சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கலை விமர்சனம்

The defense of culture and the crisis in Detroit

கலாச்சாரத்தின் பாதுகாப்பும் டெட்ராய்ட்டின் நெருக்கடியும்

By David Walsh
17 September 2013

Use this version to printSend feedback

பின்வருவது ஜூன்13,2013 அன்று டெட்ராய்ட் கலை நிறுவனத்தின் கலைப் படைப்புக்களை விற்கும் அபாயம் குறித்து கலைத்துறை ஆசிரியர் டேவிட் வோல்ஷ் அவர்களால் பொதுக்கூட்டத்தில் வழங்கப்பட்ட உரையின் தொகுக்கப்பட்ட பதிப்பாகும். டார்டனியன் கோலியரின் மேயர் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. DIA ஐ பாதுகாப்பதற்கான பிரச்சாரம் குறித்த கூடுதல் தகவல்களுக்கு defendthedia.org. இனை பார்க்கவும்.

நகரத்தின் கடனை அடைப்பதற்காக விற்பனை செய்யக் கூடிய வகையிலுள்ள சொத்தாக டெட்ராய்ட் கலை நிறுவன (DIA) படைப்புகள் இருக்கின்றனவா என்பது குறித்து அவசரகால மேலாளர் கெவின் ஓர் மற்றும் அவரது ஆதரவாளர்களும் கலந்துரையாடுகின்றனர் என்ற செய்தி 2013 மே மாத பிற்பகுதியில் கடுமையான கோபம், கொந்தளிப்பு மற்றும் வெறுப்பை கூட ஏற்படுத்தியது. அவ்வுணர்ச்சிகளை எடுத்துக்காட்டுகின்ற அருங்காட்சியகத்திற்கு செல்வோர் மற்றும் நகரவாசிகளின் நேர்காணல்கள் தொடர்பான பல கட்டுரைகளை உலக சோசலிச வலைத் தளம் வெளியிட்டிருக்கிறது.

இது ஒரு புரிந்துகொள்ளத்தக்க மற்றும் ஆரோக்கியமான பிரதிபலிப்பாகும். டெட்ராய்ட் மற்றும் அப்பகுதி மக்களால் உருவாக்கப்பட்டதும் மற்றும் அவர்களுக்கு சொந்தமான கலைப்படைப்பின் மீது வசதிபடைத்த கடன் கொடுத்தவர்கள் கை வைக்கக்கூடும் என்ற எண்ணம் அச்சுறுத்த வைப்பதாகும்.

நாங்கள் இந்த DIA பிரச்சனையை தீவிர அக்கறையுடன் எடுத்துக் கொள்கிறோம் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். அவசரகால மேலாளரின் மற்றும் கடன் கொடுத்தவர்களது அச்சுறுத்தல் மக்களின் ஜனநாயக, கலாச்சார உரிமைகள் மீதான ஒரு தாக்குதலாகும். இது இந்த நாட்டில் நடந்துவரும் சமூக எதிர்ப்-புரட்சியின் ஒரு கூறுபாடாகும்.

சமூக எதிர்புரட்சி என்பது நாம் எளிதாக ஒதுக்கித் தள்ளிவிடக்கூடிய ஒரு சாதாரண வார்த்தையல்ல. நான் நிரூபிக்க முயற்சிப்பது போன்று, மக்கள் கலாச்சாரத்தை அணுகுவது என்பது இந்த நாட்டிலும், (எல்லாவற்றுக்கும் மேலாக, உள்நாட்டுப் போர்) உலகமெங்கிலும் சமூகப் புரட்சியினால் ஏற்பட்ட விளைவாகும். இது பெரும் பணக்காரர்களால் செல்வம் குவிக்கப்படுவதன் வழிமுறையாக இருக்கும்வரை, அங்கு மக்கள் செல்வது இனி ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கின்றது. கடன் கொடுத்தவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பதற்கும் அல்லது டெட்ராய்ட் மக்கள் DIAஇற்குள் நுழைய முடியக்கூடிய நிலையில் இருப்பதற்கும் இடையில் முரண்பாடு இருக்குமானால், தற்போதைய நிலைமைகளின் கீழ் எந்த வழியில் இப்பிரச்சினை தீர்க்கப்படும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இதுதான் கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒரு அரசியல் கேள்வியும், இது நமது பார்வையில் புரட்சிகர தாக்கங்களைக் கொண்டதுமாகும்.

கோபப்படுவது நியாயமானது, ஆனால் தற்போதைய நெருக்கடி குறித்த ஒரு முன்னோக்கும் மற்றும் அதை புரிந்து கொள்வதும் மிக முக்கியமானது. அவசரகால மேலாளர், டெட்ராய்ட் நகரசபை, மிச்சிகன் மாநில சட்டமன்றம், ஆளுனர் ஆகியயோரின் முன் எதிர்ப்பைக் காட்டுவதில் எதுவும் நடக்கப்போவதில்லை. இதில் உள்ளடங்கியுள்ள பிரச்சனைகளை கவனமாக விளங்கிக்கொண்டு ஜனநாயகக் கட்சி, உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் சுயாதீனமான ஓர் இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது.

தங்களது செல்வத்தை தக்கவைத்துக் கொள்ள, டெட்ராய்ட் மக்கள்தொகையை வறுமையடைய செய்ய, அதனை ஏழ்மையான மாநிலமாக மாற்ற பணக்காரர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளே தற்போதைய பிரச்சனையில் உள்ள உந்துசக்தியாகும். வங்கியாளர்கள் நாட்டினை அழிவின் விளிம்பில் தள்ளியிருப்பதோடு, அதற்காக உழைக்கும் வர்க்கம் விலைசெலுத்த வேண்டுமென்று விரும்புகின்றனர்.

அவசரகால மேலாளர், அவரது குழு, பங்குப்பத்திர உரிமையாளர்கள் மற்றும் கடன் கொடுத்தவர்களைப் பொறுத்தவரையில் DIA இல் உள்ள கலைப்படைப்புகள் எண்ணெய் மற்றும் திரைச்சீலை, கற்கள், கண்ணாடி, மண்பாண்டம் மற்றும் பிற பொருட்களின் வடிவத்திலிருந்து எடுக்கப்படுகின்ற சாதாரண பணக் குவியலே. அவர்கள் தாங்கள் கலைப்படைப்பின் மீது கைவைக்க உரிமையுள்ளவர்கள் என்று நம்புகிறார்கள், ஏனெனில் அவர்கள் தாங்கள் அனைத்தின் மீதும் கைவைப்பதற்கான உரிமை கொண்டவர்கள் என நம்புகின்றார்கள்.

அமெரிக்கா என்பது பெயரளவில் மட்டுமே ஒரு ஜனநாயகமானது. முக்கிய கட்சிகள், ஊடகம், அனைத்து முக்கிய நிறுவனம் உட்பட இந்த நாட்டினை ஒரு நிதி-நிறுவன பிரபுத்துவமே இயக்குகிறது என்பதோடு ஒவ்வொரு முக்கிய தீர்மானங்களையும் அதன் விருப்பப்படியே ஒழுங்கமைக்கிறது. எட்வார்ட் ஸ்னோவ்டென் வெளிப்படுத்திய, ஒவ்வொரு தொலைபேசி அழைப்பு,, மின்னஞ்சல் மற்றும் தொடர்புகள் மீதான அமெரிக்க அரசின் உலக அளவிலான பெரும் உளவு பொதுவாக இந்த நாட்டில் எந்த அளவுக்கு ஒரு போலீஸ் அரசுக்கான கட்டமைப்புகள் ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ளன என்பதை வெளிப்படுத்துகிறது.

