சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan government initiates bogus inquiry into students’ murder

இலங்கை அரசாங்கம் மாணவர் படுகொலை சம்பந்தமாக போலி விசாரணைகளை தொடங்கியுள்ளது

By Athiyan Silva

2 August 2013


use this version to print | Send feedback

கிழக்கு மாவட்டமான திருகோணமலையில் ஐந்து தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டு ஏழரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், கடந்த ஜூலை 4ம் திகதி, இந்த படுகொலை தொடர்பாக  இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 12 விசேட பொலிஸ் அதிரடிப் படையினர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது இலங்கையில் நடந்த யுத்தக் குற்றங்கள் சம்பந்தமாக அதிகரித்துவரும் பெரும் வல்லரசுகளின் அழுத்தங்களை சமாளிப்பதற்காக இலங்கை அரசாங்கம் எடுக்கும் போலி நடவடிக்கைகளின் பாகமாகும்.

2006 ஜனவரி 2 அன்று மாலை 7.00 மணியளவில் திருகோணமலை கடற்கரை பகுதியில் இந்த மாணவர்கள் கூடியிருந்த போது, பச்சைநிற ஆட்டோவில் வந்த இனம் தெரியாத நபர்கள் இம்மாணவர்கள் மீது கைக்குண்டு ஒன்றை வீசிவிட்டு பெரடெரிக் கோட்டைப் பக்கமாக தப்பிச்சென்றனர். இந்தக் கோட்டைப் பகுதியில் இராணுவம் நிலைகொண்டிருந்ததோடு மேலும் பல இராணுவ மற்றும் பொலிஸ் காவல் அரண்களும் சோதனைச் சாவடிகளும் இருந்தன. சில நிமிடங்களின் பின்பு அவ்விடத்திற்கு வாகனத்தில் வந்த அதிரடிப் படையினர், காயமடைந்தவர்களையும் ஏனையவர்களையும் தாக்கியதோடு ஐந்து மாணவர்களையும் முழங்காலில் நிறுத்தி மரணதண்டனை பாணியில் சுட்டுக் கொன்றனர்.

இந்த மிலேச்சத் தாக்குதலில் தங்கத்துரை சிவானந்தா, லோகிதாசன் ரொகான், சன்முகராஜா சஜீந்திரன், மனோகரன் ரஜீகர், யோகராஜா ஹேமச்சந்திரன் ஆகியோர்கள் கொல்லப்பட்டனர். பரராஜசிங்கம் கோகிலராஜ் மற்றும் யோகராஜ் பூன்குலலோன் என்போர் படுகாயமடைந்தனர். 1985ல் பிறந்த இம்மாணவர்களில் பெரும்பாலானோர் பல்கலைக் கழக அனுமதிக்காக காத்திருந்தவர்கள் ஆவர்.

சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கலந்து வாழும் திருகோணமலையில், இந்த மாணவர்களின் படுகொலைச் சம்பவமானது, இப்பகுதியில் வாழும் பரந்துபட்ட மக்கள் மற்றும் மாணவர்களிடையே பாரிய ஆத்திரத்தையும், வெறுப்பையும் தூண்டிவிட்டது. இவர்கள் பாடசாலைகளை பகிஸ்கரித்தும் வியாபார நிலையங்களை மூடியும் தமது எதிர்ப்பை பலமாக காட்டினர். ஆயிரக்கணக்கான மக்கள் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டதோடு, மரண ஊர்வலம் சென்ற வழியில் உள்ள இராணுவ சோதனைச்  சாவடிகளையும் ஆத்திரத்துடன் தாக்கினர்.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ சமாதானத்தை கொண்டுவருவதாக வாக்குறுதியளித்த போதிலும், 2005 நவம்பரில் நடந்த தேர்தலில், சிங்கள அதி தீவிரவாத கட்சிகளான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் ஆதரவுடனேயே ஆட்சிக்கு வந்தார். அதைத் தொடர்ந்து தமிழ் சிறுபான்மையினர் மீதான பாதுகாப்புப் படைகளின் மற்றும் அதனுடன் சேர்ந்து செயற்படும் துணைப்படைகளின் ஆத்திரமூட்டல்கள்,  படுகொலைகள், ஆட்கடத்தல்கள், காணாமல் ஆக்குதல் போன்ற பயங்கரங்கள் தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் முன்னெப்போதும் இல்லாத வகையில் திட்டமிட்டு கட்டவிழ்த்துவிடப்பட்டன.

