சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

Mandela and the South African Communist Party

மண்டேலாவும் தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியும்

By Bill Van Auken 
12 December 2013

Use this version to printSend feedback

நெல்சன் மண்டேலாவின் மரணம் குறித்து வாரம் முழுவதிலும் பக்கத்திற்குப் பக்கம் செய்திகள் வெளியிட்ட பெருநிறுவனக் கட்டுப்பாட்டு ஊடகங்கள் இந்த முன்னாள் தென்னாப்பிரிக்க ஜனாதிபதியின் மறைவை ஒட்டி வெளிவந்திருந்த ஒரேயொரு செய்தியை மட்டும் ஏறக்குறைய ஒட்டுமொத்தமான மவுனத்துடன் கடந்து சென்றிருக்கின்றன.

ஆபிரிக்க தேசியக் காங்கிரசின் வார்த்தைகளில் சொல்வதானால், மண்டேலா தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியிலும் உறுப்பினராக இருந்திருக்கிறார், அதில் அவர் மத்திய குழுவில் பணியாற்றியிருக்கிறார் என்பதை ஒப்புக் கொள்கின்ற சுருக்கமான அறிக்கைகளை ஒரு காலத்தில் அவர் தலைமை தாங்கிய ஆளும் ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ் (ANC) மற்றும் தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி (SACP) ஆகிய இரண்டு கட்சிகளுமே வெளியிட்டுள்ளன.

இதில் தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி சற்றுக் கூடுதலாகவே தனது உணர்ச்சிகளைக் காட்டியிருந்தது. அது தனது டிசம்பர் 5 அறிக்கையில் அறிவித்தது: “1962 ஆகஸ்டில் கைதுசெய்யப்பட்ட போது நெல்சன் மண்டேலா அப்பொழுது தலைமறைவாக இயங்கிய தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்தார் என்பதோடு, கட்சியின் மத்திய குழுவிலும் உறுப்பினராக இருந்தார். தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட்டுகளாகிய எங்களைப் பொறுத்தவரை தோழர் மண்டேலா நம் விடுதலைப் போராட்டத்தில் தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான பங்களிப்பிற்கான அடையாளமாக எப்போதும் இருப்பார். தென்னாபிரிக்க சுதந்திரப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுக்களின் பங்களிப்புக்கு இணையாக நம் நாட்டு வரலாற்றில் வெகு சில விடயங்களைத்தான் கூறமுடியும். 1990ல் சிறையில் இருந்து விடுதலையான பின் தோழர் மண்டேலா அவருடைய இறுதி நாட்கள் வரை கம்யூனிஸ்ட்டுக்களின் மிகப்பெரும், நெருக்கமான நண்பராக இருந்தார்.”

மண்டேலா தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கத்தவராக  இருந்ததை முதலாவதாக 1964 வழக்கு விசாரணையிலும் அதன் காரணங்கள் புரிந்து கொள்ளத்தக்கவை -  அதன்பின் நிறவெறி ஆட்சி முடிந்து தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி சட்டபூர்வ அமைப்பான பின்னரும் மறுத்துள்ளார்.

அமெரிக்காவில், பெரும் இணையங்களும், மற்றும் அச்சு ஊடகங்களும் மண்டேலாவை கடவுள்நிலைக்கு உயர்த்திக் காட்டவும் அமைதி, அன்பு மற்றும் நல்லிணக்கத்துக்கு உறுதிபூண்ட தென்னாபிரிக்க அன்னை தெரசாவாக அவரைச் சித்திரிக்கவும் தம்மால் இயன்ற அனைத்தையும் முயற்சிசெய்த நிலையில், அங்கு இந்த தகவல் குறித்த மவுனம் நிலவியது புரிந்து கொள்ளக்கூடியதே ஏனென்றால் மண்டேலாவின் உண்மையான அரசியல் குறித்த கவனமான ஆய்வு எதுவொன்றும் இந்தப் பிரச்சார முயற்சிகளை, அதிலும் ஜனாதிபதி பராக் ஒபாமா தன்னை மண்டேலாவின் அங்கிக்குள்ளாக பொருத்திக் கொள்ள செய்கின்ற முயற்சிகளை சொல்லவும் தேவையில்லை, சீர்குலைத்து விடும்.

தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியுடன் மண்டேலா கொண்டிருந்த உறவை தங்கள் சொந்த பிற்போக்குத்தன நோக்கங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முனைந்த வலதுசாரி வருணனையாளர்களும் மற்றும் வலைத்தளங்களும், அத்துடன் நியூயோர்க் டைம்ஸ் சண்டே வீக் பத்திரிகையின் திறனாய்வுப் பகுதியில் டைம்ஸ் நாளிதழின் முன்னாள் ஆசிரியரான பில் கெல்லர் எழுதி வெளிவந்திருக்கும் ஒரு சிடுமூஞ்சித்தனமான பத்தியும் மட்டுமே இதற்கு விதிவிலக்குகளாக இருந்தன. அதற்கு பின்னர் வருவோம்.  

உண்மையில் மண்டேலாவின் ஆபிரிக்க தேசிய காங்கிரசிற்கும் மற்றும் ஸ்ராலினிச தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே உள்ள உறவை ஆராய்வதென்பது தென்னாபிரிக்க வரலாற்றைப் புரிந்து கொள்ளுவதற்கு மட்டுமல்லாமல் நிறப்பிரிவினைக்கு  எதிரான போராட்டத்தின் கதியையும் மற்றும் இன்று தென்னாபிரிக்க தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் அடிப்படை அரசியல் சவால்களையும்  புரிந்து கொள்வதிலும் கூட தவிர்க்க முடியாதது ஆகும்.

மண்டேலாவின் அரசியல் மரபியத்தையோ அல்லது இன்றைய தென்னாபிரிக்காவில் உள்ள அரசியல், சமூக மற்றும் பொருளாதாரப் பரந்த காட்சியையோ  தென்னாபிரிக்க தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டங்களின் மீது ஸ்ராலினிசம் சுமத்திய பாரிய ஊறுபாட்டிற்கு வெளியே புரிந்து கொள்ள முடியாது.

மண்டேலா எப்படி ஆபிரிக்கத் தேசியக் காங்கிரசிற்கும் தலைமை தாங்கி, கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவிலும் பணியாற்றியிருக்க  முடியும் என்பதற்கான விடை ஸ்ராலினிசத்தின் எதிர்ப்புரட்சி கருத்தியலில்  காணத்தக்கது ஆகும். சோவியத் ஒன்றியத்தின் முதல் வெற்றிகரமான தொழிலாளர் புரட்சி அதிகாரத்துவ சீரழிவிற்கு ஆட்பட்டிருந்த நிலையிலும் மற்றும், இறுதியில் அப்புரட்சிக்குத் தலைமை கொடுத்திருந்த கிட்டத்தட்ட அனைத்து காரியாளர்களுமே உருரீதியாக அழிக்கப்பட்டு விட்ட நிலையிலும் உருவாகியிருந்த அழுத்தத்தின் கீழ்  கம்யூனிஸ்ட் அகிலம் ஒடுக்கப்பட்ட மற்றும் காலனித்துவநாடுகளில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது இரண்டு கட்டப் புரட்சித் தத்துவத்தை திணித்தது.

இக்கோட்பாடு 1917 அக்டோபரில் ரஷ்யப் புரட்சி அடித்தளமாகக் கொண்டிருந்த முன்னோக்கின் வெளிப்படையான மறுதலிப்பாக இருந்தது. ஒடுக்கப்பட்ட மற்றும் காலனித்துவ நாடுகளின் தொழிலாள வர்க்கம் ரஷ்யத் தொழிலாளர்கள் அக்டோபர் புரட்சியில் அதிகாரத்தைக் கைப்பற்றியதைப் பின்பற்றி விஞ்ச முடியாது என்றும், மாறாக முதலாளித்துவ அபிவிருத்தியின் ஒரு குறிப்பிட்டதொரு காலகட்டத்திற்கு பின்னர் வரைக்குமாய் சோசலிசப் புரட்சி காலவரையின்றி தள்ளிப்போடப்படுகின்ற நிலையில், அதுவரை அது ஒரு முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை ஆதரிக்கும் நிர்ப்பந்தத்தில் உள்ளது என்றும் இக்கோட்பாடு கூறியது.

