சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French government vows deep attacks on the working class

பிரெஞ்சு அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் மீது ஆழமான தாக்குதல்களுக்கு உறுதியெடுக்கிறது

By Kumaran Ira
3 April 2014

Use this version to printSend feedback

பிரான்சின் புதிய காபினெட் அமைச்சர்களை ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் நிர்வாகம் அறிவித்த நிலையில், வரவிருக்கும் பிரதமரான மானுவல் வால்ஸ் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஹாலண்டின் சிக்கன நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உறுதி பூண்டிருக்கிறார்.

ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சி ஞாயிறன்று நடந்த நகரசபைத் தேர்தல்களில் அவமதிப்பானதொரு தோல்வியை சம்பாதித்து, 10,000க்கும் அதிகம் பேர் வசிக்கும் நகரங்களில் முன்கண்டிராத அளவுக்கு 151 இடங்களை இழந்து விட்டதன் பின்னர், இந்த காபினெட் அமைச்சரவை மாற்றம் வந்துள்ளது. நேரெதிராய் நவபாசிச தேசிய முன்னணி முன்காணாத ஒரு வெற்றியைக் கண்டது. 15 நகரங்களை அது வென்றதோடு 1,200க்கும் அதிகமான நகராட்சி கவுன்சிலர் இடங்களைப் பெற்றது.

PS தனது தோல்விக்கான பதிலிறுப்பாக மேலும் வலது நோக்கி நகர்ந்து, FNக்கு ஆதரவான மனோநிலைக்கு விண்ணப்பிக்கின்ற அதேவேளையில் வங்கிகளுக்கு அனுகூலமான வகையில் சுதந்திரச் சந்தை கொள்கைகளை அமல்படுத்துவதற்கும் உறுதிபூண்டிருக்கிறது என்பதை நேற்றைய இரவு TF1 தொலைக்காட்சியில் பிரதான நேர நேர்காணலில் வால்ஸ் பேசியவை எடுத்துக்காட்டின. 

”பற்றாக்குறைகளை குறைக்க வேண்டுமென்றால், வேறு தெரிவுகளே இல்லை; இது பிரான்சின் நம்பகத்தன்மை குறித்த பிரச்சினை. நமது கடனை நாம் கட்டுப்படுத்தியாக வேண்டும், இல்லையென்றால் நமது இறையாண்மையை நாம் தொலைத்து விடுவோம்” என்றார் வால்ஸ்.

ஹாலண்டின் பொறுப்புணர்வு ஒப்பந்தம் (Pacte de responsabilité) என்று சொல்லப்படுகின்ற ஒன்றை - 50 பில்லியன் யூரோவிற்கான செலவின வெட்டுகள், 20 பில்லியன் யூரோவிற்கான பெருநிறுவன வரி வெட்டுகள் மற்றும் குடும்பநல உதவிகளுக்கான முதலாளிகளின் பங்களிப்பில் 10 பில்லியன் யூரோ மதிப்பீட்டு அளவிற்கான வெட்டுகள் ஆகியவை கொண்ட ஒரு தொகுப்பு - அமல்படுத்துவதற்கு அவர் உறுதியெடுத்துக் கொண்டார்.

தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்துகின்ற அதேவேளையில், பேரினவாத அழைப்புக்களின் மூலம் அதி-வலது மனோநிலையை வளர்த்தெடுப்பதற்கும் PS அரசாங்கம் முயற்சி செய்கிறது. ஸ்பானிய குடும்பத்தில் பிறந்த வால்ஸ் பிரெஞ்சு நாட்டவராக இருப்பதன் பெருமிதத்தை தம்பட்டம் அடித்ததோடு உலகமயமாக்கத்தை விமர்சனம் செய்தார். உலகமயமாக்கத்தின் விளைவாக பல நிறுவனங்கள் உற்பத்தியை பிரான்சை விட்டு வெளியில் கொண்டு சென்று விட்டதாக அவர் குறிப்பிட்டார்.

