சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : எகிப்து

Protests continue against threat of counter-revolution in Egypt      

எகிப்தில் எதிர் புரட்சி நடவடிக்கை அச்சுறுத்தலுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன

By our reporter
14 March 2011
Use this version to print | Send feedback

இது எதிர்ப்புரட்சி நடவடிக்கை ஆகும்என்று வெள்ளியன்று கெய்ரோவின் மத்திய தஹ்ரிர் சதுக்கத்தில் எதிர்ப்புத் தெரிவித்த பல ஆயிரக்கணக்கானவர்களில் ஒருவரான கணணிப் பொறியியலாளர் எஸ். கலேட் கூறினார். இராணுவத்திற்கு எதிரான ஒரு கோஷ அட்டையை அவர் உயர்த்திப்பிடித்து இருந்தார். “புரட்சிக்கு முன்பு இருந்த இருண்ட காலத்திற்கு மீண்டும் சென்றுவிட நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அரச பாதுகாப்புப் படைகள் மற்றும் NDP யின் அதிகாரம் முற்றிலுமாக முறிக்கப்பட வேண்டும். இதுவரை நடந்தவை அனைத்தும் போதாதவை.”



மார்ச்
11ம் தேதி தஹ்ரிர் சதுக்கத்தில் எதிர்ப்பாளர்கள்

வெள்ளியன்று புரட்சியின் கோரிக்கைகள் அடையப்பட வேண்டும், முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே ஒற்றுமை இருக்க வேண்டும் போன்ற அழைப்புக்கள் பல ஆர்ப்பாட்டக்காரர்களால் விடப்பட்டது

காலேட்டின் அக்கறைகள் பகிர்ந்துகொள்ளப்பட்டதைத்தான் காட்டின.

WSWS இடம் பேசிய இரண்டு இளவயது இளைஞர்கள், “புதிய அரசாங்கம் பற்றி நாங்கள் அதிருப்தி அடைந்துள்ளோம். அரசியலமைப்பில் திருத்தங்கள் என முன்வைக்கப்படுபவை கேலிக்கூத்தானவை. பழைய அரசியலமைப்பு வெறுமனே திருத்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. மாறாக புதிய, உண்மையான ஜனநாயக அரசியலமைப்புத்தான் தேவைஎன்றனர்.

தேசிய பாதுகாப்புப் பிரிவு உடனடியாகக் கலைக்கப்பட வேண்டும் என்றும் இருவரும் அழைப்பு விடுத்தனர். “இச்சக்திகள் இப்பொழுது முஸ்லிம்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் இடையே வெறுப்பை தூண்ட முயற்சிக்கின்றன. ஆனால் நாங்கள் சகோதரர்கள். எங்கள் அனைவருக்குமே கிறிஸ்துவ, முஸ்லிம் நண்பர்கள் உண்டு.”

மற்றொரு எதிர்ப்பாளர் இராணுவத்தின் எதிர்ப் புரட்சி பங்கை சுட்டிக்காட்டினார். “புதன்கிழமையன்று இராணுவம் குண்டர்களின் வன்முறையைப் பயன்படுத்தி தஹ்ரிர் சதுக்கத்தில் இருந்தவர்களை அகற்றிவிட்டனர்என்றார் அவர். “அமைதியான முறையில் ஈடுபட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், எகிப்திய அருங்காட்சியகத்தில் கைது செய்யப்பட்டுச் சித்திரவதைக்கும் உள்ளானார்கள்.”

மற்றொரு இளைஞர் கூறினார்: “வன்முறையைத் தூண்டிவிடுதல், குழப்பத்தை ஏற்படுத்துதல் ஆகியவை மீண்டும் ஆட்சியின் கடைசித் துரும்பு அட்டை போல் தோன்றுகிறது. பொலிசை மீண்டும் தெருக்களில் நிறுத்துதவற்கான சூழ்நிலையை அவர்கள் உருவாக்க விரும்புகின்றனர்.”