1905 புரட்சிக்குப்பின் ட்ரொட்ஸ்கியால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டு  1917 அக்டோபர் புரட்சிக்கான தயாரிப்பின்போது லெனினால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த நிரந்தரப் புரட்சித் தத்துவத்தை ஸ்ராலினிசம் கடுமையாக எதிர்த்தது. ஒரு சோசலிச, சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் விவசாயிகளின்  தலைமையை வென்றெடுப்பதற்கான ஒரு போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்தில் இருந்து அரசியல்  சுயாதீனம் பெறுவதை இந்த மார்க்சிச வேலைத்திட்டம் வலியுறுத்தியது. ஏகாதிபத்திய சகாப்தத்தில், தென்னாப்பிரிக்கா போன்ற ஒடுக்கப்பட்ட நாடுகளில் வெகுஜன மக்கள் முகம் கொடுக்கும் ஜனநாயக மற்றும் தேசியக் கடமைகள் சோசலிசப் புரட்சியின் மூலமாகவும் ஒரு தொழிலாளர் அரசு ஸ்தாபிக்கப்படுவதன் மூலமாகவும் அத்துடன் அந்தப் புரட்சி சர்வதேச அளவில் பரவுவதன் மூலமாகவும் மட்டுமே எட்டப்பட முடியும் என்று அது ஸ்தாபித்தது.

1935ம் ஆண்டு தென்னாபிரிக்காவில் உள்ள ஆதரவாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் ட்ரொட்ஸ்கி அந்நாட்டிற்கு இம்முன்னோக்கு எத்தனை முக்கியமானது என்பதை விளக்கியதோடு, புரட்சி ஒரு கறுப்புக் குடியரசை தோற்றுவித்தாக வேண்டும், அப்போதுதான் தேசியப் பிரச்சினைகளை பாட்டாளி வர்க்க கட்சி தன் சொந்த வழிமுறைகளில் தீர்க்க முடியும், தீர்த்தாக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

[ஆபிரிக்க தேசிய] காங்கிரஸ் அதன் மூடத்தனமான நல்லிணக்கக் கொள்கையின் காரணத்தால், அதன் சொந்தக் கோரிக்கைகளைக் கூட பூர்த்தி செய்வதற்கு இலாயக்கற்று இருப்பதை நாட்டின் சொந்த வெகுஜன மக்களிடையே போல்ஷிவிக்-லெனினிஸ்டுகள் தோலுரித்துக் காட்ட வேண்டும். காங்கிரசுக்கு நேரெதிரான தனித்துவப்பட்ட வகையில், ஒரு புரட்சிகர வர்க்கப் போராட்டத்திற்கான வேலைத்திட்டத்தை போல்ஷிவிக்-லெனினிஸ்டுகள் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்கிற முன்னோக்கை அவர் முன்வைத்தார்.

இதற்கு முற்றிலும் நேரெதிர் போக்கைக் கடைப்பிடித்த தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி ANC ஐ ஒரு புரட்சிகரக் கட்சியாக விளம்பரப்படுத்தியதோடு 1955 சுதந்திர சாசனம் [Freedom Charter of 1955] என்கிற அதன் வேலைத்திட்டத்தையும் கூட வரைவு செய்து தந்தது.  இந்த சீர்திருத்தவாத ஆவணம் பல-இனப் பார்வை என்ற பெயரில் முதலாளித்துவ சொத்துடமை உறவுகளையும், முதலாளித்துவ அரசின் அடிப்படை ஸ்தாபனங்களையும் பாதுகாத்தது.

