சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

தொம்பே பொலிஸ் காவலில் கொல்லப்பட்ட வாலிபனின் மரணச் சடங்கில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்

By W.A. Sunil and Kalpa Fernando
6 October 2011

use this version to print | Send feedback


கயான் ரசாங்க

கடந்த வாரம் தொம்பே பிரதேச பொலிஸ் காவலில் இருந்த போது கொல்லப்பட்ட ஜி.ஏ. கயான் ரசாங்க என்ற 28 வயது இளைஞனின் மரணச் சடங்கு திங்களன்று இடம்பெற்றது. தொழிலாளர்கள், விவசாயிகள், குடும்பப் பெண்கள் மற்றும் இளைஞர்களுமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்துகொண்டனர். செப்டெம்பர் 29 அன்று மாலை 4.30 மணியளவில் தண்ணீர் பம்ப் ஒன்று திருடப்பட்டது சம்பந்தமான சந்தேகத்தில், பட்டிவலையில் அமைந்துள்ள அவரது மனைவியின் வீட்டில் இருந்த ரசாங்க கைது செய்யப்பட்டதோடு, மறு நாள் காலை 7.30 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளதாகவும் சடலம் தொம்பே வைத்தியசாலை சடல அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரது மனைவிக்கு தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்ற நடவடிக்கையின்றி எதேச்சதிகாரமாக கொலை செய்யப்பட்ட (சட்டத்திற்குப் புறம்பான கொலை) சம்பவங்களில் இது அண்மைய சம்பவமாகும். நடைமுறையில் உள்ள சட்டங்களை முழுமையாக அலட்சியம் செய்து சந்தேக நபர்களை இவ்வாறு படுகொலை செய்வது பொலிசாரால் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, புலிகளுக்கு எதிரான முதலாளித்துவ மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்தின் இனவாத யுத்தம் 2009 மே மாதம் முடிவடைந்த பின்னர் இது மேலும் அதிகரித்துள்ளது.


கயானின் பத்து மாத மகள்

கம்பஹா மாவட்டத்தின் தொம்பே பிரதேசத்தில் அமைந்துள்ள, பெருமளவில் வறிய விவசாயிகள் வாழும், குறைந்த வசதிகள் கொண்ட எகொட கலஹெல கிராமத்தில் வாழ்ந்த ரசாங்க குடும்பத்தில் இளையவராவார். முச்சக்கர வண்டி ஓட்டும் அவர், 10 மாத குழந்தையின் தந்தையாவார்


கயானின் தாயும் மனைவியும்

அவரது 24 வயது மனைவி ரஷிகா லக்மினி உலக சோசலிச வலைத் தள நிருபர்களுடன் பேசும் போது, 29ம் திகதி மாலை அவரது வீட்டுக்கு சிவில் உடையில் வந்த 6 பொலிஸ் அதிகாரிகள், அவரை இழுத்துச் சென்று வாகனமொன்றில் தினித்து தொம்பே பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றதாக கூறினார். அவர் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற போதும் கனவரை பார்ப்பதற்கு அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. சம்பவம் சம்பந்தமாக கைது செய்யப்பட்ட ஏனைய இரு சந்தேக நபர்கள் அங்கு இருந்த போதும், ரசாங்க அங்கு இருக்கவில்லை. நான் கேட்ட போது அவர் நிலைய பொறுப்பதிகாரியுடன் (ஓ.ஐ.சி.) வெளியில் சென்றுள்ளார் என அங்கு கடமையில் இருந்த ஒரு உத்தியோகத்தர் கூறினார். சிறிது நேரத்தின் பின்னர் ஓ.ஐ.சி. வந்தாலும் அவருடன் எனது கனவர் இருக்கவில்லை. அவர் குற்றப் பிரிவு ஓ.ஐ.சி. உடன் சென்றுள்ளதாக கூறினார்கள், என லக்மினி தெரிவித்தார்.