மாணவர்கள் மீதான தாக்குதல், அரசாங்கத்துக்கும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்த நிறுத்தத்தை தகர்த்து, மீண்டும் இனவாத யுத்தத்தை தொடங்குவதற்காக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களில் ஒன்றாகும்.

இந்த நடவடிக்கைகளின் நோக்கம் புலிகளை எதிர்த் தாக்குதல் நடத்துவதற்கு அவர்களை நெருக்குவதாக இருந்தது. 2005 ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் அரசியல் பொறுப்பாளராக இருந்த கெளசல்யனின் கொலை செய்யப்பட்டார். அதையடுத்து புலிகளின் ஊதுகுழலாக செயற்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம், 2005 கிறிஸ்மஸ் தினத்தன்று கிழக்கு மாவட்டமான மட்டக்களப்பில் தேவாலயத்தினுள் பிரார்த்தனையில் இருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த ஆத்திரமூட்டல்களின் உச்சக்கட்டமாக 2006 நடுப் பகுதியில் திருகோணமலை மூதூர் பகுதியில் புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையில் மீண்டும் மோதல் வெடித்தது. இந்த மோதலின் முடிவில், இராணுவம் மீண்டும் கைப்பற்றியிருந்த மூதூரில் சிக்கியிருந்த, பிரான்ஸைத் தளமாகக் கொண்ட அக்ஷன் ஃபாம் தொண்டு நிறுவனத்தின் 17 ஊழியர்கள் இதே போன்று மரணதண்டனை பாணியில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட மாணவர்களை விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எனவும், இராணுவத்துடனான மோதலிலேயே இவர்கள் கொல்லப்பட்டதாகவும் காட்டுவதற்கான சோடனை முயற்சிகள் பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்டன. ஆஸ்பத்திரியில் இருந்து இம் மாணவர்களின் சடலங்களை எடுத்துச் செல்ல வேண்டுமெனில், அவர்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்று எழுதித் தரவேண்டும் என மாணவர்களின் பெற்றோர்களும் போலிசாரினால் மிரட்டப்பட்டனர்.

அடுத்து வந்த காலங்களில் இந்த சம்பவத்தின் சாட்சிகளை இல்லாதொழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அச்சுறுத்தலை எதிர்கொண்ட, இச் சம்பவத்தில் காயமடைந்த இரு மாணவர்களும்  நாட்டைவிட்டு வெளியேறத் தள்ளப்பட்டனர்.  இந்த மரணதண்டனை பாணியிலான படுகொலைகளுக்கு ஆதரபூர்வமாக படங்களை எடுத்த சுடரொளி பத்திரிகையின் செய்தியாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் அதே மாதக் கடைசியல் கொல்லப்பட்டார். மாணவர்கள் மீது குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்ற முச்சக்கர வண்டியை கண்ட, இன்னொரு முச்சக்கர வண்டி சாரதியான பாலச்சந்திரன் 2006 ஆகஸ்ட் மாதம் கொல்லப்பட்டார்.

அத்தோடு, கொல்லப்பட்ட மாணவன் யோகராஜா ஹேமச்சந்திரனின் மூத்த சகோதரர் யோகராஜா கோடீஸ்வரன், மூதூரில் கொல்லப்பட்ட தொண்டு நிறுவன ஊழியர்களில் ஒருவராவார். இவர்களின் அன்புக்குரிய தந்தை பொன்னுத்துரை யோகராஜா மற்றும், இன்னொரு மாணவரான ரஜீகரின் தந்தையும் மருத்துவருமான காசிப்பிள்ளை மனோகரனும் தற்போது வெளிநாட்டில் உயிர் பாதுகாப்புக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மாணவன் தங்கத்துரை சிவானந்தாவின் உறவினரும் வழக்கறிஞருமான சுபாஷினி சித்திரவேலு உட்பட மிகுதியானவர்கள் மெளனிகளாக்கப்பட்டனர்.

