சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் 

Nick Beams addresses SEP conferences in Sydney and Melbourne

சிட்னி மற்றும் மெல்போர்னில் நிக் பீம்ஸ் சோசலிச சமத்துவக் கட்சி மாநாடுகளில் உரையாற்றுகிறார்

By Nick Beams
31 August 2011

use this version to print | Send feedback

ஆஸ்திரேலியாவிலும் மற்றும் சர்வதேசரீதியாகவும் தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி மீதான பின்வரும் அறிக்கையை ஆகஸ்ட் 20-21 அன்று சிட்னியிலும் ஆகஸ்டு 27-28 அன்று மெல்போர்னிலும் நடந்த சோசலிச சமத்துவக் கட்சி மாநாடுகளில் சோசலிச சமத்துவக் கட்சியின்(SEP)தேசியச் செயலரான நிக் பீம்ஸ் வழங்கினார். உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பீம்ஸ் மார்க்சி அரசியல் பொருளாதாரம் பற்றி பல உரைகளை நிகழ்த்தியுள்துடன் எழுதியுமுள்ளார்.

1. கடந்த சில வாரங்களின் கொந்தளிப்பான நிகழ்வுகள் உலக முதலாளித்துவ ஒழுங்கின் நிலைமுறிவின் அளவு மற்றும் தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்கள் இப்போது முகங்கொடுக்கும் அரசியல் பிரச்சினைகள் ஆகிய இரண்டையுமே தெளிவுபடுத்த பங்களிப்பு செய்துள்ள ஒரு மிக முக்கியமான அரசியல் திருப்புமுனையின் சந்தர்ப்பத்தில் நாம் இப்போது சந்திக்கிறோம். 'பிரச்சினைகள் எல்லாம் இருந்தாலும் கூட உலகப் பொருளாதாரமானது இப்போது மீட்சியின் பாதையில் இருக்கிறது' என்று வலியுறுத்துவதற்கே தமது முயற்சிகள் அனைத்தையும் அர்ப்பணித்து வந்த ஊடக நிபுணர்களை, பங்குச் சந்தைகளிலான வீழ்ச்சி ஒரு வகை மிரட்சிக்கு ஆளாக்கியுள்ளது. ஃபைனான்சியல் டைம்ஸ் பத்தியாளரான கேவின் டேவிஸ் என்ன கூறுகிறார் பாருங்கள்: மிகவும் சமீபத்தில் ஆறு மாதங்களுக்கு முன்பாகத் தான் பிரதான பொருளாதாரக் கணிப்பாளர்கள் எல்லாம் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு 2011 இல் மிகவும் மேம்பட்டதொரு நிலைக்குச் செல்லும் என்று எதிர்பார்ப்புகளை வெளியிட்டனர், அத்துடன் வர்த்தக நடவடிக்கைகள் மீதான கருத்துக்கணிப்புகளும் புதிய உச்சங்களைத் தொட்டன. மேற்கத்திய நாடுகளது பொருளாதாரங்களின் கீழமைந்த நிலைமை அப்போதும் மிகவும் பலவீனமாய்த் தான் இருந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்து தான் இருந்தது என்றாலும், மொத்த உள்நாட்டு உற்பத்தி கொஞ்சம் கொஞ்சமாய் மந்தநிலைக்கு முந்தைய மட்டத்திற்கு திரும்புகின்ற நிலையில், பொருளாதார நடவடிக்கை தொடர்ந்து இயல்புக்குத் திரும்பும் நிகழ்முறையைத் தடுக்கும் என்பதெல்லாம் ஒரு பிரச்சனைக்குரியதாக தோன்றவில்லை. இந்த எதிர்பார்ப்புகள் எல்லாம் ரொம்பவும் மெத்தனமானவையாய் இருந்தது என்பதை நாம் அறிவோம். அமெரிக்காவில் இயங்கும் ஏராளமான ஐரோப்பிய வங்கிகளின் நிலைமை குறித்து அமெரிக்க மத்திய வங்கிக்கூட்டமைப்பு கவலையுற்றதான எச்சரிக்கைகளால் தூண்டப்பட்டு நேர்ந்த சமீபத்திய குழப்பங்களுக்கு முன்னால் அது எழுதப்பட்டிருந்தது.

2. பரந்த பார்வையில் கடந்த மாதத்தில் கட்டவிழ்ந்திருக்கும் பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலையின் மூன்று அம்சங்களை இந்தத் ஆரம்ப அறிக்கையில் எடுத்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். முதலாவதாக, பொருளாதார நெருக்கடியின் பரப்பளவு வருகிறது. இயல்பான சமயங்கள் என்றழைக்கப்படுவதான சமயங்களில் ஆயுள்காலத்தில் ஒரு முறை நடக்கக் கூடியவையாக கருதப்படுகின் பல நிகழ்வுகள் கடந்த மாதத்தில் தொடர்ச்சியாய் நடந்தேறியிருப்பதை நாம் கண்டிருக்கிறோம். அமெரிக்கக் கடன் மதிப்பீடு முதன்முதல்முறையாக மதிப்பிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது, உலகப் பொருளாதாரத்தின் மூன்று முக்கியமான மையங்களான அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பானில் மந்தநிலைப் போக்குகள் தீவிரமடைந்து கொண்டிருக்கின்றன, ஐரோப்பிய நாடுகளில் ஒரு நாடு அல்லது இன்னொரு நாடு கடன் திரும்ப செலுத்தமுடியாத நிலைக்குள் செல்வதற்கான சாத்தியக்கூறு விரிவடைந்து கொண்டே செல்கிறது, அத்தோடு முக்கிய ஐரோப்பிய வங்கிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை செயலிழக்கும் வாய்ப்பும், பொது நாணயமதிப்பான யூரோ உருக்குலைந்து செல்வதற்கான வாய்ப்பும் கூட விரிவடைந்து கொண்டே செல்கிறது. இந்தப் பொருளாதார நிகழ்வுகள் எல்லாம் 2008 செப்டம்பரில் லெஹ்மன் பிரதர்ஸ் நிலைக்குலைவில் இருந்து தொடங்கிய உலகளாவிய முதலாளித்துவப் பொருளாதாரத்தின் நிலைகுலைவு வேகமெடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக்குகின்றன.

3. இந்த நெருக்கடியின் மதிப்புமிக்க அம்சமாக இருப்பது என்னவென்றால், அது கொடுக்கப்பட்ட எந்தவொரு நிகழ்வுப்போக்கின் கற்பனையான தோற்றங்களையும் இல்லாதொழித்துவிட்டு அதன் மிக அடிப்படையான குணாம்சங்களை வெளிக்காட்டி நிற்கிறது. கடந்த மாதத்தின் நெருக்கடியும் இதற்கு விதிவிலக்கல்ல. 'உலகம் எப்படியோ 2008க்குப் பின்னர் பொருளாதார மீட்சியின் பாதைக்கு வந்திருந்தது, தத்தித் தத்தி சிரமப்பட்டுத்தான் என்றாலும் அது ஒரு மீட்சியே' என்பதான மாயையே ஒரே முயற்சியில் இல்லாதொழிந்து விட்டது. அதேபோல ஆஸ்திரேலிய முதலாளித்துவத்தின் வரலாறு முழுவதிலும் ஒரு அதிமுக்கியமான பாத்திரத்தை வகித்திருந்த ஒரு பெரும் மாயைக்கும் இது நிலைகுலையச் செய்யும் அடியைக் கொடுத்திருக்கிறது - அதாவது 'இந்த நாடு எப்படியோ உலகப் பொருளாதாரத்தின் விதிகளில் இருந்து விதிவிலக்கானது' என்கின் மாயை. இந்தப் பழங்கதையின் படி, ஆஸ்திரேலியா உலகப் பொருளாதாரத்தின் புயல்கள் மற்றும் நெருக்குதல்களிருந்து பாதுகாக்கப்பட்ட ஒரு தனித்தன்மையான நாடு,  இங்கே தொழிலாள வர்க்கமானது மார்க்சிம், அரசியல் அதிகாரத்துக்கான போராட்டம் மற்றும் சோசலிச சர்வதேசியவாதம் போன்ற அந்நிய தத்துவங்களைக் கொண்டு அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை, மாறாக தொழிற்சாலைப் போர்க்குணம் மற்றும் அதிகாரத்திலிருக்கும் சக்திகளுக்கு அழுத்தம் கொடுப்பது ஆகிய இரண்டும் சேர்ந்ததன் அடிப்படையில் அமைந்த ஒரு தேசிய அடிப்படையிலான தாயகத்தில்-வளர்க்கப்பட்ட அரசியல் திட்டநிரலைக் கொண்டு செயல்படலாம். இரும்பு உருக்குத் துறையில் பெருந்திரள் வேலைநீக்கங்களும் மற்றும் அடுத்த சில மாதங்களில் இன்னும் 100,000 உற்பத்தித் துறை வேலைகள் நீக்கப்பட இருப்பதான எச்சரிக்கைகளும் தெளிவாக்குவது என்னவென்றால் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அதே சமூக அழிவுக்குத் தான் ஆஸ்திரேலியாவில் உள்ள தொழிலாள வர்க்கமும் முகங்கொடுக்கிறது.