பிரான்சின் வடக்கு தொழிற்துறைப் பிராந்தியங்கள் நாசமடைந்ததற்கு “உலகமயமாக்கத்தை” பழி கூறிய அவர், இந்த பகுதியில் பல தசாப்தங்களாக PS தான் ஆட்சி செய்தது என்ற உண்மையையும், PS இன் ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோனின் பதவிக்காலத்தின் போது 1980களில் இறுதியான சுரங்க மூடல்கள் இக்கட்சியின் மேற்பார்வையில் தான் நடந்தது என்ற உண்மையையும் மறைப்பதற்கு முயற்சி செய்தார். பேரினவாதத்தையும் அந்நிய நிறுவனங்கள் மீதான வெறுப்பையும் முன்வைத்து, வால்ஸ் சர்வதேச தொழிலாள வர்க்கத்தினை பிளவுபடுத்த முனைகிறார்; FN இன் எழுச்சிக்கு அனுகூலம் செய்கிறார்.  

மற்ற முக்கியமான PS நிர்வாகிகளும் கூட ஹாலண்ட் இதுவரை அமல்படுத்தியிருப்பதை எல்லாம் அதீதமாக விஞ்சும் அளவுக்கு தயவுதாட்சண்யமற்ற சிக்கன நடவடிக்கைகளை பகிரங்கமாக ஆலோசனையளித்தனர். “[வெளிச்செல்லும் பிரதமர்] ஜோன்-மார்க் எய்ரோ மட்டுமே பொறுப்பான ஒரே நபர் அல்ல, என்றபோதிலும் அதிர்ச்சி வைத்தியத்திற்கான நேரம் வந்திருக்கிறது” என்று PS சட்டமன்ற உறுப்பினரான ஜூலியான் ட்ரே (Julien Dray) ஐரோப்பா 1 வானொலியில் தெரிவித்தார். “அரசாங்கத்திற்கு ஒரு புதிய செயல்வடிவைக் கொடுப்பதற்கான நேரம் வந்திருக்கிறது.”

அதிர்ச்சி வைத்தியம்” என்ற வார்த்தைகளை டிரே பயன்படுத்தியிருப்பது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கை ஆகும். ஏனென்றால் இவை  பொதுவாக 1990களில் முதலாளித்துவ மீட்சியின் போது சோவியத் தொழிலாள வர்க்கத்தின் மீது திணிக்கப்பட்டதை போன்ற, அல்லது கிரீஸில் திணிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைக் கொள்கைகள் போன்ற சமூக நாசத்திற்கென பராமரிக்கப்படும் வார்த்தையாகும்.

பொது நிதிகளை வங்கிகளுக்கும் பெரு வணிகங்களும் கையளிக்கும் பொருட்டு செலவின வெட்டுகளையும் கட்டமைப்பு சீர்திருத்தங்களையும் பிரான்சு துரிதப்படுத்த இருக்கிறது என்பதை ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் நிதிச் சந்தைகளுக்கும் காட்டும் நோக்கத்துடனே இந்த இராஜாங்க அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நிதித்துறை ஊடகங்கள் குறிப்பிட்டன.

இலண்டனில் Teneo Intelligence ஆய்வாளரான அண்டோனியோ பரோசோவை மேற்கோள் காட்டி Bloomberg எழுதியது: “பிரான்ஸ் தனது உறுதிப்பாடுகளை மதிக்கும், நிதி வலுவூட்டலுக்கும் படிப்படியான சீர்திருத்தத்திற்கும் அது இப்போதும் உறுதி கொண்டுள்ளது என்ற ஒரு செய்தியை ஹாலண்ட் அனுப்பிக் கொண்டிருக்கிறார்.... வால்ஸை நியமனம் செய்ததன் மூலமாக, அவர் அரசாங்கம் அந்த நிலைப்பாட்டை தொடர்ந்து பராமரிக்கும் என்பதை உறுதியளிக்கிறார்.”  

வால்ஸ் சோசலிஸ்ட் கட்சியில் மிகவும் வெளிப்படையான வலது-சாரி, சுதந்திர சந்தை ஆதரவாளராக பரவலாய் பார்க்கப்படுகிறார். அவர் 35 மணி நேர வேலை வாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், ஓய்வுபெறும் வயதை அதிகப்படுத்துவதற்கும், அத்துடன் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான கடுமையான கொள்கைகளுக்குமாய் அழைப்பு விடுத்திருக்கிறார். ஐரோப்பிய ஒன்றியம் தேசிய வரவு-செலவுத் திட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் 2010 இல் கூறினார்.