மண்டேலாவும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸும் தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியை நோக்கித் திரும்பினர் என்றால் அதன் காரணம் SACP இன் வேலைத்திட்டம் முதலாளித்துவ தேசியவாதத்தின் வேலைத்திட்டத்தில் இருந்து பிரித்தறிய முடியாததாக இருந்தது என்பதும், தொழிலாள வர்க்கத்தை ஆபிரிக்க தேசிய காங்கிரசின் வேலைத்திட்டத்திற்கு  அடிபணியச்செய்வதற்கும் இயக்கத்திற்கு வரம்புபட்ட ஆதரவை அளித்த மாஸ்கோ ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு அனுகூலமாகச் செயல்படுவதற்கும் ஒரு பயனுள்ள சாதனத்தை SACP வழங்கியது என்பதுமே ஆகும்.

மண்டேலா சிறையில் இருந்து விடுவிக்கப்படவும் நிறப்பிரிவினை உத்தியோகப்பூர்வமாக முடிவிற்கு கொண்டுவரப்படுவதற்கும் இட்டுச் சென்ற தென்னாபிரிக்க ஆளும் வர்க்கத்திற்கும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி மிக வலதுசாரி சமரச நிலைப்பாட்டை ஏற்றது. அதன் தலைவர் ஜோ ஸ்லோவோ சூரிய அஸ்தமன ஷரத்துகளை ஏற்க அழுத்தம் கொடுத்தார். இந்த ஷரத்துகள் நிறப்பிரிவினை ஆட்சியின் தேசியக் கட்சிக்கு பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் அத்துடன் முதல் ஐந்து ஆண்டுகளுக்கு துணை ஜனாதிபதிப் பதவியும் அளிக்க உத்தரவாதம் அளித்ததுடன் சுரங்கங்கள், வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் தேசியமயமாக்கப்படுவதையும் தடைசெய்தன.

ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர், ஸ்ராலினிஸ்ட்டுக்கள் தேசிய ஜனநாயகப் புரட்சி எனச் சித்தரித்த இக்கொள்கையின் விளைவுகள் தெளிவாகி இருக்கின்றன. இன்று தென்னாபிரிக்கா உலகில் மிக சமூக சமத்துவமற்ற நாடாக இருக்கிறது. தேசிய வருமானத்தில் 60% மேல்மட்டத்தில் இருக்கும் 10 சதவீதத்தினருக்குச் செல்கிறது. அதேநேரத்தில் கீழிருக்கும் 50% வறுமைக் கோட்டிற்கும் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

கறுப்பினத்தவருக்கு பொருளாதார வல்லமை அளித்தல் (Black Economic Empowerment) போன்ற திட்டங்கள் முன்னாள் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் நிர்வாகிகள், தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் ஸ்ராலினிஸ்டுக்கள், அத்துடன்  அரசியல் தொடர்புடைய கறுப்பின வணிகர்கள் ஆகியோர் கொண்டதொரு அடுக்கினை  மில்லியனர்களாக மாற்றியிருக்கின்றன. இந்த அடுக்கினை ஆகச்சிறந்த வகையில் பிரதிநிதித்துவம் செய்பவர் சுரங்கத் தொழிலாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சிரில் ரமபோசா ஆவார். பன்னாட்டு சுரங்க நிறுவனங்களுக்கு மலிவு உழைப்பை ஒப்பந்த முறையில் அளிப்பது உள்ளிட்டவற்றில் இருந்து கிட்டத்தட்ட அரை பில்லியன் டாலர்கள் சொத்தை இவர் சேர்த்துள்ளார்.

தற்போதைய தென்னாபிரிக்க அரசாங்கம் சுமார் இரு தசாப்தங்களாக ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், COSATU தொழிற்சங்கக் கூட்டமைப்பு மற்றும் தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியைக் கொண்ட முக்கட்சி கூட்டணியாகவே உத்தியோகப்பூர்வமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. தொழிற்சங்கக் கூட்டமைப்பும் தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியும் தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு போலிஸ் படைபோன்றும் அரசாங்கம் மற்றும் பெருநிறுவன நிர்வாகப் பதவிகளுக்கு கூறுகளைத் தயார் செய்யும் வழியாகவும் செயல்படுகின்றன.

