சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Australia’s auto closures pose need for a global workers’ strategy

ஆஸ்திரேலியாவின் வாகனத்துறை ஆலைமூடல்கள் ஓர் உலகளாவிய தொழிலாளர் மூலோபாயத்தின் அவசியத்தை முன்னிறுத்துகிறது

Mike Head
20 December 2013

Use this version to printSend feedback

ஆஸ்திரேலியாவில் உள்ள அதன் இரண்டு உற்பத்தி ஆலைகளை மூடுவதென்ற ஜெனரல் மோட்டார்ஸின் கடந்த வார முடிவு, அந்நாடு முழுவதிலுமான கார் உற்பத்திக்கு சாவு மணி அடிக்கிறது, முன்னதாக போர்ட் நிறுவனத்தால் இதேபோன்ற ஒரு முடிவு எடுக்கப்பட்டது, டோயோட்டா நிறுவனமும் இதை பின்தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சர்வதேச அளவில் வாகனத்துறைத் தொழிலாளர்களுக்கு பேரழிவுகரமான விளைவுகளை உண்டாக்கி, நிதியியல் மற்றும் பெருநிறுவன மேற்தட்டின் இலாபத்திற்காக இரக்கமின்றி நடந்துவரும் உலகளாவிய வாகன தொழில்துறை மறுசீரமைப்பின் ஒரு திரண்ட வெளிப்பாடாக உள்ளது.

நாடு முழுவதும் வாகன தொழில்துறையை மூடுவதென்பது தொழிற்சங்கங்கள் மற்றும் ஆஸ்திரேலிய தொழிற்கட்சியின் தேசியவாத முன்னோக்கின் திவால்நிலைமையை அம்பலப்படுத்துகிறது. இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் ஆஸ்திரேலியாவில் ஸ்தாபிக்கப்பட்ட இதுபோன்ற தேசிய அடித்தளத்திலான வாகனத்துறை ஆலைகளின் உயிர்வாழும் தன்மையை பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தி முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

நாடுகடந்த வாகனத்துறை நிறுவனங்களுக்கு தொழிற்சங்கங்களும் தொழிற்கட்சியும் எத்தனை விட்டுகொடுப்புகளும் சலுகைகளும் வழங்கின என்பது அவற்றிற்கு ஒரு விஷயமே அல்ல, தொழிலாள வர்க்கத்திற்கு எஞ்சி இருந்த கடந்த கால தேட்டங்கள் மற்றும் பாதுகாப்புகளான மேலதிக வேலைநேர சம்பளம் (Overtime payments), சுழற்சி பணிமுறைக்கான கொடுப்பனவுகள், சம்பளத்துடன் கூடிய விடுமுறைகள், இதர பிற தேட்டங்கள் அந்த நாட்டை வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் அவர்களின் வங்கியாளர்களின் மூலோபாய வரைபடத்திலிருந்து அகற்றிவிட செய்திருக்கிறது. ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் டோயோட்டா இரண்டுமே ஆஸ்திரேலிய தொழிலாளர் செலவுகள் தாங்க முடியாத அளவிற்கு அதிகமாக இருப்பதாக(அதாவது அமெரிக்காவில் இருப்பதை விட இரண்டு மடங்கு மற்றும் சீனாவை விட நான்கு மடங்கு அதிகமாக இருப்பதாக) அறிவித்தன.

பெரும்பாலும் இதே தான் ஐரோப்பா முழுவதிலும் நடந்து வருகிறது. ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் (UAW) சங்கத்தோடு கை கோர்த்து வேலை செய்துவரும் ஒபாமா நிர்வாகம், உலகளாவிய 2008 நிதியியல் நிலைமுறிவைத் தொடர்ந்து அமெரிக்காவில் புதிய தொழிலாளர்களின் கூலிகளை பாதியாக குறைத்தபோது, அது தொழிலாளர் மீதான சர்வதேச தாக்குதலுக்கு ஒரு புதிய களம் அமைத்தது. 2009இல் இருந்து அமெரிக்க வாகன உற்பத்தியாளர்கள் அவர்களின் தொழிலாளர் செலவுகளில் 30 சதவீத அளவிற்கு குறைத்து உள்ளனர்.