சமீபத்திய நாட்களில் பழைய ஆட்சி பெரும் அச்சுறுத்தல் மற்றும் வன்முறையைக் கையாண்டு முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தவும் மக்களின் பல பிரிவுகளிடையே பிளவை ஏற்படுத்தவும் முயன்றது. பத்து நாட்களுக்கு முன்பு கெய்ரோப் புறநகரான ஹெல்வனில் ஒரு தேவாலயம் எரித்துத் தகர்க்கப்பட்டது. பின்னர் கோப்டிக் கிறிஸ்தவச் சிறுபான்மையினர் கெய்ரோவில் பல பகுதிகளில் எதிர்ப்புக் காட்டி தேவாலயம் மீண்டும் கட்டமைக்கப்பட வேண்டும், சம உரிமைகள் வேண்டும் என்று கோரினர். பல முஸ்லிம்களும் எதிர்ப்புக்களில் கலந்து கொண்டனர். இவற்றுள் ஒன்று சமீபத்தில் அரசத் தொலைக்காட்சிக் கட்டிடத்திற்கு முன் நடந்தது.

செவ்வாய் இரவு கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே வன்முறை மோதல்கள் ஏற்பட்டன. தீவிர சலாபிக்கள் (முஸ்லிம் அடிப்படைவாதிகள்) மொகட்டம் கெய்ரோவில் அதிக கோப்டுக் கிறிஸ்தவ தொழிலாள வர்க்கத்தினர் வசிக்கும் பகுதிகளைத்  தாக்கினர். கடுமையான மோதலில், 13 பேர் கொலையுண்டனர், 165 பேர் காயமுற்றனர்.

பாகுப்பாட்டிற்கு எதிரான எகிப்தியர்கள் என்னும் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மௌனிர் மெகட் அரசப் பாதுகாப்புக் கருவி இம்மோதல்களுக்கு வழிவகுத்திருக்கலாம் என்று கூறினார்.

சமீபத்தில் வெளிவந்துள்ள அறிக்கைகள் அரச பாதுகாப்புக் கருவிக்கும் சலாபிய இயக்கத்திற்கும் இடையே நெருக்கமான பிணைப்புக்கள் இருப்பதைக் காட்டியுள்ளன. அரச பாதுகாப்புக் கருவி அவர்களைப் பயன்படுத்தி அலெக்சாந்திரியாவிலுள்ள Two Saints தேவாலயம் மீது குண்டு எறிந்தது (ஜனவரி முதல் தேதி.) என்றார் அவர். இதற்கான சான்று அரசப் பாதுகாப்புக் கருவி சலாபிய இயக்கத்தில் ஊடுருவி, அதை எதிர் புரட்சி நடவடிக்கை ஏற்படுத்தும் முயற்சியில் பயன்படுத்துவது ஆகும்.

மார்ச் 9ம் தேதி புதிய பிரதம மந்திரி எஸ்ஸம் ஷரப்பும் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் நாடுஎதிர் புரட்சிநிலையை சந்திக்கிறது என்றார். “நடப்பது முறையானது, ஒழுங்கானது என்ற வகையில்தான் அதை அரசாங்கம் உறுதிபடுத்துகிறது. துரதிருஷ்டவசமாக அரசாங்க  அமைப்புக்களை அழிக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.” பின்னர் பேட்டியில் ஷரப் புரட்சியின் மனச்சாட்சி என்று தன்னைக் காட்டிக் கொள்ள முற்பட்டு, இந்தத் தூய புரட்சியைப்பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளுக்கு இப்பொழுது தேவை ஏற்பட்டுவிட்டது என்றார்.

எந்த அளவிற்கு எதிர் புரட்சி நடவடிக்கைகளின் குற்றம் சார்ந்த அதிகப்படி செயல்களுக்குப் பின்புலம் ஷரப் உள்ளார் என்பது பற்றித் தெளிவு இல்லை. ஆனால் ஒரு முன்னாள் NDP உறுப்பினர், முபாரக்கின் முன்னாள் மந்திரி என்ற முறையில், அவருக்கு உறுதியாக தொடர்பு இருக்க வேண்டும். எகிப்திய முதலாளித்துவம் இப்பொழுது அது கட்டவிழ்த்துவிட்ட பெரும் குழப்பத்தை பயன்படுத்தி பொலிஸ் மற்றும் இராணுவத்தைத் திரட்டி கடந்த வார இறுதியில் அரச பாதுகாப்புப் பிரிவுகளின் தலைமையகத்தில் உச்சக்கட்டத்தை அடைந்த எதிர்ப்புக்களை தாக்குவதற்கும் பல்கலைக்கழகங்களால் நடக்கும் வேலைநிறுத்தங்கள் மற்றும் மாணவர் எதிர்ப்புக்களை தாக்கவும் முயன்றது.