இந்த பாத்திரமானது சென்ற ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் மரிக்கானாவில் 34 லோன்மின் பிளாட்டின சுரங்கத் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு SACP அளித்த பதிலிறுப்பில் மிகவும் கண்கூடாய் வெளிப்படுத்தப்பட்டது. தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய ஆளுமைகள் வேலைநிறுத்தம் செய்த சுரங்கத் தொழிலாளர்களை எதிர்ப்புரட்சியினர் என்று கண்டித்து, போலிஸ் நடவடிக்கைகளுக்கு தங்கள் ஆதரவை அறிவித்தனர்.

இது ஒரு படுகொலை அல்ல. இது ஒரு யுத்தம் என்று தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியான டொமினிக் ட்வீடி தெரிவித்ததாக கூறப்பட்டது. பொலிசார் தமது ஆயுதங்களை உரிய முறையில் சரியாகவே பயன்படுத்தியுள்ளனர். அதற்காகத்தான் அவர்களுக்கு அந்த ஆயுதங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்களால் சுடப்பட்டது தொழிலாளர்களாக எனக்குத் தெரியவில்லை. நாம் மகிழ்ச்சி அடையவேண்டும். பொலிசார் பாராட்டப்பட வேண்டும். என்றார்.

தொழிலாள வர்க்கம் சுரங்க நிறுவனங்களுக்கும் அவற்றின் முதலாளித்துவ உரிமையாளர்களுக்கும் எதிராக மட்டுமன்றி இந்த நலனகளைப் பாதுகாத்து நிற்கும் ANC மற்றும் தொழிற்சங்க எந்திரத்துக்கு எதிராகவும் கூட மோதலுக்கு வந்து கொண்டிருக்கும் நிலைமைகளின் கீழ், இத்தகைய நச்சுத்தனமான தாக்குதல்கள் ANC ஐயும் மற்றும் SACP மற்றும் COSATU இல் இருக்கும் அதன் கூட்டாளிகளையும் பீடித்திருக்கும் நெருக்கடியின் ஒரு அளவுகோலாக அமைந்திருக்கின்றன.

தனக்குள் நிதியை சுருட்டிக்கொள்ளும் ஆபிரிக்க தேசிய காங்கிரசின் உருவகமாய்த் திகழ்பவரும் ஏராளமான ஊழல் மோசடிகளில் சம்பந்தப்படுத்தப்படுபவருமான தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜாகப் சூமா தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் உணர்ச்சிப்பூர்வ ஆதரவுடன் பதவிக்கு வந்தவராவார். அக்கட்சி இவரை மக்களின் மனிதர் எனச் சித்தரிக்க முயன்றது.

ஊழல் ஜனாதிபதிக்கான முக்கிய ஆதரவுத் தளமாக கட்சி தொடர்ந்து சேவை செய்து வருவது செவ்வாயன்று ஜோகன்னஸ்பேர்க்கில் நடந்த பாரிய மண்டேலா நினைவஞ்சலி கூட்டத்திற்குப்பின் தெளிவாயிற்று. அங்கு கூட்டத்தில் கணிசமான பிரிவினர் சூமாவை பலமுறை கூக்குரலிட்டு நகையாடினர்.

