சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Two political activists disappears in the northern Jaffna Peninsular

இலங்கை: வடக்கில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இரு அரசியல் செயற்பாட்டாளர்கள் காணாமல் போயுள்ளனர்

By. C.S. Ahilan
21 December 2012

use this version to print | Send feedback

மக்கள் விடுதலை முன்னணியில் (ஜே.வி.பீ.) இருந்து பிரிந்து சென்று அமைக்கப்பட்ட மக்கள் போராட்ட இயக்கத்தின் (ம.போ.இ.) இரு இளம் தமிழ் உறுப்பினர்கள் டிசம்பர் 9 அன்று மாலையில் இருந்து காணாமல் போயுள்ளனர். அவர்கள் ஆவரங்கால் கிராமத்தில் இருந்து யாழ்ப்பாண நகரை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போதே காணாமல் போயுள்ளனர். அச்சமயம் அவர்கள் டிசம்பர் 10 அன்று மனித உரிமை தினத்தை முன்னிட்டு நிருபர்கள் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்வதில் ஈடுபட்டிருந்தனர். காணாமல் போனவர்களில் லலித் குமார் என்பவர், கொழும்பில் இருந்து 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அவிஸ்ஸாவலைப் பகுதியில் சீனிஸ் தோட்டத்தைச் சேர்ந்த ஒரு தோட்டத் தொழிலாளியின் மகனாவார். மற்றையவர் ஆவரங்கால் கிராமத்தைச் சேர்ந்த குகன் முருகாணந்தன் ஆவார்.

லலித்குமாரின் தந்தை ஆறுமுகம் வீரராஜா கூறியதன்படி, வடக்கில் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகிக்கொள்ளாவிட்டால் காணாமல் போய்விடுவாய் என அவரது மகனுக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் யாழ்ப்பாணத்தில் உள்ள பாதுகாப்பு படையினரால் லலித்குமார் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு நவம்பர் மாதம் அவரை அடையாளந் தெரியாத சிலர் தாக்கியுமுள்ளனர்.

லலித்குமார் மற்றும் குகனின் விடுதலையைக் கோரி யாழ்ப்பாணம் பஸ்தரிப்பு நிலையத்துக்கு முன்னால் ம.போ.இ. மற்றும் அதன் இன்னொரு குழுவான நாம் இலங்கையர் அமைப்பும் ஏற்பாடு செய்திருந்த மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்றனர். அங்கு தலையீடு செய்த பொலிசார் அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கூறினர். அந்த இடத்தில் நூற்றுக்கணக்கான பொலிசார் கடமையில் இருத்தப்பட்டிருந்தனர். பல புலனாய்வுத்துறை அலுவலர்களும் மக்களின் நடமாட்டங்களை அவதானித்துக்கொண்டிருந்தனர்.

60 வயதான லலித்குமாரின் தந்தை ஆறுமுகம் வீரராஜா, மறியல் போராட்டத்தில் பங்குபற்ற யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த போது, தனது மகன் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் தொழில் செய்துகொண்டிருந்த போது கட்சியில் சேர்ந்துகொண்டதாக உலக சோசலிச வலைத் தளத்துக்குத் தெரிவித்தார். அவர் காணாமல் போனவர்களை விடுவிப்பதற்காக போராடியுள்ள நிலையில் அவரது நல்ல நடவடிக்கை பற்றி நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்போது எனது மகனே காணமல் போயுள்ளதையிட்டு நான் கவலையடைகிறேன். அரசாங்கமே எனது மகனை தடுத்து வைத்திருப்பதாக நான் நம்புகிறேன், அவர் இன்னமும் உயிருடன் இருக்கின்றார், நான் அவரை விடுதலை செய்யுமாறு கோருகிறேன். நான் சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு கோருகிறேன், என அவர் கூறினார்.

மறியல் போராட்டத்தில் பங்குபற்றிய ம.போ.இ. பாராளுமன்ற உறுப்பினர் அஜித் குமார, இந்தக் காணாமல் போன சம்பவத்துக்கு அரசாங்கத்தைக் குற்றஞ்சாட்டினார். இந்த நடவடிக்கையின் இலக்கு எங்களது இயக்கத்தின் செயற்பாடுகளை அச்சுறுத்தி முடக்குவதே ஆகும் என அவர் கூறினார்.

