சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Sarkozy mobilizes riot police to break French oil strike

பிரெஞ்சு எண்ணெய் இருப்புப் பகுதிகளில் வேலைநிறுத்தத்தை முறியடிக்க சார்க்கோசி பொலிஸ் கலகப்படைப் பிரிவைத் திரட்டுகிறார்

By Alex Lantier
16 October 2010

Use this version to print | Send feedback

மார்செயிக்கு அருகே உள்ள Fos-Lavéra விலுள்ள மூலோபாய எண்ணெய் இருப்புக் கிடங்கை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் தொழிலாளர்களை கலைத்து விரட்டுவதற்காக வெள்ளிக்கிழமையன்று பிரெஞ்சு அரசாங்கம் CRS கலகப் பிரிவுப் படைப் பொலிசாருக்கு உத்தரவிட்டது. இதேபோன்ற தாக்குதல்கள் மத்திய பிரான்ஸிலுள்ள Common d’Auvergne மற்றும் தென்கிழக்குக் கடலோர Ambes லும் நடத்த உத்தரவிட்டது.

துறைமுக, போக்குவரத்து மற்றும் எரிசக்தித் தொழிலாளர்கள், நாடெங்கிலும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுடனும் இணைந்து ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் ஆழ்ந்த செல்வாக்கற்ற சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.

சார்க்கோசியின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக வெகுஜன எதிர்ப்பு நடவடிக்கைகள் ஒரு வாரமாக நடைபெற்றுவருவதையடுத்து இந்த வேலைநிறுத்த முறியடிப்பு முயற்சிகள் வந்துள்ளன. வெட்டுக்களில் ஓய்வூதியத் தகுதி வயது இரு ஆண்டுகள் அதிகரிப்பு மற்றும் அதற்கான தேவைப்பட்ட ஊதியக் காலத்திற்கான தகுதியும் பெறுவதற்கான அதிகரிப்பு ஆகியவை இடம் பெற்றுள்ளன. சார்க்கோசியின் வெட்டுக்களுக்கு எதிராக மற்றும் ஒரு தேசிய நடவடிக்கை தினத்திற்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மற்றொரு நடவடிக்கை தினம் செவ்வாயன்று (19/10/2010) நடைபெறவுள்ளது.

தொழிலாளர்களுக்கு எதிரான அரச அடக்குமுறையைப் பயன்படுத்தலானது போராட்டங்களின் மையத்திலுள்ள அரசியல் கேள்விகளைத் தீவிரமான வடிவில் இருத்தியுள்ளது. ஓய்வூதியங்களைப் பாதுகாத்தல் என்பது தொழிலாள வர்க்கத்திற்கும் பிரெஞ்சு அரசிற்கும் இடையே ஒரு அரசியல் மோதல் என்று தான் பொருளாகும். சார்க்கோசி அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு முழு நனவுடன் ஓர் அரசியல் போராட்டம் நடத்தினால் தான் வெற்றி அடையப்பட முடியும்.

நாடு முழுவதும் பெட்ரோல் தட்டுப்பாட்டு அச்சுறுத்தல் என்ற தொழிலாளர்களின் மிகத் திறமையான வெட்டுக்களுக்கு எதிரான நெம்புகோலைச் சிதைப்பதற்கு சார்க்கோசி எண்ணெய் இருப்புக் கிடங்கு ஆக்கிரமிப்புக்களைத் தாக்க முற்பட்டுள்ளார். பொலிஸ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வியாழன் கடைசி நேரத்தில் முடிவெடுக்கப்பட்ட கூட்டத்தில் சார்க்கோசி, பிரதம மந்திரி பிரான்சுவா பியோன், உள்துறை மந்திரி Brice Hortefeux, தொழில்துறை மந்திரி எரிக் வோர்த் மற்றும் தன் உயர் மட்ட உதவியாளர்களுடன் கலந்து கொண்டார்.

CRS கலகப்படைப் பிரிவு பொலிசார் Fos எண்ணெய் இருப்புப் பகுதியில் 50 பேருந்துகளில் வந்து இறங்கித் தலையிட்டுள்ளனர். எதிர்ப்பு ஏதும் காட்டவேண்டாம் என்று தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு ஆலோசனை கூறின. பொலிசார் இருப்புக் கிடங்குகளை “கைப்பற்றியது எந்தவித அசம்பாவிதமின்றி நடந்தது” என்று போலிஸ் வட்டாரங்கள் கூறின.

