சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

Former South African President Nelson Mandela dies

முன்னாள் தென் ஆபிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலா காலமானார்

By Patrick O’Connor 
6 December 2013

Use this version to printSend feedback

ஆபிரிக்க தேசிய காங்கிரசின் (ANC), நீண்டகாலத் தலைவரும், நிறவெறி ஆட்சிக்கு பிந்தைய தென் ஆபிரிக்காவின் முதல் ஜனாதிபதியுமான நெல்சன் மண்டேலா நீடித்த சுவாச நோயால் பாதிக்கப்பட்ட பின்னர், டிசம்பர் 5ம் திகதி ஜோகன்ஸ்பேர்க்கில் 95 வயதில் காலமானார்.

மண்டேலாவின் இறப்புடன் இணைந்து உலகத் தலைவர்களிடம் இருந்து அஞ்சலிகள் குவிந்துள்ளன; ஒவ்வொன்றும் மற்றதை விட மிக மடத்தனமான அருவருப்பு கொள்கின்ற வெளிப்பாட்டை அளிப்பதில், அவரை ஒரு மதச்சார்பற்ற துறவி எனக் காட்டுவதில் முன்னிற்கின்றன. அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, முன்னாள் ஆபிரிக்க தேசியக் காங்கிரசின் தலைவரை “எம்மில் எவரும் இந்த பூமியில் நம் நேரத்தைப் பகிர்ந்து கொள்ளும் மிகச் செல்வாக்கான, தைரியமான, ஆழ்ந்த மனிதர்களில் ஒருவர்” என்று கூறியுள்ளார். அவருக்கு முந்தைய ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ் மண்டேலாவை “நம் காலத்தில் சுதந்திரம் மற்றும் சமத்துவத்திற்கான மிகப் பெரிய சக்திகளில் ஒருவர்” என்று விவரித்துள்ளார்.

வெள்ளை மாளிகையை ஆக்கிரமிக்கும் தற்போதைய, ஆக்கிரமித்த முந்தைய போர்க் குற்றவாளிகளின் இழிந்த வனப்புரையின் பின், மற்றும் உலகெங்கிலும் இருக்கும் அவர்களுடைய நட்பு நாட்டுத் தலைவர்களின் வனப்புரைகளின் பின்னே, தென் ஆபிரிக்க ஆளும் உயரடுக்கு மற்றும் உலக ஏகாதிபத்தியத்திற்கு விலைமதிப்பற்ற சேவையை மண்டேலா அளித்ததற்கு உண்மையான நன்றியறிதல் உள்ளது.  தன்னுடைய சந்தேகத்திற்கு இடமற்ற  திறமைகளையும் சொந்த தைரியத்தையும் மண்டேலா பயன்படுத்தி தென்னாபிரிக்காவில் ஒரு சமூகப் புரட்சி அச்சுறுத்தலை தவிர்த்தார்; இனப்பாகுபாடு ஆட்சியை அகற்றினார், ஆனால் முதலாளித்துவத்திற்கு பாதுகாப்பு கொடுத்து நாட்டின் வெள்ளை ஆட்சியாளர்களின் சொத்துக்களையும் காப்பாற்றினார், நாடுகடந்த நிறுவன முதலீட்டாளர்களின் நிதியையும் பாதுகாத்தார்.

ரோலிஹ்லஹ்லா மண்டேலா ஜூலை 18, 1918ல் தென்னாபிரிக்கா பிரித்தானிய ஆட்சியில் இருக்கையில் கேப் மாநிலத்தில் பிறந்தார். முக்கிய ஹோஷா குடும்பத்தில் பிறந்த மண்டேலாவிற்கு பிரிட்டிஷ் மெத்தடிஸ்ட் மிஷினரிகள் நடத்திய பள்ளியில் அவர் முதலில் சேர்ந்திருந்தபோது நெல்சன் என்ற பெயர் அளிக்கப்பட்டது. 1939ல் அவர் Fort Hare பல்கைலக்கழகத்திற்கு செல்ல தொடங்கியபோது அங்கு அவர் வருங்கால ANC தலைவர் ஒலிவர் டாம்போவை சந்தித்தார்.