நிகழ்விற்கு மறுநாள் தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டதொரு அறிக்கை முந்தைய சகாப்தத்தின் ஸ்ராலினிச ஆட்சிகளது மொழியை எதிரொலித்தது. கூட்டத்தில் எழுந்த நகையாடலை எதிர்ப்புரட்சிகரமானது என்று கண்டித்த அந்த அறிக்கை  இந்த இழிந்த நடத்தைக்குப் பின்னால் யார் இருக்கக் கூடும் என்பது குறித்த எந்தத் தகவல் கிடைத்தாலும் அதைக் கட்சியிடம் அளிக்கும்படியும் அத்துடன் இந்த செயலுக்குப் பின்னால் இருக்கும் ஆட்டுவிப்பாளர்கள் யார் என்பது குறித்த தகவல் நமக்குக் கிடைப்பதை உறுதிசெய்யும்படியும் தனது கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு தெளிவு. தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு மற்றும் போராட்டங்களுக்கு எதிராய் முதலாளித்துவ ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் ஆட்சி மற்றும் முதலாளித்துவத்தின் பாதுகாவலராக அது இருக்கிறது. பெரும்பாலும் பெருவணிகச் செய்தி ஊடகங்கள் இந்த இழிந்த உறவை ஆராய எந்த விருப்பமும் காட்டவில்லை என்கிற அதேநேரத்தில், டைம்ஸின் கெல்லர், மண்டேலா தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்த செய்தி குறித்த, அதாவது பதிவுகளின் செய்தித்தாளது செய்திப் பக்கங்களில் கூட இடம் பிடிக்காத ஒரு செய்தி குறித்த, ஒரு சிடுமூஞ்சித்தனமானதும் பிற்போக்குத்தனமானதுமான பகுப்பாய்வை வழங்கினார்.     

டைம்ஸிற்கு கோர்பச்ஷேவின் ரஷ்யா, உருமாற்றமடையும் தென்னாபிரிக்கா”  இரண்டில் இருந்தும் செய்தி வழங்கியது குறித்து சுட்டிக்காட்டும் கெல்லர் முற்றிலும் கம்யூனிச விரோதியும் அமெரிக்கப் பெருநிறுவன நலன்களின் பாதுகாவலரும் ஆவார்.. ஆயினும்கூட அவர் தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு பற்றிப் புகழ்கிறார்.

மண்டேலாவின் நடைமுறைவாதம் தான் அவர் SACP உடன் கூட்டணி வைத்ததன் காரணம் என்று கூறும் கெல்லர், அதேநேரத்தில் மண்டேலாவின் பல-இனப் பார்வையை வளர்த்தெடுத்ததற்காவும் 1992 இல் நிறப்பிரிவினை ஆட்சியுடன் ஒரு இடைமருவல் ஒப்பந்தத்தை உருவாக்குவதில் தேசியமயமாக்குபவர்களையும் பழி தீர்ப்பவர்களையும் எதிர்த்ததற்காகவும் SACP க்கு அவர் பெருமை சூடுகிறார்.   

ஆயினும்பெரும் அடிமட்ட வர்க்கத்தின் வாழ்க்கைகளை மேம்படுத்துவது, ஊழலை வேரறுப்பது மற்றும் அடங்க மறுக்கும் மக்களை ஐக்கியப்படுத்துவது ஆகிய விடயங்களில் தென்னாப்பிரிக்கா ஏன் பெரும் முன்னேற்றம் காண முடியவில்லை என்பதை SACP-ANC கூட்டணி விளக்குகிறது என்றும் கெல்லர் சேர்த்துக் கொள்கிறார். “விடுதலை இயக்கத்தில் இருந்து அரசாங்கத்தை விடுங்கள், அரசியல் கட்சியாக மாறுவதையும் கூட” ANC நிறைவு செய்யத் தவறி விட்டது என்பது அவர் தரும் விளக்கம். ”சதிமுறை போற்றுதல், தமக்கு எதிரான கருத்தை ஏற்காமை, வழிமுறைகளைத் தாண்டி முடிவுகளையே மதிப்பிடுவது போன்றவற்றில் விடுதலை இயக்கங்களின் :”கலாச்சாரத்தையே அது பராமரித்ததாகவும் அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்