அமெரிக்க வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தின் மீதும் பில்லியனர்களுக்கு ஒரு தடுப்புரிமை (veto) இருக்கிறது. அவர்களது செல்வத்தை எவரும் தீண்டமுடியாது. இந்த அரசாங்கம் பணக்காரர்களால், பணக்காரர்களுக்காக, பணக்காரர்களுடைய அரசாங்கமாகும்.

இந்த அர்த்தத்தில், பிரபுத்துவக் கொள்கை திரும்ப வந்திருப்பதை நாம் விவாதித்திருக்கிறோம். அதாவது, மருத்துவமனைகள், பள்ளிகள், அருங்காட்சியகங்கள் போன்ற அடிப்படை உரிமைகள் மக்களுக்கு இல்லை என்பதும், அவர்கள் இத்தகைய அடிப்படையான சமூக தேவைகளைப் பெறவேண்டி இருக்கிறது என்றால், அது பெரும் செல்வந்தர்களின் பெருந்தன்மையின் விளைவாகும் என்ற கருத்து மீண்டும் வந்துள்ளது. அவ்வாறாயின் உதாரணத்திற்கு பில் கேட்ஸ் அல்லது வாரன் பவெட் அல்லது ஃபேஸ் புக்கின் மார்க் ஸக்கர்பேர்க் DIA தொடர்ந்து இருக்கவேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள் என்றால் அல்லது உதாரணத்திற்கு ஒரு நகரத்தினை அல்லது ஒரு சிறிய மாநிலத்தை வாங்கி அவற்றை தொடர்ந்து இயங்கவைத்தால் நாம் அனைவரும் அவர்களுக்கு நன்றியுடையவர்களாக இருந்து மரியாதை செலுத்தவும் வேண்டும்.

நிச்சயமாக, பில்கேட்ஸ் தனது பணத்தை திரும்ப எடுத்துக்கொண்டு அருங்காட்சியகத்தை மூட அல்லது கலைப் படைப்புகளை அவரது வீட்டின் நிலக்கீழ் அறையில் அல்லது அவருக்கு சொந்தமான அருங்காட்சியகத்தில் வைப்பதாக முடிவெடுத்தால், எளிதாக நமக்கு அதிர்ஷ்டமில்லை எனலாம். இது அமெரிக்காவில் அமெரிக்க புரட்சி மற்றும் உள்நாட்டுப் போர் சகாப்தங்களின் அடிப்படை ஆவணங்களில் வெளிப்பாட்டினைக் கண்ட, பல நூற்றாண்டுகளின் முற்போக்கான சமூகச் சிந்தனைக்கு எதிரானதாக இருக்கின்றது.

ஆரம்பத்திலேயே, இந்த உரையின் கருத்துக்களில் ஒன்றை, கேள்வியின் வடிவத்தில் முன்வைக்க விரும்புகிறேன். இந்நகரத்தினதும் மற்றும் இப்பிராந்தியத்தினதும் உழைக்கும் மக்கள் பார்க்கக்கூடிய வகையில், அப்படியே அதன் கலைப்படைப்புகளுடன் DIA ஒரு அருங்காட்சியகமாக அதன் இருப்பு என்பது, நெருக்கடிகள் சூழ்ந்த, அதிகரித்துவரும் சர்வாதிகாரமிக்கதும், மிகப்பெரும் செல்வந்தர்கள் சிலரின் நலன்களுக்காக இயங்கும் அமெரிக்க முதலாளித்துவ சமூகத்துடன் இணங்கியிருக்கமுடியுமா? சில நிமிடங்கள் இக்கேள்வியை நினைவில் வைத்துக் கொள்ளவும். பின்பு அதற்கு திரும்புகிறேன்.


The Detroit Institute of Arts

முதலில், நாட்டின் சிறப்பான கலைப்படைப்புகளுடன் கூடிய ஓர் அசாதாரணமான நிறுவனமாக அனைவரும் அங்கீகரிக்கின்ற DIA இன் வரலாற்றினையும் தன்மையையும் பற்றிச் சிறிது பார்க்கலாம்.

DIA, டெட்ராய்ட் கலைப் பொருட்களுக்கான அருங்காட்சியகமாக 1885 மார்ச்சில் அமைக்கப்பட்டது. செய்தித்தாள் நிறுவனரும் (Detroit News) கொடையாளருமான ஜேம்ஸ் இ. ஸ்கிரிப்ஸ் மற்றும் பலசரக்கு வியாபாரியும் மதுபான தயாரிப்பாளருமான ஹிராம் வால்கரும் இதன் ஆரம்பகட்ட புரவலர்கள் ஆவர். இந்த அருங்காட்சியகம் முதன் முதலில் ஜெஃபர்சன் மற்றும் ஹேஸ்டிங்கின் ஒரு மூலையில் கட்டப்பட்டு, 1888 செப்டம்பரில் திறக்கப்பட்டது.

கார் தொழிற்துறையின் வளர்ச்சி டெட்ராய்ட்டில் வர்த்தகம் மற்றும் மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு அடிக்கோலிட்டது. கலை அருங்காட்சியகத்தினை விரிவுபடுத்தல் குறித்து 1905 இன் ஆரம்பத்தில் விவாதிக்கப்பட்டது. 1919ல் உலகப் போரினை அடுத்து, எட்சல் ஃபோர்ட் (பிரபல உற்பத்தியாளரின் மகன்) மற்றும் புகழ்பெற்ற கட்டிடக்கலை நிபுணரான ஆல்பேர்ட் கான் ஆகியோரை உள்ளடக்கிய கலைகளுக்கான ஒன்றியம் ஒன்று அமைக்கப்பட்டது, அந்த நிறுவனத்திற்கு டெட்ராய்ட் கலை நிறுவனம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதே வருடம், இவ் அருங்காட்சிசாலை டெட்ராய்ட் நகரின் ஒரு துறையாக்கப்பட்டது.

புதிய கட்டிடத்தை வடிவமைப்பதற்காக கான் பிரான்சில் பிறந்த போல் கிரே ஐ தேர்வு செய்தார். அது 1927 அக்டோபரில் திறக்கப்பட்டது. அந்த நேரத்தில், அருங்காட்சியகத்திற்கு அதிக அளவு பங்களிப்பினை செய்த, ஜேர்மனியில் பிறந்த வரலாற்றாசிரியரும் விமர்சகருமான வில்லியம் வலன்ரீனர் இயக்குனராக நியமிக்கப்பட்டிருந்தார்.