ஜோகன்ஸ்பேர்க்கிற்கு நகர்ந்தபின், நிறவெறி ஆட்சியால் வழங்கப்பட்ட தேவையான அனுமதி இன்றி, மண்டேலா சட்டவிரோதமாக ஒரு இரவுக் காவல்காரராக ஒரு சுரங்க நிறுவனத்தில் வேலை செய்தார்; பின் அவர் ANC தலைவர் வால்டர் சிசுலுவைச் சந்தித்தார்; பின்னர் அவர் மண்டேலாவிற்கு ஒரு வெள்ளையர் சட்ட நிறுவனத்தில் எழுத்தர் வேலை வாங்கிக் கொடுத்தார். மண்டேலா பகுதி நேரமாக படித்து தன் சட்டப் படிப்பை Witwatersrand பல்கலைக்கழகத்தில் முடித்தார்; சிறப்பு வகுப்புக்களில் கறுப்பர்களை ஏற்ற நான்கு பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்றாகும்.

1943ல் ANC வில் மண்டேலா சேர்ந்தார். மறு ஆண்டு ANC  உடைய இளைஞர் பிரிவை நிறுவியவர்களில் ஒருவராவார். 1950 ல் இருந்து அவர் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் தேசிய நிறைவேற்று குழு உறுப்பினரானார். அவருடைய அரசியல் வாழ்வின் ஆரம்பத்தில் இருந்தே மண்டேலா மார்க்சிசத்திற்கு விரோதப் போக்கையும், இனப் பாகுபாடு அரசாங்கம் மற்றும் அது பாதுகாக்கும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை ஒரு புரட்சிகரப் போராட்டத்திற்கு அணிதிரட்டும் முன்னோக்கிற்கும் விரோதப்போக்கை காட்டினார்.

1950 ஆம் ஆண்டில், அவர் ஜோகன்னஸ்பேர்க் பாட்டாளி வர்க்கத்தின் பொது வேலைநிறுத்த ஏற்பாட்டிற்கும், மே தினத்தை நினைவு கூர்வதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி (CP) ஏற்பாடு செய்த கூட்டங்களை கலைக்க உடல்ரீதியான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். ஆனால் வெற்றிகரமான வெகுஜன வேலைநிறுத்தம் வளர்ந்து வரும் நகர்ப்புறத் தொழிலளா வர்க்கத்தின் மகத்தான சமூக சக்தியை நிரூபித்தது; இந்நிநகழ்வு மண்டேலா மீது ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. பின்னர் இவர் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொண்டார்.

தென்னாபிரிக்க ஸ்ராலினிஸ்ட்டுக்கள், சர்வதேச அளவில் அவர்களுடைய சக கட்சியினரைப்போலவே, “இரண்டு கட்ட” தத்துவத்தை முன்வைத்தனர்; இதன்படி காலனித்துவ மற்றும் அரை காலனித்துவ நாடுகள் முதலில் “ஜனநாயக” முதலாளித்துவ வளர்ச்சிக் காலத்தை கடக்க வேண்டும், தேசிய முதலாளித்துவத்தின் முற்போக்கான அடுக்குகள் என அழைக்கப்படுவோரின் தலைமையில்; சோசலிசத்திற்கான போராட்டம் காலவரையற்ற எதிர்காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. “இரண்டு கட்ட” தத்துவம் முதலில், லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் இடது எதிர்ப்பாளர்கள் பாதுகாத்த சர்வதேச மார்க்சிச முன்னோக்கின் மீது நடத்திய எதிர்ப்புரட்சிகர அதிகாரத்துவ தாக்குதலின் ஒரு பாகமாக சோவியத் ஒன்றியத்தில் ஜோசப் ஸ்ராலினால் முன்னெடுக்கப்பட்டது.

நிரந்தரப் புரட்சி தத்துவத்தை முன்னெடுத்த, ட்ரொட்ஸ்கி மற்றும் அவர் 1938ல் நிறுவ உதவிய நான்காம் அகிலமும், காலனித்துவ மற்றும் ஒடுக்கப்பட்ட நாடுகளில் உள்ள தொழிலாள வர்க்கத்தின், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அதிகாரத்திற்கான போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலந்தான், உண்மையான தேசிய சுதந்திரம் மற்றும் தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்த முடியும் என்று விளக்குகிறது. இப்புரட்சி, தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றியபின் நிரந்தர இருக்கும், தன்னை ஜனநாயகப் பணிகளுடன் நிறுத்திக் கொள்ள முடியாது, சோசலிசத் தன்மை உடைய நடவடிக்கைகளைச் செயல்படுத்தும் கட்டாயத்திற்கு உட்படும், அதே நேரத்தில் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் உள்ள தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்பி உலக சோசலிசப் புரட்சிக்கான ஐக்கியப்பட்ட போராட்டத்திற்கு முன்தள்ளும்.