4. ஆழமடையும் பொருளாதார நெருக்கடியும் அதே சமயத்தில் லண்டனிலும் மற்ற முக்கிய இங்கிலாந்து நகரங்களிலும் இளைஞர் கலகத்தின் வெடிப்பும் ஒரேநேரத்தில் நிகழ்ந்திருப்பது ஒரு தற்செயலானதல்ல. ஆளும் வர்க்கங்களின் பதிலிறுப்பையே நடப்பு சூழ்நிலையின் மூன்றாவது அம்சமாக நான் ஆராய விரும்புகிறேன் ஏனென்றால் இது எங்கெங்கிலும் இருக்கும் தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களுக்கான தெளிவான எச்சரிக்கையை உள்ளடக்கியிருக்கிறது. இந்தக் கலகங்களின் பின்னால் சமூகப் பொருளாதாரக் காரணம் எதுவும் இல்லை என்று மறுப்பதற்கும் அவை எல்லாம் 'நோய்பீடித்த' தனிநபர்களின் விளைபொருட்கள் என்று வலியுறுத்துவதற்கும் ஊடகங்கள், நாடாளுமன்றம், அரசியல் கட்சிகள், ஊடக நிபுணர்கள் மற்றும் வருணனையாளர்கள், கல்வியாளர்கள், தொலைக்காட்சிகளின் விவாத நடத்துநர்கள், போலிஸ், சட்ட நீதி மன்றங்கள் ஆகிய பிரிட்டிஷ் முதலாளித்துவ சமூகத்தின் அனைத்து உத்தியோகபூர்வ ஸ்தாபனங்களுமே ஒன்று கூடி நிற்கின்றன. மேலும், நிதிக் கையாளுநர்களாலும் ஊக வணிகர்களாலும் பொருளாதாரம் ஆதிக்கம் செலுத்தப்படுவதால் செல்வத் திரட்சியின் மிக விநோதமான வடிவங்களுக்கு எல்லாம் மையமாக அமைந்திருக்கும் ஒரு நாட்டில், இந்த நோய்க்கு சமூக மற்றும் பொருளாதார வறுமை காரணமல்ல என அவர்கள் வலியுறுத்துகிறார்கள். அதற்கு மாறாக, இது போருக்குப் பிந்தைய பிரிட்டிஷ் சமூகநல அரசினால் உருவானது என்றும் அந்நிலை இப்போது முழுமையாக அழிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். உலகெங்கிலும் இருக்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இந்த எச்சரிக்கையை கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இது மிகப் பழமையான, உலகிலேயே மிக அரசியல் நனவுடனான ஆளும் வர்க்கத்தின், தாயகத்திலும் சர்வதேசரீதியாகவும் தொழிலாள வர்க்கத்தை ஒடுக்குவதில் நூற்றாண்டுகள் அனுபவம் கொண்ட ஒரு ஆளும் வர்க்கத்தின், பதிலிறுப்பாகும். அவர்கள் இப்போது ஆட்சி செய்யக் கூடிய சமூக மற்றும் பொருளாதார அமைப்புமுறையின் எதிர்காலம் ஆபத்தில் நின்று கொண்டிருக்கும் ஒரு புள்ளியை அவர்கள் எட்டியிருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும், அரசியல் அதிகாரத்திற்கான போராட்டம் வந்து கொண்டிருப்பதை அவர்கள் அறிவார்கள், அதற்கான தமது மூலோபாயத்தை அவர்கள் அபிவிருத்தி செய்து கொண்டிருக்கின்றனர். இதேபோல் தொழிலாள வர்க்கமும் தனது மூலோபாயத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும். இதுதான், இந்த மாநாட்டில், எல்லாவற்றுக்கும் மேலாக, நாம் முகங்கொடுக்கும் முக்கியமான பிரச்சினை ஆகும். 

Nick Beams addressing Sydney conference
சிட்னி மாநாட்டில் நிக் பீம்ஸ் உரையாற்றுகிறார்

5. பொருளாதார நிலைமுறிவின் குறியீடுகளைத் திறனாய்வு செய்வதுடனேயை நமக்கு இங்கு இருக்கும் நேரத்தை செலவழித்துவிடலாம். அதன் கீழமைந்த உந்துசக்திகள் என்ன என்கிற மிக அத்தியாவசியமான பிரச்சினைக்குப் போகலாம். மத்திய வங்கிகள் தனியார் வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் மலிவுக் கடன் வழங்குவதை தனது முக்கியமான உள்ளடக்கங்களில் ஒன்றாகக் கொண்ட மூலதனத் திரட்சியின் ஒரு வகைமுறையை 2008 ஆம் ஆண்டின் நிதி நெருக்கடி முடிவுக்குக் கொண்டு வந்து விட்டது. 1990கள் மற்றும் 2000களில் முதலாளித்துவ வளர்ச்சி என்பது வெறுமனே ஒரு கடன் குமிழியின் உருவாக்கம்தான் என்று சொன்னால் அது தவறாகும். ஆனால் இந்த வளர்ச்சி என்பது கடனையும் இலாபத் திரட்சியையும் - உற்பத்தியின் வழியாக அல்ல, மாறாக நிதிரீதியான சூழ்ச்சி நடவடிக்கைகள் மூலமாக - தான் அதிகமாய்ச் சார்ந்திருந்தது. இந்த ஊக வணிக நடவடிக்கைகள் போகப் போக ஒரு பாதி-குற்றவியல் அல்லது முழுக்-குற்றவியல் வடிவத்தை எடுத்தன. இது ஆளும் வர்க்கங்கள் மற்றும் முதலாளித்துவ அரசுகளின் அரசியல் புறவியல்புகளில் ஏற்பட்ட ஒரு மாற்றத்தில் விளைந்தது - பிரான்சில் 1848 இல் புரட்சி வெடிக்கும் முன்பாக நிதிமயமாக்கலின் காலகட்டத்தில் மார்க்ஸ் விவரித்த ஒரு மாற்றத்தில்:

நிதிப் பிரபுத்துவம் தான் சட்டங்களை இயற்றியது, அது தான் அரசு நிர்வாகத்தின் தலைமையில் இருந்தது, ஒழுங்கமைந்த பொது அதிகாரங்கள் அனைத்தின் மீதும் அதுதான் உத்தரவு அதிகாரத்தைக் கொண்டிருந்தது, நடைமுறை விவகாரக் கையாளுகை மூலமும் ஊடகங்கள் மூலமும் பொதுக் கருத்தில் அது தான் மேலாதிக்கம் செலுத்தியது என்பதால், அதே விபச்சாரம், அதே வெட்கமற்ற ஏமாற்று, பணக்காரராவதற்கான அதே வெறி தான், நீதிமன்றம் தொடங்கி  Café Borgne இன் -பாரிஸின் மதிப்பிழந்த கோப்பிக்கடைகளையும் மதுபான நிலையங்களையும் குறிக்கும் சொல்- ஒவ்வொரு வட்டத்திலும் திரும்பத் திரும்ப நடந்தது, உற்பத்தி மூலமாகப் பணக்காரராவதல்ல மாறாக ஏற்கனவே இருக்கும் அடுத்தவரின் செல்வத்தை வழிப்பறி செய்வதன் மூலமாக. முதலாளித்துவத்தின் விதிகளுடனேயே ஒவ்வொரு கணமும் மோதிக் கொள்ளும், ஆரோக்கியமற்ற மற்றும் தற்குறித்தனமான அகோரப்பசிகளின் ஒரு கடிவாளமற்ற விருப்பு  குறிப்பாக முதலாளித்துவ சமூகத்தின் மேல்மட்டத்தில் தன்னைத் தானே வெளிப்படுத்திக் கொண்டது. சூதாட்டத்தில் இருந்து வந்த செல்வம்போல் இயல்பாக தன்னைத் திருப்திப்படுத்திக் கொள்கின்ற துராசையானது, இன்பம் என்பது ஒழுக்கங்கெட்டதனம் என்பதாய் ஆகின்ற, பணம், இழியொழுக்கம் மற்றும் குருதி எல்லாம் ஒன்றுகூடிக் கலக்கின் வெறிகளாகின. நிதிப் பிரபுத்துவம், தனது வாங்கிக் குவிக்கும் மனோநிலையிலும் சரி அதேபோல் தனது இன்பம் துய்ப்பிலும் சரி, முதலாளித்துவ சமூகத்தின் உச்சத்தில் உதிரிப் பாட்டாளி வர்க்கத்தின் மறுபிறப்பை காண்பதே அன்றி வேறொன்றுமில்லை.

6. 1990கள் மற்றும் 2000களில் பொருளாதார அபிவிருத்திகளில் ஆதிக்கம் செலுத்திய இந்த செல்வந்தராகிவிடும் வெறி வீட்டு அடமானக் கடன் ஊழலில் உச்சமுற்றது. அடிப்படையாய் குற்றவியல் செயல்பாடான இது ஒட்டுமொத்தமாக நிதி அமைப்புடன் பிணைந்ததாய் இருந்ததால் 2007 ஆம் ஆண்டின் வீட்டு அடமானக் கடன் நெருக்கடி 2008ல் அமெரிக்க மற்றும் உலக நிதி அமைப்பில் ஒரு நிலைமுறிவுக்கு இட்டுச் சென்றது.

7. இந்த நிலைமுறிவு ஒரேமாதிரியான பதிலிறுப்பு ஒன்றை உருவாக்கியது. ஒவ்வொரு நாட்டிலும் அரசின் நிதிய ஆதாரவளங்கள் அனைத்தும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் ஆளுகைக்குள் வைக்கப்பட்டன. ஏதோவொரு வகையில் அரசாங்கங்கள் எல்லாம் மக்களின் நலன்களின் பேரில் தான் ஆட்சிசெய்கின்றன என்று கூறுவதான வேடம் எல்லாம் வங்கிகள் பிணையெடுக்கப்பட்டதில் ஒதுக்கிப் போடப்பட்டன. இது என்ன வழிமுறைகளில் நடந்தது என்பது தனது சொந்த சிக்கல்வயமான அம்சங்களைக் கொண்டிருந்தது என்றாலும் அடிப்படையில் இந்த நிகழ்முறை எளிய ஒன்று. வங்கிகளின் மதிப்பற்ற பெறுமதியற்ற சொத்துகள்-toxic assets- அரசுக்குக் கைமாற்றப்பட்டன. ஆனால் இதன் அர்த்தம் இந்த வாராக் கடன்கள் எல்லாம் மறைந்து போயின என்பதோ வெளியேற்றப்பட்டன என்பதோ அல்ல. தனியார் கடன்கள் எல்லாம் அரசுடைமையாக்கப்பட்டன, இரண்டாம் உலகப் போரின் முடிவில் தொடங்கி சுகாதாரம், கல்வி, ஓய்வூதியம் மற்றும் பிற சேவைகளில் செய்யப்பட்ட அனைத்து சமூகச் சலுகைகளையும் திரும்ப பிடுங்குவதன் மூலம் அந்தத் தொகைகளை ஈடுகட்டும் கடமையை அரசு எடுத்துக் கொண்டது. எனவே பிணையெடுப்பு என்பது ஒரு சமூக எதிர்ப்புரட்சியின் ஆரம்பமேயாகும்.

8. இந்த நடவடிக்கைகள் எந்த அளவுக்கு பரந்து விரிந்ததாய் ஆழமாய் இருந்தன என்பதை ஒரு சில புள்ளிவிவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. வங்கிப் பிணையெடுப்புக்கான மொத்த அளவு 18 ட்ரில்லியன் டாலர்களாய் இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. ஒரு வருடத்திற்கு அமெரிக்காவின் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியே 14 ட்ரில்லியன் டாலர் தான், இது அதனை விடவும் அதிகமான அளவாய் இருக்கிறது. இன்னொரு விதமாகவும் இதனைக் காணவேண்டும், பிணையெடுப்பின் விளைவாக OECD இன் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் அரசுக் கடனுக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்குமான விகிதம் சுமார் 30 சதவீதப் புள்ளிகள் வரை அதிகரித்திருக்கிறது. இப்போது இந்தக் கடனை தொழிலாள வர்க்கத்திடம் இருந்து தான் வசூலிக்க வேண்டும். அதாவது தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகள் ஒட்டுமொத்தமாய் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் அதிகமான அளவுக்கு கீழிறக்கப்பட்டாக வேண்டும். இந்த வேலைத்திட்டம் அன்றாட செய்தித்தாள்களின் முன் பக்கங்களிலோ அல்லது தொலைக்காட்சியிலோ இடம்பெறுவதில்லை மாறாக நிதி மற்றும் அரசியல் வட்டங்களில் தான் இது விவாதிக்கப்படுகிறது. சுகாதாரம், கல்வி மற்றும் ஓய்வூதியங்களுக்கு நிதியாதாரம் பெறுவதற்கான வேலைத்திட்டங்களும், மக்கள் விரும்புகின் (மற்றும் அவர்களுக்கு அவசியமான) வேலைத்திட்டங்களும் தான் இப்போது அவசரகால சிக்கன நடவடிக்கைகளில் தூள்தூளாக சிதறடிக்கப்பட்டு வருகின்றவை ஆகும் என்று பிசினஸ் ஸ்பெக்டேட்டர் பத்திரிகையில் பத்தியாளர் ராப் பர்கீஸ் குறிப்பிடுகிறார். இந்த வெட்டுக்கள் இன்னும் எவ்வளவு தூரம் செல்லும்? பர்கீஸைப் பொறுத்தவரை, இது 60 வருட கால சமூகப் பரிசோதனையின் முடிவு. வேறுவார்த்தைகளில் சொன்னால் சமூக சேவைகள் எல்லாம் 1930களின் மட்டத்திற்குப் பின்னால் தள்ளப்பட்டாக வேண்டும்.

9. என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதில் ஒரு பிரச்சினை என்னவென்றால் வெகுஜன ஊடகங்களின் பகுப்பாய்வு என்று அழைக்கப்படுவதை அடிப்படையாய் கொண்டுள்ள முதலாளித்துவ பொருளாதாரத்தால் நடைமுறைப்படுத்தப்படும் புதிர்ப்படுத்தலாகும். பொருளாதார அபிவிருத்திகளை சமூக வர்க்கங்களின் போராட்டத்தில் இருந்து பிரிப்பதும் அவற்றை ஏதோ கடவுளில் இருந்து அல்லது இயற்கையில் இருந்து வடிவெடுத்தது போலவும் வர்ணிப்பதும் இந்த புதிர்படுத்தும் வேலையில் பங்குபெற்றுள்ளது. அதனால் தான் அரசியல்வாதிகள் எல்லாம் சந்தைக்கு தலைவணங்கி நடக்க வேண்டும் என்று பிரகடனம் செய்யக் காண்கிறோம். இந்த கடவுளுக்கென்று தனிச் சட்டங்கள் இருக்கிறது, விதிகள் இருக்கிறது, ஏன் மனோநிலைகளும் கூட இருக்கிறது (இன்று சந்தை உற்சாகமாய் இருந்தது, அல்லது சோர்வுடன் காணப்பட்டது என்று ஒரு செய்தி அறிக்கையை எத்தனை முறை நாம் கேட்டு வருகிறோம்) சாதாரணமாக இறந்துபோகும் மானுடர்கள் அதற்கு கீழ்ப்படிந்து தான் நடந்தாக வேண்டும், கடவுளது உத்தரவுகளை செய்துமுடிக்க வேண்டும் இல்லையேல் கடுமையான தண்டனையை எதிர்கொள்ள வேண்டியது தான். இல்லையென்றால் சந்தையென்பதை ஒரு இயற்கை சக்தியைப் போல் உருவப்படுத்தி காட்டப்படுகிறது, புயல் வரும், புயலென்றால் பெரும்புயல், இன்னும் சுனாமிகளும் கூட வரும். இதற்கெல்லாம் மக்கள் தலைவணங்கியாக வேண்டும். ஆனால் நம்மை நாமே சோதித்துக் கொள்ள வேண்டும். சந்தை என்பது கடவுளின் அல்லது இயற்கையின் தயாரிப்பு அல்ல மாறாக பொருளாதார மற்றும் சமூக ஒழுங்கமைப்பின் விளைவே. 2008 பொருளாதார நெருக்கடிக்கான மாற்றுகள் இருந்தன. வங்கிகளுக்கு ட்ரில்லியன்கணக்கான டாலர்கள் கொடுக்கப்பட்டதற்குப் பதிலாக, வங்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு இந்த நெருக்கடிக்கு இட்டுச்சென்ற குற்றவியல் நடவடிக்கைக்கு உரியவர்களான தலைமை நிர்வாகிகள் விசாரணை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்க வேண்டும், வங்கிகளது உத்தரவிடும் அதிகாரத்தின் கீழிருந்த பாரிய ஆதாரவளங்கள் தனியாரது கரங்களில் இருந்து எடுக்கப்பட்டு தனியார் இலாபத்தின் தேவைகளுக்காய் அல்லாமல் சமூகத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காய் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் அது செய்யப்படவில்லை, தனது பொருளாதார அந்தஸ்து மீட்சி செய்யப்பட்டிருக்கும் நிலையில், நிதி மூலதனமானது மறுபடியும் அரசியல்ரீதியாக பொறுப்பில் அமர்ந்து கொண்டு முன்னை விடவும் நச்சுத்தன்மையுடையதாய் ஆகியிருக்கிறது. அதன் பிரதிநிதிகள் அரசாங்கத் தலைவர்களை அன்றாடம் தொடர்பு கொண்டு தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகள் மீது தாக்குதல் தொடுப்பதற்கான தமது உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அவசியம் கூட இல்லாமல் போயிருக்கிறது. இந்த உத்தரவுகள் எல்லாம் வட்டி வீதங்கள் மற்றும் தரமதிப்பீட்டு முகமைகளின் (Rating Agencies)பிரகடனங்கள் வழியாக சந்தை இயக்கங்கள் மூலமாக பிறப்பிக்கப்பட்டு வருகின்றன, இதன்மூலம் அவை இயற்கையான அவசியங்கள் போன்று தோற்றமளிக்கின்றன.

10. வங்கிகளால் உத்தரவிடப்படும் கொள்கைகள் பொருளாதார மீட்சிக்கான எந்த வாய்ப்பையும் இல்லையென்றாக்கி விடுகிறது. அமெரிக்காவில் உத்தியோகபூர்வ வேலைவாய்ப்பின்மை 9.1 சதவீதமாக உள்ளது. பகுதி நேர வேலை செய்பவர்கள் அல்லது வேலையை விட்டு விட்டவர்களையும் கணக்கிலெடுத்தால் இது 16.1 சதவீதமாக அல்லது 25 மில்லியன் மக்களுக்கும் அதிகமாக இருக்கும். தொழிலாளர் என்ற எண்ணிக்கையில் எத்தனை சதவீத மக்கள் இடம்பெறுகிறார்கள் எனக் கண்டால் அது இன்னொரு அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரத்தை அளிக்கிறது. 2007-2008 நெருக்கடிக்கு முன்னதாக இது 63 சதவீதத்தை ஒட்டி இருந்தது. இப்போது அது 58 சதவீதமாகக் குறைந்துள்ளது.  அமெரிக்க மக்களின் பெரும்பான்மை பகுதியினர் வேலை உருவாக்கத்தையே முக்கியமான பொருளாதார முன்னுரிமை விடயமாக தாங்கள் கருதுவதாக கருத்துக் கணிப்புகளில் தெரிவித்துள்ளனர். ஆனால் நாடாளுமன்றமும் நிர்வாகமும் பாரிய நிதிநிலை வெட்டுகளை அமுல்படுத்திக் கொண்டிருப்பதோடு நிதிச் சந்தைகள் இன்னும் இன்னுமெனக் கோருகின்றன. சமூகநலத்திட்ட செலவின வேலைத்திட்டங்களிலான வெட்டுகள் போதுமான வேகத்துடன் முன்செல்லவில்லை என்று உறுதிபடக் கண்டமையும் அமெரிக்க கடன் தர மதிப்பீட்டைக் குறைக்கும் S&P முடிவின் முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருந்தது. சிக்கன நடவடிக்கை வேலைத்திட்டம் ஒரு நச்சு வட்டத்தை அமைக்கிறது. செலவினம் கூடுதலாய் வெட்டப்படுகிறது, கூடுதலாய் பொருளாதாரம் சரிகிறது, கூடுதலாய் வரி வருவாயும் வீழ்கிறது, இதனால் பற்றாக்குறை அதிகரிப்பு அதிகரிக்கிறது அத்துடன் மேலதிக வெட்டுக்களுக்கான கோரிக்கை கூடுதலாய் வலுக்கிறது. இந்த சுழற்சி ஏன் உடைக்கப்பட முடியாது? சிதைந்து போன அமெரிக்க உள்கட்டமைப்பை சரிசெய்ய மில்லியன் கணக்கான வேலைகளை உருவாக்கும் ஒரு வேலைத்திட்டத்திற்கு நிர்வாகம் முன்முயற்சி எடுத்தால் என்ன நடக்கும் என எண்ணிப் பார்ப்போம். நிதிச் சந்தைகளில் டாலரின் உடனடியான நிலைகுலைவு நடக்கும் அத்துடன் வட்டி வீதங்கள் அதிகரிக்கும், மந்தநிலை ஆழமடையும். ஒன்று இந்த வேலைத்திட்டம் முன்செலுத்தப்பட்டு வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பணச் சந்தைகளை பறிமுதல் செய்வது மேற்கொள்ளப்பட வேண்டும் அல்லது அது கைவிடப்பட வேண்டும். வேறு வார்த்தைகளில் சொன்னால், இதனைச் செய்வதற்கு துணிச்சலும் மனமும் கொண்டு எந்தவொரு நிர்வாகத்திலும் ஒருவரும் இல்லாததுடன், இந்த சீர்திருத்தவாதத் திட்டம் எதுவும் அமலாக்கப்படுத்தப்பட முடியாது. வேலைகளை விரிவுபடுத்துவது மற்றும் வாழ்க்கைத் தரங்களைப் பாதுகாப்பது - அதாவது அமெரிக்க மக்களின் மிக அடிப்படையான மற்றும் உடனடியான தேவைகளைப் பூர்த்தி செய்வதென்பது- ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை அவசியமாய்க் கோருகிறது. மிகக் குறைந்த வட்டி வீதங்கள் -வங்கிகளுக்கு பில்லியன் கணக்கான டாலர்கள் மலிவுப் பணம் வழங்குவது- பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும் நோக்கம் கொண்டு செய்யப்படவில்லை என்பதை மத்திய வங்கிக்கூட்டமைப்பு தெளிவாக்கி விட்டது, ஏனென்றால் இந்தக் கொள்கை குறைந்தபட்சம் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கேனும் தொடரும் என்பதை தமது சமீபத்திய அறிக்கையில் அவர்கள் அறிவித்துள்ளனர். ஐரோப்பாவில், விளிம்பில் உள்ள பொருளாதாரங்கள்  என்று அழைக்கப்படுபவை மந்தநிலைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால் இப்போது இந்த வீழ்ச்சி இருதயத்தானப் பகுதிக்கும் நீட்சி காண்கிறது. ஜேர்மனியின் பொருளாதாரம் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் வெறும் 0.1 சதவீதம் மட்டுமே விரிவுகண்டது. பிரான்சின் வளர்ச்சி வீதங்களும் சரிவையே கண்டுள்ளன, வளர்ச்சி வீதம் சுமார் 0.3 சதவீதம் இருக்கிறது.

11. அதேசமயத்தில் ஐரோப்பாவில் கடன் நெருக்கடி மோசமான நிலையில் இருந்து படுமோசமாகி இருக்கிறது. நிகழ்வுகள் என்ன வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ள கொஞ்சம் பின்னால் சென்று பார்ப்போம், அரசு கடன் திருப்பிச்செலுத்தவியலா பிரச்சினை, 2009ல் துபாய் பிரச்சினைகளை உணர்ந்ததாகக் கண்டறியப்பட்ட போது முதலில் ஒரு சின்னப் புள்ளியாக தோன்றத் தொடங்கியது. அதன்பின் கிரேக்கக் கடன் கட்டுப்பாட்டைக் கடந்து போய் விட்டதாகக் கண்டறியப்பட்டது. கோல்ட்மன் சாக்ஸ் இன் திறமையான உதவியுடன் கிரேக்க அரசாங்கம் மோசடியாக சூழ்ச்சிகளை செய்ததெனவும், ஆரம்பத்தில் இப்பிரச்சினை அணைக்கப்பட்டது. ஆனால் அதற்குப் பின்னாலேயே அயர்லாந்தும் போர்த்துக்கலும் வந்தன. சமீப வாரங்களில் நெருக்கடி ஸ்பெயினுக்கும் இத்தாலிக்கும் கூட விரிவு கண்டிருக்கிறது, பிரான்சின் கடன் தரமதிப்பீடும் (credit rating கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. முதலாளித்துவக் கட்டமைப்புக்குள் இந்த நெருக்கடிக்கான தீர்வுகள் தான் என்ன? கடன்பட்ட நாடுகளைப் பொறுத்தவரை யூரோவில் இருந்து திரும்பப் பெற்றுக் கொள்ளும் பிரச்சினை எழுப்பப்படுகிறது. ஆனால் ஏதாவதொரு நாடு கடனைத் திருப்பிச் செலுத்தவியலாது போனாலோ அல்லது யூரோவில் இருந்து பின்வாங்கிக் கொண்டாலோ அது பெரும் வங்கி மற்றும் நிதி நெருக்கடிக்கு தூண்டுதலளிக்கும். யூரோ உடைந்துபோனால் அதன் உலகளாவிய பின்விளைவுகள் என்னவென்பதை பில்லியனர் நிதியதிபரான ஜோர்ஜ் சோரோஸ் சமீபத்தில் Spiegel க்கு அளித்த நேர்காணலில் சுட்டிக் காட்டியிருக்கிறார்: யூரோ உடைந்து போகுமாயின், அது நிதி அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்கு முழுக்கவும் வெளியிலான ஒரு வங்கித்துறை நெருக்கடியைக் கொண்டுவரும். அது ஜேர்மனியை மட்டுமல்ல, ஐரோப்பாவை மட்டுமல்ல, மொத்த உலகத்தையுமே 1930களின் பெருமந்தநிலைக்காலத்தை மிகவும் ஒத்த நிலைமைகளுக்குள் அமிழ்த்தும், அக்கால பெருமந்த நிலையும் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு வங்கி நெருக்கடியால் உருவானதே. வேறுவழி யூரோ வலைத்திற்குள் இருக்கும் தனித்தனி நாட்டின் கடனை முடிவுக்குக் கொண்டு வந்து யூரோ பத்திரங்களை ஸ்தாபிதம் செய்வது தான், இதன்மூலம் எல்லா நாடுகளும் ஒரே விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி சர்வதேசச் சந்தைகளில் கடன்பெறுவதற்கு வழிபிறக்கும். அதாவது இதன் நடைமுறை அர்த்தம், ஜேர்மன் முதலாளித்துவம் யூரோ வலையத்திற்கு நிதியாதாரம் அளிக்கும் என்பதாகும். ஆனால் பிரதிபலனாக ஒவ்வொரு நாட்டின் வரவு-செலவுத் திட்டமும் பேர்லினில் உருவாக்கப்படும் விதிமுறைகளுக்கு இணக்கமான வகையில் தீர்மானிக்கப்படுவதாய் ஆகும்.

12. இந்தச் சூழ்நிலை மிகமுக்கிய வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. நாம் முதலாம் உலகப் போரின் 100 ஆவது ஆண்டு நிறைவை நெருங்கிக் கொண்டிருக்கிறோம், ஐரோப்பாவில் தொடங்கிய 30 ஆண்டு கால உள்நாட்டுப் போரான அது 1945ம் ஆண்டில் தான் முடிவுற்றது. அந்தப் பெரும் அழிவையும் உருக்குலைவையும்  உருவாக்கிய முரண்பாடுகள் அனைத்தும் இப்போது மீண்டும் எழுந்திருக்கின்றன. முதலாளித்துவத்தின் கீழ் ஐரோப்பா ஏதோவொரு வகை துண்டாடலுக்குத் தான் முகங்கொடுக்கிறது, அதாவது கண்டம் போட்டி பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, தவிர்க்கவியலாமல் போர் வெடிப்புக்கோ அல்லது நிதி மூலதனத்தின் சர்வாதிகாரத்தின் கீழ் ஐக்கியப்படுத்தல் என்பதற்கோ அழைத்துச் செல்லும். எமது கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு  போராடி வரும் இலக்கான ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகள் என்பது தொலைதூரத்திற்குரிய  இலக்கு அல்ல. அந்தக் கண்டத்தின் மக்களும் மற்றும் அவர்களுடன் சேர்ந்து உலகின் மற்ற மக்களும் இருபதாம் நூற்றாண்டின் மத்திய சகாப்தங்கள் காட்டும் இருண்ட காலங்களுக்குள் மீண்டும் மூழ்காமல் இருக்க வேண்டும் என்றால் அதற்கான ஒரு வரலாற்று அவசியமாக இது ஆகியிருக்கிறது. தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களை ஆழப்படுத்தும் அதே நேரத்தில், முக்கிய முதலாளித்துவ சக்திகளில் உள்ள ஆளும் உயரடுக்கினர் தாங்கள் முகங்கொடுக்கும் தீர்க்கவியலாத முரண்பாடுகளை போரின் மூலமாய் தீர்ப்பதற்கு முயற்சிக்க ஆயத்தமாகி வருகின்றனர். கிழக்கே, சீனாவின் எழுச்சியைத் தடுக்க முயலும் பொருட்டு, ஒபாமா நிர்வாகம் தான் ஆசியாவின் மீது மறுகவனம் செலுத்தவிருப்பதாக அறிவித்துள்ளது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்புகளைக் கருத்தில் கொண்டு கவனித்தால், மனித உரிமைகளைப் பாதுகாப்பதான சாக்கில் லிபியா மீது தொடுக்கப்படும் ஏகாதிபத்திய தாக்குதல் 1930களில் இரண்டாம் உலகப் போருக்கு முன்னால் நிகழ்ந்த அப்போருக்கு இட்டுச் சென்ற மோதல்களை நினைவுக்குக் கொண்டுவராமல் இருக்க முடியுமா.

13. இந்த ஆழமடைந்து செல்லும் உலக நெருக்கடி இந்த நாட்டில் எப்படி வெளிப்பாடு கண்டிருக்கிறது? ஆஸ்திரேலிய வரலாறு முழுவதிலும், ஆஸ்திரேலிய முதலாளித்துவத்தின் வியாபகமான தேசிய சித்தாந்தம் என்னவாக இருந்தது என்றால் தனிச்சிறப்புவாதம் தான் - அதாவது ஏதோவொரு வகையில் ஆஸ்திரேலியா உலகப் பொருளாதாரத்தின் விதிகளில் இருந்து விதிவிலக்காக இருக்கிறது எனவே தொழிலாள வர்க்கம் ஒரு சோசலிச முன்னோக்கிற்கான அவசியம் இல்லாமலேயே தனது நலன்களை முன்னெடுக்க முடியும். 2008 இல் உலகப் பொருளாதார நெருக்கடி தோற்றமளிக்கத் தொடங்கியபோது இந்த தத்துவத்தின் புத்துயிரூட்டப்பட்ட வடிவங்கள் முதலாளித்துவ அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்களின் வாய்களில் இருந்து பொங்கிவந்தன. ஆஸ்திரேலிய வங்கிகள் தமது சர்வதேச சகாக்கள் செய்த வழியில் நச்சு சொத்துகளை வாங்குவதில் சம்பந்தப்படாத வண்ணம் வலிமையான தேசிய வங்கி விதிமுறைகள் இருந்த காரணத்தால் நெருக்கடியில் இருந்து பாதுகாப்பு பெற்று ஆஸ்திரேலியா மீண்டுமொருமுறை அதிர்ஷ்டகரமான நாடாக இவர்களுக்கு நிரூபணம் பெற்றிருந்தது. 'எழுச்சி பெற்று வரும் சீனப் பொருளாதாரத்திற்கு தாதுக்களையும் எரிசக்தியையும் ஏற்றுமதி செய்வதன் மூலமாக ஆஸ்திரேலியா உலக அதிர்ச்சிகளில் இருந்து தப்பித்து விட்டது'. இத்தகைய கூற்றுகள் எல்லாம், 2008 அக்டோபரின் மத்தியில் ஆஸ்திரேலிய வங்கிகள் தமது நிதியில் சுமார் 40 சதவீதத்திற்குச் சார்ந்திருந்த சர்வதேச சந்தைகளிலான ஸ்தம்பிப்பு நிலையின் காரணத்தால் ஒட்டுமொத்த வங்கி அமைப்புமே திவால் நிலைக்கு முகங்கொடுத்தது என்கின் உண்மையை உதாசீனப்படுத்துவன ஆகும். சீனாவின் எழுச்சியின் காரணத்தால் ஆஸ்திரேலியா தனது சர்வதேச நிலையில் ஒரு சாதனை உத்வேகத்தைப் பெற்றது என்று திரும்பத் திரும்பக் கூறுவதானது இந்த எழுச்சி பெருகியமுறையில் சீனப் பொருளாதாரத்திலான தொடர்ந்து தக்கவைக்க முடியாத ஒரு கடன் விரிவாக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது என்கின் உண்மையைக் கண்டுகொள்ளாமல் கடந்து சென்று விடுகிறது.

14. வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால் இந்த தனிச்சிறப்புவாதத்தின் மாயைகளுக்கு நேர்மாறான விதத்தில், உலக முதலாளித்துவத்தின் விதிகள் தங்களை ஆஸ்திரேலியாவில் பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கின்றன என்பதைக் காட்டும். அதிலும் மிகப் பெரும்பாலும் தொடர்ச்சியான அதிர்ச்சிகளின் வடிவத்தில் அது வெளிப்படுவதற்கான மிகப்பொருத்தமான காரணமே அவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தயக்கநிலையில் இருப்பதாக தோற்றமளிப்பது தான். ப்ளூஸ்கோப் –BlueScope- வேலைநீக்கங்கள் விளங்கப்படுத்துவது போல இந்த வடிவங்கள் தான் மறுபடியும் மறுபடியும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வேலை அழிவு என்பது மாற்றத்திற்குள்ளாகும் நிகழ்முறையின் ஒரு பகுதி என்கிறார் கிலார்ட். ஆனால் எதற்கான மாற்றம்? வெகுஜன ஊடகங்களும் விவாத நடத்துநர்களும் தொழிற் கட்சி அரசியல்வாதிகளும் உருவாக்கும் புதிர்ப்படுத்தலின் புகையை ஊதி அகற்றி விட்டுப் பாருங்கள், இறுதிப் புள்ளி தெளிவாய்க் காண முடியும். இது வங்கிகளும், சுரங்க நிறுவனங்களும் மற்றும் பிற முக்கிய பெருநிறுவனங்களும் மிகப் பெரும் இலாபங்களை வாரிக் குவிக்கின், அதிபெரும் பணக்காரர்களின்(இவர்களைச் சுற்றி மேல் நடுத்தர வர்க்கத்தின் வசதியான பிரிவுகளின் ஒரு அடுக்கும் இருக்கும், அதில் தொழிற்சங்க அதிகாரத்துவமும் ஒரு பகுதியாக இருக்கும்)ஒரு வர்க்கத்தை ஆதரிக்கின் ஒரு பொருளாதாரம். எஞ்சிய மக்கள் எதிர்கொள்வதெல்லாம் வேலை பாதுகாப்பின்மை, குறைந்த ஊதியங்கள், மோசமடையும் வேலை நிலைமைகள் ஆகியவை தான், அதே சமயத்தில் சமூக சேவைகள், சுகாதாரம், கல்வி ஆகியவை பலவீனமாகிக் கொண்டே செல்கிறது, இளைஞர்களுக்கு எந்த எதிர்காலமும் இல்லாத ஒரு சமுதாயம்.

15. பொருளாதார சூழ்நிலையை பகுத்தாய்ந்து பார்த்தால் தெரியும், இந்த சுரங்கத் துறை எழுச்சியென்பது ஊக்கம் எதனையும் அளிப்பதற்கெல்லாம் வெகு விலகி ஆஸ்திரேலிய டாலரின் மதிப்பைத் தான் மேலேற்றி விட்டிருக்கிறது, இதனால் உற்பத்தித் துறை, சுற்றுலாத் துறை, மற்றும் கல்வி ஆகியவை உள்ளிட்ட பொருளாதாரத்தின் முக்கியத் துறைகள் மீதான அழுத்தம் அதிகரித்ததோடு அதேசமயத்தில் வட்டி வீதங்கள் மீதும் மேல்நோக்கிய அழுத்தம் சேர்ந்து கொண்டது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் இந்த உயர்ந்த தாது விலைகள் தான் உலக சக்திகள் ஆஸ்திரேலிய பொருளாதாரத்திற்குள் கடத்தப்படுவதற்கான பொறிமுறையாக இருந்து வந்துள்ளது.  இந்த உலக அழுத்தங்கள் வர்க்கப்போராட்டங்கிளிலும் தமது வெளிப்பாட்டை காண்கின்றன. நிதியமைச்சர் Wayne Swan ஆசியாவை அண்மித்திருக்கும் அவுஸ்திரேலியாவின் நிலையானது அதற்கு ஒரு சாதகமான நிலையை உருவாக்கியிருப்பது பற்றி தொடர்ந்து புலம்பிக்கொண்டிருக்கின்றார். ஆனால் உடனடியாக 1000 பணியிழப்புகளையும், அதைத்தொடர்ந்த பணிநிலைமை மற்றும் சம்பளங்கள் மீதான கீழ்நோக்கிய அழுத்தத்தையும் கொடுக்கும் Qantas விமான சேவையின் மறுகட்டமைப்பானது ஆசிய சந்தையில் தனது நடவடிக்கைகளை விரிவாக்கும் அந்நிறுவனத்தின் முயற்சிகளாலேயே உருவானதாகும். இந்த உலக அழுத்தங்கள் பணிநிலைமை மற்றும் சம்பளங்கள் மீதான திட்டமிட்ட தாக்குதலில் காணக்கூடியதாக இருக்கும். PPG எனப்படும் வாகன வர்ண தயாரிப்பு நிறுவனத்தின்(auto-paint manufacturer)புதிய தொழிலாளர்களின் சம்பளம் இந்த வருட ஆரம்பத்தில் 43% இனால் வெட்டப்பட்டது. இது அமெரிக்காவில் நடைமுறைப்படுத்தப்பட்ட 2 கட்ட சம்பள தரங்களுடன் போட்டியிடும் வகையில் உருவாக்கப்பட்டது. இவ்வாறான போராட்டங்கள் அனைத்து துறைகளிலும் எழுகின்றன.

16. இந்தத் தாக்குதல்களுக்கு ஒரு தொழிற்சங்கவாத முன்னோக்கின் கட்டமைப்பினுள் எந்தத் தீர்வும் கிடையாது. முதலாளிகளுக்கும் அரசாங்கத்திற்கும் ஏதோவொரு வகையில் நெருக்குதல் அளிக்கலாம் என்று அது முனைகிறது. Qantas பிரச்சினையை எடுத்துப் பாருங்கள். Qantas செலவுகளைக் குறைக்கவில்லை என்றால், அது சந்தைகளுக்கான போட்டியில், அதிலும் குறிப்பாக ஆசியாவில் குறைந்த கட்டணத்தை அடிப்படையாகக் கொண்ட விமான சேவைகள் மூலம், துடைத்தெறியப்பட்டு விடும். அது இல்லாமல் போகும் அல்லது வேறு நிறுவனங்களால் கையேற்கப்படுத்தப்படும். அதனால் பத்தாயிரக்கணக்கான வேலைகள் இழப்பு நேரும். இந்த சூழலில் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் முன்னோக்கு என்னவாக இருக்கிறது? அறிவிப்பு வந்தவுடனேயே ஆஸ்திரேலிய தொழிற் சங்க கூட்டமைப்பின் (ACTU) செயலரான ஜெஃப் லோரன்ஸ் உடன் ABC நடத்திய நேர்காணலில் இது வெளிவந்தது. நேர்காணலில் லோரன்சிடம் இவ்வாறாக விடயம் முன்வைக்கப்பட்டது: திரு ஜாய்ஸ் [Alan Joyce, Qantas இன் தலைமை அதிகாரி] தெரிவிக்கிறார் அவர்களது செலவு நமது முக்கிய போட்டியாளர்களை விட 20 சதவீதம் அதிகமாய் இருப்பதாக. எதுவும் செய்யாமல் இருப்பதோ இல்லை அங்கங்கே சிறு திருத்தங்களை செய்வதோ முடியாத காரியம். என லோரன்ஸ் பதிலளித்தார்: எதுவும் செய்யாமலிருப்பது குறித்த கேள்வியில்லை இது. இந்தப் பிரச்சினைகளை நீங்கள் எப்படி நிவர்த்தி செய்கிறீர்கள் என்பது குறித்த கேள்வி. Qantas ஒன்றாக அமர்ந்து இந்தப் பிரச்சினைகள் குறித்து உண்மையில் நேர்மையாக ஒரு ஊதிய உடன்பாடு பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் பல வருடங்களாக ACTUவும் மற்ற விமானசேவை சங்கங்களும் அழைத்துக் கொண்டிருக்கின்றன. சென்ற மே மாதத்தில் விமானிகள் சங்கத்தின் தேசியத் தலைவரான பாரி ஜாக்சன் விளக்கினார்: தலைமை நிர்வாகி லன் ஜாய்ஸும் மற்றும் அவரது நிர்வாகிகளும் விமானிகளும்  மற்றும் பிற ஊழியர்களுடன் பேசினால், Qantas இன் 90 வருட வரலாற்றை அழிக்காமலும் அதனை வெளிநாட்டுக்கு கொண்டுசெல்ல விடாமலும் உற்பத்தித் திறன் பெருக்கலை சாதிப்பதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், தொழிற்சங்க அதிகாரத்துவம், தான் இந்த நிகழ்முறைக்குள் கொண்டுவரப்பட்டால் தேவையான செலவினக் குறைப்புகளை எட்டுவதற்கு ஊதியங்கள் மற்றும் வேலைநிலைமைகளிலான வெட்டுகளை தன்னால் திணிக்க முடியும் என்று வலியுறுத்துகிறது. இந்த விடயத்தில், 1983 தொடங்கி ஹாக்-கீடிங்கின் தொழிற்கட்சி அரசாங்கத்துடன் செய்து கொண்ட விலைவாசிகள் மற்றும் வருவாய்கள் ஒப்பந்தத்தை நினைவுறுத்தி, இந்த விடயத்தில் தங்களது சாதனைகளை அவர்கள் சுட்டிக் காட்டலாம்.

Qantas தொழிலாளர்கள் மற்றும் இதே போன்ற உத்தரவுகளுக்கு முகங்கொடுக்கும் மற்ற தொழிலாளர்களது முன்னால் இருக்கும் வழி என்ன? உலக சோசலிச வலைத் தளத்தில் ஆகஸ்ட் 16 அன்று அமெரிக்காவில் வெரிசான் வேலைநிறுத்தம் குறித்து வெளியான ஒரு முன்னோக்கில் பின்வரும் முக்கியமான புள்ளி குறிப்பிடப்பட்டிருந்தது: பல தலைமுறைத் தொழிலாளர்களின் உழைப்பால் உருவாக்கப்பட்ட பரந்த செல்வம் ஒருசிலரது கைகளில் இருந்து பறிக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக மக்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட வேண்டும். முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார மற்றும் அரசியல் வலிமையுடன் அத்தகைய ஒரு நேரடியான மோதலைத் தவிர்ப்பதற்கு தொழிலாளர்கள் முனைந்தால் அவர்களால் எதனையும் சாதிக்க முடியாது. தொழிற்கட்சி மற்றும் தொழிற் சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் போலி இடது மற்றும் நடுத்தர வர்க்க அமைப்புகளில் உள்ள அவற்றின் ஆதரவாளர்கள் ஆகியோருக்கு எதிரான ஒரு போராட்டத்தில் தான் இந்த முன்னோக்கினை முன்னெடுத்துச் செல்வது இயலும். தொழிற்சங்கங்கள் இனியும் மட்டுப்படுத்தப்பட்ட தொழிலாள வர்க்கப் பாதுகாப்பு அமைப்புகளாகக் கூட செயல்படுவதில்லை மாறாக அவை பெருநிறுவனங்கள் மற்றும் அரசின் பகிரங்கமான முகமைகளாக செயல்படுகின்றன. ஆனால் அவை போலி-இடது குழுக்களைத் தான் முழுமையாக நம்பியிருக்கின்றன. உதாரணமாக, அமெரிக்காவில் சர்வதேச சோசலிஸ்டு அமைப்பு -International Socialists Organization- என்ன கூறியது, வெரிசான் தொழிலாளர்கள் அடகு வைக்கப்பட்டதற்குக் காரணம் இந்த வேலைநிறுத்தம் கட்டவிழ்த்து விடக் கூடிய சக்தியை கைப்பற்றிக் கொள்ளப் பயந்த தொழிற்சங்கத்  தலைவர்களின் கோழைத்தனத்தின் விளைவு என்று. உண்மையில் நடந்ததோ அதன் தலைகீழான ஒன்று. தொழிற்சங்கத் தலைவர்கள் வேலைநிறுத்தத்தைக் காட்டிக் கொடுத்தார்கள் என்றால் அதன் சரியான காரணம் எங்கே அது தங்கள் கையை மீறிப் போய் விடுமோ என்று அவர்கள் அதன் பின்விளைவுகளைக் கண்டு அஞ்சியதால் தான். அதேபோல் தான் இந்த நாட்டிலும், சோசலிச மாற்றுக் கட்சி (Socialist Alternative) தொடர்ந்து என்ன கூறுகிறதென்றால் தொழிற்சங்கங்களுக்கு புத்துயிரூட்டுவதும் ஒரு வகை இடது கட்சியைக் கட்டுவதும் தான் அவர்களது நோக்கம் என்று. தொழிலாள வர்க்கத்தை சிக்கவைப்பதற்கான இடது பொறி என்பதற்கு மேல் அந்தக் கட்சியின் செயல்பாடு இருக்கப் போவதில்லை.

17. தொழிற்துறையில் ஊதியங்கள், வேலைகள் மற்றும் வேலை நிலைமைகளின் மீதான தாக்குதல்களுக்கு எதிரான ஒவ்வொரு போராட்டத்திலும், கல்வி, சுகாதாரம் மற்றும் பிற சமூக சேவைகளுக்கு எதிரான வெட்டுகளுக்கு எதிரான போராட்டத்திலும், அதாவது உலகெங்கிலும் முதலாளித்துவ அரசாங்கங்களால் கட்டவிழ்த்து விடப்படுகின் சமூக எதிர்ப்புரட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஒரு சோசலிச மாற்று வேலைத்திட்டம் முன்வைக்கப்பட்டு அதற்காகப் போராடவேண்டும். ஏனென்றால் அது மட்டுமே தொழிலாள வர்க்கம் முன்செல்வதற்கான ஒரே வழியாகும். இந்த மாநாட்டுக்கான விவாதங்களின் போது நம்மிடம் பல தொழிலாளர்கள், எனக்குத் தேவை ஒருநாளில் நேர்மையான வேலைக்கு நேர்மையான சம்பளம் என்பது தானே என்று சொல்லி இத்தகைய ஒரு முன்னோக்கின் அவசியம் குறித்து நம்மிடம் கேள்வி எழுப்பக் காண்கிறோம். நல்லது தான். ஆனால் ஒரு கண்ணியமான ஊதியமோ, அல்லது ஒரு கண்ணியமான வேலையோ முதலாளித்துவ இலாப அமைப்புக்கு எதிரான தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கையிலெடுப்பதற்கும் ஒரு தொழிலாளர்' அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கும், அத்துடன் பொருளாதாரத்தை மனிதத் தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் மறுஒழுங்கு செய்யத் தொடங்குவதற்கும் இந்தப் போராட்டத்தை சர்வதேச அளவில் அபிவிருத்தி செய்வதற்கும் வழிவகை செய்து தருகின்ற ஒரு அரசியல் போராட்டத்துக்கு  வெளியே பாதுகாத்துக் கொள்ளப்பட முடியாது.

18. இப்போது பிரிட்டன் நிலைமைக்கும் இந்த மாத ஆரம்பத்தில் நிகழ்ந்த இளைஞர் கலகங்களில் வெளிப்பட்ட சமூகக் கிளர்ச்சிக்கு பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தின் பதிலிறுப்புக்கும் வருகிறேன். ஆகஸ்ட் 17 அன்று வெளியான ஒரு போலிஸ் அரசின் துர்நாற்றம் என்ற தலைப்பிலான ஒரு முன்னோக்கில் பிரிட்டிஷ் சோசலிச சமத்துவக் கட்சியின் ஜூலி ஹைலண்ட் சூழ்நிலையை மிகச் சக்திவாய்ந்த வகையில் சுருக்கமாகக் கூறியிருந்தார். அவர் எழுதுகிறார்: கடந்த 12 நாளின் நிகழ்வுகள் பிரிட்டனிலும் மற்றும் சர்வதேசரீதியாகவும் தொழிலாள வர்க்கத்திற்கு விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கையாகும். லண்டன் மற்றும் பிற நகரங்களிலான இளைஞர் கலவரங்களுக்கு பிரதிபலிப்பாக  கட்டவிழ்த்து விடப்பட்ட அரசு ஒடுக்குமுறையும் மற்றும் வலதுசாரி வெறியும் போலிஸ் அரசின் வடிவங்களிலான ஆட்சிக்கு ஆளும் வர்க்கம் செய்துவரும் தயாரிப்புகளை வெளிக்காட்டுகிறது. ஆகஸ்ட் 4 ஆம் தேதியன்று வடக்கு இலண்டனின் டோட்டன்ஹாமில் நான்கு குழந்தைகளுக்குத் தந்தையான கறுப்பினத்தைச் சேர்ந்த 29 வயது மார்க் டக்கனை போலிஸ் சுட்டுக் கொன்றதை அடுத்து கலவரங்கள் தூண்டப்பட்டன. இதனைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் கழித்து அவரது கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியாக நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தின் மீது ஆத்திரமூட்டப்படாத நிலையிலேயே போலிஸ் தாக்குதல் நடந்தது. அதற்குப் பின் ஏறக்குறைய இருவாரம் கழிந்த பின்னரும், இதுவரை எந்த அதிகாரியும் இந்தக் குற்றங்களுக்காக, வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றால் கூட, அடையாளம் கூட காணப்பட்டிருக்கவில்லை. அதற்குப் பதிலாக, வங்கிகளையும் பெரும் பணக்காரர்களையும் பிணையெடுக்க பொது நிதியங்களைக் கொள்ளையடிப்பதை அனுமதித்த மற்றும் ராபர்ட் மூர்டொக்கின் ஊடக சாம்ராஜ்யம் செய்த சட்டவிரோதமான தொலைபேசி வேவு விவகாரத்தை மூடி மறைத்த அதே அரசியல் உயரடுக்கினர் தொழிலாள வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞர்களின் குற்றத்தன்மைக்கும் மற்றும் அதர்மத்திற்கும் எதிராக  அடித்து உதைக்கும் கும்பல் சூழலைத் தூண்டி விட முனைகின்றனர். தொழிற் கட்சியால் உற்சாகம் பெற்று, பிரதமர் டேவிட் கேமரூனும் மற்றும் அவரது கன்சர்வேடிவ்-லிபரல் அரசாங்கமும் நச்சுத்தனமான அரசு ஒடுக்குமுறையை ஒழுங்கமைத்து, தண்ணீர் பீச்சிகளையும் பிளாஸ்டிக் குண்டுகளையும் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்திருப்பதோடு இனிவரும் சமூகக் கிளர்ச்சிகளுக்கு எதிராக இராணுவத்தை பயன்படுத்துவதன் சாத்தியத்தையும் கோடிட்டுக் காட்டியுள்ளது.

அடிப்படை ஜனநாயக உரிமைகள் எல்லாம் காற்றில் பறக்க விடப்பட்டாகி விட்டது. போலிஸ் பாரிய எண்ணிக்கையில் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிகாரிகளின் உத்தரவின் பேரில் நேரடியாகச் செயல்படுகின் நீதிமன்றங்களின் தலைமையில் தான் கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள் என்பதால் குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என்பதெல்லாம் காற்றில் வீசப்பட்டு வருகின்றன. தலைநகரிலும் பிற இடங்களிலும் சுமார் 3,000 பேர் (இதில் பெரும்பான்மையினர் 16 வயது 24 வயதுக்கு உட்பட்டோர்) மொத்தமாய் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். சாதாரணமாக சில்லரைக் குற்றங்களாகக்  கருதப்படும் விடயங்களுக்கும் கூட போலிஸ் ஏராளமானோரின் வீட்டுக் கதவுகளைத் தட்டிக் கைது செய்கிறது. இதுநாள் வரையிலும் குற்றம் செய்யாதவர்கள் மட்டுமல்லாது, எந்தக் குற்றச்சாட்டிலும் கூட சிக்கியிராத மனிதர்களின் பெயர்களும் புகைப்படங்களும் அன்றாடம் ஊடகங்களால் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 11 வயது அளவுக்கான சிறுவர்களும் கூட தங்களது பெயரின் இரகசியத்தைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமையை இல்லாது செய்யப்பட்டனர். தண்டனைகள் விதிப்பதில் நீதிபதிகள் சட்டப் புத்தகங்களை பின்பற்றும் அவசியமில்லை என்று அறிவுறுத்தப்பட்டிருந்தனர், லண்டன் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் ஒன்றின் தலைவர் கவனமில்லாமல் அரசாங்க 'உத்தரவின்' படி என்று வெளிப்படையாகவே கூறி விட்டார். 1,500 பேருக்கும் அதிகமாக இதுவரை நீதிமன்றங்களுக்கு இழுத்து வரப்பட்டுள்ளனர் - சில சந்தர்ப்பங்களில் 24 மணி நேரம் கூட ஒரே சமயத்தில் அமர வைக்கப்பட்டனர் - அங்கே படிவங்களின் வேலையை முழுதாக முடியும் முன்னர் வழக்கறிஞர்களும் கூட பற்றாக்குறையான நிலையில், மிகவும் பழிவாங்கும் தன்மையுடைய மற்றும் கடும் தண்டனையான தீர்ப்புகள் அவர்களுக்கு கையளிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்ட அநேகம் பேர் இதற்கு முன் எந்தக் குற்றங்களும் செய்தவர்கள் இல்லையென்றாலும் அவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது. தாய்மார்களும் கர்ப்பிணிப் பெண்களும் திருட்டுப் பொருட்களைக் கையாண்ட குற்றத்திற்காக ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை பெற்றுள்ளனர். எந்தக் குற்றவியல் வழக்கிலும் இதற்கு முன் சிக்கியிராத ஒரு மாணவனுக்கும் இதே கதி தான், அவன் செய்த குற்றம் £3.50 பவுண்டுகள் மதிப்புள்ள தண்ணீர் போத்தலை திருடியது. இவர்கள் எல்லாம் சுருக்கமான நீதிக்கு முகங்கொடுத்த பலரில் முதலில் இடம்பெற்றவர்கள் மட்டுமே. இன்னும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மேல்நீதிமன்றத்தின் விசாரணைக்காக மாதக் கணக்கில் ஒரே சமயத்தில் சிறையில் காத்து நிற்கும்படி செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த நீதிமன்றம் கலகம் செய்வதற்கு பத்தாண்டுகள் வரை சிறைத் தண்டனை அளிப்பது உட்பட பல அசுரத்தனமான தண்டனைகளைக் கொடுக்க முடியும்.

19. நான் ஏற்கனவே கூறியிருந்ததைப் போல, பிரிட்டிஷ் முதலாளித்துவ வர்க்கம் உலகத்தில் மிகப் பழமையான, மிக நனவான, நூற்றுக்கணக்கான ஆண்டுகள் அனுபவம் பெற்ற ஆளும் வர்க்கம். அதன் பிரதிநிதிகள் சிலர் என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம். குறிப்பாக ஒரு பத்திரிகையாளராகவும், செய்தித்தாளின் ஆசிரியராகவும், இராணுவ வரலாற்றாசிரியராகவும் மற்றும் சேர்ச்சிலின் வாழ்க்கை வரலாற்று ஆசிரியராகவும் இருந்திருக்கக் கூடிய மக்ஸ் ஹேஸ்டிங்க்ஸ் சொன்ன கருத்து என்னை உறைய வைத்து விட்டது. அடிப்படையில் இவர்களெல்லாம் காட்டு மிருகங்கள். இந்த சொற்றொடரை ஆலோசனை செய்தபின் தான் நான் பயன்படுத்துகிறேன், ஏனென்றால் தங்களை வேலையிடத்தில் பணிபுரியத்தக்கவர்களாக ஆக்கக்கூடிய ஒழுக்கம் இல்லாத இளைஞர்களுக்கு இது பொருந்துகிறது என்றே தோன்றுகிறது. சாப்பிட வேண்டும், குடிக்க வேண்டும், பாலுறவு கொள்ள வேண்டும், அடுத்தவர்களின் சொத்துக்கு அணுகல் கிடைத்தால் உடனே அதைக் கைப்பற்ற வேண்டும் அல்லது அழிக்க வேண்டும் என்று ஒரு மிருகத்தின் உள்ளுணர்வுகளே அவர்களுக்கு வேலை செய்கிறது. வீதிகளில் அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்தால் சென்ற வாரத்தில் நோர்வே சுற்றுலா முகாம் ஒன்றின் மீது தாக்கிய துருவப் பனிக்கரடி தான் ஞாபகத்துக்கு வருகிறது. கரடியைப் போலத் தான் இவர்களும் தங்களுக்கு இயல்பாகத் தோன்றுவதை செய்து கொண்டிருந்தார்கள், ஆனால் கரடியைச் சுட்டது போல யாரும் இவர்கள் மீது சுடக் கூட இல்லை.

20. கொலைவெறியுடன் திரு.ஹேஸ்டிங்க்ஸ் கூறிய கருத்துகள் எல்லாம் இளைஞர் கலவரங்களுக்கான மிகைப்படுத்தப்பட்ட, உணர்ச்சிவசப்பட்டுக் கூறிய மறுமொழி அல்ல. முதலாளித்துவ ஒழுங்கின் ஆழமடையும் உலக நெருக்கடியில் இருந்து தவிர்க்கவியலாமல் எழுகின்ற சமூக மோதல்கள் மற்றும் போராட்டங்களுக்கான மறுமொழியாக பிரிட்டிஷ் முதலாளித்துவம் மற்றும் வேறெங்கிலுமான முதலாளித்துவம் இப்போது எதிர்கொண்டுள்ள அரசியல் கடமைகளின் ஒரு நிதானமான மற்றும் ஆற அமர செதுக்கப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் அமைந்ததே இது. மேற்கில் நேர்மையான தலைவர்களுக்கான நெருக்கடி என்கின் தலைப்பில் ஆகஸ்ட் 15 அன்று வெளியான பைனான்சியல் டைம்ஸ் பதிப்பில் வெளியிடப்பட்ட ஒரு கருத்தில் அவரது முன்னோக்கு புலப்படுகிறது. வாக்காளர்களை கடந்த காலத்தில் அவர்கள் பெற்ற ஒவ்வொன்றிலும் குறைந்த அளவு தான் பெற இயலும் என்பதை ஒப்புக்கொள்ள சமரசம் செய்வது தான் மேற்கத்திய தலைவர்கள் முகங்கொடுக்கும் அடிப்படையான கடமை என்று அவர் எழுதுகிறார். இந்த சூழ்நிலை எத்தனை நாள் நீடிக்கவிருக்கிறது? ஹேஸ்டிங்க்ஸ் கூற்றுப்படி, நாம் இப்போது ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பத்தில் நிற்கிறோம்: பிரிட்டன் 'ஏழு ஆண்டுகள் கஷ்ட கால'த்தின் நடுவில் இருப்பதாக Bank of England இன் ஆளுனர் சேர் மேர்வின் கிங் சமீபத்தில் ஒரு உரையில் தெரிவித்தார். சமீபத்தில் ஒரு மத்திய வங்கியாளரிடம் நான் பேசிக் கொண்டிருந்தபோது அவரிடம் பேச்சுவாக்கில் அநேகமான மேற்கத்திய நாடுகள் 70 வருட கஷ்ட காலத்தின் ஆரம்பத்தில் இருப்பது போல் தெரிகிறது என்றேன், அவர் உடனே அதற்குத் தலையாட்டி ஒப்புக் கொண்ட விதம் என்னை அதிர்ச்சியடையச் செய்து விட்டது.

21. தாங்கள் தலைமை தாங்கும் முதலாளித்துவ ஒழுங்கின் உடைவில் இருந்து எழுகின்ற சமூகப் போராட்டங்களுக்கு ஆளும் உயரடுக்கு ஒரே ஒரு பதிலைத் தான் வைத்திருக்கிறது - பெருகிய ஒடுக்குமுறை, போர் மற்றும் சர்வாதிகார ஆட்சிமுறை வடிவங்கள். தனிச்சிறப்புவாத தத்துவத்தின் அடிப்படையில் ஆஸ்திரேலியா இந்த அரசியல் அபிவிருத்திகளில் இருந்து எப்படியோ தப்பித்து விட்டதாக ஒருவர் இன்னமும் கூறிக் கொண்டிருக்க முயலுவாரேயானால், ஒன்று அவர் தம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் அல்லது அடுத்தவர்களை ஏமாற்ற முயலுகிறார். சொல்லப் போனால், இந்த சந்தர்ப்பத்தில், ஆஸ்திரேலியா உலகின் எஞ்சிய பகுதிகளுக்குப் பின்னால் நிற்பதைக் காட்டிலும் முன்னால் தான் நிற்கிறது. 2010 ஜூன் 23-24 ஆட்சிக்கவிழ்ப்பில், தொழிற்கட்சித் தலைமையின் ஒரு கூட்டமும் தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகளும் சேர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரான கெவின் ரூட்டை நீக்கி விட்டு ஜூலியா கிலார்டைக் கொண்டு அமர்த்தியது இனி வரவிருக்கும் விடயங்களுக்கான ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. அந்த சமயத்திலேயே நாங்கள் கூறியிருந்ததைப் போல, கருத்துக் கணிப்புகளில் ரூட் மிகவும் பின் தங்கியிருந்ததற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, ஏனென்றால் கிலார்ட் மீதான கருத்துக்கணிப்பு ஆதரவு அதனினும் மோசமாய்த் தான் உள்ளது. இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு வலிந்து செய்த தாக்குதல், சீனாவுக்கு எதிராக அமெரிக்கா நடத்தி வரும் ஆசிய-பசிபிக் போராட்டத்தில் அதனுடன் ஆஸ்திரேலிய அரசாங்கத்தை மிக நெருக்கமாகக் கொண்டு வருவதற்கும் ரூட் தொடர்புபட்டிருந்த ஊக்குவிப்புத் தொகுப்புகளை காட்டிலும் சிக்கன நடவடிக்கைகளை அதிகமாய் முன்முயற்சியெடுக்கின்ற ஒரு ஆட்சியை அமர்த்துவதற்கும் தான் இது ஒழுங்கமைக்கப்பட்டது.

22. இந்தக் கவிழ்ப்பில் ஒரு சர்வாதிகாரத்தின் சுவடையும் விட அதிகமாய் அடங்கியிருந்தது, அடுத்த 14 மாதங்களில் அரசியல் நெருக்கடி மேலும் ஆழமடைந்திருக்கிறது. 70 ஆண்டுகளில் முதல்முறையாக தேர்தலில் தொங்கு நாடாளுமன்றமும் ஒரு சிறுபான்மை அரசாங்கமும் திரும்பி வந்தன. ஒரு வருடம் கடந்து விட்டது, ஆஸ்திரேலிய ஆளும் வர்க்கம் 120க்கும் அதிகமான வருடங்கள் எந்தக் கட்சியை நம்பியிருந்ததோ அந்தத் தொழிற்கட்சிக்கு மக்களில் 30 சதவீதத்துக்கும் குறைவானோரின் ஆதரவு மட்டுமே உள்ளது, அந்த ஆதரவும் கூட வேண்டாவெறுப்புடன் தான் அளிக்கப்படுவதாய் இருக்கிறது. அர்த்தமுள்ள ஒரு வகையில் நீடித்திருக்கும் தகுதியை அக்கட்சி இழந்திருக்கிறது. இது ஒரு அரசு நிதியாதாரவுடனான பெருநிறுவன நிதியாதரவுடனான எந்திரமாக உள்ளது. இன்னொரு பக்கத்தில் தாராளவாதிகள் எல்லாம் கருத்துக்கணிப்புகளில் மேலே இருக்கலாம் ஆனால் இந்த ஆதரவு வலதுசாரி ஜனரஞ்சகவாதத்துடன் அவர்கள் கூடியிருப்பதை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்டதாகும்.  இது ஆளும் வர்க்கங்களுக்குள்ளேயே 'லிபரல் கட்சி அவசியமான கொள்கை வகைகளை முன்னெடுப்பதில்லை' (அதாவது தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமை மீது ஆழமான தாக்குதல்களைத் தொடுப்பதன் அடிப்படையிலான கொள்கைகளை)என்று தொடந்த விமர்சனம் எழுவதற்கு தூண்டிக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்திரமற்ற நிலை மிகக் கூர்மையான மாற்றங்களைக் கொண்டுவரும், அதன் விளைவுகள், அவை என்ன வடிவங்களில் எழுவதாய் இருந்தாலும், மிக எதேச்சாதிகாரமான ஆட்சிமுறை வடிவங்களின் அபிவிருத்தியாகவே இருக்கும். ஆகவே தொழிலாள வர்க்கம் தனது சொந்த சுயாதீனமான சோசலிச வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கின் அடிப்படையில் தலையீடு செய்வது தான் அதிமுக்கியமான பிரச்சினை ஆகும். அத்தகையதொரு இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஒரு புதிய புரட்சிகரத் தலைமையை, சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டுவது அவசியமாக உள்ளது. வேறு எவரும் இந்தக் கடமையை முன்வைப்பதும் கூட இல்லை, வேறு எவரும் அதனைச் செய்து முடிக்கவும் போவதில்லை.

23. காளையை அதன் கொம்பைப் பிடிப்பது அவசியமாக உள்ளது. இதை செய்வதற்கு எந்த அரைகுறை நடவடிக்கைகளும் இல்லை. தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய புரட்சிகரக் கட்சி கட்டியெழுப்பப்பட வேண்டும். இந்தக் கடமையை முன்வைக்கையில், இளைஞர்களால் ஆற்றப்பட வேண்டிய மிக முக்கியப் பாத்திரத்தை சுட்டிக்காட்டுவதுடன் முடிக்கிறேன். இந்தக் கேள்வி குறைந்தபட்சம் ஒரு இளைஞராவது எழுப்பிய ஒன்று, சந்தேகமில்லாமல் இன்னும் பலரின் மனதில் எழுந்திருக்கக் கூடிய ஒன்று: எனது வாழ்க்கையை நான் ஏன் இந்தக் கட்சியைக் கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிக்க வேண்டும்? ஏனென்றால் இந்தக் கடமையை சாதிப்பதற்கு வல்லமை பெற்ற ஒரே சமூக சக்தியான தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகரத் தலைமையைக் கட்டுவதன் மூலமாக சமூகத்தை உருமாற்றம் செய்வதற்குப் போராடுவதற்கு வெளியே இளைஞர்களுக்கு ஒரு வாழ்க்கையே கிடையாது, குறைந்தபட்சம் அர்த்தமுள்ள திருப்தி கொண்ட வாழ்க்கை ஒன்று கிடையாது. எமது உலகக் கட்சியான நான்காம் அகிலத்தை ஸ்தாபகம் செய்கையில் லியோன் ட்ரொட்ஸ்கி கூறிய வார்த்தைகளை மீண்டும் நினைவுகூருகிறேன்: கட்சிக்கு நாம் ஒவ்வொருவரும் மொத்தமாகவும் முழுமையாகவும் அவசியமாக உள்ளோம். பிலிஸ்டைன்கள் தமது தனி அடையாளத்தை வெற்றிடங்களில் தேடட்டும். ஒரு புரட்சிகரவாதிக்கு கட்சிக்கு தன்னை முழுமையாகக் கொடுப்பது தான் அவன் தன்னைக் கண்டுபிடிப்பதைக் குறித்து நிற்கிறது. ஆம், நமது கட்சி நம் ஒவ்வொருவரையுமே முழுமையாக எடுத்துக் கொள்கிறது. ஆனால் பதிலுக்கு நம் ஒவ்வொருவருக்கும் அது மிக உயர்ந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது: ஒரு மேம்பட்ட வருங்காலத்தைக் கட்டுவதில் நான் பங்கேற்கிறேன் என்கின், எனது தோள்களில் மனிதகுலத்தின் தலைவிதியின் ஒரு துணுக்கைச் சுமக்கிறேன் என்கின், எனது வாழ்க்கை வீணாகக் கழிக்கப்படவில்லை என்கின் ஒருவரது நனவு தான் அந்த மகிழ்ச்சி.

24. முதலாளித்துவ ஒழுங்கின் உருக்குலைவால் எழுகின்ற மாபெரும் அபாயங்களின் முன்னால் நின்று கொண்டிருக்கிறோம். ஆனால் இதே அபாயங்கள் தான் மாபெரும் சந்தர்ப்பங்களையும் அர்த்தப்படுகின்றன, வரலாற்றின் சக்கரத்தைப் பற்றிப் பிடித்து அதனை மனிதகுலம் வாழத் தகுந்த ஒரு உலகத்தைக் கட்டியெழுப்புவதற்கான திசையில் திருப்புவதில் நமது பங்கை ஆற்றுவதற்கான சந்தர்ப்பங்களை.

அதிக நாணயத்தை புழக்கத்தில் விடுவது என்பதன் அரசியல் பொருளாதாரம்

ஐரோப்பிய பிணையெடுப்பின்மீது கருத்துமுரண்பாடுகள் ஆழமடைகின்றன

பொருளாதார நெருக்கடி உலகப் பதட்டங்களை அதிகரிக்கின்றது