சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Supreme Court ruling on campaign donations: Government of, by and for the rich

பிரச்சார நன்கொடைகள் மீதான உச்சநீதிமன்ற தீர்ப்பு: பணக்காரர்களின், பணக்காரர்களால், பணக்காரர்களுக்கான அரசாங்கம்

Andre Damon
4 April 2014

Use this version to printSend feedback

அரசியல் பிரச்சாரங்களுக்கு தனிநபர்கள் வழங்கும் மொத்த நன்கொடை தொகைக்கு விதிக்கப்பட்டிருந்த வரம்பை நீக்கி, புதனன்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் 5-4 தீர்மானத்தின் அடிப்படையில் தீர்ப்பை வழங்கியது. இது அரசியல் வாழ்வில் நிதியியல் செல்வந்த தட்டின் நேரடி மேலாதிக்கத்திற்கு இருந்த மற்றொரு கட்டுப்பாட்டையும் நீக்கி உள்ளது.

McCutcheonக்கும் பெடரல் தேர்தல் ஆணையத்திற்கும் இடையிலான வழக்கின் இந்த தீர்ப்பானது, இரண்டு ஆண்டுக்கொரு முறை நடக்கும் தேர்தல் சுற்றின் போது மொத்த பிரச்சார நன்கொடைகள் 123,000 டாலராக இருக்கும் தற்போதைய வரம்பை நிர்ணயித்த 1976ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற முடிவை தலைகீழாக மாற்றி உள்ளது. அதேவேளையில் ஒரு தேர்தலுக்கு ஒரு வேட்பாளருக்கு 2600 டாலராக தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள பிரத்யேக வேட்பாளருக்கு அளிக்கப்படும் நன்கொடை வரம்பை அந்த தீர்ப்பு நடைமுறையில் வைத்திருக்க அனுமதிக்கிறது என்ற போதினும், அதே தர்க்கத்தின் அடிப்படையில் இதுவும் எப்போது வேண்டுமானாலும் நீக்கப்படலாம்.

தீர்ப்பாயத்தின் கருத்தில் வேறுபாடு கொண்ட துணை நீதியரசர் ஸ்டீபன் பிரெயெர் குறிப்பிடுகையில், இந்த தீர்ப்பு அரசியல் நன்கொடைகளின் அதிகபட்ச தொகையை "வரம்பின்றி" ஆக்குகிறது என்று குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், பிரச்சாரத்திற்கான பணக்காரர்களின் பங்களிப்பை "இன்றைய முடிவு வெள்ளமென திறந்துவிடக்கூடுமென" தெரிவித்தார்.

ராய்டர்ஸ் செய்தியின்படி, ஒரு தேர்தல் சுற்றில் பெடரல் வேட்பாளர்களுக்கு 48,000 டாலரும், மாநில மற்றும் உள்ளாட்சி அரசியல் கட்சி கமிட்டிக்கு 74,600 டாலரும் நன்கொடை வழங்கலாம் என்றிருந்ததற்கு மாறாக, செல்வந்தர்கள் தங்களின் கட்சியைச் சேர்ந்த ஒவ்வொரு உள்ளாட்சி மற்றும் தேசிய வேட்பாளருக்கும் சட்டப்பூர்வமாக அதிகபட்ச நன்கொடையை ஒரு தேர்தலுக்கு 6 மில்லியன் வரையில் வழங்கலாம் என்பதை இந்த தீர்மானம் குறிக்கிறது.

தலைமை நீதியரசர் ஜோன் ரோபர்ட்ஸால் ஒப்புதல் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு, முதலாம் அரசியலமைப்பு திருத்தத்தை செல்வந்தர்களுக்கு சார்பாக மற்றும் ஜனநாயக விரோதமாக மறு-அர்த்தப்படுத்துகிறது. பேச்சுரிமை" பாதுகாப்பிற்காக என்ற போர்வையின் கீழ், நடைமுறையில், அரசியல் அமைப்புமுறையின் மீது மக்களில் ஒரு சிறிய அடுக்கு அதன் வரம்பில்லா கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் உரிமையை முதலாம் அரசியலமைப்பு திருத்தம் பாதுகாக்கிறது என்று ரோபர்ட்ஸ் வாதிடுகிறார்.

