சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

NLC workers in south India strike against privatisation

தென்னிந்தியாவில் என்.எல்.சி. தொழிலாளர்கள் தனியார்மயமாக்கத்திற்கு எதிராக வேலைநிறுத்தம் செய்கின்றனர்

By Arun Kumar and Deepal Jayasekera
5 July 2013

use this version to print | Send feedback

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (NLC) நிறுவனத்தின் ஐந்து சதவீத பங்குகளை தனியாருக்கு வழங்கும் மத்திய அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக அந்நிறுவனத்தின் சுமார் 25,000 நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், புதனன்று இரவு காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர். வேலைநிறுத்த நடவடிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்திருக்கக் கூடிய தடையை மீறி இந்த வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் திட்டங்களுக்கு பரவலான எதிர்ப்பு இருப்பதன் வெளிப்பாடாக, என்.எல்.சி. பொறியாளர்களும் கூட இந்த வேலைநிறுத்தத்தில் பங்குபெற்றனர்.

மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கையானது என்.எல்.சி.யின் நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களது வேலைகள், ஊதியங்கள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை அச்சுறுத்துவதாக அமைந்துள்ளது. இந்நிறுவனம் இந்தியாவின் மிகவும் இலாபகரமான பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் தனது தொழிலாளர்களில் பெரும்பகுதியை -சுமார் 13,000 தொழிலாளர்கள்- ஒப்பந்தத் தொழிலாளர்களாக பராமரிக்கிறது. இவர்களில் நிரந்தரத் தொழிலாளர்கள் பெறும் ஊதியத்தில் வெறும் 10 சதவீதம் அளவுக்கே ஊதியமாகப் பெறுபவர்களும் கூட உண்டு. ஒப்பந்தத் தொழிலாளர்களில் பலர் இந்நிறுவனத்தில் 15 முதல் 20 ஆண்டு காலம் வரை பணியாற்றியுள்ளனர்.

தொழிலாளர்களது வேலைநிறுத்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று கூறியுள்ள என்.எல்.சி. நிர்வாகம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை தொடரக் கூடாது என்று கூறுகிறது. இதனால் தமிழ்நாட்டில் மின்விநியோகம் பாதிக்கப்படும் என்றும் அது எச்சரிக்கிறது.

என்.எல்.சி. வேலைநிறுத்தத்தை தடுக்கும் ஒரு வெளிப்பட்ட முயற்சியாக, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா -என்.எல்.சி. பங்குகள் தனியாருக்கு விற்கப்படுவதை எதிர்ப்பதாக இவர் கூறுகிறார்- நிறுவனத்தின் ஐந்து சதவீத பங்குகளை வாங்கிக் கொள்ள தனது மாநிலம் தயாராக இருப்பதாக அறிவித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். மத்திய அரசாங்கம் இவ்விடயத்தை பரிசீலிக்கும் என்று கூறிய இந்திய நிதியமைச்சர் பழனியப்பன் சிதம்பரம், ஆகவே என்.எல்.சி. தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். தொழிலாளர்களது போராட்ட நடவடிக்கையை ஒடுக்குவதற்கான தயாரிப்பாக தமிழகத்தின் மாநில அரசாங்கமும் ஏராளமான போலிஸ் படையை குவித்துள்ளது.

மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் மற்றும் ஜெயலலிதாவின் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக மாநில நிர்வாகம் ஆகிய இரண்டுமே அமல்படுத்தி வருகின்ற சர்வதேச நிதி மூலதனத்தின் கோரிக்கைகளுக்கு எதிரான ஒரு போராட்டத்தின் மூலமாகவே என்.எல்.சி.யின் தனியார்மயமாக்கத்திற்கு எதிராகப் போராட முடியும். தனியார்மயமாக்கத்தை எதிர்த்தும் ஒப்பந்தத் தொழிலாளர்களை பாதுகாத்துமான என்.எல்.சி. தொழிலாளர்கள் அனைவரது ஒரு கூட்டுப் போராட்டமானது ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் வேலைகள், கண்ணியமான ஊதியங்கள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளுக்கான அடிப்படை உரிமையை பாதுகாப்பதற்கு தொழிலாள வர்க்கம் தொடுக்கின்ற ஒரு பரந்த தாக்குதலாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

என்.எல்.சி.யின் நிரந்தரத் தொழிலாளர்களை பொறுத்த வரை, அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்த தொழிலாளர் முன்னேற்ற முன்னணி (LPF), அண்ணா தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் சங்கம், அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) மற்றும் இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (CITU) -இவை இரண்டும் முறையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகிய இரண்டு ஸ்ராலினிச நாடாளுமன்றக் கட்சிகளுடன் இணைந்த தொழிற்சங்கங்கள்- ஆகிய தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர்.

