சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Nokia India workers protest to defend jobs

நோக்கியா இந்தியா நிறுவனத் தொழிலாளர்கள் வேலைகளை பாதுகாக்க ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்

By Arun Kumar and Kranti Kumara
9 April 2014

Use this version to printSend feedback

தென்மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் ஸ்ரீபெரும்புதூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமைந்திருக்கும் நோக்கியா செல்போன் தயாரிப்புத் தொழிற்சாலை மூடப்படக் கூடிய அச்சுறுத்தலுக்கு எதிராக 4,000க்கும் அதிகமான நோக்கியா இந்தியா நிறுவனத் தொழிலாளர்கள் மார்ச் 31 அன்று சென்னையில் ஒரு பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். ஸ்ராலினிச இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கப் பிரிவான சிஐடியு (இந்திய தொழிற்சங்க மையம் - CITU) உடன் இணைந்த நோக்கியா இந்தியா தொழிலாளர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பங்குபெற்ற ஒருநாள் உண்ணாவிரத போராட்டமும் இடம்பெற்றிருந்தது.


நோக்கியா தொழிலாளர்களின் மார்ச் 31ம் தேதி ஆர்ப்பாட்டம்

இந்த கதவடைப்பு இந்தத் தொழிற்சாலையின் 8,000 தொழிலாளர்களை அச்சுறுத்துகிறது. இதில் பெருவாரியானோர் வேலை உத்தரவாதம் பற்றிய மிகக்குறைந்த ஆதாயங்களும் கூட இன்றி ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணிபுரிகின்றனர். அதேபோல இந்த ஆலை மூடப்பட்டால் உணவகங்களில் வேலைசெய்பவர்கள், போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் உபரிபாக விநியோக நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் உள்ளிட இந்த மிகப்பெரும் தொழிற்சாலையினை சார்ந்திருக்கும் 25,000 தொழிலாளர்களையும் அது பாதிக்கும்.  

இந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் அநேகத் தொழிலாளர்கள் 20 முதல் 27 வயதுக்கு இடைப்பட்டவர்கள், அத்துடன் சுமார் அறுபது சதவீதத் தொழிலாளிகள் பெண்கள். இவர்களில் பெரும்பாலானோர் கிராமப்புற இந்தியாவில் நிலவும் வறுமையான பொருளாதார நிலைமைகளின் காரணத்தால் நகரப் பகுதிகளுக்கு இடம்பெயர நிர்ப்பந்தம் பெற்ற குடும்பங்களின் முதல் தலைமுறை தொழிலாளர்கள். நோக்கியா அவர்களுக்கு வழங்கும் ஊதியம் சொற்பமானதே - சில தொழிலாளர்கள் ஓவர்டைம் ஊதியத்தையும் சேர்த்தே 8,000 ரூபாய் (133 அமெரிக்க டாலர்) மட்டுமே ஊதியமாகப் பெற்று வருகின்றனர் - என்றபோதிலும் இந்த வேலைகளும் போனால் இந்த இளம் தொழிலாளர்களும் கிராமங்களில் இவர்களின் சொற்ப ஊதியங்களை நம்பியிருக்கும் இவர்களது குடும்பங்களும் நிராதரவாய் விடப்படும்.

பின்லாந்தைச் சேர்ந்த இந்த நாடுகடந்த நிறுவனத்திடம் இருந்து 700 மில்லியன் டாலர் தொகையை வரியாகச் சேகரிக்க இந்திய மத்திய அரசாங்கம் மற்றும் தமிழ்நாடு அரசாங்கம் மேற்கொள்கின்ற முயற்சிகளைக் கைவிடச் சொல்லி பிளாக்மெயில் செய்வதற்காய் நோக்கியா நிர்வாகம் இந்த ஆலை மூடல் அச்சுறுத்தலை பயன்படுத்துகிறது. ஏற்றுமதிக்கெனவும் உள்நாட்டுச் சந்தைக்கெனவும் தயாரிக்கப்பட்ட செல்போன்களின் எண்ணிக்கையை சரியாகக் காட்டாமல் போலியாக வரிவிலக்குகள் கோரி நோக்கியா வரிஏய்ப்பு செய்தது என்றும் தவிரவும் கடந்த பல ஆண்டுகளாக அது அவசியமான வரி ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். இதனையடுத்து இந்திய மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கமும் முறையே 20 பில்லியன் ரூபாய் (333 மில்லியன் டாலர்) மற்றும் 24 பில்லியன் ரூபாய் (400 மில்லியன் டாலர்) வரிபாக்கியை செலுத்த இந்நிறுவனத்திடம் கேட்கின்றன.    

