சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

கொரியாவில் தொழிலுக்காக முண்டியடித்தமை இலங்கையில் இளைஞர்களின் வேலையின்மை மற்றும் வறுமையை வெளிக்காட்டுகிறது

Suranga Siriwardane
20 August 2011

use this version to print | Send feedback

ஆகஸ்ட் 8 அன்று கொழும்பு பொலிஸ் மேலதிக படைத் தலைமையகத்தில், கொரிய தொழிலுக்காக மொழி பரீட்சைக்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்வதற்காக பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கூடினர். பொலிஸ் மைதானத்தின் தடை வேலிகளை உடைத்துத் தள்ளி கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் வரிசையில் முண்டியடித்து தமது தொழில் எதிர்பார்ப்பை நிறைவேற்றிக்கொள்வதற்காக இந்தளவு பெருந்தொகையானவர்கள் கொழும்பில் ஒன்று கூடியமை, இலங்கையில் உத்தியோகபூர்வ வேலையின்மை விரைவாக வீழ்ச்சியடைந்துள்ளது என்ற அரசாங்கத்தின் கூற்றை காற்றில் பறக்கவிட்டுள்ளது.

தென் கொரிய அரசாங்கத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய இரு தரப்பு உடன்பாட்டின் அடிப்படையில், 9300 அளவிலான கொரிய தொழில்களைப் பெற்றுத் தருவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்திருந்ததன் காரணமாகவே, தீவின் தூரப் பிரதேசங்களில் இருந்தும் இளைஞர்கள் குறிப்பிட்ட விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்வதற்காக கொழும்புக்கு வந்திருந்தனர்.

விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொள்வதற்காக தீவு பூராவும் 29 மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், முதலில் அவை கொழும்பிலேயே விநியோகிக்கப்படவிருந்தன. தமக்கான வாய்ப்பை இழக்க விரும்பாத இளைஞர்கள் தூரப் பிரதேசங்களில் இருந்து வந்து, இரு நாட்களுக்கு முன்னதாகவே பொலிஸ் மைதானத்துக்கு அருகில் சிரமங்களுக்கு மத்தியில் முகாமிட்டிருந்தனர். கொழும்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த 3500 விண்ணப்பதாரிகளை பதிவு செய்யும் நடவடிக்கை திங்கள் நண்பகலுக்கு முன்னதாகவே முடிவுற்றது.

மத்திய நிலையத்தை இழுத்து மூடிய அதிகாரிகள், பொலிசாரின் ஒத்துழைப்புடன் அது பற்றி அறிவித்த போது, மேலும் வரிசையில் கூடியிருந்த இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட கடும் அமைதியின்மையை மட்டுப்படுத்துவதற்காக பொலிசார் ஈடுபடுத்தப்பட்டனர். எவ்வாறெனினும் நிலைமை ஆபத்தான நிலைக்குத் திரும்பும் என பீதியடைந்த அரசாங்கம், மேலும் 15,000 விண்ணப்பப் படிவங்களை அச்சிட்டு எஞ்சியிருந்த இளைஞர்களையும் பதிவு செய்ததன் மூலமே ஏற்படவிருந்த நிலைமையை தடுத்துக் கொண்டது.

அரசாங்கத்துடன் இணைந்த இலங்கை கொள்கை கற்கை நிறுவனம் (ஐ.பீ.எஸ்), இங்கு கூடிய இளைஞர்கள் மத்தியில் நடத்திய ஆய்வில், நிலவும் இளைஞர் வேலையின்மை மற்றும் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆழமான இளைஞர் அமைதியின்மையும் வறுமையும் எத்தகையது என்பது பற்றிய விடயங்கள் மட்டுப்படுத்தப்பட்டவையாக இருந்த போதிலும், முக்கியமான விபரங்கள் வெளிக்கொணரப்பட்டிருந்தன.