ரசாங்கவை மறு நாள் காலை நீதி மன்றத்தில் முற்படுத்துவதாக பொலிசார் தெரிவித்த பின்னரே உறவினர்கள் இரவு 8 மணியளவில் அங்கிருந்து திரும்பினர். ஆயினும் மறு நாள் காலை அவர் கொல்லப்பட்ட செய்தியே கிடைத்தது. அவர் இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்க மாட்டார் என எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. ஏனெனில் அவர் கடந்த இரு வாரங்களாக எங்கள் வீட்டில் தான் இருந்தார். இப்போது நான் எனது குழந்தையுடன் தனிமையில் வாழத் தள்ளப்பட்டுள்ளேன் என லக்மினி அழுதபடி கூறினார்.  

ரசாங்கவின் தந்தை லீலாநந்தவும் தனது மகன் அந்த திருட்டில் சம்பந்தப்படவில்லை என கூறினார். தொம்பே ஓ.ஐ.சி. உட்பட பொலிஸ் அதிகாரிகள் தனக்கு நன்கு தெரிந்த நண்பர்கள் எனவும், கைது செய்யப்பட்ட ரசாங்கவின் பாதுகாப்பையிட்டு பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை என அவர்கள் உறுதிப்படுத்தியதாகவும் அவர் கூறினார். ஆயினும் பொலிசுக்கு சென்ற லீலாநந்தவுக்கு தனது மகனைப் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

இரவு 10.30 மணியளவில் நான் திரும்பி வரும்போது பொலிஸ் பெரக் பக்கம் யாரோ முனகும் சத்தம் கேட்டது. அந்த சத்தம் ரசாங்கவின் சத்தம் என்பதை நான் உணர்ந்தேன். நான் அந்த பக்கம் ஓடிச் சென்ற போதும் அவர்கள் என்னை தடுத்தனர். அவரை காலில் தொங்கவைத்து அடிப்பதை நான் கண்டேன். எனது மகனை அடிக்க வேண்டாம் என கும்பிட்டுக் கெஞ்சினேன் என அவர் கூறினார். அரசாங்கத்தினதும் பொலிசினதும் பொய் பிரச்சாரத்தில் ஏமாறாமல், உண்மையை அம்பலப்படுத்துமாறு அவர் ஊடகங்களிடம் கேட்டுக்கொண்டார். ரசாங்கவின் உடலில் காயம் இருந்ததாகவும், அவரது மூக்கில் இரத்தம் வடிந்துகொண்டிருந்ததாகவும் குடும்ப உறுப்பினர்கள் கூறினர்.

ரசாங்க கொலைக்கான பொறுப்பில் இருந்து கைகழுவிக் கொள்வதற்காக பொலிசார் ஆரம்பத்தில் கட்டுக் கதை ஒன்றை கூறினர். திருடிய பொருளை பொலிசாருக்கு காட்டுவதற்காக சென்றுகொண்டிருந்த போது, அவர் பொலிஸ் ஜீப்பில் இருந்து குதித்ததாலேயே உயிரிழந்ததாக பொலிசார் கூறினர். பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மெக்ஸி புரொக்டரும் அரச ஊடகங்கள் உட்பட சில ஊடகங்களும் ஆரம்பத்தில் அந்தப் பொய்யையே திருப்பிக் கூறின.

எவ்வாறெனினும் ரசாங்கவின் குடும்ப உறுப்பினர்களும் கிராமத்தவர்களும் பொலிசாரின் கதையை முழுமையாக நிராகரித்தனர். அவரது மரணம் ஒரு கொலை என குற்றஞ்சாட்டிய சுமார் 3,000 பேர், சீற்றத்துடன் பொலிஸ் நிலையத்தை சுற்றி வளைத்தனர். அவர்கள் சடலத்தை பொலிஸ் நிலையத்துக்கு முன்னாள் கொண்டுவந்து வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொலை சம்பந்தமாக தமது ஆத்திரத்தை வெளிப்படுத்திய அவர்கள், பொலிஸ் நிலையத்தின் மீது கற்களை வீசியதுடன், நிலையத்தின் ஒரு பகுதியில் தீ மூட்டியதோடு, இந்த திருட்டுச் சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்களாக பொலிசாரால் கைது செய்யப்பட்டு, அவர்களது தாக்குதலில் காயமடைந்திருந்த ஏனைய சந்தேக நபர்களையும் விடுவித்து ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பொலிசாரின் கட்டுக் கதையை பரப்பிய ஊடகங்களை சார்ந்த நிருபர்கள் குழுவினரையும் அவர்கள் விரட்டியடித்தனர்.