சென்ற செப்டம்பரில், நிலுவை வரித்தொகை தொடர்பாக இந்திய வரித் துறை அதிகாரிகள் இந்தியாவில் இருக்கும் நோக்கியாவின் சொத்துகளை முடக்கினர். இந்த நடவடிக்கையை நீதிமன்றத்தில் நோக்கியா சவால் செய்தது என்றபோதிலும் மார்ச் மாதத்தில் இந்திய உச்சநீதிமன்றம், இத்தொழிற்சாலையை அமெரிக்க மென்பொருள்  பெருநிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு மாற்றுவதை தடுத்து நிறுத்துகின்ற கீழ்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. நோக்கியா உலகெங்கும் இருக்கும் தனது செல்போன் தயாரிப்பு தொழிற்சாலைகளை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு 7.2 பில்லியன் டாலர் தொகைக்கு விற்று விட்டது. நோக்கியா அதன் நடப்பு மற்றும் வருங்கால கடப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்காய் 35 பில்லியன் ரூபாயை (583 மில்லியன் டாலர்)  பிணையாக வைப்பு செய்தால் மட்டுமே இந்த ஆலையை மைக்ரோசாப்டுக்கு மாற்ற முடியும் என உச்சநீதிமன்றம் கூறி விட்டது.

இந்த வரி பாக்கிகள் எல்லாம் “அபத்தமானவை” என்று கண்டனம் செய்கின்ற நோக்கியா தொழிலாளர்களின் கதியை திட்டமிட்டு நிர்க்கதியாக்கி விட்டு ஒரு பைசா கூட செலுத்தாமல் இந்தியாவை விட்டே ஒட்டுமொத்தமாக புறப்படவிருப்பதாகவும் அச்சுறுத்தியிருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டம் இந்திய மற்றும் தமிழ்நாடு அரசாங்கங்களின் மீது அழுத்தத்தைக் கூட்டுவதற்கான ஒரு வழி என நோக்கியா நிர்வாகம் இதனை வரவேற்றதாக சில இந்திய செய்தித்தாள்கள் கூறின.

வரி செலுத்துவதைத் தட்டிக் கழிக்கும் தனது முயற்சியில், நோக்கியா இந்தியா நிறுவன நிர்வாகம் சிஐடியு தொழிற்சங்க கூட்டமைப்பின் சேவையைப் பெற்றிருக்கிறது. இந்திய நீதிமன்றங்களில் தனது சட்டப் போராட்டங்களில் சிஐடியு தனது ஆதரவை நல்கியிருப்பதாக நிறுவனத்தின் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. “ செப்டம்பரில் நாட்டின் வரித் துறையால் எங்களது சொத்துகள் முடக்கப்பட்டதில் இருந்தே இந்திய தொழிலாளர் குழுக்களுடன் நாங்கள் நெருக்கமாக வேலைசெய்து வந்திருக்கிறோம் - வரித் துறை அதிகாரிகளுக்கு எதிரான நோக்கியாவின் சட்ட நடவடிக்கைகளில் பிரதான தொழிற்சங்கம் அதனுடன் கைகோர்க்கவும் செய்துள்ளது - இந்த சவாலான நேரத்தைக் கடந்து செல்கின்ற சமயத்தில் ஒரு திறந்த விவாதமுறையை நாங்கள் தொடர்ந்து நடத்திச் செல்வோம்.”  

நிறுவனத்தின் இந்த அறிக்கையை சிஐடியு மறுக்கவில்லை, இதன் மூலம் நிர்வாகத்திற்கு முற்றிலும் வளைந்து கொடுக்கும் ஒரு கருவியாக செயல்படும் அதன் பாத்திரத்தை உறுதி செய்கிறது.