இவ்வாறு வேலை தேடுபவர்கள் மத்தியில் நூற்றுக்கு 70.7 வீதமானவர்கள் 20-30 வயதுக்கு இடைப்பட்டவர்களாக இருந்ததோடு, அவர்களில் நூற்றுக்கு 39 வீதமானவர்கள் 25-30 வயதுக்கும் இடைப்பட்டவர்களாக இருந்தனர் என ஆய்வில் காட்டப்பட்டுள்ளன. மொத்த அளவில் பெரும்பான்மையானவர்கள், அதாவது நூற்றுக்கு 28.8 வீதமானவர்கள், கொழும்பு மாவட்டத்திலும் நூற்றுக்கு 22 வீதமானவர்கள் மாத்தறை மாவட்டத்திலுமாக அநேக இளைஞர் தட்டினர் மேற்கு மற்றும் தென் பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்கள் என்பது ஆய்வின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இளைஞர்களில் அநேகமானவர்கள் உயர் தரத்துக்கும் மேலாக கல்வி கற்ற இளைஞர்களாக இருந்தனர். மொத்த அளவில் நூற்றுக்கு 65.9 வீதமானவர்கள் உயர் தரம் சித்தி பெற்றவர்களாக இருந்ததோடு நூற்றுக்கு 4.9 வீதமான பட்டதாரிகளையும் ஒப்பிடும் போது நூற்றுக்கு 70.8 வீதமானவர்கள் நன்கு படித்த இளைஞர்களாக இருந்தமை, இளைஞர்கள் மத்தியில் வேலையின்மை உக்கிரமடைந்திருப்பதை வெளிக் காட்டுகிறது.

உலக சோசலிச வலைத் தளத்துக்கு கருத்துத் தெரிவித்த ஹம்பந்தொட்டை வீரகெட்டியவில் இருந்து வந்திருந்த ஹேமந்த என்ற 29 வயதான பட்டதாரி இளைஞர், அரசாங்கம் முன்னெடுக்கின்ற வேலைத் திட்டம் சம்பந்தமாக தனது அதிருப்தியை வெளியிட்டு குறிப்பிட்டதாவது: நான் 2009ம் ஆண்டு பட்டம் பெற்றேன். இன்னமும் தொழில் கிடையாது. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வயது போய்விட்டது. குடும்ப சுமையை இப்போது நான் சுமக்க வேண்டிய காலம் இது. ஆயினும் தீர்வு கிடையாது. கொழும்புக்கு வந்து ஒரு சிறிய தொழிலை செய்யலாம், அதுவும் கடினமான விடயமாகும். மறு பக்கம் கொழும்பில் இருந்து 20,000 ரூபா கிடைத்தாலும் போதாது. அதனாலேயே நான் கொரியாவுக்கு செல்ல தீர்மானித்தேன். எங்களது வீடுகள் பழையவை. இலங்கையில் இருந்துகொண்டு ஒரு நாளும் அவற்றை திருத்த முடியாது.

ஐ.பீ.எஸ். ஆய்வில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளவாறு, கொரிய தொழில்களைத் தேடுபவர்கள் மத்தியில், நூற்றுக்கு 63.4 வீதமானவர்கள் இப்போதும் தொழில் செய்பவர்களாவர். விசேடமாக குறைந்த சம்பளம், ஒரு நாளைக்கு எட்டு மணித்தியாலத்துக்கும் அதிகமான வேலை நேரம் மற்றும் தனது தொழில் நிலைமைகள் சம்பந்தமாகவும் அதிருப்தியடைந்திருந்த பலரும் இதில் இருந்தனர். குறைந்த சம்பளம் மற்றும் குறைந்த வருமானமும் வெளிநாட்டு தொழில் ஒன்றைத் தேடிக்கொள்ள தம்மைத் தள்ளியுள்ளதாக அவர்களில் நூற்றுக்கு 38 வீதமானவர்கள் தெரிவித்திருந்தனர். நூற்றுக்கு 36 வீதமானவர்களாக இருந்த வேலையற்றவர்கள், குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகாலமாக வேலை இன்றி இருந்துள்ளனர்.

