சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: JVP heading for another split

இலங்கை: ஜே.வி.பி. இன்னுமொரு பிளவை எதிர்கொள்கின்றது        

By K. Ratnayake
14 October 2011

use this version to print | Send feedback

இலங்கையின் இரு பிரதான எதிர்க் கட்சிகளில் ஒன்றான மக்கள் விடுதலை முன்னணிக்குள் (ஜே.வி.பீ.) ஒரு பெரும் பிளவு வெடித்துள்ளது. கிராமப்புற சிங்கள இளைஞர்களைத் தளமாகக் கொண்டு 1960களில் ஒரு குட்டி முதலாளித்துவ கொரில்லா இயக்மாக அமைக்கப்பட்ட இந்தக் கட்சி, கடந்த இரு தசாப்தங்களாக கொழும்பு அரசியல் ஸ்தாபனத்துடன் நெருக்கமாக ஒருங்கிணைக்கப்பட்டதாக ஆனது.

நீண்ட காலமாக தொழிலாளர்கள், கிராமப்புற வறியவர்கள் மற்றும் இளைஞர்களும் சகல கட்சிகளிலும் இருந்து அந்நியப்பட்டு வருவதை உணர்ந்த கருத்து வேறுபாடு கொண்ட குழு, ஜே.வி.பீ. சீர்திருத்தப்பட வேண்டும் என்றும் அதன் மார்க்சிய அடித்தளங்களுக்குத் திரும்ப வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கின்றது. கட்சி தலைமைத்துவம் அதன் செல் திசையை திருத்தாவிட்டால், பிரிந்து சென்று ஒரு புதிய இடது இயக்கத்தை அமைக்க வேண்டிவரும் என அந்தக் குழு எச்சரித்துள்ளது. ஒருபோதும் மார்க்சிய கட்சி அல்லாத ஜே.வி.பீ., ஆரம்பத்தில் இருந்தே ஸ்டாலினிஸம், காஸ்றோவாதம் மற்றும் சிங்கள வெகுஜனவாதத்தின் கலவையை அடித்தளமாகக் கொண்டிருந்தது.

இந்த எதிர்ப்புக் குழுவானது சேனாதீர குணதிலக, குமரன் குணரட்னம், புபுது ஜாகொட போன்ற மத்திய குழு உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர் அஜித் குமார, கட்சியின் வார இதழ் லங்கா பத்திரிகையின் ஆசிரியர் சந்தன சிறிமல்வத்த ஆகிய புதிய புள்ளிகளால் தலைமை வகிக்கப்படுகிறது. இந்தக் குழுவை ஜே.வி.பீ.யின் மாணவர் மற்றும் இளைஞர் குழுக்களைச் சேர்ந்த பலரும் ஆதரிப்பதோடு கடந்த வாரம் ஜனரல அல்லது மக்கள் அலை என்ற ஒரு பத்திரிகையையும் சொந்தமாக ஆரம்பித்தனர்.

இரு தரப்பினரும் கட்சியின் தலைமையகம் உட்பட அதன் வளங்களை கட்டுப்படுத்த இழிந்த மோதல்களில் ஈடுபட்டனர். கட்சியின் அரசியல் அலுவலகத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருந்த அதன் ஊடகப் பிரிவினரின் உறுப்பினர்களை ஜே.வி.பீ. தலைமைத்துவம் இடை நிறுத்தியது. ஜே.வி.பீ. தலைமைத்துவத்தால் நீதிமன்றம் மற்றும் பொலிசின் உதவியுடன் லங்கா பத்திரிகை நிறுத்தப்பட்டது.

கட்சி தலைமைத்துவம் நவ-தாராளவாதத்துக்கு அதாவது, சுதந்திர சந்தை மறு சீரமைப்புக்கு- அடிபணிந்துவிட்டதோடு முதலாளித்துவக் கட்சிகளுடன் கூட்டணிகளில் நுழைந்துகொள்வதாகவும் இந்த மாற்றுக் குழு குற்றஞ்சாட்டுகின்றது.

