க வேண்டிய அளவை விட உண்மையான ஊதியங்கள்30 முதல் 50 சதவீதம் வரை குறைவாய் இருந்தன. அங்கே வருமானம் பெருமளவில் ஊதியங்களிலிருந்து இலாபங்களை நோக்கி மறுவினியோகமுற்றுக் கொண்டு இருந்தது. 1975ல், யுத்தத்திற்கு பிந்தைய வளர்ச்சியின் உச்சத்தில், தேசிய வருமானத்தில் ஊதியத்தின் பங்கு 62.4 சதவீதமாக இருந்தது. 1992 வாக்கில், 56 சதவீதமாக வீழ்ச்சி அடைந்த அது, 2008 வாக்கில் 53 சதவீதத்திற்குச் சென்றது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவிற்குள் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி

220. 1970கள் மற்றும் 1980கள் முழுவதும், ஃபிரேசர் மற்றும் ஹாவ்க் அரசாங்களுக்கு எதிரான பல மிக கடுமையான போராட்டங்களில் தலையிட்டு, தொழிலாள வர்க்கத்திற்கு அதன் நிலைநோக்கை ஆழப்படுத்த சோசலிச தொழிலாளர் கழகம் போராடியது, இதன் மூலம் அது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் முக்கியமான அடுக்குகளின் ஆதரவைப் பெற்றதுடன், உறுப்பினர்களையும் வென்றெடுத்தது. கட்சியின் இருவாரத்திற்கு ஒருமுறை வெளியீடான தொழிலாளர் செய்திகள் பத்திரிகை பரவலாக அனைத்து முக்கிய நகரங்களுக்கும் வினியோகிக்கப்பட்டன, அது எஃகு தொழிலாளர்கள் மற்றும் சுரங்கத் தொழிலாளர்கள், குவீன்ஸ்லாந்து மின்சார தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள், உலோகத்துறை தொழிலாளர்கள், ரெயில்வே தொழிலாளர்கள், தபால்துறை தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரின் போராட்டங்களிலும், வேலைநிறுத்தத்திலும் ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரம் வகித்தது. எவ்வாறிருப்பினும் ஹாவ்க் தொழிற் கட்சி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததால், சோசலிச தொழிலாளர் கழகத்தின் அரசியல் நிலைப்பாடு மற்றும் தந்திரோபாய அபிவிருத்தியில் புதிய சவால்கள் அதற்கு முன் வந்தன, அதை சமாளிப்பதற்கு அது ஆயுதபாணியாக இருக்கவில்லை. Accord உடன்படிக்கை, ஹாவ்க் அரசாங்கம், தொழிற் கட்சி "இடதுகள்" மற்றும் அவற்றின் ஸ்ராலினிச கூட்டுகளின் பாத்திரங்களை தோலுரித்துக்காட்டுவதற்கான போராட்டத்தில் ஏனைய பிற அரசியல் போக்குகளில் இருந்து சோசலிச தொழிலாளர் கழகம் வேறுபட்டு இருந்தாலும் கூட, அதன் தலையீடுகள் கட்சியின் அரசியல் பகுப்பாய்வை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொள்ளாமல், போர்க்குணம்மிக்க தொழிற்சங்க போராட்டங்களை ஊக்குவிப்பதில் அதிகமாய் கவனம் செலுத்தின. இந்த போக்கு தொழிலாளர் இயக்கத்திற்குள்ளேயே அதன் தேசிய பாரம்பரியங்கள் மற்றும் அழுத்தங்களுக்கு ஒரு குறிப்பிட்ட சமரசத்தை வெளிக்காட்டியது. சமூக ஜனநாயகத்திற்கு எதிரான சிக்கலான மற்றும் பிரச்சினைக்குரிய போராட்டத்தில் மார்க்சிச இயக்கத்தின் மூலோபாய அனுபவங்களில் வேரூன்றிய வழிகாட்டுதல்களும் விவாதங்களும் தான் அவசியமானவையாக இருந்தன. ஆனால் மாறாக, சோசலிச தொழிலாளர் கழகத்தின் அபிவிருத்தியின் ஆரம்பகாலத்தில் குணாம்சமாய் இருந்த WRP தலைமையிடமிருந்தான ஒத்துழையாமை, இப்போது ஒரு நிலைநோக்கின்மைக்கும், குழப்பத்திற்குமான நனவுபூர்வமான பிரச்சாரமாய் ஆனது. அக்டோபர் 1982ல் இருந்து, அதன் தத்துவார்த்த மற்றும் அரசியல் நோக்குநிலை மீது தொழிலாளர் கழகத்தின் தேசிய செயலாளர் டேவிட் நோர்த்திடம் இருந்து நெறிப்பட்ட விமர்சனங்களுக்கு முகங்கொடுத்து வந்த நிலையில், WRP இன் தலைமை விமர்சனங்களை ஒடுக்கியதோடு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவையும், அதன் பிரிவுகளையும் தனிமைப்படுத்தவும், இறுதியாக ஒழித்துக்கட்டவும் நனவுடன் செயற்பட்டது.

221. 1970களின் மத்தியில், தொழிலாளர் கழகத்தின் மற்றும் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் அரசியல் நோக்குநிலைகளுக்கு இடையில் ஒரு பரந்த பிளவு ஏற்படத்தொடங்கியது. 1975ல், தொழிலாளர் கழகம் அதன் முன்னாள் தேசிய செயலாளர் டிம் வோல்ஃபோர்த் கட்சியை விட்டு விலகியதற்கு, பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தை ஆழப்படுத்தியன் மூலமும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்று அனுபவங்களின் உட்கிரகிப்பை கட்சிப்பணியின் மையத்தில் நிறுத்துவதன் மூலமும் பதிலிறுப்பு செய்தது. தொடர்புபட்ட ஒரு அபிவிருத்தியில், லியோன் ட்ரொட்ஸ்கியின் படுகொலையை சுற்றிய சூழல்களுக்குள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் செய்யப்பட்ட ஒரு சர்வதேச பிரச்சாரத்தில் தொழிலாளர் கழகம் பெரியளவில் ஒரு மைய பாத்திரத்தை வகிக்கத் தொடங்கியது. பாதுகாப்பும், நான்காம் அகிலமும் பற்றிய விசாரணையும், அதற்கு எதிராக ஒவ்வொரு நடுத்தர வர்க்க தீவிரவாத மற்றும் திரிபுவாத போக்கும் அணிவகுப்பதும் பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் முக்கியத்துவத்தை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டியது. தொழிலாளர்கள் செய்திகள் இதழில் தொடர்ச்சியாக வெளியான அறிக்கைகளுடன், இந்த விசாரணை சோசலிச தொழிலாளர் கழகத்திற்குள் மிக உன்னிப்பாக அவதானிக்கப்பட்டது. பப்லோவாதத்திற்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் அடிப்படையில் விசாரணையின் முக்கியத்துவத்தை கட்சிக்குள்ளேயே படிப்பிப்பதுடன், ஆய்வுமுடிவுகளை விவரிக்க தொடர்ச்சியான பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட்டன. 1977ல், இந்த விசாரணையின் வரலாற்று முக்கியத்துவத்தை விவரிக்க, தொழிலாளர் கழகத்தின் தேசிய செயலாளரான டேவிட் நோர்த் ஓர் ஆஸ்திரேலிய விஜயத்தை மேற்கொண்டார். அந்த கூட்டங்கள் ட்ரொட்ஸ்கிசத்திற்கும், ஒட்டுமொத்த குட்டி-முதலாளித்துவ தீவிரவாத சூழலுக்கும் இடையில் இருந்த வர்க்க பிளவை விளங்கப்படுத்தின. அனைத்து பல்வேறு திருத்தல்வாத அமைப்புகளும் கூட்டங்களை முற்றுகையிட்டு தொழிலாளர்களையும், இளைஞர்களையும் கலந்து கொள்ளாமல் தடுக்க முயற்சித்ததோடு GPU முகவர் சில்வியா பிராங்கிளினை அவை வெளிப்படையாக ஆதரித்தன.

222. அக்டோபர்-நவம்பர் 1982இல், ஹீலியின் இயங்கியல் சடவாதத்தின் ஆய்வுகள் என்பதின் மீது ஒரு விரிவான விமர்சனத்தை நோர்த் அளித்தார். இடது ஹெகலியன்களின் மீதான தனது விமர்சனத்தில் மார்க்ஸ் கடந்து வந்திருந்த அதே ஒருவகையான அகநிலை கருத்துவாதத்திற்கு திரும்புவதையே WRP தலைவரின் மெய்யியல் நிலைப்பாடுகள் கொண்டிருக்கின்றன என்பதை அதில் அவர் விளங்கப்படுத்தினார். அனைத்து விருப்பங்கள் மற்றும் தேவைகளுக்காக" ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி மத்திய கிழக்கின் நிலைமைகளை ஆராய "பொருத்தமில்லாததாக" அணுகப்பட்டிருந்ததைக் குறிப்பிட்டுக் காட்டி, WRP தலைமையின் வேலையில் இருந்த "சந்தேகத்திற்கிடமில்லாத சந்தர்ப்பவாத மாற்றத்தை" நோர்த் தனது தொடர்ச்சியான அரசியல் விமர்சனங்களின் மூலம் எடுத்துக்காட்டினார். நோர்த் அவருடைய விமர்சனங்களில் விடாப்பிடியாக இருந்தால், தொழிலாளர் கழகத்துடனான உறவுகளை உடனடியாக முறிக்க வேண்டியதிருக்கும் என்று ஹீலியுடன் சேர்ந்து WRP பொது செயலாளர் மைக்கல் பண்டா மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு செயலாளர் சுலோட்டர் மிரட்டியதற்குப் பின்னால், விவாதிப்பதற்கான எவ்வித சாத்தியக்கூறுகளும் வழியிலேயே நிறுத்தப்பட்டன. பணயத்தில் இருந்த வர்க்க பிரச்சினைகளை வெளிப்படுத்தும் வகையில், டிசம்பர் 1983ல், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம் பற்றி தொழிலாளர் கழகம் "மிக அதிகமாய் வலியுறுத்துவதை" விமர்சித்து, சுலோட்டர் அதற்கு ஒரு கடிதம் எழுதினார். சுலோட்டருக்கு எழுதிய பதிலில், "ஒரு மார்க்சிச கட்சியின் அமைப்புரீதியான, அரசியல்ரீதியான மற்றும் தத்துவார்த்த ரீதியான கடமைகள் அனைத்தும்... இந்த அரசியல் சுயாதீனத்தை எட்டுவதை நோக்கியே துல்லியமாக செலுத்தப்படுகின்றன" என்று நோர்த் குறிப்பிட்டுக் காட்டினார். ஜனவரி 1984ல் பண்டாவிற்கு எழுதிய ஒரு கடிதத்தில், "பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட நெறிப்பட்ட போராட்டத்தின் தேட்டங்களை இழந்துவிடக்கூடிய அபாயத்தில் அனைத்துலகக் குழு இப்போது இருக்கிறது" என்றும், "முடிவுகளிலும் சரி வழிமுறையிலும் சரி வரலாற்றுரீதியாக பப்லோவாதத்தோடு நாம் தொடர்புபடுத்தும் நிலைப்பாடுகளை ஒத்தவற்றை நோக்கிய ஒரு சாய்வின் வளரும் அறிகுறிகளால் தொழிலாளர் கழகம் ஆழமான வேதனையுற்று இருப்பதாகவும்" நோர்த் தனது கவலையை வெளிப்படுத்தினார். பெப்ரவரி 1984ல் நடந்த அனைத்துலகக் குழுவின் ஒரு கூட்டத்திலும் நோர்த் அவருடைய விமர்சனங்களை விளக்கமாக விவரித்தார், இந்த கூட்டத்திற்கு சோசலிச தொழிலாளர் கழகத்தின் பிரதிநிதிகளோ அல்லது நான்காம் அகிலத்தின் இலங்கை பிரதிநிதிகளோ அழைக்கப்படவில்லை. மீண்டும் கருத்து வேறுபாடுகளை விவாதிக்க மறுத்த WRP, பிரிந்து செல்வதற்கான அதன் அச்சுறுத்தல்களை மீண்டும் தொடர்ந்தது. அந்த கூட்டத்தைத் தொடர்ந்து, ஹீலியும் சுலோட்டரும் தொழிலாளர் கழகத்தில் இருந்த தங்கள் "எதிரியை" "விதிகளின்றி" வீழ்த்தி என்ன ஒரு அருமையான வேலையை செய்து முடித்திருக்கிறோம் என்று ஒருவருக்கொருவர் வாழ்த்தி கடிதங்களைப் பரிமாறிக் கொண்டார்கள். ஒருகாலத்தில் எதற்காக அவர்கள் போராடினார்களோ அதே ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்திற்கு விரோதமுற்று, WRP தலைவர்கள் இப்போது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை கலைத்து விட போராடிக் கொண்டிருந்தனர்.

223. அனைத்துலகக் குழுவின் கூட்டம் முடிந்த வெறும் மூன்று மாதங்களுக்கு பின்னால், மே 1984ல், ஹாவ்க் அரசாங்கத்தை நீக்க கட்சி பிரச்சாரத்தை மேற்கொள்ள வலியுறுத்தி சோசலிச தொழிலாளர் கழகத்திற்கு WRP ஒரு கடிதம் அனுப்பியது. அரசாங்கம் வெறுமனே "முதலாளித்துவ வகையாக" மட்டுமில்லாமல், "எதிர்ப்புரட்சிகரமானதாகவும்" இருக்கிறது என்று அந்த கடிதம் குறிப்பிட்டது. இந்த கடித தொடர்பின் நோக்கம், சோசலிச தொழிலாளர் கழகம் எதிர்கொண்டு வந்த சிக்கலான வேலைகளில் தெளிவைக் கொண்டு வருவதல்ல, மாறாக தலைமைக்குள்ளும், ஒட்டுமொத்த கட்சியிலும் ஒரு நெருக்கடியை தூண்டிவிடுவதாகும். இதன் பயன், அனைத்துலகக் குழுவின் 1986 சோசலிச தொழிலாளர் கழகத்தின் முன்னோக்குகள் மற்றும் பணிகளின் மீதான தீர்மானங்கள் என்பதில் சுருக்கமாக மதிப்பாய்வு செய்யப்பட்டிருந்தது: " WRP இன் சீரழிவின் முழு விளைவும் ஃபிரேசர் அரசாங்கத்தின் நெருக்கடியால் தொழிற் கட்சி அரசாங்கம் மீண்டும் திரும்பும் நிலை முன்நின்ற சமயத்தில், ஆஸ்திரேலிய பிரிவால் உணரப்பட்டது. 1983ல் இருந்து ஒரு சரியான அரசியல் போக்கிற்காக சோசலிச தொழிலாளர் கழகம் தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்தது---இந்த பணி லண்டனிலிருந்து வழங்கப்பட்ட நோக்குநிலை திரிக்கும் கட்டளைகளால் சாத்தியமில்லாதபடி செய்யப்பட்டிருந்தது. தொழிற்கட்சி அரசாங்கத்தை பதவியிலிருந்து நீக்க சோசலிச தொழிலாளர் கழகம் ஒரு பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, மே 1984ல் ஜியோஃப் பில்லிங்கினால் எழுதப்பட்ட ஒரு கடிதம், ஆஸ்திரேலிய பிரிவை அழிப்பதை நோக்கமாக கொண்ட ஒரு குற்றம்மிக்க வீச்சாகும். ... அழிக்கும் முயற்சியின் அடுத்த கட்டம் செப்டம்பர் 1984ல் வந்தது. சோசலிச புரட்சிக்கு முன்னதாக இருக்கும் கடைசி அரசாங்கம் ஹாவ்க்கின் அரசாங்கம் என்பதை சோசலிச தொழிலாளர் கழகம் ஏற்கவில்லை என்று கூறி WRP அதனைக் கண்டனம் செய்தது. சூழ்ந்து கொண்ட குழப்பத்தில், ஹாவ்க் அரசாங்கத்தை ஒரு போனாபார்டிஸ்ட் அரசாங்கமாக சோசலிச தொழிலாளர் கழகம் வரையறுத்தது, இந்த வரையறையை [ஜனவரி 1985ல் நடைபெற்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின்] 10வது காங்கிரசில் ஹீலி வெகுவாய் வரவேற்றார். இந்த நிலைப்பாடு காங்கிரசில் விமர்சனத்தை சந்தித்தபோது, ஹீலி அதனைத் திசைதிருப்பி விட்டு ஆஸ்திரேலிய பிரிவின் முன்னோக்குகள் மீதான விவாதத்தை துண்டித்து விட்டார். சமூக ஜனநாயகத்திற்கு எதிராக தொழிலாளர் இயக்கத்திற்குள் ஒரு முரண்பாடற்ற மற்றும் அரசியல்ரீதியாக ஒத்திசைந்த போராட்டத்தை நிலைநிறுத்துவதும், இந்த அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் முன்னணிப் படையை ட்ரொட்ஸ்கிசத்திற்கு வென்றெடுப்பதும் சோசலிச தொழிலாளர் கழகத்திற்கு சாத்தியமாகாமல் செய்ய, WRP தன் அனைத்து தலையீடுகளிலும் நனவுபூர்வமாக செயல்பட்டது."

224. 1985இன் ஆரம்ப வாக்கில், சோசலிச தொழிலாளர் கழகம் ஓர் ஆழமான அரசியல் நெருக்கடியில் இருந்தது. விவாதங்களையும், தெளிவுபடுத்தல்களையும் தடுக்கும் நோக்கில் WRP தனதுதொடர்ச்சியான தலையீடுகளை அதிகமாக்கியதன் மூலமாக சோசலிச தொழிலாளர் கழகத்தின் தலைமை ஸ்திரம்குலைக்கப்பட்டு, கீழறுக்கப்பட்டிருந்தது. தீர்க்கப்படாத அரசியல் வேறுபாடுகளும், பதட்டங்களும் ஆழப்பட்டிருந்தன, இது எதிரெதிர் வர்க்க நிலைப்பாடுகளின் இருப்பைப் பிரதிபலித்ததோடு, சோசலிச தொழிலாளர் கழகம் இனியும் ஒருபடித்தான கொள்கையுடைய கட்சியாக இருக்கவில்லை என்பதைக் காட்டியது. இந்த நெருக்கடியை தேசிய வட்டத்திற்குள் தீர்க்க முடியாது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பணியின் மையத்தில், ட்ரொட்ஸ்கிசத்தின் வேலைத்திட்ட அடித்தளங்களை மீண்டும் நிறுவுவதற்குக் குறைந்த எதுவும் அதற்கு போதுமானதாய் இருந்திருக்கவில்லை.

தொடரும்......

பின்குறிப்புகள்:

81. The Historical & International Foundations of the Socialist Equality Party, op. cit., p. 109.[back]

82. Edna Carew, Keating: a biography, Allen & Unwin, Sydney, 1988, p. 72.[back]

83. Industrial relations and the trade unions under Labor: from Whitlam to Rudd, op. cit., p. 12.[back]

84. Fourth International, vol. 13, no. 2, 1986.[back]