நிறப்பிரிவினை ஆட்சியின் கீழ் நிலவிய முதலாளித்துவ சுரண்டல் உறவுகளையும் மற்றும் செல்வத்தின் ஏகபோகத்தையும் ANC அரசாங்கம் இருந்தபடியே விட்டுவிட்டதால் தான் வறுமைப்பட்ட பரந்த மக்களின் நிலைமைகளை அடிப்படையாக முன்னேற்றுவதில் அது தோற்றது என்பது தான் ஒரு எளிமையான விளக்கமாக இருக்க முடியும். அரசியல் தொடர்பு கொண்ட கறுப்பினத்தவரின் ஒரு சிறிய அடுக்கினை மட்டும் செல்வந்தர்களாக்குவதை அடிப்படையாகக் கொண்டதாக, நாட்டின் முதலாளித்துவ ஆட்சியாளர்களுடனான அதன் ஒட்டுமொத்த உறவுமே ஊழலடைந்ததாக இருந்ததால் தான் அதனால் ஊழலை ஒழிக்க முடியவில்லை.

மேலும் கெல்லர் விடுதலை இயக்கங்களுக்குக் கொடுக்கும் விவரிப்பை அப்படியே அமெரிக்காவின் முதலாளித்துவ அரசாங்கங்களுக்கும் ஒருவர் பொருத்திப் பார்க்க முடியும் தானே. பொய்களை அடிப்படையாகக் கொண்டு போர்களை நடத்துவதற்கு இப்பொய்களை இந்த முன்னாள் டைம்ஸ் ஆசிரியர் தொடர்ந்து பாதுகாத்துப் பேசிவந்திருக்கிறார் அவை சதி செய்திருக்கின்றன; அதிருப்தியை நோக்கிய அவற்றின் மனப்போக்கு எட்வார்ட் ஸ்னோவ்டென், ஜூலியன் அசான்ஞ் மற்றும் பிராட்லி மானிங் தண்டிக்கப்பட்ட விதத்தில் தெளிவாக்கப்பட்டிருக்கிறது.

இறுதியாக கெல்லர், ஸ்ராலினிசம் வீழ்ச்சியடைந்து மண்டேலாவிற்கும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸுக்கும் மிகப் பெரிய சேவையைச் செய்தளித்துள்ளது என்னும் கருத்தையும் முன்வைத்திருக்கிறார். சோவியத் தொகுப்பின் முடிவானது தென்னாபிரிக்காவின் நிறப்பிரிவினை ஆட்சியாளர்களை இனியும் பனிப் போரின் சரியான பக்கத்திற்கு அவசியமான கூட்டாளிகள் எனக் காட்டிக் கொள்ள முடியாதபடி செய்து விட்டிருந்தது. ஆட்டம் முடிந்து விட்டிருந்தது என்று அவர் உறுதிபடத் தெரிவிக்கிறார்.

இது வரலாற்றை திட்டமிட்டுத் திரிக்கும் செயல் ஆகும். நிறப்பிரிவினையை உத்தியோகப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டுவருகின்ற அதேநேரத்தில் முதலாளித்துவ நலன்களைக் பாதுகாக்கின்றதாக இருக்கும் ஒரு அரசியலமைப்பு உடன்பாட்டிற்கு, ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் உடனான பேச்சுவார்த்தைகள், சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு வெகு முன்னரே தொடங்கி விட்டன. 1985ல் ஆங்கில-அமெரிக்க சுரங்கப் பெருமுதலாளி காவின் றெல்லி ஒலிவர் டாம்போ மற்றும் பிற ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர்களுடன் பேச வெள்ளை தென்னாபிரிக்க வணிகத் தலைவர்களை சாம்பியாவில் உள்ள லூசாகாவிற்கு வழிநடத்திச் சென்றிருந்தார்.