ஜே.வி.பீ. யின் கல்விக்கான செயலாளர் ஜாகொட, செப்டெம்பர் 28 அன்று இடதின் சவால் என்ற தலைப்பில் ஆற்றிய விரிவுரையில் தலைமைத்துவத்துக்கு சவால் செய்தார். இடது இயக்கத்தை நவ-தாராளவாதத்தின் அழுத்தம் பற்றிக்கொண்டுள்ளதுடன் உலக மட்டத்தில் அது பயன் நெறிக் கோட்பாடு, நடைமுறைவாதம் மற்றும் சந்தர்ப்பவாதத்துக்கும் சரணடைந்துள்ளது என அவர் பிரகடனம் செய்தார்.

சமத்துவம் மற்றும் ஜனநாயகம் பற்றிய விவகாரத்தில் மேலும் சமநிலை இருந்திருக்க வேண்டும் என கூறிய ஜாகொட, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தத்தில் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவற்ற முறையில் விமர்சித்தார். கட்சி யுத்தத்துக்கு முழுமையாக ஆதரவு கொடுத்தன் விளைவாக அது சிங்களப் பேரினவாத அமைப்பாக பரந்தளவில் கருதப்பட்டது என்ற உண்மையை அவர் உளறினார். இந்தக் கருத்துக்கள் முற்றிலும் வஞ்சகமானவை. அவர் யுத்தத்தையோ அல்லது இனப் பிரச்சினை விவகாரத்தில் அதிக கடும்போக்காளர்களுடன் ஜே.வி.பீ. நீண்டகாலமாக கூட்டாக இருந்ததையோ எதிர்க்கவில்லை.

ஜாகொட, தனது விரிவுரையில், யுத்தம் முடிந்த பின்னரும் குற்றச்சாட்டுக்கள் இன்றி புலி சந்தேக நபர்களாக ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்தார். ஆயினும், அரசாங்கமும் இராணுவமும் மேற்கொண்ட ஏனைய அட்டூழியங்கள் மற்றும் ஜனநாயக உரிமை மீறல்களைப் பற்றி அவருக்கு சொல்வதற்கு எதுவும் இருக்கவில்லை.

2009 மே மாதம் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுமாக சுமார் 300,000 தமிழ் சிவிலியன்கள் சுற்றிவளைக்கப்பட்டு நலன்புரி முகாங்களில் அடைக்கப்பட்டதை ஜே.வி.பீ. ஆதரித்தது. யுத்தத்தின் கடைசி மாதங்களில் பத்தாயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்ட யுத்தக் குற்றங்களுக்கு அரசாங்கமும் இராணுவமும் பொறுப்பு என்ற குற்றச்சாட்டில் இருந்து ஜே.வி.பீ. அவற்றைப் பாதுகாத்தது.

ஜே.வி.பீ.யின் இடது குழுவும், கட்சித் தலைமைத்துவத்தில் உள்ள ஏனையவர்களைப் போலவே இனவாதத்தில் மூழ்கிப் போயுள்ளது. அது தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களின் அவலத்தைப் பற்றி காலங்கடந்து கவலை கொள்வது, குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் கட்சிக்கு ஆதரவு சரிந்து வருவதை தடுப்பதற்கான அவநம்பிக்கையான முயற்சியாகும். அதே போல், பிரதான கட்சிகளுடனான ஜே.வி.பீ.யின் சந்தர்ப்பவாத கூட்டணியைப் பற்றிய அதன் விமர்சனங்கள், வெறும் தந்திரோபாயமானவையே அன்றி கொள்கைப் பிடிப்பானவை அல்ல.

ஜனரல பத்திரிகைக்கு கொடுத் பேட்டியில், 2004ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) உடன் கூட்டரசாங்கத்தில் ஜே.வி.பீ. நுழைந்து கொண்டதை ஒரு ஒரு பெருந்தவறாக குணதிலக விவரித்தார். அதே போல், 2006ல் இராஜபக்ஷவின் அரசாங்கத்துடன் ஜே.வி.பீ. இணைய வேண்டுமென பரிந்துரைத்தமைக்காக கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவை ஒரு கூட்டணிவாதி என அவர் தாக்கினார். 2010 ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை ஜே.வி.பீ. ஆதரித்ததும் தவறு என குணதிலக விமர்சித்தார்.   

