சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: President visits war ravaged north

இலங்கை: யுத்தத்தினால் சீரழிக்கப்பட்ட வட மாகாணத்துக்கு ஜனாதிபதி விஜயம் செய்தார்

By Subash Somachandran
22 February 2013

use this version to print | Send feedback

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பெப்ரவரி 12 மற்றும் 13ம் திகதிகளில், யுத்தத்தினால் சீரழிக்கப்பட்ட வடக்கின் யாழ்ப்பாணத்துக்கு இரண்டு நாட்கள் விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். அபிவிருத்தித் திட்டங்களை மேற்பார்வை செய்வதற்கும் மற்றும் ஆரம்பித்து வைப்பதற்குமே இந்த விஜயம் என அறிவித்திருந்த போதிலும், அது ஏறத்தாழ இராணுவ நிர்வாகத்தினை மூடி மறைப்பதையும் தமிழ் மக்கள் மீது போலியான அனுதாபத்தினைக் காட்டுவதையும் இலக்காகக் கொண்டதாகும்.

பாதுகாப்பு படைகளின் தளபதிகள், ஜனாதிபதியின் இரண்டு சகோதரர்களான பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்திருந்தனர்.

2009 மே மாதம், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியின் பின்னர், தமிழ் மக்களின்விடுதலையைஅறிவித்து கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் நிறைவடைந்த பின்னரும், தீவின் வடக்கு மற்றும் கிழக்கும் இன்னும் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ளதுடன் இராணுவம் சிவில் நிர்வாகத்தினை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றது.

இராஜபக்ஷவின் விஜயத்துக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் யுத்த காலத்தின் பயங்கரமான சோதனை நடவடிக்கைகளை மீண்டும் நினைவூட்டின. யாழ்ப்பாணத்தில் இருந்து 130 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் ஒமந்தை சோதனைச் சாவடிக்கு மேலதிகமாக, வடக்குக்குள் நுழையும் வாகனங்கள் பல இடங்களில் சோதனையிடப்பட்டன. யாழ்ப்பாணக் குடாநாட்டில் கூடுதலான பாதுகாப்பு பிரிவுகள் நிலைகொண்டிருந்த அதே வேளை, யாழ்ப்பாண நகரத்தில் பல இடங்களில் புதிய வீதித்த தடைகள் ஏற்படுத்தப்பட்டன. சில இடங்களில், சிப்பாய்கள் மக்களை அச்சுறுத்தும் வகையில் முகங்களை மூடிக்கொண்டு சோதனையில் ஈடுபட்டனர்.

இராஜபக்ஷ, செவ்வாய்கிழமை மின்சார நிலையமொன்றினைத் திறந்து வைத்ததோடு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் கலந்துகொண்டார். மறுநாள், இன்னமும் மோசமான நிலைமையில் உள்ள யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் ஒரு புதிய கட்டிடத்தினை அவர் திறந்து வைத்ததுடன், நயினாதீவில் உள்ள பௌத்த விகாரைக்கான புதிய படகுத் துறையையும் திறந்து வைத்தார்.   

மார்ச் மாதத்தில், இராஜபக்ஷவின் அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் (யு.என்.எச்.ஆர்.சி.) ஒரு தீர்மானத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், இராணுவத்தின் யுத்தக் குற்றங்கள் பற்றிய சர்வதேச விமர்சனங்களை திசை திருப்புவது இந்த விஜயத்தின் நோக்கங்களில் ஒன்றாகும். செப்டம்பர் மாதம் நடத்துவதற்கு அறிவிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண சபைத் தேர்தலில், ஆளும் கூட்டணிக்கும் மற்றும் அதன் பங்காளிக் கட்சியும் துணை இராணுவக் குழுவுமான ஈழமக்கள் ஜனநாயக் கட்சிக்கும் (ஈ.பி.டி.பி.) வாக்களார் ஆதரவை உருவாக்குவதற்கான நோக்கமும் இதில் அடங்கும்.

முதலீட்டாளர்களை ஈர்ப்பதையும் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வதையும் இலக்காகக் கொண்டு ஹோட்டல்கள் கட்டுதல், வீதி புனரமைத்தல், மின்சாரம் வழங்குதல் போன்றவற்றுக்கே அரசாங்கத்தின் பிரதான அபிவிருத்தித் திட்டம் என்றழைக்கப்படுவது வரையறுக்கப்பட்டுள்ளது. கடந்த 30 வருட யுத்தத்தினால் தங்களின் வாழ்க்கை மற்றும் சொத்துக்களை இழந்த மக்களின் வாழ்க்கை நிலமைகளை மீளக் கட்டியெழுப்புவதற்கான எந்தவிதமான அர்த்தமுள்ள நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்ல. மீளக் குடியமர்த்தப்பட்ட பத்தாயிரக் கணக்கான குடும்பங்கள் தண்ணீர், மின்சாரம் மற்றும் போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் இன்னமும் தரப்பாள்களினால் அமைக்கப்பட்ட குடில்களில் வாழ்கின்றன. குறிப்பாக வன்னியில் புதிய இராணுவக் கட்டிடத் தொகுதிகள், உருவாக்கப்படுகின்றன.

பத்தாயிரக்கணக்கான மக்களைக் கொன்றும், அவர்களின் சொத்துக்களைத் தரைமட்டமாக்கியும் முடிவுக்கு வந்த இனவாத யுத்தத்தினை முன்னெடுத்து, வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்களின் வாழ்க்கை நிலமைகளை நாசம் செய்தமைக்கு இராஜபக்ஷவே பொறுப்பாகும். ஆனால் நேர்மையான துறவியாக தன்னைக் காட்டிக்கொண்டு, யாழ்ப்பாணத்தில் மக்கள் முகம் கொடுக்கும் கஸ்டங்கள் மற்றும் துன்பங்களை யாரும் எனக்கு எடுத்துக் கூறவில்லைஎன அபிவிருத்திக் கூட்டத்தில் இராஜபக்ஷ கூறினார்.

அதேவித தோரணையில் இராஜபக்ஷ கூறியதாவது: மீண்டும் மக்களின் சுதந்திமான வாழ்கைக்கு வழியமைப்பதே எங்களால் அவர்களுக்கு கொடுக்கக் கூடிய பெரிய பரிசாகும்.எங்களுடைய அதிகம் அன்பான செல்வம் எமது சிறார்களே, மற்றும் ஒரு காலத்தில் பெற்றார் தங்களின் பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காக அவர்களை மறைத்து வைத்திருக்க வேண்டியிருந்தது. இந்தச் சுதந்திரத்தினைப் பாதுகாப்பதற்கு நாங்கள் அனைவரும் உழைக்க வேண்டும், என அவர் மேலும் கூறினார்.  இராணுவம், இராணுவத் துணைக் குழுக்கள் மற்றும் பொலிசும் பிரதான பொறுப்பாளிகள் என்ற உண்மையை மறைப்பதற்காக, அவர் பிரிவினைவாத புலிகள் மீது குற்றஞ்சாட்ட விரும்பினார். இன்னமும் வடக்கில், காணாமல் போதல், கொலை மற்றும் எதேச்சதிகாரமான கைதுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

கடந்த நவம்பரில் இருந்து, கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் தடுத்து வைக்கப்படிருந்ததோடு மேலும் 45 வரையான பொதுமக்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வெகுஜன எதிர்ப்புக்களின் காரணமாக, அரசாங்கம் இரண்டு மாணவர்களை முன்னர் விடுதலை செய்யத் தள்ளப்பட்டது.

ராஜபக்ஷ, யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டத்தில் வைத்து மற்றைய பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்வதற்கு, இன்னொரு மலிந்த மேடைச் சமாளிப்பை கையாண்டார். அந்தக் கூட்டத்தில், ஒரு மாணவனின் தாயார் தனது மகனை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். அவரால் மகனைப் பாதுகாக்க முடியுமா என்று, அரசியல் செய்யக் கூடாது எனும் அர்த்தத்தில், இராஜபக்ஷ கேள்வியெழுப்பினார். தன்னால் முடியும் என்று தாயார் வாக்குறுதியளித்ததும், அவர்களை விடுதலை செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு ராஜபக்ஷ உத்தரவிட்டார்.

ஒரு மெல்லிய அச்சுறுத்தலில், தனக்கு கீழேயே ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என கூறிய ராஜபக்ஷ, அதே மூச்சில் மேலும் கூறியதாவது:பெற்றோர் தங்களின் பிள்ளைகளின் நடத்தை குறித்து அவதானமாக இருக்க வேண்டும். கல்வி கற்பதற்காகவே மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு வருகின்றார்கள். அதற்குப் பின்னர், அவர்கள் வெளியேறி நாட்டுக்கு நன்மை பயக்கும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும்.

தமிழ் உயர்தட்டுக்களின் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை ஒரங் கட்டும் முயற்சியாக, அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் உள்ளூராட்சிச் சபைகளுக்காக ஒதுக்கப்பட்ட 560 மில்லியன் ரூபாய் அரசாங்கத்தினால் மீளப் பெறப்பட்டது. வடக்கின் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பி. ஜெயகரன் இந்தச் செய்திகளை ஊடகங்களுக்கு கசியவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு, வடமாகாண ஆளுநரும் முன்னாள் இராணுவ தளபதியுமான ஜி.ஏ. சந்திரசிறியால் உடனடியாகவே இடமாற்றப்பட்டார்.

ராஜபக்ஷ, வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தினை திறந்து வைத்த போதிலும், அதன் ஏனைய நிலமைகள் மோசமாக உள்ளன. இலங்கை தாதிய உத்தியோகத்தர் சங்கத்தின் யாழ்ப்பாண கிளை உத்தியோகத்தர்களின் படி, 1986 இல் இருந்து புதிதாக ஆட்கள் சேர்க்கப்படவில்லை ஆனால், 40 யூனிட்டுக்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆஸ்பத்திரிக்கு 1513 தாதியர்கள் தேவையாக உள்ள போதிலும் 390 பேர் மட்டுமே கடமையாற்றுகின்றனர். தாதியர்கள் 18 மணிநேரம் சேவையாற்ற வேண்டியுள்ளது.

தமிழ் மக்களின் காணிகளை இராணுவம் ஆக்கிரமித்திருப்பது தான், வடக்கு, கிழக்கு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள முக்கியமான பிரச்சினையாகும்.அரசாங்கத்தின் மீள் குடியேற்றம் என்று கூறப்படுவதன் மூலம் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. அதற்கு மேலாக ஆக்கிரமிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்டு தாசாப்த காலமாக, யாழ்ப்பாணத்தின் 24 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த வலிகாமம் வடக்கு மக்கள் 28,000 பேர் இன்னமும் முகாம்களிலும் மற்றும் உறவினர் வீடுகளிலும்  வாழ்கின்றனர். யாழ்ப்பாணத்தில் இன்னமும் 13 முகாம்கள் உள்ளன

தமிழ் கூட்டமைப்புக்கு அபிவிருத்திக் குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதேபோல், தமிழ் ஊடகவியலாளர்களும் அனுமதிக்கப்படவில்லை. எவ்வாறாயினும், தமிழ் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அ.விநாயகமூர்த்தி, மக்களை மீளக் குடியேற்றுமாறு கோரி, இராஜபக்ஷவுக்கு விண்ணப்பிக்கும் கடிதத்துடன் நுழைந்தார். உயர்மட்ட சிவில் உத்தியோகத்தர்கள் அங்கிருந்த போதிலும், ராஜபக்ஷ அதைப்பரிசோதிப்பதற்குயாழ்ப்பாண இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கவுக்கு கைமாற்றினார். இது சிவில் நிர்வாகத்தை இராணுவம் கட்டுப்படுத்துவதை அடியாளப்படுத்தும் நகர்வாகும்.

இராணுவ ஆக்கிரமிப்பை ஸ்திரப்படுத்தலின் ஒரு பாகமாக, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ, யாழ்ப்பாண நகரில் சிங்கள மகா வித்தியாலயம் இருந்த இடத்தில் பாரிய இராணுவ முகாமையும் பலாலியில் இராணுவ களியாட்ட விடுதியையும் திறந்துவைத்துள்ளார்.

முன்னர், புலிகளின் ஊதுகுழலாக செயற்பட்ட தமிழ் கூட்டமைப்பு, தமிழ் மக்களின் பிரச்சினைகளை ராஜபக்ஷவுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் தீர்க்கலாம் என்ற மாயையைப் பரப்பி வருகின்றது. ஜனாதிபதி ராஜபக்ஷ, பங்குபற்றிய அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு அழைப்பு இல்லாததையிட்டு கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரமன் வருந்தினார்.

தமிழ் முதலாளித்துவத்தின் பிரதிநிதிகளான தமிழ் கூட்டமைப்பு, அமெரிக்கா மற்றும் இந்தியா உட்பட பெரும் வல்லரசுகளின் ஆதரவுடன், கொழும்பு ஆளும் வர்க்கத்துடன் ஒரு அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்கின்றது. இந்த அவநம்பிக்கையான முயற்சியின் பாகமாக, வரவிருக்கும் யு.என்.எச்.ஆர்.சி. கூட்டத்தில் அமெரிக்கா தலமையில் கொண்டுவரப்படும் தீர்மானத்தில் கூட்டமைப்பு நம்பிக்கை வைத்துள்ளது. இது ராஜபக்ஷ அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட அதன் சொந்த கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை அமுல்படுத்தமாறு ஒரு மட்டுப்படுத்தப்பட்ட கோரிக்கையை முன்வைக்கும் பிரேரணையாகும். இந்த ஆணைக்குழு யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு வெள்ளை பூசியுள்ளது.

தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மற்றும் ஓடுக்கப்பட்ட மக்களும், தமிழ் கூட்டமைப்பைப் போல், இந்த பெரும் வல்லரசுகள் மீது இம்மியளவும் நம்பிக்கை வைக்க முடியாது. அவர்கள் இந்தப் பிராந்தியத்தில் தங்களின் சொந்த நலன்களை மேம்படுத்துவதில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளனர். ராஜபக்ஷ அரசாங்கம் வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பினை பலப்படுத்துகின்றது. தமிழ் கூட்டமைப்பு தமிழ் முதலாளித்துவத்தின் சலுகைகள் பற்றி மட்டுமே கவலை கொண்டுள்ளது.

தமிழ் மக்களின் ஜனநாய உரிமைகள் மற்றும் பாகுபாடுகள் பற்றிய பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய ஒரே சமூக சக்தி சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம்களுமாக தொழிலாள வர்க்கமே ஆகும். ராஜபக்ஷவோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்போ அல்ல. தெற்காசிய சோசலிச குடியரசு ஒன்றியத்தின் பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசை ஸ்தாபிக்கும் சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் இன, மத பேதங்களுக்கு அப்பால், தொழிலாள வர்க்கத்தினை ஐக்கியப்படுத்தப் போராடும் ஓரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே.