சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

A turning point in the crisis of world capitalism

உலக முதலாளித்துவ நெருக்கடியில் ஒரு திருப்புமுனை

Nick Beams
11 August 2011

use this version to print | Send feedback

கடந்த வெள்ளியன்று மதிப்பீட்டு பட்டியலில் அமெரிக்காவின் இடம் கீழிறக்கப்பட்டமை, லெஹ்மென் பிரதர்ஸ் பொறிந்த நாளான செப்டம்பர் 15, 2008 மற்றும் ஜனாதிபதி நிக்சன் தங்கத்திற்கு   அமெரிக்க டாலர் மாற்றுமுறையை பின்வாங்கிய நாளான ஆகஸ்ட் 15, 1971 ஆகியவற்றோடு சேர்ந்து ஆகஸ்ட் 5, 2011ஐயும், அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் வரலாற்று நெருக்கடியில் ஏற்பட்டுள்ள முக்கிய திருப்புமுனைகளில் ஒன்றாக கருதப்படும்.

இந்த மூன்று தேதிகளும் அமெரிக்க முதலாளித்துவத்தின், மற்றும் அதனோடு சேர்ந்து, ஒட்டுமொத்த உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் வரலாற்று வீழ்ச்சியைப் பதிவுசெய்யும் சம்பவங்களின் ஒரு காரண-காரிய சங்கிலியால் பிணைந்துள்ளன.

மதிப்பீட்டு பட்டியலில் அமெரிக்காவை கீழிறக்கிய Standard and Poor இன் குறுகியகால நோக்கம் அந்நிறுவனத்தின் அறிக்கையிலேயே தெளிவாக கூறப்பட்டது: ஒபாமா நிர்வாகத்திற்கும், காங்கிரஸிற்கும் இடையில் எட்டப்பட்ட உடன்படிக்கையில் அறிவிக்கப்பட்ட மருத்துவநலன் மற்றும் ஏனைய திட்டங்களில் செய்யப்பட்ட வெட்டுக்களின் அளவில் அதற்கு அதிருப்தி உள்ளதாக அது குறிப்பிட்டது.

அந்த கீழிறக்க நடவடிக்கையை தொடர்ந்து, ஏனைய நாடுகளும் (குறிப்பிடப்பட்டவைகளில் பிரான்ஸூம் ஒன்று) மதிப்பீட்டு பட்டியலில் கீழிறங்கும் மற்றும் பிரதான வங்கிகள் பொறியக்கூடும் என நிதியியல் வட்டாரங்களில் எழுந்த வதந்தியால், சர்வதேச பங்குச்சந்தைகளில் ஓர் இரத்த ஆறே ஓடியது.

குறைந்தபட்சம் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அதன் மிகக்குறைந்த வட்டிவிகித கொள்கையை நீடிக்க, செவ்வாயன்று அமெரிக்க மத்திய வங்கி ஆணையத்தால் எடுக்கப்பட்ட முடிவால் (இந்த முடிவே, அதன் கொள்கைகள் தோல்வியடைந்துள்ளன என்பதையும், அமெரிக்க பொருளாதாரம் "மீண்டெழுவதற்கான" எந்த வாய்ப்பும் இல்லை என்பதையும் நிறுவுகிறது) சந்தைகள் ஒரேயொரு நாள் உயர்ந்தன. நேற்று வோல் ஸ்ட்ரீட் மீண்டும் 500 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது.

Standard&Poor இன் கீழிறக்க நடவடிக்கையால், குறைந்தபட்சம் பகுதியாகவாவது, பங்குச்சந்தைகளின் வீழ்ச்சி தூண்டிவிடப்பட்டிருந்த நிலையில், அதன் அந்த முடிவானது அதிகரித்துவரும் நிதியியல் கொந்தளிப்பில் பிரதிபலிக்கும் நீண்டகால வரலாற்றுரீதியான நிகழ்வுப்போக்கின் விளைவாகும். இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் உலக முதலாளித்துவத்தை ஸ்திரப்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய அமெரிக்காவின் பொருளாதார சக்தியில் ஏற்பட்டிருக்கும் நீண்டகால மற்றும் மீண்டெழமுடியாத வீழ்ச்சியே, இந்த சந்தை குழப்பங்களின் அடித்தளமாகும். எவ்வாறிருந்தபோதினும், அமெரிக்காவின் வீழ்ச்சியானது வெறுமனே அமெரிக்கா சம்பந்தப்பட்ட விஷயமல்ல. அது உலக முதலாளித்துவ அமைப்புமுறை நெருக்கடியின் ஒரு ஒன்றுதிரண்ட வெளிப்பாடாகும்.

அமெரிக்க வீழ்ச்சியின் ஆரம்பம் மிகச் சரியாக, அடுத்த திங்கட்கிழமை வந்தால், 40 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது. அன்று தான் ஜனாதிபதி நிக்சன், ஒரு அவுன்ஸ் தங்கத்திற்கு 35 டாலர் என்ற விகிதத்தில் உலக நாடுகளில் புழக்கத்திலிருந்த அமெரிக்க டாலரை இணைத்திருக்க உருவாக்கப்பட்ட 1944 பிரெட்டன் வூட்ஸ் உடன்படிக்கைக்கு இனி அமெரிக்கா மதிப்பளிக்காது என்று அறிவிக்க, ஞாயிறன்று மாலை தொலைக்காட்சியில் தோன்றினார். அந்த முடிவு, யுத்தத்திற்குப் பிந்தைய வர்த்தகத்தை மீட்டெடுப்பதிலும், 1930களின் பேரழிவுக்குப் பின்னர் உலக முதலீட்டை மீட்டெடுப்பதிலும் ஒரு தீர்க்கமான பாத்திரம் வகித்த 'ஒரே செலாவணி பரிமாற்ற முறையைத்' தகர்த்தது.

வர்த்தக பற்றாக்குறையை அமெரிக்கா அவசரமாக சமநிலையில் வைக்க வேண்டியிருந்ததே, அந்த முடிவின் உடனடி காரணமாக இருந்தது. ஆனால் அது பிரெட்டன் வூட்ஸ் முறையிலிருந்த மிகவும் அடிப்படை பிரச்சினையின் விளைவாகும். அதை ஒரு தசாப்தத்திற்கு முன்னரே பெல்ஜிய பொருளாதாரவாதி Robert Triffin சுட்டிக்காட்டி இருந்தார். அமெரிக்க டாலர் சர்வதேச செலாவணியாக செயல்படும் வரையில், சர்வதேச பரிமாற்றங்கள் அமெரிக்க டாலரின் புழக்கத்தைத் தீர்மானிக்கும் என்பதை அவர் சுட்டிக்காட்டி இருந்தார். தங்கத்திற்கு பதிலாக டாலர்களை சமப்படுத்த அமெரிக்கா கடமைப்பட்டிருப்பதால், அம்மாதிரியான செலாவணி புழக்கமும், அமெரிக்காவிற்கு வெளியில் அமெரிக்க டாலரை வைத்திருப்பதும், அதிகளவில் தங்கத்தின் மீதான அதன் பங்குகளை வைத்திருப்பதும், பிரெட்டன் வூட்ஸ் முறையின் அடித்தளத்திற்கு குழிபறிக்கும்.

தங்கத்திற்கான ஆதரவை நீக்கியமை, உலக கையிருப்பு செலாவணியாக (global reserve currency) இருந்த டாலரின் பாத்திரத்தை முடிவுக்குக் கொண்டு வந்துவிடவில்லை. ஆனால் சர்வதேச நாணய முறை அதன் நங்கூரத்தை இழந்துவிட்டதையும், அதிகப்படியாக நிர்மூலமாகி போனதையும் அது குறித்தது. அந்த ஸ்திரமின்மை பல தொடர்ச்சியான நிதியியல் பிரச்சினைகளில் பிரதிபலித்தது: அதாவது மத்திய வங்கித் தலைவர் Paul Volcker வட்டிவிகித உயர்வுகளை சாதனையளவிற்கு திணிக்க வழிவகுத்த 1979இல் ஏற்பட்ட அமெரிக்க டாலர் மதிப்பின் வீழ்ச்சி; 1980களின் தொடக்கத்தில் ஏற்பட்ட இலத்தீன் அமெரிக்க கடன் நெருக்கடி; மற்றும் அமெரிக்காவிற்கும் ஜேர்மன் அதிகாரிகளுக்கும் இடையில், குறைந்தபட்சம் பகுதியாகவாவது, வட்டிவிகித கொள்கைகளில் கருத்துவேறுபாடுகளைத் தூண்டிவிட்ட அக்டோபர் 1987இன் உலக பங்குச்சந்தை முறிவு போன்றவற்றில் பிரதிபலித்தது.

1987 முறிவுக்கு விடையிறுப்பாக, புதிதாக நியமிக்கப்பட்ட அமெரிக்க மத்திய வங்கி கூட்டமைப்பின் ஆணைய தலைவர் அலன் கிரீன்ஸ்பான், அதுமுதல் ஒரு கொள்கையைக் கொண்டு வந்தார். அதன்படி பிரதான வங்கிகள் மற்றும் நிதியியல் நிறுவனங்களுக்கு மலிவு பணத்தை வினியோகிக்கும் விதத்தில், மத்திய வங்கியின் கடன் அடைப்புகளைத் திறந்துவிடுவதன் மூலமாக எந்த நிதியியல் நெருக்கடியையும் சந்திக்கலாம் என்றானது.

இந்த கொள்கை அதற்கடுத்த 20 ஆண்டுகளில் அமெரிக்க பொருளாதார வளர்ச்சிக்கு எண்ணெய் ஊற்ற உதவிய போதினும், அது செல்வ திரட்சியின் ஒட்டுண்ணித்தனமான வடிவத்தை இன்னும் அதிகப்படியாக ஊக்குவித்தது. தொழில்துறை உற்பத்தியின் அடித்தளத்தின்மீதும் மற்றும் தொழிலாளர்களின் உற்பத்தித்திறனுக்கு அது வழங்கிய பெரும் முன்னேற்றங்களினாலும் அமெரிக்க முதலாளித்துவம் உலகின் முன்மதிப்பைப் பெற்றது. நிதியியல்மயமாக்கம் உற்பத்தியை  பிரதியீடு செய்து இலாபங்களின் முக்கிய ஆதாரமாக மாறிக் கொண்டதால், அதாவது வீட்டுத்துறை மற்றும் வீட்டு-அடமான குமிழி ஆகியவற்றில் கொண்டிருந்த விசித்திரமான வடிவங்களைப் போன்ற ஒரு செயல்முறையாக மாற்றிக் கொண்டதால், இப்போது தொழில்துறை அழிக்கப்பட்டும், வேலைகள் நாடுகடந்து வெளியகற்றப்பட்டும் உள்ளன.

1990கள் மற்றும் 2000களில் அமெரிக்க பொருளாதாரம் விரிவாக்கம் பெற்றபோதும் கூட, 'உலக கையிருப்பு செலாவணியான டாலர் உலகின் மிகவும் கடன்பட்ட நாட்டின் செலாவணியாக இருந்தது' என்ற ஓர் ஆழ்ந்த முரண்பாட்டை, அந்த குறிப்பிட்ட வளர்ச்சி மறைத்து நின்றது. உலக முதலாளித்துவ வரலாற்றில் அதற்கு முன்னர் அவ்வாறு ஒருபோதும் ஏற்பட்டதில்லை.

1914இல் முதலாம் உலக யுத்தம் வெடிப்பதற்கு பல தசாப்தங்களுக்கு முன்னர், உலக பொருளாதாரம் பிரிட்டிஷ் பவுண்டின் மீது தங்கியிருந்தது. உலகின் எல்லா பகுதிகளுக்கும் மூலதனத்தை வினியோகிக்கும் முதன்மை வினியோகஸ்தராக பிரிட்டன் இருந்ததால், தங்கத்தின் அளவிற்கு ஸ்டெர்லிங்கும் மதிப்புடையதாக இருந்தது. பிரிட்டனின் வங்கிகளும், நிதியியல் நிறுவனங்களும் உலகளவில் பாத்திரம் வகித்ததாலும், அத்துடன் அதன் காலனிய நாடுகளிடம் இருந்து, எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவிலிருந்து, அதனால் பெரும் நிதியியல் ஆதாரங்களைப் பெற முடிந்ததாலும் இவ்விரு காரணங்களாலும், அது "உலகின் உற்பத்திப்பட்டறையாக" (“workshop of the world”) விளங்கியதோடு, அதுவே உலகின் முதன்மை நிதிவழங்குனராகவும் விளங்கியது.