லலித்குமாரும் குகனும் காணாமல் போன சம்பவம் புதியதாக இருந்தாலும், ஏனைய சம்பவங்கள், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிந்து இரண்டரை வருடங்களின் பின்னர் காணாமல் ஆக்குதல், கடத்தல் மற்றும் படுகொலைகளுடன் கூடிய அச்சுறுத்தல் பிரச்சாரம் வளர்ச்சியடைவதையே வெளிப்படுத்துகின்றன.

லலித்குமாரும் குகனும் காணாமல் போயுள்ளமை, இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான அரசியல் எதிர்ப்பை நசுக்கும் நடவடிக்கை தொடர்வதையே சுட்டிக் காட்டுகின்றது. கடந்த பல வாரங்களாக கடத்தல்களும் காணாமல் போகும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

* நவம்பர் 27 புலிகளின் மாவீரர் நாள் அன்று, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆயுர்வேத மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 25 வயது மாணவனான வேதரானியம் லத்தீஸ் வெள்ளை வானில் வந்த கும்பலால் கடத்தப்பட்டார். சில நாட்களின் பின்னர் அவர் அச்சுறுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார். அச்சுறுத்தல் பிரச்சாரமொன்றை முன்னெடுத்த இராணுவம், புலி குழுவினர் மாவீரர் தினத்தைக் கொண்டாட முயற்சிப்பதாக பிரச்சாரத்தைப் பரப்பியது.

* அதே தினம், புன்னாலைக் கட்டுவனைச் சேர்ந்த 28 வயதான சிவஞானம் சுமனன், இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள கிளிநொச்சியில் குளம் ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். ஒரு திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்ற சந்தேகத்தில் யாழ்ப்பாண பொலிசார் அவரைக் கைது செய்தனர். அவர் திருடிய பொருட்களைக் காட்டுவதற்காக கூட்டிச் சென்ற போது அவர் குளத்தில் விழுந்து மரணமானார் என பொலிசார் கூறினர். இத்தகைய கூற்றுக்கள் வடக்கில் மட்டுமன்றி நாட்டின் ஏனைய பாகங்களிலும், பொலிசார் தமது பாதுகாப்பில் இருந்த ஒரு சந்தேக நபர் கொல்லப்பட்ட பின்னர் வழமையாக கூறுவதாகும்.

* 51 வயதான சிவபாதம் உதயகுமார், வன்னிப் பிரதேசத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டானில் டிசம்பர் 6 அன்று காணமல் போன பின்னர் குளமொன்றில் சடலமாக மீட்கப்பட்டார். அக்டோபரில், வன்னியில் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த செல்வரட்னம் சாந்திமலர், முல்லைத்தீவில் தனது வீட்டைப் பார்க்கச் சென்றவேளை காணாமல் போய்விட்டார்.

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது நாடு பூராவும் அடிக்கடி இடம்பெற்ற கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கும் பயங்கரவாதப் பிரச்சாரம், இப்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் மீதான வெகுஜன எதிர்ப்பு மற்றும் வட-கிழக்கில் நிரந்தர இராணுவ ஆக்கிரமிப்பு, யுத்தத்தால் ஏற்படுத்தப்பட்ட அழிவு மற்றும் ஆயிரக்கணக்கானவர்கள் அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு சூழ்நிலையிலேயே இது நடந்துள்ளது.

2006 நடுப்பகுதியில், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் யுத்தத்தைப் புதுப்பித்ததில் இருந்து, விசேடமாக யுத்தத்தால் நாசமாக்கப்பட்ட வடக்கு-கிழக்கிலும் மற்றும் கொழும்பு தலைநகரிலும் ஊடகவியலாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர், காணாமல் போயுள்ளனர், கடத்தப்பட்டுள்ளனர் மற்றும் கொல்லப்பட்டுள்ளனர்.