விளையாட்டு முடிந்துவிட்டது என்பதை நிறப்பிரிவினை முதலாளித்துவத்தின் தலைவர்கள்  அறிந்திருந்தனர்; ஏனெனில் கறுப்பினத்தவரின் நகரங்களில் ANC இல் இருந்து சுயாதீனப்பட்டு முன்கண்டிராத புரட்சிகர எழுச்சி எழுந்திருந்ததை அவர்கள் எதிர்கொண்டனர். நாடு முழுவதும் அவசரநிலையைத் திணிக்கும்  கட்டாயத்திற்கு ஆட்சி உள்ளாகியிருந்தது. இந்த எழுச்சியைத் தணித்து தங்கள் சொத்துக்கள் மற்றும் செல்வத்தைப் பாதுகாக்கக் கூடிய ஒரு உடன்பாட்டை நாட்டின் முதலாளித்துவ ஆளும் வர்க்கம் மிகவும் விரக்தியுடன் எதிர்நோக்கி நின்றது.   

கெல்லர் எழுதுகின்ற ஒவ்வொன்றையும் போலவே அவரது ஆய்வும் அமெரிக்க அரசாங்கத்தின் நலன்களுக்கு அளவெடுத்துத் தைத்தது போல் எழுதப்பட்டிருக்கிறது. நிறப்பிரிவினைக்கு அமெரிக்கா பல தசாப்தங்களாக ஆதரவு கொடுத்து வந்திருந்ததை நியாயப்படுத்த பனிப் போரின் சரியான பக்கத்திற்கு அவசியமான கூட்டாளிகளாக தென்னாபிரிக்க ஆட்சியாளர்கள் சேவை செய்தனர் என்று இந்த ஆய்வு காரணம் கற்பிக்கிறது.

ExxonMobil, General Motors, IBM, Hewlett-Packard, Bank of America, General Electric, BP, Citigroup, Goodyear, United Technologies, Ford போன்ற பெருநிறுவனங்கள் அனைத்தும் தென்னாபிரிக்காவில் விரிவான செயற்பாடுகளைக் கொண்டிருந்ததோடு நிறப்பிரிவினையின்கீழ் கறுப்பின தொழிலாளிகளை சுரண்டிப் பெரும் இலாபங்களைக் குவித்தன. 1985 இல் அமெரிக்கா தென்னாபிரிக்காவின் மிகப் பெரும் வணிகக் கூட்டாளியாகவும் அதன் இரண்டாவது  மிகப்பெரிய அந்நிய முதலீட்டாளராகவும் ஆகியிருந்தது, கிட்டத்தட்ட தென்னாபிரிக்க எண்ணெய்த் துறையில் பாதியையும், கணினித் துறையில் 75 சதவீதத்தையும், வாகனத் தயாரிப்புத் தொழிலில் 23 சதவீதத்தையும் அமெரிக்கா கட்டுப்படுத்தியது. இந்த நடவடிக்கைகள் எல்லாம் பனிப்போர் அரசியலால் செலுத்தப்பட்டவை அல்ல, மாறாக முதலாளித்துவ இலாப நலன்களினால் செலுத்தப்பட்டவை ஆகும்.  

நிறப்பிரிவினையின் கீழ் வெடித்த புரட்சிகரப் போராட்டங்களை கருக்கலைப்பதில் ஸ்ராலினிசமும் ANCயும் ஆற்றிய பாத்திரத்தில் இருந்து தென்னாபிரிக்கத் தொழிலாளர்கள் கடுமையான படிப்பினைகளைத் தேற்றம் செய்து கொள்வது அவசியமாக இருக்கிறது என்பதையே மண்டேலாவின் மரணமும் அதனையடுத்து ஊடகங்கள் மேற்கொண்ட அரசியல் புனைகதைகள் மற்றும் வரலாற்றுப் பொய்மைப்படுத்தல்களின் பிரச்சாரமும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இந்தப் படிப்பினைகளின் மீதும் உண்மையான ஜனநாயகம், சமத்துவம் மற்றும் சோசலிசத்தை எட்டுவதற்கான போராட்டத்தை நடத்தி முடிப்பதற்கான ஒரு சர்வதேசிய மற்றும் சோசலிச முன்னோக்கை அடித்தளமாகக் கொண்டும் ஒரு புதிய புரட்சிகரத் தலைமை கட்டியெழுப்பப்பட்டாக வேண்டும். இதன் பொருள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தென்னாபிரிக்கப்  பிரிவு கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதாகும்.