குணதிலகவும் மாற்றுக்குழுவில் உள்ள ஏனையவர்களும் தமது எதிர்தரப்பினரைப் போலவே முதலாளித்துவ பாராளுமன்ற அரசியலை கட்டியணத்துக் கொண்டவர்களாவர். முதலாளித்துவக் கட்சிகளுடனான பல்வேறு கூட்டுக்களை பெருந்தவறு மற்றும் பிழைகள் என அவர்கள் விவரிப்பதன் பின்னணியில் உள்ள காரணம், ஜே.வி.பீ. தொடர்ந்து ஆதரவு இழந்து வந்தமையே ஆகும். குறிப்பிடத்தக்க வகையில், அந்தப் பேட்டியில் அரசியலில் அத்தகைய விவகாரங்களுக்கு சந்தர்ப்பம் கிடையாது என நான் நிராகரிக்கவில்லை எனக் கூறியதன் மூலம், குணதிலக அத்தகைய கூட்டணிகளுக்கு கதவைத் திறந்தே வைத்தார்.

கொழும்பு அரசியல் ஸ்தாபனத்துடனான தமது நகர்வுகளில் மற்றும் கொடுக்கல் வாங்கல்களில் அதிக சமரசம் செய்பவர்களாக கருதப்படும் அமரசிங்க, பொதுச் செயலாளர் டில்வின் சில்வா மற்றும் பாராளுமன்றக் குழுத் தலைவர் அணுர குமார திஸாநாயக்க உட்பட தற்போதை ஜே.வி.பீ. தலைமைத்துவத்தை அப்புறப்படுத்துவதற்கு இந்த மாற்றுக்குழு அழைப்பு விடுக்கின்றது. இத்தகைய தலைவர்கள் கட்சி ஒரு சுய விமர்சனம் செய்துகொள்ள வேண்டும் என்ற தமது எதிரிகளின் வேண்டுகோளை நிராகரிக்கின்றனர்.

தனது கொழும்பு விரிவுரையில், சோசலிசப் பாதையை தேடுவதே இடதுகளின் சவால் என ஜாகொட பிரகடனம் செய்தார். அவரது குழு கட்சி இழந்த அடையாளத்தை காணவேண்டும் என்றும் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் ரோஹண விஜேவீர கற்பித்தவற்றுக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கின்றது. இந்த மாற்றுக் குழுவினர், தமது எதிர்தரப்பினரை விட கட்சியின் வரலாறு பற்றிய ஒரு நேர்மையான மதிப்பீட்டை வழங்கும் இயலுமை உடையவர்கள் அல்ல.

ஜே.வி.பீ. யின் இனவாத அரசியல், விஜேவீரவின் கற்பித்தலில் இருந்தே நேரடியாக ஊற்றெடுக்கின்றது. இதை பற்றி இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் பொதுச் செயலாளர் கீர்த்தி பாலசூரிய மிக ஆழமாக ஆய்வு செய்துள்ளார். ஜே.வி.பீ. கிராமப்புற குட்டி முதலாளித்துவத்தை குறிக்கோளாகக் கொண்டிருப்பதும் மற்றும் அது தொழிலாள வர்க்கத்தை எதிர்ப்பதும், குறிப்பாக தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் மீதான அதன் இனவாத பகைமையும் எதிர்கால பாசிச இயக்கத்தின் அரசியல் வித்துக்களை உள்ளடக்கிக்கொண்டுள்ளது என பாலசூரிய சுட்டிக்காட்டினார். (பாலசூரியவின் ஜே.வி.பீ.யின் அரசியலும் வர்க்கப் பண்பும் என்ற நூல் சிங்கள மொழியில் கிடைக்கும்)

ஆரம்பத்தில் இருந்தே ஜே.வி.பீ. ஆயுத சாகசங்களுக்கும் சந்தர்ப்பவாத சூழ்ச்சிகளுக்கும் இடையில் இழுபட்டது. 1971 ஏப்பிரலில் அது தீவின் தெற்கில் சிதைந்து போன ஒரு கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கியது. இந்த கிளர்ச்சி நசுக்கப்பட்ட போது ஒரு மதிப்பீட்டின் படி 15,000 இளைஞர்கள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர். விஜேவீர உட்பட அதன் தலைவர்கள் பலர் சிறைவைக்கப்பட்டதோடு அடுத்து ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பீ.) அரசாங்கத்தினாலேயே 1978ல் விடுதலை செய்யப்பட்டனர். யூ.என்.பீ.யை தேர்தலில் ஜே.வி.பீ. இரகசியமாக ஆதரித்தது.

