சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan correspondent explains why refugees are fleeing to Australia

அகதிகள் அவுஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்வது ஏன் என்பதை இலங்கை நிருபர் விளக்குகின்றார்

By Mike Head
12 April 2013

use this version to print | Send feedback

அவுஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்லும் வறிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை, 2009ல் நாட்டின் இனவாத யுத்தம் முடிவடைந்ததில் இருந்து அதிகரிப்பதற்கு காரணமான, இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகள் பற்றி, உலக சோசலிச வலைத் தள இலங்கை நிருபரான எஸ். ஜயந்துடன் உலக சோசலிச வலைத் தளம் (WSWS) உரையாடியது. இந்த யுத்தத்தின் இறுதி மாதங்களில், ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டனர். இந்த நேர்காணல், அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் இலங்கைக்கு கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டவர்களின் மோசமான நிலைமையையும் வெளிக் கொணர்கின்றது.

WSWS: 2009ல் யுத்தம் முடிவுக்கு வந்ததில் இருந்து, எத்தனை இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்றிருக்கிறார்கள்? எத்தனை பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள்?

ஜயந்: மக்கள் இலங்கையில் இருந்தும் மற்றும் பல வருடங்களாக அகதிகளாக வாழ்ந்து வரும் தென் இந்தியாவில் இருந்தும் கூடுதலாக அவுஸ்திரேலியாவுக்கு சென்று கொண்டிருக்கின்றார்கள். கடந்த வருடத்தில் அவுஸ்திரேலியப் புள்ளிவிபரங்களின்படி 6,428 பேர், அவுஸ்திரேலியாவுக்கு வந்திருக்கிறார்கள், அவர்களில் 943 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள். அது 2011 இல் இருந்து பாரிய அதிகரிப்பாகும், அப்போது 211 பேர் மட்டுமே படகில் வந்திருந்தார்கள். 2009ல் கொடூர யுத்தம் முடிவுக்கு வந்த இறுதி மாதத்தில் கூட, 736 பேர் மட்டுமே அவுஸ்திரேலியாவில் புகலிடம் நாடியிருந்தார்கள்.

WSWS: யார் அந்த அகதிகள்? தமிழர்களைப் போல் அவர்களில் இப்போது சிங்களவர்களும் அடங்குவதாகத் தெரிகிறதே?

ஜயந்: அவர்களில் கூடுதலானவர்கள் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கினைச் சேர்ந்த தமிழர்கள், ஆனாலும் பிரதானமாக வடக்கின் மீன்பிடிக் கிராமங்களில் உள்ள வறிய முஸ்லீம்கள் மற்றும் சிங்களவர்களும் இதில் அடங்குகின்றனர்.

WSWS: ஏன் அவர்கள் தப்பிச் செல்கிறார்கள்?

ஜயந்: அதற்கு பொருளாதார நெருக்கடியும் இலங்கை அரசாங்கம் மற்றும் இராணுவத்தினதும் அடக்குமுறைகளுமே காரணமாகும். அவர்களால் தங்களுடைய பிள்ளைகளுக்கான ஒரு சிறந்த வாழ்க்கையை உருவாக்க முடியவில்லை. பிரச்சினைகள் இல்லாமல் இருந்திருக்குமானால், அவர்கள் தங்களின் உயிர்களைப் பணயம் வைத்து படகில் பயணத்தினை ஆரம்பித்திருக்கமாட்டார்கள். கடந்த வருடம் அரசாங்கத்தினால் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதற்கு எதிராக, மீனவ கிராமங்களில் எதிர்ப்புக்கள் உருவாகியிருந்தன. இந்த விலை அதிகரிப்பு மீன்பிடியை நம்பி வாழ்பவர்களுக்கு மிகப் பெரும் சிரமத்தினை உருவாக்கியுள்ளது.

WSWS: சிலாபத்தில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது ஒரு மீனவர் பொலிசாரினால் சுட்டுக் கொல்லப்பட்டார். அகதிகளின் எண்ணிக்கை இதன் பின்னர் அதிகரித்துள்ளதா?

ஜயந்: ஆம், இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2009ல் இருந்தே இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஏனெனில், யுத்தத்தின் முடிவு, ராஜபக்ஸ உறுதியளித்தது போல் சமாதானத்தினையும் அபிவிருத்தியையும் கொண்டுவரவில்லை. அவுஸ்திரேலியா தொலைக்காட்சி சேவை ஒன்றில்டுடே ருநைட்என்ற நிகழ்ச்சியின் செய்தியாளர், யுத்தம் முடிவடைந்து விட்டதால் அங்கே ஒரு பிரச்சினையும் இல்லை என்றார். ஆனால் உண்மையில் நிலமைகள் முற்றிலும் நேரெதிரானவை.