தொழிற்பேட்டைகளில் நாடுகடந்த பெரு நிறுவனங்கள் நடத்துகின்ற மிருகத்தனமான சுரண்டலை எதிர்த்து தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டும் எந்த முயற்சிக்கும் குரோதம் காட்டுகின்ற CITU, சாதி அடிப்படையிலான பிராந்திய அரசியல் கட்சிகளுக்கும், நீதிமன்றங்களுக்கும், மற்றும் பிற தொழிலாள வர்க்க-விரோத சக்திகளுக்கும் விண்ணப்பம் செய்திருக்கிறது.  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த மாநில முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவுக்கு விண்ணப்பம் செய்ததும் இதில் அடங்கும் - இவர் 2003 இல் மாநில அரசாங்க ஊழியர்கள் நடத்திய ஒரு போராட்டத்தை ஒடுக்குவதற்காக மிகப் பெருமளவில் கைது நடவடிக்கைகளிலும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களிலும் இறங்கியதன் மூலம் தொழிலாள வர்க்கத்தின் மீதான தனது படுபயங்கர வன்மத்தை வெளிப்படுத்தியவர். The CITU appeal to

ஜெயலலிதாவுக்கு சிஐடியு விடுத்திருக்கும் விண்ணப்பமானது, இப்போது ஆரம்பமாகியிருக்கும் பொதுத் தேர்தலில் மூன்றாவது அரசியல் அணி என்பதாகக் கூறப்படுகின்ற ஒன்றை ஒட்டுப்போட்டு தைப்பதற்கான முயற்சியில் தொழிலாள வர்க்கத்தின் இந்த எதிரியுடன் சளைக்காமல் உறவாடி வந்திருக்கிற அதன் தாய் அமைப்பான இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூலோபாயத்துடன் கச்சிதமாகப் பொருந்தியதாக அமைந்திருக்கிறது.   

மிகப் பிற்போக்குத்தனமான சாதி அல்லது வகுப்பு வாத அடிப்படையிலான அரசியல் கட்சிகளை - இவற்றுக்கு இடையில் அப்பட்டமான சந்தர்ப்பவாதத்தைத் தவிர வேறெந்த பொது அம்சமும் இல்லை  - உள்ளடக்கியதாக இருக்கும் இந்த அரசியல் கூட்டணியை, பெருவணிகத்தின் ஆஸ்தான அரசியல் பிரதிநிதியாக இருந்து வந்திருக்கக் கூடிய காங்கிரஸ் கட்சியைச் சுற்றிய கூட்டணி மற்றும் இந்து வகுப்புவாத பாரதிய ஜனதாக் கட்சியைக் கொண்ட கூட்டணி ஆகிய இரண்டு பிரதான அரசியல் கூட்டணிக்கு ஒரு “முற்போக்கான” மாற்றாக ஸ்ராலினிச CPI (M) மோசடியான வகையில் விளம்பரம் செய்து வருகிறது.   

தொழிற்சங்கத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.சௌந்தரராஜன் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த கருத்துகளில், போராடும் தொழிலாளர்களை நோக்குநிலை பிறழச் செய்ய சிஐடியு செய்கின்ற முயற்சிகளை காணக்கூடியதாய் இருந்தது. “அவர்கள் (நிர்வாகம்) தொழிற்சாலைகளை வியட்நாமிற்கும் சீனாவிற்கும் கொண்டு செல்கிறார்கள்” என்று முதலில் புகாரளித்தார், ”இவ்வாறு வேலை இடம்மாற்றப்படுவதைத் தடுத்து நிறுத்த நாங்கள் அரசாங்கத்திடம் கேட்போம்” என்று பின் உறுதியளித்தார்.

தேசியவாதத்தை ஊக்குவித்தும் நாட்டில் அபூர்வமாகவே அமல்படுத்தப் பெறும் தொழிலாளர் நலச் சட்டங்கள் மீது நம்பிக்கை வைக்க தொழிலாளர்களை ஊக்குவித்தும் தொழிலாளர்களிடையே மேலதிக குழப்பத்தை அவர் தொடர்ந்து விதைத்தார். ”அடுத்த 2-3 நாட்களில் தொழிலாளர் நலத் துறையில் நாங்கள் புகார் தாக்கல் செய்வோம். தொழிற்சாலை சச்சரவுச் சட்டத்தின் படி, ஆட்குறைப்புக்கு முன்னதாகவோ அல்லது ஆலைமூடலுக்கு முன்னதாக அரசாங்கத்திடம் நிர்வாகம் அனுமதி பெற வேண்டும் என்பது விதியாகும். அத்தகையை அனுமதியைத் தர வேண்டாம் என்று நாங்கள் மாநில அரசாங்கத்தை வலியுறுத்துவோம்” என்று சௌந்தரராஜன் நொண்டிச் சமாதானம் அளித்தார்.  

இத்தகைய தோற்கடிப்புவாத தந்திரங்கள் எல்லாம் தொழிலாளர் போராட்டங்கள் மீதான சிஐடியு காட்டிக்கொடுப்பின் நெடிய வரலாற்றில் பின்னிப் பிணைந்தவையே. ஒரு பக்கத்தில் பெருநகர நிர்வாகம் விதித்திருக்கும் வரிகளைக் குறைக்கச் சொல்லி நோக்கியா நிர்வாகத்துடன் சேர்ந்து வேலைசெய்யும் தொழிற்சங்கம், பின் அது கூடிவேலை செய்த அதே நிர்வாகம் ஆலையை மூடுவதாக அச்சுறுத்துவதைச் சொல்லி “வேலைகளைக் காப்பாற்றுவதற்காக” மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களிடம் ஓடுகிறது. 

இந்திய உச்சநீதிமன்றத்தின் தடையாணையைப் பொருட்படுத்தாமல் நோக்கியா உற்பத்தி எந்திரங்களில் சிலவற்றை வெளிநாட்டிற்குக் கொண்டு சென்று விட்டதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒருசமயத்தில் செல்போன் சந்தையில் மேலாதிக்கம் செலுத்தி ஐரோப்பிய அரசியல்வாதிகளால் “ஐரோப்பிய சூப்பர்ஸ்டார்” என்று பாராட்டப்பட்ட 150 வருடப் பழமையான நிறுவனமான நோக்கியா, நிறுவனம் முகம் கொடுக்கின்ற பெரும் நெருக்கடியில் இருந்து தப்பிக்க விளைச்சலைக் கொளுத்தும் கொள்கையை (scorched earth policy) பின்பற்றுகிறது.

கடந்த பல ஆண்டுகளில் ரோமானியா, ஹங்கேரி, பின்லாந்து, ஜேர்மனி மற்றும் கனடாவில் இருக்கும் நோக்கியா தொழிற்சாலைகளில் அலை அலையாய் வேலைகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து இந்நிறுவனம் தனது மொபைல் போன் உற்பத்தியின் பெரும்பகுதியை இந்தியா, சீனா மற்றும் வியட்நாம் போன்ற ஆசியாவின் மலிவுற்பத்திக் களங்களுக்கு இடம் மாற்றியது. (காணவும்: நோக்கியா 10,000 தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்கிறது) 

இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் அரசாங்கங்கள் பெரும் வரிச் சலுகைகளை அளித்துள்ளதோடு மலிவான விலையில் நிலங்களையும் அத்துடன் அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்கென மலிவு உழைப்பின் அபரிமிதமான அளவையும் கூட பரிசாக அளித்துள்ளனர். பெருநிறுவனங்கள் பரந்த சமூக நாசத்தைக் கொடுத்து விட்டு  ஒரு மலிவு உழைப்புப் புகலிடத்தில் இருந்து இன்னொன்றுக்கு எளிதாக வெளியேற இயலுகின்றதான முதலாளித்துவத்தின் பகுத்தறிவுக்கு ஒவ்வாத தன்மையையே நோக்கியா உதாரணம் அப்பட்டமாக எடுத்துக்காட்டுகிறது. இந்தியத் தொழிலாளர்கள் தேசிய அடிப்படையிலான தொழிற்சங்கங்களில் இருந்தும் அவை சேவையாற்றுகின்ற முதலாளித்துவக் கட்சிகளிடம் இருந்தும் தம்மை விடுவித்துக் கொள்வதும் உலகளாவிய தொலைதொடர்புத் துறை நிறுவனங்களுக்கு எதிராக ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான ஒரு மூலோபாயத்தை அபிவிருத்தி செய்வதும் அவசரமான அவசியமாக ஆகியிருப்பதையே இந்தப் போராட்டம் எடுத்துக்காட்டுகிறது.