1983ல் புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்குள் நாட்டைத் தள்ளிவிடும் அரசாங்கத்தின் முடிவுக்கு ஜே.வி.பீ. ஆதரவளித்ததோடு, யுத்த நிறுத்தத்தையும் அதிகாரப் பரவலாக்கலையும் மேற்பார்வை செய்வதற்காக அமைதிப் படையை அனுப்புவதற்கு 1987ல் வலதுசாரி யூ.என்.பீ. இந்தியாவுடன் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்ட பின்னரே அது யூ.என்.பீ.யை எதிர்த்து நின்றது. இந்திய-இலங்கை உடன்படிக்கை தேசத்தைக் காட்டிக்கொடுப்பதாக கண்டனம் செய்த ஜே.வி.பீ., அதற்கு எதிராக ஒரு பாசிச பிரச்சாரத்தை முன்னெடுத்தது. அதனது திட்டமிட்ட வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுக்க மறுத்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் அரசியல் எதிரிகளை ஜே.வி.பீ. துப்பாக்கிதாரிகள் கொன்றனர்.

தெற்கில் குவிந்துவரும் சமூக அமைதியின்மையை எதிர்கொண்டிருந்த புதிய யூ.என்.பீ. ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச, இந்த உடன்படிக்கையை 1989ல் எதிர்த்ததோடு ஜே.வி.பீ. உடன் கூட்டை ஏற்படுத்திக்கொள்ளவும் முயற்சித்தார். முயற்சியில் தோல்விகண்ட அவர், ஜே.வி.பீ.க்கு எதிராகத் திரும்பி, விஜேவீர உட்பட அதன் உயர்மட்ட தலைவர்களை படுகொலை செய்ததோடு சிங்கள கிராமப்புற இளைஞர்களுக்கு எதிராக பாதுகாப்புப் படைகளை கட்டவிழ்த்துவிட்டார். இராணுவத்தின் கொலைப் படைகளால் 60,000 பேர் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் அமைதியின்மையை வெளியேற்றும் ஒரு பயனுள்ள பாதுகாப்பு வாயிலாகப் பயன்படுத்த 1994ல் ஜனாதிபதியான ஸ்ரீ.ல.சு.க.யின் சந்திரிகா குமாரதுங்க ஜே.வி.பீ.யை எற்றுக்கொண்டார். குமாரதுங்க அரசாங்கத்துக்கும் மற்றும் எதிர்க் கட்சியான யூ.என்.பீ.க்கும் எதிர்ப்பு வளர்ச்சி கண்ட நிலையில், அந்த அதிருப்தி வாக்குகளை சேகரித்துக்கொண்டு ஜே.வி.பீ. தனது முதலாவது ஆசனத்தை வென்றது. அது புலிகளுக்கு எதிராக குமாரதுங்க உக்கிரமாக்கிய யுத்தத்தை முழுமையாக ஆதரித்தது.

அது 2004 தேர்தலில் குமாரதுங்கவின் ஸ்ரீ.ல.சு.க. உடன் கூட்டணியில் நுழைந்து 39 ஆசனங்களை வென்ற போதே பெரும் வெற்றியைக் கண்டது. அது அரசாங்கத்தில் இணைந்து 3 அமைச்சுப் பொறுப்புக்களையும் பெற்றது. ஆயினும், முதல் தடவையாக அரசாங்கத்தில் நுழைந்த ஜே.வி.பீ.யின் ஆதரவு வீழ்ச்சிகண்டது. குமாரதுங்கவின் சந்தை சார்பு நடவடிக்கைகள் அனைத்தையும் அது ஆதரித்த நிலையில், இரு பிரதான கட்சிகளுக்கு எதிரான ஒரு மாற்றுக் கட்சியாக நினைத்து அதற்கு வாக்களித்தவர்கள் விரைவில் ஏமாற்றமடைந்தனர்.