இவ்வாறு வெடித்துச் சிதறிய வெகுஜன எதிர்ப்பையிட்டு பீதியடைந்த அரசாங்கம், அதை நசுக்குவதற்காக நூற்றுக்கணக்கான படையினரையும் பொலிஸ் அதிரடிப் படையையும் ஆயுதங்களுடன் உடனடியாக அங்கு நிலைநிறுத்தியது. ஆத்திரமடைந்திருந்த கிராமவாசிகளை சமாதானப்படுத்துவதற்காக அரசாங்க, அதே போல் எதிர்க் கட்சி அரசியல்வாதிகளும் உடனடியாக தலையீடு செய்தனர். ஆயினும் பல மணி நேரமாக நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் சிரமப்பட்டனர்.


கயானின் பூதவுடல் மற்றும் மரண ஊர்வலம்

மக்களின் சீற்றத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாக, ரசாங்கவின் கொலை பற்றி விசாரிப்பதற்கு பொலிஸ் குற்றப் புலானாய்வுப் பிரிவின் (சி.ஐ.டி.) அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழுவை நியமிக்க பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன் நடவடிக்கை எடுத்தார். தொம்பே பொலிஸ் குற்றப் பிரிவின் ஓ.ஐ.சி. உட்பட 5 அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருந்தனர். அந்த விசாரணைகளின் படி, ரசாங்கவின் மரணம் பொலிஸ் ஜீப்பில் இருந்து பாய்ந்ததனால் ஏற்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது என அறிவிக்க பொலிஸ் ஊடக பேச்சாளர் தள்ளப்பட்டார். மரணம் சம்பந்தமாக விசாரணை நடத்திய அரச சட்ட வைத்திய அதிகாரி, தீர்ப்பை ஒத்தி வைத்ததோடு ரசாங்கவின் உடலின் பாகங்களை மேலதிக விசாரணைக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பிவைத்தார்.  

பொலிஸ் நிலையத்தின் மீது தாக்குதல் தொடுத்தவர்களை கைது செய்வதற்கு சி.ஐ.டி. விசாரணை நடத்துகிறது என பொலிஸ் மா அதிபர் கூறினார். இதன் மூலம் கிராமவாசிகளுக்கு எதிராக பொலிஸ் வேட்டையாடல் ஒன்று முன்னெடுக்கப்படுவது தெளிவு.


மயாணத்தில் நிலைகொண்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப் படையினர

ரசாங்கவின் மரணச் சடங்கு தமக்கும் அதே போல் அரசாங்கத்துக்கும் விரோதமான எதிர்ப்பு வெடிப்பதற்கான வாய்ப்பாக அமையும் என பீதியடைந்த பொலிஸ், அந்த சந்தர்ப்பத்தில் ஆர்ப்பாட்டங்களோ ஊர்வலங்களோ நடத்தக் கூடாது என்று நீதிமன்ற தடை உத்தரவு ஒன்றை பெற்றிருந்தது. சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட இராணுவ மற்றும் அதிரடிப்படையினர் அன்றைய தினம் பிரதேசம் பூராவும் அரசாங்கத்தால் நிலைநிறுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் ஒரு பகுதியினர் மோட்டார் சைக்கிளில் கிராமத்தை சுற்றி ரோந்து சென்றனர். மரணச் சடங்கிற்கு வந்திருந்தவர்களை அதிரடிப்படையினர் வீடியோவில் பதிவு செய்தனர்.

உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசிய பலர், இந்த கொலையை கண்டனம் செய்தனர். திருடப்பட்டதாக கூறப்படும் பொருளின் உரிமையாளருடன் பேசிய போது, திருடு சம்பந்தமாக இந்த மூவர் மீதும் சந்தேகப்படுவதாகவே நாம் பொலிசில் முறைப்பாடு செய்திருந்தோம். அவர்கள் அதை திருடியிருந்தால் பொலிசார் அவர்களை நீதிமன்றத்திலேயே நிறுத்தி இருக்க வேண்டும். அப்போது அவர்களுக்கு நீதிமன்றத்தில் தண்டனை கிடைக்கும். இந்த இளைஞனை கொன்றதை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம், என்றார்.