1992ல் புதிய கட்டிடத்திற்கான முன்மாதிரியாக, இன்னொரு செய்தித்தாள் உரிமையாளரான ரால்ஃப் ஹெச்.பூத் (Ralph H. Booth) ”தொழிற்துறையில் முதலிடத்தையும் செல்வத்தில் பொறாமைப்படும்படியான இடத்தினையும் டெட்ராய்ட் அடைந்திருக்கிறது, ஆனால்எந்திரத்தனமான உற்பத்தி மட்டுமே நமது உண்மையான நோக்கமல்ல என்று குறிப்பிட்டார். டெட்ராய்ட் அறிவொளிமயமாக்கல் மற்றும் முன்னேற்றத்தின் நகரம் என்பதற்கு உலகிற்கு உறுதியான ஆதாரங்களை புதிய அருங்காட்சியகம் கொடுக்கும் என்று பூத் கருதினார். நமது வாழ்க்கை நிறைவாக, செழிப்பாக இருக்கலாம் என்பதற்காகவும் எதிர்கால தலைமுறையின் உண்மையான மேம்பட்டதன்மைக்காகவும் நாகரிகம் பங்களிப்பு செய்வதாக நாம் சிறப்பாக கூறலாம்.

பொருளாதார மந்தநிலையின் உச்சக்கட்டத்தில், வலன்ரீனர் தனது டெட்ராய்ட்டின் தொழிற்துறை சுவர் சித்திரங்களுக்கு வர்ணம்பூசுவதற்காக புகழ்பெற்ற மெக்சிகன் கலைஞரான டியேகோ ரிவேராவை நியமித்தார், அவை முதன்முதலாக மக்கள் பார்வைக்காக 1993ல் திறக்கப்பட்டன. (Eighty years of the Diego Rivera murals at the Detroit Institute of Arts” – ஐ பார்க்கவும்)

மிகப் பொதுவாக, கார் தொழிற்சாலையின் சரிவு மற்றும் அமெரிக்க முதலாளித்துவத்தின் உலகளாவிய நிலையுடன் ஒத்துப்போகும் வகையில், DIAஇன் எதிர்காலத்தின் வீழ்ச்சியும் டெட்ராய்ட்டின் கலாச்சார வாழ்க்கை மீதான தாக்குதலும் 1970ல் ஆரம்பித்தது. 1975ல் முதன்மை நிதி உத்தரவாதம் அளிப்பவராக மிச்சிகன் அரசாங்கம் DIA ஐ எடுத்துக் கொண்டது. 1992ல், மாநில அரசு அருங்காட்சியகத்திற்கான உதவிநிதிஒதுக்கீடுகளை 40 சதவீதமாக குறைத்ததுடன், ஆறு வருடங்கள் கழித்து அருங்காட்சியகத்தின் செயல்பாடுகள் DIA ஸ்தாபகர்கள் சங்கத்திற்கு கீழ் துணை ஒப்பந்தத்திற்கு விடப்பட்டன. அதிகமாக அல்லது குறைவாக நிரந்தர நெருக்கடியான ஒரு நிலைமை பல வருடங்களாக நிலவியது.

DIA குறித்த சில உண்மைகள்: இது அமெரிக்காவில் நகராட்சிக்கு சொந்தமான இரண்டாவது பெரிய அருங்காட்சியகமாகும் 100 கலைக்கூடங்களும் மற்றும் 65 ஆயிரம் படைப்புகளுடன் (உண்மையில் அனைத்தும் பார்வைக்காக இல்லை) இது நாட்டில் ஆறாவது பெரிய அருங்காட்சிசாலையாகும். அமெரிக்காவில் மூன்றாவது பெரியதாக இருக்கும் DIA வின் கலைப்பொருட்களான குறிப்பாக அமெரிக்க ஓவியங்கள், சிறப்பு வாய்ந்தவை. வன்சென்ட் வான் ஹோக் மற்றும் ஹென்றி மற்றீஸின் (1922) படைப்புகளை வைத்திருக்கும் நாட்டின் முதல் பொது அருங்காட்சியகமாகும்.

20ம் நூற்றாண்டின் முதல் பாதியில் கலை உலகில் முக்கியத்துவம் வாய்ந்த பிரபல நபரான வால்டர் பேச், கலைஞரும் விமர்சகரும் மற்றும் வரலாற்றாசிரியருமாவார். நியூயோர்க்கில் 1913ல் புகழ் பெற்ற நவீன கலையின் காட்சியான Armory Show இன் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான பேச், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கலைஞர்கள் ரோபர்ட் ஹென்றி, குளோட் மொனே, மார்செல் டுசாம்ப் மற்றும் டியேகோ ரிவேரா போன்ற பல்வேறுபட்டவர்களை அறிந்திருந்தார்.

அவரது The Art Museum in America (1948) என்னும் புத்திகத்தில், பேச்டெட்ராய்ட் கலை நிறுவனம்: சிறப்பான புராதன ஐரோப்பிய, கிழக்கத்திய, அமெரிக்க மற்றும் நவீன, பயனுறு கலைகள் (குறிப்பாக துணியியல்) ஆகியவற்றின் நிபுணத்துவத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கின்ற மற்றும் மக்களுக்கும் கலைப்பொருட்களுடனான தொடர்பு ஆகியவற்றால் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது... அருங்காட்சியகத்தின் சுவரில் வரையப்பட்ட டியேகோ ரிவேராவின் ஓவியங்கள், மற்றும் நகரின் சிறப்புவாய்ந்த தொழிற்சாலைகளைக் காண்பிப்பவை ஆகியவை அதிக அளவிலான மக்களை அடிக்கடி தங்களது காட்சிக்கு வர வைப்பதற்கான காரணம் என்பதுடன் அவை டெட்ராய்ட்டின் செல்வந்தர்களிடமிருந்து பயனுள்ள ஆதரவினையும் பெற்றிருந்தன. எகிப்திய, கிரேக்க, ரோமானிய, சீன, ஜப்பானிய, இந்திய, பைசந்தானிய, கோதிக், மறுமலர்ச்சி மற்றும் நவீன கலை ஆகியவை முக்கிய காட்சிகள். ஓவியங்களில் குறிப்பாக இத்தாலியன், டச், ஃப்ளெமிஷ், பிரெஞ்சு, மற்றும் அமெரிக்க படைப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. கிழக்கத்திய அரைக்கோள பகுதி மக்களைப் போன்ற அதே தடத்தில் அதிக அளவில் இந்தியர்களை (குறிப்பாக புராதன மெக்சிக்கோவினர்) உள்ளடக்கும் இந்நாட்டின் முதல் பெரும் பொருட்காட்சிசாலையாகும் என எழுதுகின்றார்.

பரந்த அளவிலான உழைக்கும் மக்களுக்கான ரிவேராவின் ஓவியங்களது தன்மை குறித்து பேஷின் கருத்து அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.

DIA வை 1880ல் அமைத்தது ஒரு தேசிய நிகழ்ச்சிப்போக்கின் ஒரு பாகமாகும். அமெரிக்காவில் 19ம் நூற்றாண்டில் கலை மற்றும் விஞ்ஞான அருங்காட்சியகங்களை திறப்பது அறிவொளிக்கருத்துக்களுடன் பொதுக் கல்வியின் முன்னேற்றம் மற்றும் பொதுவான சமுதாய மற்றும் கலாச்சார ரீதியிலான முற்போக்கு நிகழ்ச்சி நிரலுடன் ஒருங்கிணைந்திருந்தது.  அதுவரை ஐரோப்பாவை ஆதிக்கம் செலுத்திய முடியாட்சி மற்றும் முடியரசுவாதத்திற்கு எதிரான அரணாக இந்த அறிவுபெற்ற, கலாச்சாரமிக்க மக்கள்திரள் அமெரிக்காவின் முற்போக்கு சிந்தனையார்களால் பார்க்கப்பட்டது.

