சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

US threatens wider war in Pakistan

பாகிஸ்தானில் பரந்ததொரு போருக்கு அமெரிக்கா அச்சுறுத்துகிறது

Bill Van Auken
6 October 2010

Use this version to print | Send feedback

பாகிஸ்தானுக்குள் அமெரிக்க இராணுவ தாக்குதல்கள் குறித்தும் பதில் நடவடிக்கையாய் ஒரு முக்கிய நேட்டோ விநியோக பாதையை தடுத்தமை குறித்தும் அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவிய ஒருவார கால நெருக்கடி நிலையானது ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்து வரும் ஒன்பது வருட காலப் போர் கட்டுப்பாட்டை விட்டு சென்று கொண்டிருக்கும் அச்சுறுத்தல் வளர்ந்து கொண்டு செல்வதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

பாகிஸ்தான் மீதான அமெரிக்க தாக்குதல்கள் பெருமளவில் அதிகரித்தமை கடந்த வாரத்தில் உறவுகள் கூர்மையாய் மோசமடைவதற்கு மேடை அமைத்துத் தந்தது. செப்டம்பர் மாதத்தில் பாகிஸ்தான் இலக்குகள் மீது சிஐஏவின் ஆளில்லா விமானங்கள் 22 ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளன, இது தாக்குதல்கள் துவங்கியது முதல் ஒரு சாதனை அளவாகும். பாகிஸ்தான் அரசாங்கமும் உளவு அமைப்புகளும் ஆளில்லா விமானத் தாக்குதல்களைச் சகித்துக் கொண்டன, ஒத்துழைத்தும் வந்தன. ஆனால் சென்ற வாரத்தில் பாகிஸ்தான் மீதான தாக்குதலில் அமெரிக்க இராணுவம் ஒரு கணிசமான அதிகரிப்பை மேற்கொண்டது. ஆப்கானிஸ்தானுக்குள் தளமிட்டுள்ள அமெரிக்க தாக்குதல் ஹெலிகாப்டர்கள் தொடர்ச்சியான எல்லை கடந்த தாக்குதல்களை நடத்தின. இந்த தாக்குதல்களில் ஆரம்பத்திலானவை அமெரிக்காவால் “தீவிரவாதிகள்” என்றும் அந்த பகுதிவாசிகளால் உள்ளூர் பழங்குடியினத்தவராகவும் விவரிக்கப்பட்ட எண்ணற்ற பாகிஸ்தானியரின் உயிரைக் குடித்தன. கடைசி தாக்குதல் பாகிஸ்தான் இராணுவத்தின் எல்லைப் படையைச் சேர்ந்த மூவரின் உயிரைப் பறித்து எல்லைச் சாவடி ஒன்றை சுக்குநூறாக்கியது.

பாகிஸ்தானில் இருக்கும் அமெரிக்க தலைமை இராணுவ தளபதியான ஜெனரல் டேவிட் பெட்ரேஸ் இந்த தாக்குதலை “தற்காப்பு” நடவடிக்கை எனக் கூறி பாதுகாத்தார். உண்மையில் அப்படி எதுவும் இல்லை. அமெரிக்க இராணுவம் தனது தாக்குதல் ஹெலிகாப்டர்களை இலக்குகளைக் குறி வைத்து எல்லை தாண்டி அனுப்பியது. தற்காப்பு நடவடிக்கை என்று கூறுவதானால் அந்த எல்லைப் படையினர் செய்ததைத் தான் கூற வேண்டும். ஹெலிகாப்டர் பாகிஸ்தானின் இறையாண்மையை மீறும் விதமாக எல்லை தாண்டி வந்திருப்பதை எச்சரிக்கும் விதமாக அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.

பதிலடியாக, பாகிஸ்தான் அரசாங்கம் ஆப்கானிஸ்தானுக்குள் இருக்கும் அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பு படைகளுக்கு செல்லும் எரிபொருள் மற்றும் சாதனங்களுக்கான முக்கியமான விநியோகப் பாதையை மூட உத்தரவிட்டது. இப்போது அதன் ஏழாவது நாளில், டோர்காமில் இருக்கும் எல்லை கடப்பு வாயில் மூடப்பட்டிருப்பதால், பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் இருந்து கைபர் கணவாய் வரையில் நூற்றுக்கணக்கான எரிபொருள் டாங்கர்களும் கண்டெய்னர் டிரக்குகளும் செல்ல வழியின்றி வரிசையில் நின்று கொண்டிருக்கின்றன.