எண்ணெய் நிறுவனங்களைப் பிரதிநிதிப்படுத்தும் பிரெஞ்சு பெட்ரோலியத் தொழில்களின் ஒன்றியமானது (UFIP), “பல நூறு” பெட்ரோல் விற்பனை நிலையங்கள் இருப்பு இன்றிப் போய்விட்டதுடன், நாட்டின் 12,500 விற்பனை நிலையங்களில் 10 சதவிகிதத்திற்கும் குறைவாகத்தான் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் தகவல் கூறியுள்ளது. ஆனால் பீதியினால் வாங்குபவர்கள் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகளில் நிற்பதாக அறிக்கைகள் தொடர்ந்துவருகின்றன. முக்கிய பாரிஸ் விமான நிலையங்களுக்கு விநியோகிக்கும் நிலையங்கள் செயற்படவில்லை. 17 நாட்கள் விநியோகம் செய்வதற்கு மட்டுமே இருப்புக்கள் உள்ளன. “வார இறுதிவரை தான் விநியோகிக்கக் கூடிய இருப்புக்களை” Roissy கொண்டுள்ளது.

வெள்ளிக்கிழமை CRS நடவடிக்கைகள் பெட்ரோல் விநியோகங்களை சீராக்கப் போதாதவை. நேற்று தொழிலாளர்கள் இன்னும் கூடுதலாக ஏழு எண்ணெய்க் கிடங்குகளை ஆக்கிரமித்தனர். இவற்றில் இரண்டில் பின்னர் ஆக்கிரமிப்புக்கள் நீங்கின. France Inter கொடுத்துள்ள தகவலின்படி, போர்தோவில் எண்ணெய்க் கிடங்குகளில் நடைபெறும் வேலைநிறுத்த மறியல்களில் ஆசிரியர்களும் சேர்ந்து கொண்டனர்.

மேலும் பிரான்சின் பெருநிலப் பகுதியிலுள்ள 12 சுத்திகரிப்பு நிலையங்களில் வேலை நடந்து கொண்டிருந்த கடைசி 2 நிலையங்களிலும் நேற்று வேலைநிறுத்தம் நடைபெற்றது. இது உள்நாட்டு சுத்திகரிப்புத் தொழிலை முற்றிலும் மூடிவிட்டது. இத்தகைய மூடல் 1968 மே-ஜூன் பொது வேலைநிறுத்தத்திற்குப் பின் ஏற்பட்டதில்லை.

அரசாங்க மற்றும் பெருநிறுவனச் செய்தித் தொடர்பாளர்கள் கிடங்குகளில் தற்பொழுதுள்ள எண்ணெயில் எவ்வளவு சுத்திகரிப்பு செய்யப்பட்டுள்ளன, எவ்வளவு கச்சா எண்ணெய் என்பதைக் கூறவில்லை. ஆனால் அரசிடமிருந்து UFIP அதன் சட்டத்திற்கு உட்பட்ட பெருநிறுவன இருப்புக்களை எடுத்துக் கொண்டு, பிரான்ஸின் மூலோபாய பெட்ரோலிய இருப்புக்களைப் பெறுவதற்கும் அனுமதி கோரியுள்ளது. AFP தகவல்களின்படி மூலோபாய இருப்புக்களில் 17 மில்லியன் டன்கள் பெட்ரோலியம் உள்ளது. இது 99 நாட்கள் வினியோகத்திற்குப் போதுமானது. இதில் 60 சதவிகிதம் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களும் 40 விகிதம் கச்சா எண்ணெயும் அடங்கும்.

அதிகாரிகள் “தேசிய அளவில் மூலோபாய இருப்புக்களைப் பயன்படுத்தினால், தொழிலாளர்கள் எண்ணெய்க் கிடங்குகளில் பரந்த முற்றுகைகளைத் தொடங்குவர்” என்றும் “இப்பொழுதுதான் நிகழ்வுகள் தொடங்கியுள்ளன” என்றும் எரிசக்தி பிரெஞ்சு ஜனநாயக தொழிற் கூட்டமைப்பு (CFDT Energy) தொழிற்சங்க தகவல்கள் கூறின.