1948ல் தென்னாபிரிக்க ட்ரொட்ஸ்கிசவாதியான ஐசக் டாபட்டாவை சந்தித்த வகையில் மண்டேலா நான்காம் அகிலத்தின் முன்னோக்கு பற்றி நன்கு தெரிந்திருந்தார். (“அவருடைய வாதங்களைப் பின்பற்றுவது எனக்குக் கடினமாக இருந்தது” என்று மண்டேலா பின்னர் அவருடைய அங்கீகாரம் பெற்ற வாழ்க்கை நூலை எழுதிய அன்டனி சாம்சனிடம் கூறினார். “அவருடன் நான் தொடர்ந்து வாதிட விரும்பவில்லை, ஏனெனில் அவர் என் கருத்துக்களை அப்படியே நசுக்கிவிட்டார்.”)

ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர், தென்னாபிரிக்க தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ தேசிய முன்னோக்கிற்கு அடிபணியச்செய்வதற்கு ஒரு வழிவகையாக ஸ்ராலினிஸ்ட்டுக்களை பயன்படுத்தினார். 1956ல் ஏற்கப்பட்ட ANC உடைய சுதந்திர சாசனம், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ரஸ்டி பேர்ன்ஸ்டைனால் எழுதப்பட்டது. அதே ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், சாசனம் “ஒரு சோசலிச அரசிற்கு வரைந்த திட்டம் அல்ல” என மண்டேலா விளக்கினார்.

ஆவணம், வங்கிகள், தங்க சுரங்கங்கள் மற்றும் நிலம் தேசியமயமாக்க அழைப்பு விடுத்தபோதிலும், இந்த நடவடிக்கைகள் முதலாளித்துவ தன்மையில் இருக்கும் என்று மண்டேலா தொடர்ந்தார். “இந்த ஏகபோக உரிமைகளை உடைத்து ஜனநாயகத்தன்மையானதாக ஆக்குதல், ஐரோப்பியரல்லாத முதலாளித்துவ வர்க்கத்தின் செழிப்பான வளர்ச்சிக்கு புதிய பகுதிகளை திறக்கும். இந்நாட்டில் முதல் தடவையாக ஐரோப்பியரல்லாத முதலாளித்துவம் தன் சொந்தப் பெயரில் ஆலைகளை நடத்தும் வாய்ப்பு பெறும், தொழிற்சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களும் செழிக்கும், எப்பொழுதும் போல் இல்லாமல் சிறக்கும்.”

இந்த “கறுப்பு முதலாளித்துவ” தென்னாபிரிக்க முன்னோக்கு மண்டேலாவின் அரசியல் வாழ்வின் மையத்தானத்தில் இருந்தது; அவரின் அனைத்து ஏற்றத்தாழ்வுகளின் மத்தியிலும் அடுத்த ஐந்து தசாப்தங்களில் அது ஆதிக்கம்செலுத்தியது.