2008ல் தோன்றிய பூகோள பொருளாதார பொறிவினால் உக்கிரமடைந்த பொருளாதார நெருக்கடியை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்துவதற்காக, தொழில் மற்றும் சம்பள வெட்டுக்களை மேற்கொள்ளல், வேலை நேரத்தை அதிகரித்தல், அத்துடன் வரிகளை அதிகரித்து வாழ்க்கை தரத்தை வெட்டிக் குறைத்தல் போன்ற நடவடிக்கை உலகம் பூராவும் ஆளும் வர்க்கங்களால் முன்னெடுக்கப்பட்டன. இந்த நெருக்கடி இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட யுத்தத்தின் சுமையினால் இலங்கையில் நெருக்கடி மேலும் உக்கிரமடைந்தது. அநேக தொழிலாளர்களை தொழிலில் இருந்து வெளியேற்றுவது மற்றும் வாழ்க்கை செலவை அதிகரிக்கச் செய்வதன் மூலமே அவை முன்னெடுக்கப்பட்டன. தொழில் திணைக்களத்தின் அறிக்கையின் படி, 2008 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 2009 ஏப்பிரல் மாதம் வரை இலங்கையில் 70,000 க்கும் அதிகமானவர்கள் தொழிலை இழந்துள்ளனர். இப்போதும் தொழிலில் இருப்பவர்களும், இந்த நெருக்கடியை தாங்க முடியாத சூழ்நிலையிலேயே வெளிநாட்டு வேலை வாய்ப்பைத் தேடுகின்றனர்.

2009ல் நூற்றுக்கு 5.8 வீதமாக இருந்த இலங்கையின் மொத்த வேலையின்மை, 2010ல் நூற்றுக்கு 4.9 வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கை குறிப்பிடுகின்றது. ஆயினும், இளைஞர் வேலையின்மை, 15-19 வயதுக்கு இடையிலானவர்கள் மத்தியிலான வேலையின்மை நூற்றுக்கு 20.9 வீதத்தில் இருந்து 2010ல் நூற்றுக்கு 21.1 வரை அதிகரித்துள்ளது. 20-29 வயதுக்கு இடைப்பட்டவர்கள் மத்தியிலான வேலையின்மை 2009ல் நூற்றுக்கு 15.4 வீதமாகவும் 2010 நூற்றுக்கு 13.7 வீதமாகவும் இருந்துள்ளது. இந்த நிலைமையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பைத் தேடுபவர்களில் நூற்றுக்கு 59 வீதமானவர்கள், ஐ.பீ.எஸ். ஆய்வுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது, கொரியாவுக்கு எந்த வகையிலான தொழிலையும் செய்வதற்கு தாம் தயார் என்பதை தெரிவித்திருந்தனர்.

இலங்கையில் மட்டுமன்றி உலகின் எல்லா நாடுகளிலும், இளைஞர்களின் வேலையின்மை குமுறும் பிரச்சினையாக தோன்றிவருகின்றது. 2008ல் தோன்றிய நிதி நெருக்கடியின் ஆரம்பத்தில், ஐரோப்பாவில் இளைஞர்களின் வேலையின்மை நூற்றுக்கு 15 வீதமாக இருந்த அதே வேளை, இப்போது அது நூற்றுக்கு 20 வீதத்துக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துக்குள்ளேயும் 27 நாடுகளுக்குள் 15-24 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களில் நூற்றுக்கு 20.5 வீதமானவர்கள் வேலை தேடிக்கொண்டிருக்கின்றனர்.