அதே நேரம், யாழ்-மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பினால், இக்கொலைகளுக்கு முக்கிய சூத்தரதாரியாக கருதப்பட்ட அதிரடிப்படையின் அதிகாரியான பொலிஸ் அத்தியட்சகர் கபில ஜெயசேகர, உப பொலிஸ் மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டு இப்போது கிளிநொச்சி மாவட்டத்தில் சேவையில் ஈடுபட்டுள்ளார். இதே போல், போர்க் குற்றங்களுக்கு உடந்தையானவர்களாக கருதப்பட்ட இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரிகள் இப்போது ஐக்கிய நாடுகள் சபைக்கும், வெளிநாடுகளுக்கும் தூதர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இந்த இரு படுகொலை சம்பவங்கள் தொடர்பாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வளர்ச்சிகண்டுவந்த விமர்சனங்களை அமைதிப்படுத்தும் நோக்கோடு, ஜனாதிபதி இராஜபக்ஷ 2006ல் இந்த சம்பவங்களை விசாரிப்பதற்காக நீதிபதி நிசங்க உடலாகம தலைமையில் ஒரு ஆணைக் குழுவை நியமித்தார். ஏனைய ஆணைக் குழு அறிக்கைகளைப் போலவே, இந்தக் குழுவின் அறிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட குற்றங்களுக்கும், யுத்தத்துக்கு முன்னர் செய்யப்பட்ட இத்தகைய ஆத்திரமூட்டல் படுகொலைகளுக்கும் அரசாங்கமே பொறுப்பாளியாகும்.

ஏழரை ஆண்டுகள் கழித்து, இராஜபக்ஷ அரசாங்கம் இந்த படுகொலைகளுக்கு பலிகடாக்களைத் தேடுவது, கொலையுண்டவர்கள் மீதான எந்தவொரு அனுதாபத்தினாலும் அல்ல என்பது தெளிவானதாகும். வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களதும், ஏனைய பகுதிகளில் உள்ள சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாள-ஒடுக்கப்பட்ட மக்களதும் கண்களில் மண் தூவும் இந்த நடவடிக்கை, பிற்போக்கு அரசியல் சூழ்ச்சித் திட்டங்களை உள்ளடக்கியதாகும்.

இராஜபக்ஷவின் அரசாங்கம், 2009 மே மாதம் முடிவுக்கு வந்த உள்நாட்டு யுத்தத்தின் கடைசி நாட்களில் அரசாங்கப் படைகளால் இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளக் கோரும், பெரும் வல்லரசுகளின் அழுத்தங்களை எதிர்கொண்டுள்ள நிலையிலேயே, இவ்வாறு அதிரடிப்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக கடந்த மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் (யு.என்.எச்.ஆர்.சி.) இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதோடு, அரசாங்கம் அதன் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (எல்.எல்.ஆர்.சி.) பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் என அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது. இராஜபக்ஷ இத்தகைய சர்வதேச அழுத்தங்களை தணிப்பதற்காகவே இந்த நல்லிணக்க ஆணைக்குழுவை 2010ல் நியமித்தார்.

தீர்மானத்தின் பரிந்துரைகளை அரசாங்கம் அமுல்படுத்துவதை மேற்பார்வை செய்து, அடுத்த கூட்டத்தொடருக்கு அறிக்கை சமர்பிப்பதற்காக, இம்மாதம் யூ.என்.எச்.ஆர்.சி. செயலாளர் நவநீதம்பிள்ளையின் வருகையை எதிர்கொண்டுள்ள நிலையிலேயே இராஜபக்ஷ முகத்தைக் காத்துக்கொள்வதற்காக இத்தகைய அடித்தள தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளார்.

யுத்தத்தில் நாசமாக்கப்பட்ட வடக்கில் செப்டெம்பர் 21 அன்று மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் என்பன, இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள வடக்கில் ஜனநாயகத்தை ஸ்தாபித்துள்ளதாக செய்யும் பாசாங்குகளின் பாகமே ஆகும். தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெறுவதன் ஊடாக தமிழ் மக்கள் தமது வேலைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக காட்டிக்கொள்ளும் அவநம்பிக்கையான முயற்சியில் ஈடுபட்டுள்ள இராஜபக்ஷ அரசாங்கம்,  இப்போது நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு மேலும் 51 அம்சத் திட்டங்களை உள்ளடக்கவுள்ளதாகவும், காணாமல் போனவர்கள் பற்றி விசாரிக்க இன்னொரு ஆணைக்குழுவை நியமிக்கவுள்ளதாகவும் கூறுகின்றது.

மேலும், யுத்தத்தின் முடிவின் பின்னர், இலங்கையை ஆசியாவின் அதிசயமாக்கும்முயற்சியில் ஈடுபட்டுள்ள அரசாங்கம், முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்த பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது.

இராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது அமெரிக்கா, ஐரோப்பிய ஓன்றியம் மற்றும் ஜப்பான் போன்ற ஏகாதிபத்திய சக்திகளும் மற்றும் பிராந்திய சக்தியான இந்தியாவும் அழுத்தம் கொடுப்பது, யுத்தத்தில் தமது உறவினர்களையும், வீடுவாசல் சொத்துக்களையும் இழந்த தமிழ் மக்கள் மீதான எந்தவொரு அக்கறையினாலும் அல்ல. மாறாக இராஜபக்ஷவை சீனாவிடம் இருந்து தூர விலகச் செய்வதற்கான அழுத்தங்களே ஆகும்.