"அரசியலில் புழங்கும் பணத்தைக் குறைக்கும் விதத்தில் நன்கொடைகளை நெறிப்படுத்தவோ, அல்லது சார்புரீதியில் ஏனையவர்களின் செல்வாக்கை விஸ்தரிக்கும் சிலரின் அரசியல் பங்களிப்பை தடுக்கவோ காங்கிரஸால் நெறிமுறைகளை வகுக்க முடியாதென்பதை நாங்கள் தெளிவுபடுத்தி உள்ளோம்," என்று அவர் எழுதுகிறார். அவர் தொடர்ந்து, அரசியலில் பணம் சில வேளைகளில் சிலருக்கு முரணாக இருக்கக்கூடும், ஆனால் முதலாம் அரசியலமைப்பு திருத்தம் பலமாக எதை பாதுகாக்கிறதோ அதற்கு முரணாகவும் அதேயளவிற்கு இருக்கிறது," என்று எழுதுகிறார்.

இந்த தீர்ப்பானது, தேர்தல் சட்டம் சம்பந்தமான பல தொடர்ச்சியான ஜனநாயக-விரோத தீர்மானங்களின் சமீபத்திய ஒன்றாகும். இது 2010இல் Citizens Unitedக்கும் பெடரல் தேர்தல் ஆணையத்திற்கும் இடையிலான வழக்கில் வெளியிடப்பட்ட பிற்போக்குத்தனமான கோட்பாடுகளின் ஒரு நீட்சியாக உள்ளது, அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், தடைவிதிக்க முடியாதபடிக்கு சுதந்திரமான" அரசியல் செலவுகள் செய்யும் "தனிநபர்களாக" இலாபத்திற்கான பெருநிறுவனங்கள் உள்ளன என்று தீர்ப்பு வழங்கியது. அந்த முடிவு, பெரும் செல்வந்தர்களால் நிதியுதவி வழங்கப்படும் "செல்வந்த-அரசியல் நடவடிக்கை குழுக்களின் (Super-PACs) பெருவளர்ச்சிக்கு வழி வகுத்தது, அது தற்போது தேர்தல்களில் மோசடி செய்வதற்கு ஏற்ற வகையில் வரம்பில்லா நிதிகளைச் செலவிடும் வாய்ப்பைக் கொண்டுள்ளது.

மாநிலங்கள் வாக்குப்பதிவு வழிமுறைகளில் எந்தவொரு மாற்றங்களைச் செய்ய வேண்டுமானாலும் பெடரல் அரசாங்கத்திடம் முன்-அனுமதி பெற வேண்டுமென்ற சட்ட அமுலாக்க விதிமுறையை நீக்கியதன் மூலம், 1965ஆம் ஆண்டு வாக்குப்பதிவு உரிமை சட்டத்தை, கடந்த ஜூனில், உச்ச நீதிமன்றம் நடைமுறைரீதியில் தலைகீழாக மாற்றி அமைத்தது. அந்த முடிவைத் தொடர்ந்து, டெக்சாஸ், மிசிசிப்பி, அலபாமா, தெற்கு கரோலினா மற்றும் வெர்ஜினியா ஆகிய அனைத்து மாநிலங்களும் தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் சிறுபான்மையினரை வாக்களிப்பதிலிருந்து விலக்கி வைக்கும் நோக்கத்தோடு புதிய முறைமைகளை அறிவித்தன.

நன்கொடைகள் வழங்கும் மில்லியனர்கள் மற்றும் பில்லியனர்களிடம் இருந்து பெரும் பணம் திரட்டக் கூடியவர்கள், அதாவது பெரு வணிகங்களின் பல்வேறு தரப்பட்ட முகவர்கள், ஜனநாயக கட்சியினர் மற்றும் குடியரசு கட்சியினர் போன்றோருக்கு இடையிலான போட்டியே அமெரிக்க தேர்தல்களாக உள்ளன என்ற ஒரு நிகழ்வுபோக்கை இத்தகைய முடிவுகள் பலப்படுத்துகின்றன. அதிகளவில் ஆர்வமற்ற மற்றும் விரோதமாக உள்ள மக்களிடையே பெரு வியாபார அரசியல்வாதிகளை விற்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட, பாரிய சந்தைப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க வேட்பாளர்களால் பெரும் தொகைகள் திரட்டப்படுகின்றன. 2006 தேர்தல் சுற்றில், ஜனாதிபதி தேர்தல் மற்றும் காங்கிரஸ் சபை தேர்தல்கள் இரண்டிலும், 2000இல் செலவிடப்பட்டதை விட இரண்டு மடங்கு அதிகமாக, வேட்பாளர்களால் மலைப்பூட்டும் அளவிற்கு 6 பில்லியன் டாலர் செலவிடப்பட்டது.

150க்கு சற்று கூடுதலான ஆண்டுகளுக்கு முன்னர் அவரது கெட்டிஸ்பேர்க் உரையில் லிங்கன் வலியுறுத்தியதைப் போல, மக்களின், மக்களால், மக்களுக்கான" அரசு என்பது "பணக்காரர்களின், பணக்காரர்களுக்காக, பணக்காரர்களுக்கான" அரசு என்று மாறி உள்ளது. அரசியல்வாதிகள் செல்வந்தர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, அவர்கள் ஆளும் வர்க்கத்திலிருந்தே நேரடியாக அதிகளவில் உள்ளெடுக்கப்படுகிறார்கள். இந்த ஆண்டின் தொடக்கத்தில், Center for Responsive Politics வெளியிட்ட அறிக்கையில், வரலாற்றில் முதல்முறையாக அமெரிக்க காங்கிரஸின் பெரும்பாலான அங்கத்தவர்கள் மில்லியனர்களாக உள்ளதாக குறிப்பிட்டது.

இந்த தேர்தல் அமைப்புமுறையின் இறுதி வீழ்ச்சியானது, அமெரிக்காவின் அனைத்து ஜனநாயக நெறிமுறைகளின் ஒரு பரந்த பொறிவின் பாகமாகும். இந்த பொறிவு பல தசாப்தங்களுக்கு பின்னால் வரையில் நீண்டு செல்கிறது, ஆனால் 2000ஆம் ஆண்டு தேர்தல்கள் களவாடப்பட்ட பின்னர் மற்றும் இந்த வார தீர்ப்பிற்கு வாக்களித்த அதே நீதியரசர்களின் பலரால், மக்கள் வாக்குகளை இழந்திருந்த ஒரு வேட்பாளர் நியமிக்கப்பட்ட பின்னர் அந்த பொறிவு ஆழமாக தீவிரப்படுத்தப்பட்டது.

மக்கள் மீது உளவு பார்ப்பதை, சித்திரவதை செய்வதை மற்றும் அமெரிக்க பிரஜைகளை எந்தவொரு விசாரணையுமின்றி படுகொலை செய்வதை ஒரு உரிமையாக அறிவிக்கும் ஒரு அரசாங்கத்தால், புஷ் மற்றும் அதற்கு பின்னர் ஒபாமாவின் கீழ், ஒவ்வொரு அடிப்படை அரசியலமைப்பு பாதுகாப்பும் அகற்றப்பட்டுள்ளன. இந்த தாக்குதல்கள் அனைத்தும், முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு நிதியியல் பிரபுத்துவத்தின் ஒரு கருவியாக பட்டவர்த்தனமாக செயல்படும் மற்றும் எந்தவொரு எதிர்ப்பையும் இராணுவ மற்றும் பொலிஸ் அடக்குமுறை கொண்டு எதிர்கொள்ள தீர்க்கமாக உள்ள ஒரு அரசின் வெளிப்பாடுகளாக உள்ளன.

தீர்ப்பு மீது உச்ச நீதிமன்றத்தில் நிலவும் பிளவானது, இத்தகைய அபிவிருத்திகளின் நீண்டகால அரசியல் தாக்கங்கள் குறித்து ஆளும் வர்க்கத்தின் பிரிவுகளுக்குள் நிலவும் கவலைகளைப் பிரதிபலிக்கிறது. பிரெயெர் எழுதினார், எந்த பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் நோக்கோடு பிரச்சார நிதி சட்டங்கள் எழுதப்பட்டனவோ அந்த மரணகதியிலான சட்டப்பூர்வ ஜனநாயக பிரச்சினைகளைக் கையாள்வதில், மிஞ்சியிருக்கும் சட்டங்களை இலாயகற்றதாக ஆக்கி, நமது நாட்டின் பிரச்சார நிதி சட்டங்களை இன்றைய தீர்மானம் வெறுமையாக்குகிறது," என்கிறார்.

"மரணகதியிலான சட்டபூர்வ ஜனநாயக பிரச்சினைகள்" குறித்த பிரெயெரின் கவலைகளுக்கு ஆழ்ந்த நியாயமான காரணங்கள் உள்ளன. அரசு பணக்காரர்களின் ஒரு கருவி என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்று மக்கள் மத்தியில் ஒட்டுமொத்தமாக அதிகரித்து வரும் புரிதலோடு சேர்ந்து, பூர்ஷூவா ஆட்சியின் அனைத்து அமைப்புகளும் அது காங்கிரஸில் இருந்து, ஜனாதிபதி வரையில், தலைமை நீதிமன்றம் வரையிலும் கூட ஆழமாக மதிப்பிழந்துள்ளன.

எவ்வாறிருந்த போதினும், பிரெயெர் போன்ற தாராளவாதிகளின் ஐயப்பாடுகள் என்னவாக இருந்தாலும், அவர்கள் பாதுகாக்கும் இந்த முதலாளித்துவ அமைப்புமுறையின் கட்டமைப்பிற்குள் இந்த பிரச்சினைக்கு எந்தவொரு தீர்வும் இல்லை. ஜனநாயக வடிவங்களின் பொறிவானது ஆழ்ந்த சமூக நிகழ்வுபோக்குகளின், அதாவது அமெரிக்க முதலாளித்துவத்தின் வீழ்ச்சி, ஒட்டுண்ணித்தனத்தின் வளர்ச்சி, தொழிலாளர் வர்க்கத்தின் சமூக நிலைமைகள் மீதான இரக்கமற்ற தாக்குதல், அனைத்திற்கும் மேலாக, நம்பவியலாதபடிக்கு சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சி ஆகியவற்றின் அரசியல் வெளிப்பாடாகும்.

நிஜமான ஜனநாயக வடிவங்களைத் தற்போதிருக்கும் அமைப்புகளின் கட்டமைப்பிற்குள் ஸ்தாபிக்க முடியாது, மாறாக அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும், ஒரு சுயாதீன சக்தியான தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர ஐக்கியத்தின் மூலமாக இந்த அமைப்புகளைத் தூக்கியெறிவதன் மூலமாகவே ஸ்தாபிக்க முடியும். பெருநிறுவன மற்றும் நிதியியல் மேற்தட்டின் மேலாதிக்கத்தை, சோசலிசத்தை ஸ்தாபிப்பதன் மூலமாக, சமூக சமத்துவம் மற்றும் சமூக தேவையின் அடிப்படையில் பொருளாதார வாழ்வின் மீது ஜனநாயக கட்டுப்பாட்டைக் கொண்டு வந்து, சமூக மற்றும் பொருளாதார உறவுகளை மறுகட்டமைப்பு செய்வதே அந்த அரசியல் இயக்கத்தின் நோக்கமாக இருக்க வேண்டும்.