ஜே.வி.பீ. 2005ல் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய போதிலும், அபிவிருத்தி அடையவே இல்லை. 2005 நவம்பர் தேர்தலில் தனது சொந்த ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்த விரும்பாத ஜே.வி.பீ., இராஜபக்ஷவை ஆதரிப்பதற்காக தேர்தல் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டதோடு யுத்தத்தை புதுப்பிக்கவும் பிரச்சாரம் செய்தது. அரசாங்கத்தில் நுழைவதா இல்லையா என்பது பற்றிய பிரச்சினையில் பிளவுபட்ட ஜே.வி.பீ, எதிர்க் கட்சியாகவே இருந்த போதும், அரசாங்கத்துக்கு பாராளுமன்ற ஆதரவையும் மற்றும் வரவு செலவுத் திட்டங்களில் வாக்களிப்பையும் உத்தரவாதப்படுத்தியது.

எவ்வாறெனினும், ஏறத்தாழ ஜே.வி.பீ.யின் வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொண்ட இராஜபக்ஷ, 2006 நடுப்பகுதியில் நாட்டை மீண்டும் யுத்தத்துக்குள் தள்ளினார். ஒரு தொடர்ச்சியான சூழ்ச்சிகள் மற்றும் உடன்படிக்கைகளின் மூலம் சொந்தமாக பாராளுமன்றப் பெரும்பான்மையை வென்ற அரசாங்கத்துக்கு ஜே.வி.பீ.யின் சேவையைக் கோர வேண்டிய அவசியம் இருக்கவில்லை. இராஜபக்ஷ அரசாங்கத்தில் இணைவதா இல்லையா என்பது சம்பந்தமான பிரச்சினையில் ஏற்பட்ட உள் முரண்பாடு 2008ல் அழிவுகரமான பிளவுக்கு வழிவகுத்தது. அதன் கணிசமான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு புதிய குழுவை அமைத்துக்கொண்டு ஆளும் கூட்டணியில் இணைந்துகொண்டனர். புலிகள் தோல்வியடைந்த பின்னர், ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு என பல்வேறு சூழ்ச்சித் திட்டங்களில் தடுமாறிக்கோண்டிருந்த ஜே.வி.பீ., 2010 ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாரளுமன்ற தேர்தலிலும் ஜெனரல் பொன்சேகாவுடன் ஒரு கூட்டை ஏற்படுத்திக்கொண்டது.

2010 பாராளுமன்ற தேர்தலில் அநேகமான ஆசனங்களை இழந்த ஜே.வி.பீ, ஐந்து ஆசனங்களை மட்டுமே திரும்பப் பெற்றது. அதை அடுத்து வந்த உள்ளூராட்சி சபை தேர்தல்களில், கடந்த காலத்தில் தன்னிடமிருந்த ஏறத்தாழ எல்லா உள்ளூராட்சி சபைகளிலும் கட்டுப்பாட்டை இழந்தது. யுத்தத்தின் போது தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்கள் மற்றும் தொழிற்துறை பிரச்சாரங்களை காட்டிக்கொடுத்ததோடு மாணவர்களின் போராட்டங்களையும் கீழறுத்தது. இதன் விளைவாக, அதன் தொழிற்சங்கங்களுக்கும் மாணவர் அமைப்புக்களுக்கும் இருந்த ஆதரவு சரிந்தது.

இலங்கையிலும் மற்றும் உலகம் பூராவும் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் அபிவிருத்தியடையும் அறிகுறிகளின் மத்தியில், ஜே.வி.பீ.யில் ஒரு மாற்றுக்குழு உருவாகுவதானது, அதன் அரசியல் பிணத்துக்கு உயிரூட்டும் அவநம்பிக்கையான முயற்சியாகும். தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீன இயக்கத்தையும் தடுப்பதற்கு தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஒரு பொறி தயாரிக்கப்பட்டு வருகின்றது என சோசலிச சமத்துவக் கட்சி எச்சரிக்கின்றது. ஜே.வி.பி.யினதும் முழு கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தினதும் தேசியவாத மற்றும் இனவாத அரசியலுக்கு நேரடி எதிராக ஒரு சர்வதேச அடித்தளத்தில் மட்டுமே சோசலிசத்துக்கான உண்மையான போராட்டத்தை முன்னெடுக்க முடியும். சோ.ச.க. மட்டுமே தெற்காசியாவிலும் உலகம் பூராவும் சோசலிச குடியரசுகளின் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்காகப் போராடுகின்றது.