இப்பொழுது நடக்கும் எண்ணெய் இருப்புப் பகுதிகளில் வேலைநிறுத்தங்கள் தொழிலாள வர்க்கத்தின் பெரும் சமூகச் சக்தியைக் காட்டுகின்றன. இவைகள் உறுதியான போராட்டத்தை தொடர்ந்தால் பொருளாதாரத்தையே நிறுத்த இயலும். ஆனால் CRS கலகப் பிரிவுப் படைத் தலையீடு ஒரு முக்கியமான ஆபத்தை உயர்த்திக் காட்டுகிறது—அதாவது தொழிலாள வர்க்கத்தின் போராளித்தனப் பிரிவுகளை தனிமைப்படுத்தி, பின்னர் அரசால் தோற்கடிக்கப்பட முடியும் என்பதே அது.

சார்க்கோசி அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு தொழிலாள வர்க்கத்திற்கு முன் வைக்கப்படும் வழி ஒரு நாடு தழுவிய, காலவரையறையற்ற, பொது வேலைநிறுத்தம் குறித்த தயாரிப்புக்களை நடத்த வேண்டும் என்பதாகும். இதற்கு உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்களுக்கு எதிராகத் தொழிலாளர்கள் கிளர்ச்சி செய்தல், மற்றும் ஒரு புதிய மற்றும் ஜனநாயகப் போராட்ட அமைப்புக்களை நிறுவுதல் அவசியமாகும்.

தொழிலாளர்கள் பொதுக் கூட்டமைப்பு (CGT) தொழிற்சங்கத் தலைமை ஒரு துரோகப் பங்கு வகிக்கிறது. இதன்படி சார்க்கோசியுடன் தொழிலாளர்கள் கோரிக்கையை விற்பதற்கும் பேச்சுவார்த்தைகள் நடத்தும் நேரத்திலேயே எதிர்ப்பு இயக்கத்தை அது சிதறடித்துத் தகர்க்க முற்பட்டுகிறது.

Le Monde பத்திரிகையிடம் கருத்துத் தெரிவித்த CGT பொதுச்செயலாளர் பேர்னார்ட் திபோ Fos இல் CRS கலகப்பிரிவுப் படையின் வேலைநிறுத்த முயற்சி குறித்து வாயளவிலான குறைகூறலை வெளியிட்டுள்ளார். இது தொழிற்சங்கமும் அரசாங்கமும் உடன்பாடு காண்பதற்குத் தடையாக உள்ளது என்று புகார் கூறினார். தொழிலாளர்கள் மீதான தாக்குதல் “ஓய்வூதிய வெட்டுக்களில் ஏற்பட்டுள்ள தேக்கத்திலிருந்து நம்மை மீட்கும் வழி அல்ல” என்றார். CGT யின் இலக்கு பொருளாதார நடவடிக்கையை நிறுத்துவது அல்ல என்ற அவர், “அணிதிரள்வின் நோக்கம் எங்கள் ஓய்வூதியத்தின் எதிர்காலம் குறித்து இன்னும் விவாதங்களை நடத்த வாய்ப்புப் பெறுவதாகும்” என்றார்.

இந்த நிலைமை முற்றிலும் சரண்டைவதற்கு ஒப்பாகும். ஏனெனில் சார்க்கோசி தான் பின்வாங்கத் தயாரில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். அக்டோபர் 13ம் திகதி நடந்த கபினெட் கூட்டத்தில் அவர் ஆத்திரமூட்டும் வகையில் “பதவியில் தான் இருக்கும் கடைசி நிமிடம் வரையில் வெட்டுக்களை மேற்கொள்வேன்” என்று உறுதிமொழி கொடுத்தார்.

அவருடைய ஓய்வூதிய “சீர்திருத்தத்தின்” மிக முக்கியமான விதிகள்—ஓய்வூதிய வயதை அதிகரித்தல், இத்தகுதிக்கான பணிக்காலத்தை நீட்டித்தல் ஆகியவை—ஏற்கனவே இயற்றப்பட்டு விட்டன. மேலும், Fos தொழிலாளர்களுக்கு எதிராக CRS ஸை அனுப்பும் சார்க்கோசியின் முடிவு பேச்சுவார்த்தைகள் மூலம் சமரசத்தில் அவருக்கு அக்கறை இல்லை என்பதையும் வெட்டுக்களைச் சுமத்துவதில் அவருடைய திறனை அடக்கும் தொழிலாளர் நடவடிக்கைகள் என்னும் அச்சுறுத்தலை முறியடித்தல் தான் அக்கறையாகவுள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

சார்க்கோசியின் வெட்டுக்களுக்கு எதிராகப் போரிடுவதற்கு தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக நடவடிக்கைக் குழுக்களை அமைக்க வேண்டும் என்று உலக சோசலிச வலைத்தளம் பரிந்துரை செய்கிறது. இக்குழுக்களின் நோக்கம் தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவிலும் போராட்டத்தை விரிவுபடுத்துதல், மாணவர்கள், இளைஞர்களிடையே விரிவாக்குதல், ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்கள் ஒற்றுமை நடவடிக்கை எடுத்தலுக்கு அழைப்புவிடுதல் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு இயக்கத்தைக் கட்டமைத்தல் என்று இருக்க வேண்டும்.