தனியார்மயமாக்கத்திற்கு தொழிலாளர்கள் காட்டுகின்ற மிக ஆழமான எதிர்ப்பு என்.எல்.சி. தொழிற்சங்கங்களை ஜூலை 3 வேலைநிறுத்தத்தை ஒழுங்கமைப்பதற்கு நிர்ப்பந்தித்துள்ளது என்ற நிலையில் இந்த அமைப்புகள் தங்களது உறுப்பினர்களை ஒரு முட்டுச் சந்திற்கே அழைத்துச் சென்றுள்ளன.

சென்ற ஆண்டில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நடத்திய ஒரு தீர்மானகரமான போராட்டம் 44 நாட்களுக்குப் பின்னர் ஸ்ராலினிஸ்டுகள் தலைமையிலான தொழிற்சங்கங்களால் காட்டிக் கொடுக்கப்பட்டது. சென்ற ஆண்டின் காட்டிக் கொடுப்பின் காரணத்தால் என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்களில் பாதிப்பேர் தான் இந்தமுறை போராட்டத்தில் பங்கேற்கிறார்கள் என உலக சோசலிச வலைத் தள செய்தியாளர்களிடம் பேசிய ஒப்பந்த தொழிலாளர்களில் பலரும் குறிப்பிட்டனர்.

நிரந்தரத் தொழிலாளர்களது தொழிற்சங்கங்கள், வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்வதற்கு ஒப்பந்த தொழிலாளர்களிடம் விண்ணப்பம் செய்யவில்லை. என்.எல்.சி.யின் ஒப்பந்தத் தொழிலாளர்களது பிரதான தொழிற்சங்கமான ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கம் -இச்சங்கம் ஸ்ராலினிச AITUC உடன் இணைந்த சங்கமாகும்- வேலைநிறுத்த தினத்திற்கு முந்தைய தினமான ஜூலை 2 வரை தனது உறுப்பினர்களை வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ள அழைக்கவில்லை.

என்.எல்.சி. நிறுவனத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தனியார்மயமாக்குவதற்கு தொழிற்சங்கங்கள் காட்டுகின்ற எதிர்ப்பு, தமிழ்நாட்டின் ஆளும் உயரடுக்கை நோக்கிய அவற்றின் நோக்குநிலையுடன் பிணைந்த ஒரு மோசடியாகும். மத்திய அரசாங்கம் ஜெயலலிதாவின் திட்டத்தை ஏற்குமானால் வேலைநிறுத்தத்தில் இருந்து தாங்கள் விலகிக் கொள்வதாக ஆளும் அஇஅதிமுகவுடன் இணைந்த அண்ணா தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

என்.எல்.சி. தொழிலாளர்களை அஇஅதிமுக போன்ற வலது-சாரி முதலாளித்துவக் கட்சிகளுக்கு கீழ்ப்படியச் செய்ய வேலைசெய்வதன் மூலம் ஸ்ராலினிசக் கட்டுப்பாட்டில் இயங்கும் தொழிற்சங்கங்கள் ஒரு நாசகரமான அரசியல் பாத்திரத்தை ஆற்றிக் கொண்டிருக்கின்றன.