உள்நாட்டு போர் மற்றும் தீவிரமான மறுகட்டமைப்பு ஆகியவை அமெரிக்காவில் முதலாளித்துவ-ஜனநாயகப் புரட்சியின் உச்சகட்டமாக இருந்தது. அடிமை ஒழிப்பு, பிரபுத்துவ கொள்கைக்கு எதிரான அடியாக பார்க்கப்பட்டது. அமெரிக்க வியாபாரம் குவித்துக் கொண்டிருந்த பெரும் செல்வம் மற்றும் மக்களின் ஜனநாயகம், சுய-நம்பிக்கை இரண்டாலும் பிரதான அருங்காட்சியகத்தை உருவாக்குவது சாத்தியமானது, அது அடிமைத்தனம் மீதான வெற்றியுடன் ஒரு புதிய மட்டத்தை எட்டியிருந்தது.

பென்சில்வேனியாவை சேர்ந்த தீவிர குடியரசுக் கட்சியாளரான தாடியஸ் ஸ்டீவன்ஸ் 1865ல் அனைவரும் சமமென்ற மனநிலையில் பின்வருமாறு பேசினார்: “நமது தந்தையர் குடும்பங்கள் அல்லது இனங்களின் சட்டபூர்வமான மேன்மையின் ஒட்டுமொத்த கோட்பாட்டையும் நிராகரித்து, சட்டத்தின் முன்பு மனிதர்கள் அனைவரும் சமம் என்பதை அறிவித்தனர். அந்த அடிப்படையில் அவர்கள் ஒரு புரட்சியை உருவாக்கி குடியரசை அமைத்தனர். அவர்கள் அடிமைத்தனம் மூலம், அதுவரையிலும் பரவலாக சார்ந்திருந்த, மேல்மட்டத்தை கச்சிதமாக்குவதிலிருந்து அவர்கள் தற்காத்துக் கொண்டனர் ஐக்கிய அரசின் நன்மைக்காக, அவர்கள் காத்திருக்க ஒத்துக் கொண்டனர், ஆனால் அதன் இறுதி முடிவு குறித்த எண்ணைத்தைக் கைவிடவில்லை. அவர்கள் கவலையுடன் முன்னோக்கி எதிர்பார்த்த நேரம் வந்திருக்கிறது. அவர்களது பணியினை முடிக்க வேண்டியது நமது கடமை.”

ஐக்கிய அரசினை காப்பதற்காகவும் அடிமைத்தனத்தை வெல்வதற்காகவும் உள்நாட்டுப் போரிலிருந்து வெளிப்பட்ட, பெரும் கஷ்டங்களை அனுபவித்த தலைமுறையானது அறிவு, முன்னேற்றம் மற்றும் கலாச்சாரப் பசியில் இருந்தது. உதாரணத்திற்கு சிகாகோவிலோ, அல்லது டெட்ராய்ட்டின் நகர்ப்புறத்தில் எஞ்சியுள்ள கட்டிடக்கலையமைப்பில் அதனைக் காணலாம்.

கையில் அதிக படைப்புகளை வைத்திருந்த, ஐரோப்பிய கலை நிறுவனங்கள் எதிர்கொள்கின்ற சூழ்நிலைக்கு எதிராக, 1800களின் பிற்பகுதியில் மற்றும் 1900களின் ஆரம்பத்தில், அமெரிக்காவின் அருங்காட்சியகங்கள் பெருமளவு தரமான கலைப் படைப்புகளால் தங்களது அதிகபட்ச இடத்தை நிரப்பிக் கொள்ள வேண்டுமென்றால், கடல்கடந்து போக வேண்டிய மற்றும் குறிப்பிடத்தக்க அளவிலான வளங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டி இருந்து என்பதை நினைவில் வைக்கப்பட வேண்டும். அறிவொளிமிக்க கொள்ளைக்கார பெருமுதலாளிகள் அல்லது அவர்களது ஆலோசகர்கள் இந்த வேலையை அதிகம் செய்தனர். தொழிலாள வர்க்கத்தைப் பொறுத்தவரையில் இந்த வியாபாரிகள் பன்றிகளாவர். ஆனால் அவர்களிடம் கலை மற்றும் கலாச்சாரம் குறித்த உணர்வும் கொஞ்சம் இருந்தது, அல்லது அந்த உணர்வுள்ள மக்களை அவர்கள் வாடகைக்கு அமர்த்திக் கொண்டனர்.

அமெரிக்காவில் அருங்காட்சியகங்களின் வரலாறு குறித்த தனது படைப்பில், பேச் பின்வறுமாறு குறிப்பிட்டார்: “நிலையான வேர் கொண்டிருந்ததும் இந்த அளவுக்கு நம்மிடையே அகன்று பரந்திருந்ததுமாகிய கலை மீதான ஆர்வத்தில் உள்நாட்டுப் போர் குறுக்கீடு செய்திருக்கிறது... ஆனால் மோதல் முடிந்தது, நாடெங்கிலும் இரயில் பாதைகள் உள்ளன, உற்பத்தி அதிகரித்தது, புதிய குடியேற்றங்கள் மேற்கினை இணைத்தது, கடல் வர்த்தகம் கிழக்கின் துறைமுகங்களை நெரிசல் மிக்கதாக்கியது மேலும் எப்போதுமில்லாத அளவு கலைக்காக அதிக பணம் அர்ப்பணிக்கப்பட்டது. சுதந்திர அமெரிக்காவின் நூற்றாண்டு நெருங்கி வருகிறது மேலும், பிலெடெல்பியாவில் பெரும் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் பல வருடமாக நடைபெற்று வருகிறது. அதன் கலை கண்காட்சி நமது வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. ஆனால், நியூயோர்க் மற்றும் பொஸ்டன் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்ட பொழுது, மனிதர்களின் சிந்தனை ஆறு வருடங்களுக்கு முந்தைய நிகழ்வுகளால் அந்த திசையில் திருப்பப்படாமல் இருந்திருந்தால், கண்காட்சி முன்பு இருந்தது போன்ற அதன் தாக்கத்தினை பெற்றிருக்காது. முந்தைய முயற்சிகளின் நீண்ட வரலாற்றுடனும் தனது நிரந்தர காட்சிப்படைப்புகளுடனும் கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் சின்சினாட்டி செயல்பட ஆரம்பித்தது. அமெரிக்காவின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகமும் அதே வருடத்தில் அமைக்கப்பெற்று, இப்படியாக 1870 நமது வரலாற்றில் மிக முக்கியமான வருடமாகிறது.”



வால்டர் பேச்

1869ல் பகிரங்கமாக விவரித்தது போன்று நியூயோர்க்கில் அதிகாரிகள், “(சென்ட்ரல்) பார்க்கில் ஒரு அருங்காட்சியகம் அமைப்பது, அது நாட்டின் சிறந்த கல்வித் திட்டத்திற்கு உதவிகரமாக இருக்கும், இயற்கை வரலாற்றின் அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி விஞ்ஞானபூர்வமான முயற்சிகளை மேம்படுத்தும், மேலும் அதேநேரம் நாட்டு மக்களுக்கும் அதனைப் பார்வையிடும் மக்கள் திரளுக்கும் பயனுள்ள வகையிலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையிலும் உள்ள இடமாக இருக்கும்,” என ஒத்துக்கொண்டனர்.

பொதுக்கல்வித் திட்டத்தின் அழிவினையும் உள்ளடக்குகின்ற இந்த மொத்த வரலாற்று நிகழ்ச்சிப்போக்கு இன்று வெளிக்கொணரப்படுகிறது,

நுண்கலைகளுக்கான பொஸ்டன் அருங்காட்சியகம் 1870 இல் அமைக்கப்பட்டது, அதே வருடம் பெருநகர கலை அருங்காட்சியகம், 1876 இல் பிலெடெல்பியா கலை அருங்காட்சியகம், 1879 ல் சிகாகோ கலைக் கழகம் மற்றும் 1881 இல் சின்சினாட்டி அருங்காட்சியகம் ஆகியவையும் அமைக்கப்பட்டன.

இந்த நிறுவனங்களை நாம் உயர்வாக நினைப்பதில்லை. அவையும் ஆளும் மேல்தட்டின் கௌரவத்தையும் சக்தியையும் ஊக்குவிப்பதற்காகவே கட்டப்பட்டன என்பதுடன் அவை மேல்தட்டினராலேயே நடத்தவும்படுகின்றன. DIA உள்ளிட்ட அவை, அனைத்து மக்களும் பார்க்கக்கூடியதாக இல்லாதிருப்பதற்கு காரணம் நாம் வர்க்க சமுதாயத்தில் வசிக்கிறோம் என்பதேயாகும். உழைக்கும் வர்க்கம் ஒடுக்கப்பட்ட வர்க்கம் என்பதுடன் இலாப அமைப்புமுறையின் கீழ் கலாச்சாரத்திலிருந்தும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

முதலாளித்துவ கலாச்சாரத்தின் அடிப்படை அம்சங்களை பெற்றுக்கொள்வதற்கு முன்னர் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை எடுத்துக்கொள்ள நிரப்பந்திக்கப்படுகிறது. அந்த சமுதாயம், கலாச்சாரத்தை அணுக தங்களைஅனுமதிக்கவில்லை என்ற காரணத்திற்காகவே புரட்சிகர வன்முறையின் மூலம் முதலாளித்துவ சமுதாயத்தை தூக்கியெறிய கட்டாயப்படுத்தப்படுகிறது என்று ட்ரொட்ஸ்கி தனது கலையும் புரட்சியும் (Literature and Revolution) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

ஆயினும், முந்தைய காலகட்டத்தில் தொழிலாள வர்க்கம் குறித்து வந்த பயமும் அதன் பிரசன்னமும் அமெரிக்க முதலாளித்துவத்திடமிருந்த பெரும் செல்வமும் சில கலாச்சார வெற்றிகளை பெறுவதை சாத்தியமாக்கியது, அவை தற்போது அமெரிக்க முதலாளித்துவத்தின் சரிவு மற்றும் சீரழிவுக்காலகட்டத்தில் பறிக்கப்படும் நிலையில் உள்ளன.



பீட்டர் புறூகெல் இன்
The Wedding Dance

DIA கலைப்படைப்புகளில் கையளவுக்கும் அதிகமான மிகச்சிறப்பான படைப்புகளைக் குறிப்பிடுவது சாத்தியமற்றது. ஃபிளமிஷ் கலைஞரான, பீட்டர் புறூகெல்லின் (c. 1525-1569) The Wedding Dance, சந்தேகத்திற்கு இடமின்றி அப்படிப்பட்ட ஒரு சிறந்த படைப்பு. ”விவசாயி புறூகெல் என்று அறியப்படும் ஓவியர், தினசரி வாழ்க்கையின் யதார்த்தத்தை அறிந்துகொள்வதற்காக நெதர்லாந்திற்கும் இப்போதைய பெல்ஜியத்திற்கும் மாறுவேடத்தில் சாதாரண மக்கள் மத்தியில் சென்றார். இது நடைபெற்றது 1500களின் மத்தியிலாகும். வெளிப்படையான மத அல்லது புராதன குறிப்புகள் இன்றி தினசரி வாழ்க்கையை சித்தரிக்கும் இயற்கை ஓவியம் வரைவதிலும் (landscape painting) இவர் பெரும் திறமை வாய்ந்தவராவர்.

இந்த படைப்புக்களுள் இன்னொரு சிறந்த படைப்பு வன்சென்ட் வான் ஹோக்கின் Self-portrait (1887). 1883கடித்ததில் கலை வியாபாரிகள் குறித்த வான் ஹோக்கின் கருத்துக்களை எடுத்துக் கொள்ளவில்லையென்றால், நான் தவறிழைத்தவனாகியிருப்பேன். “கலை வியாபாரம் பெருமளவுவங்கியாளர்களின் ஊகம் மாதிரி ஆகிவிட்டது என்பதுடன் இப்போதும் அப்படியே இருக்கிறதுமுற்றிலும் என்று சொல்லவில்லை எளிமையாக சொல்வதென்றால் அதிகமாக, மிக அதிகமாக எனக் கூறலாம்…..”



வன்சென்ட் வான் ஹோக்
சுய உருவப்படம்

ஒரு காரணத்திற்காக அல்லது இன்னொரு காரணத்திற்காக விலையுயர்ந்த ஓவியங்களை வாங்கும் பல செல்வந்தர்கள், அதில் அவர்கள் பார்க்கும் கலைத்துவ மதிப்பிற்காக அவற்றை வாங்குவதில்லை என நான் வாதிடுவேன்.

உண்மை, அங்கே உத்தமமான கலை பிரியர்களும் உள்ளனர். ஆனால் நடைபெறுகின்ற வியாபாரத்திற்குள் அவர்கள் அநேகமாக பத்தில் ஒரு பகுதியினரே எனலாம். அநேகமாக, அதைவிட இன்னும் குறைந்த அளவினராககூட இருக்கலாம் அவர்களுக்காக, இப்படிப்பட்ட பரிமாற்றங்கள் உண்மையாக கலைமீதுள்ள நம்பிக்கைக்காக மட்டுமே என்று சொல்ல முடியும்.

கலை ஊகவியாபாரம் பற்றி பேசும்போது, மிக விலையுயர்ந்த 48 ஓவியங்கள் இதுவரை விற்பனையாகியுள்ளது, அவற்றுள் ஏழு வான் ஹோக்கின் உடையது என்பது குறிப்பிடப்பட வேண்டியது. அவை இணைந்து 700 மில்லியன் டாலர்களுக்கு, அனைத்தும் கடந்த 25 வருடங்களுக்குள் விற்கப்பட்டன. அவரது Dr. Gachet இன் சுய-உருவப்படம் 82.5 மில்லியன் டால்ர்களுக்கு (தற்போதைய டாலர்களில் 155.7 மில்லியன் டாலர்கள்) 1990ல் வாங்கப்பட்டது. இதுபற்றி வான் ஹொக் என்ன கூறியிருப்பார்?

ஏற்கெனவே குறிப்பிட்டது போன்று, டியேகோ ரிவேராவின் டெட்ராய்ட் தொழிற்சாலை ஓவியங்கள் DIA இன் உடலியல் மற்றும் அறிவுசார்ந்த மையமாக இருந்தது. அவர்களது ஓவியக் காலகட்டமான 1932-33ல், கம்யூனிசத்திற்கு எதிரானவர்கள் மற்றும் மத வெறியர்களால் சுவரோவியங்கள் தீவிர தாக்குதலுக்கு உள்ளானது. இயற்கை மற்றும் தொழிற்சாலைக்கான அவர்களது மரியாதைக்காகவும் மதம் மற்றும் கடவுள் விலக்கல் ஆகியவற்றுக்காகவும்மதநம்பிக்கையற்றவர்கள் என்றும்இறைநிந்தனைவாதிகள் என்றும் மேலும் அவர்கள் தொழிற்துறை தொழிலாளர்களை முன்னணியில் வைத்ததற்காககம்யூனிசவாதிகள் என்றும் குற்றம்சாட்டப்பட்டனர். உயர்ந்த கலையும் உயர்ந்த அரசியலும் இணைந்து வரும் நவீன தொழிற்சாலையின் பிறப்பிடத்திலும், பெரும் வர்க்க வெடிப்புகளின் விளிம்பிலும் உண்மையில் உலக அளவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படைப்புகளை ரிவேரா உருவாக்கினார்.

 

டியேகோ ரிவேராவின் டெட்ராய்ட் தொழிற்சாலை சுவர் ஓவியங்கள்

19ம் நூற்றாண்டு, அமெரிக்க ஓவியர்கள் மற்றும் வியத்தகு ஆபிரிக்க கலைப் படைப்புகளினூடாக விரைவாக கடந்து செல்ல மட்டுமே முடியும். DIA ஒரு கலை களஞ்சிய அருங்காட்சியகம், ஆதிகால மக்களது படைப்புகளின் மாதிரிகளும் பழமையான சகாப்தத்தின் படைப்புகளும் அதில் உள்ளடங்கும்.

ஒரு நிறுவனமாக கலை அருங்காட்சியகத்தின் வளர்ச்சி, இந்நாட்டில் இரண்டாம் அமெரிக்கப் புரட்சி, உள்நாட்டு யுத்தம் ஆகியவற்றோடு தொடர்புடையது என்பதுடன் மற்ற நாடுகளின் பெரும் சமூகப் புரட்சிகளுடனும் இதற்கு நெருங்கிய தொடர்புண்டு.

மேற்கத்திய உலகில், கலைப்படைப்புகள் தேவாலயங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டன. அவற்றுக்காக கலைஞர்கள் தரகுத்தொகை எடுத்துக் கொண்டனர். ஒரு முறையான முதல் கலை அருங்காட்சியகமான உவீஸி (Uffizi) ஃப்ளோரன்சின் நகரில் இத்தாலியில் மறுமலர்ச்சிக் காலகட்டத்தில் அமைக்கப்பட்டது. அது நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான பொருளாதார மற்றும் சமூகப் போராட்டம் மற்றும் தேவாலயங்களின் ஆதிக்கத்திற்கு எதிரான புத்திஜீவிதமான போராட்டத்தை உள்ளடக்கியது.

பாரிசில் இருக்கும் உலகின் மிகப்பெரிய மற்றும் அதிகம் பார்வையிடப்படும் (வருடத்திற்கு 9 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள்) கலை அருங்காட்சியகமான லூவர், 1789 பிரெஞ்சுப் புரட்சியின் நேரடி உருவாக்கமாகும். மில்வோக்கீ கலை அருங்காட்சியகத்தின் முன்னாள் இயக்குனரான டேவிட் கோர்டன் அவரது கட்டுரையில், ”கலை அருங்காட்சியகம்” ”சமத்துவம் ஆகியவை கலை அருங்காட்சியகங்களின் முன்னேற்றத்தில் முக்கிய காரணி என்றார். ”ஆட்சியாளர்களால் பல கலை அருங்காட்சியகங்கள் பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட நிலையில்... கலையை தீர்மானமாக பொதுமக்களிடையே கொண்டு சென்றதென்றால், அது பிரெஞ்சுப் புரட்சிதான்.” என்று கோர்டன் எழுதுகிறார்.

பிரான்சின் பழைய ஆட்சியின் கீழ், பகிரங்க கலை அருங்காட்சியகத்திற்கான திட்டங்கள் பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டன. அரசர்களும், மந்திரிகளும்  பின்னடித்தனர். இது நடைமுறையில் துல்லியமான நிலப்பிரபுத்துவக் கொள்கையாகும். அரசன் ஆர்வமாக இருந்தால், நடவடிக்கைகள் தொடரும். அவருக்கு ஆர்வம் இல்லை என்றாலோ அல்லது மற்ற விஷயங்களால் கவரப்பட்டாலோ, செயல்பாடுகள் தேங்கிவிடும்.

1789 பிரெஞ்சு புரட்சியால் ஆட்சிக்கு கொண்டுவரப்பட்ட அரசாங்கம் தீர்மானகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. 16ம் லூயி கைது செய்யப்பட்டு ஒருவருடம் கழித்து, (1792 ஆகஸ்ட்) பொதுமக்கள் பார்வைக்காக அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.

 

லூவரில்
Nike of Samothrace

1792 அக்டோபர் மாதம் புதிய உள்துறை அமைச்சர், ஓவியர் ஜாக்-லூயி டேவிட்டுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில்காலத்தாலும் மற்றும் அனைத்து மக்களுக்கும் பிரெஞ்சு அதன் புகழை நீட்டிக்க வேண்டும்: தேசிய அருங்காட்சியகம் அதன் அனைத்து வகையான அழகிலும் அறிவினைத் தழுவியதாகவும் பிரபஞ்சத்தின் புகழையும் பெற்றதாகவும் இருக்கும். சுதந்திரமான மக்களாக இருக்கத் தகுதி என்ற இந்த சிறந்த கருத்துக்களை தழுவி ... இந்த அருங்காட்சியகம்... பிரெஞ்சு குடியரசின் அதிக சக்திவாய்ந்த எடுத்துக்காட்டாக மத்தியில் இருக்கும் என்றார்.

பிரெஞ்சு புரட்சி தலைவர் ஹென்ரி கிரிகோரி,”முன்பு சலுகையுள்ள மக்களுக்காக மட்டுமே பார்வையிடும் வகையில் இருந்த அந்த பொக்கிஷங்கள்... இனிமேல் அனைவரையும் மகிழ்விக்கும். சிலைகள், ஓவியங்கள் மற்றும் புத்தகங்கள் மக்களின் வியர்வையுடன் தொடர்புடையவை; மக்களின் சொத்து மக்களுக்கே திருப்பியளிக்கப்படும் என்று வலியுறுத்தினார்.

லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியால் தலைமைதாங்கப்பட்போல்ஷ்விக் கட்சியின் 1917 அக்டோபர் மாத ரஷ்யப் புரட்சி, இந்த நிகழ்ச்சிப்போக்கை உயர்ந்த மட்டத்திற்கு இட்டுச்சென்றது. புதிய புரட்சிகர அரசாங்கம், புரட்சியின் ஆரம்பகால இடதுசாரிகள் மற்றும் புதுமைவிரும்பும் கலைஞர்களின் உதவியுடன், மிகத் தீர்மானமான மற்றும் ஜனநாயக-புரட்சிகர நடவடிக்கைகளை முன்னெடுத்தது. 1930க்கு பின்னர் இந்த நிகழ்ச்சிப்போக்கு ஸ்ராலினால் ஒரு மோசமானமுறையில் நிறுத்தப்பட்டன.