நின்று கொண்டிருக்கும் நேட்டோ வாகனங்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதலுக்கு டெஹ்ரிக்-இ-தலிபான் - இது ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கும் அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் ஆட்சி பணிந்து செல்வதற்கும் விரோதப்பட்ட பழங்குடியின-அடிப்படையிலான போராளிகளின் ஒரு கூட்டணி - பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. திங்களன்று தாக்குதல்காரர்கள் இஸ்லாமாபாத் அருகே மோலோடோவ் காக்டெயில்களுடனான 20 டிரக்குகளை தீக்கிரையாக்கினர். ஆறு பேர் கொல்லப்பட்டனர். இரண்டாவது எல்லை கடப்பு வாயில் திறந்திருந்த பலூசிஸ்தானில் இன்னுமொரு இரண்டு டிரக்குகள் மறைவிலிருந்து தாக்கப்பட்டன. இதன்பின் பாகிஸ்தானின் தெற்குப் பகுதியில் வெள்ளியன்று 24 டிரக்குகளும் எரிபொருள் டாங்கர்களும் தீக்கிரையாக்கப்பட்டன.

அமெரிக்க தாக்குதல்கள் தொடர்பான விடயத்தில் “பொதுமக்கள் கோபம் தணிந்த” பின் தான் எல்லை கடப்பு வாயில் மீண்டும் திறக்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறையின் ஒரு செய்தித் தொடர்பாளரான அப்துல் பசித் கூறினார். நேட்டோ வாகனங்கள் மீதான தாக்குதல்களுக்கு “பாகிஸ்தானிய மக்களின் எதிர்வினையே” காரணம் என்றார் அவர். பதிலடிக்கான வழியாக இத்தாக்குதல்களுக்கு பாகிஸ்தானிய அரசாங்கமும் இராணுவமும் தங்களது மவுனமான ஆதரவை வழங்கியிருக்கின்றன என்பதை இந்த அறிக்கை தெளிவாக்கியது. ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையின் இருபுறங்களிலும் செயல்படும் ஹகானி நெட்வொர்க் என்பதாய் அழைக்கப்படும் ஆயுதமேந்திய போராளிக் குழு ஒன்றினைக் களையெடுப்பதற்கு வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் நெடுநாட்களாய் எதிர்பார்க்கப்பட்டு வரும் இராணுவத் தாக்குதலைத் தொடுக்க பாகிஸ்தான் அரசாங்கத்தை நெருக்கும் முகமாகத் தான் பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்க இராணுவப் படையெழுச்சிகளும் அதிகரித்த சிஐஏ தாக்குதல்களும் நிகழ்கின்றன என்பது வெளிப்படை.

நாட்டைப் பாதித்துள்ள பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் அதன் நிவாரணப் பணிகளில் பத்தாயிரக்கணக்கான படையினர்கள் நிறுத்தப்பட்டுள்ளது ஆகியவற்றைக் கூறி இத்தாக்குதலுக்கு பாகிஸ்தான் மறுத்திருந்தது. அதே சமயத்தில் பாகிஸ்தான் இராணுவமும் அதன் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயும் ஹகானி நெட்வொர்க்குடன் ஆழமான உறவுகள் கொண்டிருப்பதோடு ஆப்கானிஸ்தானுக்குள் பாகிஸ்தானது நலன்களைப் பாதுகாப்பதற்கு அந்த நெட்வொர்க்கை ஒரு சொத்தாகவும் பாவிக்கின்றன. சென்ற ஜூன் மாதத்தில், இந்த நெட்வொர்க்குக்கும் ஆப்கன் ஜனாதிபதி ஹமித் கர்சாயின் அமெரிக்க-ஆதரவு அரசாங்கத்திற்கும் இடையில் ஒரு அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டிற்கு மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் பாகிஸ்தானின் தலைமை அதிகாரிகள் ஈடுபட்டிருந்ததாக செய்திகள் வெளியாயின.

பாப் உட்வர்டின் ஒபாமா’வின் போர்கள் என்னும் புத்தகத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் விவரங்களும் அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையிலான பதற்றங்களை அதிகரிப்பதில் ஒரு பாத்திரத்தை அநேகமாய் ஆற்றியிருக்கலாம். சென்ற நவம்பரில் ஓவல் அலுவலகத்தில் ஒபாமா “புற்றுநோய் பாகிஸ்தானில் உள்ளது என்பதை நாம் மக்களுக்கு தெளிவாக்க வேண்டும்” என்று அறிவித்ததாக அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. “இந்த புற்றுநோய் அங்கும் பரவாமல்” தடுப்பதை உறுதி செய்வதே ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவத் தலையீட்டின் நோக்கம் என்றும் அவர் மேலும் கூறியிருந்தார்.