மார்ச் 16ம் தேதி முபாரக் அகற்றப்பட்ட பின்னர் முதல் தடைவையாக, எகிப்தின் பங்குச் சந்தை மீண்டும் திறக்கப்படவுள்ளது. இதனால் ஷரப் மற்றும் இராணுவத்தின் நோக்கம் நாட்டில் எப்படியும் அமைதியை மீட்க வேண்டும் என்பதுதான். பொலிசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், அதை மதிக்க வேண்டும் என்று ஷரப் மக்ளுக்கு வலியுறுத்தியுள்ளார். சீற்ற தினம் என்று அழைக்கப்பட்ட  ஜனவரி 28 வெள்ளிக்கிழமைக்கு பின்னர் பொலிஸ் அதிகாரிகள் தெருக்களில் தென்படுவது அபூர்வம். அன்று வெறுக்கப்பட்ட பாதுகாப்புப் படையினர் மீது எதிர்ப்பாளர்கள் மேலாதிக்கம் கொண்டனர்.

எகிப்திய மக்கள், குறிப்பாக இளைஞர்கள், பல தசாப்தங்களாக தங்களை பீதிக்கு உட்படுத்திக் கொண்டிருந்த மிருகத்தனமான பொலிஸ் படைகள் திரும்பி வருவதை எதிர்க்கின்றனர். கடந்த கோடையில்தான் அலெக்சாந்திரியாவில் ஒரு எகிப்திய இளைஞர் கலேட் செய்யது பொலிசால் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு இறந்து போனார். புரட்சியின் போது நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். “எகிப்து எதிர்ப்பாளர்களை பாதுகாக்கும் முன்னணி (Front to Defend Egypt’s protesters)” கூறியுள்ளபடி, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 686, இன்னும் உயரக்கூடும். பெரும்பாலான இறப்புக்கள் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக சீற்ற தினத்தன்று  பெரும் மிருகத்தனத்துடன் பொலிசார் தலையிட்டதால் ஏற்பட்டன.

முபாரக் ஆட்சியின் மாபெரும் பொலிஸ் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வேண்டும் என்பது புரட்சியின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். “அரச பொறிமுறையில்  பொலிஸ் ஸ்தாபனம் மிகவும் முக்கியமான கூறு ஆகும்என்று இப்பொழுது ஷரப் கூறுகிறார். இது முபாரக்கிற்குப் பின் வந்துள்ள ஆட்சியின் தன்மையைப் பற்றி நிறையவே குறிப்பிடுகிறது.

அரசும் புரட்சியும் என்னும் தன்னுடைய நூலில் இராணுவமும் பொலிசும்அரச அதிகாரம் செலுத்தப்படுவதற்கு இரு முக்கிய கருவிகள் ஆகும்என்றார் லெனின். இவை முதலாளித்துவத்தின் வர்க்க நலன்களுக்குத்தான் முற்றிலும் உழைக்கும் என்றார். இவருடைய ஆய்வு எகிப்தியப் புரட்சியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக முற்றிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

புதன்கிழமையன்று அகலக்கத்திகள் மற்றும் கற்களைக் கொண்ட குண்டர்கள் மீண்டும் தஹ்ரிர் சதுக்கத்தில் அமைதியாக ஈடுபட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கினர். எதிர்ப்பாளர்களைக் காப்பதற்குப் பதிலாக இராணுவம் தாக்குபவர்களுடன் சேர்ந்து கொண்டு எதிர்ப்பாளர்கள் நிறுவியிருந்த முகாம்களை வன்முறையைப் பயன்படுத்தி அகற்றுவதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டது.

