சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Pro-government thugs attack TNA candidate’s house

இலங்கை: அரசாங்க சார்பு குண்டர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் வீட்டைத் தாக்கினர்
 

By Sujeewa Amaranath
25 September 2013

Use this version to printSend feedback

கடந்த வியாழன் இரவு, இலங்கையில் வட மாகாண சபை தேர்தலுக்கு சற்று முன்னர், யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் ஆனந்தி சசிதரனின் வீட்டின் மீது சுமார் 100 பேரடங்கிய ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. குறைந்தது ஒன்பது பேர் காயமடைந்ததுடன் சிலர் கடும் காயமடைந்துள்ளனர். சசிதரனும் நேரில் பார்த்தவர்களும், இராணுவ புலனாய்வு அதிகாரிகள் ஆதரவுடன் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பீ.டி.பீ.) துணைப்படை குழுவே இந்த தாக்குதலை நடத்தியது எனக் கூறினார்.

கிட்டத்தட்ட ஒரு டஜன் குண்டர்கள், அச்சுறுத்தல் பாணியில் இரவு 11 மணிக்குப் பின்னர் சசிதரனின் வீட்டின் முன் நின்றனர். ஒரு சில மணி நேரம் கழித்து திரும்பி வந்த அவர்கள், பொல்லுகளால் சசிதரனின் ஆதரவாளர்களை தாக்கத் தொடங்கினர். சிலர் துப்பாக்கிகளை நீட்டியதோடு மற்றவர்கள் வாகனங்களின் டயர்களை வெட்டினர். அவர்கள் சசிதரனை பெயர் சொல்லி அழைத்தனர். ஆனால் நண்பர்கள் அவரையும் அவரது மூன்று பிள்ளைகளையும் வீட்டின் பின்புறம் வழியாக அழைத்துச் சென்றிருந்தனர்.

பாதிக்கப்பட்டவர்களில் தேர்தல் கண்காணிப்பு அதிகாரியும் வழக்கறிஞருமான கனகரட்னம் சுகாசும் ஒருவர். தாக்குதல் நடத்தியவர்களில் குறைந்தது மூன்று ஈ.பீ.டி.பீ. உறுப்பினர்களையாவது அடையாளம் கண்டதாக சசிதரன் தெரிவித்தார். ஈ.பீ.டி.பீ., ஆளும் கூட்டணியில் ஒரு பங்காளியாக இருப்பதுடன் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் (ஸ்ரீ.ல.சு.க.) கூட்டுச் சேர்ந்தே தேர்தலில் போட்டியிட்டது.

பல துப்பாக்கிதாரிகள் இராணுவ சீருடையில் இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறினார். தொடர்ந்து பிராந்தியத்தை ஆக்கிரமித்திருக்கும் இராணுவத்துக்கு தெரியாமல் இத்தகைய ஒரு தாக்குதலை நிச்சயமாக நடத்த முடியாது. எனினும், இராணுவ பேச்சாளர் ருவன் வர்ணகுலசூரிய, "இதில் இராணுவத்தின் பக்கம் எந்த தொடர்பும் இல்லை" என்றும் எந்த விசாரணைக்கும் இராணுவம் "ஒத்துழைக்க" தயார் என்றும் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இது, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நீண்டகால யுத்தத்தின் போது, அல்லது அதற்கு பிறகு, இராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளது என்பதை அரசாங்கம் முழுமையாக மறுப்பதுடன் ஒத்ததாக உள்ளது. ஐ.நா. மதிப்பீடுகள் தெரிவிக்கின்றவாறு, 2009ல் இனவாத யுத்தத்தின் இறுதி வாரங்களில் சுமார் 40,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

சசிதரன் வீட்டின் மீதான தாக்குதல், தேர்தல் பிரச்சாரம் முழுவதும் ஆளும் கூட்டணி, இராணுவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துணைப்படை குண்டர்களும் தமது அரசியல் எதிரிகள் மீது விடுத்த திட்டமிட்ட அச்சுறுத்தலின் அங்கமாகும். இலங்கையில் தமது செல்வாக்கை அதிகரிக்க முயன்று வருகின்ற, சீனாவின் செல்வாக்கை எதிர்க்க முயற்சிக்கின்ற சர்வதேச அழுத்தத்தின், குறிப்பாக அமெரிக்கா மற்றும் இந்தியவின் அழுத்தத்தின் காரணமாகவே அரசாங்கம் தேர்தலை நடத்தியது.

கடந்த வியாழக்கிழமை மட்டும், 25 வன்முறை சம்பவங்கள் பற்றி வடக்கில் கண்காணிப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு 12 சம்பவங்களை பஃபரல் (PAFFREL) என்னும் தேர்தல் கண்காணிப்பு குழு உறுதி செய்துள்ளது.

பிபிசி நிருபர் அண்ட்ரூ நோர்த், தேர்தலில் செய்தி சேகரித்த வெளிநாட்டு பத்திரிகையாளர்களையும் இராணுவம் வேவு பார்த்தது என்று தெரிவித்துள்ளார். அவர் எழுதியதாவது: "நாம் வடக்கில் பயணம் செய்த போது, அவர்கள் எங்களையும் நெருக்கமாக கண்காணித்துக்கொண்டிருந்தனர். நாம் புலிகளின் முன்னாள் படைக் கோட்டையான முல்லைத்தீவுக்கு வந்து சில நிமிடங்களில், ரோந்து செல்லும் இலங்கை இராணுவம் எங்களிடம் கேள்வி கேட்கத் தொடங்கியது. பின்னர் எங்களை தொடர்ந்து வந்த ஒரு நபர், சிப்பாய்களுக்கு எமது செயற்பாடுகளை பற்றி அறிவித்தார்."
இதேபோல் யாழ்ப்பாணத்திலும், ஒரு கடைக்காரருடன் பத்திரிகையாளர்கள் பேச முயன்றபோது, படையினர் அங்கு வந்ததுடன் "பின்னர் ஒரு பொலிஸ் காரும் சாதாரண ஆடையில் இருந்த பல ஆண்களும் அங்கு வந்துள்ளனர்." மக்கள் உடனடியாக பத்திரிகையாளர்களுடன் பேசுவதை நிறுத்தினர்.

சசிதரனை குறிவைப்பதற்கு ஒரு குறிப்பிட்ட காரணம் இருந்தது. அவரது கணவர், சின்னத்துரை சசிதரன் அல்லது எழிலன், கிழக்கில் திருகோணமலை பகுதியில், புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவு தலைவர் ஆவார். அரசாங்கம் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி கண்டதாக பிரகடனம் செய்வதற்கு ஒரு நாள் முன்னதாக, 18 மே 2009 அன்று, தனது கணவர் உட்பட புலிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுமாக நூற்றுக்கணக்கானவர்கள் இராணுவத்திடம் சரணடைந்ததை நேரில் கண்ட சாட்சி நான் என்று கூறினார். அதன் பின்னர் தனது கணவரை அவர் பார்க்கவில்லை.

புலிகளின் தலைவர்கள் சரணடைந்ததை மறுக்கும் அரசாங்கமும் இராணுவமும், அனைவரும் இராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டனர் என்று கூறுகின்றன. புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் பாலசிங்கம் நடேசன் மற்றும் சமாதான செயலகத்தின் தலைவர் சீவரட்னம் புலிதேவனும் ஐ.நா. மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு சரணடைந்ததையும் அரசாங்கம் மறுக்கின்றது. அரசாங்கமும் இராணுவமும் அப்பட்டமான போர் குற்றங்களான கொலைகள் பற்றிய அனைத்து ஆதாரங்களையும் நசுக்க முயற்சிக்கின்றன.

 முன்னர் புலிகளின் பாராளுமன்ற ஊதுகுழலக செயல்பட்ட ஒரு முதலாளித்துவக் கட்சியான கூட்டமைப்பு, போர் விதவைகள் மற்றும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு அறைகூவல் விடுக்கும் முயற்சிகளின் பாகமாக, தேர்தலில் போட்டியிடுவதற்காக சசிதரனை தேர்ந்தெடுத்தது. சில மதிப்பீடுகளின்படி, வடக்கில் மட்டும் சுமார் 40,000 போர் விதவைகள் உள்ளனர். தமிழ் கூட்டமைப்பு, மட்டுப்படுத்தப்பட்ட மாகாண சுயாட்சி அடிப்படையில், போருக்கு ஒரு "அரசியல் தீர்வு" காண்பதன் பேரில், அமெரிக்கா மற்றும் இந்தியா உட்பட சர்வதேசத்தின் ஆதரவை பெறுவதற்கான தனது பிரச்சாரத்தின் பாகமாக, வடக்கு தேர்தலில் அதிக பெரும்பான்மையை பெற முயற்சித்தது.
தற்போதைய இராணுவ ஆக்கிரமிப்பும் பிரமாண்டமான கண்காணிப்பும், வளர்ந்து வரும் வெகுஜன அதிருப்தியையிட்டு அரசாங்கம் அச்சமடைந்துள்ளதை காட்டுகிறது. வட மாகாண சபையில் ஆளும் கூட்டணி தோல்வியடைந்து, தமிழ் கூட்டமைப்பு 38ல் 30 ஆசனங்களை பெற்று பெரும்பான்மை வெற்றி பெற்றமை, இராஜபக்ஷ அரசாங்கம் மற்றும் இராணுவ ஆக்கிரமிப்பு மீதான தொழிலாளர்கள், வறியவர்கள் மற்றும் இளைஞர்களின் ஆழமான எதிர்ப்பையும், தமது அடிப்படை ஜனநாயக உரிமைகள் மற்றும் ஒழுக்கமான வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகளுக்கான அவர்களது அபிலாஷைகளையும் முற்றிலும் திரிபுபடுத்தப்பட்ட விதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளது.

எனினும், தமிழ் கூட்டமைப்பு, சிங்கள ஆளும் உயரடுக்குடனான ஒரு அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகளுக்கான அதன் இலக்கின் பகுதியாக, கொழும்பு ஆட்சியுடன் நெருக்கமாக செயற்பட முயல்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரன், ஊடகத்திடம் கூறியதாவது: "இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வேலை செய்வது மாகாண சபையின் முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்றாகும்." அரசாங்கம் இந்த செய்தியை கேட்டு, கடந்த முரண்பாடுகளை மறக்கத் தவறினால், "சர்வதேச ஆதரவை" பெற முயற்சிக்க நேரும் என அவர் மேலும் கூறினார். கூட்டமைப்பு மற்றும் தமிழ் முதலாளித்துவ தட்டுக்களின் நலன்கள், வடக்கு மற்றும் கிழக்கில் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் அவசர தேவைகளுக்கு நேர் எதிரானவையாகும்.