அமெரிக்க மண்ணில் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டு அதன் வேர்கள் பாகிஸ்தானில் இருப்பதாகக் கண்டால் அந்நாட்டுக்குள்ளான இலக்குகளுக்கு எதிராய் பெரும் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தவிருப்பதாய் சென்ற மே மாதத்தில் விடுக்கப்பட்ட அமெரிக்க அச்சுறுத்தல்களையும் இப்புத்தகம் நினைவுகூர்கிறது. அத்துடன், பாகிஸ்தானுக்குள் இருக்கும் அமெரிக்கவிரோத சக்திகள் மீது தாக்குதல் நடத்த ஆளில்லா விமானங்கள் மட்டும் போதுமானவையல்ல என்று வலியுறுத்தும் சிஐஏ இயக்குநர் லியோன் பனேட்டாவையும் இது மேற்கோள் காட்டுகிறது.

பனேட்டா கூறினார்: ”களத்தில் சில பூட்ஸ்கால்கள் இல்லாமல் இதனை நாம் செய்ய முடியாது. அவை பாகிஸ்தான் பூட்ஸ்கால்களாக இருக்கலாம், அல்லது நமது பூட்ஸ்கால்களாய் இருக்கலாம், ஆனால் கால்கள் நிலத்தில் இருந்தாக வேண்டும்.” அவர் சொல்ல வந்தது தெளிவாய் இருக்கிறது. அமெரிக்கா கோருவதை பாகிஸ்தான் இராணுவம் செய்யத் தவறுமானால், அமெரிக்க இராணுவம் தலையீடு செய்யும்.

இவற்றில் அநேகமானவை பாகிஸ்தான் இராணுவத்திற்கும் உளவுத் துறைக்கும் ஏற்கனவே தெரிந்தது தான் என்றாலும், இவை இப்போது பாகிஸ்தானில் பரவலான செய்திகளாகி, அமெரிக்க ஆணவத்திற்கு எதிராக வெகுஜன எதிர்ப்பைத் தூண்டியும் அமெரிக்காவிற்கு சேவை செய்யும் கைப்பாவையாக பாகிஸ்தான் அரசாங்கத்தின் மீது அவநம்பிக்கையை ஆழப்படுத்தியும் வருகின்றன.

தசாப்த காலங்களாக, பாகிஸ்தான் இராணுவமானது அமெரிக்காவின் கூலிப் படையாகவே செயல்பட்டு வந்திருக்கிறது, அமெரிக்க நலன்களைப் பாதுகாக்கவே தொடர்ந்து அது அழைக்கப்பட்டது. 1980களில் ஆப்கானிஸ்தானில் இருந்த சோவியத்-ஆதரவு ஆட்சிக்கு எதிரான அமெரிக்க கையசைப்பிலான போரில் சிஐஏ மற்றும் ஒசாமா பின்லேடன் போன்ற இஸ்லாமிய கூறுகளுடன் சேர்ந்து வேலை செய்ததும் இதில் அடங்கும். பாகிஸ்தானுக்குள்ளாக ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான - 1950களில் அயூப் கான் ஆட்சியில் இருந்து இரண்டு வருடங்களுக்கு முன்பாக வெளியேற்றப்பட்ட ஜெனரல் பர்வேஸ் முஷாரப் ஆட்சி வரையிலும் தொடர்ச்சியான இராணுவ சர்வாதிகாரங்களை அமர்த்தியதன் மூலமும் - ஒரு சாதனமாகவும் இது சேவை செய்து வந்திருக்கிறது

ஆயினும், இப்போது இந்த இரண்டு பாத்திரங்களுமே, ஆப்கானிஸ்தான் போருடனும் பாகிஸ்தானுக்குள்ளேயே நிலைமை தீவிரமாக ஸ்திரம்குலைவதற்கு சேவை செய்வதில் பாகிஸ்தானின் இணக்கத்துடனும் பெருகிய நிலையில் மோதலுற்று நிற்கின்றன. மேலும், எண்ணெய் வளம் செறிந்த மத்திய ஆசியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியம் இராணுவ வேட்டை மூலம் மேலாதிக்கத்தை தொடர்வதால் பாகிஸ்தானிய முதலாளித்துவ வர்க்கமும் இராணுவமும் ஒவ்வொரு திருப்பத்திலும் பிராந்தியத்தில் தங்களது மூலோபாய நலன்கள் விரக்தியுறுவதைக் காணுகின்றன.