முதலாம் உலக யுத்தம் பிரிட்டனின் நிதியியல் நிலைப்பாட்டில் ஒரு பெரும் அடியைக் கொடுத்தது. அதிலிருந்து அதனால் ஒருபோதும் மீள முடியவில்லை. உலக பணமாக செயல்படக்கூடிய ஒரு செலாவணி இல்லாததால், யுத்த காலத்தில் சர்வதேச நிதியியல் அமைப்பு சிதைந்து போனது; மேலும் உலக பொருளாதாரமானது போட்டி வர்த்தகம் மற்றும் செலாவணி கூட்டுக்கள் (currency blocs) என உடைந்து போனது. இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் உலகளவில் அமெரிக்காவின் செல்வாக்கு உயர்ந்த பின்னர் தான், ஒரு புதிய சர்தவேச நிதியியல் முறை ஸ்தாபகமானது. இந்த அமைப்புமுறை, அதன் மைய முண்டுதூணில் அதாவது அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சீரழிவு மற்றும் வீழ்ச்சியடைந்த தன்மையின் விளைவாக, மிகவும் உயர்வான உடைவின் நிலையில் உள்ளது.

அமெரிக்கா அதன் கடன்களைத் திருப்பிச்செலுத்த "எப்போது வேண்டுமானாலும் பணத்தை அச்சடிக்க" முடியும் என்பதால், கிரீன்ஸ்பானின் வார்த்தைகளில் அங்கே "பூஜ்ஜிய சாத்தியப்பாடு" உள்ளதால், சில விமர்சகர்களால் மதிப்பீட்டு பட்டியலில் கீழிறக்கிய அந்த நடவடிக்கையின் முக்கியத்துவம் உதாசீனப்படுத்தப்படுகிறது. இதுபோன்றவொரு அலட்சியமான கண்ணோட்டம், அமெரிக்க திவால்நிலை பிரச்சினை எழுவதற்கு முன்னரே கூட, அந்த முடிவானது இன்னும் அதிகப்படியாக உலக நிதியியல் முறைக்கு குழிபறிக்கும் (மற்றும் ஆகஸ்ட் 15, 1971இல் ஏற்பட்ட திவால்நிலை போன்றவொரு சம்பவம் பலர் நினைக்காத விதத்தில் மிக விரைவில் ஏற்படக்கூடும்) என்ற உண்மையைக் கவனிக்காது விட்டுவிடுகிறது.

உலக முதலாளித்துவம் தற்போது ஒரு ஸ்திரமான நாணய முறையின்றி செயல்பட்டு கொண்டிருக்கிறது. முதலாளித்துவத்தின் கீழ், பணம் இரண்டு முக்கிய செயல்பாடுகளைச் செய்ய வேண்டியுள்ளது: ஒன்று அது பரிமாற்றத்திற்கான ஊடகமாக (medium of exchange) உள்ளது; இரண்டாவது அது மதிப்பு திரட்சிக்கான (store of value) செயல்பாட்டைச் செய்கிறது. இந்த இரண்டு செயல்பாடுகளுமே அமெரிக்க டாலரின் மூழ்கிவரும் மதிப்பால், நீண்டகால விளைவுகளோடு, முற்றிலுமாக பிரச்சனைக்கு உள்ளாகி வருகிறது.

பரிமாற்ற ஊடகமாக செயல்படும் செயல்பாட்டின் தாக்கம், உணவு மற்றும் எரிபொருள் போன்ற உலகளாவிய வர்த்தகத்தில் உள்ள அடிப்படை பண்டங்களின் விலை உயர்வுகளில் பிரதிபலிக்கிறது. அது உலகம் முழுவதும் பணவீக்கத்திற்கு இட்டுச் செல்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, குறைவாக அபிவிருத்தி அடைந்த நாடுகள் என்றழைக்கப்படுவனவற்றில், மிகத் தெளிவாக மத்திய-கிழக்கில் காணப்படுவதைப் போல, வர்க்க போராட்டங்களின் ஓர் எழுச்சியைத் தூண்டிவிடுகிறது.