தகவல்களின்படி, முந்தைய மாலையில் இராணுவம் அத்தகைய குண்டர்களுடன்  கோப்ட்டுக்களைத் தாக்கச் சேர்ந்து கொண்டது. நேரில் பார்த்த சாட்சி ஒருவர் Daily News Egypt இடம் குண்டர்கள்இராணுவத்தின் டாங்குகளில் இருந்து தாக்கினர்என்று கூறினார். இறந்தவரின் இறுதிச் சடங்கில் பேசிய பாதிரியார் எகிப்தியர்களின் பாதுகாப்பை இராணுவ அதிகாரிகள் உறுதிசெய்வதற்கு நன்றி எனக் கூறியபோது, துக்கத்திற்கு வந்தவர்கள் இராணுவத்திற்கு எதிரான சீற்றமான எதிர்ப்புக் குரல்களைக் கொடுத்தனர்.

கடந்த வாரம் எகிப்தில் நடந்த நிகழ்வுகள் எகிப்திய புரட்சியின் துவக்க தினங்களை நினைவுபடுத்தின. அப்பொழுது முபாரக் ஆட்சி இரகசியப் பிரிவு முகவர்களையும் குண்டர்களையும் பயன்படுத்தி பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. எகிப்திய நாளேடான Al Ahra சமீபத்தில் வன்முறை நிகழ்ச்சிகள் விசாரணை பற்றி பெயரிட விரும்பாத  இராணுவத்தின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியை மேற்கோளிட்டு ஒரு  கட்டுரையை வெளியிட்டுள்ளது. அவர் NDP மற்றும் பழைய ஆட்சியின் உறுப்பினர்கள்தான் புரட்சியை தோற்கடிக்க தாக்குதலை திட்டமிட்டனர் என்று அறிவித்தார். “அவர்கள் அழித்துத் தகர்த்துவிட விரும்பினர். அது அவர்களுடைய எதிர் புரட்சி மூலோபாயத்தின் ஒரு அங்கமாகும்என்றார் அவர். ஆயுதப் படைகளின் தலைமைக் குழு எதிர்ப்பாளர்களை சண்டை மூள்வதற்கு சில மணி நேரம் முன்பு காலி செய்யச் சொல்லி வெளியிட்ட அறிக்கை சந்தேகத்திற்கு உரியது என்று உண்மையையும் அந்த வல்லுனர் சுட்டிக்காட்டினார்.

சமீப நாட்களில் நடக்கும் நிகழ்ச்சிகளும் வெளிப்பாடுகளும் எகிப்திய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய புரட்சியில் இராணுவத்தின் பங்கு பற்றிய சந்தேகத்தை பெருக்கியுள்ளன. முரண்பட்ட வர்க்க நலன்கள் பெருகிய முறையில் வெளிப்படையாக வருகின்றன. பழைய ஆட்சியின் வேர்களை முற்றிலும் அழித்துவிட வேண்டும் எனத் தீவிரமாகவுள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு புரட்சி இப்பொழுதுதான் தொடங்கியுள்ளது. எகிப்திய முதலாளித்துவம் மற்றும் இராணுவத்திற்கு அது ஏற்கனவே முடிந்துவிட்டது இப்பொழுது எகிப்தின் ஆளும் வர்க்கத்தின் அனைத்துத் தட்டினரும் கிட்டத்தட்ட முழுமையாக விமர்சனமற்ற வகையில் ஷரப் மற்றும் இராணுவத்திற்கு ஆதரவைக் கொடுக்கின்றனர்.

முஸ்லிம் சகோதரத்துவத்தின் தலைவர் ஒருவரான அப்டெல் மொனெம் அபுல் பௌட்டௌ The Egyptial Gazette இடம் அவருடைய குழு ஷரப்பின் போக்கை முழுமையாக ஆதரிப்பதாகக் கூறினார். “மாற்றுக்காலம் என்பது மிக முக்கியம். ஏனெனில் நம் நாட்டின் வருங்காலத்தை அது நிர்ணயிக்கும். எனவே பாதுகாப்புப் படைகள் உறுதியாகவும் நாட்டிற்கு உதவத் தயாராகவும் இருக்க வேண்டும்.” ஷரப்பும் இராணுவத் தலைமையும் முன்வைத்துள்ள அரசியலமைப்புத் திருத்தங்களுக்கும் ஆதரவை முஸ்லிம் சகோதரத்துவம் கொடுக்கிறது.