அமெரிக்காவின் இந்த மூலோபாயமானது பாகிஸ்தானின் பிராந்திய எதிரியான இந்தியாவுடன் “உலகளாவிய மூலோபாய கூட்டு”க்கு இட்டுச் சென்றுள்ளது. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் கீழான கட்டுப்பாடுளில் இருந்து விலக்கு அளித்து, அடிப்படையில் இந்தியா அணு ஆயுதங்களை உருவாக்குவதை அங்கீகரிக்கும் இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தமும் இதில் அடங்கும்.

அதே சமயத்தில், பாகிஸ்தானில் கணிசமான நெடுங்கால நலன்களைக் கொண்டிருக்கும் சீனாவின் பிராந்திய செல்வாக்குக்கு எதிர்ப்பினை முன்நிறுத்துவதும் அமெரிக்காவின் ஒரு முக்கிய நோக்கமாகும். இந்தியாவின் அணுசக்தி நோக்கங்களுக்கு வசதி செய்து கொடுத்திருக்கும் அதே வேளையில், பாகிஸ்தானில் இரண்டு அணு உலைகளைக் கட்டுவதற்கான சீனாவின் திட்டங்களைத் தடுப்பதற்கு அமெரிக்கா முயன்றிருக்கிறது. பாகிஸ்தானில் கடற்படை மற்றும் வர்த்தக துறைமுக வசதிகளை உருவாக்கும் சீனாவின் முயற்சியையும் அமெரிக்கா பெருகும் குரோதத்துடனேயே பார்த்திருக்கிறது. இதேபோல பாகிஸ்தான் மற்றும் ஈரானுக்கு இடையில் எரிவாயுக் குழாய் திட்டத்திற்கும் முட்டுக்கட்டை போடவும் அமெரிக்கா வேலை செய்திருக்கிறது.

இதனிடையே, பாகிஸ்தானின் வரலாற்றில் மிகப் பெரும் சேதாரத்தை ஏற்படுத்தியுள்ள வெள்ள நிலையை பாகிஸ்தான் முதலாளித்துவத்தை இன்னும் பிழிவதற்கான ஒரு சாதனமாக்கி சுரண்டுவதற்கு அமெரிக்கா முனைந்துள்ளது. அளிக்கப்படும் நிதிஉதவிக்கு பதில் நடவடிக்கையாக அமெரிக்க முதலாளித்துவ நலன்களை ஆழப்படுத்தும் பொருளாதார கட்டமைப்பு “சீர்திருத்தங்களை” அது கோருகிறது. இந்த நோக்கங்களை முன்செலுத்துவதற்கும் பிராந்தியத்தில் நிலவும் சிக்கலான புவி-அரசியல் உறவுகளை பாகிஸ்தான் மீது குண்டுகளையும் ஏவுகணைகளையும் எறிந்து தனக்கு சாதகமாய் மாற்றிக் கொள்வதற்குமாய் செய்யப்படும் முயற்சியானது ஆப்கானிஸ்தானிலான அமெரிக்க போரை பீடித்திருக்கும் விரக்தி பெருகியுள்ளதையும் அமெரிக்க கொள்கையின் பொறுப்பற்ற கொள்ளி வைக்கிற தன்மையையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

தனது படைத்தளபதிகளால் உத்தரவிடப்படும் மூலோபாயத்தைப் பின்பற்றும் ஒபாமா தனது வெள்ளை மாளிகை முன்னோடிகளைப் போலவே, அமெரிக்க முதலாளித்துவத்தின் நீண்ட-கால பொருளாதார வீழ்ச்சியைச் சரிசெய்வதற்கு அமெரிக்க இராணுவத்தின் மேலாதிக்க நிலையைச் சுரண்ட முயல்கிறார். இந்த பாதையானது பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரமற்ற நிலையை உருவாக்கி பாகிஸ்தான் மக்களையும் ஒட்டுமொத்த உலகையும் வெகு குருதிதோய்ந்த அழிவுத் தீக்குள் இழுத்துவிட அச்சுறுத்துகிறது.