இதேபோல, 'மதிப்பைத் திரட்டும்' செயல்பாடானது, மத்திய அரசின் மலிவுபண கொள்கைகளின் விளைவாக அனைத்து பிரதான செலாவணிகளுக்கு எதிராகவும் டாலர் வீழ்ச்சி அடைவதை அடிக்கோடிடுகிறது. அமெரிக்க கடன்களில் 1.2 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ள சீன அதிகாரிகள், "அமெரிக்க நாணய அதிகாரிகள் செலாவணியைக் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டுமென" கோரியுள்ளனர். அமெரிக்க சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள சீன நிதியியல் சொத்துக்களின் மதிப்பு உருகும் ஒவ்வொரு நாளும், அது ஏற்கனவே பலவீனமாக இருக்கும் சீன வங்கியியல் மற்றும் நிதியியல் அமைப்புமுறையின் ஸ்திரப்பாட்டில், இந்த இழப்புகள் பாதிக்கும் காலத்தை மிக நெருக்கமாக கொண்டு வருகிறது.

அமெரிக்காவோடு அல்லது எவ்வித தேசிய செலாவணியோடும் நேரடியாக பிணைந்தில்லாத, ஒரு புதிய உலக கையிருப்பு செலாவணியை ஸ்தாபிக்க சீன அதிகாரிகள் மீண்டும் அழைப்புவிடுத்துள்ளனர். ஆனால் யூரோவின் கதியோ, இப்போது தேசிய போட்டிகளாலும், யூரோ பிராந்திய சக்திகளுக்கு இடையில் நிலவும் முரண்பாடுகளாலும் கிழிந்திருப்பதென்பது, அத்தகையவொரு அபிவிருத்திக்கான எந்த சாத்தியக்கூறும் இல்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது. சர்வதேச பணமாக விளங்கும் டாலரை மாற்றியமைக்க எந்தவொரு செலாவணியோ அல்லது பல செலாவணிகள் கலந்த ஒரு குழுவாக்கமோ (grouping of currencies) அல்லது செயற்கை செலாவணியோ (synthetic currency) எதுவுமே இல்லை.

தற்போதைய நெருக்கடியை தீர்க்கும் ஒரு பொருளாதார கொள்கைகளின் தொகுப்போ அல்லது நெறிமுறை ஒழுங்கமைப்புகளோ எதுவுமே இல்லை. வரலாற்று அனுபவம், இன்னும் பாரியளவிற்கு வெடிப்பார்ந்த வடிவத்தில், 1930களின் நிலைமைக்கு மீண்டும் திரும்புவதையே சுட்டிக்காட்டுகிறது.

அதேநேரத்தில், பொருளாதார போட்டி அணிகளுக்குள் உடைந்துள்ள உலகம், வரலாற்றில் மிகவும் நாசகரமான உலக யுத்தத்தை நோக்கி நகர்கிறது. இன்று, அந்த சாத்தியக்கூறு அதிகரித்துவரும் நிலையில், தொழிலாள வர்க்கம் தலையீடு செய்ய வேண்டியுள்ளது. முதலாளித்துவ அமைப்புமுறையின் குழப்பங்களையும், மனித குலத்தின் எதிர்காலத்திற்கு அது முன்னிறுத்தும் பெரும் வறுமை, மந்தநிலை மற்றும் யுத்தம் போன்ற அபாயங்களையும் தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை கையிலெடுத்து, சர்வதேச சோசலிசத்தை ஸ்தாபித்து, இந்த இலாபகர அமைப்புமுறையை தூக்கியெறிவதன் மூலமாக மட்டுமே முடிவுக்குக் கொண்டு வரப்பட முடியும். இந்த முன்னோக்கை பூர்த்திசெய்ய, சோசலிச புரட்சியின் உலக கட்சியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவைக் கட்டியெழுப்புவது அவசியமாகும்.