சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Pro-government thugs set fire to Tamil newspaper office

இலங்கை: அரசாங்க சார்பு குண்டர்கள் தமிழ் பத்திரிகை அலுவலகத்திற்கு தீ வைத்தனர்

By Subash Somachandran and S. Jayanth
15 April 2013

use this version to print | Send feedback

சனிக்கிழமை காலை, இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள வட இலங்கையில், யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் தமிழ் தினசரியான உதயன் பத்திரிகையின் அலுவலகத்திற்கு ஆயுதங்களுடன் வந்த குண்டர்கள் குழு, அலுவலகத்திற்கு தீ மூட்டியது. கடந்த இரண்டு வாரங்களுக்குள் இந்த செய்தித்தாள் மீதான இரண்டாவது தாக்குதல் இதுவாகும். இது, இராஜபக்ஷ அரசாங்கத்தின் அரசியல் எதிரிகள் மற்றும் ஊடக விமர்சகர்களுக்கு எதிரான வன்முறை அலையின் பாகமாகும்.

மூன்று நபர்கள் காலை 4.45 மணியளவில் AK-47 துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகள் சகிதம் மோட்டார் சைக்கிளில் வந்து, உதயன் அலுவலகத்துக்குள் நுழைந்தனர். அவர்கள் அச்சிடும் பிரிவிற்குள் நேரடியாக சென்று பாதுகாவலர்கள் மற்றும் பத்திரிகை ஊழியர்களை அச்சுறுத்தியதோடு, 20 மில்லியன் ரூபா (160,000 அமெரிக்க டொலர்) மதிப்புள்ள அச்சி இயந்திரத்துக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.
 
ஆசிரியர் டி. பிரேம்நாத் ஊடகங்களிடம் கூறியதாவது: "எங்களது பிரதான அச்சு இயந்திரம் பழுதுபார்க்க முடியாதளவு சேதமடைந்துள்ளதால், எம்மால் இப்போது முழு வலிமையுடன் பத்திரிகையை அச்சிட முடியாதுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள், வெளியேறுவதற்கு முன் ஞாயிறு வெளியீட்டிற்காக அச்சிடப்பட்டிருந்த உப இணைப்புக்களையும் எரித்துவிட்டே சென்றனர்."


சேதமடைந்த உதயன் அச்சகம்


உதயன் ஒன்லைன் கூறுவதன்படி, அலுவலக பாதுகாப்புக்கு இருந்த பொலிஸ் அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. யாழ்ப்பாண பொலிஸ் நிலையம் மற்றும் அவசர தொலைபேசி எண் 119க்கு எடுக்கப்பட்ட அழைப்புகளுக்கு எந்தவித பிரதிபலிப்பும் இருக்கவில்லை. செய்தித்தாளின் கொழும்பு அலுவலகம் தலையிட்ட பின்னர் பொலிசார் தாமதமாக வந்தனர்.

உதயன், தமிழ் முதலாளித்துவ கட்சிகளின் கூட்டணியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவனுக்குச் சொந்தமானதாகும். வட மாகாண சபை தேர்தல் செப்டம்பரில் நடைபெற இருப்பதால், பத்திரிகையின் இருப்பு அரசாங்கத்தின் நலன்களுக்கு பாதகமானதாக இருக்கும்" என கூறிய சரவணபவன், அரசாங்கத்தை குற்றஞ்சாட்டினார்.

கடந்த காலத்தைப் போலவே, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கமும் இராணுவமும் இந்தக் குற்றச் செயலில் சம்பந்தப்படவில்லை என மறுத்தன. தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையத்தின் ஆணையர் ஜெனரல் லக்ஷ்மன் ஹுலுகல்லவும், ஊடக நிறுவனம் தானே இந்த தாக்குதலை ஏற்பாடு செய்துகொண்டதாக குற்றம் சாட்டினார். "இந்த தாக்குதலில் புதிய எதுவும் இல்லை," என கூறிய அவர், "இது விடுதலைப் புலிகள் பயன்படுத்திய அதே உத்தியே ஆகும்," என்றார்.

எந்த ஆதாரமும் இல்லாமல், ஹுலுகல்ல கூறியதாவது: "இது அரசாங்கத்தினதும் நாட்டினதும் மதிப்பைக் கெடுக்க செய்யப்பட்ட ஒரு உள் வேலை என்பது ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

எனினும், இந்த தாக்குதல், ஒரு நிச்சயமான எடுத்துக்காட்டை வெளிப்படுத்துகிறது. பாதுகாப்பு படைகளின் ஒத்துழைப்புடன் செயற்படும் அரசாங்க சார்பு குண்டர்களால், உயர் பாதுகாப்பு பகுதிகளில் தாக்குதல் நடத்திவிட்டு எளிதாக தப்பிக்க முடியும். மே 2009ல் புலிகளின் தோல்விக்கு பின்னர் நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் முழு வட மாகாணமும் பெரும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது.