இலங்கைக்கான தனது கடனை வழங்குவதற்காக, சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கையை நிறைவேற்றும் பொருட்டு, அரசாங்கத்தினால், கல்வி மற்றும் சுகாதாரம் உட்பட சமூக செலவினங்கள் வெட்டப்படுவதோடு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வானளாவ அதிகரித்துள்ளன. தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்களும் வாழ்க்கை நிலமைகளின் சீரழிவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்களில் இறங்குகின்றனர். இத்தகைய எதிர்ப்புக்களை நசுக்குவதற்காக, அரசாங்கம் தீவு பூராகவும் பொலிஸ்-அரச வழிமுறைகளை விஸ்தரித்துள்ளது. கடந்த வருடத்தில், எதிர்ப்பில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களின் மீது பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகம் செய்தது.

WSWS: வடக்கில் வாழ்க்கை நிலைமை எவ்வாறு இருக்கின்றது?

ஜயந்: விசேடமாக வடக்கில், யுத்தம் முடிந்துவிட்டது. ஆனால் மக்களுக்கு வாழ்வாதாரம் கிடையாது. யுத்தத்துக்குப் பின்னர் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழர்கள் வேறு பிரதேசங்களில் கொண்டு கொட்டப்பட்டுள்ளார்கள். அவர்களின் நிலங்களில் கூடுதலானவை இராணுவ ஆக்கிரமிப்பில் இருக்கின்றன. மக்கள் எந்தவிதமான அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் மீள் குடியேற்றப்பட்டுள்ளார்கள். பலர் இன்னமும் முகாம்களிலும் மற்றும் உறவினர் வீடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

யுத்தத்துக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆயிரக் கணக்கான இளைஞர்கள், “புனர்வாழ்வுஎன்று சொல்லப்படுவது முடிந்த பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு எந்தவிதமான தொழிலும் இல்லாததோடு இன்னமும் புலானாய்வாளர்களின் கண்காணிப்பின் கீழ் உள்ளனர். நூற்றுக் கணக்கானவர்கள் மக்கள் இன்னமும் அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களில் அநேகமானவர்களுக்கு குற்றச் சாட்டுக்களோ வழக்கு விசாரணைகளோ இல்லை. வன்முறைகள், படுகொலைகள், காணாமல்போதல் மற்றும் கொள்ளைகள் வடக்கு மற்றும் கிழக்கில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

WSWS: நீங்கள் நிலைமைகளைப் பற்றி செய்தி சேகரிக்க ஜனவரியில் மீனவர் கிராமம் ஒன்றுக்கு சென்றிருந்தீர்கள். நீங்கள் என்ன கண்டீர்கள் என்பதை விளக்க முடியுமா? 


உடப்புவில் உள்ள ஒரு குடிசை வீடு

ஜயந்: நாங்கள், வடமேல் மாகாணத்தில் கரையோரத்தில் ஒரு தூரக் கிராமமான உடப்புக்கு சென்றிருந்தோம். அது மகிவும் வறுமையான கிராமம். பல குடும்பங்கள் ஓலைக் குடிசையில் வாழ்கின்றன. பொருத்தமான அரசாங்க போக்குவரத்து அங்கு கிடையாது. கோயில் பஸ்கள் மட்டுமே ஒடுகின்றன. பாதையோ புழுதி பறக்கும் மண் பாதை. நூற்றுக் கணக்கான மீனவர்கள் மற்றும் இளைஞர்கள் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்டதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர். 5000 மக்கள் தொகையைக் கொண்ட கிராமத்தில், சுமார் 750 தொடக்கம் 2,000 பேர் வரை வெளியேறிவிட்டார்கள்.

மீனவர்கள் முகம் கொடுக்கும் ஒடுக்குமுறை நிலைமைகள் பற்றி ஒருவர் தெளிவுபடுத்தினார். எரிபொருள் விலையேற்றத்துக்குப் பின்னர், தனது இரண்டு சகோதரர்கள் வெளியேறிவிட்டதாக அவர் எமக்குத் தெரிவித்தார். கிராமத்தவர்களால் ஒருநாளைக்கு 50 அல்லது 100 ரூபாய் (40_80 அமெ. சதம்) மட்டுமே மீன்பிடி ஊடாக வருமானமாக ஈட்டக் கூடியதாக உள்ளது. யுத்தம் முடிவடைந்த போதிலும், கடலுக்குச் செல்லும் போது, தினமும் கடற்படையினரிடம் பாஸ் பெற வேண்டும். குறைந்தது அதிகாலை 4 மணிக்கே சோதனைச் சாவடியில் நிற்க வேண்டும்.

WSWS: எத்தகைய நிலைமைகளின் மத்தியில் அவர்கள் தப்பிச் செல்கின்றனர்?