வாகனத்துறையை பெரிதும் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் கார் உற்பத்தி ராட்சத நிறுவனங்களும் வங்கிகளும் ஓர் உலகளாவிய மூலோபாயத்தைக் கொண்டுள்ளனர், அதுவாவது: மலிவினும் மலிவு உழைப்பைச் சுரண்ட உற்பத்தியை ஒரு நாட்டிலிருந்து ஏனைய நாட்டிற்கு மாற்றக்கூடிய அவர்களின் இயலுமையை பயன்படுத்தி ஒரு நாட்டின் மற்றும் ஒரு பிராந்தியத்தின் தொழிலாளர்களை ஏனைய இடத்தில் இருக்கும் அவர்களின் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு எதிராக நிறுத்துதல், அதன் மூலமாக மொத்த தொழிலாளர்களின் வேலையிட நிலைமைகளை சீரழிப்பது மற்றும் கூலிகளைக் குறைப்பது என்பதாகும்.

தற்போது வாகன நிறுவனங்களுக்கான ஒரு குறைந்த கூலிச் சொர்க்கமாக இருக்கும் அமெரிக்கா, மற்றும் ஆசியா, அனைத்திற்கும் மேலாக, சீனா ஆகியவை பிரதான இலாப மையங்களாக மாறி உள்ளன. சீனாவில் சந்தை ஆதிக்கத்திற்கான போட்டியில் போர்ட் மற்றும் வோல்ஸ்வாகனுடன் ஜெனரல் மோட்டார்ஸ் ஒரு கடுமையான மோதலில் சிக்கி உள்ளது. ஜெனரல் மோட்டார்ஸ் அதன் சீன உற்பத்தியை 2015 அளவில் இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ள நிலையில், வோல்ஸ்வாகன் மேற்கு ஜின்ஜியாங் மாகாணத்தில் அமைக்கப்படும் ஓர் ஆலை உட்பட அங்கே ஏழு புதிய ஆலைகளைக் கட்டி வருகிறது. அந்த மேற்கு ஜின்ஜியாங் மாகாணத்தில் குறைந்தபட்ச கூலிகள் சீனாவின் கடற்கரையோர தொழிற்பேட்டைகளை விட இன்னும் குறைவாக (ஒரு மாதத்திற்கு 189 அமெரிக்க டாலரில் இருந்து 215 அமெரிக்க டாலர் வரையில்) உள்ளன. அமெரிக்க செயல்பாடுகளில் இருந்து இந்த ஆண்டு 8.5 பில்லியன் டாலர் இலாபத்தை சமீபத்தில் அறிவித்துள்ள போர்ட் நிறுவனம்குறைந்த சம்பளத்தில் ஆயிரக்கணக்கான புதிய தொழிலாளர்களின் முதுகின் மீதுஹாங்ஜிஹோ மற்றும் சோன்ங்கிங் ஆகிய இடங்களில் ஆலைகளை உருவாக்கி வருகிறது.

இந்த நிகழ்முறையானது, உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு எது முதலிடத்தில் பொறுப்பாக உள்ளதோ அதே நிதி பிரபுத்துவத்தால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. நிதி மூலதனத்தின் அதிகரிப்பானது, பெருநிறுவனங்களின் உரிமைகளை பிரதான வங்கிகள், தனியார் முதலீட்டு நிதியங்கள் மற்றும் முதலீட்டு அமைப்புகளின் கைகளில் குவித்துள்ளது. பார்க்லே, ஜேபிமோர்கன் சேஸ் மற்றும் பிளாக்ராக் போன்ற பெயர்கள் ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் போர்ட் ஆகிய இரண்டின் பங்குபத்திர ஆவணங்களில் அதிகமானதை கொண்டுள்ளதுடன், இவை முன்னொருபோதும் இல்லாத உயர்ந்த இலாப விகிதங்களைக் கோருகின்றன.

