சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை


Sri Lanka: The JVP’s sham support for democratic rights

இலங்கை: ஜனநாயக உரிமைகளுக்கான ஜே.வி.பீ.யின் போலி ஆதரவு

By K. Ratnayake
18 September 2013

Use this version to printSend feedback

இலங்கை எதிர்க் கட்சிகளில் ஒன்றான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பீ.), எதிர்வரும் வடக்கு மாகாண சபை தேர்தலில் அதன் பிரச்சாரத்தின் பாகமாக, “தேசியப் பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு அனுகுமுறை” என்ற தலைப்பில் ஒரு கையேட்டை வெளியிட்டுள்ளது. யுத்தத்தில் நாசமாக்கப்பட்ட வடக்கில் வாழும் தமிழர்கள் மீது போலி அனுதாபத்தை காட்டும் அதே வேளை, இந்த கையேட்டின் மைய நோக்கம், சிங்கள முதலாளித்துவத்தின் மேலாதிக்கத்திலான முதலாளித்துவ அரசை உரத்துப் பாதுகாப்பதாகும்.

இந்த ஆவணம், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் நீண்டகால இனவாத யுத்தத்தின் போது ஜே.வி.பீ.யின் பாத்திரத்தை முழுமையாக மூடி மறைக்கின்றது. 1983ல் தொடங்கி 2009ல் புலிகளின் தோல்வியுடன் முடிவுக்கு வந்த மோதல் முழுவதுமே, ஜே.வி.பீ. போரை வெளிப்படையாக ஆதரித்ததோடு, தமிழர்-விரோத இனவாதத்தை கிளறிவிடுவதற்காக ஏனைய முதலாளித்துவ மற்றும் பேரினவாதக் கட்சிகளுடனும் அணிசேர்ந்திருந்தது.

2005ல் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை தேர்வு செய்ய ஆதரவளித்த ஜே.வி.பீ., 2006ல் போரை மீண்டும் தொடங்க அவரை தூண்டியதோடு “தாய்நாடு முதலில்” என்ற இனவாத பதாதையின் கீழ் தொழிலாளர்களின் போராட்டங்களை கீழறுத்தது. இதன் அர்த்தம் சகலதும் யுத்த முயற்சிகளுக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்பதாகும்.

கடைசித் தாக்குதல்களில் பத்தாயிரக்கணக்கான பொது மக்கள் இராணுவத்தால் கொல்லப்பட்டதையும், இராணுவக் கட்டுப்பாட்டிலான மெனிக் பார்ம் முகாமில் சுமார் 300,000 தமிழ் அகதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததையும் மற்றும் “புலி சந்தேக நபர்களாக” 11,000 இளைஞர்களை எதேச்சதிகாரமாக தடுத்து வைக்கப்பட்டதையும் ஜே.வி.பீ. நியாயப்படுத்தியது.

இப்போது ஜே.வி.பீ. தமிழர்களின் ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலனாக வஞ்சத்தனமாக பாசாங்கு செய்கிறது. அதன் கையேட்டின் அறிமுகம், “தேசியப் பிரச்சினை உட்பட நாட்டின் எரியும் பிரச்சினைகளை தீர்க்க, 30 ஆண்டுகால பிரிவினைவாத யுத்தத்தின் முடிவின் பின்னர் தோன்றிய நிலைமைகளை” பயன்படுத்தத் தவறியமைக்காக இராஜபக்ஷ அரசாங்கத்தை விமர்சிக்கின்றது.

எவ்வாறெனினும், தேசியப் பிரச்சினை என சொல்லப்படுவதன் விளைவே இந்த யுத்தமாகும். இந்த தேசியப் பிரச்சினை, தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் தமது ஆட்சியை பலப்படுத்துவதற்குமான வழிமுறையாக கொழும்பில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் தமிழர் விரோத பாகுபாட்டையும் இனப் படுகொலைகளையும் நாடியமையே ஆகும். இதே காரணத்துக்காகவே –“நாட்டின் எரியும் பிரச்சினைகளை” அனுகுவதற்கன்றி, தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தி ஒடுக்குவதற்காக- 2006ல் இராஜபக்ஷ யுத்தத்தை மீண்டும் தொடங்கினார். மோதலின் முடிவில் இருந்தே, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டங்களுக்கு எதிராக பொலிஸ்-அரச வழிமுறைகளை பயன்படுத்துவதை அரசாங்கம் அதிகரித்தது.

முழுமையாக யுத்தத்தை ஆதரித்த ஜே.வி.பீ., பெருந்தொகையான மக்களின் இடம்பெயர்வு, யுத்த விதவைகள், அரசியல் கைதிகள், ஜனநாயக உரிமையின்மை, காணி மற்றும் வீடு, மற்றும் கடன் உட்பட நெருக்கடியான விளைவுகளை திடீரென “அடையாளம் கண்டுள்ளது”. மொழிப் பிரச்சினை, கலாச்சார உரிமைகள் மீதான தொந்தரவு மற்றும் பல்வேறு இனக் குழுக்களுக்கு எதிரான பாரபட்சங்களைக் கூட ஜே.வி.பீ. “அடையாங்கண்டுள்ளது.”

கடந்த இரு தசாப்தங்களாக கொழும்பு அரசியல் ஸ்தாபனத்துடன் முற்றிலும் ஒருங்கிணைந்துகொண்ட ஜே.வி.பீ., “சோசலிச மாற்றத்தின்” தேவை பற்றி உதட்டளவில் பேசியது. எனினும், அதன் கையேடு, “வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மக்களைப் பாதித்துள்ள பல பிரச்சினைகளை முதலாளித்துவ அமைப்பு முறைக்குள் தீர்க்க முடியும் மற்றும் தீர்க்க வேண்டும்” என பிரகடனம் செய்கின்றது.

ஜே.வி.பீ. பிரேரித்துள்ள “சீர்திருத்தங்களுக்கும்” தமிழ், முஸ்லிம் அல்லது சிங்கள உழைக்கும் மக்களின் சமூகத் தேவைகளை மற்றும் ஜனநாயக அபிலாஷைகளை தீர்ப்பதற்கும் எந்த தொடர்பும் கிடையாது. மாறாக அவை அனைத்தும், முதலாளித்துவ அரசு தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து உக்கிரமடைந்து வரும் எதிர்ப்பை முகங்கொடுக்கின்ற நிலையில் அதை பலப்படுத்துவதை இலக்காக கொண்டவையாகும். ஜே.வி.பீ., தற்போதைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை தூக்கி வீசி, “மக்கள் சபைகளை” ஸ்தாபிக்கும் மற்றும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தை உத்தியோகபூர்வ மொழிகளாக அங்கீகரிக்கும் ஒரு புதிய அரசியலமைப்புக்கு அழைப்பு விடுக்கின்றது.

புலிகளுடனான புதுப்பிக்கப்பட்ட மோதலின் போது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை பாதுகாத்த ஜே.வி.பீ., யுத்தத்தை முன்னெடுக்க அது அவசியம் என அறிவித்தது. ஜனாதிபதி இராஜபக்ஷ, தேர்வு செய்யப்பட்ட அமைச்சரவை அமைச்சர்கள், ஜெனரல்கள் மற்றும் தேர்தலில் தெரிவு செய்யப்படாத அதிகாரத்துவவாதிகளின் குழுவில் தீர்மானங்களை எடுக்கும் உரிமையை ஒன்றுகுவிப்பதற்காக தனது அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்திக்கொண்டார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை தூக்கி வீச வேண்டும் என ஜே.வி.பீ. அழைப்பு விடுப்பது, பரந்தளவில் அதிருப்திக்குள்ளாகி உள்ள பாராளுமன்ற முறையிலான போலி நம்பிக்கைகளை புதுப்பிப்பதையும், அதே போல், இராஜபக்ஷவைச் சூழ உள்ள ஆளும் கும்பலைக் கீழறுப்பதையும் இலக்காகக் கொண்டதாகும்.

ஜே.வி.பீ.யின் “மக்கள் சபைகளுக்கான” பிரேரணையானது இந்திய இலங்கை உடன்படிக்கையின் பாகமாக, அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் கீழ், 1987ல் ஸ்தாபிக்கப்பட்ட மாகாண சபைகள் மீதான அதன் எதிர்ப்புடன் பிணைந்துள்ளது. புது டில்லிக்கும் கொழும்புக்கும் இடையிலான உடன்படிக்கை, புலிகளை நிராயுதபாணிகளாக்குவதற்கு இந்திய “அமைதிப் படையை” அனுப்புவதற்கான வழியை அமைக்கும் அதேவேளை, தமிழ் முதலாளித்துவ தட்டுக்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட சலுகைகளையும் வழங்குவதற்காக கைச்சாத்திடப்பட்டது.

இந்திய-இலங்கை உடன்படிக்கையை இனவாத அடித்தளத்தில் கண்டனம் செய்த ஜே.வி.பீ., அது ஒற்றை முதலாளித்துவ ஆட்சிக்கு ஒரு அச்சுறுத்தல் என பிகடனம் செய்திருந்தது. “தாய் நாட்டை பாதுகாக்க” ஒரு பிற்போக்கு “தேசப்பற்று” பிரச்சாரத்தை முன்னெடுத்த அது, அதில் பங்கெடுக்க மறுத்த தொழிலாளர்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் அரசியல் எதிரிகள் மீதும் பாசிச தாக்குதலை நடத்த அதன் துப்பாக்கிதாரிகளை கட்டவிழ்த்து விட்டிருந்தது. ஜே.வி.பீ. குண்டர்கள், வர்க்க அடிப்படையில் அந்த உடன்படிக்கையை எதிர்த்த சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (பு.க.க.) மூன்று உறுப்பினர்களைக் கொன்றனர். புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம். எச்சரித்ததைப் போலவே, ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பீ.) அரசாங்கம் வெகுஜன ஒடுக்குமுறையை முன்னெடுப்பதற்காக ஜே.வி.பீ.யின் பிரச்சாரத்தைப் பயன்படுத்திக்கொண்டது. இதில் இராணுவத்துடன் தொடர்புடையை கொலைப் படைகள் தீவின் தெற்கில் சுமார் 60,000 கிராமப்புற சிங்கள இளைஞர்களைக் கொன்றன.

அதன் தேர்தல் கையேட்டில், “இனவாதத்துக்கு புது வாழ்வு” கொடுத்தமைக்காக ஜே.வி.பீ. 13வது திருத்தத்தை குற்றம் சாட்டுகிறது. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பகிர்வது உட்பட, அதன் முழு அமுல்படுத்தலையும் கோரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளையும் அது எதிர்க்கின்றது. 1980களில் போலவே, இந்திய-விரோத பேரினவாதத்தை முன்னிலைப்படுத்தும் ஜே.வி.பீ., இப்போது இந்தியா அடிக்கடி “இலங்கை மீது தனது ஆதிக்கத்தைத்” திணிக்க முயற்சிக்கின்றது என பிரகடனம் செய்வதோடு, 13வது திருத்தத்துக்கான இந்தியாவின் ஆதரவை, இலங்கை இறைமையை மீறும் செயல் என தாக்குகிறது. அதனது கையேட்டில் தெரிவித்திருக்காத போதிலும், மாகாண சபை முறை “பிரிவினைவாதத்துக்கு வழியமைக்கின்றது” எனக் கூறி, அதை தூக்கியெறிய மீண்டும் மீண்டும் அழைப்பு விடுக்கின்றது.

இந்த சூழ்நிலையில், “மக்கள் சபைக்கான” ஜே.வி.பீ.யின் திட்டம், மத்திய அரசாங்கத்தை மேலும் பலப்படுத்துவதற்கான ஒன்றாகவே கூறமுடியும். “பின்தங்கிய சமுதாயங்களுக்கும்” “இன ஒடுக்குமுறையை” எதிர்கொள்பவர்களுக்கும் சேவை செய்வதற்காக, பாராளுமன்றக் கட்சிகளின் அலுவலர்கள் மற்றும் பிரதிநிதிகளின் குழுவால் இந்த சபைகள் அமைக்கப்படும். அவற்றின் அதிகாரம் தற்போதைய மாகாண சபைகளுக்கு உள்ளவற்றை விட மிகக் குறைந்ததாக இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒவ்வொரு சபையும் பாராளுமன்றத்துக்கு ஒரு பிரதிநிதியை நியமிக்கும் –விளைபயனுள்ள வகையில் இது இனப் பிளவுகளை ஆழப்படுத்தும்.

ஜே.வி.பீ.யின் ஏனைய பிரேரணைகள், அரச இயந்திரத்தை, குறிப்பாக யுத்தத்தால் நாசமாக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலப்படுத்தும் அதே வேளை, தமிழ் சிறுபான்மையினர் மத்தியிலான எதிர்ப்பு மற்றும் பகைமையை தணிப்பதற்காக அரச இயந்திரத்தில் சில சோடனை மாற்றங்களை செய்வதை இலக்காகக் கொண்டவை. பொது அலுவலர்கள், பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படைகளை, மிகவும் பயனுள்ளதாக்குவதன் பேரில், அவர்களுக்கு தமிழ் கற்பிக்க அது அழைப்பு விடுக்கின்றது. அது வடக்கு மற்றும் கிழக்கில் “இராணுவமயத்தை மட்டுப்படுத்த” அழைப்பு விடுக்கின்றபோதிலும், இந்தப் பிரதேசத்தில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு முடிவுகட்டுவதை எதிர்க்கின்றது.

ஜே.வி.பீ., தனது ஆரம்பத்தை “மக்கள் விடுதலை இயக்கமாக” தொடங்கியிருந்தாலும், அதற்கும் சோசலிசத்துக்கும் அல்லது மார்க்சிசத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. 1960களில் அது தொடங்கியபோதே, சிங்கள மக்கள்நலவாதத்துடன் இணைந்த மாவோவாதம் மற்றும் குவேராவாதத்தை அடித்தளமாகக் கொண்டிருந்தது.

முன்னாள் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக பொதுச் செயலாளர் கீர்த்தி பாலசூரிய, 1970ல் எழுதிய மக்கள் விடுதலை முன்னணியின் வர்க்கப் பண்பும் அரசியலும் என்ற பகுப்பாய்வில், ஜே.வி.பீ.யின் வேலைத்திட்டத்தில் பொதிந்துள்ள இனவாத நோக்கை அம்பலப்படுத்தியதோடு அதன் வலதுசாரி பரிணாமத்தையும் முன்னறிவித்திருந்தர். ஜே.வி.பீ, தமிழ் பேசும் பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிங்களத் தொழிலாளர்களின் “எதிரியாக” வகைப்படுத்தியதோடு “இந்திய விஸ்தரிப்பு வாதத்துக்கு” எதிரான ஒரு போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்தது.

இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு எதிரான ஜே.வி.பீ.யின் “தேசப்பற்று” பிரச்சாரமும் 1980களின் கடைப் பகுதியில் அதன் பாசிசத் தாக்குதல்களும், 1991ல் சோவியத் ஒன்றியத்தின் பொறிவுடன் சேர்ந்து, உலகம் பூராவும் இது போன்ற அமைப்புகளின் தெளிவான வலதுபக்க நகர்வுடன் பிணைந்திருந்தது. ஜே.வி.பீ. அதன் “ஆயுதப் போராட்டத்தை” கைவிட்டதோடு, ஆளும் கும்பல்களின் ஆசீர்வாதத்துடன், பாராளுமன்ற அரசியலில் தனக்கென ஒரு இடத்தை எடுத்துக்கொண்டு, சந்தை-சார்பு மறுசீரமைப்பை அனைத்துக் கொண்டது.

2001ல், ஜே.வி.பீ. தனது ஏகாதிபத்திய-எதிர்ப்பு வாய்வீச்சை கைவிட்டு, அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் “பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்துக்கும்” ஆப்கானிஸ்தான் மீதான ஆக்கிரமிப்புக்கும் ஆதரவளிப்பதற்காக அவருக்கு கடிதம் எழுதியது. 2004ல், முன்னாள் பிரதமர் சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்தில் இணைந்துகொண்ட ஜே.வி.பீ., மூன்று அமைச்சுப் பதவிகளையும் பொறுப்பேற்றது. புலிகளுடனான யுத்த நிறுத்த உடன்படிக்கையை கைவிடவேண்டும் என்ற நிபந்தனையுடன் 2005ல் இராஜபக்ஷவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்துக்கு ஆதரவளித்த அது, 2010ல் யுத்தக் குற்றங்களுக்கு நேரடிப் பொறுப்பான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா எதிர்க் கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட போது அவரை ஆதரித்தது.

சிங்கள பேரினவாதத்தை அடிப்படையாகக் கொண்ட வலதுசாரி முதலாளித்துவக் கட்சியாக ஜே.வி.பீ. மாறியமை, சகல வடிவிலான தேசியவாதம் மற்றும் இனவாதத்தினதும் பிற்போக்கு அடித்தளத்தை அம்பலப்படுத்துகிறது. 1948ல் உத்தியோபூர்வ சுதந்திரத்தில் இருந்து இலங்கையின் முழு வரலாறும் வெளிப்படுத்துவது போல், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதானது முதலாளித்துவத்தை தூக்கிவீசுவதுடன் பிணைந்துள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே, தொழிலாளர்களின் வர்க்க நலன்களை அடைவதற்கான ஒரு சர்வதேசிய சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்களுமாக தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தவும் சுயாதீனமாக அணிதிரட்டவும் போராடும் ஒரே கட்சியாகும்.