ரசாங்கவின் பாடசாலை கால நண்பர்கள் பேசிய போது, அவர் தவறு செய்திருந்தால் அவருக்கு தண்டனை கொடுக்க வேண்டியது நீதிமன்றமே அன்றி பொலிசார் அல்ல என தெரிவித்தனர். இந்த நாட்டில் சட்டம் ஒன்றும் கிடையாது. பணக்காரர்கள் மற்றும் வறியவர்கள் சம்பந்தமாக பொலிசும் சட்டமும் வெவ்வேறு விதமாகவே செயற்படுகின்றன. இந்த பிரதேசங்களில் உள்ள இளைஞர்களுக்கு மாலையில் ரோட்டில் நடக்க முடியாது. பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவர்களை அடிக்கடி கைது செய்கின்றனர்.

இன்னுமொரு இளைஞர் தெரிவித்ததாவது: சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என மக்களுக்கு அரசாங்கம் சொல்கின்றது. ஆயினும் பொலிசாருக்கு இவ்வாறு மக்களை கொலை செய்ய என்ன உரிமை இருக்கின்றது. இளைஞர்களை நாயைக் கொல்வது போல் கொல்லும் போது பொலிசார் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளவில்லையா?

ரசாங்கவின் கொலை வெறுமனே தனிமைப்பட்ட ஒரு சம்பவம் அல்ல. பல்வேறு குற்றங்களோடு சம்பந்தப்பட்டவர்களாக கைது செய்யப்படும் நபர்கள், அநேகமான நேரங்களில் ஒரே மாதிரியான காரணங்களைக் காட்டி சுட்டுக் கொல்வதை பொலிசார் பல ஆண்டுகளாக செய்து வருகின்றனர். ஒழித்து வைத்திருக்கின்ற ஆயுதங்களை அல்லது திருட்டுப் பொருட்களை காட்டுவதற்கு பொலிஸ் குழுவொன்றுடன் செல்லும் போது, அந்த ஆயுதத்தை எடுத்து அல்லது பொலிசாரின் கையில் உள்ள ஆயுதத்தை பறித்து பொலிசார் மீது தாக்குதல் தொடுக்க அல்லது தப்பிச் செல்ல முயற்சித்த போது திருப்பிச் சுட்டதால் குறிப்பிட்ட சந்தேக நபர் கொல்லப்பட்டதாக பொலிசார் குறிப்பிட்டனர்.

கடந்த 11ம் திகதி அதுருகிரிய பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தாமல் 19 நாட்கள் சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அசங்க பொத்தேஜு என்ற முன்னாள் கடற்படை உறுப்பினர், அகஸ்ட் 30 அன்று களனி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார். அவர் தான் ஒழித்து வைத்திருந்த டீ56 ரக துப்பாக்கி ஒன்றை காட்டுவதற்காக பொலிஸ் குழுவொன்றுடன் சென்ற போது ஆற்றில் குதித்ததாக பொலிசார் குறிப்பிட்டனர். ஆயினும் திறமையான நீச்சல் வீரரான அசங்க, பொலிஸ் கைதில் இருந்து தப்பி எவ்வாறு ஆற்றில் குதித்தார் என்பதை பொலிசார் தெளிவுபடுத்தவில்லை.

மொரட்டுவ பிரதேசத்தில் பொலிஸ் உத்தோயகத்தர் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ஒருவர், அக்டோபர் 4ம் திகதி இதே முறையில் மரணமான போதும், அவரை பொலிசுக்கு கொண்டு சென்ற போது பொல்கொட ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என பொலிசார் கூறினர். அவ்வாறு மரணமடைந்த சந்தேக நபரின் குடும்ப உறுப்பினர்கள் கதறி அழுவதை சிரச ஊடகத்தின் நிருபர் இந்திக ஸ்ரீ அரவிந்த கெமராவில் பதிவு செய்த போது, அந்த படத்தை அழிக்குமாறு பொலிசார் அவரை நெருக்கியதின் மூலம், இத்தகைய சம்பவங்களை மூடி மறைப்பதற்காக பொலிசார் மேற்கொள்ளும் ஜனநாயக விரோத முயற்சிகள் வெளிப்படுகின்றன.