உதயன் அலுவலகம் யாழ்ப்பாண நகர மையத்தில் அமைந்துள்ளது. இராணுவத்துக்கு தெரியாமல் துப்பாக்கிகளை ஏந்திக்கொண்டு யாராலும் அப்பகுதியில் பகுதியில் நடமாட முடியாது. ஆனால் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பீ.டி.பீ.) போன்ற துணை இராணுவ குழுக்கள் வட மாகாணம் முழுவதும் தண்டனையின்றி செயற்பட முடியும்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஏப்ரல் 3 அன்று, வடக்கின் வன்னி பகுதியில் கிளிநொச்சியில் உள்ள உதயன் விநியோக அலுவலகம் குண்டர்களால் நாசமாக்கப்பட்டதோடு அதன் ஊழியர்கள் கடுமையாக பொல்லுகளால் தாக்கப்பட்டனர். பொலிஸ் விசாரணை நடப்பதாக அறிவித்த போதிலும், முன்னர் போன்று, எவரும் கைது செய்யப்படவில்லை, அல்லது அதற்கான வாய்ப்புகளும் தெரியவில்லை.

ஜனவரி 15 அன்று, ஒரு உதயன் பத்திரிகையாளர் யாழ்ப்பாண பஸ் நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டதுடன் இன்னொருவருக்கு இராணுவ சீருடையில் வந்த ஒருவர் கொலை அச்சுறுத்தல் விடுத்தார்.

ஜனாதிபதி இராஜபக்ஷ, புலிகளுக்கு எதிரான நீண்டகால இனவாத யுத்தத்தை புதுப்பித்த 2006 ஆம் ஆண்டு முதல், 15 முறை உதயன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. 2006 மே 1 அன்று, அதாவது கொழும்பில் உலக பத்திரிகை சுதந்திர தினம் கொண்டாடப்பட்டதற்கு முதல் நாள், உதயன் அலுவலகத்துக்குள் குதித்த துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட தாக்குதலில், இரண்டு ஊழியர்கள் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர்.

நேற்று, பிரிகேடியர் ருவண் வனிகசூரிய, யாழ்ப்பாணம் மற்றும் பிற இடங்களில் இருந்து வரும் மற்ற வெளியீடுகள் அரசாங்கத்தையும் இராணுவத்தையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன, ஆனால் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக அவை குற்றஞ்சாட்டவில்லை என தெரிவித்தார். அப்படியிருக்கும் போது "ஏன் உதயன் மட்டும் குற்றம் சாட்டுகிறது?" என்று அவர் கேள்வியெழுப்பியதன் மூலம், மீண்டும் பத்திரிகை தானே அதன் அச்சகத்தை அழித்துக்கொண்டதாக சுட்டிக் காட்டினார்.

எனினும் ஏனைய ஊடக பிரிவுகளும் கூட, தீவிர தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இந்த அச்சுறுத்தல் மற்றும் வன்முறைகளும், போர் முடிந்ததில் இருந்தே, பிரதானமாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இலக்கு வைக்கப்பட்ட, பொலிஸ்-அரச இயந்திரத்தை தொடர்ந்து பலப்படுத்துவதுடன் தொடர்புடையதாகும்.

பிப்ரவரி 7 அன்று, அடையாளம் தெரியாத குண்டர்கள், யாழ்ப்பாணத்தில் தமிழ் மொழி செய்தித்தாளான தினக்குரல் பத்திரிகையின் கட்டுக்களை பறித்து அவற்றுக்கு தீ வைத்தனர். பிப்ரவரி 15ம் திகதி, சண்டே லீடர் பத்திரிகையாளரான பஃராஸ் சௌகட்டலி என்பவர் கொழும்பு அருகே கல்கிஸ்ஸையில் அவரது இல்லத்தில் வைத்துச் சுடப்பட்டார்.

மார்ச் 8 அன்று, யாழ்ப்பாணம் சார்ந்த வலம்புரி பத்திரிகையின் நிருபர் உதயராசா சாளின் தாக்கப்பட்டார். இலங்கை தற்போது பத்திரிகை சுதந்திர பட்டியலில் 179 நாடுகளில் இருந்து 162 ஆவது இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத போதிலும், இராஜபக்ஷ வட மாகாணத்தில் மாகாண சபை தேர்தல்கள் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவித்தார். அரசாங்கம் தேர்தலில் வெற்றி பெற அல்லது குறைந்தபட்சம் ஒரு கணிசமான எண்ணிக்கையிலான இடங்களைப் பெற உறுதிபூண்டுள்ளது. உதயன் மீதான தாக்குதல், தமது எதிரிகளுக்கு எதிராக பயன்படுத்தப்படவுள்ள வழிமுறைகள் பற்றிய ஒரு அறிகுறியாகும்.