BNP Paribas ஐச் சேர்ந்த பொருளாதார நிபுணர் டொமினிக் பார்பே கூறினார்: “மானுவேல் வால்ஸ் அரசாங்க அனுபவம் குறைவாகவே கொண்டவர், என்றாலும் அவரே பொருத்தமானவர். கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் செலவின வெட்டுகளை துரிதமாக அமல்படுத்த வேண்டியிருக்கும் ஒரு கடினமான காலகட்டத்தைக் கடந்து செல்கின்ற ஒரு அரசாங்கத்திற்கு தலைமை கொடுக்க இயற்கையான அதிகார திடம் அவருக்கு இருக்கிறது.”

புதிய அரசாங்கத்தில் இருக்கும் பதினாறு அமைச்சர்கள் வலது-சாரி நிலைப்பாட்டை அடையாளப்படுத்துகின்ற வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஹாலண்டின் முன்னாள் வாழ்க்கை துணைவியும், 2007 இல் தோல்வி கண்ட சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான செகோலின் ரோயால் (Ségolène Royal) மற்றும் டிஜோன் மேயரான பிரான்சுவா ரெப்ஸமென் ஆகியோரும் இதில் இடம்பெற்றுள்ளனர்.

ரோயால் சுற்றுச்சூழல் அமைச்சராக பணிபுரிய இருக்கிறார். அவரது 2007 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ரோயால் சுதந்திரச் சந்தை மற்றும் சட்டம்-ஒழுங்கு கொள்கைகளுக்கு ஆலோசனையளித்தார். இளம் குற்றவாளிகளை இராணுவப் பயிற்சி போன்ற மறுநிவாரணத்திற்கு அனுப்புவதற்கும் ஆலோசனையளித்தார். “அமைதி தவழும் ஒரு பிரான்சு”க்கு அழைப்பு விடுத்த அவர், சமூகப் போராட்டங்கள் வெடிப்பதை தடுப்பதற்கு தானே மிகச்சிறந்த வேட்பாளர் என்று பெருமையடித்தார். ஜனவரியில் 15 வயது ரோமா பள்ளிச்சிறுமி லியோனார்டா டிப்ரனியை வெளியேற்றும் வால்ஸின் முடிவை இவர் ஆதரித்தார்.

ரெப்ஸமென் - ரோயாலின் 2007 தேர்தல் பிரச்சாரத்தின் இணை இயக்குநரான இவர், பாதுகாப்பு கேள்விகளில் ஒரு வல்லுனரும், வெகுஜனங்கள் மீதான மொத்த வீடியோ கண்காணிப்பை வலுவாக ஆதரிப்பவருமாவர் - வேலைவாய்ப்பு மற்றும் சமூக உரையாடலுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சர் Jean-Yves Le Drian, வெளியுறவுத் துறை அமைச்சர் லோரோன்ட் ஃபாபியுஸ், மற்றும் நீதித்துறை அமைச்சர் கிறிஸ்டின் தோபிரா ஆகிய அனைவரும் தங்களது பதவிகளை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். நிதி அமைச்சரான பியர் மொஸ்கோவிச்சி அரசாங்கத்தை விட்டு விலகினார், முன்னாள் தொழிலாளர் அமைச்சர் மிஷேல் ஸப்பான் அவரது இடத்தை நிரப்புகிறார்.

ஆர்னோ மொன்ட்பூர்க் தொழிற்துறை புத்துயிரூட்டல் அமைச்சர் என்ற தனது ஓர்வெல்லிய வகை பதவியை கைவிடுகிறார். இந்தப் பதவியில் இருந்த வண்ணம் ஏராளமான ஆலை மூடல்களை மேற்பார்வை செய்த அவர், அவற்றை பொருளாதார தேசியவாதம் என்ற வெற்றுப் பிரயோகத்தை இழுத்து நியாயப்படுத்தினார். அவர் இப்போது பொருளாதார அமைச்சராகிறார்.

அவ்வப்போது PS இன் ஒரு தனிவகையான “இடதாக” காட்சிதருகின்ற முன்னாள் மாணவர் அரசியல்வாதியான Benoît Hamon ஐ வால்ஸ் கல்வி அமைச்சராக நியமனம் செய்தார். வால்ஸ் அரசாங்கத்தின் வலது-சாரிக் கொள்கைகளுக்கான “இடது” மறைப்பாக சேவை செய்வதே அவரது வேலையாக இருக்கும் என்பது ஊடகங்களில் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாய் இருந்தது.

Le Monde பின்வருமாறு எழுதியது: “எதற்காக Benoît Hamon? அதிகமான வலது சாய்வு கொண்டவராக இணையானவர்களால் விமர்சிக்கப்படுகின்ற புதிய பிரதமர் மானுவேல் வால்ஸுக்கு, அவரது அணிக்கு ஒரு இடது மறைப்பு அவசியமாக இருந்தது.”

எய்ரோ அரசாங்கத்தில் பங்குபெற்றிருந்த பசுமைக் கட்சியினர், வால்ஸின் கீழ் பணியாற்ற மறுத்து அரசாங்கத்தை விட்டு விலகினர். அரசாங்கத்தின் அதிவலதுக் கொள்கைகளால் மதிப்பிழந்து போவதை தவிர்க்கும் பொருட்டு அதில் இருந்து தங்களை தூர நிறுத்திக் கொள்ள முயற்சி செய்கின்றனர்.

வால்ஸ் நியமனமும் ராயல் மற்றும் ரெப்ஸமென் போன்ற வலது-சாரி ஆளுமைகள் அவரது அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ளதும் ஹாலண்ட் தேர்வு செய்யப்படுவதை ஆதரித்த புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி மற்றும் இடது முன்னணி போன்ற போலி-இடது குழுக்களின் திவால்நிலையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இந்த அமைப்புகள் எல்லாம் FN இன் எழுச்சியை தடுப்பதற்கான ஒரே வழி, PSக்கு ஆதரவளிப்பது மட்டுமே என்பதாய் கூறின.

சொல்லப் போனால், வால்ஸ் அரசாங்கம் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளை தீவிரப்படுத்தி சட்டம்-ஒழுங்கு விண்ணப்பங்களை செய்கின்ற நிலையில், அரசியல் ஸ்தாபகத்திற்குள்ளாக இதனால் முக்கியமாக ஆதாயமடைய இருப்பது மீண்டும் FN தான். ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்திற்கு எதிராய் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அணிதிரட்டல் மட்டுமே பிரான்சில் நவ-பாசிசத்தின் எழுச்சியை தடுத்து நிறுத்த முடியும் என்பதையே இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

வால்ஸ் நியமனத்திற்கு இடது முன்னணியின் ஜோன்-லூக் மெலன்சோன் திங்களன்று எதிர்வினையாற்றியபோது, இத்தகையதொரு அப்பட்டமான வலது-சாரி மனிதரை நியமனம் செய்வது, PS மற்றும் இடது முன்னணி போன்ற அதன் போலி-இடது சுற்றுவட்டத்தில் இடது பக்கமாய் நிற்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடம் இருந்து எதிர்ப்பினை தூண்டும் என்று கவலையை வெளிப்படுத்தினார்.

அவர், தேர்தல் நாசத்திற்கு அரசியல் தற்கொலையின் மூலம் பதிலிறுப்பு செய்வதாக ஹாலண்டை விமர்சித்தார். அவர் மேலும், வாக்காளர்கள் நேற்று ஹாலண்டுக்கு அனுப்பிய செய்தியை அவர் புரிந்து கொள்ளவில்லை. மானுவல் வால்ஸ் தான் இடதின் மிகப்பெரும் பொதுவான பிரிப்புக்கோட்டு மனிதர் எனக் கூறினார்.

PS இன் பிற்போக்குதனமான கொள்கைகள் மற்றும் அதிகரித்துச் செல்லும் அதன் பாசிச நகர்வுக்கு, தொழிலாள வர்க்கத்தில் எழுகின்ற எதிர்ப்பு, தாங்கள் காவல் காக்கின்ற முதலாளித்துவ ஒழுங்கினை அச்சுறுத்தும் என்பதே மெலோன்சோன் மற்றும் ஒட்டுமொத்த போலி-இடதுகளின் பெரும் கவலையாக உள்ளது.