அரச கடன் நெருக்கடி மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் இளைஞர்களின் வேலையின்மை இப்போது 2008ல் இருந்ததை விட இருமடங்கை நெருங்கியுள்ளது, அதாவது நூற்றுக்கு 46 வீதமாக இருப்பதோடு கிரேக்கத்தில் இது நூற்றுக்கு 40 வீதமாக உள்ளது. முறையே இத்தாலியில் நூற்றுக்கு 28, அயர்லாந்தில் 27, பிரான்ஸில் 23 வீதம் என்ற வகையில் ஐரோப்பிய நாடுகளுக்குள் இளைஞர்களின் வேலையின்மை அதிகரித்துள்ளது. அண்மையில் பிரித்தானியாவில் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 29 வயதான இளைஞர் கொல்லப்பட்டதோடு தோன்றிய கிளர்ச்சி நிலைமை, வேலையற்ற இளைஞர்களின் அமைதியின்மையின் வெளிப்பாடாகும். அந்த நாட்டில் 16-24 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் மத்தியில் வேலையின்மை நூற்றுக்கு 20 வீதம் வரை அதிகரித்துள்ளது.

தமது வாய்ச்சவடால் எவ்வாறு இருப்பினும், ஆளும் வர்க்கத்தின் விழிப்பான தட்டினர் இளைஞர்களின் வேலையின்மை பற்றி பீதியடைந்துள்ளனர். இராஜபக்ஷ அரசாங்கத்தின் சிரேஷட் அமைச்சரவை அமைச்சரான டியூ. குணசேகர கடந்த ஜூன் 8 அன்று, மனித வள கொள்கை வகுக்கும் தேசிய நடவடிக்கை கமிட்டியின் முன் உரையாற்றிய போது, இலங்கை அரபு நாடுகளில் ஏற்பட்டது போன்ற வெடிக்கும் நிலைக்கு முகங்கொடுக்க முடியும்... அவ்வாறு நடப்பதற்கு இடமளிக்கக் கூடாது என்று கூறினார். இளைஞர்களின் வேலையின்மையை சுட்டிக் காட்டிய அவர், இது உண்மையான பிரச்சினை. படித்த இளைஞர்கள் மத்தியில் வேலையின்மை நூற்றுக்கு 15 மற்றும் 20 வீதமளவு உயர்ந்து காணப்படுகின்றது. என்றார்.

தென் கொரிய தொழில் சம்பந்தமாக இளைஞர்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினை பற்றி குறிப்பிட்டு ஆகஸ்ட் 11 அன்று டெயிலி மிரர் பத்திரிகை ஆசிரியர் தலைப்பு ஒன்றை எழுதியிருந்தது. அநேகமானவர்கள் தூரப் பிரதேசங்களில் இருந்து கொழும்பில் கூடிய காட்சி, இளைஞர் வேலையின்மை பற்றிய இயல்பான யதார்த்தத்தைப் பற்றி எமது அரசியல்வாதிகளை விழிப்படையச் செய்வதாக இருக்க வேண்டும். பெரும் வாக்குறுதிகளை அள்ளி வீசுவது மற்றும் உடனடி திருப்திக்கான மந்திரமாக மஹிந்த சிந்தனையை ஜெபிப்பதற்கும் பதிலாக, அமைச்சர்களும் பிரதேச பிரதிநிதிகளும் தமது தேர்தல் தொகுதிகளுக்கு சென்று நிலவும் யதார்த்தத்தைப் பற்றி கவனத்தில் எடுக்க வேண்டும்.

இளைஞர் வேலையின்மை சம்பந்தமாக, அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்களில் இந்த முறையில் பீதி வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும், முதலாளித்துவ முறைமையினுள் அதற்குத் தீர்வு கிடையாது. வேலையின்மையும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமை மீதான இடைவிடாத தாக்குதல்களும் மேலும் மேலும் உக்கிரமடைவது நிச்சயம். நெருக்கடி நிறைந்த முதலாளித்துவ முறைமைக்குள் இளைஞர்களுக்கு எதிர்காலம் கிடையாது. அவர்களால் சோசலிச சமூக அமைப்பினுள் மட்டுமே தமது எதிர்காலத்தை காண முடியும்.