தமிழர்கள் மத்தியில் ஆதரவு இருப்பதாகக் காட்டவும் மற்றும் அதன் போர் குற்றங்கள் தொடர்பான சர்வதேச விமர்சனங்களை திசை திருப்பவும் அரசாங்கம் தேர்தலில் ஒரு வலுவான வாக்கு வெற்றியை எதிர்பார்க்கின்றது. அமெரிக்க மற்றும் அதன் நட்பு நாடுகள் இந்த விவகாரங்களை சுரண்டிக்கொள்வது இலங்கையில் ஜனநாயக உரிமைகளை ஆதரிப்பதனால் அல்ல, மாறாக, இராஜபக்ஷவுக்கு அழுத்தம் கொடுக்கவும் மற்றும் கொழும்பில் தங்கள் செல்வாக்கை அதிகரிக்கவும் மட்டுமே.

கூட்டமைப்பு, வடக்கில் அரசாங்கத்தின் பிரதான போட்டி முதலாளித்துவ கட்சியாகும். இது தமிழ் முதலாளித்துவத்தின் சிறப்புரிமைகளை தக்க வைத்துக்கொள்வதற்காக, மாகாண மட்டத்தில் அதிகாரங்களை பகிர்வதுடன் சம்பந்தப்பட்ட, ஒரு அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்குக்காக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க மனித உரிமை மீறல்களை பயன்படுத்தி வருகிறது.

கூட்டமைப்பு 2010 பொதுத் தேர்தலில் உயர்ந்த மட்டத்தில் வாக்குகளைப் பெற்றிருந்தாலும், அதைத் தொடர்ந்து நடந்த உள்ளூர் ஆட்சித் தேர்தல்களில் வடக்கில் வாக்களிப்பு மிகக் குறைந்த விகிதத்திலேயே இருந்தது. பெரும்பான்மையான மக்கள் வாக்களிப்பதை தவிர்த்துக்கொண்டனர். இந்த கட்சி கொழும்பு அரசாங்கத்துடன் பிற்போக்கு சூழ்ச்சி நடவடிக்கையில் ஈடுபடுவதால் சாதாரண தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக செல்வாக்கிழந்து வருகின்றது.

கூட்டமைப்பு தனது தேர்தல் வாய்ப்புக்கள் அதிகரிக்கும் முயற்சியில் பிரச்சாரம் தொடங்கியது. ஏப்ரல் 3 அன்று, குண்டர்கள் குழுவொன்று கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டமைப்பு கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்தியது. கட்சியின் தேசிய செயற்பாட்டாளர்கள் குண்டர்கள் மத்தியில் இருந்த ஒரு பொலிஸ் உளவாளியை பிடித்து பொலிசில் ஒப்படைத்தனர். ஆனால் அவர் சாதாரணமாக விடுதலை பெற்று சென்றார்.

ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்புச் செயலருமான கோட்டாபய ராஜபக்ஷ, அரசாங்கம் வடக்கு மாகாணத்தில் கூட்டமைப்பின் நிர்வாகத்தினை விரும்பவில்லை என்பதை உறுதியாக கூறியுள்ளார். மார்ச் 29, ஐலண்ட் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், "தேசிய தலைமையை நோக்கி துப்பாக்கியை நீட்டியவர்களின் கீழ் இங்கே ஒரு மாகாண நிர்வாகம் அமைவதை நாம் அனுமதிக்க முடியுமா? சதி செய்யும் மாகாண நிர்வாகங்களின் தயவில் நாம் இருக்க வேண்டியதில்லை. "

அச்சுறுத்தல் தெளிவாக உள்ளதுடன், அது வடக்கிற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. அரசாங்கம் எந்தவொரு எதிர்ப்பையும் பொறுத்துக்கொள்ளப் போவதில்லை. அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆழமாகும் நிலையில், ஒரு சமூக வெடிப்பு ஏற்படுவதற்காகன வாய்ப்பு அதிகரித்து வருகின்றது. இந்த நிலையிலேயே, இராஜபக்ஷ அரசாங்கம் ஒவ்வொரு அடிப்படை ஜனநாயக உரிமையையும் அழிக்க யுத்தத்தின்போது கட்டியெழுப்பப்பட்ட பொலிஸ்-அரச இயந்திரத்தை பயன்படுத்தி வருகின்றது.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள், ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க எதிர் கட்சிகள் மீது எந்த நம்பிக்கையும் வைக்க முடியாது. அனைத்து பிரதான முதலாளித்துவ கட்சிகளும் தங்கள் எதிரிகள் மீது வன்முறையை மேற்கொள்வதில் சாதனை படைத்துள்ளன. ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டம் சோசலிசத்திற்கான அரசியல் போராட்டத்துடன் நெருக்கமாக பிணைந்துள்ளது.

தெற்காசியாவிலும் உலகம் பூராவும் சோசலிச புரட்சியின் ஒரு பகுதியாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்கான போராட்டத்திற்கு சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்கள் ஐக்கியப்படுவதோடு, கிராமப்புற ஏழைகளுடன் அணிதிரள வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சி இந்த முன்னோக்குக்கே போராடுகின்றது.