உடப்புவிற்கு மீண்டும் திரும்பிவந்து தற்கொலை செய்து கொண்டவரின்
மனைவியும் அவரது மூன்று
 

ஜயந்: அவர்கள் கடத்தல்காரர்களுக்கு சுமார் ஒரு மில்லியன் ரூபாய் (8,000 அமெ.டொலர்) செலுத்த வேண்டும். அதில் 300,000 ரூபாய்கள் முன்னரே செலுத்த வேண்டும். அவர்களுடைய குடும்பத்தினர் நகைகள் மற்றும் காணி போன்ற பெறுமதியான சொத்துக்களை விற்றும், மற்றும் ஒரு இலட்சம் ரூபாய்க்கு மாதம் 5000 ரூபாய் வரை, உயர்ந்த வட்டிவீதத்துக்கு கடன் எடுத்தும் பணத்தினை செலுத்துகிறார்கள். ஒரு படகில் 90 பேர் வரை பயணிக்கின்றார்கள். அவர்கள் நித்திரைகொள்ளவோ நகரவோ முடியாது. உட்கார்ந்தே இருக்க வேண்டும். கடல் அலைகள் ஈரமாக்கும். உயிர்வாழ்வதற்காக ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் உணவு வழங்கப்படும். நீரிழிவு நோயினால் பீடிக்கப்பட்டிருந்த தனது மகன் படகுப் பயணத்தின் போது இறந்துவிட்டார் என்றும் அவரது உடல் கடலுக்குள் போடப்பட்டது என்றும் ஒரு தாய் எமக்கு அழுதபடி கூறினார்.

WSWS: அவுஸ்திரேலியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட அல்லது கடற்படையால் இடைமறிக்கப்பட்ட மக்களுக்கு என்ன நடக்கின்றது?

ஜயந்: நடந்ததைப் பற்றி கவலைப்படாமல் கடத்தல்காரர்கள் தங்களின் பணத்தினைப் பெற்றுக் கொள்வர். அவுஸ்திரேலியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டால், அவர்கள் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு புலனாய்வாளர்களால் விசாரணை செய்யப்படுவார்கள். கடற்படையினரால் இடைமறிக்கப்பட்டாலும் நிலைமை இதுதான். அவர்கள் பொலிசாரிடம் ஒப்படைக்கப்படுவார்கள். பொலிசார், நாட்டை விட்டு சட்டவிரோதமாக வெளியேறிதற்காக அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்வார்கள். அவர்கள் பிணையில் விடுவிக்கப்படுவார்கள். அதற்குப் பின்னர், தங்களுடைய வழக்குக்காக அவர்கள் தென் இலங்கைக்கு பயணிப்பதற்கு பணம் செலவிட வேண்டும். இன்னும் சிலர் சிறையில் இருக்கின்றார்கள்.

மக்கள் பிரமாண்டமான கடன்பட்டுத்தான் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். ஆனால் அவர்களால் அதைத் திருப்பிச் செலுத்த முடிவதில்லை. அதனாலேயே, அவுஸ்திரேலியாவில் அல்லது திருப்பி அனுப்பப்பட்டவுடன் சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். உடப்பில் நாங்கள் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரைச் சந்தித்தோம், அவரது கணவர் நாடு திரும்பித் தற்கொலை செய்து கொண்டார். இன்னொருவரின் கணவர் அவுஸ்திரேலியாவில் தற்கொலை செய்து கொண்டார்.


இந்தப் பெண்ணின் கணவர் அவுஸ்திரேலியாவில்
தற்கொலை செய்து கொண்டார்

WSWS: நீங்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சொல்லும் செய்தி என்ன?

ஜயந்: இலங்கை அகதிகள் மிகவும் ஒடுக்கப்பட்ட மக்கள். யுத்தம் முடிந்து நான்கு ஆண்டுகள் கடந்தும், அவர்கள் வடக்கு மற்றும் கிழக்கில் பொலிஸ்-அரச ஒடுக்குமுறைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். அங்கு இராணுவம் ஆக்கிரமித்திருக்கின்றது. அவர்களுக்கு எந்தவிதமான தொழில் வருமானமும் பெற்றுக் கொள்ள முடியாத காரணத்தினால், அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். அதன் பின்னர் அவர்கள் கடத்தல்காரர்களால் சுரண்டப்படுகின்றனர். ஆனால் அவர்களால் அவுஸ்திரேலியாவிலும் வாழ்வாதாரத்தை தேடிக்கொள்ள முடிவதில்லை. அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அரசாங்கங்கள் இணைந்து செயற்படுகின்றன. ஆனால் அந்த அரசாங்கங்கள் அவர்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொடுக்கத் தயாரில்லை. தொழிலாளர் வர்க்கத்தால் மட்டுமே இதற்கான பதிலை வழங்க முடியும். இது தொழிலாள வர்க்கத்துக்குப் பொறுப்பானதாகும். அவர்கள் சோசலிசத்துக்கான போராட்டத்துக்கு அவுஸ்திரேலியா, இலங்கை மற்றும் சர்வதேச ரீதியிலும் ஐக்கியப்பட வேண்டும். இலங்கையில் மட்டுமன்றி உலகம் பூராகவும் அகதிகளின் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு உள்ள ஒரே வழி இது மட்டுமே ஆகும்.