உண்மையில் இத்தகைய சக்திகளின் நிதி, இராணுவ மற்றும் போர்த் தளபாட மற்றும் இராஜதந்திர உதவிகளுடனேயே, இராஜபக்ஷ இனவாத யுத்தத்தை மீண்டும் தொடங்கி, பல பத்தாயிரக்கணக்கான உயிர்ப் பலியுடன் அதனை முடிவுக்கு கொண்டு வந்தார். திருகோணமலை மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டு ஒரு வாரத்தின் பின்னர் கருத்துத் தெரிவித்த அப்போதைய அமெரிக்கத் தூதுவர் ஜெப்ரி லன்ஸ்டட், புலிகள் சமாதானத்தை கைவிட முடிவு செய்வார்களானால், அவர்கள் ஒரு வலுவான, மிக வல்லமையுள்ள, அதிக உறுதி கொண்ட இலங்கை இராணுவத்தை எதிர்கொள்வர்’’ எனக் கூறி, அரசாங்கத்துக்கு அமெரிக்காவின் ஆதரவை சமிக்ஞை செய்தார். அதே சமயம், "தமிழ் புலிகளின் ஆத்திரமூட்டல்களைக் கண்டு பொறுமை காப்பதற்காகஇலங்கை அரசாங்கத்தை புகழ்ந்த அப்போதைய அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் கொண்டோலீஸா ரைஸ், "பயங்கரவாதத்தை தோற்கடிக்கவும் சமாதானத்தை முன்னெடுக்கவும்" இலங்கையுடன் செயற்பட அமெரிக்கா விருப்பங்கொண்டுள்ளது" எனவும் பிரகடனம் செய்தார்.

அப்போது முதல், யுத்தத்தின் முடிவு வரை மௌனமாக இருந்த மேற்கத்தைய சக்திகள், யுத்தத்தின் கடைசி மாதங்களில், கொழும்பு அரசாங்கத்தின் யுத்தத்துக்கு ஒத்துழைப்பு கொடுத்த சீனா கொழும்பில் தனது செல்வாக்கை பலப்படுத்திக்கொள்வதை கண்ட பின்னரே, யுத்தக் குற்றங்கள் பற்றி முனுமுனுக்கத் தொடங்கின.

தமது பூகோள மற்றும் அரசியல் மூலோபாய நலன்களுக்காக மனித உரிமை பிரச்சினைகளை கையில் எடுத்துக்கொள்ளும் ஏகாதிபத்திய சக்திகள், இன்று அமெரிக்கா தலைமையில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்துள்ளதுடன், எண்ணெய் மற்றும் எரிசக்தி வளங்கள் மிக்க நாடுகளை கைப்பற்றும் இலக்குடன் சிரியா, ஈரான் போன்ற நாடுகளின் மீது இத்தகைய ஆத்திரமூட்டல் தாக்குதல்களையும் படுகொலைகளையும் முன்னெடுத்து வருவதோடு, ஒபாமா நிர்வாகம் இன்று உள்நாட்டில் ஜனநாயக உரிமைகளை அப்பட்டமாக மீறி வருகின்றது.

இந்த நிலையிலேயே தமிழ் முதலாளித்துவத் தட்டை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஏனைய கட்சிகளும் இதே ஏகாதிபத்திய சக்திகளிடம் இலங்கையில் யுத்தக் குற்றங்ளைப் பற்றி விசாரிக்க நடவடிக்கை எடுக்குமாறு அழைப்பு விடுக்கின்றன. தமிழ் முதலாளித்துவத்தின் சிறப்புரிமைகளை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, கொழும்பு அரசாங்கத்துடனான ஒரு அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்கை ஸ்தாபித்துக்கொள்வதற்காக ஏகாதிபத்திய சக்திகளின் உதவியை நாடுகின்றது. 

ஏகாதிபத்திய சக்திகளுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமோ அல்லது ஏதாவதொரு முதலாளித்துவ கட்சியிலும் நம்பிக்கை வைப்பதன் மூலமோ படுகொலைகளுக்கான அல்லது யுத்தக் குற்றங்களுக்கான நியாயமான விசாரணையையோ நியாயத்தையோ பெற்றுக்கொள்ள முடியாது என்பதே இதில் இருந்து தெளிவாகின்றது.