வெள்ளை வான்களில் கடத்தப்பட்ட பலர், புலி சந்தேக நபர்களாக பொலிஸ் நிலையங்களில், சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு சிலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளாக இருந்துகொண்டு துணைப்படைக் குழுக்களாகவும் செயற்படும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பீ.டி.பீ.) மற்றும் புலிகளில் இருந்து பிரிந்து சென்ற தமிழ் மக்கள் விடுதலை புலிகள் (டீ.எம்.வி.பீ.) போன்ற அமைப்புகள் இத்தகைய செயற்பாடுகளில் இழிபுகழ் பெற்றவைகளாகும்.

யுத்தம் முடிவடைந்ததில் இருந்தே முழு வடக்கு கிழக்கும் அரசாங்கப் பாதுகாப்புப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அதே வேளை, முகாங்கள், சோதனைச் சாவடிகள் மற்றும் காவலரன்களும் இன்னமும் பேணப்படுவதோடு, அங்கு நடக்கும் நிகழ்வுகளை புலனாய்வுத் துறையினர் கவனமாக அவதானித்து வருகின்றனர். லலித்குமாரும் குகனும் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், பலாலி உயர் பாதுகாப்பு வலயத்துக்கு அருகில் அச்சுவேலிப் பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஏனைய சம்பவங்களில் போலவே, லலித்குமார் மற்றும் குகனும் காணாமல் போயுள்ள சம்பவம், பாதுகாப்புப் படையினருக்குத் தெரியாமல் நடந்திருக்க முடியாது.

லலித்குமாரும் குகனும் கடத்தப்பட்டுள்ளதை சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) கண்டனம் செய்வதோடு அவர்களது உடனடியான விடுதலையையும் கோருகின்றது. ஆயினும் ஜே.வி.பீ., ம.போ.இ. மற்றும் நாம் இலங்கையர் இயக்கத்தின் அரசியலுக்கு எதிரான நிலையில் இருந்தே சோ.ச.க. இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான போராட்டத்திலும், யுத்தத்தை எதிர்த்து வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இலங்கை துருப்புக்களை திருப்பியழைக்கக் கோருவதிலும் சோ.ச.க. சவால் செய்ய முடியாத சாதனையைச் செய்துள்ளது. இனவாத பாரபட்சங்களுக்கு எதிராக தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் போராட்டத்தின் பாகமாகவே சோ.ச.க. இந்தக் கோரிக்கைகளை முன்வைப்பதோடு, இலங்கையிலும் அனைத்துலகிலும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக மட்டுமே இத்தகைய உரிமைகளை வெல்ல முடியும் என்றும் வலியுறுத்துகிறது.

ம.போ.இ. வெளியில் தமிழ் மக்கள் மீது அனுதாபம் கொண்டதாக காட்டிக்கொண்டாலும், அதன் உறுப்பினர்கள் ஜே.வி.பீ.யில் இருந்த போது, அவர்கள் யுத்தத்தை ஆதரித்ததோடு, அரசியல் கைதிகளை கைது செய்வதும் மனித உரிமை மீறல்களும் யுத்தத்தின் தவிர்க்க முடியாத நடவடிக்கைகள் என பிரகடனம் செய்தனர். இந்தக் குழுக்கள் இன்னமும் இந்த மாகாணங்களில் இராணுவ ஆக்கிரமிப்பை ஆதரிப்பதோடு அந்தப் பிரதேசங்களில் இருந்து பாதுகாப்புப் படைகளை வெளியேற்றுவதை எதிர்க்கின்றன.

ம.போ.இ. தனது உறுப்பினர்களை விடுதலை செய்துகொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்கு முடிவெடுத்துள்ளது என இந்த அமைப்பின் அரசியல் விவகார செயலாளர் புபுது ஜாகொட டெயிலி மிரர் பத்திரிகைக்குத் தெரிவித்தார். இது உண்மையில் மனித உரிமைகளை பகிரங்கமாக மீறும் பெரும் வல்லரசுகளை, குறிப்பாக மேற்கத்தைய சக்திகளை நோக்கி ம.போ.இ. நகரந்துகொண்டுள்ளதைக் காட்டுகிறது.