தொழிலாள வர்க்கத்தை இந்த அரசியல் அணிதிரட்டல் செய்வதின் நோக்கம் சார்க்கோசியின் அரசாங்கத்திற்குப் பதிலாக சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதன் போலி இடதுகளான கம்யூனிஸ்ட கட்சி மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி ஆகியவை இணைந்த மற்றொரு முதலாளித்துவ அரசைக் கொண்டுவருவது என்று இல்லாமல், சோசலிசக் கொள்கைகளில் பற்று உறுதி கொண்ட தொழிலாளர் அரசாங்கத்தை நிறுவுதல் வேண்டும்.

சோசலிஸ்ட் கட்சி ஒரு வணிகச் சார்புடைய கட்சியாகும். இதன் கொள்கைகள் அடிப்படையில் சார்க்கோசியினுடையவற்றில் இருந்து வேறுபட்டவை அல்ல. சோசலிஸ்ட் கட்சி செயலாளர் மார்ட்டின் ஒப்ரி புதனன்று நிகழ்த்திய தொலைக்காட்சி உரையில் சார்க்கோசிக்கு எதிர்ப்பு என்ற முகப்பிற்கு ஓய்வூதிய வெட்டுக்கள் மற்றும் சமூகச் செலவினக் குறைப்புக்களுக்கு கட்சியின் கந்தலான அதன் ஆதரவை மறைவின்றிக் காட்டிய பின்னணியில்தான் இருந்தது.

ஓய்வூதிய வெட்டுக்கள் குறித்து செனட் விவாதங்களை சார்க்கோசி “தற்காலிகமாக நிறுத்த வேண்டும்”, தொழிற்சங்கங்களுடன் பொதி குறித்து மறு பேச்சுக்களை நடத்த வேண்டும் என்று ஒப்ரி கோரியுள்ளார். ஆனால் “பணிக்கால நீட்டிப்பிற்கு” சோசலிஸ்ட் கட்சியின் ஆதரவு உண்டு என்று அவர் மீண்டும் கூறினார். பணிக்காலம் 41 ஆண்டுகள் அல்லது அதற்கும் கூடுதல் என்று நீட்டிக்கப்பட இருக்கையில், தொழிலாளர் பயிற்சிக் காலம் மற்றும் பல்கலைக்கழகக் கல்விக் காலங்கள் பணிக்காலத் தகுதியின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. இந்த மாற்றம் சோசலிஸ்ட் கட்சி பாதுகாப்பதாகக் கூறும் 60 வயது வரம்பு ஓய்வூதியம் பெறுவதற்கு என்ற நடைமுறையை இன்னும் உயர்த்திவிடும்.

மக்களில் 63 சதவிகிதம் பேர் ஒப்ரி ஓய்வூதிய வயதை 60 ஆகக் கொண்டுவருவார் என்று கூறிய உறுதியை நம்பவில்லை என்று Le Parisien கூறியுள்ளது. முன்னதாக இந்த ஆண்டில் அவர் இது 61 அல்லது 62 வயதாக உயர்த்தப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். அதுதான் சார்க்கோசியினாலும் பரிந்துரைக்கப்பட்டது.

சோசலிஸ்ட் கட்சியானது தொழிலாளர்களின் போராட்டங்கள் மீது கொண்டிருக்கும் உண்மையான அணுகுமுறை மார்செயிலுள்ள சோசலிஸ்ட் கட்சி அலுவலர் Patrick Mennucci னால் காட்டப்பட்டுள்ளது. “ குறிப்பிட்ட பிரிவிற்குரிய நலன்களை வெகுஜன கோரிக்கையான ஓய்வூதிய வயது 60 என்ற கோரிக்கையில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதின் பின் மறைத்துக் கொள்ளுவதாக” அவர் வேலைநிறுத்தம் செய்யும் மார்செய் துறைமுகத் தொழிலாளர்களைக் கண்டித்தார்.

சோசலிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு பிரான்ஸ் மக்களின் உணர்விற்கு எதிரிடையாக உள்ளது. சார்க்கோசிக்கு எதிரான போராட்டத்தில் பரந்த மக்கள் எதிர்ப்பு இருப்பதை விளக்கும் விதத்தில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் நேற்றும் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்தனர். உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் சங்கமான UNL கருத்துப்படி பிரான்சிலுள்ள 4,302 உயர்நிலைப் பள்ளிகளில் 900 வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. அவற்றுள் 550 முற்றுகைக்கு உட்பட்டுள்ளன. பிரான்ஸ் முழு நகரங்களிலுள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் எதிர்ப்பு அணிவகுப்புக்களை ஒழுங்கமைத்தனர். Tours, Reims, Metz, Nantes, La Rochelle, Lyon, Orléans மற்றும் Versailles ஆகிய நகரங்களில் 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் அணிவகுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். மாணவர்கள் Rennes, Reims மற்றும் Agen உட்பட பல நகரங்களில் இரயில் பாதைகளை மறித்தனர்.

போக்குவரத்து மந்திரி Dominique Bussereau என்பவர் La Rochelle க்கான பயணத்தை இரத்து செய்தார். அங்கு அவர் Charentes-Maritimes மாவட்ட சபையில் பேசுவதாக இருந்தார். இச்சபைக் கட்டிடத்திற்கு முன் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்கின்றனர் என்பதை அவர் அறிந்த பின் இது நிகழ்ந்தது.

கூட்டுப் பொலிஸ் தொழிற்சங்கம் “நகர்ப்புற கெரில்லாப் போர்முறையை” கண்டித்து இன்னும் கடுமையான “தலையீட்டு வழிகள்” வேண்டும் என்று கோரியுள்ளது. கலகப் பிரிவுப் படையினர் மாணவர்கள் ஆர்ப்பாட்ட அணிவகுப்புக்கள் மீது கண்ணீர்ப்புகை வீசுவது குறித்து பல தகவல்கள் வந்துள்ளன. தாங்கள் 264 வன்முறையில் ஈடுபட்ட எதிர்ப்பாளர்களை நாடு முழுவதும் கைது செய்துள்ளதாகக் பொலிஸார் கூறினர். ஆனால் பாரிஸ் பொலிஸ் தலைமையானது ரப்பர் தோட்டாக்கள் பயன்படுத்தப்படுவது கைவிடப்படும் என்று உறுதியளித்தது. Montreuil ஒரு மாணவர் புதனன்று ரப்பர் தோட்டாவால் முகத்தில் தாக்கப்பட்டு மோசமான காயம் அடைந்ததை அடுத்து இந்த முடிவு வந்துள்ளது.

நூற்றுக்கணக்கான மாணவர்கள் Montreuil நகரவை முன்பு பொலிஸ் துப்பாக்கிச் சூட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பாரிஸில் மாணவர்கள் செனட் சபை நோக்கி அணிவகுத்துச் சென்றனர். அங்கு ஒய்வூதிய “சீர்திருத்தங்களின்” இறுதி சட்டவாக்க அடிப்படைகள் குறித்து விவாதிக்கப்படுகின்றன. Matignon பிரதம மந்திரி இல்லத்தை நோக்கியும் ஆர்ப்பாட்டம் செய்து அணிவகுத்துச் சென்றனர். பல நூற்றுக்கணக்கான மாணவ எதிர்ப்பாளர்கள் தேசிய நூலகத்தில் (Bibliothèque François Mitterrand) நுழைந்ததாகவும் தகவல்கள் வந்துள்ளன.

பாரிஸ் புறநகரில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் 94 எதிர்ப்பாளர்களைக் கைது செய்ததாக பொலிஸ் தகவல் கொடுத்துள்ளது. அவர்களில் பல பொலிசாரும் காயமுற்றனர் என்று கூறியுள்ளனர். ஆனால் மிகத் தீவிரமாகக் காயமுற்ற அதிகாரி எதிர்ப்பாளர்களால் தாக்கப்படவில்லை, மாறாக போக்குவரத்தில் அகப்பட்டுக் கொண்டதில் கோபமடைந்த ட்ரக் சாரதி ஒருவர் எதிர்ப்பாளர்கள் மீது வாகனத்தை மோத முற்பட்டதில் நிகழ்ந்தது.