ஜெனரல் மோட்டார்ஸ் தென் கொரியா முழுவதிலும் உற்பத்தியை இன்னும் கூடுதலாக குறைப்பதோடு, ஜேர்மனியில் உள்ள அதன் போஹும் ஆலையை மூடுகின்ற அதேவேளையில், அதன் அடெலெய்ட் மற்றும் மெல்போர்னில் உள்ள ஆலைகளை மூடுவதென்ற முடிவை அறிவித்த போதும் கூட, உலகின் மிகமிக செல்வச் செழிப்பான பில்லினியர்களில் சிலர் ஜெனரல் மோட்டார்ஸின் பங்குகளை வாங்கி குவித்தனர். Sizemore Investment Letterஇன் செய்தியின்படி, “முதலீட்டாளர்கள் நிச்சயமாக ஜெனரல் மோட்டார்ஸைக் கொண்டு இலாபமடைகின்றனர்; இந்த ஆண்டு இன்றைய தேதி வரையில் அதன் பங்குகள் 40 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது... வாரன் பஃபெட், ஜோர்ஜ் சாரோஸ் மற்றும் ஜியோல் கிரீன்பலாட் அனைவரும் கடந்த ஆறு மாதங்களில் கணிசமான அளவிற்கு பங்குகளை வாங்கி உள்ளனர்.”

இத்தகைய கொள்ளையடிக்கும் பில்லியனர்களின் கரங்களில் இருந்து இன்னும் இன்னும் ஆழமடைந்துவரும் தாக்குதல்களை முடிவுக்கு கொண்ட வர, வாகனத்துறை தொழிலாளர்களுக்குடெட்ராய்டில் இருந்து போஹும், ஜின்ஜியாங் மற்றும் அடெலெய்ட் வரையில்அவர்களின் சொந்த உலகளாவிய மூலோபாயம் அவசியப்படுகிறது, அதுவாவது: இலாப அமைப்புமுறையைத் தூக்கியெறிய ஒரு பொதுவான அரசியல் மோதலில் அவர்களின் போராட்டத்தை ஐக்கியப்படுத்துவது மற்றும் உலகளவில் உற்பத்தியை தனிநபரின் செல்வ திரட்சிக்காக அல்லாமல் சமூக தேவையின் அடிப்படையில் மறுஒழுங்கமைப்பது என்பதாகும்.

பெரும்-சுரண்டல் நிலைமைகளை ஏற்காமல், வாகனத்துறை தொழிலாளர்கள் சீனா, தென் ஆபிரிக்கா, இந்தியா, ஐரோப்பா, தென் கொரியா மற்றும் அமெரிக்காவில் உட்பட சமீபத்திய ஆண்டுகளில் அவர்கள் தீவிரமான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். குறைந்த கூலி, நிர்வாக துஷ்பிரயோகம் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியாவின் மாருதி சுஜூகி தொழிலாளர்களின் இரண்டு ஆண்டு கால போராட்டங்கள் போன்றவை பாரிய கைது நடவடிக்கைகள், பொலிஸ் ஒடுக்குமுறை மற்றும் இந்திய தொழிற்சங்க கருவிகளின் கரங்களால் தனிமைப்படுத்தப்பட்டமை ஆகியவற்றிற்கு இடையிலும் தொழிலாள வர்க்கத்தின் தீர்க்கமான உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.

ஒவ்வொரு கண்டத்திலும், போராட்டங்களின் ஒவ்வொரு வெடிப்பையும் ஒடுக்கவும், கழுத்தை நெரிக்கவும் தொழிற்சங்கங்கள் வேலை செய்கின்றன. இவை தொழிலாளர்களின் அமைப்புகளேயல்ல. தேசியளவில் நெறிப்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட தொழில்துறையின் கட்டமைப்பிற்குள் விட்டுக்கொடுப்புகளைக் கோரும் அவற்றின் முன்னோக்கின் பொறிவு, அவற்றை தொழிற்துறை பொலிஸ் சக்திகளாக மற்றும் மலிவு உழைப்பை வார்த்துக் கொடுப்பவர்களாக மாற்றி உள்ளது. தேசிய முதலாளித்துவ வர்க்கம் "உலகளாவிய போட்டித்தன்மையைக்" கையாள்வதற்காக என்ற பெயரில், இலாப விகிதங்களையும் பங்குகளின் விலைகளையும் உயர்த்துவதற்கான ஒருபோதும் முடிவில்லா ஓட்டத்தில், அவை ஒரு நாட்டு தொழிலாளர்களை இன்னொரு நாட்டு தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வந்து நிறுத்துகின்றன.