1961ம் ஆண்டு மண்டேலா நிறவெறி ஆட்சி இவருக்கு எதிராக முன்வைத்த தேசத்துரோகக் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக தானே வாதிட்டார்; ஆறு ஆண்டுகள் வழக்கு விசாரணைக்குப்பின் விடுவிக்கப்பட்டார். ஆனால், விரைவில், மண்டேலா ஆறு மாதகால வெளிநாட்டுப் பயணத்திற்குப் பின் திரும்பினார்; பயணத்தின்போது அவர் சர்வதேச ஆதரவிற்கு அழைப்பு விடுத்தார்; அமெரிக்க மத்திய உளவுத்துறை அதன் தென்னாபிரிக்க சகாக்களுக்கு தகவல் கொடுத்தபின், மீண்டும் கைது செய்யப்பட்டார். அவரும் அவருடன் இணையாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களும் சிறையில் அடைக்கப்பட்டு இறுதியில் Sabotage Act, Suppression of Communism Act இன் கீழ் 200க்கும் மேற்பட்ட நாசவேலைகளில் உடந்தை, கெரிலாப் போருக்கு, வன்முறைப் புரட்சி மற்றும் ஆயுதமேந்திய படையெடுப்பிற்கு உதவுகின்றனர் என விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அதே நேரத்தில் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்ற குற்றச்சாட்டுக்களை நிராகரித்த மண்டேலா, ஓர் உரையின் மூலம், தன்னுடைய எடுப்புத் தோற்றத்தை ANC க்குள் இன்னும் உயர்த்திக் கொண்டார். அதில் அவர் தேவையானால் இனப்பாகுபாட்டை அழிப்பதற்கு உயிரையும் கொடுக்கத்தயார் என உறுதியளித்தார். அவர் நீதிமன்றத்தில்: “சுதந்திர சாசனம் யாதார்த்தமாவது மத்தியதர வகுப்பு உட்பட அனைத்து வகுப்பு ஆபிரிக்க மக்களுக்கும் புதிய களங்களை திறந்து விடும். ஆபிரிக்க தேசிய காங்கிரசின் வரலாற்றில் எந்த காலத்திலும், நாட்டின் பொருளாதார அடிக் கட்டுமானத்தில் புரட்சிகர மாற்றத்திற்கு வாதிட்டதில்லை; எனக்கு நினைவிற்குத் தெரிந்தவரை முதலாளித்துவ சமூகத்தையும் கண்டித்ததில்லை.” எனக் கூறினார்.

1964ல் குற்றவாளி எனக் கூறப்பட்டு மண்டேலாவுக்கும் மற்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டவர்களுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதில் பெரும்பகுதிக் காலத்தை Cape Town கடலோரப் பகுதியை ஒட்டிய Robben தீவில் கழித்தனர்.

1980 களின் நடுப்பகுதியில், அரசாங்கம் பாரிய நெருக்கடியில் இருந்தது; வெகுஜனவேலை நிறுத்தங்கள், தொழிலாளர்கள் இளைஞர்களின் எழுச்சிகள் தென்னாபிரிக்க நகர்ப்பகுதிகள், நகரங்கள் முழுவதும் ஏற்பட்டன. சிறையில் இருந்த மண்டேலா முக்கிய பெருநிறுவன நிர்வாகிகளின் கவனத்திற்குள்ளானார், கீழிருந்தான புரட்சியின் அச்சத்தை உணர்ந்த அவர்கள், மண்டேலாதான் அரசியல் ரீதியாக நிலைமையை சரிசெய்ய சிறந்த நம்பிக்கை கொடுப்பவராக கண்டனர்.

நிறவெறி ஆட்சி ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ் தலைவருடன் 1985ல் பேச்சுக்களை தொடங்கியது; அதே ஆண்டு, தொழிலாள வர்க்க கறுப்பு இளைஞர்கள் நடத்திய எழுச்சிப் போராட்டங்களை நசுக்கும் முயற்சியில் ஆட்சி இராணுவச் சட்டத்தை அறிவித்தது. பேச்சுவார்த்தைகள் மண்டேலா சிறையில் இருந்து பெப்ருவரி 1990ல் விடுவிக்க வழிவகுத்தன. 1994ல் பல கட்சிகள் பங்கு பெற்ற தேர்தலில், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தேசிய வாக்குகளில் 62%ஐப் பெற்று அதிகாரத்தை எடுத்துக் கொண்டதோடு மண்டேலா ஜனாதிபதியானார், இப்பதவியை அடுத்த ஐந்து ஆண்டுகள் 1999 வரை வகித்தார்.

மண்டேலாவும் ANC யும், அன்டனி சாம்சன் விளக்கியுள்ளபடி, ஒரு இரகசிய உறுதியை முன்னரே கொடுத்தபின்தான் பதவிக்கு வந்தனர்; “பற்றாக்குறையைக் குறைப்பது, அதிக வட்டி விகிதங்கள் மற்றும் ஒரு திறந்த பொருளாதாரம், இதற்கு ஈடாக IMF கடன் 850 மில்லியன் டாலர்கள் தேவையானால் கொடுக்கப்படும்”. இப்பேச்சுக்கள் அனைத்திலும் உட்குறிப்பாக நிறப்பாகுபாடு ஆட்சி முடிவடையும், வெள்ளை உயரடுக்கு சர்வதேச நிதிய மூலதனத்தின் சொத்துக்கள், செல்வம் மற்றும் வணிக நலன்கள் காக்கப்படும் என்னும் உத்தரவாதம் இருந்தன.