2006 நடுப்பகுதியில் இராஜபக்ஷ அரசாங்கத்தால் மீண்டும் தொடங்கப்பட்ட புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் மத்தியில், தமிழர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உட்பட அரசியல் எதிரிகளை இலக்காகக் கொண்டு கடத்தல், காணாமல் ஆக்குதல், கொடூரமான தாக்குதல்கள் மற்றும் கொலைச் சம்பவங்கள் நூற்றுக்கணக்காக இடம்பெற்றன. பாதுகாப்பு படைகளின் அனுமதி மற்றும் ஒத்துழைப்புடன் செயற்பட்ட பல்வேறு துணைப்படைக் குழுக்கள் இதற்குப் பொறுப்பாளிகள். யுத்தம் முடிந்த பின்னர், இராஜபக்ஷ அரசாங்கம் பாதாள உலகத்தினரை நசுக்கும் யுத்தத்தை பிரகடனம் செய்தது. சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் இதன் கீழேயே நியாயப்படுத்தப்படுகின்றன. இதன் மூலம், பொலிஸ் மற்றும் இராணுவம் உட்பட அரச ஒடுக்குமுறை இயந்திரத்தின் ஆதிபத்தியத்தை மக்கள் சவால் செய்யாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என பொலிசும் அரசாங்கமும் கூறுகின்றன. அதற்கு எதிரானவர்கள் இவ்வாறு மரணத்தை அடைவர்.

இத்தகைய சம்பவங்களை காரணமாகக் கொண்டு, பொலிஸ் உட்பட அரச இயந்திரம் சம்பந்தமாக மக்கள் நம்பிக்கை இழப்பதனால் ஏற்படக் கூடிய சமூக கொந்தளிப்பு நிலைமை சம்பந்தமாக, ஆளும் வர்க்கத்தின் விழிப்பான தட்டினர் பீதியடைந்துள்ளனர். பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் (யூ.என்.பீ.) தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அக்டோபர் 5 அன்று கொலன்னாவையில் நடந்த கூட்டத்தில் பேசும் போது, அரச இயந்திரம் சம்பந்தமாக மக்களின் நம்பிக்கை இழப்பு ஆபத்தானது என குறிப்பிட்டார்.

வளர்ச்சி கண்டுவரும் மக்கள் எதிர்ப்பை தணிப்பதற்கும், இத்தகைய சம்பவங்கள் ஊடாக பொலிஸ் மற்றும் இராணுவம் உட்பட அரச இயந்திரத்தின் பண்பு சம்பந்தமாக மக்கள் பெறவேண்டிய படிப்பினைகளை பெறாமல் தடுப்பதற்கும் முயற்சிக்கும் ஊடகங்கள், அத்தகைய அரசாங்க பாதுகாப்பு நிறுவனங்கள் சீர்திருத்தப்பட்டு மக்களுக்கு நேசமானவையாக அமைத்துக்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கின்றன. இது இளைஞர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஒரு மரண ஆபத்தான மாயையை திணிப்பதாகும்.

வளர்ச்சி கண்டுவரும் பூகோள பொருளாதார நெருக்கடியின் சுமையை தம்மீது சுமத்த நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராக போராட்டத்திற்கு வரும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களை அடக்குவதற்காக உலகம் பூராவும் அரசாங்கங்களால் முதலாளித்துவ அரச ஒடுக்குமுறை இயந்திரத்தின் பகுதிகளான பொலிசும் இராணுவமும் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த காலத்தில், தமது சம்பளத்தை வெட்டுவதற்காக அரசாங்கம் கொண்டுவந்த போலி ஓய்வூதிய சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தைச் சேர்ந்த பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்களை ஒடுக்குவதற்காக அனுப்பப்பட்ட பொலிஸார், அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோம் செய்து ஒரு தொழிலாளியை கொலை செய்தனர். நீதிமன்ற நடவடிக்கைக்கு முன்னதாக, அதற்குப் புறம்பாக நபர்களை குற்றவாளிகள் என பெயரிட்டு அவர்களை இவ்வாறு கொலை செய்வது, தொழிலாள வர்க்கத்தினதும் ஒடுக்கப்பட்ட மக்களதும் வளர்ச்சியடையும் போராட்டங்களை நசுக்கும் இலக்குடன் அரசாங்கம் தயார் செய்கின்ற பொலிஸ்-அரச வழிமுறையின் பாகமாகும்.