1933 இல் ஸ்வெட்லானா டிஸாபரோவா (Svetlana Dzhafarova) தனது கட்டுரையான “The Creation of the Museum of Painterly Culture” இல் முதல் தொழிலாளர் அரசால் எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகள் பற்றிய குறிப்புகளை எழுதினார்: “மாஸ்கோவின் தொலைதூர மாவட்டங்களில், 14 பாட்டாளி வர்க்க அருங்காட்சியகங்கள் உருவாக்கப்பட்டு, அவர்களது தற்காலிக கண்காட்சியின் பன்முகப்பட்ட உள்ளடக்கங்களால் வித்தியாசப்படுத்திக் காட்டப்பட்டன...

இதுபோன்ற சிறிய மாவட்ட அருங்காட்சியகங்கள், ஆயிரக்கணக்கான படைப்புகளுடன் பெரிய அருங்காட்சியகங்களுக்கு மாறாக இருந்ததுடன் அருகாமையிலிருக்கும் தொழிற்சாலைகளிலிருந்து வரும் தொழிலாளர்களுக்காகவே கூடுதல் பயண முயற்சிகளை செலவழிக்க வேண்டிய அவசியமில்லாத வகையில், முதல் முறையாக கலாச்சாரத்தின் பாதுகாப்பகத்திற்காக அழகான மற்றும் வெளிப்படுத்தப்பட வேண்டியவற்றை பார்வையிடுவதற்காக ஒவ்வொரு தொழிலாளியினதும் உடனடிச் சொத்தாக அவை அமைக்கப்பட்டன.

கலை பொக்கிஷங்கள் பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடிய வகையில் செய்ய வேண்டுமென்ற கருத்து, அவர்களது அறிவார்ந்த மதிப்புகளிலுள்ள நம்பிக்கையுடன் இணைந்து, அனைத்து அருங்காட்சியக படைப்புகளுக்குமான அடித்தளத்தை உருவாக்கியது.

சோவியத் அரசின் முதல் ஐந்தாண்டுகளில் மாஸ்கோவில் பெருகி வரும் புதிய அருங்காட்சியகங்களுக்கு மத்தியில், Painterly Culture (1919-1929) மிக சிறப்பு வாய்ந்தது; உலகின் எந்தப் பகுதியிலும் அதற்கு முன்மாதிரி இல்லை. அனைத்திற்கும் மேலாக இந்த அருங்காட்சியகம் அபூர்வமானது, ஏனென்றால் அது நேரடியாக கலைஞர்களாலேயே அமைக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டது... பெற்றுக்கொள்ளல், பதிவு மற்றும் சேமிப்பு மற்றும் மாகாணங்களுக்கு அனுப்பப்பட வேண்டிய அனைத்தையும் மாஸ்கோவில் மைய இடத்தில் திரட்டுவது போன்ற பணிகளுக்கு பொறுப்பாளர்கள் கலைஞர்களே என்பதுடன் மேலும் பிரதிநிதிகள் கூட்டத்தை ஒருங்கிணைத்தது மற்றும் சமகால கலையில் இருக்கும் சிக்கல்கள் குறித்த சுற்றுப் பயணங்கள் மற்றும் சொற்பொழிவுகளை நடத்தியதும், ஒரு நூலகத்தை உருவாக்கியதும் கலைஞர்களே”, என்று வரலாற்றில் கலைஞர்களால் நடத்தப்பட்ட முதல் கலை அருங்காட்சியகம் அமைப்பு விழாவில் டிஸாபரோவா தெரிவித்தார்.

ஸ்ராலினிச ஆட்சியால் 1929ல் இந்த நிறுவனம் மூடப்பட்டது.

சுருக்கமாக, கலை (மற்றும் விஞ்ஞான) அருங்காட்சியகங்களின் திறப்பு மற்றும் அணுகல் என்பது, மக்களின் கலாச்சார ரசனையை உயர்த்துவதற்கான அதன் முயற்சிகளுடன், மனித முன்னேற்றத்தில் ஆர்வம் மற்றும் நம்பிக்கையுடன் கூடிய ஜனநாயக மற்றும் புரட்சிகர சமூக இயக்கங்களுடன் அல்லது அதன் விளைவுகளுடன் தொடர்புடையதாக இருந்திருக்கிறது. தனிநபருடன் மற்றும் நிறுவனங்களுடன் வெளிப்படையாக வித்தியாசமான அனுபவங்களையும், பிரதான கலைக் கண்காட்சி அல்லது அருங்காட்சியை பார்வையிட்ட தன் தாக்கங்களையும் விவரிப்பது இங்கு சாத்தியமல்ல.

இவை பிரதான கலைஞரை சந்தித்த பின்னர் அல்லது கண்காட்சியை பார்த்தபின், நான் பெற்ற எண்ணங்களும் உணர்வுகளும் ஆகும்.

மனித இனத்தால், அதன் சிறப்பான வகையில், உணரமுடிகின்ற உத்வேகமான உணர்வு என்னவெனில் உண்மையில் மனிதஇனம் எந்த தடையையும் புத்திசாதுர்யம், ஆர்வம் மற்றும் அழகுணர்ச்சி ஆகியவை மூலமாக கடக்க முடிகின்ற உணர்வு; அதனால் மனித நேயத்திலும் அதன் சாத்தியக்கூறுகளிலும் ஒரு புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கை; முக்கிய வேலையை தானாகவே செய்வதற்கான ஆசை, மற்றவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் வேலை; மக்களுடனான உறவு உள்ளிட்ட தினசரி வாழ்க்கையின் மிகஅதிகமான இரண்டாம் தரமான மற்றும் அழகற்ற தன்மையுடனான அதிருப்தியும் போன்றவையாகும்.

நாம் உலகை அறியும் வழிகளுள் கலையும் ஒன்று. அது மனிதனை அதிக நெகிழ்வுடையவனாகவும், உணர்வுள்ளவனாகவும், பரிவுணர்வுள்ளவனாகவும் விழிப்புள்ளவனாகவும் ஆக்குகிறது.

கலையின் எதிரி, மக்களின் எதிரியும், தொழிலாள வர்க்கத்தின் எதிரியும் ஆவான்.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, நான் ஏற்கெனவே கேட்ட கேள்வியை மறுபடியும் கேட்கிறேன். தனது சொந்த நலத்தை மட்டுமே கருத்தில் கொள்கின்ற, மக்களை வெறுக்கின்ற மற்றும் அவர்களைக் கண்டு அஞ்சுகின்ற, அமெரிக்காவின் ஜனநாயகத்திற்கு-எதிரான, நெருக்கடிகள்-நிறைந்த, பிரபுத்துவ ஆளும் மேல்தட்டு அதன் பரந்த கலை செழுமையுடன், பொதுமக்கள் பார்வையிடக்கூடிய வகையிலும் அணுகும் வகையிலும் டெட்ராய்ட் கலை நிறுவனத்தை தொடர்ந்து நடத்தும் ஒரு நிலையை கற்பனைசெய்து பார்க்க முடியுமா?