அமெரிக்காவில், கிடைக்கும் இலாபங்களில் இருந்து நேரடியாக ஆதாயமடையும் விதத்தில், நிதியியல் மேற்தட்டு பெரும் பங்குதாரர்களாக இணைந்ததற்காக UAW அதன் அங்கத்தவர்களின் நிலைமைகளை அழித்தொழித்தது. அதன் சொந்த வோல் ஸ்ட்ரீட் ஆலோசகர்களின் குழுவைக் கொண்டிருக்கும் UAW, தொழிற்சங்கம் ஓய்வூதியதாரர்களின் உடல்நல பாதுகாப்பு நிதிகள் மூலமாக ஜெனரல் மோட்டார்ஸ், போர்ட் மற்றும் கிறிஸ்லெர் பங்குகளின் மிகப் பெரிய உடைமையாளர்களில் ஒன்றாக இருக்கிறது. மேலும் அது உயர்ந்துவரும் பங்கு மதிப்புகளில் இருந்து பாரிய இலாபத்தை ஈட்ட அதன் கையிலிருக்கும் பங்குகளை விற்க இப்போது தயாராகி வருகிறது.

வேலைகள், கூலிகள் மற்றும் சமூக சலுகைளின் பாதுகாப்பானது, இலாப அமைப்புமுறையால் சுமத்தப்படும் சமூக சீரழிவைத் திணிக்க வேலை செய்து வரும் அனைத்து கட்சிகளிடமிருந்தும், ஆஸ்திரேலியாவில் தொழிற்கட்சியில் இருந்து ஜேர்மன் சமூக ஜனநாயக கட்சி, அமெரிக்காவில் ஜனநாயக கட்சி வரையில், அனைத்துடனும் மற்றும் தொழிற்சங்கங்கள் உடனும் ஒரு நனவுபூர்வமான அரசியல் உடைவை கோருகிறது. தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவ கட்சிகளில் இருந்து முற்றிலும் சுயாதீனமான, தொழிற்சாலைகளில் சாமானிய தொழிலாளர் குழுக்களும் மற்றும் தொழிலாள வர்க்கம் வசிக்கும் பகுதிகளில் தொழிலாளர்கள் குழுக்கள் உட்பட, புதிய, ஜனநாயக ரீதியான போராட்ட அமைப்புகள் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

இது ஒரு சர்வதேச சோசலிச மூலோபாயத்துடன் இணைக்கப்பட வேண்டும். வாகனத்துறை நிறுவனங்கள்ஏனைய பெரிய பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளோடு சேர்ந்துஉழைக்கும் மக்களின் ஜனநாயக கட்டுப்பாட்டிற்குள் பொதுவுடைமையின் கீழ் கொண்டு வந்து நிறுத்தப்பட வேண்டும். பொருளாதார வாழ்வின் வழிகாட்டும் கோட்பாடு, வங்கியாளர்கள் மற்றும் ஊகவணிகர்களின் இருப்புநிலைக் குறிப்புகளை ஊதிபெருக்க வைப்பதற்காக அல்லாமல், ஒட்டுமொத்தமாக தொழிலாளர்களின் மற்றும் சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும்.

ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தை முன்னெடுக்க தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய தலைமையைக் கட்டியெழுப்புவதே அதுபோன்றதொரு போராட்டத்திற்கான அடிப்படை முன்நிபந்தனையாகும். அதுவே நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் முன்னோக்காகும், அது மட்டுமே ஒரு சோசலிச அடித்தளத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காக போராடுகிறது. இத்தகைய ஒரு போராட்டத்தை நடத்துவதற்கேற்ற தலைமையை அபிவிருத்தி செய்ய, ஆஸ்திரேலியாவில், அமெரிக்காவில், ஜேர்மனியில், சீனாவில் மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தளத்தை தொடர்பு கொள்ளுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.