மார்ச் 19ம் திகதி பல அரசியலமைப்புத் திருத்தங்கள் மீது வாக்கெடுப்பு நடக்க உள்ளது. இவை முற்றிலும் தொடக்கநிலையிலுள்ள ஜனநாயக வழிமுறை என்ற தோற்றத்தை கொடுப்பதற்கான தந்திரோபாய உத்திகள்தான். உண்மையில் இந்த திருத்தங்கள் 1971 அரசியலமைப்பில் அடிப்படையில் இருந்த ஜனநாயகமற்ற தன்மையை மாற்ற அதிகம் ஏதும் செய்யவில்லை. கருத்துக் கணிப்புக்கள் பெரும்பாலான மக்கள் முன்வைக்கப்படும் திருத்தங்கள் பற்றி அவநம்பிக்கை காட்டுவதுடன் மாற்றங்களை நிராகரிக்கின்றனர் என்பதையும் காட்டுகின்றன.

அம்ர் மௌசா மற்றும் மஹ்மத் எல்பரடெய் போன்ற எகிப்தின் ஆளும் வர்க்கத்தின் மற்ற பிரதிநிதிகளால் முன்வைக்கப்படும் அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு எதிரான கருத்துக்களைக் கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் அடிப்படையில் ஷரப் மற்றும் இராணுவத்தின் போக்கிற்கு ஆதரவைக் கொடுக்கின்றனர்.

எல்பரடெயின் தேசிய மாற்றத்திற்கான கூட்டணி தலைமை இராணுவக் குழு ஷரப்பை புதிய பிரதம மந்திரியாக, வெகுஜன எதிர்ப்பைத் தொடர்ந்து அவருக்கு முன் இருந்த அஹ்மத் ஷபிக் இராஜிநாமா செய்ததை அடுத்து, நியமனம் செய்த முடிவை வரவேற்றது. இந்த முடிவிற்கு முன்னாள் இராணுவம், எல்பரடெய் மற்றும் அம்ர் மௌசா ஆகியோருக்கு இடையே எப்படிப் போக்கைக் கொள்வது என்ற பேச்சுக்கள் இருந்தன. இதற்கிடையில் இவர்கள் இருவரும் திட்டமிடப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தல்களில் நிற்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.

எகிப்திய முதலாளித்துவம் தனக்குள் இருக்கும் பிளவுகளை அகற்றிக் கொள்கிறது. இதற்குக் காரணம் எகிப்தின் தொழிலாளர்கள், இளைஞர்களின் புரட்சிகர இயக்கத்தை நசுக்குவதுதான். முபாரக் ஆட்சியைப் போல் இதற்காக அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வன்முறையைப் பயன்படுத்த தானும் தயார் என்பதைத்தான் நிரூபித்துள்ளது.

கடந்த சில நாட்கள், வாரங்களாக நடைபெறும் நிகழ்ச்சிகள் எகிப்தின் புரட்சிகரத் தொழிலாளர்களும் இளைஞர்களும் தங்கள் கோரிக்கைகளை அடைவதற்கு அனைத்து முதலாளித்துவ சக்திகளிடமிருந்தும் முழு சுயாதீனம் பெற்ற அதிகாரத்திற்கான போராட்டத்தை எடுத்துக் கொண்டால்தான் முடியும் என்பதைத்தான் காட்டுகின்றன. தொழிலாளர்களுடைய அரசாங்கம் ஒன்றுதான் பெரும்பாலான மக்களுக்குத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்த முடியும். பழைய ஆட்சியின் எடுபிடிகளுடன் முறித்துக் கொள்ள முடியும், உண்மையான ஜனநாயகம் மற்றும் சமூகச் சமத்துவத்தைத் தளமாகக் கொண்ட ஒரு சமூகத்தை நிறுவ முடியும்.