இந்த நாட்டின் ஆட்சியாளர்களைப் பொறுத்தவரையில், தொழிலாள வர்க்க ஜனத்தொகை பிரயோசனமற்றது. தொழிலாளர்களிடம் சொந்தமான மதிப்பு ஏதாவது இருக்கிறதென்றால், அது பணக்காரர்களின் பைகளில் அல்லாது, அது அதற்குரிய இடத்தில் இருக்க வேண்டும், DIA -இன் கலை உள்ளிட்ட எதுவும். அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டு கலைப்படைப்புகளை அனுபவிப்பதற்கான சாதாரண மக்களின் தகமை, பிரபுத்துவ கொள்கைக்கு எரிச்சலூட்டும் ஒன்று. நாம் விவாதிப்பது போன்று, கலை மீது ஆள்பவர்கள் தங்களது கைகளை வைக்கும் வழிகளாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் இங்கு தற்போதுள்ள நிலைமையை தக்கவைத்துக் கொள்வது பற்றி பேசிக் கொண்டிருக்கவில்லை. தற்போதைய சூழ்நிலையில் இது சாத்தியமற்றது. ஏனைய கலாச்சார நிறுவனங்களோடு DIA இற்கும் முறையாக நிதியளிக்க வேண்டும், மேலும் உண்மையாக உருவாக்கப்பட்ட அதன் படைப்புகள் கலைக்கல்வி மூலமாக ஒவ்வொரு மட்டத்திலும் மக்களுக்கு அணுகும்படியாக இருக்க வேண்டும், கலை மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கு நிதியளிக்கப்பட வேண்டும்.

நமது பார்வையில், கலை மற்றும் கலாச்சாரத்திற்கான அணுகல் ஒரு சமூக உரிமை, அதற்காக ஆளும் வர்க்கத்திற்கு எதிராக போராட வேண்டும். 2010 ஆகஸ்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டத்தில், “கலாச்சாரத்திற்கான உரிமை என்ற தலைப்பின் கீழ் நாம் பின்வருமாறு எழுதினோம்.

கலை மற்றும் கலாச்சாரத்திற்கான அணுகல் என்பது ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தில் அடிப்படை விஷயம். ஆயினும், மற்ற அனைத்தையும் போன்றே, இது எண்ணற்ற தாக்குதலுக்கு உள்ளாகிறது. அமெரிக்க கலாச்சாரமான திரைப்படம், தொலைக்காட்சி, இசை ஆகியவை அதன் கண்டுபிடிப்பு மற்றும் சக்திவாய்ந்த, ஜனநாயகவாத மற்றும் மனிதநேயமிக்க உத்வேகத்தால் ஒருகட்டத்தில் ஈர்ப்பு துருவமாக இருந்தது. இலாப நோக்கத்திற்காக கலாச்சாரத்தை கீழ்ப்படிய செய்வது என்பது மோசமான சீரழிவுக்கே வழிவகுக்கும்.

கலைக்கான நிதி ஒதுக்குவதை குறைப்பது, கலைத்துவ வெளிப்பாடுகள் மீதான ஒரு வலதுசாரி கருத்தியல் தாக்குதல் மற்றும் அமெரிக்க சமுதாயத்தின் பொதுவான கொடூரமயமாக்கல் ஆகியவற்றால் கலாச்சாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அருங்காட்சியகங்கள், இசைக்குழுக்கள், அரங்கங்கள் மற்றும் பொது தொலைக்காட்சி மற்றும் வானொலி ஆகியவற்றுக்கான அரசு மானியம் குறைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான அரசுப் பள்ளிகளிலிருந்து கலை மற்றும் இசைக் கல்வி தீவிரமாக தடை செய்யப்பட்டுள்ளது அல்லது தீவிரமாக வெட்டப்பட்டுள்ளது. நூலக நேரமும் சேவையும் பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளன, மேலும் கல்வி நிதி வெட்டுக்கள் பள்ளி நூலக மூடலுக்கு காரணமாயின. பெரும் ஸ்தாபனங்களுக்கு சொந்தமான ஊடகம் அரசாங்கம் மற்றும் செல்வந்தர்களின் முகவர் போன்று செயல்படுவதுடன் பொதுமக்களின் கருத்துக்களை மாசுபடுத்துவதுடன் பொய்களை பரப்புகிறது. இதுபோன்ற கூலிப்படை மற்றும் பிலிஸ்தீனிய அணுகுமுறையால் சமுதாயத்தின் அறிவார்ந்த மற்றும் தார்மீக கட்டமைப்பின் பாதிப்பு அளவிட சாத்தியமில்லாதது.

கலை மற்றும் கலாச்சாரம் மீது அனைத்து உழைக்கும் மக்களும் முழுமையான அணுகலை கொள்வதற்கு, பெரும் பொது நிதி தேவைப்படுகிறது மேலும் இசை, நடனம், நாடகம் மற்றும் கலைக்கான, பெயரளவுக்கான கட்டணத்துடனோ அல்லது இலவசமாகவோ புதிய பள்ளிகள் மற்றும் மையங்களை உருவாக்குவதும் அவசியம். கலைக்கான ஒதுக்கீடுகள் மீதான மானியங்கள் குறித்த முடிவுகள் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் கைகளிலிருந்து பறிக்கப்பட்டு, கலைஞர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் பிற கலாச்சார பணியாளர்களின் குழுக்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட வேண்டும்.”

கலை மற்றும் கலாச்சாரத்தின் பாதுகாப்பு, மற்றும் கலை மற்றும் கலாச்சாரத்தை அனுபவிப்பதற்கான சாதாரண மக்களின் உரிமை இன்று அரசியல் ரீதியான ஒரு புரட்சிகரக் கேள்வியாக இருக்கிறது.

ஒரு புதிய, பரந்த சோசலிச இயக்கம் மற்றும் உழைக்கும் வர்க்கம் ஆட்சிக்கு வருவது ஆகியவை மூலம் மட்டுமே இந்த வேலைத்திட்டத்தை செயற்படுத்தப்பட முடியும். செல்வத்தை தீவிரமாக மறுவிநியோகம் செய்து, பெரும் நிறுவனங்களின் இரும்புப்பிடியை உடைத்து, பெரும் வியாபார மற்றும் நிதி நிறுவனங்களின் கட்டுப்பட்டினை எடுத்துக் கொண்டு, அவைகளை ஜனநாயகக் கட்டுப்பட்டின் கீழ் இருத்தி, கலாச்சாரத்தை மக்களின் கட்டுப்பாட்டில் வைக்கும். தற்போது ஒரு சதவீத மேல் தட்டினரால் உரிமை கொண்டாடப்படுகின்ற சமுதாயத்தின் பெரும் செல்வமான, யுத்தத்துக்கு போகும் டிரில்லியன் கணக்கான பணம் பெரும்பான்மையினரது தேவை மற்றும் நலன்களை நோக்கி செல்லும். டெட்ராய்ட்டின் அவசரகால மேலாளருக்கு எதிராக, வங்கியாளர்களின் சர்வாதிகாரத்திற்கு எதிராக மக்கள் திரளை அணி திரட்டுவதற்கும், சோசலிச சமத்துவக் கட்சியில் சேர்வதற்கும் எங்களது பிரச்சரத்தில் கலந்து கொள்ளுமாறும் நாங்கள் உங்களை ஊக்கப்படுத்துகிறோம்.

DIA ஐ பாதுகாப்பதற்கான பிரச்சாரம் குறித்த கூடுதல் தகவலுக்கு defendthedia.org. ஐ பார்வையிடவும்.