மண்டேலா, புதிய அரசாங்கம் நாட்டின் பரந்த வறுமையை குறைக்கும் என்னும் எதிர்பார்ப்பிற்கு எதிராக தென்னாபிரிக்கர்களை எச்சரித்தார். “உரிமை கோரும் கலாச்சாரத்தை நாம் விடுவித்துக்கொள்ள வேண்டும்; அதுதான் அரசாங்கம் நாம் கோருபவற்றை உடனே வழங்கும் என்ற எதிர்பார்ப்பை கொடுக்கிறது” என்றார் அவர். நியூ யோர்க் டைம்ஸ் வியாழன் அன்று, மண்டேலா தொழிலாளர்களிடம் “உங்கள் வயிற்றை இறுக்கிக் கொள்ளுங்கள்”, “புதிய குறைவூதியங்களை ஏற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுதுதான் முதலீடுகள் வரும்” என்றார் என எழுதியுள்ளது.

அதே நேரத்தில் மண்டேலா தென்னாபிரிக்க பெரும் செல்வந்தர்களை நாடி நின்றார்.

கார்டியனின் இரங்கல் குறிப்பு “பெரும் செல்வந்தர்களிடம் அவர் கொண்டிருந்த தொடர்பு” பற்றி குறிப்பிடுகிறது. செய்தித்தாள் விளக்குகிறது: “செல்வம்  போற்றத்தக்கது. எனவே அவர் விடுதலை அடைந்தவுடன் அயர்லாந்து வணிகர் Sir Tony O’Reilly இன் கரிபியத் தீவுகளில் விடுமுறையைக் கழித்தார். தென்னாபிரிக்காவின் மிகப் பெரிய செய்தித்தாள் குழுமத்திற்கு முழு சுதந்திரம் கொடுத்தார், அவருடைய “தந்திர வழிப் பணம்” செய்தி ஊடகத்திற்கு கறுப்பு ஆதிக்கம் கொடுக்கும் என எதிர்பார்த்தது. காசினோ மன்னன் Sol Kerzner தன்னுடைய மகள் ஜின்சி இன் திருமணத்திற்கு செலவு செய்ய அனுமதித்தார். அவர், பணக்காரர்களின் வீடுகளை இரவல்பெற்று தென்னாபிரிக்கா முழுவதும் விமானத்தில் சுற்றி பறக்க ஏற்பாடு செய்தார்.”

தென்னாபிரிக்காவில் இப்பொழுது வெளிப்படையாக தெரியும் சமூக, பொருளாதார பேரழிவு, முதலாளித்துவ ஆட்சியை தக்க வைப்பதில் மண்டேலாவின் பங்கு மீதான ஒரு குற்றச்சாட்டு ஆகும்; அதேபோல் அவருடைய “ஐரோப்பியரல்லாத முதலாளித்துவத்தை” வளர்க்கும் முன்னோக்கு பற்றிய குற்றச்சாட்டும் ஆகும்.

இனப்பாகுபாட்டின் முடிவு, நிறவெறி அரசின்கீழ் மறுக்கப்பட்ட நாட்டு மக்கள் வாக்குப் போடும் உரிமை மற்றும் ஏனைய ஜனநாயக உரிமைகளைக் கொள்ளும் உரிமையை அளித்தது. ஆனால் இது சமூகத்தில் இருக்கும் அடிப்படைப் பிளவை மாற்றவில்லை; அதுவோ இனத்தை அல்லாமல் வர்க்கத்தைத்தான் அடிப்படையாக கொண்டிருந்தது.

கிட்டத்தட்ட இனப்பாகுபாடு முடிந்து 20 ஆண்டுகளாகியும், தென்னாபிரிக்கா உலகின் பெரும் சமூக சமத்துவமற்ற நாடுகளில் ஒன்றாகத்தான் உள்ளது. சுரண்டல் மற்றும் வறுமையின் கொடூரத் தரங்கள், பெரும்பாலான மக்களைப் பாதிக்கின்றன; கிட்டத்தட்ட 50%தினர் உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர்.

உத்தியோகபூர்வமாக வேலையின்மை தொழிலாளர் தொகுப்பில் 25% என்று உள்ளது; ஆனால் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகம் ஆகும். உலகில் HIV/AIDS ஆல் பாதிக்கப்பட்டவர்களை அதிக எண்ணிக்கையில் தென்னாபிரிக்கா கொண்டுள்ளது. மொத்த மக்களில் 12% அல்லது 6.4 மில்லியன் மக்கள் இதில் அடங்குவர். இதில் 450,000 குழந்தைகளும் அடங்கும். உத்தியோகபூர்வ தரவுகளின்படி, பாதிக்கப்பட்டோரில் 28% மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர் என்பதைக் காட்டுகிறது. ஆயுட்கால எதிர்ப்பார்ப்பு 2011ல் 58 ஆண்டுகளாக இருந்தது. இது உலகிலேயே மோசமானவற்றுள் ஒன்றாகும்.

சமூகத்தின் மறு பகுதியில் ஒரு சிறிய சிறுபான்மை, ஆபிரிக்க தேசிய காங்கிரஸினர், முன்னாள் ஸ்ராலினிஸ்டுக்கள் மற்றும் தொழிற்சங்க பிரமுகர்கள் அடங்கிய ஒரு அடுக்கு, மகத்தான முறையில் தனிப்பட்ட செல்வத்தை குவித்து கொண்டிருக்கின்றனர். நாட்டில் இப்பொழுது எந்த ஆபிரிக்க நாட்டிலும் இல்லாத அளவிற்கு அதிக அமெரிக்க டாலர் பில்லியனர்கள் உள்ளனர், 14 நபர்கள் இப்பிரிவில் உள்ளனர், ஒரு தசாப்தம் முன் இருவர்தான் இருந்தனர்.

தென்னாபிரிக்காவில் சமூக மற்றும் அரசியல் அழுத்தங்கள் ஒரு கொதிநிலையை அடைந்துள்ள நிலையில் மண்டேலா இறந்துள்ளார். ANC மற்றும் அதன் ஸ்ராலினிச, தொழிற்சங்க நட்பு அமைப்புக்கள் ஆழமான முறையில் தொழிலாள வர்க்கத்தால் வெறுக்கப்படுகின்றன; மண்டேலாவிற்குப் பின் ஆளும் ஜாகப் ஜுமாவின் நிர்வாகம் முன்னோடியில்லாத நெருக்கடியில் உள்ளது.

ஆழ்ந்த உலக முதலாளித்துவ நெருக்கடி, பன்னாட்டு சுரங்கம் மற்றும் பிற பெருநிறுவனங்களுக்கு தென்னாபிரிக்க தொழிலாள வர்க்கத்தின் ஊதியங்களையும் பணிநிலைகளையும் குறைப்பதற்கு உந்துதலாக உள்ளது; அதே நேரத்தில் நாட்டின் ஆளும் உயரடுக்கு பிற குறைவூதிய ஆபிரிக்க பகுதிகளில் இருந்து முதலீட்டை நாடுகிறது. இந்த வழிவகை மகத்தான சமூக அழுத்தங்களைத் தோற்றுவித்துள்ளது.

2013ம் ஆண்டு மாரிக்கானாவில் வேலைநிறுத்தம் செய்த பிளாட்டின தொழிலாளர்களை பொலிஸ் படுகொலை செய்தது, சாதாரண தொழிலாளர்களின் கௌரவமான வாழ்க்கத்தரங்கள் பணியிடப் பாதுகாப்பு ஆகிய அபிலாஷைகளுக்கு ANC அரசாங்கம் மற்றும் அதன் நட்பு தொழிற்சங்கங்களின் கசப்பான குரோதபோக்கின் வெளிப்பாடாகும். பெரும் அரசியல் வெற்றிடம் வெளிப்பட்டுள்ளதையும் இது காட்டுகிறது. இனப்பாகுபாட்டை முடிக்கும் போராட்டத்தின் உருவமாக தான் உள்ளது என கூறிக்கொள்ளும் ஒரு அரசாங்கம், தொழிலாளர்களை படுகொலை செய்துள்ளது; இது Sharpeville மற்றும் Soweto ஆகிய இடங்களில் நடந்த பாரிய படுகொலைகளை எதிரொலிக்கிறது; அவை நிறவெறி காலத்தின் மோசமான குற்றங்களாகும்.

முன்னாள் ஜனாதிபதியின் மரணம் தவிர்க்க முடியாமல் அடுத்த கட்டத்திற்கு சமூக, தொழில்துறை எழுச்சிகளை தொடரும்; இவை மீண்டும் தென்னாபிரிக்காவில் ஒரு சோசலிசப் புரட்சியின் அவசியத்தை எழுப்பும்.