ஜெயலலிதாவின் தொழிலாள வர்க்கத்திற்கு விரோதமான பிற்போக்குத்தனமான நிர்வாகத்தை தனியார்மயமாக்கத்தின் எதிரி போல் விளம்பரப்படுத்துவதற்கு வசதியாக, மத்திய அரசாங்கத்திற்கு எதிராக மாநிலம் தழுவிய ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு தமிழ்நாடு அரசாங்கம் அழைக்க வேண்டும் என்று AITUC இன் மாவட்டச் செயலரான எம்.சேகர் வேண்டுகோள் விடுத்தார். இத்தகைய வகையில் ஜெயலலிதாவின் முன் இந்த வெட்கமற்ற நெடுஞ்சான் கிடையாக வீழ்தல் என்பது 2011 இல் மாநில சட்டமன்றத் தேர்தலின் போது அஇஅதிமுக உடன் ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வைத்துக் கொண்ட சந்தர்ப்பவாத அரசியல் கூட்டணியின் வரிசையில் வருவதாகும்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்ப்பதாக திமுக மற்றும் அஇஅதிமுக ஆகிய கட்சிகள் காட்டிக் கொள்வது தனியார்மயமாக்கத்திற்கு உண்மையாய் எதிர்ப்பு காட்டும் முகமாகவோ அல்லது என்.எல்.சி. தொழிலாளர்களின் எதிர்காலம் குறித்த கவலையினாலோ அல்ல. இக்கட்சிகளின் கவலை எல்லாம் அவை பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழக பிராந்திய முதலாளிகளின் நலன்களோடு பிணைந்ததாகும். அதனால் தான் மாநிலத்தில் மின்சாரப் பற்றாக்குறை நெருக்கடிக்கு இட்டுச் செல்லக் கூடிய என்.எல்.சி. தொழிலாளர்களின் போராட்ட நடவடிக்கையை எப்பாடுபட்டேனும் தடுத்து விடுவதற்கு அவர்கள் முனைப்புடன் இருக்கின்றனர். என்.எல்.சி., தமிழ்நாட்டிற்கும் மற்றும் தென்னிந்தியாவில் இருக்கும் மூன்று பிற அண்டை மாநிலங்களுக்கும் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இந்திய கூட்டணி அரசாங்கங்களின் கூட்டாளிகளாகவும் தமிழ்நாட்டில் ஆளும் கட்சிகளாகவும் இருக்கும் இந்த இரண்டு கட்சிகளுமே, சமூகரீதியாய் பிற்போக்குத்தனமிக்கதாக இருக்கும் சுதந்திர சந்தை பொருளாதாரக் கொள்கைகளுக்கு முழு உறுதிப்பாடு கொண்டவையாக இருக்கின்றன.

மின்சார நெருக்கடியின் சாத்தியம் குறித்த தனது கவலைகளை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பியிருக்கும் கடிதத்தில் வெளிப்படுத்தியிருக்கும் முதல்வர் ஜெயலலிதா அதில் எச்சரித்திருக்கிறார்: மத்திய அரசாங்கத்தின் அவசரமான மற்றும் முகாந்திரமற்ற நடவடிக்கைகளால் மாநிலத்தின் சிக்கலான மின்சாரப் பற்றாக்குறை சூழ்நிலையை இன்னும் மோசமாக்கக் கூடிய, முற்றிலும் தவிர்க்கத்தக்க, ஒரு தொழிலாளர் போராட்டத்திற்கு முகம் கொடுக்க தமிழ்நாட்டின் அரசாங்கம் தள்ளப்பட்டிருக்கிறது.

என்.எல்.சி.யை தனியார்மயமாக்க நெருக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில் திமுக கடந்த மார்ச் மாதம் வரை பங்குபெற்று வந்திருந்தது. 2006 ஜூன் மாதத்தில் என்.எல்.சி.யின் பத்து சதவீதப் பங்குகளை விற்கும் முடிவை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் கேபினட் எடுத்தபோது திமுக அமைச்சர்களும் அதில் பங்குபெற்றிருந்தனர்

2006 ஜூலையின் ஆரம்பத்தில் என்.எல்.சி. தொழிலாளர்கள் ஒரு காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கி மின் உற்பத்தி பாதியாகக் குறைந்து விட்டதற்குப் பின்னர்தான் திமுக டெல்லியின் திட்டங்களை எதிர்ப்பதற்கு தள்ளப்பட்டது. மத்திய அரசாங்கம் தனது திட்டத்தை கைவிடவில்லை என்றால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்திற்கு ஆதரவை வாபஸ் வாங்க நேரிடும் என்று திமுக மத்திய அரசாங்கத்தை எச்சரித்தது. என்.எல்.சி. வேலைநிறுத்தம் தனியார்மயமாக்கத்திற்கு எதிரான தொழிலாளர்களின் ஒரு பரந்துபட்ட இயக்கத்திற்கு அணிதிரட்டும் புள்ளியாக மாறிவிடக் கூடும் என்ற கவலையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் என்.எல்.சி. 10 சதவீத பங்குகளை விற்கும் அதன் முடிவை நிறுத்தி வைத்தது.

இப்போது கடுமையான பொருளாதார நெருக்கடி நிலைமைகளின் கீழ், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கமானது, பெருகிச் செல்லும் நிதிப் பற்றாக்குறையைக் கையாளும் அதேவேளையில் சர்வதேச மூலதனத்திற்கு புதிய மூலதன வாய்ப்புகளையும் திறந்து விட வேண்டும் என்கிற நோக்கத்தில், புதிய தனியார்மயமாக்க நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது.